சங்க இலக்கியத் துளிகள் – 17
ஓரில் பிச்சை
கற்பு – பாலை – பொருள்வயிற் பிரிந்த தலைமகன் வருகின்ற பருவம் குறித்து அறிவரிடம், தோழி கேட்டு அறியும் கூற்று. .
அறிவர் ஒருவர், கமண்டலம் மற்றும் பிச்சைப் பாத்திரத்துடன் தலைமகன் வீட்டின் முன்பு வருகிறார். தலைமகனோ, பொருள் தேடி வேற்றுநாடு சென்றிருக்கிறான். வருகின்ற வாடைக்காலத்தில் திரும்பிவிடுவதாகவும், அதுவரையில் தோழியுடன் ஆற்றியிருக்குமாறும் தலைவன் கூறியபடி தலைவி ஆற்றியிருக்கிறாள். தலைவன் இல்லாத வீட்டில் அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் விருந்து எதிர்கோடலுமாகிய அறச்செயல்கள் (சிலம்பு, கொலைக்களக்காதை -71 – 73) செய்வதில்லை. அதனால், தோழி, அறிவரிடம் `மின்னிடை நடுங்கும் கடைபெயல்வாடை எக்கால் வருவது` எனக்கேட்கிறாள். அவரும் பதில் சொல்கிறார். அக்காலமே இந்த வீட்டின் தலைமகனாகிய எங்கள் காதலர் வரும் காலமெனக் கூறும் தோழி, “ குற்றங்களற்ற தெருவில் நாய் இல்லாத அகன்ற நடை வாசலுடைய வீட்டில் நல்ல சம்பா அரிசிச் சோறும் நரை எருமையின் வெண்ணிற வெண்ணெயும் ஓரு வீட்டுப் பிச்சையாகவே கிடைத்து, ஆற அமர அங்கேயே இருந்து உண்டு, குடிப்பதற்காக முன்பனிக்காலத்திற்கு இதமான வெந்நீரும் தங்கள் செப்புக்குவளையில் பெறுவீராக என உளமாற வாழ்த்துகிறாள்.
பாடல் :
ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடைச்
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓரில் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே 5
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை
எக்கால் வருவதென்றி
அக்கால் வருவர் எம் காதலோரே.
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓரில் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே 5
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை
எக்கால் வருவதென்றி
அக்கால் வருவர் எம் காதலோரே.
குறுந்தொகை 277, ஓரில் பிச்சையார், பாலைத் திணை – தோழிசொன்னது
அடிநேருரை:
ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடை – குற்றங்களற்ற தெருவில் நாய் இல்லாத அகன்ற நடைவாயிலுள்ள வீட்டில்;
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது – சிவப்புச் சம்பா அரிசிச் சோறும் நரை எருமையின் வெண்ணெயும்
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – ஒரு வீட்டுப் பிச்சையாகவே கிடைத்து, அங்கேயே ஆற அமர உண்டு முடித்து;
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் – பனிக்காலத்திற்கு இதமாகக் குடிப்பதற்கான வெந்நீரினை;
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே – உங்கள் செப்புக்குவளையில் சேமிக்கவும் பெறுவீராக
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை – இடையிடையே மின்னல் நடுங்குகின்ற கடைசி மழை பெய்து முடிகின்ற வாடைக்காலம்;
எக்கால் வருவது என்றி – எப்போது வருமெனச் சொன்னீர்கள்
அக்கால் வருவர் எம் காதலோரே – அப்போதே இந்த வீட்டின் தலைமகனான எங்கள் காதலோரும் வருவார்.
அருஞ்சொற்பொருள் :
ஆசு – குற்றம்; வியன்கடை – அகன்ற வாயில்; அமலை - சோற்றுத் திரள் ; வெண் மை – வெண்மை நிறமுள்ள எருமை; நரை எருமை; வெள் இழுது – வெண்ணெய்; அற்சிரம் – பனி; வெய்ய – விரும்பத்தக்க, இதமான; சேமச் செப்பு – மூடியுள்ள செம்புக்குவளை, கமண்டலம்; பெறீஇயர் – பெறுவீராக.
கவிதை நயம் :
அறிவர், பிச்சை கேட்டு வந்திருக்கிறார். தலைவன் இல்லாததால் அறவோர்க்கு அளிக்கும் வீட்டுச் சூழல் இல்லை. சாதாரணமாக வீடுகளில் பிச்சை கேட்டு வருவோரிடம், `இல்லை` எனச் சொல்லாமல், கைச் சோலி, அப்புறம் வா, என்றோ அடுத்த வீட்டில் பாரப்பா என்றோ சொல்வதுதான் இன்றும் வழக்கமாக இருக்கிறது.
வீடான வீட்டில் இருந்துகொண்டு `இல்லை` எனச் சொல்வதை அமங்கலமென்றே கருதுகின்றனர். அதே கருத்தில் தான் தோழி அறிவரிடம் `இல்லை` எனச் சொல்லாமல், வாடைக்காலம் எப்போது வருமெனக் கேட்கிறாள். அவரும் விரைவில் வருமென்றோ, நல்வாக்காக ஏதோ பதில் சொல்கிறார். அக்காலத்தில் தான் எங்கள் காதலர் வருவார் எனக் கூறுவதன் மூலம் வீட்டில் தலைவன் இல்லை, அதனால் அறவோர்க்களித்தல் இல்லையென்பது தெரிவிக்கப்படுகிறது.

அறிவர் நல்வாக்கு தெரிவித்ததில் மகிழ்ந்த தோழி, அறிவருக்கு நல்லது நடக்க வேண்டுமென வாழ்த்துவதுதானே இயல்பு; அதன்படியே தோழி வாழ்த்துகிறாள். பிச்சையேற்று உண்பவருக்குப் பெரிதாக விருப்பம் எதுவாக இருக்க முடியும்? குற்றங்கள் அற்ற தெருவெனில், குற்றங்கள் புரிவோரல்லாத நன்மக்கள் வாழ்கிற தெரு என்றும் அசுத்தங்கள், கறைகள் அற்ற, கண்ணுக்கு மகிழ்ச்சியான தெரு என்றுமாகிறது. பிச்சை கேட்டுச் செல்பவருக்குப் பெருந்தொல்லை இன்றளவும் நாய்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால் நாய்கள் இல்லாத வீடு என்கிறாள் தோழி. அதோடு வியன்கடை எனக்குறிப்பிடுகிறாள். வியன்கடை என்பது அகன்ற வாயிலும் முற்றமும் இருப்பதால் அங்கேயே அமர்ந்து உண்பதற்கு ஏற்ற இடம். உண்பதற்கு வேற்றிடம் தேடவேண்டிய இடர் ஏதுமில்லையாகிறது. அதுவும் நல்ல சிவப்புச் சம்பா அரிசிச் சோறும் எருமை வெண்ணெய், அதுவும் வெள் இழுது என்னும்போது அன்றே கடைந்தெடுக்கப்பட்டதும் வேண்டிய அளவுக்கு ஒரு வீட்டிலேயே கிடைத்து, அங்கேயே அமர்ந்து நிறைவாக உண்டு முடித்து, குடிப்பதற்கும் பனிக்காலத்திற்கு இதமான வெந்நீரும் கமண்டலத்தில் சேமிக்கும் அளவுக்குப் பெறுவீராக` என நெஞ்சம் நிறைய வாழ்த்துவது மிகவும் இயல்பாகவும் உள்ளது.
இந்தப் பாடலின் தொனி மிக இயல்பாகக் கிராமத்து மக்கள், தம் மனம் மகிழ்ந்து பாராட்டும் போது, எட்டுப்பிள்ளை பெறுவாய், நல்ல மனைவி வருவாள் என வாழ்த்துகின்ற பாணியில் அமைந்து இன்புறுத்துவதாயுள்ளது.
இதையே, தலைவன் வந்த பிறகு வாருங்கள், எட்டு கவளங்கள் பெறுவதற்காக எட்டு வீட்டுக்குச் செல்லாமல், எமது ஒரு இல்லத்திலேயே உணவோடு வெந்நீரும் தருகிறோமென்று கூறுவதாகவும் பொருள் கொண்டிருக்கிறார்கள். கவிதையில் வரும் `மின்னிடை நடுங்கும்` என்ற தொடருக்கு மின்னலைப் போன்ற இடையையுடைய தலைவி நடுங்குதற்குக் காரணமான எனப் பொருள் வருவித்துள்ளனர்.
பேராசிரியர் சுந்தர சண்முகனார் என்ற தமிழறிஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான `இன்ப வாழ்வு` என்ற நூலில் `ஓரில் பிச்சை` கட்டுரையில் ஒரு வீட்டிலேயே முழு உணவும் கிடைத்துவிட்டால் அது விருந்து என்றும் பல வீட்டில் கிடைத்தால் தான் பிச்சை என்றும் அதனால் ஓரில் பிச்சையில் முரணுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறாகப் பலரும் அவரவர் புரிதலுக்கேற்பப் பொருள் கொண்டுள்ளனர்.
இக்கவிதை இயற்றப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இதுகாறும் எத்தனையோ தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் காலங்காலமாக இப்பாடலை வாசித்து இதன் பொருளை உன்னியறிந்து போற்றிப் பாராட்டி வியந்து, விவாதித்துமிருப்பார்கள். இன்றும் அதன் புதுமைப் பொலிவினை இழந்துவிடாதிருக்கும் இப்பாடல் குறித்து எனக்குள் ஏற்படுகின்ற ஒரு கேள்வி : தலைவி, தலைவன் மீது கொண்ட காதலையும் தோழி தலைவியின் மீதும் தலைவன் மீதும் கொண்டுள்ள அக்கறையினையும் உணர்த்துவதற்காகவா, அக்கவிஞர் இக்கவிதையை யாத்திருப்பார்? `ஓரிற் பிச்சை` குறித்து அவருக்குள் ஏற்பட்ட உணர்வினைப் பதிவு செய்யவிரும்பிக் கவிதையாக்க முனைந்தவருக்கு தமிழ்க்கவிதை மரபின் பாலைத்திணை வசதியானதாகத் தோன்றியிருக்கும். அதன் வரையறைகளுக்குள் அவர் விரும்பிய ஓரிற்பிச்சையைக் கவிதையாக்கிவிட்டாரென்பதே எனது முடிபு.
இப்பாடலிலிருந்து தெரிந்துகொள்ளும் செய்திகள்
1. அழகிய சுத்தமான தெருக்களும் அமைக்கப்பட்டிருந்துள்ளன.
2. வீடுகளில் நாய்கள் வளர்க்கும் பழக்கம் இருந்துள்ளது. நாய்கள் வளர்க்காத வீடுகளும் இருந்துள்ளன.
3. அகன்ற வாயில்கள் உள்ள வீடுகளும் இருந்துள்ளன.
4. பிச்சையேற்பவர்களுக்கு அரிசிச் சோறும் எருமை வெண்ணெயும் வழங்கியுள்ளனர்.
5. எருமை வெண்ணெய் வழங்கியுள்ளதால் அந்த வீட்டில் எருமைகள் வளர்க்கப்பட்டிருக்கலாம்.
6. பிச்சையேற்பவர்களின் வயிறு நிறையுமளவுக்கு சோறு வழங்கி, முன்வாயிலிலேயே அமர்ந்து உண்ணுவதற்கும் அனுமதிக்கும் வீடுகளும் இருந்துள்ளன.
7. குடிப்பதற்கு வெந்நீர் வழங்கப்பட்டிருக்கிறது. அற்சிரம் வெய்ய வெந்நீர் எனக் குறிக்கப்படுவதால் பனிக்காலத்தில் வெந்நீர் குடிப்பதை விரும்பியுள்ளனர்.
8. அறிவரிடம் சேமச்செப்பு இருந்துள்ளது. எனவே செம்பு உலோகம் பாத்திரத் தயாரிப்புப் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட காலமென்பது தெரியவருகிறது.
9. மருத நிலத்திலும் முல்லை நிலத்திலுமே எருமைகள் வளர்க்கப்பட்டன. இப்பாடல் பாலைத் திணையிலுள்ளது. மருதம் பாலையாகத் திரிவதில்லை. குறிஞ்சியும் முல்லையுமே கோடையில் பாலையாகத் திரிந்து தோற்றமளிப்பவை, எனவே அந்த ஊர் முல்லை நிலத்தூர் என்பதை தெளிவு.
10. அறிவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்களென மக்கள் நினைத்திருந்தனர்.

11. கார்காலத்தின் கடைசி மழை முடியும்போது வாடைக்காலம் தொடங்கும்.
No comments:
Post a Comment