Tuesday, 8 May 2018

தங்கரளி என்னும் காசியரளி.

தங்கரளி என்னும் காசியரளி 
தங்கரளி என்னும் காசியரளி. Cascabela thevetia (syn: Thevetia peruviana) yellow oleander.
இச்செடியின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் நஞ்சுடையது.
இதன் பூக்களை மட்டும் கந்தகத்துடன் அரைத்துச் செய்யும் களிம்பு கிரந்தி, குழிப்புண், மற்றும் குஷ்ட நோய்க்கும் நிவாரணம் தருமென்று சொல்கிறார்கள். இச்செடியின் பக்கம் எந்த உயிரிகளும் செல்வதில்லை. இதன் பூக்களிலும் தேன் கிடையாது.
இதன் முற்றிய காய்களை மேற்தோலைச் சீவிவிட்டு பெண்கள் மரக் கழச்சிக்குப் பதிலாக கழச்சி விளையாட்டுக்குப் பயன்படுத்துவதுண்டு. இந்த விதைகள் இரண்டு கூம்புகளின் அடிப்பாகங்களை ஒட்டி வைத்தாற்போல் இரு பக்கங்களில் நீண்டும் நடுப்பக்க வயிற்றில் ஒரு கோட்டுடனும் கட்டியான மேற்தோடுடனும் இருப்பவை. கட்டியான தோட்டினை உடைத்து உள்ளிருக்கும் வெண்ணிறப் பருப்பினை தின்பவர்கள் உயிர்கள் பிழைப்பது கடினம்.
தங்கரளிக்காயை அரைத்துக் குடித்துவிட்டதாகத் தெரிந்தால் வயிற்றுக்குள்ளிருக்கும் அனைத்தையும் வாந்தியாக வெளிக்கொணர, கோவை இலையை இடித்துச் சாறாக உள்ளுக்குக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். நாய் மலத்தைக் கரைத்துப் புகட்டுவார்கள். முழுவதையும் வாந்தியெடுக்கச் செய்துவிட்டால் பிழைத்துக்கொள்வார்கள்.
அரளி விதையை அரைத்துக்குடித்து குடும்பத்தோடு மாண்டு போனவர்களும் உண்டு.
இதன் பூக்களை சிவன் கோயிலில் பயன்படுத்துவதில்லை. ஏதோ ஒரு அரக்கன் விரட்டி வந்தபோது, சிவன் இந்தப் பூவுக்குள் வந்து ஒளிந்துகொண்டானாம். இந்தப் பூ, இதோ இங்கே தான் ஒளிந்திருக்கிறாரென்று அரக்கனிடம் காட்டிக்கொடுத்துவிட்டதாம். அதனால் இப்பூ சிவனுக்கு ஆகாது என்பர், எம்மூரார்.
சாஸ்தா கோவில்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. இப்பூச்செடிகள் கண்ணுக்கழகாகப் பூத்திருந்தாலும் இவற்றை விலக்கிவைத்திருப்பதே நல்லது.
வயலில் எலிநடமாட்டத்தைத் தடுக்க இச்செடிகளை வெட்டி நான்குபக்கமும் போட்டுவைக்கலாமென்கின்றனர்.
 முகநூல் பதிவு 26.04.2018 . விருப்பம் 67 பகிர்வு  11 பின்னூட்டம் 9

No comments:

Post a Comment