Thursday, 15 February 2018

ஐஸ்க்ரீம் கனவு - தந்தைமை மகிழ்வு (அபுனைவு 7)

ஐஸ்கிரீம் கனவுகள் - தந்தைமை மகிழ்வு
ஐஸ்கிரீமைத் தமிழ்ப்படுத்த முனைந்தவர்கள் குளிர்பாலேடு, பனிப்பாலேடு, குளிர்களி, பனிக்கூழ், பனிப்பாகு, பனிக்குழை, பனிக்குழைவு, பனிக்குழைமம், என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்கள். மூலப் பொருள் பால் என்பதால் பனிப்பாற் குழைமம் பொருத்தமாகுமென எனக்குத் தோன்றுகிறது. நெல்லை, நாமதாரிப் பிள்ளைமார் திருமணவீடுகளில் திரட்டுப்பால் என்றொரு தித்திப்பு பரிமாறுவார்கள். பாலைச் சுண்டக் காய்ச்சி வெல்லம் சேர்த்துத் திரட்டுவதால் `திரட்டுப்பால்` எனப்படுவது போல் ஐஸ்க்ரீமுக்கு `பனித்திரட்டுப்பால்` இன்னும் பொருத்தமாகலாம். எனினும் வாசிப்புக்கு முன்னுரிமை அளித்து ஐஸ்கிரீம் என்றே குறிப்பிட விழைகிறேன்.
எந்தவொரு நினைவானாலும், அது அப்பா அல்லது அம்மாவிடமிருந்துதான் தொடங்குகிறது. எனது ஐஸ்கிரீம் அப்பாவிடமிருந்து தான் தொடங்கியது.
சென்ற மாதம் கீரிப்பாறையிலிருந்து கோட்டாறு இரயில் நிலையத்துக்கான பேருந்துப் பயணம். அறுபதுகளின் நாகர்கோவில், மனத்துக்குள் வடசேரி, சந்தைமேடு, குளம், குளத்தங்கரைக் குடிசைகள், ஒற்றைச் சவுக்கு மரம், செம்மண் வேர்களுடன் வழுதுணை, வடைமிளகாய், சவுக்குத் தைகள், தென்னங்கன்றுகள் விற்கும் முதியவர், கவிமணி அரங்கம், சில்வர் எம்போரியம், நாகரம்மன் கோயில், பெட்ரோமாக்ஸ் கடை, மூத்திரச் சந்து, மாடியில் முருகண்ணன் தையற்கடை, நாட்டுமருந்துக் கடை, மூலிகை வாசனை, திரவியம் மெடிகல்ஷாப், சுதர்சன் பட்டு, சுந்தரராமசாமி, புளிய மரத்தின் கதை எனத் தளும்பிக்கொண்டிருக்க, வாறன்ஸ் டிரிங்க்ஸ் கண்ணில் பட்டது. இப்போதும் அதே பெயரா! வியப்பும் மகிழ்ச்சியுமாகக் கைகொட்டும் ஒரு குழந்தை உணர்வு; மனம் முழுக்க அப்பா நினைவு ஆலமரமாகப் படர்ந்தது. வேலூர் வந்தபின் இணையத்தில் வாறன்ஸ் எனத் தட்டிப்பார்த்தேன். நாகர்கோவில் வாறன்ஸ் ஐஸ்க்ரீம் என ஒரு வலைத்தளம் இருந்தது.
முதல் பாரம் (First Form) என அழைக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அரைப் பரீட்சையில் ஆங்கிலம் 99, இந்தி 98, கணிதம் 100 மதிப்பெண்கள். மதிப்பெண் அள்ளிக்கொடுத்த ஆசிரியர்கள், நீதிநாயகம், சுமன், வேலாயுதம். மறுநாள் அப்பா நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்பாவிடம் இரண்டே இரண்டு சட்டைகள் மட்டுமே உண்டு. இரண்டும் சந்தனக்கலர். ஆனால், நாகர்கோவிலுக்குச் செல்வதற்கெல்லாம் அப்பா சட்டை அணிவதில்லை. இடுப்புக்கு ஒரு லங்கோடு, அதை மறைக்க ஒரு நூறாம் நம்பர் எட்டுமுழ வேட்டி, தோளில் சலவை மடிப்பு குலையாத ஒரு பச்சைக்கரைத் துண்டு, அவ்வளவுதான். அவருடைய வேட்டி மடியில் தான் அவ்வளவு பணமும் இருக்கும். பர்ஸ் என்பதெல்லாம் கிடையாது. வேப்ப மூட்டில் இறங்கி தாசர் பிரஸ் தாண்டி, க்ரீன் லாண்ட் ஓட்டல் பூந்தொட்டிகளின் பசுமைப் பனை, பெரணிகள் (அதன் எதிர்புறத்திலொரு செவ்விளநீர்த் தெங்கும் விசிறிவாழையும் இருந்ததாக நினைவு) பக்கமாக இடது புறம் திரும்பி அடுத்தாற் போலிருந்த டாஸ் பிரசுக்கு வந்தோம். அப்பா இங்கிலீஷ் டிஷ்னரி என்றார். லிப்கோ ஆங்கில - தமிழ் அகராதி (அன்றைய விலை ரூ.5/-, ஆனால் அது அரைக் கோட்டை நெல்லின் விலையாக இருந்திருக்கும். அந்தக் காலத்தில் எங்களுக்கு அறுத்தடித்து, பூ ஒன்றுக்கு 30, 35 கோட்டை நெல் வந்துகொண்டிருந்தது.) லிப்கோவைப் புரட்டிப் பார்த்த உடனேயே மகிழ்வும் பெருமிதமும் கலந்த ஒரு உணர்வு. காக்கிநிற அட்டைத்தாளில் பொதிந்து சணல் நூலால் கட்டிக் கொடுத்தார், கடைக்காரர். அப்பாவின் கைவிரல் பற்றி நடந்தபோது மணிமேடை 4.00 மணி காட்டியது. வடக்காகச் செல்லும் பாலமோர் சாலையில், எங்கள் வீட்டுக்கருகிலுள்ள பிள்ளையார் கோயில் பூசைவைக்கும் மணி ஐயர், மாஸ்டராக இருந்த கோல்டன் லாட்ஜூக்கு எதிரில் வாறன்ஸ் டிரிங்ஸ். அப்பா அங்கேதான் அழைத்துச் சென்றார்கள்.
நான் அப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். திடமாக உயரமாகப் பளபளப்புடன் இரட்டைக்கதவுகள்; உள்ளே நான்கே மேஜைகள். மேஜைகளில் பூங்கொத்துகள்; வாடிக்கையாளர்கள் யாருமே இல்லை. உரிமையாளர், பரிமாறுபவர் எல்லாம் ஒருவரே போலத் தானிருந்தது. உரிமையாளர் மேஜையில் உயரமான கண்ணாடிச் சாடிகளில் ஏதேதோ நிறங்களில் பெயர் தெரியாத தின்பண்டங்கள் அழகழகாக அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த மேஜைக்கு நேர் எதிரிலிருந்த மேஜையில் உட்கார்ந்தோம்.
கடைக்காரரிடம் அப்பா ஃப்ரூட் சாலட் என்றார்கள். கால் முளைத்த இரண்டு கண்ணாடிக் கிண்ணங்களில் சிறுசிறு அழகுச் சதுரங்களாக அரிந்த பழங்கள். கருந்திராட்சை ஒன்றிரண்டு சிவந்த வாயுடன் உருண்டையாகக் கிடந்தது. உரித்த ஆரஞ்சுச் சுளை பாதி பாதியாக ஒன்றிரண்டு தெரிந்தது. பிருத்திச் சக்கையின் நிறமும் மணமும் நாவுக்குப் புரிந்தது. உமிழ்நீர் மற்றும் இரைப்பைச் சுரப்பிகள் வேகம்பெற்றன. வேறு பழங்களின் பெயர்களெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் வாழைப்பழம் இல்லை. அதன் மேலாகவே பாலேட்டு நிறத்தில் பிருபிருத்த தோற்றத்தில் ஒரு உருண்டை. அதன் மேற்புறத்தில் பளபளக்கும் செஞ்சிவப்பில் சிறிதாக ஒரு கழச்சி. அது ஏதோ ஒரு பழம். அந்த வெண்ணிற உருண்டை வெனிலா ஐஸ்க்ரீம் என்றும் அந்தச் செஞ்சிவப்புக் கழச்சி, செர்ரி என்றும் பிற்பாடு தெரிந்துகொண்டேன். எடுத்து உண்ணுவதற்கு அழகான ஒரு கண்ணாடிக் கரண்டி ஐஸ்க்ரீமை மட்டும் கரண்டியால் சிறிது எடுத்து வாயில் போட்ட அப்பா, மீதியைப் பழத்துண்டுகளோடு சேர்த்துக் கலக்கத் தொடங்கினார்.
நான் செர்ரியை எடுத்து முதலில் வாயில் போட்டு உதப்பிப் பின்னர் மெல்லக் கடித்து இரண்டாக்கிச் சுவைத்துச் சுவைத்து விழுங்கிவிட்டு ஐஸ்க்ரீமில் ஒரு கரண்டியெடுத்து வாயில் போட்டு அப்படியே வைத்திருந்தேன். அப்பா அதற்குள் ஐஸ்க்ரீமையும் பழத்துண்டுகளையும் ஒன்றாகக் கலந்து உண்ணத் தொடங்கிவிட்டார். எனக்கு ஐஸ்க்ரீமை உடைக்க மனமில்லை. ஒரு பழத்துண்டு, ஒரு கரண்டி ஐஸ்க்ரீமென வாயில் போட்டு மென்று மென்று அனுபவித்துக்கொண்டிருந்தேன். நான் பாதி முடிப்பதற்குள் அப்பா சாப்பிட்டு முடித்து கடைசியாக செர்ரியை எடுத்து வாய்க்குள் ஒதுக்கிக்கொண்டார்.
நான் சாப்பிட்டு முடித்த பின்னும் எழத் தயாராக இல்லை. என்ன என்றார், இன்னொன்று சாப்பிடலாம் என்றேன். ப்ரூட் சாலட் தான் சாப்பிட்டுவிட்டாயே, வேறு ஏதாவது வாங்கிக்கொள் என்றார். கடைக்காரரை வேறு என்ன இருக்கிறது என்றார். நான் இது மாதிரியே வேண்டுமென்றேன். அவர் ஜெல்லி இருக்கிறதென்றார். அப்பா அதிலேயே ஒன்று கொடுக்கச் சொன்னார். பழத்துண்டுகளுக்குப் பதிலாக செம்பவளத் துண்டுகளாகக் கண்ணாடி ஜெல்லி, அதன் மேல் வெனிலாக் கோளம். அதைப் பார்த்துக்கொண்டேயிருக்கத் தோன்றும். அதன் கம்பீரத்தைக் குலைப்பதற்கு மனம் வரவேயில்லை. பார்ப்பதற்காகவா வாங்கியிருக்கிறாய், சாப்பிடு சீக்கிரம், பஸ்சுக்குப் போகணுமில்லையா, என்றார் அப்பா. நான் சாப்பிடத் தொடங்கினேன். சுவை அதிகத் தித்திப்பு. அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதன் பிறகு நான் ஜெல்லி வாங்கிச் சாப்பிட்டதாக நினைவேயில்லை. பிறகு அப்பாவும் நானுமாக அங்கே போன நாட்களிலெல்லாம் ப்ரூட் சாலட் தான். நான் மட்டும் அதைத் தொடர்ந்து ரோஸ் மில்க், ஆரஞ்சுச் சாறு, எலுமிச்சம்பழச் சாறு என ஏதாவது ஒரு பானம் அருந்துவது வழக்கமானது. அப்பா எப்போதுமே ஒரு ப்ரூட் சாலட் மட்டுந்தான். அதோடு நிறுத்திக்கொள்வார். அவர் விதம் விதமாகச் சாப்பிட விரும்புவார். ஆனால் எதுவானாலும் அளவோடுதான். வீட்டில் மாலையில் சிலநாட்களில் கடுங்காப்பி சாப்பிடுவதுண்டு. வெளியில் என்றால், நுங்கு சர்பத் தவிர வேறு பானவகைகள் எதுவும் குடிப்பதில்லை. சோடா, கலர், தேயிலை, பால், மோர், நீத்தண்ணி எதுவுமே அவருக்குத் தேவையில்லை. பச்சத்தண்ணீர் தான். குறைந்தது ஒரு லிட்டர் தேவைப்படும். அதற்கென்று ஈயம் பூசிய பித்தளைப் போணி ஒன்று இருக்கும். அதில் தான் கொடுக்கவேண்டும்.
மணிமேடைப் பக்கம் நாங்கள் வருவதற்கு ஏதாவது ஒரு வேலையிருந்தது. பிக்சர் பாலஸ் திரையரங்கம் இருந்தது. அதில் அப்பாவுக்குப் பிடித்த படங்கள் ஒன்றிரண்டு வரும். அதை ஒட்டிய காலி இடத்தில்தான் பாபநாசம் செல்லும் பயோனியர் பேருந்துகள் நிறுத்துமிடம் இருந்தது. பாலசரசுவதி, டி.எம்.பி.எஸ் பேருந்துகள் மணிமேடைக்கு எதிர்த்தாற் போல் டி.எஸ்.பி. அலுவலகம் செல்லும் சாலையில் நிற்கும். பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பென், பென்சில், ஜியோமெட்ரி பாக்ஸ் வாங்க டாஸ் பிரசுக்கோ, தாசர் பிரசுக்கோ, ஜெயகுமாரி ஸ்டோர்ஸூக்கோ வரவேண்டியிருந்தது. அப்பாவும் நானுமாக அந்தப் பக்கம் வந்த நாட்களில் எல்லாம் அப்பா என்னை வாறன்ஸ் டிரிங்ஸ் கடைக்கு அழைத்துச் செல்லாமலிருந்ததில்லை.
66ல் கோணம் பாலிடெக்னிக்கில் சேர்ந்த பிறகு எனது தனி ராஜ்யம். நண்பர்களுடன் உணவுவிடுதிகள், திரையரங்குகள் என மூன்று வருடங்கள் அலைந்து திரிந்தாலும் வாறன்ஸ் டிரிங்க்ஸ்க்குப் போன நினைவுகள் இல்லை.
அதைத் தொடர்ந்த ஆண்டுகளிலும் அம்பை, சிங்கையெனப் பயணங்களும் சிறுசிறு வசிப்பிட மாற்றங்கள் நிகழ்ந்ததென்றாலும் ஐஸ்க்ரீம் நினைவு எதுவுமில்லை. ஐஸ்க்ரீம் சுவைக்கும் எண்ணமே எழுந்ததில்லை. 72 ஜனவரியில் அப்பா மரணம். எனது ஜாகை பவானி சாகர், காரியாபட்டி, முஷ்டக்குறிச்சி, குலசேகரம், மதுரை, கம்பம் என மாறிக்கொண்டேயிருந்தது. 80ல் வேலூர் வந்தபின் இடமாற்றம் எதுவுமில்லை. வேலூருக்கு வரும்போது கடுமையான மஞ்சள் காமாலை குணமான ஒரு வாரத்தில், எவ்வளவு அதிகம் பழச்சாறு அருந்த முடியுமோ அவ்வளவுக்கு அருந்தும்படியான மருத்துவ ஆலோசனையோடு தான் வந்தேன். அப்போது சி.எம்.சி. எதிரிலுள்ள கடைகள் ஒன்றில் சாத்துக்குடியை மட்டும் தனியாகச் சாறுபிழிந்து கொடுப்பதைக் கண்டு, ஒரு மாதம் வரையிலும் சுசிலில் காலை உணவு முடித்ததும் அந்தக் கடையில் ப்ளெயின் சாத்துக்குடி ஜூஸ் (மூன்று பழங்கள்) குடிப்பது வழக்கமாயிருந்தது. அந்த நேரத்தில் தான் அலுவலக நண்பர் யாரோ நாவல்பழம் ஜூஸ் நல்லதெனச் சொல்லி பேருந்து நிலைய சிம்லா ஜூஸ் பாருக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வருகிறது. வயிற்று வலி, பொருமல், செரிமானமின்மை, சிறு வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு இலவச மருந்தென ஒரு சிறிய சுண்டைக்காயளவுக்கு மருந்து கொடுப்பார்கள். அதை வாங்கி நாக்கில் தடவிக்கொண்டு நாவல் பழ ஜூசென்று பழச்சாறு கொடுப்பார்கள். பழச் சாறுக்கு மட்டும் விலை. நான் அந்த மருந்து சாப்பிட்டதில்லை. ஜூஸ் குடித்துப் பார்த்தேன். நிச்சயமாக அது நாவல் பழ ஜூஸ் இல்லை. கருஞ்சிவப்பு ஊதா நிறத்திலிருப்பதால் அந்தப் பெயர் வைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. சிம்லாவில் மீண்டும் ப்ரூட் சாலட் தொற்றிக்கொண்டது. ப்ரூட் சாலட் இல்லையெனில் வெனிலா எனது தேர்வாக இருந்தது. வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சாப்பிடுவதுதான். ப்ரூட் சாலட், ஐஸ்க்ரீம் சாப்பிடும் போதெல்லாம் அப்பா நினைவு மனத்துக்குள் ஓடும்.
85 இல் சி.எம்.சி எதிரில் ஒரு சிம்லா ஜூஸ் கடை புதிதாகத் தொடங்கி ஒரு ஐந்து வருடம் போலச் சிறப்பாக இயங்கியது. அங்கே ஸ்பெஷல் ப்ரூட் சாலட் கிடைத்தது. மிகவும் அற்புதச் சுவைகொண்ட பழக்கலவை, மிகச் சிறு அளவில் ரோஸ் எஸ்ஸென்ஸ் வழிகிற வெனிலா கோளம், செர்ரி மகுடத்துடன் நம் முன் வைத்துப் பின் கண்ணில் தெரிகிற மாதிரி, முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற கொட்டைப் பருப்புகளின் பொடிக்கலவையைத் தூவி, கரண்டியை வைப்பார்கள். அந்த ப்ரூட் சாலடைச் சுவைக்குமாறு பரிந்துரைத்து நண்பர்கள், மேலதிகாரிகள் எனச் சிலரை அழைத்துக்கொண்டு போய்ச் சிறு விருந்தளித்து மகிழ்ந்துமிருக்கிறேன். ப்ரூட் சாலடைத் தொடர்ந்து சப்போட்டா, அன்னாசி, அல்லது மாதுளைச் சாறு அருந்துவது நிறைவாக இருக்கும். சென்னை உயர்நீதி மன்றம் செல்கையில், காலை உணவாக, பிராட்வே சரவணபவனில் ஒரு பிளேட் இட்லி, சாம்பார் வடை அல்லது ஆப்பம் சாப்பிட்டு ஒரு காரட் ஜூஸ் அல்லது ப்ளெயின் மாதுளை ஜூஸ் அருந்தி நிறைவுசெய்துவிட்டு உயர்நீதிமன்றத்துக்குள் நுழைந்துவிட்டால் மதியம் இரண்டு மணி வரையில் சோர்வில்லாமல் நீதிமன்ற நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருக்கலாம்.
எனக்குத் திருமணமாகி ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். மனைவி குழந்தைகளுடன் ப்ரூட் சாலடு, பழச்சாறு அருந்தும் மகிழ்ச்சியை விட்டுவிடமுடியுமா? என் மகளும் சிறுவயதில் என்னைப் போலவே இரண்டு கேட்பாள். அதுவும் முதலாவதே இரண்டையும் கொண்டுவந்து வையென்பாள். நாம் சுவைத்து மகிழ்வது ஒரு புறம்; மனைவி, குழந்தைகளைச் சுவைக்கச் செய்து அதைப் பார்த்திருப்பது தனியானதொரு பெருமகிழ்ச்சியல்லவா! என் தந்தை மகிழ்ந்த மகிழ்வினை அப்போதுதான் நானும் உணர்ந்தேன்.
97 இல் சர்க்கரை நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு வகை உணவுகளைத் துறக்க வேண்டியதாயிற்று. அதில் எந்த வருத்தமும் இல்லை. அதற்குப் பதிலாக எந்த வகைப் பழச் சாறு, ஒத்துக்கொள்ளுமோ, அதனைச் சீனி இல்லாமல், ஐஸ் இல்லாமல் ப்ளெயினாகச் சுவைத்துக் குடிக்கப் பழகிக்கொண்டேன்.
தர்ப்பூசணி, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, அத்தி, காபூல் அத்தி, ஆஸ்திரேலிய அத்தி, கிவி, பால் மட்டும் சேர்த்து அவகோடா, லிச்சி, டிராகன், ஸ்ட்ரா பெர்ரி உப்பிட்டு, சீரகத்தூள் அல்லது மிளகுத்தூள், பெருங்காயத் தூள் தூவி எலுமிச்சை, தக்காளி, நெல்லி என எத்தனையோ பழங்கள் கிடைக்கின்றன. கிர்ணி என்றும் அழைக்கப்படுகிற முலாம்பழச்(Musk Melon)சாறினை இலேசான ஒரு இஞ்சிக் கோடு மணக்க அருந்திப் பாருங்கள், அற்புதச் சுவை.
வேலூரில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கென சிம்லா, கோவை, மகாராணி மற்றும் பல உணவுவிடுதிகளும் உள்ளன. ஆவின், அமுல், அருண், குவாலிட்டி எனப்பல நிறுவனத் தயாரிப்புகளும் கிடைக்கின்றன. 90களின் பிற்பகுதி வரையிலுங்கூட, தமிழகத்திலேயே கோவை சிந்தாமணிக்கு அடுத்த நிறுவனமாகப் புகழுடன் மிகச்சிறப்பாக இயங்கிய கற்பகம் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டிலும் கோன் ஐஸ்க்ரீம் கிடைத்துவந்தது. பாவிகள், யார் செய்த வேலையோ தெரியவில்லை, அந்த சூப்பர் மார்க்கெட் மண்ணோடு மண்ணாகிப் போனது.
இப்போது எனக்குத் தெரியாத ஏதோதோ புதுப்பதுப் பெயரில் அழகழகான நிறங்களில் ஐஸ்க்ரீம்களை குடும்பப்பொதி(Family Pack)யென மகளும் மருமகனும் வாங்கிவந்து குளிர்பெட்டியில் வைத்து வேண்டும்போது எடுத்துச் சுவைத்து மகிழ்கிறார்கள்.
வேலூரில் ஐஸ்க்ரீம் சுவைத்த மகிழ்வினைப் பிற்காலத்தில் எனது மகன், மகளோ, அவர்கள் மகன் மகள்களோ என்னைப் போல நினைவுகளில் வாழும் முதுமையில் எழுதிப் பகிர்ந்து மகிழ்வார்களோ என்னவோ.
நீங்கள் காட்பாடி வருவதாகயிருந்தால் குடியாத்தம் சாலையிலுள்ள நாகராஜன் பழச்சாறகத்தைத் தவறவிடாதீர்கள். அங்கே ஐஸ்க்ரீம் கிடையாது. முதல் தரப் பழங்கள் மற்றும் பழச்சாறும் மட்டுமே.

No comments:

Post a Comment