Monday, 19 February 2018

ஸ்ரீதர் ரங்கராஜின் பெண்டதாங் சிறுகதை

ஸ்ரீதர் ரங்கராஜின் பெண்டதாங் சிறுகதை
பிப்ரவரி 2018 அடவி இதழில் ஸ்ரீதர் ரங்கராஜின் பெண்டதாங் (வந்தேறி) சிறுகதையை வாசித்ததும் ஒரு நிறைவு ஏற்பட்டது. இதைப் போன்ற ஒரு நிறைவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிர்மையில் எஸ். ராவின் `எம்பாவாய்` கதை வாசித்து முடித்ததும் ஏற்பட்டது.
படைப்புகள் வாசகனுடன் உரையாட எடுத்துக்கொள்கின்ற கருத்தாக்கத்தின் முக்கியத்துவமே அத்தகைய நிறைவினை ஏற்படுத்துவதை உணரமுடிகிறது.
மலாயாவிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியின் பூங்கா ஒன்றுக்கு காலை நடைக்கென தமிழரான கதைசொல்லியும் ஒரு சீனரும் தினமும் தவறாமல் வருகின்றனர்.சீனருக்கு 70 வயது இருக்கலாம். பூங்காவின் நுழைவாயிலுக்கும் சீனரின் வீட்டுக்கும் ஒரு கி.மீ இருக்கலாம். கைத்தடியும் துணைக்கு ஒரு பெண்ணுமாக வருகிற அந்தச் சீனர் பூங்காவுக்குள் நுழைந்ததும் கைத்தடியை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு நடைக்கென அமைக்கப்பட்டிருக்கும் நீள்வட்டப் பாதையில் நடப்பதும் அங்கிருக்கும் உடற்பயிற்சிக் கருவிகளில் பயிற்சி மேற்கொண்டுவிட்டு சிறிது நேரம் பூங்காவில் அமர்வதும் வழக்கம். கைத்தடியுடன் அந்தப் பெண் அவர் அருகில் உட்காராமல் நீளிருக்கையின் ஒரு ஓரமாக அமர்வாள். கதைசொல்லியும் சீனரும் எப்போதாவது பேசிக்கொள்வதுதானென்றாலும் அவர்களுக்கிடையே நட்பென்று எதுவுமில்லை. இருவருக்கும் நடுவில் பனிப்படலமொன்று இருப்பதாக கதைசொல்லி உணர்கிறார். அதைப் போலவே அந்தச் சீனரும் உணருவாரென கதைசொல்லி நினைக்கிறார். அந்தப் பனிப்படலம் மறைந்து இருவருக்குமிடையில் நட்புணர்வு துளிர்க்கிற சம்பவம் தான் கதை.
தாவரங்கள் மீதான புரிதலே அவர்களுக்கிடையில் நட்புணர்வு மேலிடுவதற்கு அடிப்படையாக அமைகிறது. அந்தப் பெண் இந்தோனேசியப் பழங்குடிப் பெண். அந்தப் பணிப்பெண்ணும் சீனருமாக 50 வகைக்கும் மேற்பட்ட தாவரங்களை வளர்க்கின்றனர். கதைசொல்லி மற்றும் சீனரின் உரையாடலில் வாழ்க்கை நடைமுறைகள் பலவும் பகிர்ந்துகொள்ளப்படுவதுடன் இந்த பூமி தாவரங்களுக்கானதென்றும் தாவரங்கள் மீது தொல்குடியினர் கொண்ட நேசம் தற்போதும் நமக்குத் தேவைப்படுகிறதென்றும் கூறப்படுகிறது.
பெருந்தன்மை மிக்க இரு இரயில் பயணிகள் உலக விஷயங்களைப் பரிமாறிக்கொள்வது போலப் பட்டும் படாமலும் வாதமாக அன்றி, நியாயமெனத் தான் உணர்வதை இயல்பான ஒரு முறையில் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது, அந்த உரையாடலின் வெற்றி.
சீனருக்கும் அந்த இந்தோனேசியப் பெண்ணுக்குமிடையிலான உறவு எத்தகையது? அது வாசகனுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இடைவெளி. கதையின் முடிவில், கதைசொல்லி சீனரின் வீட்டிலிருந்து புறப்படும்போது நாமும் அந்த வீட்டில் தேநீர் அருந்தி விடைபெறுவது போல, அந்த மூவரின் மீதும் நமக்கொரு நேச உணர்வு மேலிடுகிறது.
டேவ் எக்கர்ஸ் எழுதிய Another என்ற அமெரிக்கச் சிறுகதையில் எகிப்துக்குப் பிரமிடுகளைக் காணச் சென்ற அமெரிக்கப்பயணி, குதிரைக்காரனான அரபி, தன்னைக் கொன்றுவிடுவானோவெனச் சந்தேகம் கொள்வார். ஒரு பிரமிடைப் பார்த்து முடிக்கின்ற போது அமெரிக்கப் பயணியின் சந்தேகம் தீர்ந்து இன்னொரு பிரமிடைக் காண உற்சாகமாகக் கிளம்புகிறார்.
சீன எழுத்தாளர் யான் லியாங் கே, இங்கிலாந்து சென்றபோது வழிப்போக்கர்கள் அவரைப் பார்த்த பார்வையில் ஒரு வெறுப்பு இருந்ததாக England and my Clan கதையில் பதிவு செய்கிறார்.
உதயசங்கரின் சகமனிதன் கதையில் ஒரே ஊருக்கு அருகருகே அமர்ந்து செல்லும் பேருந்துப் பயணிகள் இருவர் ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்வதைப் பதிவுசெய்திருப்பார்.
எல்லோருடனும் நட்புகொண்டுவிடுவதொன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. நட்பினைப் பிரதிபலிப்பதிலும் இயலாமைகள் உள்ளன. நாம் நட்புகொள்ளும் சிலரிடமிருந்து அதே அளவுக்கான நட்பு கிடைக்காமலிருப்பதையும் உணர்கிறோம். ஆனால் பரந்த மனத்தோடிருப்பதும் இயற்கையைச் சிதைக்காமல் வாழ்வதும் தேவைப்படுகிறது.
”ஒன்றைக் குறித்த உண்மையான நேசிப்பு உங்களுக்குள் உருவாக நீங்கள் குறிப்பிட்டதொரு வயதைக் கடக்கவேண்டியதாக இருக்கிறது. ஒரு விஷயத்தில் உள்ள உன்னதத்தை உணர்ந்துகொள்ளும் இயல்பு வரவேண்டும். மனிதர்கள் கனியும் காலம் ஒரு தாவரத்தைவிடப் பன்மடங்கு நீண்டது.” என்பது அந்தச் சீனரின் புரிதல்.
வாசிக்கக் கிடைக்கும் பல தமிழ்க் கதைகளும் மிகத் திறமையாக புனையப்படுகின்றன. ஆனாலும் மனித மாண்பினை உயர்த்திப் பிடிக்கின்ற மிகச் சிலவே காலம் கடந்தும் நினைவில் நிற்கின்றன.
பிப்ரவரி, 14, 2018 இல் முகநூலில் பதிவுசெய்யப்பட்டது விருப்பம் 52, பகிர்வு 10 பின்னூட்டம் 4.

No comments:

Post a Comment