பாதுகாப்புள்ள ஒரு பெண் ( A Sheltered Woman ) ஆங்கிலம் : யியுன் லி ( YIYUN LI ) சீன – அமெரிக்கர் / தமிழில் / ச. ஆறுமுகம்
யியுன் லி பிறப்பால் ஒரு சீனர். 1996ல் பீய்ஜிங் பல்கலையில் இளங்கலைப்பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் அயோவா பல்கலையில் நோய் எதிர்ப்பியலில் 2000ல் முதுகலைப் பட்டமும் 2005ல் அதே பல்கலையின் எழுத்தாளர் பட்டறையில் ஆக்கபூர்வப் படைப்பியல் மற்றும் ஆங்கிலத்தில் எம்.எப்.ஏ. பட்டமும் பெற்றதோடு, 2008லிருந்து கலிபோர்னியா பல்கலையின் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அவரது தாய்மொழி மற்றும் பண்பாட்டின் தாக்கத்தில், அவரது இரண்டாவது மொழியான ஆங்கிலத்தில் கதைசொல்லுதலில் ஏற்பட்டுள்ள தனித்துவமும் அமைதியும் கொண்ட, அவரது மிதமான, அடக்கமான நடை, வாசகர்களை, சீனப் பின்னணியிலும் அமெரிக்கப் பின்னணியிலும் உருவாக்கப்பட்ட அவரது சக்திமிக்க, உணர்ச்சிபூர்வமான ஈர்ப்புடைய அவரது பாத்திரப் படைப்புகளின் போராட்டங்களுக்குள் இழுத்துச் செல்வதாக உணரப்படுகிறது. அவரது சிறுகதைகள் கிரந்தா, நியூயார்க்கர் மற்றும் பாரீஸ் ரிவ்யூ இதழ்களில் வெளியாகின்றன. சமூகம் கண்டுகொள்ளாத எளிய மனிதர்களின் துயரங்களைத் தாங்கும் அவரது படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் பிந்திய பகுதியில் சீன அரசியல் மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களையும் சித்திரிக்கின்றன. A Thousand Years of Good Prayers (2005), novel The Vagrants (2009), Gold Boy, Emerald Girl: Stories (2010) ஆகிய கதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழாக்கம் செய்யப்படுகின்ற கதை நியூயார்க்கர் 10.03.2014 இதழில் வெளியானது. இக்கதைக்கு இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் இஎப்ஜி சிறுகதை அவார்டு, 2015, 24.04.2015 அன்று அறிவிக்கப்பட்டது. பரிசுத்தொகை £30,000 அதாவது இந்தியப் பணத்தில் ரூ.3021474.16 (முப்பது இலட்சத்து இருபத்தோராயிரத்து நானூற்று எழுபத்து நான்கு ரூபாய் மற்றும் பதினாறு காசுகள் மட்டும்.) உலகில் ஒரு சிறுகதைக்கு வழங்கப்படும் மிக உயர்ந்தபட்ச விருதுத் தொகை இதுமட்டுமே.
. ***********
தற்போது தமிழாக்கம் செய்யப்படுகின்ற கதை நியூயார்க்கர் 10.03.2014 இதழில் வெளியானது. இக்கதைக்கு இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் இஎப்ஜி சிறுகதை அவார்டு, 2015, 24.04.2015 அன்று அறிவிக்கப்பட்டது. பரிசுத்தொகை £30,000 அதாவது இந்தியப் பணத்தில் ரூ.3021474.16 (முப்பது இலட்சத்து இருபத்தோராயிரத்து நானூற்று எழுபத்து நான்கு ரூபாய் மற்றும் பதினாறு காசுகள் மட்டும்.) உலகில் ஒரு சிறுகதைக்கு வழங்கப்படும் மிக உயர்ந்தபட்ச விருதுத் தொகை இதுமட்டுமே.
. ***********
சிறுதூக்கத்திலிருந்து எழுந்தும், கலக்கம் மாறாதிருந்த அந்த முதல் மகப்பேற்றுத் தாய், அவளை எதற்காக அழைத்திருப்பார்கள் என்று ஊகிக்கமுடியாமலேயே மேசை முன் அமர்ந்திருந்தாள். அது எதற்கென்று அவள் ஒருவேளை அறியாமலேயே இருக்கலாமென மீய் பெரியம்மா நினைத்தாள். மேசை மேல் விரிக்கப்பட்டிருந்த சிறு தடுக்கின் மீது மீய் பெரியம்மா, இதற்கு முன்பும் பல முதல் மகப்பேற்றுத் தாய்மார்களுக்குச் சமைத்தது போலவே சமைத்த சோயாமொச்சை – பன்றிக்கால் சூப் நிரம்பிய கிண்ணம் ஒன்று உட்கார்ந்திருந்தது. அவர்கள் பலர் என்றாலும் அது, மிகச் சரியான எண்ணிக்கை எனச் சொல்லமுடியாது. வேலைக்கு அமர்த்துபவர்களின் நேர்முகப் பேட்டியின்போது, மீய் பெரியம்மா எப்போதுமே அவள் பணியாற்றிய குடும்பங்களின் எண்ணிக்கையினை மிகத் துல்லியமாகச் சொல்வாள்: நூற்று இருபத்தாறு, தற்போதய குடும்பத்தாரிடம் நேர்முகப் பேட்டியின்போது, சொன்னது, ஒட்டுமொத்தமாக நூற்று முப்பத்தொரு குழந்தைகள். குடும்பங்களைத் தொடர்புகொள்வதற்கான விவரங்கள், அவள் பணியாற்றிய காலம் தொடர்பான நாள் விவரங்கள், அவர்களின் குழந்தைகளின் பெயர் மற்றும் பிறந்தநாள் விவரங்கள் – அனைத்தும் இருமுறை அலக்கலக்காகக் கிழிந்து நாடா ஒட்டிச் சேர்த்துள்ள கையகல நோட்டுப்புத்தகத்தில் அவள் எழுதியிருந்தாள். அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்னால், இல்லினாய்ஸின் மோலீன் நகரில் ஒரு வாகனக்கூடப் பழையசாமான் விற்பனையில் மீய் பெரியம்மா வாங்கியிருந்தாள். அதன் அட்டை மீதிருந்த உருகத்தொடங்காத உறைபனியில் சூழ்ந்துகிடக்கும் தூய்மையான மெல்லிதழ் ஊதா மற்றும் மஞ்சள்நிறப் பூக்களின் படங்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. அந்த நோட்டுப்புத்தகத்தின் விலையும் அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது: ஐந்து சென்ட். மடியில் பணப்பெட்டியுடன் அமர்ந்திருந்த அந்தக் குழந்தையிடம் வெள்ளி நாணயம் ஒன்றைக் கொடுக்கும்போது, அதுபோல இன்னொரு நோட்டுப் புத்தகம் இருந்தால் வாங்கிக்கொள்வதாகவும், அவன் மீதிச் சில்லறை ஏதும் தரவேண்டியதில்லை என்றும் சொன்னபோது, அந்தப்பையன் திகைத்து, இல்லையென்று சொன்னான். பேராசைதான் அவளை அப்போது அப்படிக் கேட்க வைத்தது; ஆனால், அந்த ஞாபகம் வந்தபோதெல்லாம் – அடுத்தடுத்த நேர்முகப் பேட்டிக்காக, அவள் கைப்பெட்டியைத் திறந்து, அந்த நோட்டுப்புத்தகத்தை எடுத்தபோதெல்லாம் அது நிகழ்ந்தது – மீய்பெரியம்மா தனக்குத் தானே சிரித்துக்கொள்வாள்: ஒன்றை நிரப்புவதற்கே போதிய வாழ்க்கை, வழி இல்லாத போது, அவள் எதற்காக இரண்டுக்கு ஆசைப்பட்டாள்?
அந்த முதல் மகப்பேற்றுத் தாய், கரண்டியைக் கூடத்தொடாமல், ஆவிபறக்கும் சூப்பில் கண்ணீர்த்துளிகள் உருண்டு விழும்போதும் கூட அசையாமல் உட்கார்ந்திருந்தாள். ‘’நோவ், நோவ்,’’ என்றாள், மீய்பெரியம்மா. புதிய ஆடும் நாற்காலியில் அமர்ந்தவாறே, அவரையும் அதேநேரத்தில் குழந்தையையும் முன்னும் பின்னுமாகவும் பின்னும் முன்னுமாகவும் கிறீச் சப்தம் நேற்றைவிடக் கண்டுகொள்ள இயலாதவாறு ஆட்டிக்கொண்டிருந்தாள். ஆட்ட மகிழ்ச்சியை யார் அதிகமாக அனுபவிக்கிறார்களென்று எனக்கு வியப்பாக இருக்கிறது, என அவள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்: உடைந்து சிதறும் நாள் வரையில் ஆடிக்கொண்டேயிருக்கவேண்டிய நாற்காலியா, அல்லது வாழ்க்கையே ஆட்டத்திலிருக்கும் நீயா? உங்களில் யார் மரணத்தினை முதலில் சந்திக்கவிருக்கிறீர்கள்? மீய் பெரியம்மா, மிக நல்ல நோக்கங்களுடையவரெனினும், உலகம் தன்னைக் கவனிக்கவில்லையெனில் தமக்குள்ளாக மட்டுமே பேசிக்கொள்ளும் மனிதர்களில் ஒருவராக மாறிப்போனவராக அவர் தன்னை வெகுநாட்களுக்கு முன்பாகவே ஒப்புக்கொடுத்துவிட்டாள். குறைந்தபட்சம், அவரது வாயிலிருந்தும் வார்த்தைகள் வெளிப்பட்டுவிடாதவாறு கவனமாகப் பார்த்துக்கொண்டாள்.
‘’எனக்கு இந்த சூப் பிடிக்கவில்லை’’ என்றாள் அந்தத் தாய். அவளுக்கு நிச்சயமாக ஒரு சீனப்பெயர் இருக்குமென்றாலும், அவள் தன்னை சானல் என்றே அழைக்குமாறு மீய்பெரியம்மாவிடம் கூறியிருந்தாள். என்றாலும், மீய் பெரியம்மா, அவள் பேறு பார்த்த பெண் ஒவ்வொருவரையும் `பேபி அம்மா` என்றும் ஒவ்வொரு கைக்குழந்தையையும் பேபி என்றுமே அழைத்தாள். அந்தவகையில், ஒரு வாடிக்கையாளர் குழுவுக்குப் பதிலாக வருகிற அடுத்தடுத்த குழுக்களுக்கும், அது எளிதாக இருந்தது.
‘’ உனக்குப் பிடிக்கவேண்டுமென்பதற்காக அல்ல, அது.’’ என்றாள், மீய் பெரியம்மா. காலைநேரம் முழுவதுமாகச் சூப் கொதித்து பாலின் வெள்ளை நிறத்திற்கு இறுகியிருந்தது. அவளுக்கென்றால், அவளேகூட, அதைத் தொடமாட்டாள், ஆனால் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகச் சிறந்த உணவு. ‘’நீங்கள் அதைக் குழந்தைக்காகச் சாப்பிடுங்கள்.’’
‘’அவனுக்காக, நான் ஏன் சாப்பிடவேண்டும்?’’ என்றாள், சானல். பிரசவித்து ஐந்து நாட்களேதான் ஆனாலும், அவள் மிகவும் மெலிந்திருந்தாள்.
‘’ ஏன், உண்மையாகவா கேட்கிறீர்கள்?’’ எனச் சிரித்தாள், மீய் பெரியம்மா. ‘’பால் எங்கிருந்து வருகிறதென்று நினைக்கிறீர்கள்?’’
‘’நான் என்ன பசுமாடா?’’
நீ ஒரு பசுமாடாக இருந்தால் கூட பரவாயில்லையே, என நினைத்தாள், மீய் பெரியம்மா. ஆனால், மீய் பெரியம்மாவுக்கு வேறு வழிகளெல்லாம் தெரியுமென்றாலும், அவர் வெறுமனே மென்மையாக மிரட்ட மட்டுமே செய்தார். மீய் பெரியம்மா அதுபற்றிக் கவலைப்படுவதில்லையென்றாலும், பாலூட்டும் தாய்களையும் பிறந்த குழந்தைளையும் கவனித்துப் பார்த்துக்கொள்வதில் அவள் திறமையானவள் என்றுதான் பலரும் அவளை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள்.
அந்த இளம்பெண் குலுங்கி அழத் தொடங்கினாள். இவளைப் போல அம்மாவாக இருக்கத் தகுதியேயில்லாத, ஒரு இழிபிறவி எதனையும் நான் உண்மையில், பார்த்ததேயில்லையென மீய்பெரியம்மா நினைத்தாள்.
அழுகை நின்றதும், ‘’மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்கிறதென நினைக்கிறேன்.’’ என்றாள், சானல்.
ஏதோ ஆடம்பரமான ஒரு வார்த்தையை, இந்த இளம்பெண் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாள்.
என்னுடைய தாத்தா பிறந்த மூன்றாம் நளில் என் கொள்ளுப்பாட்டி தூக்குப்போட்டுச் செத்துப்போனாள். அந்தப்பக்கமாகக் கடந்துபோன ஏதோ ஒரு பேயின் பிடியில் அவள் விழுந்துவிட்டிருந்ததாகப் பேசிக்கொண்டார்கள். அது இதுதானோ என்று நினைக்கிறேன்.’’ அவளுடைய ஐ-போனையே கண்ணாடியாகப் பயன்படுத்தி, முகம் பார்த்த சானல் அவளுடைய ஊதியிருந்த புருவங்களை ஒரு விரலால் அமுக்கிப் பார்த்தாள். ‘’அவளுக்கு மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சி இருந்தது.’’
மீய் பெரியம்மா ஆட்டுவதை நிறுத்திவிட்டு, குழந்தையைத் தூக்கி மார்போடு சேர்த்தணைத்தாள். உடனேயே அவன் தலை அவள் மார்பில் அசையத் தொடங்கியது. ‘’முட்டாள்தனமாக எதையாவது பேசாதீர்கள்,’’ என அவள் கண்டிப்பும் உறுதியுமாகச் சொன்னாள்.
‘’மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சி என்றால் என்ன என்பதை விளக்கினேன், அவ்வளவுதான்.’’
‘’ இப்போது பிரச்சினை, நீங்கள் சாப்பிடாமலிருப்பதுதான். உங்கள் நிலைமையில் யாருமே மகிழ்ச்சியாக இருக்கமுடியாதுதான்.’’
‘’ என் நிலைமையில் யாருமே இருக்க முடியாது’’ என்றாள், சானல் சோகமாக. ‘’நேற்று இரவு எனக்கு என்ன கனவு வந்தது, தெரியுமா?’’
‘’தெரியாது.’’
‘’ஒரு யூகமாகச் சொல்லுங்களேன்.’’
‘’ஒருவர் கண்ட கனவை யூகிப்பது அவப்பேறாகுமென்று எங்கள் கிராமத்தில் சொல்வார்கள்,’’ என்றாள், மீய் பெரியம்மா. பேய், பிசாசுகள் தாம் மனித மனங்களுக்குள் எளிதாக நுழைந்து வெளியேறும்.
‘’குழந்தையைக் கழிவறைக்குள் தள்ளி விடுவதாகக் கனவு கண்டேன்.
‘‘ ஓ, முயற்சித்திருந்தாலும் கூட என்னால் அதைக் கண்டுபிடித்திருக்கவே முடியாது.’’
‘’அதுதான் பிரச்சினை. நான் எப்படி வேதனைப்படுகிறேன் என்பது யாருக்கும் தெரியவில்லை.’’ சானல், மீண்டும் அழத் தொடங்கினாள்.
அவளது புதிய அழுகைக்குக் காதுகொடுக்காத மீய் பெரியம்மா, குழந்தையின் கம்பளிக்குக் கீழே முகர்ந்துவிட்டு, ‘’குழந்தையின் அணையாடைத் துணியை மாற்றவேண்டும்.’’ என உரக்கச் சொன்னாள். அவளுக்குத் தெரியும், சிறிது நேரம் போனதும் சானல் எதிர்ப்பேச்சின்றிப் பணிந்துவிடுவாள்: குழந்தையைக் கழிவறைக்குள் வீசிவிடுவதாகச் சொன்னாலும், அம்மா எப்போதும் அம்மாதான்.
மீய் பெரியம்மா, பிறந்த குழந்தைகள் மற்றும் அம்மாக்களின், உடன்வசிக்கும் ஆயாவாகப் பதினோரு ஆண்டுகளாகப் பணிசெய்துவிட்டாள். பிறந்த குழந்தைக்கு ஒரு மாதம் ஆகின்ற நாளில், அந்தக் குடும்பத்தை விட்டும் நகர்ந்துவிடுவதை ஒரு விதியாகவே கொண்டிருந்தாள். அப்படியில்லாமல் தொடர்வது – அப்படியும் மிகச்சில வேளைகளில் நிகழ்ந்ததுண்டு – வேறு வேலைக்கு இடைப்பட்ட நாட்களில், அதுவும் ஒருசில நாட்களுக்கு மேலாகிவிடாது. பல குடும்பங்கள் கூடுதலாக ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்குக் கூட சம்பளம் கொடுக்கத் தயாராக இருப்பார்கள்; சிலர் அதற்கும் மேலாகக் கூட இருக்கச் சொல்வார்கள்; ஆனால், மீய் பெரியம்மா அதனை எப்போதும் மறுத்தே இருக்கிறாள்: அவள் வழக்கமான ஆயாவாக இல்லாமல் முதல்மாத ஆயாவாக, அம்மாவுக்கும் குழந்தைக்குமாக இருவருக்கும் பணிசெய்யவேண்டிய கடமைகள் கொண்டவளாகப் பணியாற்றினாள். எப்போதாவது ஒருமுறை, அவள் பணிசெய்த முந்தைய நபர்கள் அவர்களுடைய இரண்டாவது குழந்தைக்கும் அழைப்பதுண்டு. அவளது கைகளில் தவழ்ந்த பிறந்த குழந்தையை மீண்டும் பார்ப்பதென்பது அவளைத் தூக்கம் இழக்கச் செய்வதாக இருந்தது; வேறுவழியில்லாவிட்டால் மட்டும், பழைய குழந்தை இல்லாததாகவே பாவித்து, அதற்கு அவள் ஒப்புக்கொள்வதுண்டு.
அழுகைப் பெருமூச்சுகளின் இடையே, சானல், அவளது கணவன் ஏன் சில நாட்கள் விடுப்பு போட முடியவில்லையென்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாள். அதற்கு முந்தைய நாள், அவன் ஏதோ ஒரு வேலையென்று சொல்லி ஷென்ஜெனுக்குப் புறப்பட்டுப் போனான். ‘’ குழந்தையோடு என்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்ல அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’’
தனியாகவா? மீய் பெரியம்மா கண்களைச் சுருக்கி, குழந்தையின் புருவங்களைப் பார்த்தாள்; இறுக மூடியிருந்த கண்களின் நடுவே இமைகளில் மஞ்சளின் ஒரு துளி தெரிந்தது. உன் அம்மா எனக்கு யாருமே இல்லையென்று சொல்லிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருக்க, உன் அப்பா கஷ்டப்பட்டு உழைக்கிறார். மகப்பேறு நல்லதில்லையென நினைக்கப்படுகின்ற பாம்பு வருடத்தில் மீய் பெரியம்மாவுக்குக் கொஞ்சம் நிதானமான வேலைதான். இல்லையென்றால் இதைவிடச் சிறந்த இடங்கள் அவளுக்குக் கிடைத்திருக்கும். இந்த இணையர்களைச் சந்தித்தபோதே அவளுக்குப் பிடித்திருக்கவில்லை; பெரும்பாலான மகப்பேற்றுத் பெற்றோர் போலன்றி இருவருமே கவனம் சிதறியவர்களாகத் தோன்றினார்கள். அவளை வேலைக்கு அமர்த்துமுன் மிகச் சில கேள்விகளே கேட்டார்கள். அவர்கள் குழந்தையை முன்பின் தெரியாத ஒரு அந்நியரிடம் ஒப்படைக்கவிருக்கிறார்கள் என்பதை மீய் பெரியம்மா அவர்களுக்கு நினைவூட்ட விரும்பினாள்; ஆனால், அவர்கள் அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவளைப்பற்றிப் போதுமான அளவுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பார்களோ? மீய் பெரியம்மா தங்க மெடல் ஆயா எனப் பெயர் பெற்றவளாயிற்றே. அவளது முதலாளிகள் நற்பேறு பெற்றவர்கள்; முதலில் சீனாவிலும், பின்னர் அமெரிக்காவிலும் நல்ல கல்வியைப் பெற்றுப் பின் வளைகுடாப் பகுதியில் பணியாற்றுபவர்கள்: வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், இணைவேந்தர்கள், பொறியாளர்கள் – பிரச்னையே இல்லை, அமெரிக்காவில் பிறக்கும் அவர்களது குழந்தைகளுக்கு அனுபவம் மிக்க ஒரு சீன ஆயா இப்போதும் தேவைப்படுகிறாள். குழந்தைகள் பிறப்பதற்குப் பல மாதங்கள் முன்னரே குடும்பங்கள் மீய் பெரியம்மா முன் வரிசையில் நிற்கின்றன.
துணிமாற்றிச் சுத்தப்படுத்தி, வேறுதுணியில் சுற்றிப் போர்த்தியதும், குழந்தை திருப்தியானதாகத் தோன்றவே, மீய் பெரியம்மா, அவனை மாற்று மேசையில் படுக்கவைத்துவிட்டு, சாளரத்துக்கு வெளியே மகிழ்ச்சியோடு, எப்போதும்போலவே தன்னை மறந்து நோக்கினாள். அசேலியா புதருக்கும் சிலேட் பாதைக்கும் இடையில் ஆம்பல் மலர்களோடு தங்க மீன் வளர்க்கும் செயற்கைத் தடாகம் ஒன்று இருந்தது. அந்தக் கணவன் புறப்பட்டுச் செல்லும் முன், மீய் பெரியம்மாவிடம் மீன்களுக்கு உணவளிக்குமாறும் தண்ணீர் மாற்றுமாறும் கேட்டுக்கொண்டான். செலவினைக் கணக்கிட்டுவிட்டு ஆண்டுக்குப் பதினெட்டாயிரம் காலன் என்று அவன் அவளிடம் தெரிவித்தான். நாள் ஒன்றுக்கு இருபது டாலர் அதிகம் கொடுக்க அவன் தயாராக இருந்ததால்தான் மீய் பெரியம்மா அந்தக் கூடுதல் வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டாள். இல்லாவிட்டால் மறுத்திருப்பாள்.
ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கு ஒன்றின் சிலை, கழுத்தினைக் கேள்விக்குறி வடிவில் வளைத்துக்கொண்டு, தண்ணீரில் நின்றது. அந்தச் சிலையைச் செய்த மனிதனைப்பற்றி மீய்பெரியம்மா நினைத்துப் பார்த்தாள். அது ஒரு பெண்ணாகக் கூட இருக்கலாம்தானென்றாலும், அப்படியான ஒரு இயலுமையை, மீய் பெரியம்மா ஒப்புக்கொள்ளக்கூட மறுத்தாள். பயனற்ற ஆனால், கொக்கு போன்ற அழகிய பொருட்களை ஆண்கள் மட்டுமே செய்வதாக நம்புவது அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது. எந்தப் பேய்ப்பெண்ணும் தொடாமல், அவன் தனிமையான ஒரு மனிதனாகவே இருக்கட்டும்.
குழந்தை நெளியத் தொடங்கியது. உன் அம்மா சூப்பினைக் குடித்து முடிப்பதற்கு முன்பே கலாட்டா தொடங்கிவிடாதே என்று மீய் பெரியம்மா இரகசியமாக எச்சரித்தும், அது வீண்தான். கொக்கு திடீரெனச் சிறகினை விரித்து அவசரமில்லாத அழகுடன் பறக்கத் தொடங்க, அதன் ஒற்றைக் கிறீச் ஒலி மீய் பெரியம்மாவை முதலில் திடுக்கிடச் செய்து, பின்னர் வாய்விட்டுச் சிரிக்கவைத்தது. நிச்சயமாக உனக்கு வயதாவது மட்டுமல்ல மறதியும் அதிகமாகிறது: நேற்றைக்கு அந்தச்சிலை அங்கு இருக்கவில்லையே. மீய் பெரியம்மா குழந்தையையும் எடுத்துக்கொண்டு முற்றத்துக்குச் சென்றாள். தங்க மீன்கள் குறைவாகவே இருந்தன என்றாலும் அவற்றில் சிலவாவது கொக்கின் படையெடுப்புக்கு தப்பித்திருந்தன. நஷ்டமானதைப் பற்றிச் சானலிடம் சொல்வதும் ஒன்றுதான், சொல்லாமலிருப்பதும் ஒன்றுதான். மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சிப் பிரச்னை உனக்கு இருப்பதாக நீ கவலைப்படுகிறாய். தங்க மீனை நினைத்துப்பார், ஒரு நாள் சொர்க்கத் தடாகத்தில் நீந்துகிறது, மறுநாளோ கடந்துசெல்லும் கொக்கின் இரைப்பை என்னும் இருள் உலகத்துக்குள் போய்ச் சேருகிறது.
மீய்பெரியம்மா, அவளின் பொறுப்பிலிருக்கும் ஒவ்வொரு அம்மாவுக்கும் கைக்குழந்தைக்கும் சில கண்டிப்பான நடைமுறைகள் வேண்டுமென்று நம்பினாள். முதல் வாரத்துக்கு, தாய்க்கு நாளொன்றுக்கு ஆறுமுறை உணவும் இடைப்பட்ட நொறுக்குத் தீனியாக மூன்றுமுறையும் அளித்தாள்; இரண்டாம் வாரத்திலிருந்து நான்கு வேளை உணவும் இருவேளை நொறுக்குத் தீனியுமாகும். பகல் நேரத்தில் குழந்தைக்கு இரண்டு மணி நேரத்துக்கொருமுறையும் இரவு நேரத்தில் மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்கொருமுறையும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையின் தொட்டில் அவர்களது படுக்கையறையிலிருக்க வேண்டுமா அல்லது குழந்தையறையில் இருக்கவேண்டுமா என்பதைப் பெற்றோர் தீர்மானத்துக்கு விட்டுவிடுகிற மீய் பெரியம்மா அதனை அவளது படுக்கையறையில் மட்டும் அனுமதிப்பதில்லை. இல்லை, அது அவளது வசதிக்காக அல்ல, அவள் அதை அவர்களுக்கு விளக்குவாள்: ஒரே ஒரு மாதத்திற்கு மட்டும் தங்கப்போகிற யாரோ ஒருவரின் அண்மையில் குழந்தை இருக்க வேண்டியதற்கு எந்த அவசியமும் இல்லை.
அடுத்த நாள், ‘’ஆனாலும் இவ்வளவெல்லாம் சாப்பிடுவது முடியாதது. ஆளுக்கு ஆள் வித்தியாசம் உண்டுமா, இல்லையா?’’ என்றாள், சானல், அழுகை குறைந்திருந்த அந்தப் பொழுதில், மார்பில் சுடுநீர்ப் பைகளுடன் சாய்மெத்தையில் சுருண்டு படுத்திருந்தாள், அவள்: அந்த இளம் பெண்ணின் பால் சுரப்பு குறித்து மீய்பெரியம்மா அவ்வளவு திருப்தியாக இல்லை.
குழந்தையைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்த மீய் பெரியம்மா நினைத்தாள், நான் போன பிறகு நீ விரும்புவதுபோல் வித்தியாசமாக இருந்துகொள்; உன் பையன் நல்லா `கிளுகிளு` என்று வளர்வான். எனக்கென்ன போயிற்று, ஒருதுளிகூடக் கவலைப்படமாட்டேன். ஆனால், எந்தத் தாயையும் எந்தக் குழந்தையையும் இதுவரை என் பிடியிலிருந்து விலகிச்செல்ல விட்டதில்லை. மீய் பெரியம்மா சானலிடம் சொன்னாள்: முதல் மாத ஆயாவை எல்லோரும் எதற்கு அமர்த்துகிறார்களென்றால், எல்லா விஷயங்களும் சரியாக நடக்கவேண்டுமேயென்றுதான், வித்தியாசமாக இருப்பதற்காக அல்ல.
‘’ஆனால், நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்டபோது இப்படித்தான் செய்தீர்களா? பந்தயம்கூடக் கட்டுவேன், நீங்கள் அப்படிச் செய்யவில்லை.’’
‘’உண்மையைச் சொல்வதென்றால், நான் அப்படிச் செய்யவில்லைதான். ஆனால், அதற்கான ஒரே காரணம் எனக்குக் குழந்தைகள் இல்லையென்பதுதான்.’’
‘’ஒரு குழந்தை கூடவா?’’
‘’சொந்தக் குழந்தை இருக்கும் ஆயா தான் வேண்டுமென்று நீங்கள் குறிப்பிட்டுக் கேட்கவில்லையே.’’
‘’ஆனால், நீங்கள் ஏன்……..எதற்காக இந்த மாதிரியான வேலையைத் தேர்வுசெய்தீர்கள்?’’
‘’உண்மைதான், எதற்காக. சில நேரங்களில் வேலைதான் உங்களைத் தேர்வுசெய்கிறது.’’ என்றாள், மீய் பெரியம்மா. ஹா, யாருக்குத் தெரியும், அவள் இவ்வளவு திறமையானவளாக இருப்பாளென்று?
‘’அப்படியென்றால், நீங்கள் குழந்தைகளை நேசிக்கவேண்டும்.’’
ஓ, இல்லை, இல்லை, இது, இந்த ஒன்று இல்லையென்றால் அந்த ஒன்று, என்பதுபோல அல்ல அது. ‘’செங்கல் பாவுபவர் அவரது செங்கல்களை நேசிக்கிறாரா, என்ன?’’ மீய் பெரியம்மா கேட்டாள். ‘’பாத்திரம் கழுவும் எந்திரம் பழுதுபார்ப்பவர் பாத்திரம் கழுவும் எந்திரங்களை நேசிக்கிறாரா?’’ அன்று காலையில், சானல் வீட்டில் பழுதாகியிருந்த பாத்திரம் கழுவும் எந்திரத்தைச் சரிசெய்ய ஒரு மனிதன் வந்திருந்தான். அதற்கு அவனுக்கு இருபது நிமிட நேரமே ஆனது, ஆனால், கட்டணமோ, நூறு டாலர், அதாவது மீய் பெரியம்மாவின் ஒரு நாள் முழுதுக்குமான சம்பளம்.
‘’பெரியம்மா, இது சரியான வாதம் இல்லை.’’
‘’என் வேலைக்கு நன்றாக வாதம் செய்யத் தெரிந்திருக்கவேண்டியதில்லை. என்னால் வாதம் செய்ய முடியுமென்றால் உங்கள் கணவரைப் போல் வழக்கறிஞர் ஆகியிருப்பேன், இல்லையா?’’
சானல் மகிழ்ச்சியற்ற ஒரு சிரிப்புச் சத்தத்தை வெளிப்படுத்தினாள். அவள் தனக்குத்தானே கண்டுபிடித்துக்கொண்ட மனத்தளர்ச்சியில் இருந்தாலும், மீய் பெரியம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதில் மற்ற பெரும்பாலானவர்களை விடவும் மகிழ்ச்சி காண்பது போல் தெரிந்தது. மற்றவர்கள் குழந்தைகளைப் பற்றியும் தாய்ப்பாலூட்டுவதைப்பற்றியும் மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்களே தவிர, அவள் மீதான அக்கறை சிறிதும் இருக்காது.
மீய் பெரியம்மா, குழந்தையைச் சாய்மெத்தையில், இடம்விட விருப்பமற்ற சானலுக்கு அருகில் கிடத்தினாள். அவள், சானலின் சுடுநீர்ப்பைகளை அகற்றும் முன் கைகளை நன்கு சூடு ஏற்படும்வரை தேய்த்துக்கொண்டே ‘’இப்போது, பால் கொடுப்பதைப்பற்றிப் பார்க்கலாம்.’’ என்றாள். சானல் வலியில் அலறினாள்.
‘’நான் இன்னும் உன்னைத் தொடக்கூட இல்லையே.’’
உன் கண்களைப் பார், திறமையான குழாய்ப் பணியாளரால் கூட இப்படிப்பட்ட பெருக்கினை அடைத்துவிடமுடியாது, என்று சொல்ல நினைத்தாள், மீய்பெரியம்மா.
‘’இந்த இழவுக்கு இனிமேலும் என்னால் பால் கொடுக்க முடியாது.’’ என்றாள், சானல்
என்னது, இழவா? ‘’இவன் உன் மகன்.’’
‘’ அவனுடைய அப்பனுக்கும் தான். அவன் ஏன் இங்கே இருந்து உதவி செய்யக்கூடாது?’’
‘’ஆண்களால் பால் கொடுக்க முடியாது.’’
கண்ணீருக்கிடையிலும் சானல் சிரித்தாள். ‘’இல்லைதான். அவர்களால் முடிகிற ஒரே விஷயம் பணம் சம்பாதிப்பது மட்டும் தான்.’’
‘’ பணம் சம்பாதிக்கிற ஒருவரைக் கண்டுபிடித்தது உன் அதிர்ஷ்டம் தான். எல்லோராலும் பணம் சம்பாதிக்க முடிவதில்லை, உனக்குத் தெரியுமா?’’
பைஜாமா கைத்தொங்கலின் உள்பக்கத்தால், சானல், கவனமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள். ‘’பெரியம்மா, நீங்கள் மணமானவரா?’’
‘’ஒரு முறை’’ என்றாள், மீய் பெரியம்மா.
‘’என்ன நடந்தது? நீங்கள் அவரை மண விலக்கு செய்துவிட்டீர்களா?’’
‘’அவர் இறந்துவிட்டார்,’’ என்றாள், மீய் பெரியம்மா. திருமண வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும், அவளது கணவர் அவளது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதை நிறுத்திக்கொள்ளமாட்டாரா, என முழுமையாக இல்லையென்றாலும் ஆசைப்பட்டதென்னவோ, உண்மைதான். ஆனால், ஆண்டுகள் பல கடந்துவிட்ட இப்போது, அவரது மரணத்துக்கு, அன்றைய இரவில் அவரைத் தாக்கிய இளையர் குழு இல்லாமல், அவளே பொறுப்பு என்பதுபோல உணர்கிறாள். பணத்தை எடுத்துக்கொண்டு, அவர்கள் போகுமாறு விட்டுத் தொலைத்திருக்கலாமே? தனக்குத்தானே பேசிக் களைப்படையும் போதெல்லாம், அவள், அவரைத் திட்டிக்கொண்டிருக்கிறாள். முப்பத்தைந்து டாலர்களுக்காக ஒரு உயிர், ஐம்பத்திரண்டு வயது ஆவதற்கு மூன்றே மாதங்கள்.
‘’அவர், உங்களைவிட நிரம்பவும் வயதானவரா?’’
‘’வயதானவர்தாம். ஆனால் நிரம்பவும் வயது என்றில்லை.’’
‘’ என் கணவர் என்னைவிட இருபத்தெட்டு வயது அதிகம். பந்தயம் கூடக் கட்டுவேன், நீங்கள் அதை ஊகித்திருக்க மாட்டீர்கள்’’ என்றாள், சானல்.
‘’ஆமாம், நான் யூகிக்கவில்லைதான்.’’
‘’நான் வயதானவளாகத் தெரிகிறேனா அல்லது அவர் இளமையாகத் தெரிகிறாரா?’’
‘’ நீங்கள் இருவரும் நல்ல பொருத்தமான ஜோடியாகத் தான் தெரிகிறீர்கள்.’’
‘’ஆனாலும், எனக்கு முன்பே அவர் இறந்துவிடுவார். சரிதானே? ஆண்களைவிடப் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள், அதிலும் அவர் ஏற்கெனவேயே புறப்படத் தொடங்கிவிட்டார்.
ஆக, நீங்களும் விட்டு விடுதலையாக ஆவலாயிருக்கிறீர்கள். ஒரு விஷயம் சொல்கிறேன், அது மாதிரியான ஆசை ஒன்று நனவாகும்போது மிக மோசமானதாக இருக்கும். ஆனால், அது நிகழ்ந்தால், அதாவது வாழ்க்கை மிகுந்த ஏமாற்றம் தருவதென்பதை நீங்கள் தெரிந்துகொள்ளும்போது : இந்த பூமி ஒன்றும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அருமையான, ஒளிமிக்க இடம் என்பதல்ல; ஆனால், முட்டாள்தனமான ஆசை ஒன்று அறிவற்றதாக நிறைவேறும்போது, அதனை இன்னும் மங்கலாக்குகிறது. ‘’முட்டாள்தனமாகப் பேசாதீர்கள்’’ என்றாள், மீய் பெரியம்மா.
‘’நான் உண்மையைத் தானே விளக்கினேன். உங்கள் கணவர் எப்போது இறந்தார்? அது என்ன, மாரடைப்பா?’’
‘’அப்படியும் சொல்லிக்கொள்ளலாம்,’’ என்று சொன்ன மீய் பெரியம்மா, சானல் மீண்டும் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே, அவளது சரியாகப் பால் வராத மார்பு ஒன்றைப் பற்றினாள். சானல் திகைத்துப் பின், ஊளையிட்டு அலறினாள். அந்த மார்பினை வலிந்து, பிசைந்து ஒரு கசக்கு கசக்காமல் மீய் பெரியம்மா அவ்வளவு எளிதில் விட்டுவிடவில்லை. அடுத்த மார்பினை அவள் பற்றியபோது, சானல் இன்னும் சத்தமாக அலறினாள்; ஆனாலும், படுத்திருந்த நிலையை மாற்றிக்கொள்ளவில்லை; குழந்தை நசுங்கிவிடுமோ என்ற பயத்திலும் அப்படி இருந்திருக்கலாம்.
பின்னர், மீய் பெரியம்மா சூடான துவாலை ஒன்றினை எடுத்துவந்தாள். ‘’போய்த் தொலை,’’ என்றாள், சானல். ‘’இதற்கு மேல் நீங்கள் ஒன்றும் இங்கு இருக்க வேண்டியதில்லை.’’
‘’சரி, உங்களை யார் பார்த்துக்கொள்வார்கள்?’’
‘’யாரும் என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டாம்.’’ சானல் எழுந்து அவளது உடையின் இடுப்புக் கச்சினை மாட்டிக்கொண்டாள்.
‘’சரி, குழந்தை?’’
‘’அவனுக்குக் கெட்ட நேரம்.’’
சானல் முதுகை நிமிர்த்திக்கொண்டு, படிக்கட்டுக்கு நடந்தாள். மீய் பெரியம்மா குழந்தையை, அதன் எடை ஒரு பொருட்டேயில்லை என்பது போல உணர்ச்சிக் கொந்தளிப்போடு – துயரம், கோபம் அல்லது திகைப்பு – எடுத்தாள். அந்த இளம் பெண்ணின் மீதான மலைப்பினாலும் அப்படி எடுத்திருக்கலாம். அதனால் தான் மீய் பெரியம்மா அவளுக்குள்ளாகவே, சொல்லிக்கொண்டாள்: ஒரு தாய் தன் மகனை அனாதையாக்குகிறாள்.
குழந்தை, பிறந்து ஆறு நாளேயான அந்தக் குழந்தை அதன் தாயின் மார்பிலிருந்தும் பிரிக்கப்பட்டது. மீய் பெரியம்மா என்ற தனியொரு ஆள் மட்டுமே அவனுக்கு உணவு, பராமரிப்பு மற்றும் – அவள் தனக்குத் தானே ஒப்புக்கொள்ளாவிட்டாலும் – அன்பு, என எல்லாவற்றையும் அளிக்கவேண்டியவளாகிவிட்டாள். சானல் அவளது படுக்கை அறையிலேயே தங்கிப் பிற்பகல் முழுதும் சீனத் தொலைக்காட்சி நாடகங்கள் எல்லாவற்றையும் பார்த்தாள். தண்ணீர் குடிப்பதற்காக ஓரிருமுறை அவள் கீழிறங்கி வந்து, அந்த வயதான பெண்ணும் அந்தக் கைக்குழந்தையும் ஏதோ பாவப்பட்ட தூரத்துச் சொந்தங்கள் என்பது போல மீய் பெரியம்மாவிடம் பேசினாள் : அவர்கள் அங்கே தங்கியிருப்பதில் அவளுக்குச் சில வசதிக்குறைவுகள் இருந்தாலும், அவர்களுக்கு விருந்தோம்பவேண்டியதில்லை என்ற ஒரு சிறு ஆறுதல் இருந்தது.
பாத்திரம் கழுவும் எந்திரப் பணியாள் மாலையில் திரும்பினார். மீய் பெரியம்மாவுக்குத் தன் பெயர் பால் என நினைவுபடுத்தினார். அவள் வயதானவள் தானென்றாலும், அவர் பெயரை ஒரேநாளில் மறந்துவிடுவாளா, என அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள். அந்தத் திருட்டுக் கொக்கு பற்றி அவள் அவரிடம் முன்பு சொல்லியபோது, திரும்பி வந்து, அந்தப் பிரச்சினைக்கு ஒரு வழி செய்வதாகக் கூறியிருந்தார்.
தடாகத்தின் மேலாகச் சில கம்பிகளை, பால் முறுக்கிக் கட்டியதைக் கவனித்துக்கொண்டே, ‘’ பறவைக்கு எதுவும் ஆகிவிடாதென்பது நிச்சயம் தானே,’’ எனக் கேட்டாள், மீய் பெரியம்மா.
‘’நீயே கைவைத்துப் பாரேன்,’’ என்றார், பால், மின்கலப் பொத்தான் இணைப்பினைத் தட்டிக்கொண்டே.
மீய் பெரியம்மா குறுக்கும்நெடுக்குமாகப் பின்னியிருந்த கம்பிகளின் மீது உள்ளங்கையை வைத்துப் பார்த்தாள். ‘’எனக்கு ஒன்றும் தெரியவில்லை.’’
‘’நல்லது, நீ எதையாவது உணர்ந்தால், உன் உயிரைச் சிக்கலில் மாட்டிவிடுவதாக இருக்கும். அப்படியென்றால், நீ என்மீது வழக்கு தொடரலாம்.’’
‘’அது சரி, இது எப்படி? வேலைக்காகுமா?’’
‘’உன்னைவிடக் கொக்கு அதிக உணர்வுள்ளதென நம்புவோம்.’’ என்றார், பால். ‘’ஒருவேளை அது வேலைசெய்யவில்லையென்றால், என்னைக் கூப்பிடு. அதற்குத் தனியாகக் கட்டணம் ஒன்றும் கேட்கமாட்டேன்.’’
மீய் பெரியம்மாவுக்கு அப்போதும் சந்தேகம் தீரவில்லை. ஆனால் அவளது துளைக்கும் அமைதி, அவர், தனது கண்டுபிடிப்பை நினைத்துத் தன்னைத்தானே வியந்து, பாராட்டிக் கொள்வதைத் தடுத்துவிடவில்லை. யோசனைக்காரனுக்கு மிகவும் கஷ்டமானதென்று எதுவுமே கிடையாது, என்றார், அவர். அவருடைய கருவிகள் அடங்கிய பையைக் கட்டிவைத்துவிட்டு, அப்படியும் இப்படியுமாக உலவியபோது, அவருக்கு வீட்டுக்கு செல்வதற்கு எந்த அவசரமும் இல்லையென்பதை அவளால் கண்டுகொள்ளமுடிந்தது. அவர் வியட்நாமில் பிறந்து வளர்ந்து, முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்ததாக மீய் பெரியம்மாவிடம் கூறினார். அவரது மனைவி மூன்று வளர்ந்த குழந்தைகளை அவனிடம் விட்டுவிட்டு இறந்துவிட்டாள். அந்த மூவரில் எவரும் அவருக்கு ஒரு பேரக்குழந்தையைப் பெற்றுக்கொடுக்கவில்லை; அல்லது அதற்கான நம்பிக்கையும் அளிக்கவில்லை. அவரது சகோதரிகள் இரண்டுபேரும் நியூயார்க்கில்தான் வசித்தார்கள். அவர்கள் அவரைவிட இளையவர்கள் என்றாலும் அவரை முந்திக்கொண்டு பாட்டிகளாகிவிட்டார்கள்.
எப்போதுமுள்ள அதே பழைய கதை : அவர்கள் எல்லோரும் எங்கிருந்தோ வந்தார்கள், வழியில் வந்தவர்களுமாக, ஒன்றுகூடிச் சேர்ந்து வாழ்ந்தார்கள். மீய் பெரியம்மாவால் பால் வாழ்க்கையின் இதழ்களைப் பிரித்துப் பார்க்க முடிந்தது : அவரால் உபயோகமாக வேலைசெய்ய முடிகிற நாளெல்லாம் வேலைசெய்வார். பின்னர், அவருடைய குழந்தைகள் எங்காவது வசதியான ஓரிடத்தில் பொறுப்பு ஒப்படைத்துவிட்டு, பிறந்த நாள் மற்றும் விடுமுறைநாட்களில் வந்து பார்த்துச் செல்வார்கள். மீய் பெரியம்மா, அவரைவிட, எந்த அக்குதொக்கும் இல்லாத, தன் நிலைமை எவ்வளவோ மேலானதென நினைத்தாள். பால், புறப்பட்டுச் செல்லும்போது, மீய் பெரியம்மா, குழந்தையின் சின்னக் கையை உயர்த்தி, ‘’பை-பை சொல்லு, பால் தாத்தாவுக்கு பை-பை சொல்லு,’’ என்றாள்.
அவள் திரும்பி, வீட்டைப் பார்த்தாள். சானல், இரண்டாவது தளத்தில், அவளது படுக்கையறைச் சாளரப்பலகை நீட்டத்தில் முற்சாய்ந்து, குனிந்து நின்றுகொண்டிருந்தாள். ‘’அந்த ஆள் என்ன, மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பார்க்கிறானா?’’ எனக் கீழ் நோக்கிக் கேட்டாள்.
‘’அது பறவையை விரட்ட மட்டுமே செய்யும். அதற்கு ஒரு பாடமாக இருக்குமென்கிறார்.’’
‘’எனக்கு மக்களிடம் வெறுப்பாக இருப்பது எது தெரியுமா? ‘உனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.’ என்று அவர்கள் சொல்வதுதான். ஆனால், பாடம் கற்பதில் என்ன இருக்கிறது? வாழ்க்கையில் ஒன்றைத் தோற்றுவிட்ட பின் மீண்டும் சரிசெய்துகொள்ளும் வாய்ப்பு என எதுவும் கிடையாது.’’
அது அக்டோபர் மாதம், வளைகுடாவின் சாயங்காலக் காற்றில் `சில்`லென்ற குளிர்ச்சி தெரிந்தது. சளி பிடித்துக்கொள்ளப் போகிறதென்று சானலை எச்சரிப்பதைத் தவிர மீய் பெரியம்மாவுக்குச் சொல்லிக்கொள்ள வேறு எதுவும் இல்லை.
‘’யார் கவலைப்படப் போகிறார்கள்?’’
‘’உன் அப்பா, அம்மா கவலைப்படுவார்கள்.’’
சானல், இகழ்ச்சிக் குறிப்பொன்றினைத்தான் வெளிப்படுத்தினாள்.
‘’ ஏன், உன் கணவர் கவலைப்படுவாரே.’’
‘’ஹா, அந்த ஆள், இப்போதுதான், இன்னும் பத்து நாட்களுக்கு அங்கேயே தங்கவேண்டியிருக்கிறதென்று மின்னஞ்சல் அனுப்புகிறான்.’’ என்றாள், சானல். ‘’அவன் இப்போது என்ன செய்துகொண்டிருப்பான், தெரியுமா? யாராவது ஒருத்தியோடு அல்லது ஒன்றுக்கும் மேல், பல பெண்களோடு படுத்துக் கிடப்பான்.’’
மீய் பெரியம்மா எந்தப் பதிலும் சொல்லவில்லை. வேலைக்கு அமர்த்தியவர் எவரையும் முதுகுக்குப் பின்னால் பழித்துப் பேசக்கூடாதென்பது அவளது திடமான கொள்கை. அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது, சானல் ஏற்கெனவே வசிப்பறையில் நின்றிருந்தாள், ‘’ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நினைக்கிற மாதிரியான ஆள் இல்லை, அவர்.’’
‘’அவர் எந்த மாதிரியான ஆள் என்று நான் எதுவுமே நினைக்கவில்லை.’’ என்றாள், மீய் பெரியம்மா.
‘’நீங்கள் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட மோசமாகப் பேசவில்லையே,’’ என்றாள், சானல்.
நல்லதாகவும் தான் சொல்லவில்லை.
‘’அவருக்கு ஏற்கெனவே கலியாணம் ஆகி ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.’’
ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் முன்னால், எந்த ஆணாக இருந்தாலும், பிரம்மச்சாரியாகவே இருப்பான் என்று நீ நினைக்கிறாயா? மீய் பெரியம்மா பாலின் எண் குறித்த துண்டுத்தாளினைத் தன் சட்டைப்பைக்குள் வைத்தாள்.
‘’அந்த ஆளென்ன எண் கொடுத்தானா? அவன் உன்னை இழுக்கப் பார்க்கிறானா?’’ என்றாள், சானல்.
‘’அவரா? அவர் இப்போதே பாதிக்கு மேல் பாடையில் ஏறிச் சவப்பெட்டிக்குள் போயாகிவிட்டது.’’
‘’கடைசி மூச்சு வரைக்கும் ஆண்கள் பெண்களைத் துரத்துகிறார்கள். பெரியம்மா, அவனிடம் விழுந்துவிடாதீர்கள். எந்த ஆணும் நம்பத்தகுந்தவனல்ல.’’ என்றாள் சானல்.
மீய் பெரியம்மா பெருமூச்சிட்டாள். ‘’குழந்தையின் அப்பா வீட்டுக்கு வரவில்லையென்றால், மளிகைச் சாமான் வாங்க யார் கடைக்குச் செல்வது?’’
வீட்டின் ஆண்மகன் வீட்டுக்கு வருவதைத் தள்ளிப்போட்டுவிட்டான்; சானல் குழந்தைக்கு எதுவுமே செய்யமாட்டேனென்று மறுத்துவிட்டாள். தன் விதிகளுக்கு மாறாக, மீய் பெரியம்மா குழந்தையின் தொட்டிலைத் தன் படுக்கையறைக்கு மாற்றிக்கொண்டாள்; அவள் விதிகளுக்கு மாறாகவே, இப்போது, மளிகைச்சாமான் வாங்கும் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டாள்.
‘’இந்தக் குழந்தைக்கு நாம் தான் தாத்தா, பாட்டியென்று பார்க்கிறவர்கள் நினைத்துக்கொள்வார்களென்று நினைக்கிறாயா?’’ மகிழுந்தினை இரண்டு எஸ்.யு.விக்களுக்கு நடுவேயுள்ள குறுகிய இடத்துக்குள் அங்குலம், அங்குலமாக நகர்த்திச் செலுத்தியவாறே, பால் கேட்டார்.
‘’ஒருவரும் ஒன்றும் நினைக்கமாட்டார்கள்.’’ என்றாள், மீய் பெரியம்மா. கடைக்கு மகிழுந்தும் ஓட்டிப் பொருட்கள் வாங்கித்தந்தும் உதவி செய்வதற்கு மீய் பெரியம்மா தருவதாகச் சொன்ன பணம் மட்டுமல்லாமல் வேறு காரணமும் இருக்குமா? ‘’நானும் குழந்தையும் மகிழுந்திலேயே இருக்கிறோம்.’’ என்றவாறே, மீய் பெரியம்மா நீளப் பட்டியல் ஒன்றினைப் பாலிடம் நீட்டினாள்.
‘’அப்படியானால், நீ உள்ளே வரப்போவதில்லையா?’’
‘’ பச்ச மண்ணு, பாருங்கள், பிறந்த குழந்தை. குளிர்பெட்டிகளின் காடாக இருக்கும் அந்தக் கடைக்குள் குழந்தையைக் கொண்டுவருவேனென்றா நினைக்கிறீர்கள்?’’
‘’அப்படியென்றால், நீ அவனை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்க வேண்டும்.’’
யாரிடம்? குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுவந்தால், அவள் திரும்பிப் போவதற்குள், அவன் இந்த உலகத்தைவிட்டே போயிருப்பானோ என்று மீய் பெரியம்மா பயந்தாள். ஆனாலும் அந்தப் பயத்தை அவள் பாலிடம் சொல்லிக்கொள்ளவில்லை. குழந்தையின் அம்மா மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சியில் அவதிப்படுவதாகவும், குழந்தையைப் பார்த்துக்கொள்கிற சூழ்நிலையில் அவள் இல்லையென்றும் அவருக்குச் சொன்னாள்.
‘’பட்டியலை மட்டும் என்னிடம் தந்திருந்தால் போதுமே,’’ என்றார், பால்.
‘’நீ பணத்தோடு ஓடிவிட்டால்?’’ என நினைத்தாள், அவள். அப்படி நினைப்பது சரியில்லைதான். நம்பிக்கைக்குரிய ஆண்களும் இருக்கிறார்களென்று ஏன், இறந்துவிட்ட அவளது கணவரையும் அவர்களோடு சேர்த்துத்தான் அவளுக்குத் தெரியும்.
வீட்டுக்குத் திரும்பி வரும்போது, கொக்கு மீண்டும் வந்ததா என்று பால் வினவினார். கவனிக்கவில்லையென்று அவள் பதில் சொன்னாள். கொக்கு பாடம் கற்றுக்கொள்வதைப் பார்க்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்குமோ, கிடைக்காதோ என அவள் நினைத்தாள் : இன்னும் இருபத்திரண்டு நாட்களே இருந்தன. கொக்கு வருகிறதோ, இல்லையோ, இன்னும் இருபத்திரண்டு நாட்களில் வேறொரு குடும்பம் அவளைக் கொத்திக்கொண்டு போய்விடும். மீய் பெரியம்மா குழந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அவன் மகிழுந்து இருக்கையில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். ‘’உனக்கு என்ன ஆகுமோ?’’ என்றாள், அவள்.
‘’எனக்கா?’’ என்றார், பால்.
‘’உங்களை இல்லை, குழந்தையை.’’
‘’நீ ஏன் கவலைப்படுகிறாய்? அவனுக்கு அருமையான வாழ்க்கை கிடைக்கும். என்னைவிட மேலானதாக, உன்னைவிட மேலானதாக. நிச்சயம் கிடைக்கும்.’’
‘’அப்படிச் சொல்வதற்கு என் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்,’’ என்றாள், மீய் பெரியம்மா.
‘’கற்பனை செய்ய முடியும். நீ யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள். முடிவேயில்லாமல், ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நல்லதல்ல.’’
‘’இதிலென்ன தப்பு இருக்கிறது? நான் வாடகை கொடுக்கவேண்டியதில்லை. எனக்கான உணவுக்கும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை.’’
‘’செலவே செய்யவில்லையென்றால் பணம் சம்பாதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நானாவது என் எதிர்காலப் பேரக் குழந்தைளுக்காகச் சம்பாதிக்கிறேன்.’’ என்றார், பால்.
‘’நான் பணத்தை என்ன செய்கிறேன் என்பது உங்ளுக்குத் தேவையில்லாதது. பேசாமல் வழியை ஒழுங்காகப் பார்த்து வண்டியை ஓட்டுங்கள்.’’ என்றாள், மீய் பெரியம்மா.
பால், அபூர்வமான ஒரு அமைதியில் மூழ்கி, அந்த இலகுவழியில் மிகமிக மெதுவாகச் செல்லும் மகிழுந்தாக ஓட்டிச் சென்றார். ஒருவேளை அவர் சரியாகவே அர்த்தப்படுத்தியிருக்கலாம், ஆனால், அதுபோல் நல்ல அர்த்தமுள்ள ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். அதுபோன்ற ஆண்களைக் கஷ்டப்படுத்துகின்ற பெண்களில் அவளும் ஒருத்தியோ? பால் கதை கேட்க விரும்பினால், அவளால் ஒன்றிரண்டைக் கூறி, அவள் அன்பைப்பெறும் அவரது நம்பிக்கையை விரட்டியடிக்க முடியும். ஆனால், அவள் எங்கு, எதிலிருந்து தொடங்க வேண்டும்? காதலிக்கும் நோக்கம் எதுவும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டுவிட்டபின், சீக்கிரமே கல்லறைக்குப் போய்ச்சேர மாட்டானா என அவள் விரும்பிய அந்த மனிதனிலிருந்தா, அல்லது அவளைப் பெற்றெடுக்க வேண்டுமானால், கணவன் வெளியேறவேண்டுமென்று அவளது அம்மா சொல்லி, அதன்பின் அவள் சந்திக்கவேயில்லாத அப்பாவிலிருந்தா? அல்லது, தன் உதிரக் குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டுக் காணாமல் போய், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின், மாளாத நோயால் கணவன் இறக்கும் போது முகத்தை மட்டும் காட்ட வந்த அவளுடைய பாட்டியிலிருந்து தொடங்கினால் ஒருவேளை சரியாக இருக்குமோ? மீய் பெரியம்மாவின் தாத்தா ஒரு வில்லனாக இருந்தாலாவது அவள் காணாமல் போனதில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும்; ஆனால், அவரோ ஒரு அன்பு மனிதனாக, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மனைவி விட்டுச்சென்ற மகளைத் தனியொருவராகவே, என்றாவது ஒருநாள், மனைவி திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில் வளர்த்து ஆளாக்கியிருந்தார்.
மீய் பெரியம்மாவின் பாட்டி ஒன்றும் வெகுதூரம் போய்விடவில்லை; அத்தனை வருடங்களும், அதே கிராமத்தில் வேறொரு மனிதனுடன், பகல் முழுதும் அவன் குடிசைக்குள்ளாகவே ஒளிந்திருந்து இரவில் மட்டும் ஒரு மாற்றத்திற்காகத் தலையை நீட்டி, ஊர்ந்து வந்து, வெளிக் காற்று வாங்கி வாழ்ந்திருக்கிறாள். அத்தனை நாள் மறைந்தே வாழ்ந்தவள், அவளுடைய கணவனின் இறப்பு வரையிலும்கூட அப்படியே இருந்திருக்காமற்போன காரணம் யாருக்கும் புரியவில்லை. கணவனின் கடைசிப் பயணத்தைச் சரிவர நிறைவேற்றிவைப்பது மனைவியின் கடமை என்று அவளே அதற்கு ஒரு விளக்கம் அளித்தாள்.
புதிதாகத் திருமணம் ஆகித் தையற்காரியாக நன்றாக வாழ்ந்ததுடன், அப்பா இறந்ததையும், அம்மா புதிதாக வந்து சேர்ந்துகொண்டதையும் சகஜமாக ஏற்றுக்கொண்ட மீய் பெரியம்மாவின் அம்மா, அடுத்த ஆண்டிலேயே அவளது முதலும் கடைசியுமான ஒரே குழந்தையைக் கருவுற்றிருந்தபோது, அவளது கணவன் வீட்டை விட்டுச் செல்லாவிட்டால், பூச்சிமருந்து குடித்துவிடுவதாகப் பயமுறுத்திக் கணவனை வெளியேற்றினாள்.
மீய் பெரியம்மா இரண்டு புதிரான பெண்களால் வளர்க்கப்பட்டிருந்தாள். கிராமத்தினர் அந்த இரண்டு பெண்களையுமே வெறுத்து ஒதுக்கினர். ஆனால், அந்த இருவரும் குழந்தையை அவர்களில் ஒருவராக வரவேற்றனர். மூடிய கதவுகளுக்குப் பின், அவளுடைய அப்பாவைப்பற்றியும், தாத்தாவைப்பற்றியும் அவளுக்குச் சொன்ன அவர்களின் கண்களில் அவளது குடும்பத்தின் பெரியவர்களைப் பற்றிய பயத்தினையும் மறுப்பினையுந்தான் அவள் கண்டாள்: அவளுடைய தோல்-வெளிறிய பாட்டி, பல ஆண்டுகளாக இருட்டுக்குள்ளேயே பழகி, பகல் வெளிச்சத்துக்குப் பழக்கம் அற்றுப்போய், அவளுடைய இரவுப்பணிகளை, அவளது மகளுக்கும் பேத்திக்குமாகச் சமைப்பது மற்றும் தையல் வேலைகளை நடு இரவிலேயே செய்தாள்; அவளுடைய அம்மா, மிகமிகத் தேவையான அளவுக்கு மட்டுமே உண்டு, சொல்லப்போனால், இறப்பதற்காகவே பட்டினி கிடந்து, அவளது மகள் உண்பதை மட்டும் இமைமூடாது விழிதிறந்து, பார்ப்பதற்குக் களைப்படைந்ததே இல்லை.
அம்மா முதலிலும், பாட்டி பின்னருமாக, அந்த இரண்டு பெண்களும் இறக்கும்வரையில், மீய் பெரியம்மா வீட்டைவிட்டுச் செல்வதுபற்றி யோசிக்கவே இல்லை. அவர்கள் உயிரோடிருக்கும்போது, உலகத்தின் பழிப்புரைகளிலிருந்தும் அவர்களின் தனித்தன்மைகளாலேயே காக்கப்பட்டனர்; மரணத்தின் போது, அவர்களின் வாழிடத்தையும் அவர்களே எடுத்துக்கொண்டுசென்றுவிட்டனர்; மீய் பெரியம்மா அங்கே நங்கூரமிட்டுத் தங்குவதற்கென்று, அவர்கள் எதையும் விட்டுச் சென்றிருக்கவில்லை. நியூயார்க்கின் குயின்ஸிலிருந்த தூரத்துச் சகோதரர் ஒருவரால் ஏற்பாடுசெய்யப்பட்ட திருமணச் சம்பந்தம் ஒன்று வந்தபோது, தயக்கம் ஏதுமின்றி ஒப்புக்கொள்ளப்பட்டது: புதிய நாட்டில், அவளது அம்மாவும் பாட்டியும் கதைகளாகவே நின்றுபோனார்கள். மீய் பெரியம்மா அவர்களைப்பற்றி, கணவரிடம் சொல்லவில்லை; அவர் அதை விரும்பியிருக்கவும் மாட்டார்; எப்படியிருந்தாலும் – அந்த முட்டாள்தனமான, நல்ல மனிதர், கடின வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளக் கடினமாக உழைக்கும் ஒரு பெண்ணைத்தான் எதிர்பார்த்திருந்தார். மீய் பெரியம்மா, பாலைப் பார்ப்பதற்காகத் திரும்பினார். அவரும் ஒருவேளை அவளது கணவர், அவளது, தந்தை, தாத்தா, அல்லது மீய் பெரியம்மாவின் தாத்தா இறக்கும்வரை, அவளது பாட்டி உடனிருந்தாளே, அந்த மனிதரிலிருந்தும் மாறுபாடு இல்லாதவரோ என்னவோ: அவர்களது வாழ்க்கையில் வந்த பெண்களால் சிக்கலாக்கப்பட்டிருக்காத சாதாரண வகைப்பட்ட மகிழ்ச்சி ஒன்றினைப் பெற அவர்கள் தகுதியுடையவர்கள்; ஆனால், கிடைக்கப்பெறாமலேயே போனவர்கள்.
‘’உனக்கு, நாளை பிற்பகல் வேலை எதுவுமின்றி இருக்கும் வாய்ப்பு கிடைக்குமென்று நினைக்கிறாயா?’’ சானலின் வீட்டுமுன் மகிழுந்தினை நிறுத்தும் முன் பால் கேட்டார்.
‘’ நாள் முழுவதும் வேலைசெய்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்தானே,’’
‘’இன்று போலவே, குழந்தையையும் எடுத்துக்கொண்டு வரலாம்.’’
‘’எங்கே?’’
ஈஸ்ட்-வெஸ்ட் பிளாசா பூங்காவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலும் ஒரு மனிதனுடன் சதுரங்கம் விளையாடுவதாக, பால், கூறினார். மீய் பெரியம்மா குழந்தையுடன் அங்கே, அருகாகவே ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டுமென்று பால் விரும்பினார்.
மீய் பெரியம்மா சிரித்தாள். ‘’ஏன், அவன் கவனம் சிதறி விளையாட்டில் தோற்கவேண்டுமா?’’
‘’அவனைவிட நான் மேல் என்று அவன் நினைக்கவேண்டும்.’’
எந்தவகையில் மேலென்று? கடனாக அழைத்து வந்த ஒரு தோழி, கடன் வாங்கிய ஒரு பேரனை தள்ளுவண்டியில் தள்ளுவதைக் கொண்டா? ‘’யார் அது?’’
‘’ முக்கியமான எவருமில்லை. அந்த ஆளோடு நான் இருபத்தேழு ஆண்டுகளாகப் பேசுவதில்லை.’’
அவரால் நன்றாகப் பொய் சொல்லக்கூட முடியவில்லை. ‘’உங்கள் தந்திரத்தில் அவன் இப்போதும் விழுந்துவிடுவானென்று நினைக்கிறீர்களா?’’
‘’எனக்குத் தெரியும், அவனை.’’
ஒருவரைத் தெரியுமென்பது – நண்பரோ, பகைவரோ- அவரைத் தன் கண்பார்வையிலிருந்தும் அகலவிடாமல் வைத்துக்கொள்வது போன்றதாவென, பெரியம்மா வியந்தாள். தெரிந்தவராயிருக்கும்போது, எவரொருவரின் சிந்தனைக்குள்ளும் சிறைப்படுபவராக இல்லாமலிருக்க முடியாது. அந்த வகையில் பார்த்தால், அவளுடைய பாட்டியும், அவளுடைய அம்மாவும் நற்பேறுடையவர்களாயிருந்திருக்கிறார்கள்: அவர்களைத் தெரியுமென்று ஒருவர்கூட உரிமை கொண்டாட முடியாது, மீய் பெரியம்மா கூட. அவள் சிறியவளாயிருக்கும்போது, அவர்களைப் புரிந்துகொள்வதில் எந்த அர்த்தமும் இல்லையென்று நினைத்தாள்; அவர்கள் எந்தவிதப் புரிந்துகொள்ளலுக்கும் அப்பாற்பட்டவர்களென்றும் பலர் அவளுக்குச் சொல்லியிருந்தார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகு, அவர்கள் பிம்பங்களாகிப் போனார்கள்: அவர்களைத் தெரியாமலேயே இருந்த நிலை, மீய் பெரியம்மாவுக்கும் கூட, அதன்பிறகும் வாழ்க்கையில் வந்த எவரையுமே தெரிந்துகொள்ள வேண்டாத நற்பேறாக வாய்த்தது: அவளது கணவர், நியூயார்க்கிலிருந்து சான்பிரான்சிஸ்கோ வரும்வரையில் எத்தனையோ ஆண்டுகளாக, வேலைசெய்த பல்வேறு சீன உணவுவிடுதிகளில் உடன் பணியாற்றிய சக பணியாளர்கள், அவள் மகப்பேறு பார்த்து, அவளது நோட்டுப் புத்தகத்தில் வெறும் பெயர்ப் பதிவுகளாகிப்போன, அம்மாக்கள், குழந்தைகள். ‘’அது போய்த் தொலையட்டுமென்றுதான் நான் சொல்வேன். இருபத்தேழு ஆண்டுகளாக அப்படியென்ன வன்மம்?’’ என்றாள், மீய் பெரியம்மா, பாலிடம்.
பால் பெருமூச்சிட்டார். ‘’அந்தக் கதையை நான் சொன்னால் புரிந்துகொள்வாய்.’’
‘’தயவுசெய்து, எந்தக் கதையையும் என்னிடம் சொல்லாதீர்கள்.’’ என்றாள், மீய் பெரியம்மா.
மளிகைப் பொருட்கள் அனைத்தையும் பால், குளிர்பெட்டிக்குள் அடுக்கி வைப்பதையும், மீய் பெரியம்மா குழந்தைக்குப் புட்டிப்பால் காய்ச்சிக் கலக்குவதையும் இரண்டாம் தள நிலைப்படியிலிருந்து, சானல் கவனித்துக்கொண்டிருந்தாள். பால் புறப்பட்டுச் சென்ற பிறகு, சானல் கீழ்நோக்கி, அவர்களின் மணநோக்குச் சந்திப்பு எப்படியிருந்ததெனக் கேட்டாள். குழந்தையை மடியில் சாய்த்துப் பிடித்துக்கொண்டு, மீய் பெரியம்மா, ஆடும் நாற்காலியில் அமர்ந்தாள்; குழந்தையின் அம்மா ஒரு தொந்தரவாகிப் போனாலும், குழந்தை உறிஞ்சிச் சாப்பிடுவதைப் பார்க்கும் திருப்தி ஒன்று அவளுக்குக் கிடைப்பதே மகிழ்ச்சிதான்.
சானல் கீழிறங்கி வந்து, சாய்மெத்தையில் அமர்ந்தாள். ‘’நீங்கள் வலையில் விழுந்துவிட்டதைப் பார்த்தேன். மகிழுந்துக்குள் நிரம்ப நேரம் உட்கார்ந்திருந்தீர்களே, ஒரு வயதான கிழவன் அப்படியொரு காந்தக் காதலனாக இருப்பானாவென எனக்குத் தெரியவில்லை.’’
குழந்தையைத் தன் படுக்கையறைக்கு எடுத்துப் போய்விடலாமாவென மீய் பெரியம்மா நினைத்தாள்; ஆனால், இது ஒன்றும் அவள் வீடு இல்லையே, அதுவுமில்லாமல் பேசும் ஆர்வத்திலிருக்கும் சானல் அவளைப் பின்தொடர்ந்து படுக்கையறைக்கும் வருவாளென்று அவளுக்குத் தெரியும்.
அப்போதும், மீய் பெரியம்மா அமைதியாகவே இருந்ததும், சானலின் கணவர் அவளைத் தொலைபேசியில் அழைத்ததாகவும், அவரது மகன் இணை ஒன்றின் சாயங்காலப் பிணைப்பினைக் காண்பதற்காகப் போயிருக்கிறான் எனச் சொன்னதாவும் சானல் கூறினாள்.
இந்த நிமிடமே வெளியேறிப் போய்விடவேண்டுமென்று, மீய் பெரியம்மா தனக்குள் சொல்லிக்கொண்டாள்; ஆனால், அவளது உடல் ஆடும் நாற்காலியின் முன்னும் பின்னும், பின்னும் முன்னுமான அசைவின் இதமான ஆட்டத்துக்கு ஆட்பட்டிருந்தது.
‘’கோபமா, பெரியம்மா?’’
‘’உங்கள் கணவர் என்ன சொன்னார்?’’
‘’அவர் நிலைகுலைந்துபோனார்தான். வீட்டுக்கு வராமலிருந்ததனால், அவருக்கு அப்படியானதென்று நான் சொன்னேன்.
இங்கிருந்து புறப்படவிடாமல் உன்னைத் தடுப்பது எது? மீய் பெரியம்மா தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். குழந்தைக்காகத் தங்குவதாக நம்பிக்கொள்ள விரும்புகிறாய், அப்படித்தானே?
‘’அவர் நிலைகுலைந்துபோனதில் நீங்கள் என்மீது மகிழ்ச்சிகொள்ள வேண்டும். அப்படியில்லாவிட்டாலும் குழந்தைக்காகவாவது மகிழ்ச்சி கொள்வீர்கள், இல்லையா?’’ என்றாள், சானல்.
நீங்கள் ஒவ்வொருவரும் மற்ற எல்லோரையும் போலவே, கடந்து சென்றவர்களாகிவிடுவீர்கள் என்பதில்தான், எனக்கு மகிழ்ச்சி.
‘’நீங்கள் ஏன் மவுனமாக இருக்கிறீர்கள், பெரியம்மா? மன்னித்துக்கொள்ளுங்கள், என் வலியும் வேதனையும் அப்படி, எனக்கு இங்கே ஒரு தோழி இல்லை, ஆனால், நீங்கள் எனக்கு அன்பானவராக இருக்கிறீர்கள். என்னையும் குழந்தையையும் தயவுசெய்து பார்த்துக்கொள்வீர்களா?’’
‘’நீங்கள் எனக்குச் சம்பளம் தருகிறீர்கள், அதனால் நான் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன்.’’ என்றாள், மீய் பெரியம்மா.
‘’இந்த மாதத்திற்குப் பிறகும் இங்கே தங்க முடியுமா?, நான் இரண்டு மடங்கு தருகிறேன்,’’ என்றாள், சானல்.
‘’நான் வழக்கமான ஆயாவாகப் பணிசெய்வதில்லை.’’
‘’நீங்கள் இல்லாமல், நாங்கள் என்னசெய்ய முடியும், பெரியம்மா?’’
இந்த இளம்பெண்ணின் இனிமைக் குரல் உன்னை ஏமாற்ற அனுமதித்துவிடக்கூடாது, மீய் பெரியம்மா தனக்குத்தானே எச்சரிக்கை செய்துகொண்டாள்: நீ ஒன்றும் மாற்று இல்லாதவளல்ல.- அவளுக்காக, அவளது குழந்தைக்காக, யாருக்காகவும். இருந்தாலும், மீய் பெரியம்மா, குழந்தை வளர்வதை – ஒருசில மாதங்களுக்கு, ஒரு ஆண்டுக்கு, இரண்டு ஆண்டுகளுக்குக் கண்ணால் காண இயலுமேயென ஒரு கணம் கற்பனையில் மிதந்தாள். ‘’குழந்தையின் அப்பா எப்போது வருகிறார்?’’
‘’அவர் வரும்போது வரட்டும்.’’
மீய் பெரியம்மா, துவாலை ஒன்றின் முனையால் குழந்தையின் முகத்தைத் துடைத்தார்.
‘’நீங்கள் என்ன நினைக்கிறீர்களென்று எனக்குத் தெரிகிறது – நான் சரியான ஆண்மகனைத் தேர்வுசெய்திருக்கவில்லையென்கிறாற் போல. இதுபோன்ற பொறுப்பற்ற வயதான ஒருவரை நான் ஏன் திருமணம் செய்யவேண்டியிருந்ததென்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?’’
‘’உண்மையைச் சொல்வதெனில், அப்படி எதையும் நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.’’
மீய் பெரியம்மாவின் எதிர்ப்பினைக் கண்டு கொள்ளாமலேயேதான் எல்லாரும் கதைகளைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலும் பாலுடன் சதுரங்கம் விளையாடும் மனிதன் பாலின் மனைவியின் ஊர்க்காரன்; எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பாலின் மனைவியால் `உன்னைவிட நல்ல கணவனாக இருந்திருப்பான்` எனச் சொல்லப்பட்டவன். அவள் அதனை, அவள் கணவனைக் கொட்டிவிடவேண்டுமென்ற உந்துதலில் ஒரே ஒரு முறைதான் சொல்லியிருக்கலாம்; அல்லது முதலில் பெண்கேட்டவனுக்கு ஒப்புதல் சொல்லிவிட்டு, ஆண்டுக்கணக்கில் வறுத்துக்கொண்டிருந்திருக்கலாம். பால் சொல்லவுமில்லை; மீய் பெரியம்மா கேட்கவுமில்லை. அதற்குப் பதிலாக, பால் அவரது தொழிலோடு, அந்த மனிதனின் தொழிலை ஒப்பிட்டார்: உண்மையில் பால் ஒரு தொழில் முனைவோனாக உயர்ந்திருந்தார்; அந்த மனிதன் தொழிலாளியாகவே இருந்துவிட்டான்.
ஒரு பகைவன் காலாகாலத்துக்கும் நெருக்கமாக, ஒரு நண்பனைப் போல இருக்கமுடியும்; ஒரு பகை இரண்டு மனிதர்களை வாழ்க்கை முழுமைக்கும் சகோதரர்களாகவும் உருவாக்க முடியும். ஒவ்வொருவரையும் அந்நியராக மாற்றிவிட முடிகிறவர்கள் பேறுபெற்றவர்கள்தாம், என மீய் பெரியம்மா நினைத்தாள்; ஆனால், அந்த ஒளியினை அவள் பாலுடன் பகிர்ந்துகொள்ளவில்லை. அவர் சொல்வதை அவள் கேட்கவேண்டுமென்றே அவர் விரும்பினார்; அதற்கிணங்கவே, அவளும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
சானல், பல விவரங்களுடன், சில நேரங்களில் மீய் பெரியம்மாவின் கன்னங்கள் சிவக்குமளவுக்கு, நல்ல ஒரு கதை சொல்லுபவளாக இருந்தாள். அவளுடைய கல்லூரித் தோழிகளில் ஒருத்தியுடன் படுத்துறங்கிய, தன்னுடைய அப்பாவைத் தண்டிப்பதற்காகவே, சானல், ஏற்கெனவே திருமணமான ஒரு வயதானவருடன் படுத்துறங்கினாள். அவள் கருத்தரித்தது, அவளுடைய அப்பாவைத் தண்டிப்பதற்கு மட்டுமல்ல, மனைவியை ஏமாற்றிய அந்தக் கணவனையும் தண்டிப்பதற்காகத்தான். ‘’நான் யாரென்று முதலில் அவருக்குத் தெரியாது. கூடப் படுத்துத் தூங்கிவிட்டுக் காசு கொடுத்து அனுப்பிவிடுகிற பெண்களில் ஒருத்தியாக அவர் நினைக்கும்படியாகத்தான் நான் முதலில் கதைசொல்லியிருந்தேன்.’’ என்றாள், சானல். ‘’ஆனால், பின்னால்தான், என்னை மணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லையென்பதை அவர் உணர்ந்தார். அவரது தொழில் முழுவதையும் அழித்துவிடுமளவுக்கு என் அப்பாவுக்கு பெருந்தலை உறவுகள் இருந்தன.’’
அவள் அம்மா என்ன உணர்வாளென்பது பற்றி அவள் நினைத்துப்பார்க்கவில்லையா? மீய் பெரியம்மா கேட்டாள். அவளுக்காக ஏன் கவலைப்படவேண்டும்? எனப் பதில்சொன்னாள், சானல், கணவனின் மனதை ஈர்த்துக்கொள்ளத்தெரியாத ஒரு பெண், அவளுடைய மகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் அல்ல.
மீய் பெரியம்மாவுக்கு அவர்களின் தர்க்கம் புரியவில்லை: சானலின் இழிவான வக்கிரப்போக்கு; பாலின் வளைந்துகொடுக்காத தன்மை. எந்த மாதிரியான உலகத்திலடா வந்து பிறந்திருக்கிறாய், குழந்தாய், என்றாள், மீய் பெரியம்மா. அப்போது நடு இரவு கடந்துவிட்டது. அவளுடைய படுக்கையறை விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. குழந்தைத் தொட்டில் மீதிருந்த கடல்விலங்குப் பொம்மைகளின் இரவு விளக்கின் வெளிச்சம் நீலமும் ஆரஞ்சுமாக குழந்தையின் முகத்தில் நீள்கோடுகளாக விழுந்திருந்தன. மெழுகுத்திரி வெளிச்சத்தில் அவளுடைய அம்மா, அவள் அருகிலிருந்த நேரமொன்றும் இருந்திருக்கும்; அல்லது அவள் பாட்டி இருட்டில் அமர்ந்திருந்திருக்கலாம். அவளுக்கு எந்த மாதிரியான எதிர்காலம் விடியவேண்டுமென அவர்கள் வேண்டியிருப்பார்கள்? அவள் இரண்டு உலகங்களுக்கிடையில் வளர்க்கப்பட்டிருந்தாள்; அவளுடைய அம்மாவும் பாட்டிக்குமான ஒரு உலகம், எல்லோருக்குமான உலகம் மற்றொன்று; ஒவ்வொரு உலகமும் பிறிதிலிருந்தும் அவளை உள்ளிழுத்துப் பாதுகாத்தது; ஒன்றினை இழப்பதென்பது அவளுடைய விருப்பத்திற்கு எதிரானதாக, பிறிதின் நிரந்தரக் குடிமகளாக மாற்றியது.
மீய் பெரியம்மா, தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளாததோடு, அதனாலேயே அவர்களது கணவர்களின் வாழ்க்கையைத் தடம்புரளச் செய்து குழந்தைகளையும் அனாதைகளாக்கிய பெண்களின் குடும்ப வரிசை ஒன்றிலிருந்தும் வந்தவளாக இருந்தாள். மீய் பெரியம்மாவுக்காவது, குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டாமென்கிற அறிவுணர்வு இருந்தது; சில நேரங்களில், இன்றைக்குப் போன்ற தூக்கமற்ற சில இரவுகளில், அவளுக்குப் பிடித்தமான ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாமா என்ற நினைப்புக்கும் இடம்கொடுப்பதுண்டு. உலகம் எவ்வளவு பரந்தது; ஒரு பெண், அவள் விரும்பியபடி ஒரு குழந்தையை வளர்த்துவிடமுடியும்தான்.
குழந்தைகள் – அவற்றில் நூற்று முப்பத்தொன்றும் அவற்றின் பெற்றோரும், நம்பிக்கையிருந்தாலும் எச்சரிக்கையோடிருந்து, மீய் பெரியம்மாவை, அவளிடமிருந்தே காத்துநின்றனர். ஆனால், அவளை இப்போது, யார் காப்பாற்றப் போகிறார்கள்? இந்தக் குழந்தைக்குப் பிற குழந்தைகளைப் போல, பாதுகாப்பு இல்லை; இருந்தாலும் அவள் அவனைப் பாதுகாக்கவேண்டும். யாரிடமிருந்து? அவனுடைய பெற்றோர்களிடமிருந்துதான்; அவனுடைய பெற்றோர்கள் மட்டுமல்ல, அவளுக்கான ஒரு மாதத்திற்குப் பின் அவனது வாழ்க்கை என்னவாகுமோ என நினைக்கத்தொடங்கிய மீய் பெரியம்மாவின் இதயத்திலும் கூடத்தான், அவனுக்கு இடமில்லை.
இப்படி உட்கார்ந்து மண்டையை உடைத்துக்கொள்வதில் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? வேண்டுமானால், பார், சீக்கிரமாகவே, பாலைப் போல ஒரு அலுப்பூட்டும் கிழவனாக, அல்லது சானலைப் போல ஒரு தனிமைப்பட்ட பெண்ணாக, கிடைக்கின்ற ஆட்களிடமெல்லாம் கதை சொல்பவளாக மாறிப்போவாய். உன் அம்மாவைப்பற்றியும், உன் பாட்டியைப்பற்றியும், அவர்களுக்கும் முன்பிருந்த பெண்களைப்பற்றியும் காலமெல்லாம் பேசிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருக்கலாம்; அதில் சிக்கல் என்னவென்றால், உனக்கு அவர்களைப் பற்றித் தெரியாதது தான். ஒரு மனிதரைப்பற்றித் தெரிவதென்பது எப்போதும் நிரந்தரமாக அவருடனேயே தங்கச்செய்கிறது என்றால், தெரியாமலிருப்பதும் அப்படியான ஒரு காரியத்தைத் தான் செய்கிறது: இறப்பு என்பது, இறந்தவர்களைக் கூடவே அழைத்துச் சென்றுவிடுவதில்லை; அவர்கள் இன்னும் ஆழமாக உனக்குள் வேர்விடச்செய்வதாகத் தான் இருக்கிறது.
குழந்தையை எடுத்துக்கொண்டு, வீட்டைவிட்டும் சென்றால், அவளை யாரும் தடுத்துவிடமுடியாது. முடிவில் தூக்கம் என்பது அவள் விருப்பத்துக்கேற்றபடியான ஒன்றாக மாறிப்போன அவளது பாட்டியாக மாறலாம்; குழந்தைக்குச் சத்தான உணவு வேண்டுமென்பதற்காக, தான், சாப்பிடாமலிருந்த அவளுடைய அம்மாவைப் போலவும் மாறலாம். இந்த உலகிலிருந்தும் தப்பியோடும் அகதியாக மாறப்போவதாக நீண்டகாலமாகத் தோன்றும் எண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்பு போல் இப்போதெல்லாம் பயமுறுத்துவதில்லை யென்றாலும், இந்தத் தூண்டுதல்கள், இப்போது, அலைஅலையாக அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அவளுக்கு வயதாகிக்கொண்டே போகிறது; ஞாபகமறதி அதிகமாகிறது; இருந்தாலும் அவள் அவளாகவே இருப்பதன் அபாயத்தைப் புரிந்துகொள்கிறாள். அவளது பாட்டி மற்றும் அம்மாவைப் போல, தனக்குள் தானே பேசிக்கொள்ளும் சாதாரண விதிவயப்பட்ட ஒரு பெண் அல்ல. அடுத்த இடத்திற்கு அவள் நகரும்போது, எந்த விதமான இரகசியப் புதிர் அல்லது பாதிப்பினையும் விட்டுச் செல்வதில்லை; அவளைத் தெரிந்துகொண்டதற்காக இந்த உலகத்தில் யாரும் தொல்லைப்படப்போவதில்லை.
••••••••••
மலைகள் இணைய இதழ் 97 மே 3 இல் வெளியாகியுள்ளது.