Sunday, 19 June 2016

எபிரேயச் சிறுகதை - மூடிய கண்கள் மூடியபடி - எட்கர் கெரெட் ETGAR KERET

மூடிய கண்கள் மூடியபடி ( SHUT ) 

எபிரேயம் : எட்கர் கெரெட் ETGAR KERET  

ஆங்கிலம் : மிரியம் ஷ்லெசிங்கர், சோன்ட்ரா சில்வர்ஸ்டோன் மற்றும் நாதன் இங்க்லேண்டர்  Miriam Shlesinger, Sondra Silverston and Nathan Englander தமிழில் – ச.ஆறுமுகம்


Etgar-Keret-1
எட்கர் கெரெட் இஸ்ரேல் நாட்டின் சிறந்த புனைகதைப் படைப்பாளர்களில் ஒருவர். இவர் டெல் அவிவ் நகரில் 1967 இல் பிறந்தவர். சர்வதேசப் புகழ் பெற்ற இவரது நூல்கள் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் பலவற்றையும் நியூயார்க் டைம்ஸ், லெ மாண்ட், கார்டியன், பாரிஸ் ரிவ்யூ, மற்றும் ஜியோட்ராப் இதழ்கள் வெளியிட்டுள்ளன. தற்போது தமிழாக்கப்படும் Shut கதை Suddenly, a knock on the door என்ற தொகுப்பிலுள்ளது.
***
எப்போதும் மிகைக் கற்பனையில் ஆழ்ந்துபோகும் ஒருவனை எனக்குத் தெரியும். நான் சொல்லவருவது, இந்த ஆள் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டே தெரு முழுவதும் கூட நடந்துவிடுவான், என்பதுதான். ஒருநாள் அவனது மகிழுந்தின் பயணி இருக்கையில் நான் அமர்ந்திருக்க, என் இடதுபுறத்தில் அவனது இரு கைகளும் ஓட்டுநர் வட்டினைப் பிடித்திருக்க, அவனது கண்கள் மூடியிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விளையாட்டுக்குச் சொல்லவில்லை, அவன் அப்படியே பிரதானத் தெரு ஒன்றின் வழியே மகிழுந்தினை ஓட்டிக்கொண்டிருந்தான்.
”ஹக்காய், இது சரியில்லை. கண்ணைத் திற, ஹக்காய்,” என்கிறேன், நான். ஆனால் அவன் என்னமோ எல்லாமே சரியாக இருப்பது போல ஓட்டிக்கொண்டேயிருக்கிறான்.
”நான் இப்போது எங்கே இருக்கிறேனென்று உனக்குத் தெரியுமா?” அவன் என்னைக் கேட்கிறான்.
”கண்ணைத் திறந்து தொலை, உடனே திறந்துவிடு, எனக்கு இரத்தமே உறைந்துவிட்டது போலிருக்கிறது.” என்றேன், மீண்டும்.
நாங்கள் எதனோடும் மோதவில்லை என்பதே அரும்பெரும் நிகழ்வுதான்.
இந்த ஆள் பிறர் இல்லங்களை, அவனது போலவே கற்பனை செய்வான். பிறர் மகிழுந்துகளை, அவர்களது வேலைகள் எல்லாவற்றையும் தான். அவர்களது பதவிகளைப் பற்றி அவன் கவலைப்படுவதேயில்லை. அவனது மனைவியைப் பற்றியுந்தான். பிற பெண்களை அவனது மனைவிகளாகக் கற்பனைசெய்வான். குழந்தைகளையுங்கூட. தெரு மற்றும் பூங்காவில் அல்லது தொலைக்காட்சித் தொடர்களில் அவன் பார்க்கிற குழந்தைகளையும் அவனது சொந்தக் குழந்தைகளுக்குப் பதிலாக, அவனது குழந்தைகள் போலவே கற்பனை செய்து கொள்வான். அப்படியே பல மணி நேரங்கள் அந்தக் கற்பனையிலேயே மூழ்கிவிடுவான். அப்படியே விட்டுவிடுவதாக இருந்தால் மொத்த வாழ்க்கையையும்கூட அப்படியே கழித்துவிடுவான்.
நான் அவனிடம் சொல்வதுண்டு, “ஹக்காய், விழித்துக்கொள், ஹக்காய், உன் வாழ்க்கையைப்பற்றி நினைத்துப் பார். உனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கை இருக்கிறது. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அருமையான ஒரு மனைவி. பெரும்பேறான குழந்தைகள். விழித்துக்கொள்.”
“நிறுத்து” கனவு மூட்டைக்குள்ளிருந்தவாறே அவன் பதில் சொல்கிறான், “கெடுத்துவிடாதே. இப்போது, நான் யாருடனிருக்கிறேனென்று உனக்குத் தெரியுமா? யோட்டம் ரட்சாபி, என்னுடைய பழைய படைத்துறை நண்பன். இப்போது அவனோடு ஒரு ஈப்புப் பயணத்திலிருக்கிறேன். நான், யோட்டி மற்றும் குட்டிப்பயல் எவியேட்டார் மென்டெலஸ்ஸான், மூன்றுபேர் மட்டுந்தான். அந்தப் புத்திசாலிக் குழந்தைப் பயல் அமிட் மழலைப்பள்ளியில் படிக்கிறான். அப்புறம், எவியேட்டார், அந்தக் குட்டிப் பிசாசு என்னிடம் கேட்கிறது, `அப்பா, நிரம்பத் தாகமாக இருக்கிறது. நான் ஒரு பீர் எடுத்துக்கொள்ளட்டுமா?` அப்படியே அதைப் படமாகப் பிடித்துப் பார். குழந்தைக்கு இன்னும் ஏழு வயதுகூட ஆகவில்லை. அதனால் நான் சொல்கிறேன், `பீர் கூடாது, எவி. அம்மா சொல்வாளில்லையா, பீர் அனுமதிக்கப்படாததென்று, உனக்குத் தெரியுந்தானே.` அவனுடைய அம்மா, என்னுடைய முன்னாள் மனைவியைச் சொல்கிறேன். ரோனா யெடிடியா, உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை. விளம்பரங்களின் மாடல் பெண்களைப் போல ஒரு அழகு, ஆனால் உள்ளுக்குள்ளேயோ, அசையவே அசையாத உருக்கு போன்ற ஒரு மனம். முறிக்கவே முடியாத ஆணிதான்.
நான் சொல்கிறேன் : ”ஹக்காய், அவன் உன் குழந்தையில்லை. அவளும் உன் மனைவி இல்லை. நீ ஒன்றும் மணவிலக்கானவன் இல்லை, மானிடா, நீ மகிழ்ச்சியான மணவாழ்வுக்குள் இருக்கிறாய். முதலில் உன் கண்களைத் திற.”
”குழந்தையை அவளிடம் அழைத்து வருகிற ஒவ்வொரு முறையும் இப்படித்தான் இது தூக்கிக் கொள்கிறது,” நான் சொன்னதைக் கேட்காதவன் போலவே சொல்கிறான், “ தூக்கிக்கொள்வதென்றால் இப்படி, அப்படி இல்லை, ஒரு கப்பலின் பாய் மரம் நட்டுக்கொள்வது போல் தூக்கிக்கொள்கிறது. அவள் அப்படியொரு அழகு, என் முன்னவள் அழகு, ஆனால், கடினமானவள். அவளுடைய அந்தக் கடினம் தான் எனக்கு இப்படித் தூக்கிக்கொள்கிறது.”
நான் சொல்கிறேன் : “அவள் ஒன்றும் உனது முன்னவள் இல்லை. உனக்கு இப்போது தூக்கிக் கொண்டும் இல்லை.” நான் நன்றாகத் தெரிந்துதான் பேசுகிறேன். அவன் என் முன்பாக மூன்றடி தூரத்தில் தான் முட்டுவரைக்குமான அரைக்காற்சட்டையில் நிற்கிறான். அங்கே எந்தத் தூக்கலும் இல்லை.
அவன் சொல்கிறான் : ” நாங்கள் பிரிந்தாக வேண்டியிருந்தது. அவளுடன் இருப்பதை நான் வெறுத்தேன். அவளேகூட அவளுடனிருப்பதை வெறுத்தாள்.”
நான் வேண்டிக் கேட்கிறேன் : ”ஹக்காய், உன் மனைவியின் பெயர் கார்னி. ஆமாம், அவள் அழகானவள். ஆனால் கடினமானவளில்லை. உன்னுடன் இல்லவே இல்லை.” அவன் மனைவி உண்மையில் மிக மென்மையானவள். அவளுக்குப் பரந்த இதயம்; பறவையைப் போல ஒரு மென்மையான ஆன்மா, அவள் எல்லோருக்குமாகவும் இரக்கம் கொள்கிறாள். இப்போது, நாங்கள் ஒன்பது மாதங்களாகச் சேர்ந்திருக்கிறோம். ஹக்காய் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்கிறான், அதனாலேயே நான் எட்டரைக்கு, அவள், குழந்தைகளை மழலைப்பள்ளியில் விட்டுவிட்டு வந்ததும் அவளைப் பார்க்கப் போய்விடுகிறேன்.
“ரோனாவும் நானும் உயர்நிலைப் பள்ளியில் சந்தித்தோம்,” அவன் சொல்லிக்கொண்டே போகிறான். “ அவள்தான் எனக்கு முதல் பெண். அவளுக்கும் நான்தான் முதல் ஆண். பிரிவுக்குப் பிறகு, சுற்றிச்சுற்றி எத்தனையோ பெண்களைச் செய்தும் பார்த்துவிட்டேன், ஆனால் எந்த ஒருத்தியும் அவள் அருகில் கூட வரமுடியாது. உனக்குத் தெரியுமா, சிறிது தூரத்தில்தான், இருந்தாலுங்கூட, இப்போதும் அவள் தனியாக இருப்பது போலத்தான் தெரிகிறது. அவளுக்கு யாராவதொருவர் இருப்பதாகத் தெரிந்ததோ, அவ்வளவுதான் நான் இடிந்தே போவேன், எங்களுக்குள் மணவிலக்கு, எல்லாமே முடிந்துவிட்டாலுங்கூட, அது என்னைத் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்துவிடும். அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது. வேறு எந்தப் பெண்ணும் எனக்கு ஒரு பொருட்டாக முடியாது. அவள் மட்டும் தான். அவள் மட்டுமே தான் எப்போதும் எனக்குள்ளிருப்பாள்.”
“ அவள் பெயர் கார்னீ, ஹக்காய், அவளோடு வேறு யாரும் இல்லை. நீ இப்போதும் திருமண உறவிற்குள்தான் இருக்கிறாய்.” என்கிறேன், நான்.
“ரோனாவோடும் யாரும் இல்லை.” என்ற அவன், வறண்ட உதடுகளை நாவால் ஈரமாக்கிக்கொண்டே, “யாரும் இல்லை. அப்படி இருந்தால் தற்கொலை செய்துகொள்வேன்.” என்கிறான்.
இப்போது கார்னீ இரட்டை வார் பை ஒன்றைச் சுமந்துகொண்டு அடுக்ககக் குடியிருப்புக்குள் வருகிறாள். வெகு இயல்பான “ஹைய்” ஒன்றை என் பக்கமாக வீசியெறிகிறாள். நாங்கள் இருவரும் சேர்ந்ததிலிருந்து, யாரேனும் பிறர் இருக்கும்போது, எங்களுக்குள் மிகுந்த இடைவெளியிருப்பதாகக் காட்டிக்கொள்ள பெரும் முயற்சி மேற்கொள்கிறாள். அவள் ஹக்காய்க்கு ஒரு `ஹைய்` கூடச் சொல்லவில்லை; அவன் கண்கள் மூடியிருக்கும்போது அவனுடன் பேசுவதில் எந்தப் பயனுமில்லையென்பது அவளுக்குத் தெரியாதா என்ன?
“என் வீடு டெல் அவிவின் நட்ட நடுவில், சாளரத்தை ஒட்டி வெளியே ஒரு மல்பெரி மரத்தோடு அழகாக அமைந்திருக்கிறது. ஆனால் அது சிறியதுதான்; வழியோ மிகவும் குறுகியதுதான். எனக்கு இன்னுமொரு அறை வேண்டும். வார இறுதிகளில் குழந்தைகளோடிருக்கும்போது வசிப்பறையின் துயிலிடத்தைத் திறக்க வேண்டியிருக்கிறது. கோடைக்குள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணவில்லையெனில், நான், வீடு மாறித்தானாகவேண்டும்.”
********** 
மலைகள் இணைய இதழ் 99, ஜூன் 2 இல் வெளியானது.