காலப்பெருவெளித் துப்புரவாளர்கள்
The Time – sweepers
ஆங்கிலம் : உர்சுலா வில்ஸ்-ஜோன்ஸ், இங்கிலாந்து தமிழில் ச.ஆறுமுகம்
உர்சுலா வில்ஸ் ஜோன்ஸ் தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரில் வசிக்கிறார். சிறுகதைகள் நாவல்கள், திரைக்கதைகள் படைக்கிறார்.
***
***
காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் குறித்து உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவர் இழந்துவிட்ட காலத்தையும் வீணாகத் தொலைத்த காலத்தையும் பெருக்கித் தள்ளிச் சுத்தம் செய்பவர்கள் தாம் காலப்பெருவெளித் துப்புரவாளர்கள். நீங்கள் இருப்பூர்தி நிலையத்தில் அமர்ந்திருக்க, உங்கள் இருக்கைப் பலகையைச் சுற்றிச் சுத்தம் செய்துகொண்டிருப்பவரை உங்கள் ஓரக்கண்ணால் பார்த்து காலப்பெருவெளித் துப்புரவாளராக இருப்பாரோ என நீங்களாக எண்ணிக்கொண்டாலும், உங்களால் அவர்களைப் பார்க்கமுடியாது. நீங்கள் அவர்களைப் பார்க்கவேண்டுமென்றால், விளக்குமாறு மற்றும் ஒரு துடைப்பானும் கையுமாக தீவிரச் செயல்முனைப்புடன், நீலநிறத்தில் சிறியதாகத் தோன்றும் மனிதர்களைத் தேடவேண்டும். ஆண்கள் முழு உடைகளையும் பெண்கள் பழைய பாணியிலான முழுக்கைச்சட்டையுடன் தலைக்கு முக்காட்டுத் துணியும் அணிந்திருப்பார்கள்.
எங்கெல்லாம் காலம் தொலைக்கப்படுகிறதோ அல்லது வீணாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் பணியிலிருக்கிறார்கள். எப்போதுமே இருப்பூர்தி நிலையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவர்களின் ஆலோசனை அறைகளெனில் குறைந்தது ஒருவராவதும் இருப்பார்கள். காதலியின் தலைநரைக்கும் காலம் வரையில் கூட திருமணம் செய்வதை முன்மொழியக் காத்திருப்பவருக்கெனத் தனியாக அவரைப் பின்தொடர்ந்து பணிசெய்வதற்காக அவருக்கு மட்டுமேயென காலப்பெருவெளித் துப்புரவாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மலர் மற்றும் மலர்க்கொத்துகள் விற்பனையகமொன்றினைத் தொடங்கிவிட வேண்டுமென்ற கனவுடன் வீடு, நிலம் விற்றல், வாங்கல் முகமைகளில் இரங்கத்தக்க முப்பத்தைந்து ஆண்டுகளைத் தொலைத்த பெண், ஊர்ப்புறத்து காலப்பெருவெளித் துப்புரவாளரைப் பெருமூச்சிடச் செய்து, இருப்பதிலேயே பெரிய குப்பைக்கூடையினை எடுத்துவரச் செய்கிறார்.
அவர்களின் பணி இவ்வளவு இழிவாக இருக்கிறதேயென நீங்களொன்றும் வருத்தப்பட வேண்டாம் : அவர்கள் ஒருபோதும் நோய்ப்படுவதில்லை; தவறான பணியிலிருக்கிறோமேயென அவர்கள் வருத்தப்படுவதில்லை; அவர்கள் ஓய்வுநேரங்களில் என்னசெய்கிறார்களென்று தெரியவில்லையென்ற போதிலும் அவர்களின் பணிநிலைமைகள் சிறப்பாகவே உள்ளன. வங்கி விடுமுறை நாட்களில் அவர்களுக்கும் விடுமுறையென்பதால்தான், அந்த நாட்களில் வழக்கத்தைவிட அதிகமான நேரம் கிடைப்பதாக நமக்குத் தோன்றுகிறது. கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டுகளில், காலப்பெருவெளித் துப்புரவாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்படுகிறது. ஜனவரியில் அவர்கள் பணிக்குத் திரும்புகையில் விடுமுறைநாட்களில் தொலைக்கப்பட்ட மற்றும் வீணாக்கிய காலத்தொகுதிகளைக், குவியல் குவியல்களாக எதிர்கொள்கின்றனர். அவர்கள் எப்போதும்போலான சாதாரண நிலைக்கு மீண்டுவருவதற்கு மூன்று வாரங்களாகிவிடுவதால்தான், எப்போதுமே அவர்களுக்கு ஜனவரி மற்ற மாதங்களைவிட அதிகநாட்களைக்கொண்டு நீண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் நாள்முழுதும் பணிசெய்கின்றபோதிலும், தற்காலப் புத்துலக வாழ்க்கை, வீண்விரயக் காலங்களை பெரும்பெரும் அடர்தொகுதிகளாக வெளித்தள்ளிக்கொண்டிருப்பதால், அவர்களது செயல்பாடுகளைத் தொழில்மயமாக்கி, சாதாரணக் குப்பை அள்ளும் பணியாளர்களைப் போலவே, அழுத்தியமுக்கும் சிறப்புக் கருவிகள் கொண்ட லாரிகள் வாங்கிச் சில இடங்களில் பயன்படுத்தவேண்டியதாகிவிட்டது; அந்த லாரிகளைச் சிறைகள் மற்றும் பல்பொருள் பேரங்காடிக் கூடங்களில் பெரும் அடர்தொகுதிகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். அந்த இரண்டு களங்களில் தாம் வீணாக்கிய காலம் மிகமிகச் சிறந்த அர்ப்பணிப்புள்ள பணியாளர்களையும் விழுங்கி மூழ்கடித்துவிடுவதாக அச்சுறுத்துகிறது.
2
யாராவது ஒரு காலப்பெருவெளித் துப்புரவாளரிடம் பேசிப்பார்த்தீர்களானால், வியப்பான ஒரு விஷயத்தைக் கேள்விப்படுவீர்கள் : மகிழ்ச்சியாக அனுபவித்த நேரம் ஒருபோதும் வீணாக்கிய நேரமாவதில்லை. சோர்வு நிரம்பி வழியும் பெரிய அலுவலகம் ஒன்றைச் சுத்தமாக்கும் காலப்பெருவெளித் துப்புரவாளர், மேஜைக்கு அடியில் விடுமுறைக் குறிப்பேட்டுப் பட்டியலும் கையுமாக வெப்பமண்டலக் கடற்கரைகளின் புகைப்படங்களைத் துருவித் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் மேசையருகில் கூட செல்லாமல் நேரடியாகக் கடந்துவிடுவார். அடுத்த மேஜையில் தனது மாமியாரின் நிர்வாணக் கோலத்தைக் கற்பனையாகக் கண்டு வியந்து மகிழ்ந்துகொண்டிருக்கும் மனிதனையும் அவர்கள் ஒதுக்கிக் கடந்துவிட்டு ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு, நேரத்தை நொந்துகொண்டிருக்கும் இளைஞனின் மேசையில்தான் போய்நிற்பார்கள்.
கூட்டிப் பெருக்கப்பட்ட, இந்த விரயக் காலநேரங்களெல்லாம் எங்கு போய்ச் சேருமென்று உங்களுக்கு வியப்பாகத் தோன்றலாம். பயப்படாதீர்கள், காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் எல்லோருமே தீவிர மீளாக்கச் சுழற்சியாளர்கள்தாம்; அவையனைத்தும் சேகரிக்கப்பட்டு, சிப்பங்களாகப் பெரும் கொள்கலன்களில் அடுக்கப்பட்டு, லிவர்பூல் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கப்பலில் ஏற்றி, இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கே, மும்பைக்கு அருகில் எங்கேயோ இருக்கின்ற ஒரு தூசுபடிந்த தொழிற்பேட்டையில் அவை சுத்தம்செய்யப்பட்டு, வகை, வகையாகத் தரம் பிரிக்கப்படுகின்றன. தோல்வியுற்ற பேச்சுவார்த்தைகள், தவறான கைது மற்றும் சிறைவாசங்கள், உண்மையிலேயே நஞ்சாகிப்போன திருமணங்கள் போன்றவற்றின் மிச்சம்மீதிகளிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட உச்ச அளவிலான நச்சுத்தன்மை மற்றும் நஞ்சாகிப்போன காலம் பயன்பாட்டில் இல்லாத ஒரு இராணுவப் படைத்தளத்தின் அடியிலுள்ள ஒரு குளத்தில் புதைக்கப்படுகின்றன. அங்கே அவை மக்கி, மீண்டும் நல்லனவாக மாறுவதற்கு இரண்டு என்ன மூன்று நூற்றாண்டுகள் கூட ஆகும்.
மீதியுள்ள காலம் – உற்சாகமற்ற அலுவல் கூட்டங்கள், சந்திப்புகள், நிகழாமற்போன சந்திப்புகள், பணித்திட்டங்கள், தாமதமான பேருந்துகள், மற்றும் நாடக அரங்குகளில் மோசமான இரவுகள் போன்றவை சுத்தமாக்கப்பட்டு, மீண்டும் ஒரு கப்பலில் ஏற்றி, சீனாவின் காங்சூவிலுள்ள தொழிற்சாலைப்பொருட்கள் ஏற்றுமதி நடவடிக்கை மையத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கே, அவை அழுத்திச் சீர்செய்யப்பட்டு, மறுவழங்கலுக்காகச் சேமித்துவைக்கப்படுகின்றன. அவற்றில் இருபது விழுக்காடு உலகத்திலேயே உச்ச அளவிலான உற்பத்தி விகிதம் கொண்ட ஏற்றுமதி நடவடிக்கை மையத்தின் ஆலைகளுக்கு நேரடியாகச் செல்கிறது. கால்பங்கு, எந்தப் பேரமுமில்லாமல் சொன்னவிலைக்கு சீன அரசினால் வாங்கப்படுகிறது. மிகமிக அடர்த்தி கூடிய பத்து விழுக்காட்டுப் பொருள் கலிபோர்னியாவிலுள்ள ஒரு தாழ்வெப்பநிலை ஆய்வகத்திற்கு விற்பனையாகிறது. மற்றுமொரு இருபது அல்லது அதைப்போன்றதொரு பகுதி பணக்காரத் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு, பெரும்பாலும் அழகான இளம்பெண்களை மணந்த மிகவும் வயதான பெரும்பணக்காரர்களுக்கு விற்பனையாகிறது.
எப்படியானாலும், காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் லாபத்திற்காகச் செயற்படுபவர்கள் அல்ல. இவற்றில் கிடைக்கும் பணமெல்லாம் குப்பைப் பைகள், துடைப்பான்கள் உள்ளிட்ட துப்புரவுத் தளவாடங்கள், கப்பல் செலவு மற்றும் அனைத்துச் செலவினங்களுக்குமாகிறது. மீதியாகும் தொகை நல்ல விஷயங்களுக்காகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மிகைப்படியான நேரத்தைப் பெறுபவர்கள் அதற்காக எந்தப் படிவத்தையும் நிரப்பவேண்டியதோ அல்லது நல்கை கோரவேண்டியதோ இல்லை; உதவிபெறுபவர்களே, அவ்வாறு உதவிபெறுகிறோமென்பதை முற்றிலுமாக அறியமாட்டார்கள். இத்தகைய பயனாளிகளில், ருஷ்ய நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான நோவோசிபிர்ஸ்க் –க்கு வெளியே அமைந்துள்ள உதிர்ந்துவிழும் கட்டிடம் ஒன்றில் இயங்கும் ஒரு பொது ஆய்வகத்தில் மலேரியாவுக்கான தடுப்பு மருந்தினைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ளவரும் மிகச் சோர்ந்துபோய், அலங்கோலமாகத் தோற்றமளிக்கும் அறிவியலாளரும் ஒருவர். மற்றொருவர், நைரோபி சேரிப்பகுதி ஒன்றில் பதினேழு குழந்தைகளைப் பெற்ற ஒரு பெண் – அவர் இருபது ஆண்டுகளாக முழுநேர வேசித்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் ஒருபோதும் நோய்வாய்ப்பட்டதில்லை. மூன்றாம் நபர், கனடா நாட்டின் டொரொன்டோவின் நெருக்கத்தில் இடிபடும் அடுக்ககமொன்றில் குடியிருந்துகொண்டு வீட்டிலிருக்கும் நோய்வாய்ப்பட்ட மனைவிக்கும் குழந்தைகளுக்குமாக அவ்வப்போது பணம் அனுப்பிக்கொண்டு பிற்காலத்தில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்பெனக் கொண்டாடப்படப் போகும் நாவலொன்றினை எழுதிக்கொண்டிருப்பவரான இந்திய வாடகை உந்து ஓட்டுநர்.
3
காலப்பெருவெளித் துப்புரவாளர்களின் தாராளக் கொடையினைப் பெறுபவர்கள் மனிதர்கள் மட்டுமேயல்ல; மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியிலுள்ள திம்புக்டு –விற்கு நாற்பதுமைல் வெளியே மணலில் புதைந்துகிடக்கும் மத்திய கால மசூதி ஒன்றும் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை அல்லது அப்படியான ஒரு கால அளவுக்கு நல்கையைப் பெறுகிறது. கிரீக் மற்றும் அனடோலியன் பகுதிகளுக்கிடையேயுள்ள மத்தியதரைக்கடலின் நீட்சியான ஏஜீயன் கடல் தளத்தின் கீழாக எங்கேயோ ஒரு இடத்தில் ட்ரோஜன் போர்க்கப்பல் ஒன்றும் மண்ணுக்குள் வியக்கத்தக்கவகையில் பாதுகாத்துப் பேணப்படுகிறது. அதுபோலவே மெக்சிகோவிலுள்ள ஒரு கோவிலுக்கும் சிறிது உபரியான காலத்தைக் காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் வழங்குவதோடு, அயர்லாந்தின் மேற்குக்கடற்கரையின் கால்வே குடாவின் சதுப்புநிலச் சகதிக்குள் இருண்ட காலப் பொக்கிஷங்களின் பெரும்புதையல் ஒன்றைப் பாதுகாத்துப் பேணுகின்றனர்.
அறப்பணிகளுக்கென ஒதுக்கியுள்ள காலத்தில் அவசரகால உதவிக்கென சிறியதும் பெரியதுமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருப்பு வைத்துள்ளனர். அவற்றைப் பாராசூட்டுகள் மூலம் கொண்டுசென்று பெரும் விரக்திகளின்போதும் அமைதிப் பேச்சுகள் மற்றும் போர் மாற்றங்களுக்கு வழிவகை காணவும் எண்ணற்ற தந்தைகளுக்கு மகப்பேற்று அறைகளில் தக்கநேரத்துக்கு உதவுமாறும் இறக்கப்படுகின்றன.
காலப்பெருவெளித் துப்புரவாளர்கள், இயல்பாகவே சுத்தமும் ஒழுங்கும் மிக்க ஒரு தனிவகையினராக இருக்கின்றனர். மனிதர்கள் இந்த விலைமதிப்பற்ற பயன்பொருளைத் தூக்கியெறிவது குறித்துச் சிந்திக்கவேண்டுமென்று அவர்கள் விரும்பினாலும், இது எந்த நேரத்திலும் விரைவிலேயே நிகழுமென்ற எதிர்பார்பில்லாமலும் இருக்கின்றனர்.
இக்கதை சொல்லும் நீதி என எதுவும் இல்லை. நீங்கள் உங்கள் நேரம் எதனையும் தூக்கியெறிவதாக இருந்தால், அதை ஒருவர் அப்புறப்படுத்தவேண்டியிருக்கிறதென்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், அவ்வளவுதான்.
(((()))))))))
http://www.eastoftheweb.com/short-stories/UBooks/Time898.shtml
மலைகள் இணைய இதழ் எண் 105, செப்டம்பர் 2, 2016 இல் வெளியானது.
மலைகள் இணைய இதழ் எண் 105, செப்டம்பர் 2, 2016 இல் வெளியானது.