Thursday, 17 November 2016

சங்க இலக்கியத் துளிகள் - 4 Glimpses of Sangam Poetry

சேம்பின் இலையும் யானைக்காதும் 

சேம்பின் இலையை யானைக்காதுக்கு உவமித்தது தமிழின் இலக்கியப் பாரம்பரியம். Caladium செடியினை Elephant Ear Plant என்று அழைப்பதுதான் வழக்கிலுள்ளதாம். படத்திலிருப்பது Caladium.
காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச்
செல்ப என்பவோ, கல்வரை மார்பர் -
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள்இலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
(பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.)
- கிள்ளிமங்கலம் கிழார். குறுந்தொகை 76. குறிஞ்சித்திணை.
பொருள் :
குளிர்ந்த வாடைக்காற்று, மலைப்பக்கத்தில் உள்ள, சேம்பின் அசைதலை உடைய வளம்பொருந்திய இலையைப் பெரிய களிற்றின் செவியைப் போலத் தோன்றும்படி தடவி அசைக்கும். இத்தகைய மிக்க பனியையுடைய முன்பனிக்காலத்தில் நடுங்குவதற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி கற்களையுடைய மலை போன்ற மார்பினையுடைய தலைவன், காந்தள் வேலியாக வளர்ந்துள்ள, உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு என்னைப் பிரிந்து செல்வார் என்று கூறுகின்றனையோ?
பக்கம் 188 – சங்க இலக்கியம் குறுந்தொகை புத்தகம் – 1 NCBH, Chennai.

சங்க இலக்கியத் துளிகள் - 3 Glimpses of Sangam Poetry

பருவமழை பொழியட்டும்; பட்டி பெருகட்டும்; வாழ்வு சிறக்கட்டும்;
பல்லோர் உவந்த உவகை எல்லோர் நெஞ்சிலும் பரவட்டும்.

நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி, 
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை,
 பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந்தற்றே -
-கபிலர்
அகநானூறு 42ம் பாடலில் 5-11 வரிகள்

பொருள் : கோடைகாலம் நீடித்து நின்ற பசுமையற்ற காலம்; மழையின்மையால் நாட்டில் வறுமை மிகுந்து, கலப்பைகள் யாவும் தொழிலற்று உறங்கிக் கிடந்தன; குன்றுகளைப் போல் தோற்றம் கொண்ட கரைகளை உடைய குளங்களில் வெயில் காய, வறட்சியுற்று, நீர்ப்பறவைகள் அங்கு தங்குதலை விட்டு வெளியேறிவிட்டன. அந்தக் குளங்கள் யாவும் நிறையுமாறு இரவெல்லாம் பெரும்பெயலென மழை பெய்து ஓய்ந்த வைகறைப் பொழுதில் நீர்நிரம்பிய குளங்களைக் கண்ட ஊரவர் உவந்த உவகை எல்லாம் எ்ன் நெஞ்சில் பெய்ததே!
படங்கள் ; எங்கள் கிராமத்து ஏரி மூன்றாவது படத்தில் காணப்படும் படகு உண்மையல்ல; photoshop.

சங்க இலக்கியத் துளிகள் - 2 Glimpses of Sangam Poetry -2


சங்க இலக்கியத் துளிகள் - 2  Glimpses of Sangam Poetry -2
வதுவைநாளினும் இனிமை
` ........................................... குன்ற நாடன்
குடிநன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்
கெடு நா மொழியலன்; அன்பினன்` என நீ 
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்;
நல்லை காண்இனி - காதல் அம் தோழிஇ -
......... .......... ....................................
.........................................................
தொல்இசை நிறீய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணினுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.
- அஞ்சியத்தை மகள் நாகையார்.
அகநானூறு - 352 ஆம் பாடலில் 7 முதல் 17 ஆம் வரிகள்.
( தலைவன் நல்லவன் எனக்கூறித் தலைவியைத் தலைவனோடு இணைத்துவைத்த தோழி, திருமணத்துக்குப் பின் இல்லறம் நிகழ்த்தும் தலைவியைப் பார்த்துவரச் செல்கிறாள். அவளிடம் தலைவியின் கூற்று)
பொருள் : குன்ற நாடன், உயர்குடியில் பிறந்தவன்; தன்னுடன் பழகியோரைப் பிரியாதவன்; கெடுமொழி பேசாதவன்; அன்பு நிறைந்தவன் என்றெல்லாம் அவன் சிறப்புக்களைக் கூறி அவனை என்னுடன் இணைத்து வைத்தாய், அன்புத் தோழியே நீ மிகவும் நல்லவள்.
மிகச் சிறந்த தொல் இசைப் பாடகன் இனிய இசைத்தமிழ் நூலின் முறை மீறாமல் இசைத்த பண்ணைவிடவும் அவன் புதிதாகப் புனைந்த பாடல் திறத்தை விடவும் என் தலைவன் இ்ப்போது எனக்கு மணநாளினை விடப் பெரிதும் இனியனாக விளங்குகின்றான்.
படம் 1 - ராஜா ரவிவர்மாவின் ஓவியம் ` ராதையைக் கண்ணனுக்கு அறிமுகப்படுத்துதல்` Raja Ravi Verma`s painting ` RADHA INTRODUCED TO KANNAN.
படம்- 2 - ராஜாரவிவர்மாவின் `இனிய நினைவுகள்` ஓவியம்
Raja Ravi Varma`s `SWEET REMEMBRANCES`
எமக்கும் எம் மனைவி
வதுவைநாளினும் இனியள் தாமே.

சங்க இலக்கியத் துளிகள் - 1 Glimpses of Sangam Poetry - 1

சங்க இலக்கியத் துளிகள் - 1 Glimpses of Sangam Poetry - 1

கோயில் மலர்களினும் நன்றாம் கானம்; பிடிமிடை களிற்றின் தோன்றும் குன்றம்
                                                          ------******.------------
வாள்வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணியவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர்வீஅம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
கண்டிசின் வாழியோ - குறுமகள்! - நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை, களிற்றின் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே!
- பாலை பாடிய பெருங்கடுங்கோ
அகநானூறு பாடல் எண் 99.
தலைவியைத் தமர் அறியாமல் உடன்போக்கில் அழைத்துச் செல்லும் தலைவன் தலைவிக்குச் சுட்டிக் காட்டும் காட்சிகளைக் கூறும் இப்பாடலின் சுருக்கம் :
அழகிய பெண்ணே, நீ, வாழ்வாயாக!
முள்முருங்கையின் சிவப்பு மலர்களோடு, கோங்கின் மஞ்சள் மலர்களும் காட்டுமல்லியின் வெள்ளைப் பூக்களும், பாதிரி உதிர்த்த மலர்களும் வெ்ண்கடம்பின் பூக்களும் சிதறிப் பரந்து கிடக்கும் கானம், தெய்வம் வழிபடப்படுகின்ற கோயிலில் மணக்கும் பூக்களைவிட நன்றாக உள்ளது; விரும்பத்தக்கதாகவும் இருப்பதைக் காண்பாயாக;
குறுமகளே, உன் தந்தையின் போர்க்களத்தில் பாய்ந்து, பாய்ந்து, தந்தங்கள் சிதைந்த களிறு பெண்யானைகள் சூழ நிற்பது போல் தோன்றுகின்ற குன்றமும் உள்ளதே! அதையும் நீ காண்பாயாக!
மலர்களைச் சிறப்பித்து, இக்கவிதை கூறும் உவம உவமேயங்கள் புகைப்படங்களில் குறிப்புகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இப்பாடலின் சிறப்பு அதன் உளவியல் கூறுதான்!
காதலி குடும்பத்தை விட்டுப் பிரிந்து காதலனுடன் வந்துவிடுகிறாள். அவளது பதற்றத்தைத் தணிக்கும் வகையில் காட்சிகள் மிக அருமையாகச் சுட்டப்படுவது சிறப்பானது.
காட்டுமலர்கள் பற்பல வண்ணங்களில் சிதறிக்கிடப்பது இயற்கை; காதலன் அவற்றிலிருந்து வதங்கிய சிவப்பு, மஞ்சள், வெண்மை எனப் பதற்றத்தைத் தணிப்பதும் உற்சாகமூட்டுவதான வண்ண மலர்களைத் தேர்ந்து சுட்டிக்காட்டுகிறான். அதனுடன் கோயிலையும் தெய்வத்தையும் கூறுவதுடன் கோயில் மலர்களின் மணத்தைவிடவும் காடு சிறந்திருப்பதைக் கூறும்போது அல்லல்படும் மனம் அமைதி கொள்வதும் எண்ணங்களும் நினைவுகளும் வேறுபுறமாகத் திரும்புவதும் இயல்பு.
அடுத்து குன்றம் யானைகளைப் போல் தோன்றுவதாகக் கூறுவதோடு, அதிலும் காதலியின் தந்தையின் பெருமை வெளிப்படும் விதமாக அவரது போர்யானை, பிடிகள் சூழ இருப்பதுபோல என விதந்து கூறும் போது, பெண்ணுக்கு அவளது தந்தை மதித்துப் போற்றப்படுதலைக் கேட்பதாகிறது. அவளது துயரம் மறைந்து மகிழ்ச்சி அரும்புவது திண்ணம்.
உவமைகளிலும் உளவியல் கூறுகள் நிறைந்துள்ளன. பெண்ணின் மதர்த்த எழிலும் அவள் மாட்சிமை மிக்க அணிகளை அணிந்திருப்பதும் அவளது மார்புகளை கோங்கு மலருக்கு ஒப்பிடுவதும் எந்தப் பெண்ணுக்கு மகிழ்வினைத் தராது போய்விடும்.
குன்றுகள் வெள்ளை யானைகளைப் போல் தோற்றமளிப்பதாக எர்னஸ்ட் ஹெமிங்வேயின் Hills like White Elephants என்ற புகழ்பெற்ற கதையிலும் குறிப்பிடப்படுகிறது. அது மட்டுமல்ல; அவ்வாறு குறிப்பிடுவது மகிழ்ச்சிக்கான முனைப்பு என்றும் சுட்டப்படுகிறது.
LikeShow more reactions
Comment

Saturday, 5 November 2016

நினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் - 2

நினைவைவிட்டு நீங்காத கதைமாந்தர் – 2

நகரத்தின் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அது ருஷ்யாவின் மிக முக்கியமான துறைமுக நகரம். உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கடலோடிகள் நடமாடும் நகரம். 1800களின் பிற்பகுதியில், 1900களின் தொடக்கத்தில் அங்கே காம்ப்ரினூஸ் என்ற பெயரில் ஒரு பீர் அருந்தகம். அப்படி ஒரு அருந்தகம் இருப்பது வெளியிலிருந்து அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கடற்கரை செல்லும் ஒரு சந்தில் தரைத்தளத்துக்கும் கீழ் அமைந்திருக்கிறது. கடலோடிகள் மற்றும் நகரவாசிகள் எல்லோருக்குமே மிகவும் பிடித்தமான அந்த பீர் அருந்தகம், பீர் அரசன் (Gambrinus, the King of Beer) அதாவது பீர் வடிப்பவர்களின் புரவலன் என ஐரோப்பிய நாடுகளில் கருதப்பட்ட காம்ப்ரினூஸ் பெயரைக் கொண்டாடும் விதமாக அவன் பெயர் சூட்டப்பட்டிருந்தது. பீர்க்குவளையோடு அவனது ஓவியமொன்றும் அருந்தக வாயிலில் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கூடவே வேறு பல ஓவியங்களும் இருந்தன. இருநூறு பேருக்குக் குறையாமல் அமர்ந்து பீர் அருந்த வசதியான அங்கே சில நேரங்களில் கூட்டம் அதிகமாகி பீர்க்குவளைகளைத் தலைக்கு மேலாக மட்டுமே கைமாற்றக்கூடிய நிலைகூட ஏற்படுமாம்.
அந்த அருந்தகத்தில் எல்லோர் கவனத்தையும் கவர்ந்து, அனைவரின் அன்பினையும் கொள்ளை கொண்டவன் சாஷ்கா என்ற வயலின் கலைஞன். பிறப்பில் யூதனான அவன் ஒரு அநாதை. 40, 45 வயதிருக்கக் கூடிய அவன் தினமும் மாலை 6.00 மணி அளவில் அருந்தகத்துக்கு வந்து அவனது முதல் குவளை பீரை அருந்திவிட்டானென்றால், பிறகு அருந்தகத்திற்குள் நுழைகிற வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் வணக்கம் செலுத்தி, அவர்கள் கேட்கும் பாடல்களை வயலினில் இசைத்து, இசைத்து, வாடிக்கையாளர்களின் அன்பளிப்பு பீர்க்குவளைகள் அனைத்தையும் அருந்தி முடித்து வீடு செல்லும்போது அதிகாலை 1.00 மணி ஆகிவிடும். அவனது வயலின்  யூதர்களின் துயரத்துடன் அழும்போது, அது உலகத்தைப் போல அவ்வளவு பழமையான துயரமாக இருக்குமாம். அவன் அணி வகுப்புப் பாடல்களை இசைக்கும்போது மொத்த அருந்தகமும் எழுந்துநின்று போருக்குப் புறப்படத் தயாராகுமாம். அது போல அவனது ஆப்பிரிக்க நீக்ரோ பாடல்களுக்கு அருந்தகம் முழுவதும் எழுந்து நடனமாடுமாம். பிரித்தானிய, பாரசீகக் கடலோடிகள், மீனவர்கள், ருஷ்ய நாடோடிகள், விவசாயிகளுக்கு அந்த நகர பிஷப், ஆணையாளர் போன்றோர்களின் பெயர்கள் தெரியுமோ தெரியாதோ சாஷ்காவைத் தெரியுமாம். அவன் யூதன் என்ற போதிலும் அனைவரும் அவனை நேசித்தார்கள். வாடிக்கையாளர்கள் அளிக்கும் அன்பளிப்புகளை அவர்களே மீண்டும் வந்து கடனாகப் பெற்றுச் செல்வார்கள். அவன் அக்கடன்களைத் திருப்பிக்கேட்பதும் இல்லை.
எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தபோது ஜப்பானுடன் போர் தொடங்கியிருக்கிறது. நகர அதிகாரி அவனையும் போர்ப்படையில் சேர்த்து உத்திரவிடுகிறார். படைக்குச் சேர்க்காமல் விலக்களிக்கவேண்டிய அளவுக்கு வயதானவன் என்ற போதிலும் யூதன் என்ற காரணத்திற்காகவே அதிகார வர்க்கத்தின் ஆணவத்தால் போர்முனைக்கு அனுப்பப்படுகிறான். ஜப்பானிய போர்க்கைதியாகி நாகசாகிக்கு அனுப்பப்படுகிறான். ஆண்டுகள் இரண்டு கடந்துவிட்டன. ஒரு கட்டத்தில் காம்ப்ரினூஸ் அவனை மறந்துகூட விட்டிருந்தது.
போர் முடிந்து திரும்பி ஒரு குறிப்பிட்ட நாளில் அவன் மீண்டு வந்து, வயலின் இசைக்க, காம்ப்ரினூஸ் மீண்டும் களைகட்டுகிறது. இரண்டு ஆண்டுகள் கடக்கும் நிலையில் யூதர்களுக்கு எதிரான கலகம் ஒன்று தூண்டிவிடப்படுகிறது. அதில் சாஷ்கா காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறான். மீண்டும் பழைய நிலைபோல காம்ப்ரினூஸ் அவனை மறக்கும் நேரத்தில் ஒரு மாலையில் அருந்தக வாயிலில் தாடியும் மீசையுமாக சாஷ்கா அருவருப்பாகத் தோன்றுகிறான். அவனது இடது முழங்கை திருகி உடலோடு சேர்த்து அழுந்தியிருக்க விரல்களோ அவனது மோவாயைத் தொட்டு விரைத்து நின்றன.
வாடிக்கையாளன் ஒருவன் எல்லோருக்கும் பிரபலமான பாட்டு ஒன்றை இசைக்குமாறு கேட்கிறான். பியானோக்கலைஞன்  பியானோவை மீட்டியபடி சாஷ்காவைத் திரும்பிப் பார்க்கிறான். சாஷ்கா வலது கையால் சட்டைப்பைக்குள்ளிருந்து மவுத் ஆர்கன் ஒன்றை எடுத்து வாசிக்கிறான். பீர் வாசனை, வாடிக்கையாளர்களின் பேச்சொலி, மூச்சு முட்டும் புகை மூட்டத்தையும் மீறி அவனது இசையில் அந்த அருந்தகம் உருகிக் கரைகிறது.
”ஒரு மனிதனை வேண்டுமானால் உங்களால் முடமாக்க முடியலாம். ஆனால் கலையால் அவன் அதை வெற்றிகொள்வான் என்பது போன்ற வாசகத்துடன் கதை முடியும்.   
வாழ்க்கை நம்மை எப்படி வேண்டுமானாலும் துவைத்தெடுக்கட்டும்; ஆனாலும் மீண்டெழுவோமென்ற துணிச்சல் தேவைப்படும்போது நான் அலெக்சாந்தர் குப்ரினின் சாஷ்காவைத்தான் துணைக்கழைத்துக்கொள்கிறேன்.

அலெக்சாந்தர் குப்ரினின் செம்மணி வளையல் : குறுநாவலும் சிறுகதைகளும் என்ற ராதுகா பதிப்பக நூலில் `காம்ப்ரினூஸ்` சிறுகதையின் முக்கிய கதை மாந்தன் சாஷ்கா.

அலெக்சாந்தர் குப்ரின்


காம்ப்ரினூஸ் - பீர் அரசன் சிலை
 

நினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் - 1

நினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் – 1

ருஷ்யப் படையில் டிரக் ஓட்டுநரான கதைசொல்லியும்  போர்க்கைதியாக மாட்டிக்கொண்ட ருஷ்யப் படைவீரர் அணி ஒன்றினை ஜெர்மானியத் துப்பாக்கிப் படையினர் ஆடுமாடுகளைப் போல் அடித்துத் தங்கள் நாட்டுக்கு ஓட்டிச்செல்கின்றனர். நடக்க முடியாமல் விழுந்தாலோ, தப்பி ஓட முயன்றாலோ உடனேயே சுட்டுக் கொல்கின்றனர். மழை வேறு கொட்டுகிறது. கைதிகள் அனைவரும் தொப்பலாக நனைந்துவிடுகிறார்கள். இரவாகிறது. வழியில் ஒரு சிற்றூர் எதிர்ப்படுகிறது. குண்டுகள் விழுந்து கோபுரம் தகர்ந்த மாதா கோயில் ஒன்றில் கைதிகளை அடைத்துக் கதவை வெளிப்புறமாகத் தாளிட்டுக் காவல் காக்கிறார்கள். இருட்டுக்குள் அகப்பட்ட கிடை ஆடுகளாகக் கைதிகள் நடுங்கும் குளிரில் விரிப்பு ஏதுமில்லாத கல் தளத்தில் கைதிகள் படுத்த நிலையிலும் சிலர் உட்கார்ந்த நிலையிலுமாக உழன்றுகொண்டிருக்கிறார்கள்.
நள்ளிரவில் கதைசொல்லியின் கையைத் தொட்டு, ”காயம் பட்டிருக்கிறதா, தோழா?” எனக் கேட்கிறான், ஒருவன். எதற்காகக் கேட்கிறாய்?” என எதிர்க் கேள்வி கேட்கிறான் கதைசொல்லி.
“நான் ஒரு மருத்துவன். ஏதாவது ஒரு வகையில் உனக்கு உதவக்கூடும்.”
“இடது தோள் வீங்கிப்போய் விண்விண் என்கிறது; வலி உயிர் போகிறது.”
“மேல்சட்டை, உள் சட்டை இரண்டையும் கழற்று.” என்கிறான் மருத்துவன்.
மெல்லிய விரல்களால் கதைசொல்லியின் தோளைத் தடவிப்பார்க்கத் தொடங்குகிறான், மருத்துவன். கதைசொல்லிக்கு வலி உயிர்போகுமளவுக்கு அதிகமாகிறது. “ ஏய், நீயெல்லாம் ஒரு டாக்டராடா, மாட்டு வைத்தியனாகத் தான் இருப்பாய், வலிக்கிற தோளைப்போட்டு இந்த அழுத்து, அழுத்துகிறாயே, பாவி” எனக் கடுகடுக்கிறான். தோள்ப்பட்டையில் நெருடிக்கொண்டேயிருந்த மருத்துவன், “ பல்லைக் கடித்துக்கொள், ஒரு டாக்டரிடம் இப்படியா பேசுவாய்? கொஞ்சம் பொறுத்துக்கொள், இப்போது இன்னும் அதிகமாக வலிக்கும் பார்,” என்று பேச்சுக்கொடுத்துக்கொண்டே கையைச் சுண்டி இழுக்கிறான். கதைசொல்லியின் கண்களில் பொறி பறந்தது; ஒரு கணம் நினைவு மயங்கித் தெளிந்ததும், ”பாசிஸ்ட் தேவடியா மகனே, கணுக்கணுவாய் வலிக்கிற கையைப் போய் இப்படி வெட்டி இழுக்கிறாயே” எனச் சீறிவிழுகிறான், கதைசொல்லி.
மருத்துவன் களுக்கென்று சிரிப்பது கதைசொல்லிக்குக் கேட்கிறது.
“நான் இடது கையை வெட்டி இழுக்கும்போது, உன் வலக்கையால் என் கன்னத்தில் அறைந்து விடுவாயோ என்றுதான் நினைத்தேன், பரவாயில்லை, நீ ஒரு சாதுதான். உன் கை முறியவில்லை, தோள் மூட்டு பிசகிக் கழன்றிருந்தது, இப்போது சரிசெய்துவிட்டேன், இப்போது வலி குறைந்திருக்குமே,” என்கிறான்.
கதைசொல்லி நன்றிகூற, மருத்துவன் எதுவும் பேசாமல்,  நகர்ந்து செல்கிறான்.
“தோழர்கள் யாராவது காயம் பட்டிருக்கிறீர்களா? நான் ஒரு மருத்துவன், நான் என்னாலான உதவியைச் செய்யமுடியும் “ என ஒவ்வொருவரிடமாகச் சென்று மெல்லக் கேட்பது கதைசொல்லியின் காதுகளில் விழுகிறது.
மருத்துவரென்றால் இவரல்லவோ மருத்துவர்! போர்க்கைதியாகச் சிறைப்பட்டிருந்தபோதும் அந்த மையிருட்டில் பெரும்பணியாற்றிக் கொண்டிருந்த அந்த மருத்துவத் தோழன் கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக என் நினைவில் வந்து அவ்வப்போது நலம் விசாரித்துச் செல்கிறான்.
இந்த டாக்டர், நோபெல் விருதாளர் மிகயீல் ஷோலகவின் `அவன் விதி’ என்ற குறுநாவலில் ஒரு மீச்சிறு துணைப் பாத்திரம்.







மிகயீல் ஷோலகவ் நினைவுச்சின்னம்



மிகயீல் ஷோலகவ்