பொன்னும்
மணியும் போலும், யாழ நின்
நன்னர்
மேனியும் நாறு இருங் கதுப்பும்;
போதும்
பணையும் போலும், யாழ நின்
மாதர்
உண்கணும் வனப்பின் தோளும்;
இவை
காண்தோறும் அகம் மலிந்து, யானும்
அறம்
நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை,
பொலந்தொடிப்
புதல்வனும் பொய்தல் கற்றனன்;
வினையும்
வேறுபுலத்து இலெனே; நினையின்,
யாதனின்
பிரிகோ? – மடந்தை! –
காதல்தானும்
கடலினும் பெரிதே!
-
பாடியவர்
பெயர் தெரியவில்லை
-
நற்றிணை
– 166 ஆம் பாடல், பாலை
அருஞ்சொற்பொருள்
: -
கதுப்பு
– கூந்தல், போது – குவளை மலர், பணை – மூங்கில், மாதர் – காதல், பொய்தல் – விளையாடுதல்,
அறம் நிலைபெற்றோர் – அறநெறி தவறாமல் வாழ்ந்து அதன் பயனை இயல்பாகத் துய்க்கும் சால்புடையோர்.
அதன்தலை – அதற்கும் மேலாக.
விளக்க
உரை : - உன்னுடைய நன்மேனி பொன் போன்று ஒளிர்கிறது; உனது நறுமணம் மிக்க அடர்கூந்தலோ
மணிநிறத்தில் மினுங்குகிறது. . உன்னுடைய காதல் நிறைந்த கண்களோ குவளை மலர்கள் போன்று
உயிர்ப்புடன் விளங்கித் தோன்றி, ஈர்க்கின்றன. உன் அழகிய தோள்கள் இளம் மூங்கில் போன்று
பளபளத்துத் தொட்டுணரத் தூண்டுகின்றன. உன்னைக் காணுந்தோறும் அகம் மிக மகிழ்வதோடு, அறம்
தவறாது வாழ்ந்து அதன் பயன் நுகர்ந்தோர் போல, நிறைவினை உணர்கின்றேன். இத்தனைக்கும் மேலாகப்
பொன்னணி அணிந்த நம் புதல்வனோ விளையாடக் கற்றுக்கொண்டான். உங்கள் இருவரையும் கண்டு மகிழ்வதல்லால்
வேறு செயல் அற்றவனாகின்றேன். நினைத்துப் பார்த்தால், உங்களைவிட்டுப் பிரிதலென்பது இயலுகின்ற
ஒன்றாகுமோ? பெண்ணே, உன் மேல் கொண்ட காதல் தானும் கடலினைவிடப் பெரிதே.
மிகமிக
எளிய சொற்களால் புனையப்பட்டுள்ள இக்கவிதை உணர்த்துகின்ற, இல்லற வாழ்வின் உன்னதப் பரவசம்
காட்டும் அன்புநிலையானது, திணை, கூற்று, இலக்கண விளக்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு,
கவிதை ரசனையில் உன்னி மகிழ்வதற்குரியதாக உள்ளது. .