நிலவின் மகள்கள் THE DAUGHTERS OF THE MOON இத்தாலிய மொழி : இடாலோ கால்வினோ Italo Calvino ஆங்கிலம் : மார்ட்டின் மெக்லாஃப்லின் Martin McLaughlin. / தமிழில் / ச.ஆறுமுகம்
பாதுகாப்புக் கவசமாக வெற்றுக் காற்று மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதில், தனக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டதான உணர்வில் கவன்றுகொண்டிருந்த நிலவுக்கு, விண்கற்களின் தொடர்ச்சியான வீழ்பொழிவுத் தாக்குதலுக்கும் சூரியக் கதிர்களின் எரித்தரிக்கும் கொடுமைக்கும் தொடக்க காலத்திலிருந்தே எப்போதும் ஆட்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றியது. கோர்னெல் பல்கலைக்கழகத்தின் தாமஸ் கோல்டு கூறுவதன்படி, விண்கல் துகள்கள் தொடர்ச்சியாகப் படிந்துராய்வதில் நிலவின் மேற்பரப்பிலுள்ள பாறைகள் பொடிப்பொடியாகி மாவாகிவிட்டன. சிக்காகோ பல்கலைக்கழக ஜெரார்டு குய்ப்பரின் ஆய்வுப்படி, நிலவின் கற்குழம்பிலிருந்து வெளியான வாயுக்களே, அந்தத் துணைக்கோளுக்கு படிகக்கல்லில் வெளிப்படுவது போன்றதொரு நுண்துளைகளுடன் கூடிய ஒரு பிசுபிசுப்பினை, ஒரு ஒளியினை அளித்திருக்கலாம்.
நிலவு, கிழடு தட்டிக் குண்டும் குழியுமாகப் பொள்ளல் விழுந்து முற்றிலும் தளர்ந்துள்ளதை ஆஃப்வஃப்க் ஒப்புக்கொள்கிறார். அது, வானம் முழுக்க நிர்வாணமாக உருண்டு, உருண்டு, தசை முழுவதும் கரம்பப்பட்டுவிட்ட ஒரு எலும்புத்துண்டாக இற்றுப்போயுள்ளது. இப்படியான நிகழ்வு இப்போது தான் முதன்முதலாக நடக்கிறதென்பதில்லை. இதைவிடவும் வயதாகி, உருக்குலைந்த பல நிலவுகள் என் நினைவுக்கு வருகின்றன. `டன்` கணக்கில் நிலவுகளை நான் பார்த்திருக்கிறேன்; அவை பிறந்துகொண்டிருப்பதையும் வானத்தில் குறுக்கு மறுக்காக ஓடித்திரிந்து மரித்துப் போவதையும், எரிநட்சத்திரங்களின் வேகப்பொழிவில் துளைகளாகிப்போன ஒரு நிலவையும், இன்னொன்று, அதனுடைய சொந்த எரிவாயுக்களாலேயே வெடித்துச் சிதறியதையும், இன்னுமொன்றில் கோமேதக நிற வியர்வைத் துளிகள் உருவாகிச் சொட்ட, அவை உடனடியாக ஆவியாவதையும், பின்னர் அந்த நிலவு பச்சை நிற மேகங்களால் சூழப்பட்டு முழுவதுமாக மறைக்கப்பட்டுக் காய்ந்து போன கடற்பஞ்சாகச் சுருங்குவதையும் கண்டிருக்கிறேன்.
ஒரு நிலவு மரணிக்கும் போது பூமிக்கோளில் நிகழும் மாற்றங்களை விவரிப்பது எளிதானதல்ல; என் நினைவுக்கெட்டிய வகையில் கடைசியாகப் பார்த்த ஒரு நிகழ்வினைக் கொண்டு நான் உங்களுக்கு விளக்க முயல்கிறேன். மிக நீண்ட பரிணாம வளர்ச்சிக் காலத்தின் தொடர்ச்சியாக பூமிக்கோள் இப்போது நாமிருக்கிற இந்த நிலைக்குக் கூடவோ குறையவோ வந்திருந்தது; அதையே, காலணிகள் தேய்ந்து உயிர்விடுவதைவிடவும் அதிவேகமாகக் கார்கள் தேய்ந்து போகும் ஒரு காலத்துக்கு பூமி வந்துசேர்ந்திருந்ததென்றும் கூறலாம். மனித உழைப்பில் உற்பத்தியாகிற, வாங்கவும் விற்கவுமான பண்டங்கள் மற்றும் ஒளிமிக்க வண்ணங்களால் கண்டங்களை மறைத்துநிற்கும் நகரங்களைப் போன்ற ஒரு நிலையேதான் அப்போதுமிருந்தது. கண்டங்களின் வடிவங்கள் பல்வேறாக, எந்த அளவிலிருந்தபோதும் அந்த நகரங்கள், அநேகமாக தற்போது நமது நகரங்கள் இருக்கின்ற அதே இடங்களில் தான் உருவாகி வளர்ந்திருந்தன. அங்கே ஒரு புதிய நியூயார்க், உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த நியூயார்க்கை ஒருவிதத்தில் ஒத்திருந்த, ஆனால் மிகவும் புதிதாக அல்லது, புத்தம் புதிய தயாரிப்புகள், புதிய பல் துலக்கிகளால் ஏற்பட்ட ஒரு கூடுதல் பளபளப்புடன் அந்தப் புதிய நியூயார்க், புத்தம் புது வரவான புதிய பல் துலக்கியின் நைலான் குறுமுடிகள் போன்று மினுங்கிக்கொண்டிருந்த வான்தொடும் கட்டிடக் காடுகள் அடர்ந்து தனித்துத் தெரியும். அதன் எப்போதுமான மன்ஹாட்டனுடனான ஒரு புதிய நியூயார்க்காக இருந்தது.
எந்தவொரு பொருளும் மிக இலேசான ஒரு கீறல் அல்லது நாட்பட்டது போல் தோன்றும் முதல் கணம், முதல் வடு அல்லது முதல் கறை கண்ணில்பட்ட உடனேயே தூக்கியெறிந்துவிட்டு, அதற்குப் பதிலாகப் புத்தம் புதியதும் முழுநிறைப் பொருத்தமானதுமான மாற்றுப்பொருள் ஒன்றினைக் கொணர்ந்துவிடுகிற இந்த உலகில், தவறான ஒற்றை இராகமாக, நிழல்படிவு ஒன்று இருந்ததென்றால் அது நிலவு மட்டுமே. அடிபட்டுத் தேய்ந்து, நரைத்து வெளிறி, அதன் கீழிருக்கும் பூமிக்கு மேலும் மேலும் அந்நியமாகி, நாட்பட்டுக் காலாவதியான ஒரு நிலையில், நீடிக்கும் ஒரு தலைவலியாக அது வானம் முழுக்க நிர்வாணமாக அலைந்து திரிந்தது.
`முழு நிலவு`, `அரைநிலவு`, `பிறைநிலவு`, `நிலவுக்கீற்று` போன்ற புராதனத் தொடர்களெல்லாம் உண்மையில் வெறும் அலங்காரப் பேச்சின் அணிகளாகத் தொடர்கின்றனவே தவிர வேறொன்றுமில்லை. முழுவதுமாகவே வெடிப்புகளும் குண்டு குழிகளுமாகவும் எந்நேரமும் இடிந்து இடிபாடுகளாக நம் தலையில் கொட்டப் போவதாகத் தோன்றும் ஒன்றினை எப்படி `முழுமை` யானதென நாம் அழைக்க இயலும்? அதுவே மரணித்துக்கொண்டிருக்கும் ஒரு நிலவாக இருப்பதானால் சொல்லவேண்டிய அவசியம் எழவேயில்லை! அது மேற்புறம் கொறிக்கப்பட்ட பாலாடைக்கட்டியாக உருமாறியிருந்ததோடு, நாம் எதிர்பார்க்காத ஒரு தருணத்திலேயே, எப்போதும் மறைந்துவிடுவதாக இருந்தது. ஒவ்வொரு அமாவாசையின் போதும், அது எப்போதுதான் மீண்டும் தோன்றுமோவென ஆர்வத்தோடு வியந்தேயிருந்திருக்கிறோம் (பிறகென்ன, அது திடுதிப்பென மறைந்துவிடுமென்றா நம்பினோம்?) என்பதோடு அது மீண்டும் தோன்றியபோது, பற்களை இழந்த சீப்பிற்கும் கேவலமாக, படுகேவலமாகத் தெரியவே, அதிர்ச்சியில் நாம் கண்களை வேறுபக்கம் திருப்பினோம்.
அது ஒரு சோர்வூட்டும் காட்சி. இரவும் பகலுமாக எந்நேரமும் திறந்திருக்கும் பெரிய, பெரிய பல்பொருள் அங்காடிகளுக்கு உள்ளும் வெளியிலுமாக எடை மிகுந்த பொதிகளைச் சுமக்கும் கைகளுடன், நாம் மக்கள் திரள்களினூடாகச் செல்கையில், வான்தொடும் கட்டிடங்களுக்கும் மேலாக, உயரத்தில், இன்னும் உயரத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கின்ற நியான் விளம்பரங்களில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புத்தம் புதிய வரவுகளை, நமக்கென்றே நிரந்தரமாகத் தெரிவிக்கப்பட்டவற்றை, நாம் ஊடுருவித் துருவித் துருவிக் கூராய்ந்துகொண்டிருக்கும்போதே, அந்தக் கண்ணைப் பறிக்கும் விளக்கொளிகளின் மத்தியிலேயே திடீரென அது வெளிறி, மெதுமெதுவாக நோய்ப்பட்டுத் தேய்வதை நம் கண்ணாலேயே காண்பதோடு, நம் தலைக்குள் திணிக்கப்பட்ட அந்த ஒவ்வொரு புதிய பொருளையும் தலையைவிட்டும் வெளிக்கொணர இயலாதிருப்பதோடு, அப்போதுதான் நாம் வாங்கியிருந்த ஒவ்வொரு பொருளும் அப்படிக்கப்படியே பழையனவாகி, பயனற்றதாகி வெளிறிப் போக, ஓடித்திரிந்து தேடித்தேடிப் பொருட்களை வாங்கிய, ஒருவித ஆசைவெறிகொண்டு பணியாற்றிய ஆர்வத்தை இழந்துநிற்போம் – அது, தொழில்துறைக்கோ, வர்த்தகத்துறைக்கோ எந்தப் பாதிப்பினையும் ஏற்படுத்தாத ஒரு இழப்பு.
இதை வைத்துக்கொண்டு `என்னடா` செய்வதென நாம் திகைக்கத் தொடங்குகிறோமே அதுபோன்ற ஒரு பிரச்னையாகத்தான் அந்த எதிர்மறைப்பயன் விளைக்கின்ற துணைக்கோளும் இருந்தது. அதனால் எந்தப் பயனுமில்லை; பயனற்றுப் பாழாகிப்போன ஒன்றாகத்தான் அது இருந்தது. அதன் எடை குறையவே, அதன் சுற்றுவட்டம் பூமியை நோக்கிச் சாயத் தொடங்க, மற்றெல்லாவற்றையும் விட மோசமான ஒரு அபாயமாகியது. அப்படியே, பூமியின் பக்கம் வரவர, அது, தன் வேகத்தைக் குறைத்தது; அதன் போக்கினை எங்களால் கணிக்கமுடியாமலிருந்தது. மாதங்களின் ஒழுங்குவரிசை காட்டும் நாட்காட்டி கூட வெறும் மரபாகிப் போனது; நிலவு, இடிந்து விழுந்துவிடுவது போன்று நடுக்கத்திற்காளாகியது,
ஒளிகுன்றிய இந்த நிலவுநாட்களின் இரவுகளில், சிறிது மேலதிகமான, உறுதிகுலைந்த மனப்போக்குடையவர்கள் விசித்திரமாகச் செயல்படத் தொடங்கினர். தூக்கத்தில் நடக்கும் நோயர் ஒருவர் நிலவை நோக்கி நீட்டிய கரங்களுடன் வான்தொடும் கட்டிட விளிம்பின் சுற்றுச்சுவர் முனைவரைக்கும் வந்துவிடுவது, அல்லது, பரபரப்பான டைம் சதுக்கத்தின் மத்தியில் கிழஓநாய் ஊளையிடத் தொடங்குவது, அல்லது நெருப்புப்பித்தர் ஒருவர் துறைமுகக் கிடங்குகளுக்குத் தீவைத்துவிட்டது போன்ற நிகழ்வுகள் எப்போதுமிருந்தன. ஒரு கட்டத்தில் இவையெல்லாம் மிகமிகச் சாதாரணமாகி, வழக்கமாக அமானுடச் செய்திகளுக்காக அலையும் கூட்டத்தை ஈர்க்கவியலாமற் போயிருந்தனதாம். ஆனாலும், மத்திய பூங்காவிலுள்ள இருக்கைப் பலகை ஒன்றின் மீது முழுக்க முழுக்க நிர்வாணமாக, ஒரு பெண் அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது, நான் நின்றேயாக வேண்டியிருந்தது.
அவளைப் பார்ப்பதற்கு முன்பாகவேகூட, புரியாத, மிகப் புதிரான ஏதோ ஒன்று நிகழவிருப்பதுபோன்ற ஒரு உணர்வு எனக்குள் இருக்கத்தான் செய்தது. என் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய வட்டினைக் கைக்கொண்டு, நான் மத்திய பூங்காவுக்குள் ஓட்டி வந்தபோது, ஒளிர்வாயுவிளக்கு ஒன்று முழுவதுமாக ஒளிரத் தொடங்கும் முன் விட்டுவிட்டுத் தொடர்ச்சியாக மின்னி வெளியிடும் ஒளிச்சிதறல் போன்ற ஒரு சிமிட்டொளியில் குளிப்பதுபோல் நான் உணர்ந்தேன். என்னைச் சுற்றிலுமிருந்த காட்சித்தோற்றம் நிலவுப்பள்ளத்துக்குள் மூழ்கிப்போன ஒரு தோட்டக் காட்சியினைப் போன்றிருந்தது. நிலவுக் கீற்று ஒன்றைப் பிரதிபலித்துக்கொண்டிருந்த நீர்க்குட்டை ஒன்றின் அருகே அந்த நிர்வாணப் பெண் அமர்ந்திருந்தாள். நான் தடைக்கட்டையை மிதித்தேன். ஒரு கணம் நான் அவளைத் தெரிந்துகொண்டதாகவே நினைத்தேன். காரை விட்டிறங்கி அவளை நோக்கி ஓடினேன்; ஆனாலும் மறுகணம் உறைந்துபோய் நின்றேன். அவள் யாரென்று எனக்குத் தெரியவில்லை; அவளுக்கு உடனடியாக, அவசரமாக ஏதாவது செய்தாகவேண்டுமென்று மட்டும் உணர்ந்தேன்.
இருக்கைப்பலகையைச் சுற்றிலும் புற்களின் மீது அனைத்தும் சிதறிக்கிடந்தன; அவளது ஆடைகள், இங்கொன்றும் அங்கொன்றுமாக அரணக் காலணி மற்றும் காலுறைகள், அவளுடைய காதணி வளையங்கள், கழுத்தணிமாலை மற்றும் முன்கை அணிவளைகள், கைச்சிறு பணப்பை, பொருட்கள் அனைத்தையும் ஒரு பரந்த வட்டத்தின் வில்வடிவத்தில் சிதறவிட்டுக் கிடந்த ஒரு மளிகைப்பை, எண்ணிலடங்காத சிறு பொட்டலங்கள் மற்றும் பொருட்கள், அநேகமாக அந்த ஜீவன் ஆர்வமிக்க ஒரு தாராளமான வாங்கிக் குவித்தல் முடித்த கணத்தில் அந்தக்கணத்திலேயே திரும்ப வருமாறு அழைக்கப்பட, இந்தப் பூமியோடு அவளைத் தொடர்புறுத்துகின்ற அனைத்துப் பொருட்களையும் அடையாளங்களையும் உதறித் தொலைத்தேயாகவேண்டுமென்ற நிர்ப்பந்தப் புரிதலில், அனைத்தையும் உதறியெறிந்துவிட்டு, நிலவின் உலகத்துக்குள் நுழைவதற்காகக் காத்திருப்பது போலிருந்தது.
“என்னவாயிற்று” நான் திக்கித் திணறிக்கேட்டேன். ” நான் ஏதேனும் உதவி செய்யலாமா?”
“உதவியா?” மேல்நோக்கி வெறித்த கண்களுடன் அவள் உச்சரித்தாள். “யாராலும் உதவமுடியாது. யாராலும் எதுவும் செய்யமுடியாது.” அவள், அவளைப்பற்றியல்லாமல் நிலவினைப் பற்றியே பேசுவது நன்றாகவே புரிந்தது.
நிலவு எங்கள் தலைக்கு மேலாக, ஒரு குவி வடிவில் பாழடைந்த ஒரு கூரையாக துளைகள் நிறைந்த ஒரு பாலாடைக்கட்டித் துண்டினைப் போல இருந்தது. அந்தக்கணத்தில் உயிர்க்காட்சிப் பூங்காவிலிருந்த உயிரினங்கள் ஊளையிடத்தொடங்கின.
“இதுதான் முடிவுக்காலமா?” இயந்திரத்தனமாகத் தான் கேட்டுவிட்டேன். ஆனால், நான் என்ன சொன்னேனென்று எனக்கே புரியவில்லை.
“இதுதான் ஆரம்பம்,” அல்லது அதுமாதிரியான ஏதோ ஒன்றை அவள் பதிலாகச் சொன்னாள். (அவள் எப்போதுமே அநேகமாக உதடுகளைத் திறக்காமலேதான் பேசினாள்.)
“நீ என்ன சொல்கிறாய்? முடிவின் தொடக்கமா அல்லது வேறு ஏதோ ஒன்றின் தொடக்கமா?”
அவள் எழுந்து புல்லின் மேலாக நடந்தாள். அவளது செம்பு நிறத் தலைமுடி தோள்களுக்கும் கீழாக வழிந்து தொங்கியது. தீமைக்கு எளிதில் ஆட்படும் அபாயத்தில் இருந்த அவளுக்கு ஏதோ ஒரு சிறிய அளவிலாவது பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அவள் கீழே விழுந்துவிடுவதாக இருந்தால் உடன் பிடித்துக்கொள்ளவும், அவளைத் துன்புறுத்துவதாக ஏதேனும் நெருங்கிவந்தால் அதனைத் துரத்துவதாகவும் என் கைகளை அவளைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவச வளையம் போல் அசைக்கத் தொடங்கினேன். ஆனால், அவள் மேனியை மறந்தும் தொட்டுவிட அல்லது உரசிவிட என் கைகள் துணியவில்லை என்பதோடு, அவள் மேனியிலிருந்து சில சென்டிமீட்டர்கள் தொலைவிலேயே அவை எப்போதும் இயங்கின. அப்படியே அவளைப் பின்தொடர்ந்த நான் பூந்தோட்டப் பாத்திகளைக் கடந்ததும் தான், அவளுடைய அசைவுகளும் என்னுடையதைப் போலவே, எளிதில் உடைந்துவிடப்போகின்ற ஏதோ ஒன்றை, தரையில் விழுந்து துண்டுதுண்டுகளாகச் சிதறப்போகும் ஒன்றினை, அவள் தொட்டுவிடக்கூடாத அதனைக் கையசைவுகள் மற்றும் அடையாளங்கள் மூலமாக மட்டுமே அது தெம்புடன் அமர்கிற ஒரு இடத்துக்கு நகர்த்திக் கொண்டுசெல்வது அவசியமாக இருந்த அதனைப் பாதுகாக்க முயற்சிப்பதை, நான் உணர்ந்தேன்: அது நிலவுதான்.
நிலவு தொலைந்துபோனதாகத் தோன்றியது. அதன் சுற்றுக்கோள வழியினை விட்டகன்ற அதற்கு எங்கு செல்வதென்று தெரிந்திருக்கவில்லை; காய்ந்த ஒரு சருகினைப் போலத் தன்னை எடுத்துச்செல்ல அது அனுமதித்தது. சிலநேரங்களில் அது பூமியை நோக்கி அசைந்துவருவதாகத் தோன்றியது, வேறுசில நேரங்களில் திருகுச் சுருள் வடிவ இயக்கத்தில் திருகப்படுவது போலும் இன்னும் வேறான நேரங்களில் வெறுமனே மிதப்பது போலும் தோன்றியது. அதன் இருப்பிட உயரமும் குறைந்துவந்ததென்பது நிச்சயம் தான்: ஒரு கணம் பிளாசா ஹோட்டல் மீது இடிந்துவிழுந்துவிடுவது போல் தோன்றினாலும், அதற்குப் பதிலாக, அது இரண்டு வான்தொடு கட்டிடங்களுக்கிடையிலான ஒரு இடைவெளிப்பகுதிக்குள் நுழைந்து ஹட்சன் வளைகுடாத் திசையில் மறைந்துபோனது. சிறிது நேரத்திலேயே மீண்டும் தோன்றிய அது, நகரத்திற்கு எதிர்ப்புறமாக ஒரு பெரிய மேகத்தின் பின்னாலிருந்து தலைகாட்டி மீண்டும் வெளிப்பட்ட அது வெண்ணிற ஒளியில் ஹார்லேம் மற்றும் கிழக்கு ஆற்றில் மூழ்கிக் குளித்துக்கொண்டே, காற்றின் அலை ஒன்றில் அகப்பட்டுக்கொண்டது போல, அது பிரான்க்ஸ் பகுதி நோக்கி உருண்டது.
“அதோ, அங்கே!” என்று நான் கத்தினேன். ”அங்கேயே – அது அப்படியே நின்றுவிட்டது!”
“அது நிற்கவே முடியாதே!” என அந்தப் பெண் வியந்துகொண்டதோடு, புல்லின் மீது வெற்றுக்கால்களால் நிர்வாணமாக ஓடவும் செய்தாள்.
“ஏய், நீ எங்கே போகிறாய்? இப்படியெல்லாம் நீ ஓடக்கூடாது! நில்! ஏய், உன்னிடம்தான் சொல்கிறேன்! உன் பெயர் என்ன?”
டயானா அல்லது டியானோ போன்ற ஒரு பெயரைக் கத்திச் சொன்னாள்; அதுவும் கூட ஏதாவதொரு வேண்டுதல் வாசகமாகவும் இருக்கலாம். அதோடு அவள் மறைந்துவிட்டாள். அவளைப் பின்தொடர்வதற்காகக் காருக்குள் குதித்த நான் மத்திய பூங்காவின் கார்ச்சாலைகளில் தேடத் தொடங்கினேன்.
எனது முகப்பு விளக்குகளின் ஒளித்தூண்கள் வேலிகள், மலைகள், நான்முனைக் கம்பத் தூபிகளிலெல்லாம் ஒளியேற்றின; ஆனால் அந்தப் பெண் டயானாவை எங்குமே காணவில்லை. அதிலும் அந்த நேரத்தில் நான் வெகுதூரம் கடந்துவிட்டிருந்தேன்: நான் அவளைக் கடந்து வந்திருப்பேனோ; வந்த வழியே திரும்பிச் சென்று பார்க்க அப்படியே வட்டமடித்துத் திரும்பினேன். என் பின்னாலிருந்து வந்த ஒரு குரல் சொன்னது, “இல்லை, இல்லை, அது அங்கே தான் இருக்கிறது, போய்க்கொண்டேயிரு!”
எனது கார் டிக்கியின் மேற்புறமாக, நிலவை நோக்கி நீட்டிய கரங்களுடன் நிர்வாணமாக அவள் அமர்ந்திருந்தாள்.
அவளை அப்படித் தெளிவான காட்சியாக, அவள் அமர்ந்திருந்த அந்த நிலையில் அவளையும் வைத்துக்கொண்டு நகர் முழுதும் நான் காரோட்ட முடியாதென்பதை அவளுக்கு விளக்கிச் சொல்வதற்காக, அவளை கீழே இறங்கச் சொல்லவேண்டுமென நான் விரும்பினாலும் கார்ச்சாலை முடிவில் தோன்றுவதும் மறைவதுமாக இருந்த அந்தத் தண்ணொளி வண்ணத்திலிருந்தும் பார்வையை ஒருபோதும் அகற்றத் தயாரில்லாமலிருந்த அவளைத் திசைதிருப்பும் துணிவு எனக்கு இல்லாமற்போனது. அதுவுமின்றி எந்தவொரு நிலையிலும் – அந்நியனென்றாலும்கூட – வழிப்போக்கன் யாரும் எனது கார் டிக்கியின் மேல் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்ணுருவினைக் கவனித்திருந்ததாகத் தெரியவில்லை.
மன்ஹாட்டனை முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கும் பாலங்களில் ஒன்றினை நாங்கள் கடந்தோம். இப்போது நாங்கள் பல்முனை நெடுஞ்சாலையில் இருமருங்கிலும் பலப் பல கார்கள் நெருக்கமாக அணிவகுக்கப் போய்க்கொண்டிருந்தோம்; நாங்கள் இருவரும் இருந்த காட்சி எங்களைச் சுற்றியிருந்த கார்களில் சந்தேகத்திற்கிடமின்றித் தோற்றுவிக்கும் சிரிப்பலைகள் மற்றும் குரூரப் பேச்சுக்கணைகளுக்குப் பயந்து நான் என் கண்களைச் சாலையில் மட்டுமே அப்படி இப்படி அசைக்காமல் நேராகச் செலுத்தியிருந்தேன். ஆனால், பெருடிக்கிக் கார் ஒன்று எங்களை முந்திச்சென்றபோது ஆச்சரியத்தில் நான் சாலையை விட்டுக் கீழேயே இறங்கிச் செல்லவிருந்தேன்: அதன் கூரை மீது காற்றில் பறக்கும் தலைமுடியுடன் அமர்ந்திருந்தது ஒரு நிர்வாணப் பெண். ஒரு கணம், என் காரிலிருந்த பயணிதான் ஓடும் காரிலிருந்து இன்னொரு காருக்குத் தாவிவிட்டாளோவென நினைத்துவிட்டேன்; ஆனால், டயானாவின் கால் மூட்டுகள் என் மூக்குக்கு நேரான சமநிலையில் அசைவின்றியிருந்ததைக் காண்பதற்கு என் தலையை மட்டும் இலேசாகச் சாய்த்துத் திருப்பவேண்டியிருந்தது. அவளது உடல் மட்டுமே என் கண்முன்பாக ஒளிவீசிக்கொண்டிருந்தது என்பதில்லை; அப்போது நான் எங்கெங்கு நோக்கினும் விதம் விதமாக நினைத்துப் பார்க்கவே இயலாத வித்தியாசமான சாய்வு மற்றும் அமர் நிலையில், அவர்களது இளஞ்சிவப்பு அல்லது கருநிற நிர்வாண மேனிப் பளபளப்புக்கு எதிர்நிலையில் பொன்னிற அல்லது இருள் நிறத் தலைமயிர்க் கற்றைகளுடன் பறக்கும் கார்களின் ரேடியேட்டர் மறைப்புகள், கதவுகள், முட்டுத் தாங்கிகள், சக்கர மூடுதளங்களில் பற்றிப்பிடித்துத் தொங்கிய நிர்வாணப் பெண்களைக் கண்டேன். ஒவ்வொரு காரிலும் இப்படியான புதிர் நிறைந்த பெண் பயணிகள் முற்சாய்ந்த நிலையில் அவரவர் காரோட்டிகளை நிலவைப் பின்தொடருமாறு அவசரப்படுத்திக்கொண்டிருந்தனர்.
அவர்கள் அனைவருமே அபாயத்திலிருந்த நிலவால் அழைப்பு அனுப்பப்பட்டவர்கள்தாம்; அதில் நான் உறுதியாகவே இருந்தேன். அப்படி எத்தனை பேர் இருந்தனர்? எந்த இடத்திற்கு மேலாக நிலவு நின்றிருப்பதாகத் தோன்றியதோ அந்த இடத்திற்கு நகரத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் வந்து சேருகின்ற கூட்டுச் சாலைகள் மற்றும் , குறுக்குச் சாலைகள் அனைத்திலும் நிலவுப் பெண்களைச் சுமந்திருந்த கார்கள் பெருவாரியாகச் சேர்ந்திருந்தன. நகரத்தின் விளிம்பில், ஓட்டை உடைசல் தானியங்கிக் களத்தின் முன்பாக நாங்கள் வந்து சேர்ந்திருந்ததைக் கண்டோம். சிறுசிறு பள்ளத்தாக்குகள், வரப்பு மேடுகள், குன்றுகள் மற்றும் முகடுகளுடன் விளங்கிய ஒரு பகுதியில் சாலை முடிந்துபோனது; ஆனால், அந்தச் சமநிலையற்ற மேற்பரப்பு நிலத்தின் கூறுபாடாகத் தோன்றியதல்ல; அதற்கு மாறாக, வீசியெறியப்பட்ட பொருட்களின் படிம அடுக்குகள் மற்றும் குவியல்களால் அப்படியாகியிருந்தது. நுகரும் நகரம் பயன்படுத்தி முடித்து, புதிய வரவுகளைக் கையாளும் மகிழ்வினை உடனடியாகக் கொண்டாடுவதற்காகவே வெளித்தள்ளிய ஒவ்வொரு பொருளும், இந்த, முன்னெப்போதும் யாருக்கும் சொந்தமாக இராத ஊரக நிலத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.
பற்பல ஆண்டுகளில் சேர்ந்துவிட்ட நொறுக்கியெறியப்பட்ட குளிர்பெட்டிக் குவியல்கள், லைஃப்மேகஸீன் வெளியிட்ட மஞ்சள் பக்கங்கள் மற்றும் எரிந்துபோன மின் குமிழ் விளக்குகள் இந்த மாபெரும் குப்பைக் கிடங்கினைச் சுற்றிலும் இரைந்துகிடந்தன. இந்தக் கூர்க் குவடுகளாகத் துருவேறிக்கிடந்த நிலப்பகுதியின் மீதுதான் நிலவு அப்போது ஒளிவீசிக்கொண்டிருந்ததோடு, நொறுங்கிய உலோகச் சிதறல்கள் பெரும் அலையொன்றில் அடித்துச் செல்லப்படுவதுபோல் ஊதிப்புடைத்து மேடாகின. சிதைந்த நிலவும், உலோகச் சிதைவுகளின் குவியல்களால் பற்றவைக்கப்பட்டு, பூமியின் முகடாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இப்பகுதியும் ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருந்தன. உலோகக் கழிவுத் துணுக்குகளின் குவியல் மலைகள் ஒரு சங்கிலித் தொடராக வட்ட வடிவில் இணைந்து ஒரு திறந்தவெளி அரங்கம்போல் உருவாகி அது எரிமலைப்பள்ளம் அல்லது நிலவிலுள்ள கடலினை மிகச் சரியாக ஒத்திருக்கின்ற வடிவத்தில் அமைந்திருந்தது. இந்த நிலப்பரப்பிற்கு நேர் மேலாகத்தான் அந்த நிலவு மிதந்துகொண்டிருந்ததோடு, அவை ஒரு கோளும் துணைக்கோளும் ஒன்றையொன்று பிரதிபலிக்கும் கண்ணாடிப் பிம்பங்கள் போல விளங்கித் தோன்றின.
எங்கள் கார் இயந்திரங்கள் அனைத்தும் தாமாகவே நின்றுவிட்டன. அவ்வவற்றின் சொந்தக் கல்லறைகளாகத் தோற்றமளித்த அவற்றை வேறெதுவும் அச்சுறுத்திவிடவில்லை. டயானா காரிலிருந்து இறங்கியதும் மற்ற அனைத்து டயானாக்களும் அவளைப் பின்தொடர்ந்து இறங்கினார்கள். ஆனால் அவர்கள் ஆற்றல் முழுவதும் வடிந்துவிட்டது போல் தோன்றியது; அந்த இரும்புத் துணுக்குக் கழிவுக் குவியல்கள் மத்தியில் சென்றதும் திடீரென அவர்கள் தங்கள் சொந்த நிர்வாணம் பற்றிய உணர்வினால் தாக்குண்டது போல, நிச்சயமற்ற மென்காலடிகளெடுத்து நகர்ந்தனர்; அவர்களில் பலரும் குளிரில் நடுங்குவதுபோல் குன்றி, மார்புகளை மறைத்துக்கொள்ளக் கைகளைப் பெருக்கல் குறிகளாக மடித்துக்கொண்டனர். அப்படியே, அங்கு அவர்கள் சிதறிப் பரந்து அந்தப் பயனற்ற உலோகத் துணுக்கு மலைகள் மீது ஏறியிறங்கி, திறந்தவெளி அரங்கத்தினுள் நுழைந்ததும் அதன் நடுவில் அவர்களாகவே ஒரு மிகப் பெரிய வட்டமாக உருவாக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் எல்லோரும் கைகளை உயர்த்தி நின்றனர்.
நிலவு, அவர்களின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்தது போல் ஒரு குலுங்குக் குலுங்கி, அங்கிருந்தும் மேலேறிச் செல்வதற்காக, அது தன் ஆற்றல் முழுவதையும் திரட்டிக்கொள்வதுபோல் ஒரு கணம் தோன்றியது. பெண்கள்வட்டம் நீட்டிய கைகளுடன், அவர்களின் முகங்களும் மார்புகளும் நிலவை நோக்கியிருக்குமாறு திரும்பியது. அப்படிச் செய்யுமாறு அந்த நிலவா சொன்னது? வானத்தில் அவர்களின் உதவி நிலவுக்குத் தேவைப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்குள் நுழைந்து துருவுவதற்கு எனக்குப் போதிய நேரம் இல்லை. அந்தக் கணத்தில் தான் பாரந்தூக்கிக் கிரேன் ஒன்று அங்கே நுழைந்தது.
வானத்தின் அழகினைக் கெடுப்பதோடு ஒரு சுமையாகவும் ஆகிப்போன அதனை அப்புறப்படுத்தித் தூய்மையாக்கியே தீருவதென முடிவெடுத்த அதிகாரிகளால் அந்த கிரேன் வடிவமைத்து உருவாக்கப்பட்டிருந்தது. புல்டோசர் வகை நிலச்சமன் பொறியான அதிலிருந்து நண்டின் கொடுக்கு மாதிரியான ஒன்று மேலெழுந்தது. கம்பளிப்பூச்சி நடையில் ஊர்ந்து வந்த அது குள்ளமாகப் பெருத்த ஒரு எடைக்கோளமாக, நண்டினைப் போலவே இருந்தது. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கெனத் தேர்ந்தெடுத்துத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அது வந்து சேர்ந்தபோது இன்னும் அதிகக் குள்ளமாகிவிட்டது போல அதன் மொத்த எடையையும் பூமியில் பரப்பி அமர்ந்தது போலத் தோற்றமளித்தது. இழுவைத் திருகு உருளை வேகமாக இயங்க, கிரேன் அதனுடைய கரத்தை வானத்தை நோக்கி உயர்த்தியது; அவ்வளவு நீண்ட ஒரு கரம் கொண்ட அவ்வளவு பெரிய ஒரு கிரேனை உருவாக்கிவிடமுடியுமென யாருமே நம்பியதில்லை. நீண்ட கரத்தின் வாய் திறந்து அதன் பற்களெல்லாம் வெளிப்பட, நண்டு ஒன்றின் கொடுக்கினைப் போலத் தோற்றமளித்த அது, இப்போது சுறாவின் வாய் போலத் தோன்றியது. நிலவு அங்கே, அப்படியேதான் இருந்தது; அது தப்பிக்க விரும்பியது போலச் சிறிது அசைந்ததாகத் தெரிந்தது. ஆனால், கிரேனின் கரநுனிவாய் காந்த ஆற்றல் கொண்டதாக இருந்தது. நாங்கள் பார்க்கும்போதே, எங்கள் கண்முன்பாகவே, நிலவு இருந்த இடம் வெற்றிடமாகி, அது கிரேனின் பிளந்த வாய்க்குள் விழ, அது `க்ராக்` என்ற ஒரு வறண்ட ஒலியுடன் மூடிக்கொண்டது. முட்டைக்கேக் போல, நிலவு பொடிப் பொடியாகியிருக்குமென்று ஒரு கணம் தோன்றினாலும், அது வாய்க்குள் பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமாக அப்படியேதான் இருந்தது. அது செவ்வகவடிவுக்கு அமுங்கிப் போய், கிரேனின் வாயில் கனத்த ஒரு சுருட்டுப் போலத் தோன்றியது. சாம்பல் நிறப் பொழிவு ஒன்று பெருமழை போல் கீழிறங்கியது.
இப்போது கிரேன், நிலவினை அதன் சுற்றுக்கோளத்திலிருந்தும் வெளியே இழுக்க முயற்சித்தது. இழுவை உருளை பின்பக்கமாகச் சுற்றத் தொடங்கியது; அந்தக் கட்டத்தில் இழுவைச்சுற்றுக்கு மேலதிக ஆற்றலும் பெருமுயற்சியும் தேவைப்பட்டது. இத்தனை நடவடிக்கைகளுக்கும் நடுவே டயானாவும் அவளது தோழிகளும் அவர்களது பெருவட்டத்தின் வலிமையினாலேயே எதிரியின் ஊடுருவலை வென்றுவிடமுடியுமென்ற நம்பிக்கையில் தூக்கிய கைகளுடன் அமைதியாக அசைவற்று நின்றிருந்தனர். துகள், துகளாகச் சிதைந்து சிதறிக்கொண்டிருந்த நிலவின் சாம்பல் அவர்களின் முகங்களின் மீதும் மார்புகள் மீதும் மழையாகப் பொழிந்தபின்னர் தான் அவர்கள் அங்கிருந்து கலைந்துசெல்லத் தொடங்கினர். டயானாவிடமிருந்து மிகப் பெரும் அவலத்துடன் அழுகைச் சப்தமொன்று வெடித்தது.
அந்தக் கட்டத்தில், சிறைப்பட்ட நிலவு அதனிடம் எஞ்சியிருந்த மிகக் குறைந்த எடையினையும் இழந்தது; அது கறுப்பான வடிவமற்ற ஒரு பாறையாக உருமாறியது. கிரேனின் கரவாய்ப் பற்கள் மட்டும் அதனை இறுகப் பற்றியிருக்காவிட்டால் அது பூமியில் விழுந்து சிதறியிருக்கும். அதன் நேர் கீழே பூமியில் கிரேன் அதன் எடை முழுவதையும் இறக்கிவைப்பதற்கான பரப்பில் ஒரு பெரிய உலோக வலை ஒன்றினை உருவாக்கிய கைவினைத் தொழிலாளர்கள் தரையில் நீள ஆணிகள் அடித்து அதில் பொருத்தி விரித்துக்கொண்டிருந்தனர்.
தரைக்கு வந்து சேர்ந்தபோது, அம்மைத் தழும்புகள் நிறைந்த மணற் பாறையாக, மங்கலாக, நிறமேயற்று, இதுவா அதன் பளபளக்கும் பிரதிபலிப்பால் வானத்துக்கு ஒளியேற்றிய நிலவெனச் சிறிதும் நினைத்துப்பார்ப்பதற்குக்கூட நம்ப இயலாதபடி இருந்தது. கிரேனின் தாடைகள் திறந்தன; சுமை முழுவதும் திடீரென இறக்கப்பட்டதும் புல்டோசர் அதிர்ந்து அதன் கம்பளிப்பூச்சி நகர்வினை மீண்டுமொரு முறை நிகழ்த்திக்காட்டியது. கைவினைத் தொழிலாளர்கள் வலையுடன் தயார்நிலையில் நின்றிருந்தனர்; நிலவினை வலைக்குள் முழுவதுமாகச் சிறைப்பிடித்துச் சுற்றிக் கட்டினர்.
நிலவு இரும்புவலைக்குள் தத்தளித்தது; பெரும் பனிப்பாறைச் சரிவுகளை ஏற்படுத்துகின்ற பூமி அதிர்ச்சி போன்ற ஒரு நடுக்கத்தில் குப்பை மலைகளிலிருந்து வெற்று டப்பாக்கள் சரிந்து, உருண்டோடின. பின்னர் எல்லாமே அமைதியானது. நிலவில்லாத வானம் பெரியபெரிய விளக்குகளிலிருந்தும் வெடித்துச் சிதறிய ஒளிமழையில் நனைந்தது. ஆனால், இருள் ஏற்கெனவேயே மங்கி, வெளுக்கத் தொடங்கியிருந்தது.
அந்தக் கார்களின் கல்லறை மேற்கொண்டும் ஒரு இடிபாட்டு உடைசலைச் சேர்த்துவைத்திருந்ததை, அந்த விடிகாலை கண்டது. அக்கல்லறை மத்தியில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலவு, அங்கே வீசியெறியப்பட்டிருந்த மற்ற பொருட்களிலிருந்தும் அநேகமாக வேறுபடுத்திக் காணவியலாததாகத்தான் கிடந்தது. அதே நிறம், புதிதான ஒன்றாக எப்போதாவது இருந்திருக்குமென்று கூட நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கான அதே பாழடைந்த தோற்றம். மெல்லிய முணுமுணுப்பு ஒன்று அந்த புவிக்குப்பைப் பெரும் பள்ளம் முழுவதுமாகக் கேட்டது. உயிரினங்களின் பெருங்கூட்டமொன்று மெல்லக் கண்விழிப்பதை விடிகாலை ஒளி வெளிக்காட்டியது. குடல் உருவப்பட்ட டிரக்குகளின் மிச்சம் மீதி உடல்கள், நெளிந்து உருக்குலைந்த சக்கரங்கள், நொறுங்கிய உலோகத்துணுக்குகள் மத்தியிலிருந்து பரட்டைத்தலை உயிரினங்கள் முன்னேறி வந்துகொண்டிருந்தன.
வீசியெறியப்பட்ட பொருட்கள் நடுவே வீசியெறியப்பட்ட மக்களின் சமுதாயம் ஒன்று வாழ்கிறது – ஆம், ஒதுக்கப்பட்ட மக்கள், அல்லது தாங்களாகவே முழுவிருப்பத்துடன் ஒதுங்கிக்கொண்ட மக்கள், உடனுக்குடனேயே காலாவதியாகிப் போகுமாறு விதிக்கப்பட்டிருந்த புதிய பொருட்களை வாங்கவும் விற்பதற்குமாக நகரம் முழுக்க அலைந்து திரிந்து அலுத்துப்போன மக்கள், வீசியெறியப்பட்ட பொருட்களே உலகின் உண்மையான செல்வமென முடிவெடுத்துவிட்ட மக்கள் சமுதாயம். அந்தத் திறந்த வெளி அரங்கு முழுவதுமாக, இந்த குச்சிகுச்சியாக நீண்டு மெலிந்த உருவங்கள், தாடி மறைத்த முகங்கள் அல்லது பரட்டைத் தலைகளுடன் நிலவைச் சுற்றி வட்டமாக அமர்ந்தும் அல்லது நின்றுமிருந்தனர். அது ஒரு கந்தலாடை அல்லது வினோதமாக உடையணிந்த ஒரு கும்பல் என்பதோடு அதன் மத்தியில் தான் எனது நிர்வாண டயானாவும் இதர அனைத்துப் பெண்களும் அந்த இரவு முழுவதும் இருந்துள்ளனர். அவர்கள் எழுந்துவந்து, இரும்பு வலையின் கம்பிகளை, அவற்றைப் பிணைத்துத் தரையில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளிலிருந்தும் தளர்த்தி அவிழ்க்கத் தொடங்கினர்.
உடனேயே, கட்டுகள் அவிழ்த்துவிடப்பட்ட உளவு விமானம் போல், அந்தப் பெண்களின் தலைக்கு மேலாக, அந்த நாடோடிப் பெருங்கூட்டத்துக்கு மேலாக, டயானாவும் அவளது தோழிகளும் சிலநேரங்களில் இழுத்தும் சிலநேரங்களில் தளர்வாக விட்டும் பின்னலவிழ்த்துக்கொண்டிருந்த இரும்பு வலையோடு உயர்ந்தெழுந்து, பின் அப்படியே மிதந்து நின்ற நிலவு, அந்தப் பெண்கள் கம்பியும் கையுமாக இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியபோது, அதுவும் அவர்களைப் பின்தொடர்ந்தது.
நிலவு நகர்ந்ததுமே, குப்பைப் பள்ளத்தாக்குகளிலிருந்து ஒருவித அலை எழும்பத் தொடங்கியது. அக்கார்டியன் இசைக்கருவிகளைப் போல நசுங்கிக்கிடந்த பழைய கார்களின் பிண உடல்கள் அணிவகுக்கத் தொடங்கி, அவைகளாகவே ஒரு ஊர்வலமாகச் செல்ல கிரீக் சப்தத்துடன் தயாராகிக்கொண்டன; பொளிந்து நசுங்கிய டப்பாக்களின் நீரோடை ஒன்று மேல் ஒன்றாக உருண்டு இடி இடிப்பது போன்ற சப்தத்தை ஏற்படுத்தின; அவை இழுத்துச் சென்றனவா அல்லது வேறு ஏதேனுமொன்றால் இழுத்துச் செல்லப்பட்டனவா என்று மட்டும் யாராலும் சொல்லமுடியவில்லை. அந்தக் குவியல்களில் சேர்ந்திருந்த அத்தனைக் குப்பைகளோடு அப்படி மூலையில் தூக்கி வீசப்பட்டதில் வெறுத்துப் போயிருந்த மனிதர்கள் அனைவருமாக நிலவைத் தொடர்ந்து சாலையில் நகரத்தொடங்கியதோடு நகரத்தின் செல்வமிக்க குடியிருப்புப் பகுதிகளை நோக்கிப் படையெடுத்தனர்.
அந்தக் காலை நேரத்தில், நகரம் `நுகர்வோருக்கு நன்றி தெரிவிக்கும் நாள்` கொண்டாடிக்கொண்டிருந்தது. விற்பனை வணிகர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் எவ்விதச் சோர்வுமின்றி நிறைவேற்றிக்கொடுத்த `உற்பத்தி`க் கடவுளுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்த விழா விருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் வருகிறது. நகரத்தின் மிகப்பெரிய பல்பொருள் விற்பனை அங்காடி ஒன்று ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் அணிவகுப்பு ஒன்றினை ஒழுங்கமைத்துவந்தது; இசைக்குழு ஒன்றின் பின் அணிவகுத்துவரும் ஜிகினா உடையணிந்த அழகுப் பெண்கள் கண்ணைப்பறிக்கும் பட்டொளி வண்ணப் பொம்மை ஒன்றின் வடிவத்தில் மாபெரும் பலூன் ஒன்றின் கயிறுகளைப் பிடித்திருக்க, அந்த பலூன் அணிவகுப்பு முக்கியத் தெருக்களின் வழியாகச் செல்வது வழக்கமாக இருந்தது. அந்த நாளில், அந்த ஊர்வலம் ஐந்தாவது நிழற்சாலை வழியாக வந்துகொண்டிருந்தது; இசைக்குழுவின் தலைமைப் பெண் கையிலிருந்த வண்ணக்கோலைத் தலைக்கு மேலாகச் சுழற்றி வர, பெரும் டிரம்கள், முரசுகள் அதிர, படைத்துறைச் சீருடை, தொப்பிகள், இறகுகள், வண்ணக் குஞ்சங்கள் மற்றும் தோள்பட்டை அணிகலங்கள் அணிந்து இருசக்கர ஊர்திகளில் பெருமிதம் தொனிக்க வந்த பெண்களின் கைகளிலிருந்த இழுப்புவார்களுக்கு இசைந்து, இசைந்து, `திருப்தியடைந்த வாடிக்கையாள`ரைக் குறிக்கும் பெரும் பலூன் மனிதர் வான்தொடு கட்டிடங்களுக்கிடைய பணிவுடன் மிதந்து வந்துகொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மற்றொரு அணிவகுப்பு மன்ஹாட்டனைக் கடந்துகொண்டிருந்தது. அடிபட்ட கார்கள் மற்றும் டிரக்குகளின் எலும்புக்கூடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் பின் தொடர, மெல்ல மெல்லப் பெரிதாகிக்கொண்டிருந்த மக்கள் கூட்டம் ஒன்று அமைதியாக நடந்து வர, நிர்வாணப் பெண்களால் முன்னிழுக்கப்பட்ட வெளிறிய சாம்பல் நிற நிலவும் வான்தொடு கட்டிடங்களிடையே நீந்தி, முன்னேறிக்கொண்டிருந்தது. நிலவினைப் பின்தொடர்ந்த மக்கள் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், அனைத்து நிற மக்களும் குடும்பத்துடன் அத்தனை வயதுக் குழந்தைகளுடனும் அதுவும் ஹார்லேமின் கறுப்பு நிறத்தவர் மற்றும் போர்ட்டோரீக்கன் பகுதிகளில் ஊர்வலம் அடியெடுத்துவைத்த போது மக்கள் காலையிலிருந்தே, கூட்டம் கூட்டமாக அணிசேர்ந்தனர்.
நிலவு ஊர்வலம் நகரின் மையப் பகுதியில் வளைந்து வளைந்து பின் பிராட்வேயை நோக்கி இறங்கி, ஐந்தாவது நிழற்சாலையில் பெரும் பலூனை இழுத்துவந்துகொண்டிருந்த ஊர்வலத்தோடு அமைதியாக இணைந்து கலந்துவிடுவதற்காகவே விரைந்துவந்தது.
மாடிசான் சதுக்கத்தில் இரு ஊர்வலங்களும் ஒன்றையொன்று சந்தித்தன; அல்லது துல்லியமாகச் சொல்வதானால் அவையிரண்டும் ஒரே ஊர்வலமாகின. திருப்தியடைந்த வாடிக்கையாளர், நிலவின் சொரசொரப்பான மேற்பரப்பில் மோதியதாலேயோ என்னவோ, காற்றிழந்து வெறும் ரப்பர் கந்தையானார். இரு சக்கர ஊர்திகளின் மீது இப்போது டயானாக்கள் அமர்ந்து பல்வண்ண இழுப்பு வார்களால் நிலவை இழுத்துப் பிடித்திருந்தனர். அல்லது, இருசக்கர ஊர்திகளில் வந்த பெண்களும் அவர்களின் வண்ணத் தொப்பி, சீருடைகளைக் களைந்தெறிந்துவிட்டு நிர்வாணமாகியிருக்கவேண்டும்; அப்போது நிர்வாணப் பெண்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருந்தது; அதனால் அது அப்படித்தான் நிகழ்ந்திருக்கவேண்டும். இருசக்கர ஊர்திகளில் நிகழ்ந்ததைப் போன்ற ஒரு மாற்றம் ஊர்வலத்திலிருந்த கார்களிலும் நிகழ்ந்திருக்கவேண்டும். ஊர்வலத்தில் வந்த கார்களில் எது புதிது, எது பழையதென யாராலும் கூறிவிடமுடியாது. நெளிந்த சக்கரங்கள், துருவேறிய சக்கர மறைப்புகள் எல்லாமே கண்ணாடி போல் பளபளத்து எனாமல் போல் எண்ணெய்வண்ணம் பூசப்பட்ட கார்களும் கலந்திருந்தன.
அத்துடன், ஊர்வலத்தின் தொடர்ச்சியாக, கடைச்சாளரங்களில் சிலந்திவலைகள் படிந்தன; வான்தொடு கட்டிடங்களின் மின்னேற்றிகள் கிரீச்சிட்டு முனகத் தொடங்கின; விளம்பரப் பலகைகள் மஞ்சளாக மாறி வெளுத்தன; குளிர்பெட்டிகளின் முட்டைத்தாங்கிகளில், அவை என்னவோ குஞ்சுபொரிக்கும் இயந்திரங்கள் போல கோழிக்குஞ்சுகள் நிறைந்தன; வானிலை மாற்றத்தில் சூறாவளிப் புயல்கள் சுழன்றடிப்பதாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
வெற்று டப்பாக்களின் முழக்க முரசொலியில், அந்த ஊர்வலம் புரூக்லின் பாலத்தை வந்தடைந்தது. டயானா அவள் கையிலிருந்த தலைமை வண்ணக்கோலினை உயர்த்தினாள்; அவள் தோழிகள் வண்ண நாடாக்களை வீசி அசைத்தனர். நிலவு அதன் கடைசி மோதலை பாலத்தின் வளைந்த இரும்பு வேலைப்பாட்டு கிராதித் தடுப்பில் நிகழ்த்தி கடல் நோக்கித் திரும்பி, ஒரு செங்கலைப் போல வேகமாக விழுந்து ஆயிரக்கணக்கான நீர்க்குமிழிகளை மேற்பரப்பில் எழுப்பி, தண்ணீருக்குள் மூழ்கியது.
இதற்கிடையில், இழுப்பு வார்களை விட்டுவிடுவதற்குப் பதிலாக, அவற்றை இறுகப் பற்றியிருந்த பெண்களை, நிலவு உயரத் தூக்கி, பாலத்தின் கைப்பிடிச் சுவரிலிருந்தும் அவர்களை இழுத்து, பாலத்திற்கப்பால் பறக்கச்செய்தது; அவர்கள் பாய்ச்சல் வீரர்களைப் போல காற்றில் வில்லாக வளைந்து, தண்ணீரில் விழுந்து மறைந்துபோயினர்.
புரூக்லின் பாலத்தின் மீதாகச் சிலரும் அணைக்கரை மடைவாய்களின் மீது சிலருமாக நின்றிருந்த நாங்கள், அவர்களைத் தொடர்ந்து நீரில் குதிக்கத் துடிக்கும் உந்துதல் மற்றும் அவர்கள் மீண்டும் தண்ணீரிலிருந்து முன்போலவே வெளித்தோன்றுவார்களென்ற நிச்சய நம்பிக்கைக்கிடையில் அகப்பட்டு, ஆச்சரியத்தில் அதிர்ந்து அப்படியே வெறித்து நின்றோம்.
நாங்கள் நீண்டநேரம் காத்திருக்குமாறு நேரவில்லை. வட்ட வடிவத்தில் விரிந்த அலைகளுடன் கடல் அதிர்வுறத் தொடங்கியது. அந்த வட்டத்தின் மையத்தில் ஒரு தீவு தோன்றி, அது, ஒரு மலையைப் போல, அரைக்கோளவடிவு போல, தண்ணீரில் மிதக்கும் ஒரு கோளம் போல வளர்ந்தது; அல்லது அப்போதுதான் தலைதூக்கியது போல; இல்லை, வானத்தில் ஒரு நிலவு முகிழ்ப்பது போல. ஒரு சில கணங்களுக்கு முன்பு கடலின் ஆழத்துக்குள் மூழ்கிய அந்த ஒன்றை எந்தவிதத்திலும் ஒத்தில்லாதிருந்தபோதும் அதை நான் ஒரு நிலவு என்கிறேன்; எப்படியிருந்தாலும், இந்தப் புதிய நிலவு வேறுபட்டிருப்பதிலும் ஒரு வேறுபட்ட வகையிலிருந்தது. கடலுக்குள்ளிருந்து வெளிப்பட்ட அது பச்சைப் பசேலென மினுங்கும் கடற்பாசி வாரி ஒன்றினை வழியவிட்டுக்கொண்டிருந்தது; அதன் மேனியில் ஊற்றெடுத்துப் பாயும் நீர்த் தாரை அதற்கு ஒரு மரகதத் தோற்றத்தை வழங்கியிருந்தது. நீராவி வெளிப்படும் காடு ஒன்று அதன் மீது மூடியிருந்தது; ஆனால், அந்தக் காடு தாவரங்களாலானதல்ல. இந்தப் படிவு மயிற் தோகைப் பீலிகளால் செய்யப்பட்டது போல வட்டக் கண்களும் மின்னும் வண்ணங்களும் கொண்டதாக இருந்தது.
அந்தக் கோளம் வேகமாக வானத்திலேறி மறைவதற்குள் எங்களால் கண்டுகொள்ளமுடிந்த அளவிலான நிலப்பரப்பு இதுதான்; மேற்கொண்டு நுண்விவரங்கள் அனைத்தும் அதன் புத்தம்புதிதான தன்மையும் தாவரச் செழிப்பும் இணைந்த பொதுவான மனப்பதிவிற்குள் கரைந்துவிட்டன. அப்போது அந்திக் கருக்கலாகிவிட்டிருந்தது; வண்ணங்களின் முரண்களெல்லாம் விரைந்து வரும் ஒரு மேகமூட்ட இருளுக்குள் மங்கிக்கொண்டிருந்தன. நிலவுப்புலங்களும் காடுகளும் அந்தப் பளபளக்கும் கோளத்தின் மேனியில் வெறுமனே எல்லாமே ஒன்றான ஒரு பொதுத் தோற்றமாக மட்டுமே தெரிந்தன. ஆனாலும் காற்று தாலாட்டும் கிளைகளில் சில மஞ்சங்கள் தொங்குவதை எங்களால் காணமுடிந்ததோடு எங்களை இங்கே அழைத்துவந்த பெண்கள் அவற்றில் அமர்ந்திருப்பதையும் நான் கண்டேன். நான் டயானாவைக் கண்டுகொண்டேன்; ஒருவழியாகக் கடைசியில், நிம்மதியாக, ஒரு இறகு விசிறியால் தனக்குத் தானே விசிறிக்கொண்டு, ஒரு வேளை, அது, என்னைப் புரிந்துகொண்டதைத் தெரிவிக்கும் அசைவாகவும் இருக்கலாம்.
“அதோ, அவர்கள் அங்கிருக்கிறார்கள்! அதோ, அவள்!’’ நான் கத்தினேன். நாங்கள் எல்லோரும் கத்தினோம்; அவர்களை மீண்டும் பார்க்க முடிந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி, அவர்களை முழுவதுமாக என்றென்றைக்கும் இழந்துவிட்டதான வலியில் ஏற்கெனவே மங்கத் தொடங்கிற்று; இருண்ட வானத்தில் எழுந்துகொண்டிருந்த நிலவு சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பைத் தானே ஏரிகள் மீதும் நிலப்பகுதி மீதும் காட்டிக்கொண்டிருந்தது!
‘’நாங்கள் ஒருவித வெறியால் பீடிக்கப்பட்டிருந்தோம்: நகரங்கள், சாலைகள் அவை தொடர்பான அனைத்துத் தடயங்களையும் புதைத்துவிட்டு பூமியை மீட்டுத்தந்திருந்த சாவன்னா புல்வெளிகள் மற்றும் காடுகளின் வழியாக, கண்டத்தின் குறுக்காக, நாங்கள் விரைந்தோடத் தொடங்கியிருந்தோம். அத்துடன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியிருப்பதையும் நாம் ஆசைப்படுவதை ஒரு போதும் நாம் பெறப்போவதில்லையென்றும் இளம் மம்மத்துகளாகிய நாங்கள் புரிந்துகொண்டபோது, பெரும் வெறியோடு எங்கள் பெரும் உடல்களின் மீது காடாக அடர்ந்திருந்த மயிர்க்கற்றைகளை உலுக்கிக்கொண்டு, வானத்தை நோக்கி எங்கள் தும்பிக்கைகளையும் நீண்டு மெலிந்த தந்தங்களையும் உயர்த்திப் பிளிறினோம்.”
(Translated, from the Italian, by Martin McLaughlin
மலைகள் இணைய இதழ் எண் 121 நாள் 2 05 2017 இல் வெளியானது.
newyorker.com.