Wednesday, 17 October 2018

எலும்பை முறிக்கும் வாழ்க்கையும் சிலரை மண்டியிட்டுத் தொழும்.(அபுனைவு)

எலும்பை முறிக்கும் வாழ்க்கையும் சிலரை மண்டியிட்டுத் தொழும்.
அப்பா வழிப் பாட்டி இறந்தபிறகுதான், அவன் எனக்கு அறிமுகமானான். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும்.
பதிவான வேலைக்கென எங்கள் வீட்டில் சிறிதான கூனல் முதுகுடன் கிழவர் ஒருவர் இருந்தார். அவரை நாய்க்கர் என்றுதான் எல்லோரும் அழைத்தார்கள். அவர் வேலை செய்யும்போதும் ஏதாவது புலம்பிக்கொண்டேதான் இருப்பார். அப்பாவுக்கும் அவருக்கும் தினசரி வாக்குவாதந்தான். அவருக்கு சொந்த புத்தி கிடையாது; சொல்புத்தியும் கேட்கமாட்டாரென்பார், அப்பா. மாலையில் கூலியைக் கொடுத்து, இனி மேல் வராதேயுமென்றுதான் அனுப்புவார்கள்; ஆனால் மறுநாள் காலையில் வந்து கன்னுக்குட்டியைக் குளிப்பாட்டிட்டு வரட்டுமா, இல்லை, பில் செத்தியாரட்டுமா எனக் கேட்பார். அப்படியே அன்றைய வேலை தொடங்கும்.
ஆனால் அவன் அப்படியில்லை; ஒரு வேலையைச் சொன்னால் அதை எப்படிச் செய்தால் நல்லது என்று யோசனையும் சொல்வான்; அவசர வேலையென்றால், மறுப்பு சொல்லாமல் உடனடியாக அந்த வேலையை அழகாகச் செய்துமுடிப்பான்.
நாய்க்கர் வராத நாளில் களத்துப் படப்பிலிருந்து வைக்கோல் பிடுங்கி, அதை இறுக்கமான ஒரே கட்டாகக்கட்டி, வீட்டுத் தொழுவுக்குச் சுமந்துவந்து போட்டால், ஒரு வாரத்துக்கு எல்லாமாடுகளுக்கும் போதுமானதாக இருக்கும்.
படப்பில், வைக்கோல் பிடுங்குவதற்கு ஒரு இலாகவம் இருக்கிறது. நாம் பிடுங்கினால் இரண்டு வைக்கோல்தான் வரும். அதுவும் நம் கையில் பிளேடு அறுப்பது போல் ஒரு வலி, வலிக்கும் பாருங்கள், உள்ளங்கையெல்லாம் பிய்த்துக்கொள்ளப்போவது போல் கன்றிச் சிவந்துவிடும்.
படப்பில், மாடு கொதைந்து பொந்தெடுத்தது போலில்லாமல், பிடுங்கிய இடம் ஒரே அளவாக, மெஷின் கொண்டு அறுத்தது போல, அதுவே ஒரு அழகாகத் தெரியுமாறு பிடுங்கவேண்டும். அதை `அறுப்பு வைத்துப் பிடுங்குவது` என்பார்கள்.
அப்படி அறுப்பு வைத்துப் பிடுங்கிய படப்பில் வேறு யாரும் களவாணிகள் கைவைத்தால் தெரிந்துவிடும்.
வைக்கோலைக் கட்டாகக் கட்டுவதிலும் நுட்பம் இருக்கிறது. படப்பிலிருந்து புரி விட்டுப் பாருங்களேன். மொத்த நீளத்துக்கும் ஒரே பருமனில், துண்டுவிழாமல் வைக்கோல் புரி திரிப்பதும் ஒரு கலைதான்.
பெரும் படப்பு வைக்கோலையும் லாரிகளில் ஏற்றிச்சென்று நகரத்தில் விற்பதற்கு வசதியாகச் சின்னச் சின்னத் தலையணை அளவில் கட்டுகளாகக் கட்டுவார்கள். அப்போது இரண்டு நபர்கள் புரி திரிப்பார்கள்.
பிடுங்கிக் குவித்த வைக்கோலின் அருகில் ஒருவர் உட்கார்ந்து சமஅளவில் புரி விட, இன்னொருவர் அதன் முனையை, ஒரு சிறு குச்சியில் சுற்றிக்கொண்டு அக்குச்சியைச் சுழற்றிக்கொண்டே நீட்டுக்கும் போவார். தேவையான நீளம் வந்ததும் புரியைப் பந்தாக உருட்டிக்கட்டி ஒரு பக்கமாக வைப்பர். எல்லாமே ஒரு அழகுதான். வேலைசெய்யும்போதுதான், அது எந்த வேலையாக இருந்தாலும் மனிதர்களின் அழகு மேம்பட்டுத் தெரிகிறது.
அவன் என் அப்பாவை மாமா என்றும் அம்மாவை அத்தை என்றுந்தான் அழைத்தான். அதனால் அவனை நான் அத்தான் என அழைக்கவேண்டுமென்று சொல்லிக்கொடுத்தபடி நான் அவனை அத்தான் என்று அழைத்தேன். அவன் என்னை வேய் மாப்பிள்ளை, வாரும் போவும் என மரியாதைச் சொற்களோடுதான் அழைத்தான். நேரில் பேசும்போது நானும் வேய், வாரும் போவும் என்பது தான் என்றாலும் தனிப்பட்ட முறையில் மற்றவர்களிடம் பேசும்போது அவன், இவன் தான்.
அவன் தினமும் கூப்பிட்ட வேலைக்குப் போவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான். தலைச்சுமையாக உரம் சுமந்து வயலில் சிதறுவது, ரைஸ்மில்லுக்கு நெல் கொண்டுவருவது, அரைத்தபின் அரிசி, தவிட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்வது, வியாபாரிகளின் நெல் மூட்டைகளை மாட்டுவண்டிகளில் ஏற்றுவது, கூட்டுறவுக் கிடங்கிலிருந்து உர மூட்டை எடுத்துச்செல்வது போன்ற தலைச்சுமை வேலைகளையே அவன் அதிகமும் செய்துவந்தான்.
படப்பு கூட்டுவது, சூடடி வேலைகள், வைக்கோல் புரி திரிப்பது, கட்டுக்கட்டுவது போன்ற வேலைகளுக்கு அவனைக் கூப்பிடவே எல்லோரும் விரும்புவார்கள். பதிந்த வேலை அவனுக்கு ஒத்துவரவில்லை.
வேலை இல்லாத நேரங்களில் எங்கள் வீட்டுப் படிப்புரையில் அமர்ந்து அப்பாவுடன் பேசிக்கொண்டிருப்பான். அவன் பேசுவதை நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம். அவன் நக்கல் பேச்சில், வக்கணை கொழிப்பது என்பார்களே அதில் வல்லவன். அவன் இருக்கும் இடத்தில் எப்போதுமே சிரிப்பும் கூத்தும் ஓங்கிக் கேட்கும். ஆனாலும், அவன் யாரையும் சீரழியப் பேசுவதில்லை. அவனுடைய வாழ்க்கைப் புரிதல் மற்றவர்களைவிடச் சற்று மேம்பட்டதென்றே சொல்வேன். பிறழ் உறவுகளை அவன் கொச்சைப்படுத்திக் கேவலமாகப் பேசுவதும் இல்லை. கிராமத்துப் பேச்சில் சகஜமாக அடிபடும் கெட்ட வார்த்தைகளை அவன் வாயிலிருந்து நான் கேட்டதேயில்லை. இது எல்லாமே சேர்ந்து அவன் மீது எனக்கு ஒரு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.
அவனுடைய உடல் வாகு நல்ல இறுங்கு மாதிரி; கறட்டுக்கட்டை என்பார்களே அது மாதிரியானது. பளு தூக்கும் போட்டியாளர்கள் போல மார்புகள் தூக்கி நிற்கும். நாங்கள், கல்லைக் கொண்டு அவன் மார்பில் குத்துவோம். அவன் சிரித்துக்கொண்டு நிற்பான். அவனுக்கு மட்டுமில்லை; அதைப்போன்ற திடகாத்திர உடம்புடன் எங்கள் ஊரில் மண்வெட்டி பிடித்து வேலைசெய்பவர்கள், கோடரி பிடித்து விறகு வெட்டுபவர்கள் ஒரு சிலரும் இருந்தனர்தாம். கடின உழைப்பில் மனித உடல்கள் அப்படியொரு வலுமிக்க திடத்தன்மை பெற்றுவிடுகின்றன. இப்போதெல்லாம் உழைக்கும் மக்களில் அதுபோன்ற உடலமைப்புகளைக் காண இயலவில்லை.
அவனுக்குப் பிறவியிலேயே மாறு கண், வலது கண்ணுக்குப் பார்வை இல்லை. சிறிது மூடியே இருக்கும். அதனாலேயே ஒருச்சாய்த்து, ஒருச்சாய்த்து அதுவே அவனது நடையுமாயிற்று. ஆனால் அதுவெல்லாம் அவனுக்கு ஒரு குறையாகவே இல்லை; அதனால் அவனது வேலைக்கோ வேறெந்த நடவடிக்குமோ எந்தப் பாதிப்பும் இல்லை.
பிள்ளையார் கோயில் கிணறு, படிக்கல் வீட்டுக் கிணறு, அவ்வையார் பிள்ளைத் தாத்தா வீட்டுக் கிணறு போன்றவற்றிலெல்லாம் வாளி அறுந்தோ அல்லது வேறு ஏதாவது பொருட்கள் விழுந்துவிட்டாலோ அவனைத்தான் கூப்பிடுவார்கள். அவன்தான் மூச்சடக்கி, மூழ்கி எடுத்துக்கொண்டு வருவான்.
அவன் வேட்டி எப்போதும் மடித்துக் கட்டிய நிலையில் அவிழ்ந்து விடுவது போல் இருக்கும்; ஆனால், அப்படியெல்லாம் அவிழ்ந்துவிடாது. உட்காரும்போது மட்டும் கீழிறங்கியிருக்கும்.
சில குறும்புக்காரர்கள் கிண்டலுக்காகவும், அவனை வெறுப்பேற்றுவதற்காகவும் ஏய், குருடா என்று கூடக் கூப்பிடுவதுண்டு. ஆனால் அதுபற்றியெல்லாம் அவன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படி அழைப்பதற்கு அவன் எந்தப் பதிலும் சொல்வதுமில்லை
பள்ளி விடுமுறை நாள் ஒன்றில் காலை ஒரு பத்து மணி இருக்கும்; அன்று அவனுக்கு வேலை இல்லைபோல; எங்கள் வீட்டுப் படிப்புரையில் அமர்ந்திருக்கும்போது, அப்பா, பேச்சுவாக்கில் ஆறுமுகத்துக்கு ஒரு மேசை வாங்கவேண்டும், வடசேரி போய் வாங்கி, பேட்டையில் வைத்துவிட்டால் சந்தை வண்டிக்காரர், வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிடுவாரென்றார். மறு பேச்சு எதுவும் சொல்லாமல், அவன், போகலாமா என்றான்.
அப்பா, நான், அவன் மூவரும் அடுத்த பேருந்திலேயே புறப்பட்டுப் போய், புறப்படுவதென்றால் என்ன, அரங்கிலிருந்து பணத்தை எடுத்து மடியில் கட்டி, கொடியில் தொங்கும் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு அப்பா கிளம்பிவிடுவார், நாகர்கோவிலுக்கெல்லாம் அப்பா சட்டை போடுவது இல்லை. நான் ஒரு சட்டையை எடுத்து மாட்ட வேண்டியது, அவன் தலையில் கட்டிய துண்டை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொள்வது, அவ்வளவுதான், ஒரு பத்து நிமிடத்தில் பேருந்து வந்ததும் அப்படியே போய் ஏற வேண்டியதுதான்.
வடசேரி சந்தை மேட்டில் இறங்கினோம். ராஜேஷ் தியேட்டர் இருக்கும் இடத்தில்தான் அந்த மரக்கடை இருந்ததாக எனக்கு நினைவு. நேராக அங்கே போய் விற்பனைக்கு வைத்திருந்த மேசைகளைப் பார்த்தோம்.
மூன்று இழுப்பறைகளும், அதற்கடியில் வலது பக்கமாக இரண்டு அறைகளுள்ள ஒரு அலமாரியும், அலமாரிக்கதவில் புடைப்புச் சிற்பமாகப் பூச்செடி ஒன்று செதுக்கப்பட்டதும், இடது பக்கம் கால் நீட்டுவதற்கான இடமுமாகத் தேக்கில் செய்த செம்பழுப்பு நிற மேசை அப்பாவுக்குப் பிடித்திருந்தது. ஐம்பது ரூபாய் விலை சொன்னார்கள். கொடுத்து வாங்கியதும், அவன் தோளில் கிடந்த துண்டையே சும்மாடாகச் சுற்றித் தலையில் வைத்தான். அதன் மீது மேசையைத் தலைகீழாகத் தூக்கி வைத்தனர்.
பேட்டையில் இறக்கி வைக்கலாமென்ற போது, வேண்டாம், மேசையில் கோடு, கீடு கீச்சிவிடும், மாப்பிள்ளைக்குத் தானே, நான் தலையிலேயே சுமந்து கொண்டுவந்துவிடுகிறேனென்றான்.
வடசேரி மேட்டிலிருந்து எந்தப் பாதையில் பழையாற்றுக்கு நடந்து வந்தோமென எனக்கு இப்போதும் சந்தேகமாகவே இருக்கிறது. அந்தப் பாதையில் அதன் பிறகு நான் சென்றதாக நினைவுக்கு வரவேயில்லை. ஆனால், பழையாற்றைக் கடந்து அதன் கரையில் ஏறி, மேட்டில், ஒரு பூவரசு மரத்தடியில் மேசையைக் கீழே இறக்கி வைத்துச் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். கரை முழுதும் ஆவாரம் பூ மஞ்சளாகப் பூத்துக்கிடந்தது.
அந்தப்பக்கமாக வந்த மற்றொருவர் உதவியுடன் மேசையை மீண்டும் தலையில் தூக்கிக் கொண்ட பிறகு வீட்டிற்கு வந்துதான் இறக்கிவைத்தான். வடசேரியிலிருந்து எங்கள் ஊருக்கு எப்படியும் எட்டு கி.மீ தூரமாவது இருக்கும். அந்த மேசையில் தான் நான் படித்தேன்.
ஒரு வாரம் போல அவன் வைரத்துடன் சேர்ந்து ஆராம்புளிப் பக்கம் போய் ஆலங்குழை ஒடித்து கோணியில் கட்டி, வடசேரி, ஒழுகினசேரிப் பக்கம் கொண்டுபோய் விற்று வந்தான். காவல் கிணறு விலக்கிலிருந்து ஆரல்வாய் மொழிச் சவுக்கை வரையிலுமான நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் பெரிய பெரிய ஆலமரங்கள் ஒரு குகை போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கவிந்திருந்தன.
அந்த மரங்களையும் சாலையையும் பார்த்ததும் எனக்கு மகா அசோகர் ஞாபகம் வந்துவிடும். அவர்தான் அந்தச் சாலையை அமைத்து, மரங்களையும் நட்டதாக எனக்கு நானே கற்பித்துக்கொண்டிருந்தேன். அந்த மரங்களில் தான் குழை ஒடித்திருப்பார்கள்.
ஆட்டுக்குக் குழை வாங்கும் பெண்கள் கிண்டலும் கேலியுமாகப் பேசுவது அவனுக்குப் பிடித்துப் போயிருக்கவேண்டும். அந்தக் கதைகளையெல்லாம் அவன் அம்மன் கோயில் படிப்புரையில் மற்றவர்களுடன் பேசிக் கேட்டிருக்கிறேன்.
எங்கு போனாலும், இரவு சாப்பிட்டானதும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். எங்கள் வீட்டுக் கூடத்தில் நான்கைந்து பேர் படுப்பார்கள். அவனும் அவர்களுடன்தான் படுப்பான்.
படுப்பதற்கு முன்னால் அன்றைய கதைகளையெல்லாம் பேசுவது வழக்கம். அப்படியே அவன் வரவில்லையென்றாலும் அவனிடம் கேட்க வேண்டிய கதைக்காக அவன் வீட்டுக்குப் போய் அழைத்துவந்துவிடுவேன்.
அப்படி ஒரு நாள் இரவு அவன் வராமலிருந்ததால், அவனை அழைத்துவர நான் அவன் வீட்டுக்குப் போயிருந்தபோது, அவன் உட்புறத் திண்ணையில் படுத்து அனங்கிக்கொண்டிருந்தான். வைரமும் அவனும் வனத்துறை ஆட்களிடம் மாட்டிக்கொண்டுள்ளனர். அடித்துத் துவைத்து அனுப்பியிருக்கின்றனர். அவர்கள் சொல்லிச் சொல்லி அடித்தார்களாம், ‘’ பாரஸ்ட் அடி, போலீஸ் அடி மாதிரி இல்லை, பாரஸ்ட் காரன்கிட்ட அடி வாங்கினால், அவ்வளவுதான் அதோட போச்சு, எழுந்து நடக்கமுடியாது” என்று.
வைரம் நோஞ்சான், இவன் உடம்பு வயிரம் பாய்ஞ்ச கட்டையில்லா, பாரஸ்ட் காரன் புகுந்து விளையாடிற்றான் என்று பேசிக்கொண்டார்கள்.
ஒரு மாதத்துக்கும் மேலாயிற்று, அவன் எழுந்து நடப்பதற்கு. முட்டையிடாத விடைக் கோழிக்குஞ்சினை உரலில் போட்டு இடித்துச் சாறெடுத்து, அதில் இஞ்சிச் சாறு சேர்த்து, சாராயத்தில் ஊற்றிக் கொடுத்தார்கள். அதிலிருந்து மீண்ட பிறகு அவன் ஆராம்புளிப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. வைரத்தோடு போவதையும் விட்டுவிட்டான். வைரம் செங்கல் அறுக்கப்போனான்.
அவர்கள் அண்ணன் தம்பிகள் நால்வர் வீடும் ஒரே மாதிரியான அமைப்பில் ஒரே வரிசையில் எங்கள் வீட்டுக்குப் பின்புறமுள்ள படிக்கல் வீட்டுக்கும் பின்புறம் இருந்தது. நான்குமே ஓலைக்கூரை குடிசைகள்தாம். இடைவெளியில்லாமல் ஒன்றோடொன்று இணைத்து வரிசையாக இருந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்பும் இரண்டு ஒட்டுத் திண்ணைகள். .
அவன் தம்பி குமரேசனுக்கு, செண்பகராமன் புதூரிலிருந்து பெண்கொடுக்க முன்வந்தார்கள். அவன் சண்முகத் தேவரிடம் கல் வண்டி அடித்தான். அது மிகக் கடினமான வேலை, கல்வெட்டும் இடத்தில் ஒவ்வொரு கல்லாக வண்டியில் ஏற்றி, கேட்பவர் வீட்டில் கொண்டுபோய் இறக்க வேண்டும்.
குமரி சளைக்காமல் வேலைசெய்தான். அவன் மிகவும் நல்லவன் என்று பெயரெடுத்திருந்தான்.
அவனது அம்மா, இவனுக்கும் பெண் தேடினார்கள்; ஆனால், எதுவும் அமையவில்லை. சரி, அவனுக்கு நேரம் வரும்போது பெண் அமையும்.
இளையவனுக்குத் திருமணம் செய்துவிடுவோம் என்று அதற்கான வேலையில் இறங்கினார்கள். இவனுக்கு பயங்கரக் கோபம். ஆனாலும் வெளிக்காட்டவில்லை.
பெண் அழைத்து எங்கள் வீட்டில் தான் வைத்திருந்தார்கள். அதற்காக என் அம்மா புளிபோட்டு விளக்கிப் பொட்டு வைத்து ஏற்றியிருந்த விளக்கடியில் தான் அந்த அக்கா அமர்ந்திருந்தாள்.
சாயங்காலம் அவர்களின் குடிசை வீட்டில் விளக்கு முன்னால் வைத்துத் தாலி கட்டினார்கள்.
கல்யாணத்துக்கென குமரி வாங்கிக்கொடுத்த கோடி வேட்டியை வாங்கிக் கட்டிக்கொண்டாலும் அன்று முழுவதும் அவனது கண்கள் கலங்கியே இருந்தன. அவனால் கண்ணீரை மறைக்கமுடியவில்லை.
பலரும் என்னென்னவோ சொல்லிப்பார்த்தார்கள்; ஆனாலும் அவன் சமாதானமாகவில்லை. மறுநாளே அவன் காணாமல் போயிருந்தான்.
ஒருவாரத்திற்குப் பிறகு, அந்தத்தெரு வழியாகப் புளியமூட்டுக்குப் போனபோது, முண்டும் துண்டும் அணிந்த மலையாளப் பெண் ஒருத்தி அவன் வீட்டு வாசலில் வெந்நீர் காயவைத்துக்கொண்டிருந்ததைக் கண்டேன்.
பக்கத்தில் நின்ற பதினைந்து வயதுப் பையன் அவளது மகன்போல் தெரிந்தது. இவன் தான் எங்கெங்கோ சுற்றி, அவளையும் அவளது மகனோடு அழைத்து வந்திருந்தான். அவனுக்கென இருந்த குடிசை வீட்டிலேயே குடும்பம் நடத்தத் தொடங்கினான்.
சில நாட்களிலேயே அந்த மகன் ஓடிப்போனான். இவன் வீட்டு ஒட்டுத்திண்ணையில் எப்போதுமே உட்காராத எங்கள் தெரு ஆட்களில் ஓரிருவர் உட்காரத் தொடங்கினார்கள்.
என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்தப் பெண்ணையும் அதன் பிறகு காணவில்லை.
அவனுக்கு அவமானமாகப் போயிருக்கும் போல. ஊரைவிட்டே போய்விட்டான். நாகர்கோவிலில் ஏதோ ஒரு அரிசி ஆலையில் வேலைசெய்வதாகச் சொன்னார்கள். ஊருக்கு வருவதேயில்லை.
காலத்தின் சுழற்சியில் அவனது அம்மா இறந்தாள். பெரியண்ணன் வீட்டை விற்றுவிட்டுக் கீழத் தெருவுக்கு குடிபோனான். அடுத்த அண்ணனும் வீட்டை விற்றுவிட்டு வடிவீஸ்வரத்தில் குடும்பத்தோடு குடியேறினான். குமரி வழக்கம்போல சம்முகத்தேவருக்குக் கல் வண்டி அடித்தான். அவனுக்கு ஐந்து ஆண்பிள்ளைகள்.
யாருக்கும் படிப்பு வரவில்லை. பண்ணை வீடுகளில் மாடு மேய்க்க அனுப்பினார்கள். கடைசிப்பையன் மட்டும் பள்ளிக்கூடம் போனான்.
குமரிக்கு உடம்பு சரியில்லாமலானது. கல் ஏற்றி இறக்கியதில் தூசும் தும்பும் மூச்சுக்குழலில் படிந்ததோடு சுவாசம் கடினமாக இருந்தது. டி.பி என்றார்கள். அவனால் வேலைக்குப் போக முடியவில்லை. வாழ்க்கை சிலரை மிகவுந்தான் அடித்து, மீண்டு எழுந்திருக்க முடியாமல் விளையாடிவிடுகிறது.
எனக்கு வெளியூரில் வேலை கிடைத்து ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவதாகிவிட்டது. ஒரு மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஒருமுறை ஊருக்கு வந்திருந்தபோது, ஆழ்வார் பெரியம்மை, என் அம்மாவிடம், ஏட்டி நேத்தைக்கு அவன் வீட்டுக்கு முன் இலையோடு வந்து பசிக்குதுன்னு நிற்கிறான். நான் ஆடிப்போயிட்டன் என்றாள்.
என்னவென்று விசாரித்தபோதுதான் நாகர்கோவிலில் இருக்கும்போது, அவனுக்குக் கண்ணில் ஏதோ புண் ஏற்பட்டு கோட்டாறு பெரியாஸ்பத்திரியில் இரண்டு மாதம் இருந்தானாம். கடைசியில் புண் குணமானது; ஆனால் கண் தெரியாமலாகிவிட்டது.
இரண்டு கண்ணும் தெரியாத நிலையில் வேறெங்கும் போகமுடியாமல் ஊருக்கு வந்திருக்கிறான்.
ஊரில் மட்டும் அவனுக்குச் சாப்பாடு போட்டுப் பராமரிக்கும் அளவில் யார் இருக்கிறார்கள்? ஒரு விதவை அக்கா இருக்கிறாள். அவள் மகள் இருக்கிறாள். பெரியண்ணன் குடும்பத்தோடு இருக்கிறார். தம்பி டி.பியில் அவஸ்தைப்படுகிறான். அவனுக்கு உணவு போடும் நிலையில் உறவினர் யாரும் இல்லை.
சந்தியிலோ, அம்மன் கோயில் படிப்புரையிலோ, பெருமாள் கோயில் முகப்பிலோ படுத்துக்கொள்ளலாம். சாப்பாட்டுக்கு?
பசி தாங்க முடியாத போது ஒரு தேக்கிலை அல்லது வாழை இலையைக் கடையில் கேட்டு வாங்கிக்கொண்டு தெரிந்தவர் வீட்டு வாசலில் போய் எக்கா, எம்மா, சாப்பாடு போடு என்று கேட்கிறானாம்.
இதையெல்லாம் கேட்டபோது ஆடிப்போய்விட்டேன்.
பிறவியிலேயே ஒரு கண் இல்லை; குழை ஒடிக்கப்போனபோது வனத்துறையினரிடம் வாங்கிய அடி இப்போதும் நினைவிலிருக்கிறது. கல்யாணத்துக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை; வேற்றூர் போய் ஏதோ உழைத்து அவனுண்டு, வேலையுண்டு எனப் பிழைக்கலாமென்றால் பாழும் வாழ்க்கை இரண்டாவது கண்ணையும் பறித்துவிட்டது.
ஒழுங்காக, நேர்மையாக உழைத்துப் பிழைப்பவன், பிச்சையெடுப்பது எவ்வளவு பெரிய சோகம்.
அப்போது எங்கள் ஊரில் ஒரு மூதாட்டி மட்டும் அரசு முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ. 20 பெற்று வந்தார். அதைப் போல அவனுக்கு மட்டும் ஓய்வூதியம் பெற்றுத்தந்துவிட்டால் சமாளித்துக்கொள்வானேயெனத் தோன்றியது.
அவனுக்கு அப்போது வயது 40க்குள் தானிருக்கும்.
எங்கள் ஊர்க் கச்சேரிக்குப் பார்த்தியாராக பூதப்பாண்டியிலிருந்து சிறுப்ப வயதில் ஒருவர் வந்தார். அவர் என் நண்பனுக்குச் சொந்தக்காரர்தான். நண்பனையும் அழைத்துக்கொண்டு பார்த்தியார் முன்பு போய் உட்கார்ந்தேன். முதியோர் உதவித்தொகை விதிகள் அப்போதெல்லாம் இப்போதுபோல் எளிமையாக்கப்பட்டிருக்கவில்லை.
இவனுக்கோ அண்ணன், தம்பி, அக்கா, அக்கா மகளென உறவினர்கள் இருக்கும்போது உதவித்தொகைக்கு வாய்ப்பேயில்லை; அதிலும் வயது 40க்குள் இருக்கும்போது பரிந்துரைக்கமுடியாதென்றார்.
இருக்கிற நிலைமையைச் சொல்லி எப்படியாவது உதவவேண்டுமென்றபோது, அவனுக்குச் சொந்தக்காரர்கள் யாருமே இல்லை; பிச்சை எடுக்கவில்லையென நீங்கள் ஸ்டேட்மெண்ட் கொடுப்பீர்களா எனக்கேட்டார். சரி என்றேன். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கேட்டார். அவனை நாகர்கோவில் அழைத்துப்போய் போட்டோ எடுத்து வந்தேன். பரிந்துரை செய்து முன்மொழிவுகளை தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பினார்.
வட்டாட்சியர் அலுவலக எழுத்தரை நேரில் சந்தித்தபோது, கண்டிப்பாக உதவுவதாகச் சொன்னார். முன்மொழிவுகள் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அனுப்பினார். அங்கிருந்து ஒரு குறிப்பிட்ட நாளில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முகப் பரிசோதனைக்கு ஆஜராகுமாறு கடிதம் வந்தது.
மீண்டும் மீண்டுமாக அவனிடம் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை யாருமே இல்லையெனப் படித்துப்படித்துச் சொல்லிக் கூட்டிச் சென்றேன்.
நேர்முக விசாரணைக்கு அவனுடன் அதிகாரிகள் முன்பு நானும் நின்றேன். ஆர்.டி.ஓ, மருத்துவர், வேலை வாய்ப்பு அலுவலர் மூவரும் இருந்தனர். மருத்துவர் கண்ணைச் சோதித்துவிட்டு, பார்வை மீளப்பெற வாய்ப்பேயில்லையென்றார். நல்ல வேளையாக அதிகாரிகள் வேறு எதுவும் கேட்கவில்லை. ஒரு மாதத்திலேயே முதல் உதவித்தொகையாக ரூ. 20 கிடைத்தது. எனக்கு அப்பாடா என்றானது.
இதற்கிடையில் அவன் பழைய நினைவுகள் அடிப்படையிலேயே கம்பு, கிம்பு எதுவுமில்லாமல் நடமாடத் தொடங்கினான். கிருஷ்ணண்ணன் காப்பிக்கடையில் மாவு அரைத்துக் கொடுத்தான். மேடை வீட்டுக்குப் பக்கத்திலிருந்த குடிநீர்க்குழாயில் தண்ணீர் பிடித்து கடைக்கு எடுத்துச் சென்றான். சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது.
மீண்டுமொரு முறை ஊருக்கு வந்திருந்தபோது, மாப்பிளை, நல்ல வேலை செய்தீர், அவனும் ரொம்ப ரொம்ப நல்லவனாயிட்டான். என் பிள்ளைகள் மீது அவன் பாசமாயிருக்கிறான். அவனிடமிருக்கும் காசைக்கொண்டு எதாவது வாங்கிக் கொடுக்கிறானென்று, குமரி சொன்னபோது, பரவாயில்லையென மகிழ்ச்சியாக இருந்தது.
ஊரிலிருக்கும் போது, அவன் அந்தப் பக்கமாகப் போனால், `வேய்` என்று மட்டும் குரல் கொடுப்பேன். சிறிது நிற்பான். குரல் வந்த திக்கிலேயே நேராக என்னிடம் வந்து எப்பவேய் வந்தேரு எனக்கேட்டு என் கையைப் பிடித்துத் தடவுவான்.
அடுத்த முறை ஊருக்குச் சென்றபோது, குமரி இறந்திருந்தான். குடும்பம் மிகவும் கஷ்டத்திலிருந்தது. இவன் அவனுக்கு வந்த உதவித்தொகையை அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து உதவினான். ஆனால், வீட்டுக்கு மட்டும் கடைசி வரையில் போகவேயில்லை.
பல ஆண்டுகள் கடந்தன. உதவித்தொகை ஆயிரமானது. ஒருமுறை அவன் கேட்டான். வேய் இப்பம் நீரு என்ன வேலை பாக்கேரு. முன்னால உமக்கு உதவித்தொகை வாங்குவதற்காகப் போயிருந்தோமில்லையா, அதே மாதிரியான அலுவலகத்தில் பணிபுரிவதாகச் சொன்னேன். அப்படியாவென்று மகிழ்ச்சியைக் காட்டினான்.
அதன் பிறகு நான்கைந்து ஆண்டுகளாக என்னால் ஊருக்குப் போகமுடியவில்லை. கடைசியாகச் சென்றிருந்தபோது, அந்த அக்கா, ஆறுமுகம், நடராச அத்தான் போயிற்றேருய்யா. என்றாள். நான் புரிந்துகொண்டேன்.
அவனது கடைசி நிமிடங்கள் எப்படியிருந்தனவென எனக்குத் தெரியாது.
குமரியத்தானின் பிள்ளைகள் எல்லோரும் நல்லபடியாய்த் தலையெடுத்து, அவனவனும் தனித்தனி வீடுகட்டி நல்லநிலையில் இருக்கின்றனர்.
பின்னால் ஒரு நாள் நான் சென்றிருந்த அன்று அவர்களில் ஒருவனுக்குத் திருமணம். என்னைப் பார்த்ததும், மாமா, கண்டிப்பாகத் திருமணத்துக்கு வரவேண்டுமென்றான். மாலை வரவேற்புக்குச் சென்று வாழ்த்திவிட்டுத் திரும்பினேன்.
வாழ்க்கை அவன் கால்களைப் பிடித்துச் சுழற்றி, நிலவடியாக அடித்து மீண்டெழமுடியாதபடித் துவைத்தெடுத்தது. ஆனால், அவனோ அவன் மட்டுமல்ல, அவன் தம்பி குழந்தைகளையும் மீட்டெடுத்தான். வாழ்க்கை நிச்சயம் அவனை மண்டியிட்டுத் தொழுதிருக்கும்.