Friday 18 March 2016

நைஜீரியச் சிறுகதை -பாயன் லாயி Bayan Layi by Elnathan John, Nigeria

பாயன் லாயி Bayan Layi 


ஆங்கிலம் : ஹௌசா /எல்நாதன் ஜான் (நைஜீரியா ) Elnathan John, Nigeria (Hausa language ) 


images
எல்நாதன் ஜான்(நைஜீரியா)
(நைஜீரியாவைச் சேர்ந்த எல்நாதன் ஜான் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றவர், முழுநேர எழுத்தாளராக உள்ளார். இவரது படைப்புகள் பெர் கான்ட்ரா, ஜாம் மேகசின், எவர்கிரீன் ரெவ்யூ, சென்டினெல் நைஜீரியா மற்றும் சிமுரெங்காஸ் க்ரானிகல் இதழ்களில் வெளியாகின்றன. நைஜீரிய செய்தித் தாள் ஒன்றில் அரசியல் எள்ளல் கட்டுரைகளும் எழுதிவருகிறார். தற்போது தமிழாக்கம் செய்யப்படும் பாயன் லாயி கதை 2013 ஆம் ஆண்டு கெயின் விருதுக்கான சுருக்கப்பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.)
*****
பாயன் லாயி1யிலுள்ள கூக்கா2 மரத்தின் அடியில் படுக்கும் பையன்கள், அவர்கள் செய்த கொலைகளைப் பற்றியே பெருமைபேசுவார்கள். நான் அதில் சேர்வதில்லை; ஏனென்றால் நான் எந்த மனிதனையும் கொலைசெய்ததில்லை. பாண்டா செய்திருக்கிறானென்றாலும், அவன் அதைப்பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவன் தலையே வெடிப்பதுபோலப் பேசும்போது, அவன் அமைதியாக வீவீ (கஞ்சா) புகைத்துக்கொண்டிருப்பான். கோபெதனிசா3வின் குரல் எப்போதுமே சத்தமாகத்தான் கேட்கும். அவன், கழுத்தை நெரித்துக் கொன்ற ஒருவனைப் பற்றியே, எப்போதும் பேசிக்கொண்டிருப்பான். சம்பவம் நிகழ்ந்தபோது, நானும் அவன் கூட இருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் தானென்றாலும் அவன் கதை சொல்லும்போது இடைமறிப்பதில்லை. கோபெதனிசாவும் நானும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு திருடுவதற்காக ஒரு தோட்டத்துக்குள் போயிருந்தபோது, விவசாயி திடீரென்று எங்கள் முன்னால் வந்து தொலைத்துவிட்டான். கையில் மாட்டினால் கொன்றுவிடுவேனென்று சொல்லிக்கொண்டே, அவன் எங்களைத் துரத்தியபோது, மான்களுக்காக வெட்டிவைத்திருந்த புதர்க்குழிப் பொறிக்குள் விழுந்துவிட்டான். கோபெதனிசா அவனைத் தொடக்கூட இல்லை. அங்கேயே நின்று, அவன் உயிருக்குப் போராடித் தத்தளித்துத் தத்தளித்துப் பின் தத்தளிப்பதை நிறுத்தும் வரையில் நாங்கள் கவனித்துக்கொண்டிருந்தோம்.
அந்தச் சாவு குறித்து, கோபெதனிசா சொல்லும் பொய்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை; ஆனால், சிலநேரங்களில் அவனை `வாயை மூடு` எனச் சொல்லி, அவன் வாயிலேயே அறையவேண்டுமெனத் தோன்றுகிறது. கொல்வதைப்பற்றி, அவன் பேசுகின்ற முறை, அவனுக்கு என்னவோ அதற்காகச் சுவர்க்கம் கிடைக்கப்போவதுபோல், அல்லா ஒரு நல்ல இடத்தை அங்கே அவனுக்காகவே ஒதுக்கிவைத்திருப்பது போலவும் தோன்றும். அவன் ஏன் அப்படிப் பேசுகிறானென்று எனக்குத் தெரியும். சிறிய பையன்கள் அவனைப்பார்த்து வாய் பிளக்கவேண்டும் என்பதற்காகவே அவன் அப்படிப் பேசுகிறான்; கூடவே, அவர்களைப் பயமுறுத்தவுந்தான். அவனுடைய முகமே தழும்புகளின் மொத்த வரைபடம் தான், அதிலும் தெளிவாகக் கண்ணில் முந்தித் தெரிவது, வலதுபக்கம் வாயிலிருந்து அவன் காதுவரையில் நீளமான கோடுபோலத் தெரியும் வெட்டுத்தழும்புதான். பாண்டாவோடு சண்டை போட்ட நாளில் அது அவனுக்கு எப்படிக் கிடைத்ததென்று அங்கே நீண்டகாலமாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். பாண்டாவைத் தெரிந்தவர்கள் யாரும் அவனோடு மோதமாட்டார்கள். அவனோடு வைத்துக்கொண்டால் சாவைத் தேடிக்கொள்வதாகத்தான் அர்த்தம். ‘’ உன் வேலையைப் பார்த்துவிட்டுப் போடா’’ என பாண்டா கத்துமளவுக்கு வாய்ச்சண்டை எதனால் முற்றியதென்று எனக்கு நினைவில்லை. பாண்டா அந்த அளவுக்குக் கத்தினானென்றால் விஷயம் சிறியதல்ல. பதிலாக, யாராலுமே மன்னிக்கவியலாத அவமானமாக, கோபெதனிசா, ‘’உன் அம்மாவின் —-‘’ எனச் சொன்னானென்றால், பாண்டா கொடுத்த வீவீயை அவன் அளவுக்கதிமாகப் புகைத்திருக்கவேண்டும். பாண்டா அவனைவிடப் பெரியவன். வலது கைப் புயத்தில் ஒரு தாயத்தும் கத்தி மற்றும் அம்புகள் தாக்காமல் காப்பாற்றும் மூன்று மந்திரித்த கயிறுகளும் கட்டியிருந்தான். எந்த இரும்பும், அவனைத் துளைக்கமுடியுமென்று தோன்றவில்லை.
பாண்டாவின் அம்மாவை கோபெதனிசா, அவமானப்படுத்திவிட்டதால், பாண்டா கொய்யா மரத்திலிருந்தும் இறங்கி வந்து, அவன் வாயிலேயே குத்தினான். பாண்டா வேறு, கூரான விளிம்புகளுள்ள துருப்பிடித்த மோதிரம் ஒன்றைக் கைவிரலிலேயே அணிந்திருந்தான். கோபெதனிசாவின் வாயில் இரத்தம் வரத்தொடங்கியது. அவன், தரையில் கிடந்த மரப்பலகை ஒன்றை எடுத்து, பாண்டாவின் முதுகில் அடித்தான். பாண்டா திரும்பிப் பார்த்துவிட்டு, மரத்தை நோக்கி நடந்தான். ஆனால், கோபெதனிசா வெற்றி மிதப்பில் இருந்தான். பாண்டாவைத் தோற்கடிப்பவர் யாராக இருந்தாலும், எங்களுக்கு அவனைக்கண்டு உதறல் தான். நாங்கள் அவனைத்தான் பின்பற்றுவோம். அவன் மீண்டும் ஒரு பலகையை எடுத்து பாண்டாவின் தலையில் அடிக்க முனைந்தபோது, பாண்டா பட்டெனத் திரும்பி, வலதுகையால் அடியைத் தடுத்தான். பலகை இரண்டு துண்டுகளாக முறிந்து விழுந்தது. கோபெதனிசா இரத்தம் ஒழுகும் கைகளோடு பாய்ந்து, பாண்டாவின் தாடையைத் தாக்கினான். பாண்டா அஞ்சிப் பின்வாங்கவில்லை. சண்டையில் யாராவது கொல்லப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டால், அல்லது, உண்மையிலேயே சண்டை நியாயமற்றதாக இருந்தால் தவிர பாயன் லாயியில் யாரும் சண்டையை விலக்கிவிடமாட்டார்கள். சிலநேரங்களில், அல்லா விரும்பாமல், எவரும் இறப்பதில்லையெனக் காரணம் சொல்லி, சண்டையை அப்படியே விட்டுவிடுவதுமுண்டு. பாண்டா, கோபெதனிசாவின் சட்டையைப் பிடித்து இழுத்து, முகத்தில் இரண்டு முறை குத்திவிட்டுப் பின், வலதுகையைத் திருப்பி, அவன் காற்சட்டைப்பைக்குள்ளிருந்த கத்தியை எடுத்தான். கோபெதனிசாவைத் தரையோடு சேர்த்து வலது முழங்கை முட்டியால் அழுத்திக்கொண்டு, அவன் கன்னத்தில் கத்தியால் ஒரு நீண்ட கோட்டினை இழுத்தான்.
பாயன் லாயி தெருக்களில் யாரும் விரோதம் பாராட்டுவதில்லை. கோபெதனிசாவின் முகத்தில் அந்தத் தழும்பு இப்போதும் இருக்கத்தான் செய்கிறது; ஆனாலும் அவன், பாண்டாவின் பின்னால், அவன் சொல்வதைக் கேட்டு, அப்படிக்கப்படியே நடக்கிறான். அல்லாவின் விருப்பப்படிதான் அனைத்தும் நிகழும்போது, ஒருவருக்கொருவர் ஏன் விரோதம் பாராட்டிக்கொள்ளவேண்டும்?
***
எனக்கு பாண்டாவைப் பிடிக்கும்; ஏனென்றால், வீவீ விஷயத்தில் அவன் மிகவும் தாராளம். அவன் சபோன் காரி4க்குச் செல்லும் நாட்களில் இங்கு நடந்தவற்றை நான் அவனுக்குச் சொல்லும் முறை அவனுக்குப் பிடிக்கவில்லையாம். ஒரு கதையை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லையென அவன் சொல்கிறான். ஹர்மாட்டன்5 பருவக்காற்று, புழுதியை வாரி, வீசி, வீசி அடிப்பதைப்போலத் திசைதெரியாமல் நான் பேசுகிறேனாம். எனக்கு நினைவில் வருகிற மாதிரியில் நான் சொல்கிறேன், அவ்வளவுதான். சில சமயங்களில் நீங்களாகத்தான் கதையை விவரித்து, விளங்கிக்கொள்ளவேண்டியிருக்கும். அநேகம் கதைகளுக்குள்ளும், விளக்கம், அதுவாகவே புதைந்து கிடக்கின்றது. கதையை அதன் உண்மையிலும், உண்மையான தொடக்கத்திலிருந்து, சொல்வதைத்தவிர, வேறெந்த வகையில், சொன்னால், சுவையாக இருக்கும்?
அது தேர்தல் நேரம். சிறிய கட்சிக்காகச் சுவரொட்டி ஒட்டுவதும் பெரிய கட்சியின் சுவரொட்டிகளைக் கிழிப்பதும் அல்லது நகரத்தில் யாருடைய ஊர்தியையாவது உடைப்பதுமாக, பாண்டா கையில் நல்ல காசு. பணத்தை அவன் எப்போதுமே எல்லோருடனும் பகிர்ந்துகொள்வான்; அதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதைவிட எனக்கு அதிகமாகவே கொடுப்பான். பாயன் லாயியின் பெரிய பையன்கள் கூட்டத்தில் நான் தான் மிகச் சிறியவன், பாண்டாதான் மிகப்பெரியவன். ஆனால், அவன் என்னுடைய மிகச்சிறந்த தோழன்.
கடந்த மாதம், அதுதான் ரமலான் மாதமென நினைக்கிறேன், ஒரு பையன் பாயன் லாயியில் திருட முயன்றான். பாயன் லாயியில் திருடுவதற்கு யாரும் துணிந்துவிடமாட்டார்கள். அவன் எப்படியோ, லாதிதி அம்மாவின் கடலை எண்ணெய் டப்பாக்களைக் குறிவைத்து வந்திருக்கிறான். அவளுடைய வீடு ஒரு `பா ஷிகா`; அதாவது ஆண்கள் நுழையக்கூடாத வீடு. அவனைக் கண்டதும் அவள் அலறிவிட்டாள். உடனேயே அவன் ஓடிச்சென்று வேலியைத் தாண்டிக்குதித்தான். திருடர்களைத் துரத்துவது, அதிலும் அவர்கள் பாயன் லாயியைச் சேர்ந்தவர்களில்லையெனத் தெரிந்துவிட்டால், சர்க்கரை சாப்பிடுவது மாதிரி எனக்கு மிகவும் பிடித்த விஷயம். சபோன் காரியில் ஒருமுறை இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து காலை ஒடித்துக்கொண்டாலும், இங்கே அதிவேகமாக ஓடுபவன் நான்தான். எப்படியோ, கடலை எண்ணெய்த் திருடனை நாங்கள் பிடித்து, அவன் வாழ்நாள் முழுவதற்கும் போதுமென்கிற அளவுக்கு நன்கு கொடுத்தோம். திருடனை அடிக்கும்போது கூரான ஏதாவதொன்றைப் பயன்படுத்துவது எனக்குப் பிடிக்கும். அவனைக் குத்தும்போது, இரத்தம் பீறிட்டுவரவேண்டும்; அதை நான் கண் குளிரப் பார்க்க வேண்டும். அதுதான் எனக்குப் பிடிக்கும். அதனால் அந்தப் பையனை நாங்கள் பிடித்து உட்காரவைத்து, அவன் பெயர் என்னவெனக் கேட்டோம். அவன் இடோவு என்றான். அவன் பொய் சொல்கிறானென்பது எனக்குத் தெரியும். அவன் மூக்கு இக்போ பையனின் மூக்கு போல இருந்தது. அவனுடைய உண்மையான பெயரைக் கேட்டுப் பலமுறை அவன் தலையில் என் நகங்களைப் பாய்ச்சினேன்.
‘’இடோவு! சத்தியமாகச் சொல்கிறேன், என் பெயர் இடோவுதான்,’’ என் நகம் அவன் தசையைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும் அவன் அலறினான்.
‘’உன்னோட உங்குவா6 எங்கேடா இருக்கிறது?’’ ஒற்றைக் கண் பொட்டையான அச்சிஷுரு அவன் கன்னத்தில் அறைந்து கேட்டான். இந்த ஒற்றைக்கண் பயலுக்கு எப்படி அறையவேண்டுமென்று நன்றாகத் தெரியும்.
‘’சபோன் காரிக்குப் பக்கத்தில்,’’ என்றான், அந்தத் திருடன்.
‘’எங்கேயென்று குறிப்பாகச் சொல்லுடா,’’ என்று கத்தினேன். அவன் அமைதியாக இருந்தான். அவன் கழுத்தில் என் நகத்தைப் பாய்ச்சினேன்.
‘’சபோன் லாயி.’’
அப்படியே எழுந்து ஓடினான் பாருங்கள், வானத்துப் பறவையைப் போல விசுக்கென்று பறந்துவிட்டான். இந்தமுறை அவனை எங்களால் பிடிக்கமுடியவில்லை. அவனை விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டான், பாண்டா. அவன் சபோன் லாயியைப் போய்ச் சேர்ந்திருக்கவில்லை. அன்று மாலையில் ஏதோ ஒரு கழிவுநீர்ச் சாக்கடையில் அவனது உடல் கிடந்திருக்கிறது. அல்லா அவருடைய காரியங்களை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார், பாருங்கள்! நாங்கள் ஒன்றும் அவனை அப்படி அதிகமாக அடித்துவிடவில்லை. இதைவிட மோசமாக யார்யாரையோவெல்லாம் செம்மையாக அடித்திருக்கிறோம், அவர்களெல்லாம் செத்துவிடவில்லை. ஆனால், யார் உயிரோடிருக்கவேண்டும், யார் சாகவேண்டுமென்பதை அல்லா தீர்மானிக்கிறார். நான் இல்லை. நாங்களும் இல்லை. நீங்களும் இல்லை.
சபோன் காரியிலிருந்து புலனாய்வுத்துறையுடன் எங்கள் பகுதிக்குக் காவல் துறை வரவே நாங்கள் ஓடி ஒளியவேண்டியிருந்தது. சிலர் மசூதிக்குள் ஒளிந்துகொண்டார்கள். பாண்டா, அச்சிஷுரு, தாவ்தா, நான் எல்லோரும் பாயன் லாயிக்குப் பின்னால் ஒரு பகுதியாக ஓடும் கடுனா ஆற்றின் குறுக்காக நீந்தி, அக்கரையிலிருந்த வயல்கள், புதர்க்காடுகளில் நெடுநேரம் அலைந்து திரிந்து, பின்னர், ஆற்றைக் கடந்து திரும்பிவருவதற்கு மிகவுமே பிந்திய இரவாகிவிட்டது. பாண்டா, அவனுடைய மந்திரக் கயிறுகளோடு இரவில் ஆற்றில் இறங்குவதில்லை. இரவில் அவனுடைய மந்திரக் கயிறுகள் மீது ஆற்றுத் தண்ணீர் பட்டால் அவன் சக்தியை இழந்துவிடுவானென்று சொல்கிறான். அவற்றைக் கழற்றிவைக்கவும் முடியாதாம்; அப்போதும் அதன் சக்தி மாயமாய் மறைந்துபோகுமாம். .
***
எல்லோரும் தேர்தலைப்பற்றித்தான், நிலைமைகள் எப்படி, எப்படியெல்லாம் மாறக்கூடுமென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடலை எண்ணெய் விற்பதைத்தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத லாதிதி அம்மா கூட, அவள் வீட்டுச் சுவரில் சிறிய கட்சியின் சுவரொட்டியை ஒட்டியிருக்கிறாள்; தேர்தல் பற்றிய செய்திகளைக் கையடக்க வானொலி ஒன்றில் கேட்கிறாள். எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள். சந்தையிலிருக்கும் பெண்கள், வேட்பாளரின் படம் மற்றும் கட்சிச் சின்னம் குறித்த அட்டையை அணிந்திருக்கிறார்கள். பல ஆண்களும் வேட்பாளரைப் போலவே வெள்ளை நிறத்தில் முழுநீள அங்கியும் சிவப்பு நிறத் தொப்பியும் அணிகின்றனர். எனக்கும் அந்த மனிதரைப் பிடித்திருக்கிறது. அவரொன்றும் பெரிய பணக்காரரில்லை தான்; ஆனாலும் நிறையவே உதவிகள், நன்கொடைகள் மற்றும் பிச்சை அளிப்பதோடு, எப்போதெல்லாம் ஊருக்குள் வருகிறாரோ, அப்போதெல்லாம் எல்லோருடனும் மிகச் சாதாரணமாகப் பேசிப் பழகுகிறார். அவர் அந்தச் சிவப்புத் தொப்பியை ஒருபக்கமாக எந்நேரமும் கீழே விழுந்துவிடலாமென்பதைப் போல அணிவதே ஒரு அழகுதான். எனக்கும் பணம் கிடைத்தால், அதைப்போல ஒரு தொப்பி வாங்கிவிடுவேன்; வெள்ளை நிற அங்கியும் கூடத்தான்; ஆனால் வெள்ளையைச் சுத்தமாக வைத்திருப்பது கஷ்டம்; சோப்புக்கு வேறு தனியாகச் செலவாகும். அடித்துச் சுத்தமாகத் துவைத்தாலும், ஆற்றுத் தண்ணீருக்குச் செங்காவி நிறமாகிவிடும். என்னுடைய பழைய குரான் போதகர் மாலம் ஜுனாய்டுவும் வெள்ளையே அணிவதோடு, நபி(ஸல்) அவர்களும் வெள்ளை அணிவதையே விரும்பினாரென்றும் சொல்வார். ஆனால், மாலம் ஜுனாய்டு அவரது துணிகளை, நல்ல தண்ணீரைப் பையன்களிடம் விலைக்கு வாங்கிச் சலவைசெய்யும் டனிமுவிடம் போடுகிறார். ஒருநாள், நானும் இன்ஷா அல்லா, நல்ல தண்ணீரை விலைக்கு வாங்குவதோடு, என் துணிகளை டனிமுவிடம் சலவைக்குப் போட்டு வாங்கி, என்னுடைய வெள்ளை ஆடைகளையெல்லாம் அடுக்கிவைப்பதற்காக ஒரு பெட்டியும் வாங்குவேன். சிறிய கட்சி மட்டும் ஜெயித்துவிட்டால் எல்லாமே நல்லதாகிவிடும். இன்ஷா அல்லா.
எனக்கு ஊர்வலங்கள் பிடிக்கும். சிறிய கட்சியின் ஆட்கள் பாண்டாவை நம்புகிறார்கள்; பாயன் லாயி பையன்களை அவர்கள் கட்சிக்காகத் திரட்டச் சொல்லி, பாண்டாவிடம் பணம் கொடுக்கிறார்கள். சில நாட்களில் ஆளைப் பொறுத்து, அல்லது ஊர்வலத்தைப் பொறுத்து, எங்களுக்கு 150 நைராக்கள் கூடக் கிடைத்துவிடும். அதோடு எங்களுக்குக் குடிக்கவும் சாப்பிடவும் நிறையக் கிடைக்கும்.
பாண்டாவோடு ஊருக்குள் சுற்றிவருவது எனக்குப் பிடிக்கும். எல்லோரும் அவனை மதிக்கிறார்கள். அவனைவிடப் பெரிய பையன்கள் கூட அவனைக் கண்டு பயப்படுகிறார்கள். மாலம் ஜுனாய்டுவின் மதரசாவில் குரான் பயிற்சி முடித்த நேரத்தில் பாண்டா எனக்கு நண்பனானான். நான் மதரசா படிப்பு முடித்ததும், சொகொட்டோவிலுள்ள எனது கிராமத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு மாலம் கூறினார். ஆனால், அப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருந்த அல்ஃபா, என் அப்பா இறந்துவிட்டதாகச் சொன்னான். அவன் அப்பா சொகொட்டோவில் எங்கள் அப்பாவின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறார். அப்பா எதனால் இறந்தாரென்று நான் அவனைக் கேட்கவில்லை; ஏனென்றால், அல்லா என்னை மன்னிப்பாராக, எனக்கு அதில் அவ்வளவாக அக்கறை இல்லை. என் அப்பாவைப் பார்த்து மிகப் பல நாட்களாகிவிட்டது. அவரும் என்னைப் பற்றி எதுவும் விசாரித்ததாகத் தெரியவில்லை. என் அம்மாவும் கிராமத்தைவிட்டுக் கிளம்பிப் போய் சொகொட்டோ நகரத்திலுள்ள ஜுமாஅத் மசூதி அருகில் பிச்சையெடுப்பதாக அல்ஃபா சொன்னான். எனக்கு இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கூட அல்ஃபாவுக்குத் தெரியவில்லை. அதனால், சொகொட்டோவுக்குப் போக எனக்கு மனமில்லாவிட்டாலும், மாலம் ஜுனாய்டுவிடம் சொகொட்டோவுக்குத் திரும்பிப் போவதாகக் கூறினேன். அதற்காகும் கட்டணத்தை அவர் தருவார் என்று தான் நினைத்தேன். சொகொட்டோவுக்குப் பெரிய, பெரிய மரங்களின் தடிகள் ஏற்றிச்செல்லும் கனரக ஊர்திகளின் பின்னால் ஏறிச் செல்ல சபோன் காரியிலுள்ள பூங்காவிலிருந்து முந்நூறு நெய்ரா ஆகும். அதற்கு அவர், என் அப்பா கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டிலும் கூட என்னுடைய குரான் பயிற்சிக் கட்டணமாக தானியம் எதுவும் கொண்டுவரவில்லை என்பதைச் சொல்லிக் காட்டிவிட்டு, எழுபது நெய்ராதான் கொடுத்தார். நான் சொன்னேன், எனது அப்பா இறந்துவிட்டாரென்று. அவர் ஒரு கணம் அமைதியாகிப் பெருமூச்சு விட்டபின் ‘’ இன்னலில்லாஹி வாய்ன்னா இல்லாஹி ரஜியுன்’’ என்று சொல்லிவிட்டு, இடத்தைவிட்டும் அகன்றுசென்றார். உயிரைக் கொடுப்பதும் எடுப்பதும் அல்லாதான் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லையென்றில்லை. அதனை, அவர் பாடம் நடத்தும் அதே உயிரற்ற குரலில் சொன்னவிதம்தான் என்னை வருத்தப்படச் செய்தது. ஆனால், நான் அழவில்லை. அன்று மாலை, நான் ஒரு சிகின் ஷேகெ என்று அல்ஃபா சில பையன்களிடம் சொன்னதைக் கேட்கும்வரையில் அழவில்லை. வேசிவயிற்றுப் பிறப்பு! அவன் எங்கிருந்து அப்படியொரு பேச்சினைக் கேட்டானென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள், மாலம் ஜுனாய்டு கட்டிய திறந்தவெளி மசூதி அருகிலுள்ள கிணற்றங்கரையில்தான் உட்கார்ந்திருந்தனர். அல்ஃபாவின் இடுப்பிலேயே உதைத்தேன். எங்களுக்குள் சண்டை தொடங்கியது. சாதாரணமாகவே, நான் அவனை அடித்துத் துவைத்துவிடுவேன், ஆனால், அன்று இரண்டு பையன்கள் என்னைப் பிடித்துக்கொண்டார்கள்; அதனால், அல்ஃபா என்னைத் தாக்கி, அறைந்து கொண்டேயிருந்தான்; நான் அழுது, அலறிக்கொண்டிருந்தபோது, பாண்டா அந்த வழியாக வந்தான். பாண்டா அல்ஃபாவை ஒரே அடியில் தரையில் சாய்த்து, மற்றொருவனைத் தூக்கி வீசினான். நான் அல்ஃபாவின் மீதேறி என் கை ஓயும்வரையில் அவன் வயிற்றில் குத்தினேன். மற்ற பையன்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். அந்த நாளில்தான், என் வாழ்க்கையில் அதுவரையில் அழாத அழுகைக்கெல்லாம் சேர்த்து அழுதேன். நான் பாண்டாவின் பின்னால் போனேன். அவன் வீவீ தந்தான்; நான் என்னுடைய முதல் வீவீயைப் புகைத்தேன். அதன் சுகம் ஒரு அற்புதமே தான்! கால்கள் கனம் இழந்து, இழந்து, பின்னர் ஒரு கட்டத்தில், கால்களே இல்லாமலாகிவிட்டது போல் உணர்ந்தேன். நான் காற்றில் மிதந்துகொண்டிருந்தேன்; என் இமைகள் கனத்தன; பாண்டாவைவிட, கோபெதனிசா, ஏன், கூக்கா மரத்தடிப் பையன்கள் எல்லோரையும் விடப் பெரியவனாக, அவர்களைவிட வலிமையானவனாக உணர்ந்தேன். இருமாமல் புகைக்கும் என்னுடைய பாணி, அவனுக்குப் பிடிப்பதாக, பாண்டா கூறினான். இப்படித்தான் நாங்கள் நண்பர்களானோம். அவனுடைய அட்டை விரிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்து, அவர்கள் தூங்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றான். அவர்கள் கூக்கா மரத்தின் கீழ் அட்டைகளை விரித்துப் படுத்தனர்; மழைக்காலங்களில் அல்ஹாஜி முகமதுவின் அரிசிக் கடையின் துத்தநாகக் கூரை முகப்பிற்குக் கீழேயுள்ள சிமென்ட் தரைக்கு மாறிக்கொள்வார்கள்.
பாண்டா என்னைப் போல அல்மாஜிரி7 இல்லை. அவன் மற்ற பல பையன்களைப் போலவே சபோன் காரியில் பிறந்தவன்தான்; ஆனால், குரான் பள்ளியில் படிக்கவில்லை. கூக்கா மரத்தடி பையன்களைப் பற்றி மாலம் ஜுனாய்டு எச்சரித்திருந்தார். அவர்கள் ரமலான் அல்லது ஈத் பண்டிகை நாட்களில் மட்டுமே மசூதிக்கு வருகின்றனர்; யான் தாபா8 தடியன்கள்; பாயன் லாயியில் பிரச்சினை செய்வதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. அவர்களுக்கு எங்களைப் போல குரானும் சுனா9வும் தெரியாததோடு, அவர்கள் ஐந்துமுறை தொழுவதோ, நோன்பிருப்பதோ இல்லை. அதனால் நாங்கள் அவர்களை இழிந்தவர்களாகக் கருதினோம். மாலம் சொல்வார், ‘’ ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை தொழாதவன் முஸ்லிமே கிடையாது.’’ இப்போது நானும் கூக்கா மரத்தடிக்கு வந்துவிட்டேன், எனக்குத் தெரிகிறது, தினமும் ஐந்துமுறை தொழவில்லையென்றாலும் அவர்களில் சிலர் அன்பானவர்களாக, நல்லவர்களாக இருக்கின்றனர் – அவர்கள் இதயத்தில் என்ன இருக்கிறதென்பதை அல்லா அறிவார்.
பாண்டா ஒரு வயதான பையன். அவனுக்கு என்ன வயதாகிறதென்று எனக்குத் தெரியாது, ஆனால் எங்களில் மீசை உள்ளவன் அவன் மட்டும்தான். என்னுடைய வயதை யாராவது கேட்கும்போது எனக்கு வெறுப்பாக இருக்கிறது; ஏனென்றால் எனக்கு என் வயது தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் கிட்டத்தட்டப் பத்து முறை நோன்பு நோற்றிருக்கிறேன் என்பதுதான். நான் அப்படிச் சொல்லும்போது, சிலர் புரிந்துகொள்கிறார்கள்; ஆனால், கடந்த ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது கேட்ட பெண் போலவே, வேறு சிலர் எரிச்சல்படுத்தும் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், வாக்காளர் பதிவின் போது, என் வயது பத்தொன்பது என்று சொன்னாலும், பாண்டா கொடுத்த பழைய முழுநீள அங்கியின் கைகளை மடித்துச் சுருட்டிக்கொள்ளவேண்டியிருந்தது. சிறிய கட்சியின் ஆட்கள் தான் அப்படிச் சொல்லிப் பதிவுசெய்யுமாறு, எங்கள் எல்லோருக்கும் தலைக்கு நூறு நெய்ரா கொடுத்தார்கள். பதிவுசெய்யும் அலுவலர்கள் முணுமுணுத்து, மறுத்தாலும் கடைசியில் எப்படியோ பதிவுசெய்துவிட்டார்கள். வாக்காளர் அட்டையில் என் தலை பெரியதாக இருந்ததை, பாண்டாவும் அச்சிஷுருவும் கேலிசெய்துகொண்டே, இருந்தார்கள். அச்சிஷுரு என்னைப் பார்த்துச் சிரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை; அவனுக்கு ஒற்றைக் கண்தான்; அப்படியிருக்கையில், அவன் என் தலையைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது. அவன் நிரம்பக் கஞ்சனும்கூட. வீவீயைக்கூட யாருடனும் பகிர்ந்துகொள்ளமாட்டான்.
*******
‘’நாம் தேர்தலுக்காக நிறைய வேலை செய்யவேண்டியிருக்கிறது,’’ என்கிறான், பாண்டா இருமிக்கொண்டே.
தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால், நமக்கு 1000 நெய்ரா வீதம் கூடத் தருவதாக சிறிய கட்சி உறுதியளித்திருக்கிறது. நம்மைப் போல வீடற்ற பையன்களுக்காகவும், வீட்டுக்குத் திரும்பிப்போக முடியாதவர்களுக்காகவும் பெற்றோர் இல்லாதவர்களுக்காகவும் தங்குமிடம் ஒன்று கட்டித் தருவதாகவும், அங்கு நாற்காலி செய்வது, அங்கி தொப்பிகள் தைப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்ளலாமென்றும் சொல்கிறார்கள். பாண்டா இதற்கு முன்னால் இதுபோல் இரத்தம் துப்பி, இருமியதில்லை. அவனுக்கு உடம்பு சரியில்லை என்று நினைக்கிறேன்.
அச்சிஷுரு, பாண்டா, கோபெதனிசாவோடு நானும் சபோன் காரியிலிருந்து வேறு சில பையன்களும் சிறிய கட்சி அலுவலகத்துக்கு தேர்தலில் ஜெயிப்பது குறித்துப் பேசுவதற்காகச் சென்றுகொண்டிருந்தோம். இங்கு யாருமே பெரிய கட்சியை விரும்பவில்லை. அது, ஏனென்றால் நாங்களெல்லாம் அவர்களால் தான் ஏழைகளாயிருக்கிறோம். அவர்களின் ஆட்கள் இங்கே வரத் துணியமாட்டார்கள்; ஏனென்றால் இங்குள்ள மக்கள் அவர்களைத் துரத்திவிடுவார்கள் என்பதுதான்.
பாண்டா இருமிக்கொண்டே, இன்னும் அதிகமாக இரத்தம் துப்புகிறான். எனக்குக் கவலையாக இருக்கிறது. தேர்தலுக்குப் பின், சிறிய கட்சி, பெரிய கட்சியாகும்போது, தலைநகரில் ஏராளமான பூக்களும் மரங்களுமாக இருக்கும் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கச் செலவுசெய்வார்களாக இருக்கலாம். அல்லது அல்லா விரும்பினால், மருத்துவ மனைக்கே அவசியமில்லாமல், அவன் குணமாகிவிடலாம்.
கடைசி மாலைத் தொழுகைக்குப்பின் ஒரு மணிநேரம் ஆகியிருக்கலாம். சிறிய கட்சி ஆளின் சகோதரன் முன்பக்கம் சிறிய கட்சியின் கொடி கட்டிய, திறந்த வெள்ளை டிரக்கில் அப்போதுதான் பாயன் லாயிக்குள் வந்திருந்தான். அவன் பாண்டாவின் பெயரைச் சொல்லிக் கத்தி அழைத்தான். பாண்டா கொய்யா மரத்திலிருந்தும் இறங்கினான்; நான் அவன் பின்னால் போனேன்.
‘’உங்களில் யார் பாண்டா?’’ டிரக்கின் பின்பகுதியில் உட்கார்ந்திருந்த ஒருவன் கேட்டான். அவன் முகத்தை என்னால் பார்க்கமுடியவில்லை.
‘’நான் தான்,’’ என்று பதில்சொன்னான், பாண்டா.
‘’இது, இவன் யாரு?’’
‘’ என்னுடைய நண்பன், நாங்கள் ஒரே இடத்தில் படுக்கிறோம்.’’
‘’என் பெயர் தண்டலா,’’ என்றேன், நான்.
‘’நல்லது. எங்களுக்கு பாண்டா மட்டும்தான் வேண்டும்.’’
எனக்குக் கோபமென்றாலும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
‘’உடன் வந்துவிடுவேன்,’’ வலது கை தாயத்துகளைச் சரிசெய்துகொண்டே, என்னிடம் சொல்கிறான். அவன், அவனுக்குப் பிரச்சினை எதுவுமில்லை என்பதை என்னிடம் தெரிவிக்கும் முறை அதுதான். அவன் டிரக்கின் பின்பக்கம் தாவி ஏறியதும், அவர்கள் கிளம்பிப் போனார்கள்.
***
மசூதியில் தொழுகை அழைப்புக்கான முதல் பாடலை அரபுக் குரலாளர் பாடும்போதுதான் பாண்டா வந்தான். அன்று தேர்தல் நாள். எனக்குத் தெரியும், பையன்களுக்காக பாண்டாவிடம் அவர்கள் நிறையப் பணம் கொடுப்பார்கள். அதனாலேயே, அதீத ஆர்வத்தில் என்னால் தூங்க முடியவில்லை.
‘’உன்னிடம் என்ன சொன்னார்கள்?’’ நான் விசாரித்தேன்.
‘’ஒன்றுமில்லை.’’
‘’ஒன்றுமில்லையென்றால் என்ன அர்த்தம்?’’ நான் எரிச்சலடைந்தேன். ‘’அப்படியென்றால், ஒன்றுமில்லாததற்காகவா உன்னை இரவு முழுவதும் அவர்களோடு வைத்திருந்தார்கள்?’’
பாண்டா எதுவும் சொல்லவில்லை. அவன் நீளமான இரண்டு வீவீ சுருள் பொதிகளை எடுத்து ஒன்றை என்னிடம் நீட்டினான். நாங்கள் அதை ஜம்போ, பெரியது என்போம். சடசடக்கும் நூறு நெய்ரா நோட்டு இரண்டையும் கொடுத்தான். இந்த மாதிரி சடசடக்கும் நோட்டுகளைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது.
‘’தொழுகைக்குப் பிறகு, மசூதியின் பின்னால் எல்லோரையும் கூட்டி, ஆளுக்கு நூற்றைம்பது கொடுப்போம். பின்னர், அங்கேயே காத்திருப்போம். என்ன செய்யவேண்டுமென்று அவர்கள் சொல்வார்கள். வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களுக்குக் கூடுதலாக ஒரு இருநூறு கிடைக்கும். எல்லா அட்டைகளையும் நான் வாங்கி, அவர்கள் அலுவலகத்திற்கு எடுத்துப் போகிறேன்.’’
அட்டைகளை அவர்கள் எதற்குக் கேட்கிறார்களென்று எனக்குப் புரியவில்லை. பெரிய கட்சியைத் தோற்கடிக்க உதவுமாறு கேட்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், எனக்கு அந்தக் கூடுதல் இருநூறு வேண்டும். தேர்தலில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பாயன்லாயியிலுள்ள எல்லோருக்கும் அப்படித்தான். சபோன் காரியிலுள்ளவர்களும் சிறிய கட்சியைத் தான் விரும்பினார்கள். அவர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். இன்ஷா அல்லா!
நாங்கள் வாக்களிக்கப் போவதில்லையென்றாலும் பாயன் லாயிக்கும் சபோன் காரிக்கும் நடுவிலிருந்த வாக்குச் சாவடி நோக்கிச் செல்கிறோம். அன்றைய நாள் மிவும் மெல்ல நகர்வதாகத் தோன்றியது. வெயில் வேறு காலையிலேயே கொளுத்துகிறது. வாக்குச்சாவடி அலுவலர்கள் விரைவில் வந்து, தேர்தல் உடனேயே தொடங்கிவிடுமென்றுதான் நினைக்கிறேன். ஏராளமான பெண்கள் வாக்களிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள். சிறிய கட்சி ஆட்கள்தான் எல்லா இடங்களிலும் தெரிகின்றனர். வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் குடிக்கத் தண்ணீரும் ஜோபோ10 சர்பத்தும் கொடுக்கிறார்கள். பெண்களிடம் உப்பு மற்றும் கருவாட்டுப் பொதி ஒன்றும் நெகிழிப்பைகளில் கொடுக்கிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாகச் சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரிய கட்சியின் முகவர் வெள்ளைநிற வெற்றுப் பேருந்து ஒன்றில் வந்து இறங்கியதும் அவர் அணிந்திருந்த கட்சி அடையாளங்களைக் கழற்றுகிறார். தாக்கப்படுவோமோ என்று அவர் பயப்படுவதாக நான் நினைத்தேன். சிறிய கட்சிக்காரர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தும் அவர் புகார் எதுவும் சொல்லவில்லை; சொல்ல நினைத்தாலும் முடியாது; ஏனென்றால், அப்படிச் சொன்னால், அவரை அங்கிருந்த இரண்டு காவல்துறை காவலர்களாலும்கூடக் காப்பாற்றமுடியாதென்பது அவருக்கும் தெரியும்; ஏனென்றால், பெரிய கட்சிக்காக வேலைசெய்யத் தொடங்கும் முன் அவரும் பாயன்லாயியில் இருந்தவர் தான், இப்போது சபோன் காரியில் ஒரு அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அவர் அங்கும் கூட எப்போதாவதுதான் தங்குவதாகவும் அதிக நாட்களும் அவருடைய பணம் முழுவதும் போட்டு வைத்திருக்கும் தலைநகரில்தான் இருப்பதாகவும் பாண்டா சொல்கிறான்.
வாக்களிப்பு முடியப்போகிறது. என்னுடைய வீவீ வீரியமும் குறைகிறது; ஆனாலும் காலையில் பாண்டா கொடுத்த ஜம்போ இன்னும்கூட வேலை செய்யத்தான் செய்கிறது. மீண்டும் மீண்டுமாக வழங்கப்பட்ட வெறும் ஜோபோவை மட்டும் குடித்துக் குடித்து அலுத்துவிட்டது, எனக்கு நல்ல பசி. பாண்டாவை எங்கும் காணவில்லை. அவனைத் தேடித் தெரு மூலை திரும்பிய போது, அங்கே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, குனிந்துநின்று இருமிக்கொண்டிருந்தான். நிறையவே இரத்தம் துப்பினான். நன்றாக இருக்கிறாயா என நான் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் தரையில் ஒதுக்கமாக உட்கார்ந்தான். தண்ணீர்ப் பை ஒன்று வாங்கி வந்து கொடுத்தேன். வாயைக் கழுவிக் கொப்புளித்துவிட்டு, சிறிது தண்ணீரைக் குடித்தான்.
‘’இந்தத் தேர்தலில் நாம் ஜெயிப்போம்,’’ என்றான், பாண்டா.
‘’அது சரி, அதை யார் தடுத்துநிறுத்த முடியும்?’’ – நாங்கள், இப்போது உண்மையான அரசியல்வாதிகளைப் போல, கட்சிக்காரர்களைப் போலப் பேசத் தொடங்கிவிட்டோம்.
‘’நமக்காக அந்தத் தங்குமிடத்தை அவர்கள் உண்மையில் கட்டித்தருவார்களா?’’ நான் கேட்டேன்.
‘’அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. எனக்கு வேண்டியது, வேலைசெய்யச் சொல்கிற ஒவ்வொரு முறையும் அதற்கான பணத்தைத் தந்துவிடவேண்டும். அவ்வளவுதான், தேர்தலுக்குப் பிறகென்றால், அவர்களை எங்கே பார்க்கப்போகிறாய்?’’
பாண்டா மிகவும் புத்திசாலி. கட்சிக்காரர்கள் செய்வார்கள் என எந்த ஒன்றையும் எதிர்பார்ப்பதை நானும் நிறுத்தவேண்டும். மீதியிருந்த ஜம்போவைப் பற்றவைத்துக்கொண்டே, அவனுக்கும் வேண்டுமா எனக் கேட்கிறேன்.
‘’நீ வரும் முன்புதான் நானும் ஒன்று இழுத்தேன்,’’ என்றான், அவன்.
*****
கோஷங்களும் கூச்சல்களும் கேட்டன. எண்ணிக்கை முடிந்துவிட்டது; நாங்கள் எதிர்பார்த்தது போலவே, இங்கே சிறிய கட்சிதான் வெற்றிபெற்றது. இங்கே பெரிய கட்சிக்கு இருபது வாக்குகளுக்கு மேல் கிடைத்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. நாங்கள் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து, கோஷமிடவும், காலி டப்பாக்களைத் தட்டி, ஆரவாரம் செய்து, ஆடித் தீர்க்கவுமாக எழுந்து சென்றோம்.
***
நான் மிகவும் சீக்கிரமாகவே களைத்துவிட்டேன், ஏனென்றால் நேற்று இரவு முழுவதும் பாண்டாவுக்காகத் தூங்காமல் விழித்துக் காத்திருந்தேன். நான் வேகத்தைக் குறைத்தேன். அப்போதும் உயரத்தில் தான் மிதந்தேன்; என் தலைக்குள் என்னென்னவோ சிந்தனைகள் திடீரென்று தோன்றிச் சுற்றிச்சுற்றி வருகின்றன. குரான் ஆசிரியரை விட்டுவந்த பின்னர் தொழுவதே இல்லையென்றாகிவிட்டது. சபோன் காரியிலுள்ள ஜுமாஅத் மசூதிக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டும் போகிறோம். ஏனென்றால் அங்கே நிறைய ஆட்கள் பிச்சையிடுவதோடு, இலவச உணவும் அதிகம் கொடுக்கிறார்கள். ஆனால் இதயத்து எண்ணங்களை அல்லா தீர்மானிக்கிறார். நாங்கள் பயங்கர மனிதர்கள் இல்லை. நாங்கள் சண்டையிடுகிறோமென்றால், அப்படிச் சண்டையிடவேண்டியிருக்கிறது. சபோன் காரியில் சிறிய கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே நுழைகிறோமென்றால் எங்களுக்குப் பசிக்கிறது. யாராவது இறக்கிறார்களென்றால் நல்லது, அது அல்லாவின் விருப்பம்.
பாண்டா மீண்டும் காணாமல் போகிறான். அதிகாலையில் திரும்பிவந்து, இன்று காலை தொழுகைக்குப்பின் நாம் மீண்டும் வெளியே போகவேண்டியிருக்கிறது என்கிறான்.
‘’தேர்தலில் நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்,’’ என்றான், பாண்டா பயங்கரமாக இருமிக்கொண்டே.
‘’அவர்கள் எண்களில் விளையாடியிருக்கிறார்கள். நாம் வெளியே போய்த்தானாகவேண்டும்.’’
சுற்றிலும் ஒரே கூச்சலாக இருந்தாலும் நான் தூக்கக் கலக்கத்திலிருக்கிறேன். முன்,பின் பழக்கமில்லாத பையன்கள் மசூதிக்குப் பின்னால் நின்று கத்திக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தூங்கினால் போதுமென்றிருக்கிறது. என் வயிறு சிக்கல் செய்கிறது; தலை வலிக்கிறது. இதுபோன்ற நேரத்துக்காகத்தானே எங்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள். மற்ற பையன்களைப் போல, இந்த உடைக்கிற, கொளுத்துகிற வேலைக்கெல்லாம் நான் பழக்கமானவனல்ல. கூக்கா மரத்தடியில், கொஞ்சமாவது நெருப்பும் கண்ணாடி உடைப்பும் நிகழாமல் எதுவும் முழுமையாகத் தீருவதில்லை.
‘’இந்தத் தெற்கத்தியான்கள் நம்மை ஏமாற்ற முடியாது, நாம்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். பிறகென்ன, மண்ணாங்கட்டி!’’
கூச்சல் போடுகிற பையனை எனக்குத் தெரியவில்லை; ஆனால், அவன் கையில் ஒரு அரிவாள் இருக்கிறது. ‘இங்கே தெற்கத்திக்காரர்கள் யாரும் இல்லையே,’’ என நான் நினைக்கிறேன். ‘’அவன் எதற்காக அரிவாளைத் தூக்கிக்கொண்டு நிற்கிறான்? நம் எல்லோரிடமும் தான் கத்தி இருக்கிறது.’’ என்று நான் கிசுகிசுக்கிறேன். கூட்டம் கொந்தளிக்கிறது. பாண்டா, அவன் தனியொருவனாகவே பார்த்துக்கொள்வான் போலத் தோன்றுகிறான். முன்பொருநாள் சிறிய கட்சி ஆட்கள் வந்த அதே திறந்த கூரை வெள்ளை டிரக் வந்து ஓரமாக நிறுத்தப்பட்டதும் அதனை நோக்கி நடக்கிறான். அவன் குனிந்து டிரக்கினுள் இருந்த யாருடனோ பேசுவதைக் கவனிக்கிறேன். பாண்டா வெறுமனே தலையை மட்டுமே அசைத்துக்கொண்டிருக்க, அவனிடம் அப்படியென்னதான் சொல்லித் தொலைக்கிறார்களென நினைத்துக்கொள்கிறேன். அவனுடைய பழைய பழுப்புநிற ஜலாபியா11வின் இருபுறப் பைகளிலும் கைகளை நுழைத்துக்கொண்டே அவன் திரும்பி வருகிறான்; கூட்டத்துக்கு முன் வந்ததும், அரிவாளை வெறுமனே காற்றில் வீசிக்கொண்டிருந்த பையனின் காதுகளில் ஏதோ இரகசியம் சொல்கிறான். பையன் கூட்டத்தை அமைதியாக இருக்குமாறு கத்தத் தொடங்குகிறான்.
‘’நாம் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறோம்,’’ என்கிறான், அவன். ‘’பாயன் லாயியிலுள்ள பெரிய கட்சிக்குச் சொந்தமான எல்லாவற்றையும் சிதறடிக்கப்போகிறோம்.’’
அந்தப் பையன் யாரென்று பாண்டாவிடம் கேட்க வேண்டும்.
‘’அவர்களின் அலுவலகத்தைக் கொளுத்துங்கள்,’’ என்று கத்துகிறான் கோபெதனிசா.
கூட்டம் கத்திக் கூச்சலிடுகிறது. அவர்களின் அலுவலகத்துக்குள் போய்ப்பார்க்க வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசை. அங்கு நிறையப் பணம் வைத்திருக்கிறார்களாம். நானும் கூட்டத்தோடு சேர்ந்து கத்துகிறேன்.
டிரக்கில் அரிவாள், பட்டாக்கத்தி, குத்தீட்டி மற்றும் சின்னச் சின்ன டப்பாக்களில் பெட்ரோல் எல்லாம் இருக்கின்றன என்கிறான் பாண்டா. அவர்கள் திருடிய வாக்குளைத் திரும்பப்பெற நம் ஒவ்வொருவருக்கும் இருநூறு நெய்ரா கிடைக்கும். இருநூறு என்றால் அருமையானதுதான். ரொட்டியும் பொரித்த மீனும் வாங்கலாம். மீன் சாப்பிட்டு எவ்வளவோ நாளாகிவிட்டது.
நாங்கள், இருநூறு நெய்ரா நோட்டுகளையும், பெட்ரோல், தீப்பெட்டி, அரிவாள்களையும் வாங்கிக்கொள்வதற்காக டிரக் முன்னால் அவசர அவசரமாக அணிவகுத்தோம். பணத்தைக் கொடுத்தவன் எதுவுமே பேசவில்லை. அவன் எங்கள் கண்களை மட்டும் உற்றுநோக்கிவிட்டு, நோட்டுகளை நீட்டிக்கொண்டிருந்தான். சிறிய பையன்களுக்கு ஒரு நூறு மட்டும் கொடுத்தான். அவனை நெருங்கும்போது, சிறுவனாகத் தெரியாமலிருக்க, நான் நெஞ்சை நிமிர்த்தி, விரித்து, நாடியைத் தூக்கி உயர்த்திக்கொண்டு சென்றேன். எனக்கு இருநூறு வேண்டும். அந்த மனிதன் என்னைப் பார்த்துவிட்டு நூறு கொடுப்பதா அல்லது இருநூறு கொடுப்பதா என்று சிறிது யோசித்தான்.
‘’நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம்,’’ பாண்டா என் பின்னாலிருந்து, அந்த மனிதனிடம் சொன்னான்.
அந்த மனிதனுக்குத் திருப்தியில்லை. அவன் ஒரு நூறு நெய்ரா நோட்டினை என்னிடம் நீட்டினான். நான் அதை வாங்கிக்கொண்டு – நான் ஒருபோதும் பணத்தை வேண்டாமென மறுப்பதேயில்லை – டிரக்கின் பின்னாலிருந்து ஒரு அரிவாளை எடுத்துக்கொண்டேன். பாண்டா அந்த மனிதனின் காதில் ஏதோ இரகசியமாகச் சொல்லிப் பின், ஒரு நோட்டினை வாங்கி, என்னிடம் நீட்டினான். அது இன்னொரு நூறு நெய்ரா நோட்டு. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் கண்களிலிருந்த தூக்கமெல்லாம் பறந்துவிட்டது. அதனால்தான் எனக்கு பாண்டாவைப் பிடிக்கிறது. அவன் எனக்காகச் சண்டை போடுகிறான். அவன் ஒரு நல்ல மனிதன். கருப்புநிற நெகிழித்தாள் ஒன்றில் சுருட்டிப் பொதியப்பட்ட ஏதோ ஒன்றை என்னிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னான். என்னுடைய காற்சட்டைகளின் பைகள் பெரியவை. அந்தப் பொதியிலிருப்பது பணம்தான். எவ்வளவென்றுதான் எனக்குத் தெரியாது.
நாங்கள் செய்த முதல் வேலை சந்தையின் முன்புற வாயிலில் நின்ற பெரிய கட்சி வேட்பாளரின் ஆளுயர உருவப்பலகை ஒன்றை எரித்துச் சாம்பலாக்கியது தான். அவரின் முகத்தைத் தீ நாக்குகள் பொசுக்கித் தின்று தீர்த்ததை நான் ரசித்தேன். அது அவரது உண்மையான முகமாக இருக்கக்கூடாதா என்றொரு ஆதங்கமும் எனக்குள் எழுந்தது. பெரிய கட்சியின் அலுவலகம் என் நினைவில் வந்தது. அதைத் தீ வைத்துக் கொளுத்தும் முன் அலுவலகத்துக்குள்ளும் மேசை இழுப்பறைகளிலும் முடிந்ததைச் சுருட்டிக்கொள்ளப் பீறிட்டுக் கிளம்பிய ஆர்வத்தை என்னால் அடக்கமுடியவில்லை.
பெரியகட்சியின் அலுவலகத்துக்கு முதல் ஆளாகப் போய்ச்சேர்ந்தது நான் தான். மற்றவர்கள் என்னைப் பிடித்துவிடுவதுபோல் நெருங்கிவந்தாலும் என் பின்னால்தான் வந்துகொண்டிருந்தார்கள். எல்லோருமே உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்தார்கள்; முதலாவதாக கைநீட்டிப் பணம் வாங்கியிருந்தார்கள்; அடுத்து, பெரிய கட்சியின் மீதான வெறுப்போடு, கேள்விப்பட்ட செய்தியால் பொங்கிய கோபமும் சேர்ந்துகொண்டதுதான், காரணம். வாயிற்கதவினை நாங்கள் நெருக்கித் தள்ளித் தள்ளிக் கடைசியில் அந்தக்கதவு பொருத்தியிருந்த தூண்களையும் தரையோடு தரையாக விழும்வரையில் தள்ளுகிறோம். சோகான் சோஜா என்ற கிழவன்தான் அந்த இடத்துக்குக் காவல். அவன் சில பையன்களோடு போராட முயற்சித்து, ஒரு பையனின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு, ஊதலை ஊதுகிறான். இன்னொரு பையன் அவன் வாயிலிருந்து ஊதலைப் பிடுங்குகிறான்.
‘’சோகோன் சோஜா, நீ வயதான கிழவன், உன்னோடு எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் தள்ளிக்கொள், பின்னால் போய் நில். நாங்கள் இதைக் கொளுத்தி முடிக்கிறோம்,’’ என நான் அவனுக்குச் சொல்கிறேன்.
இந்தக் காவலாள் விடாப்பிடியாக இருக்கிறான். அவன் ஒரு ஓய்வுபெற்ற படைவீரன்; எங்களைப் பயமுறுத்தி, விரட்டிவிடலாமென நினைக்கிறான். அவன் அவனுடைய நீளக்கம்பினை எடுத்து ஒரு பையனின் தோளில் அடிக்கிறான். கோபெதனிசா பட்டாக்கத்தியோடு முன்னாகப் பாய்ந்து அந்த வயதான மனிதனின் மார்பிலும் கழுத்திலும் வெட்டுகிறான். அந்தக் கிழவன், பையன்கள் எல்லோருக்கும் தெரிந்தவன் என்பதால் அவனை முதல் ஆளாக அடிக்க யாருமே விரும்பவில்லை. ஆனால், இப்போது அவன் கீழே விழுந்துகிடக்கவே பையன்கள் அவனது உடலைத் தாக்குகிறார்கள். இப்படியான ஒரு வயதான மனிதனைக் கொல்ல நேர்வது துரதிருஷ்டம் என நினைக்கிறேன். ஆனால், அவனாகத்தான் இதை இழுத்துக்கொண்டான். கோபெதனிசா, நிச்சயம் இதைப்பற்றிப் பெருமைபேசப் போகிறான்.
நான் கட்டடத்துக்குள் ஓட, எனக்கு முன்னாலேயே ஒரு பையன் முன்கதவைத் திறந்துவிட்டான். அலுவலகத்தில் கொஞ்சமாவது பணம் இருக்கும்; இல்லையென்றால், காவலாள் ஏன் ஒரு கூட்டத்தையே எதிர்க்கத் துணியப்போகிறானென்பது என் எண்ணம். நாங்கள் எல்லோரும் மேசை நாற்காலிகளை உடைத்து, இழுப்பறைகளைத் தேடிப்பார்த்து, கையிலகப்பட்ட சுவரொட்டி, காகிதங்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிந்து, உள்ளே நுழைகிறோம். நாங்கள் ஒவ்வொரு அறையாகப் போகிறோம். எனக்குக் கிடைத்தது, இழுப்பறை ஒன்றிலிருந்த கையடக்க வானொலி ஒன்று மட்டுந்தான். அச்சிஷுருவுக்கு புத்தம் புதிய ஒரு தொழுகைப் பாயும் தொப்பியும் கிடைக்கிறது. எனக்கு மிகப்பெரிய ஏமாற்றந்தான்.
பாண்டா அரை கேலன் பெட்ரோல் டப்பாவைப் பிடித்துக்கொண்டிருக்க, மசூதியின் பின்புறம் கத்தியை வீசி,வீசிப் பேசிக்கொண்டிருந்த பையனும் அப்படியே நின்றுகொண்டிருக்கிறான்.
‘’வெளியே போ, நாங்கள் இந்தக் கட்டடத்தைக் கொளுத்தப் போகிறோம்!’’ என பாண்டா உத்தரவிடுகிறான்.
கையடக்க வானொலியை, நான், எனது காற்சட்டைப் பைக்குள் வைக்க, அது தரையில் விழுகிறது. பையிலிருந்த ஓட்டை பெரியதாகியிருக்கிறது. வானொலியில் ஒரு சிறிய பிடிகயிறு இருந்தது. அதை என் கழுத்தைச் சுற்றிக் கட்டி, வானொலியைத் தொங்கவிட்டு, பட்டாக்கத்தியைக் கையில் பிடித்துக்கொண்டேன். பிற பையன்கள் பெரிய கட்சிக்குச் சொந்தமான வேறு பொருட்களைத் தேடி வெளியே செல்லும்போது, பெட்ரோல் ஊற்றிமுடியட்டுமென, நான் தீக்குச்சிகளோடு காத்திருக்கிறேன்.
‘’நிறைய ஊற்று, இன்னும் ஊற்று,’’ என அந்தப் பையனுக்குச் சொல்கிறான், பாண்டா.
‘’இல்லை, இதுவே போதும். இன்னும் நிறைய இடங்களுக்குத் தேவைப்படும். இது பெட்ரோல், மண்ணெண்ணெய் இல்லை.’’
பாண்டா ஒத்துக்கொள்கிறான். அவர்கள் வெளியே வரட்டுமென நான் காத்திருக்கிறேன். தீக்குச்சியை அழுத்தமாகக் கிழித்துப் பொருத்தி வீசுகிறேன். அந்தப் பையன் சொன்னது சரி. சாளரம் வழியாகத் தீ நாக்குகள் சுழன்று குதித்து, கூரைக்குத் தாவும் அழகினை ரசிக்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, ஒரு மூட்டை சோளக் கதிர்களை எரித்துவிட்டேனென்பதற்காக அப்பா என்னைச் செத்துவிடுமளவுக்கு அடித்ததை நினைத்துப் பார்க்கிறேன். அது, மழை, எங்கள் கிராமத்தில் பெய்வதை நிறுத்திக்கொள்வதற்கும், என் அப்பா என்னையும் என் சகோதரர்களில் பலரையும் குரான் பயிற்சிக்கு அனுப்புவதற்கும் முன்பாக நிகழ்ந்தது. என் சகோதரர்கள் இப்போது எங்கிருக்கிறார்களென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றிருக்கலாம், அல்லது என்னைப் போலவே இங்கேயே தங்கியுமிருக்கலாம்.
எரியும் கட்டடத்திலிருந்து கரிப்புகையில் மூழ்கிய நல்ல தடியான மனிதன் ஒருவன் வெளியேறி, இருமிக்கொண்டும், வழியிலிருந்த பொருட்கள் மீது தடுக்கி விழுந்து தட்டுத்தடுமாறியும், என்னை நோக்கி ஓடிவருகிறான். அவனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. பெரிய கட்சியைச் சேர்ந்தவன்.
‘’துரோகி!’’ ஒரு பையன் கூச்சலிடுகிறான்.
அந்த மனிதன் ஒரு பெண்ணைப் போல, அருவருப்பான டான் டாவ்து12 போல கைகளை உயரத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் நன்றாகக் கொழுத்துப் போயிருக்கிறான்; அதனாலேயே, நான் அவனை வெறுக்கிறேன். அவனது கட்சியை வெறுக்கிறேன்; அவர்கள் எங்களை எப்படியான ஏழைகளாக்கியிருக்கிறார்கள்! அவன் ஒரு கொழுத்த எலியைப் போல ஒளிந்திருந்ததாக, நான் வெறுக்கிறேன். அவன் என் அருகே தட்டுத் தடுமாறியபோது, அவன் கழுத்தின் பின்னால் அடிக்கிறேன். அவன் தலைகுப்புற விழுந்து முனகுகிறான். நான் மீண்டும் அடிக்கிறேன். பட்டாக்கத்தி கூர்மையாக இருக்கிறது. நான் எதிர்பார்த்ததைவிடக் கூர்மையாக, கனமில்லாமல் இருக்கிறது. எங்கிருந்துதான் இது மாதிரிக் கத்திகளை வாங்குகிறார்களோ, தெரியவில்லை! மாலம் ஜுனாய்டுவின் பட்டாக்கத்திகள் மிகவும் கனமானவை, மசூதியின் முன்புறம் அல்லது அவரது வீட்டு முன்பாக களைகளை வெட்டுவது என்றாலே எனக்கு வெறுப்பு!
அந்த மனிதன் அதிகம் அசையவில்லை. பாண்டா கேலனைத் தூக்கி, அவன் மீது பெட்ரோலை ஊற்றுகிறான். தீயைப் பொருத்துமாறு, பாண்டா என்னைப் பார்க்கிறான். நான் அந்த உடலை வெறித்துப் பார்க்கிறேன். பாண்டா தீப்பெட்டியை என்னிடமிருந்து பிடுங்கிக் கொளுத்துகிறான். நெருப்பு அவனது ஆடைகளையும் தசையையும் விழுங்கும் முன் அவனது உடல் சிறிதாக மட்டுமே அசைந்தது. அவன் ஏற்கெனவேயே இறந்துபோயிருந்தான்.
நாங்கள் அங்கிருந்து நகர்ந்தபோது, இந்த எரிப்பது, வெட்டுவது, கிழிப்பது பற்றியெல்லாம் சிறிதுகூட நினைத்துப் பார்க்கவில்லை. இந்தப் பட்டாக்கத்தி சதையை வெட்டிக்கிழிக்கும்போது என் உடலில் ஏற்படும் நடுக்கத்தை நான் விரும்பவில்லை; அதனால் தீவைப்பதில் ஒட்டிக்கொள்வதற்காக பாண்டாவிடமிருந்தும் தீப்பெட்டியை மீண்டும் வாங்கிக்கொள்கிறேன். முதலில் நாங்கள் பெரிய கட்சி ஆட்களுடைய கடைகள், சிறிய கட்சி ஆட்களுடைய கடைகள் எனப் பாகுபடுத்தினோம்; ஆனால் பின்னர், எங்களுக்குப் பசியும் தாகமும் அதிகரித்தபோது, கண்ணில்பட்ட கடை எதுவாயிருந்தாலும் உடைத்து உள்ளே நுழைந்துவிட்டோம்.
பாயன் லாயியைத் தாண்டியும் சென்றபோது, துப்பாக்கிச் சப்தம் கேட்டு, எங்கள் கூட்டம், மேற்கொண்டு நகராமல் நிறுத்தப்படுகிறது. நான் கடைசி, கடைசியாக, மிகவும் பின்னால் நின்று சிறுநீர் கழிக்க ஒதுங்கிநிற்க, கூட்டம் பின்னோக்கி ஓடிவருவதைப் பார்க்கிறேன். இரண்டு காவல்துறை வாகனங்கள் இந்தப் பக்கமாக வந்து வானத்தை நோக்கிச் சுடுகின்றன. அவை நெருங்க, நெருங்க, காவலர்கள் கூட்டத்தை நோக்கிச் சுடத்தொடங்குகின்றனர். முதல் ஆள் கீழே விழுந்ததைப் பார்த்ததும் நான் திரும்பிக்கொண்டு ஓட்டமெடுக்கிறேன். பாண்டா வருகிறானா என்று திரும்பிப் பார்க்கிறேன்; அவன் வரவில்லை. குனிந்து, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருமுகிறான். நான் நிற்கிறேன்.
உயரம் குறைந்த வேலி ஒன்றின் பின்னால் நின்று, ‘’பாண்டா, எழுந்திரு!’’ என்று அலறுகிறேன்.
எல்லோரும் அவனைக்கடந்து ஓடுகிறார்கள். காவலர்கள் தொடர்ந்து சுடுகின்றனர். அவன் எழுந்து தடுமாறி ஓடுகிறான்; மீண்டும் நிற்கிறான். காவலர்கள் நெருங்கிவிட்டனர்; பாண்டா எழுந்து ஓடவேண்டும். நானும் ஓடிவிட நினைக்கிறேன்; அவனுடைய தாயத்துகள் அவனைக் காப்பாற்றுமென்று நினைக்கத்தொடங்குகிறேன். ஆனாலும் ஒரு சிறிது தயங்குகிறேன். அவன் எழுந்து மீண்டும் ஓடத் தொடங்குகிறான். பின்னர், பின்னாலிருந்து யாரோ அடித்தது போலத் தலைகுப்புற விழுகிறான்; மேற்கொண்டு அவன் அசையவில்லை. நான் ஓடுகிறேன். குறுகலான நேர்வழியைத் தவிர்த்துவிட்டு, திறந்தவெளி மசூதியின் குறுக்காக ஓடுகிறேன். மாலம் ஜுனாய்டுவின் மக்காச்சோளத் தோட்டத்தின் குறுக்காக ஓடுகிறேன். பையன்கள் அங்கே ஒளிந்திருக்கிறார்கள். நான் நிற்கவில்லை. கூக்கா மரத்தைத் தாண்டி ஓடுகிறேன். துப்பாக்கிச் சப்தம் கேட்காவிட்டாலும் நான் நிற்கப்போவதில்லை. ஆற்றுக்குள் பாய்ந்து, வயல்களின் குறுக்காக, பாயன் லாயியிலிருந்து வெகு தூரத்துக்கு, வெகுவெகு தூரத்துக்குச் செல்லும்வரையில் நிற்கப்போவதில்லை.
குறிப்புகள்
பாயன் லாயி1 Bayan Layi – இடப்பெயர்
கூக்கா மரம்2 kuka tree – அழுவினி மரம்
கோபெதனிசா3 Gobedanisa – நாளை நிரம்பத்தூரம் என்னும் பொருள் கொண்ட ஆண்பால் பெயர்ச்சொல்
சபோன் காரி4 Sabon Ghari – நகரத்தின் பெயர்
ஹர்மாட்டன்5 Harmattan – ஆப்பிரிக்கக் கண்டத்தில் அட்லாண்டிக் கடலோரம் புழுதி வாரிவீசும் பருவக்காற்றின் பெயர்.
உங்குவா6 unguwa – கூட்டம்.
அல்மாஜிரி7 almajiri – அரபு மொழியிலிருந்து கடன் பெறப்பட்ட ஒரு சொல் – இஸ்லாம் பற்றிய அறிவினைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறிய மாணவர் என்று பொருள்படும். எனினும் நைஜீரியாவின் ஹௌசா மொழியில் அல்மாஜிரி என்ற சொல் குரான் படிக்கிற, வீட்டுக்கு வீடு பிச்சையெடுக்கும் குழந்தை அல்லது பெரியவர்களைக் குறிக்கிறது. மிகவும் இழிவான தொனியிலேயே பயன்படுகிறது.
யான் தாபா8 yan daba – கானோ மற்றும் வடக்கு நைஜீரியாவின் நகர்ப்புற குற்றப் பின்னணிப் போக்கிரிக் கும்பல்கள் யான் தாபா என அழைக்கப்படுகின்றன. இடைநின்ற பள்ளிக் குழந்தைகளும் அல்மாஜிரி நடைமுறையிலிருந்து வருகின்றவர்களுமான இளைஞர்களும்தான் இந்தக் கும்பல்களில் சேர்கின்றனர்.
சுனா9 Sunnah – முகமது நபியின் வாய்மொழிப் போதனைகள்
ஜோபோ10 zobo – உலர்ந்த புளிச்சைக் கீரை இலைகளுடன் இஞ்சி, பூண்டு, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கொதிக்கவைத்து, இறுத்துச் சர்க்கரை, பனிக்கட்டி சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நைஜீரிய சர்பத்.
ஜலாபியா11 jallabiya – கால்வரைக்குமான முழுநீள ஜிப்பா
டான் டாவ்து12 dan daudu – பெண் தோற்றமுள்ள ஆண். ஒன்பது, மாமா என இழிவாகக் குறிக்கும் சொற்களுக்கு இணையான ஹௌசா மொழிச்சொல்.
“Bayan Layi,” in Per Contra (Online, Fall, 2012)
http://www.percontra.net/issues/25/fiction/bayan-layi

மலைகள் இணைய இதழ் Feb. 17 2016இதழ்92ல் வெளியானது.

No comments:

Post a Comment