Sunday 6 March 2016

தாய்லாந்து சிறுகதை - இரவில் உதிரும் விண்மீன்கள் (The night of the falling stars) தாய் : மனோப் தனோம்சீ (Manop Tanomsee)

இரவில் உதிரும் விண்மீன்கள் (The night of the falling stars) 
தாய் : மனோப் தனோம்சீ (Manop Tanomsee)
ஆங்கிலம் : மார்செல் பராங் (Marcel Barang)
தமிழில் ச.ஆறுமுகம்
***


சர்ர்ர்ர் ….
‘’யோவ்! இது மூத்திரக் கொட்டாய் இல்லைய்யா, ஆள் குடியிருக்கிற வீடு!’’
‘’ஓ!’’ வெள்ளைச் சட்டையும், கழுத்தில் தொங்கும் துணிப்பட்டையும் அணிந்த மனிதன், பதறிப் பின்வாங்கினான். ‘’அய்யோ, மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஏதோ குப்பை மேடு என்று நினைத்துவிட்டேன்.’’
நீளமாகத் தொங்கிய தலைமுடியும் பிசிர், பிசிரான நீண்ட தாடியுமாக ஒரு இளைஞன் தலையை நீட்டி, உதறிவிட்டு, ‘’பரவாயில்லை, நீ மட்டும்தான் இப்படி என்றில்லை.’’ எனச் சொல்லிவிட்டு, தலையை மீண்டும் திருப்பிக்கொண்டான். அந்த ஆள் காற்சட்டையின் இழுப்புப்பட்டியை மேலிழுத்துக்கொண்டே, ‘’யோவ், பொறுய்யா!’’ என்றான். கட்கத்தில் இடுக்கியிருந்த உருளைவடிவப் புட்டியைச் சரிப்படுத்தி இறுக்கிக்கொண்டான்.
‘’உனக்கு என்ன வேண்டும்?’’
சட்டையணிந்தவன் பழுத்து அழுகும் சப்போட்டாவைப்போல, மூச்சடைக்கும் கெட்ட நாற்றம் வீச,  நீளமுடிக்காரனின் முன்னால் போய் குத்துக்காலிட்டு உட்கார்ந்தான்.
‘’உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும்.’’
‘’இது என்ன எழவுக்கு! என்னிடம் யாரும் பேசுவதில்லை.’’
‘’அதற்காகத்தானே உள்ளே வரவேண்டுமென்கிறேன்.’’
அது இன்னும் மோசமான எழவு. ஆட்கள் இங்கே மூத்திரம் போகத்தான் வருவார்கள்; யாரும் உள்ளே வருவதில்லை.’’
‘’நான் உள்ளே வரட்டுமா?’’
‘’ம், சரி, வாங்க.’’
வீட்டின் உரிமையாளன் தலையை உட்பக்கமாக இழுத்துக்கொண்டான். அடைப்பு என்னும்  பெயரிலிருந்த கசங்கிய நெகிழித் தாளை, விருந்தாளி ஒதுக்கிக் குனிந்து உள்ளே தவழ்ந்தான்.
‘’ ஹா, அழகானதாக, நல்ல சுகமாக ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறாயே.’’
கொஞ்சம் அட்டையும் பலகைத்துண்டுகளும் மட்டும் கிடைத்துவிட்டால், படுக்கிற மாதிரி தளத்தைக் கொஞ்சம் பெரிதாக்கி, நட்சத்திரங்களைப் பார்க்கிற மாதிரி செய்துவிடுவேன்.’’
‘’என்னது, நட்சத்திரமா? ம், சரிதான். அப்படி சமாச்சாரமெல்லாம் உலகத்தில் இருக்கிறதென்பதே எனக்கு மறந்துவிட்டது. நீ, நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, கடந்த இருபது வருடங்களாக நான், நட்சத்திரங்களைப் பார்க்கவேயில்லை.
அந்த நீளமுடிக்காரன், கூரையை அண்ணாந்து பார்த்துவிட்டு, ஆட்காட்டி விரல் முனையை, இரண்டு பழைய அட்டைத்துண்டுகளுக்கிடையே இருந்த இடைவெளியில் நுழைத்து, அதைப் பெரிதாக்கினான்.
‘’நீயே பார்த்துக்கொள். இன்றைக்கு அதிகமாக இல்லை; ஏனென்றால், இது மழைக்காலம்.’’
விருந்தாளி இடைவெளியை நெருங்கியமர்ந்து, அதன் வழியாக வானத்தைப் பார்த்தான்.
‘’ வானம் என்ற ஒன்று இருப்பதைக் கூட மறந்து தொலைத்திருக்கிறேன்,’’ அவன் வியந்துகொண்டான். ‘’ஓ, நட்சத்திரங்கள் உண்மையிலேயே அழகானவைதாம். ஓ, அங்கே பார்! உருகி ஓடும் நட்சத்திரத்தைப் பார்த்தாயா?’’ 
‘’நான்தான் எப்போதும் பார்க்கிறேனே, எல்லா ராத்திரியும் இந்த ஓட்டை என் தலைக்கு நேராகத்தானே இருக்கிறது.’’ என்றான், அந்த இளைஞன், விஷயபூர்வமாக.
‘அது சரி, இப்போதெல்லாம், காலம் அப்படியிருக்கிறது! நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் நம் கண்ணில்படாமல் போய்விடுகிறது.’’
‘’இது என்னது?’’ என்றான், அந்த இளைஞன், அவன் முன்பிருந்த புட்டியைச் சுட்டிக்காட்டி.
‘’எது?’’ என்ற கழுத்துப்பட்டை தொங்கும் மனிதன், வானத்திலிருந்தும் கண்களை அகற்றிக் கீழே பார்த்தான்.
‘’ஓ, அதுவா….. நல்லது, அதுதான் ஷீவாஸ்.’’
‘’ஷிவா, ஹ்?’’
‘’சரி, உனக்கு ஷிவா தான்.’’
‘’அப்படியென்றால்? அது என்னது?’’
‘’அது, மது. வெளிநாட்டு இறக்குமதி, அதி பயங்கரமான விலை, உன்னால் நம்பவே முடியாது. அதில் பாதியை ஏற்கனவே குடித்துவிட்டேன். உனக்குக் கொஞ்சம் வேண்டுமா?’’
அந்த இளைஞன் பதில் சொல்லவேயில்லை. அவன் ஷிவா புட்டியை எடுத்து, வாக்காகத் திறந்து, வாய்க்கு உயர்த்தி ஒரு மிடறு குடித்தான்.
‘’ஓ, வாவ்!’’ அவன் வியந்து பாராட்டினான். வெயிலும் பனியும் துளைத்துக் கரடு முரடாகி, நகங்களெல்லாம் அழுக்காகிக் கறுத்துப்போன அவனது கை, வாயைத் துடைக்க உயர்ந்தது. ‘’நான் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளட்டுமா?’’
‘’ஏன்? தாரளமாக, முழுப்புட்டியுங்கூட எடுத்துக்கொள்.’’
இளைஞன் வாயடைத்துப்போனான். ‘’உண்மையாகவா?’’
‘’நிச்சயமாகத்தான். எடுத்துக்கொள்.
இளைஞன் புட்டியை மீண்டும் தரையில் வைத்தான்.
‘’நீ ஏன் எடுத்துக்கொள்ளவில்லை?’’ மதுவின் உரிமையாளன் கேட்டான்.
‘’என்னை என்ன செய்யச் சொல்வீர்கள்?’’
‘’எனக்குப் புரியவில்லை.’’
‘’இலவசமாக நான் எதையும் வாங்கிக்கொள்வதில்லை. நீங்கள் இதை எனக்குத் தந்தால், பதிலுக்கு நான் உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்.’’
‘’ஹா! ஹ்ஹ ஹ்ஹா! என்ன முட்டாள்தனம்? உனக்கு மரை தான் கழன்றிருக்கவேண்டும்.’’
‘‘அதெல்லாமில்லை. என்னை கிராக் பாட் - கீறல் சட்டி - என்றுதான் கூப்பிடுகிறார்கள்.’’
‘’அப்படியானால் சரி, அதேதான், உண்மையாக அதுவேதான். இந்தக் காலத்தில் போய், இப்படியெல்லாம் யாரும் நினைக்கமாட்டார்கள், தெரியுமா? எதுவும் முதல் போடாமல், அல்லது யாருக்கும் வேலையே செய்யாமல் அடுத்தவர்களிடமிருந்து,  எவ்வளவு அதிகம் கறந்துவிட முடியுமென்றும் இப்போதிருப்பதைவிட அதிக மகிழ்ச்சியாக இருக்கவும் கணக்குப் போட முயற்சிக்கிறார்கள்.’’
‘’எனக்குப் புரியவில்லை. இன்றைக்குக் காலையில் எனக்குப் பசித்தது. நேராகச் சந்தைக்குப் போனேன். வியாபாரிகளின் வண்டிகளிலிருந்து சாமான்களை இறக்கிவைக்க உதவிசெய்தேன். நான் தின்பதற்கு எதையாவது வாங்கிக்கொள்ள, அவர்கள் எனக்குப் பணம் தந்தார்கள். ‘’
‘’அப்படி வா, வழிக்கு. நீ, என்னோடு எத்தனை மணி நேரம் பேசுகிறாயோ, அத்தனை மணி நேரத்துக்கான விலையாக இந்தப் புட்டியைக் கொடுக்கிறேனென்று வைத்துக்கொள்ளேன்.’’  
இளைஞன் சிரித்தான்; அவன் கண்கள் ஒளிர்ந்தன. அவன் புட்டியை உயர்த்தி, ஆசை, ஆசையாக, ஒரு வாய் ஊற்றிக்கொண்டான்.
‘’உங்கள் ஷிவா நிரம்பவும் மென்மை! அப்படியே வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்குகிறது!’’
‘’வெளிநாட்டு மது சாப்பிட்டதே கிடையாதா?’’
‘’ம்ஹூம். கிடையவே இடையாது. மூன்றுசக்கர வண்டிக்காரர்கள் சிலசமயம் அவர்களுடைய கள்ளச்சாராயத்தில் கொஞ்சம் தருவார்கள், ஆனால் அதெல்லாம் ஷிவாக்குப் பக்கத்தில் வரமுடியுமா?’’
‘உண்மையாகவே, நீ மிகவும் அருமையான ஆள்தானென்று, எனக்குத் தோன்றுகிறது, பார்த்துக்கொள்.’’
‘’அருமை’’ என்று எதைச் சொல்கிறீர்கள்?’’
‘’சரி, அதை விடு. இதுக்குப் பதில் சொல்லு பார்க்கலாம் : உன் வீட்டு மேல் நான் சிறுநீர் கழித்ததற்கு இப்போதும் கோபமாக இருக்கிறாயா?’’
‘’கோபமா? இல்லை. மழை பெய்கிறதென்றுதான் முதலில் நினைத்தேன். கோபம் என்றால் என்ன? எனக்குத் தெரியவில்லையே.’’
‘’எவ்வளவு சரியாகச் சொல்கிறாய்! கோபத்தை மட்டும் நாம் தவிர்த்துவிட முடியுமானால், நம்முடைய வாழ்க்கையெல்லாம் எவ்வளவு சிறந்ததாகிவிடும். உலகம் முழுவதற்கும் கூட அது பேரின்ப மகிழ்ச்சியைக் கொண்டுவந்துவிடுமே.’’
நீண்ட, குறுக்கு மறுக்குத் தாடிக்காரன் கவனித்ததாகவே தெரியவில்லை; அவன் புட்டியை உயர்த்தி ஆசை, ஆசையாக இன்னுமொரு வாய் ஊற்றிக்கொண்டான்.
‘’மெல்ல, மெல்ல, மெதுவாக, இளைஞனே,’’ என்ற விருந்தாளி, தாடிக்காரனின் அழுக்கான தோளைத் தட்டிக்கொடுத்து, ‘’இல்லையென்றால் நீ சீக்கிரமே போதையேறி, புட்டியின் முழு மதிப்புக்கு நீ வேலையை முடிக்கமுடியாமலாகிவிடும்.’’ என்றான்.
வீட்டின் உரிமையாளன் பயந்திருக்கவேண்டும்; அவன் புட்டியைப் பட்டென்று கீழே வைத்துவிட்டான்.
‘’செய்தித்தாள்களெல்லாம் படிக்கப் பிடிக்கும் போலிருக்கிறது,’’ என்றான், கழுத்துப்பட்டை தொங்கும் நபர், சுற்றிலும் பார்த்துக்கொண்டே.   
‘’இல்லையில்லை. அதையெல்லாம் ஒரு அடைப்புக்காக - சுவராகப் பயன்படுத்துகிறேன்; படம் பார்ப்பேன்; எனக்குப் படிக்க முடியாது; அதையெல்லாம் போய்ப் படிக்க வேண்டியதில்லையென்று தான் நினைக்கிறேன்.’’
‘’ஆமாமாம், உண்மைதான். படிக்கமுடியாமல் இருந்திருந்தாலே இன்னும் நன்றாக இருந்திருக்குமென்று நிச்சயமாகச் சொல்வேன். தினமும் படிப்பதற்காக நான் எவ்வளவு நேரத்தை வீணடிக்கவேண்டியிருக்கிறதென்று உனக்குத் தெரியுமா? கிட்டத்தட்ட நான்கு மணிநேரம், தாயில் வருகிற ஐந்து வணிக நாளேடுகள், போதாதற்கு ஆங்கிலத்தில் இன்னும் இரண்டு. ஆதி முதல் அந்தம் வரை, தலைப்பு முதல் முடிவு வரை, விளம்பரம் உட்பட எல்லாவற்றையும் வாசிக்கிறேன். ஏன் இவ்வளவு நுணுக்கமாக ஒன்றுகூட விடாமல் படிக்ககவேண்டியிருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை. இவற்றில் அநேக எழவுக்குள்ளேயெல்லாம் நுழைந்து வெளியே வரும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்குமென்று உனக்கு எதுவுமே தெரிந்திருக்காது. என் தலை கருங்கல்லாகக் கனக்கிறது; என்னால் சிந்திக்க முடிவதெல்லாம், என் போட்டியாளர்களை எப்படி, என்ன செய்து தோற்கடிப்பதென்பது மட்டுமேதான்.’’
‘’எனக்குப் புரியவில்லை.’’
‘’உனக்குத் தெரியாது தான், இங்கே உன் உலகமே வேறே, வெளியே உள்ள உயரமான கட்டிடங்களின் உலகமோ வேறு. இந்தக் காலத்தில், இலாபம் சம்பாதிப்பது எப்படியென்பதைத் தவிர, எங்களுக்கு வேறொன்றை நினைத்துப் பார்க்கக்கூட நேரம் கிடையாது.’’
‘’இலாபம்?’’
‘’அந்த வார்த்தைகூட உனக்குப் புரியவில்லை, இல்லையா?’’
அந்தத் தாடி இளைஞன் உதட்டைப் பிதுக்கித் தலையை அசைத்தான்.
‘’இந்த ஷிவா புட்டிக்குள் நான் மூத்திரம் பெய்து, இந்தப் புட்டியிலிருக்கும் மதுவைக் குடிக்கும் யாரானாலும் பறக்கமுடியுமென்று அறிவிப்பதாகவும், மக்கள் அதை நம்புவதாகவும், நான் சொல்கின்ற விலை அநியாயத்துக்கு அதிகமாக இருந்தபோதிலும், அதை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் காத்து நிற்பதாகவும் வைத்துக்கொள்வோம். நல்லது. இந்தப் புட்டியிலுள்ள மூத்திரத்தை விற்பதில் எனக்குக் கிடைக்கும் பணத்தைத் தான் `இலாபம்` என்கிறோம். எவ்வளவு அதிக விலைக்கு நான் அதை விற்கிறேனோ, அந்த அளவுக்கு அதிக இலாபம் எனக்குக் கிடைக்கும்.’’
தாடிக்காரன் வாந்தியெடுக்கப்போவது போலச் செய்தான்.
‘’அப்படியென்றால், இந்தப் புட்டியிலிருப்பது உன் மூத்திரமா?’’
‘’அய்யோ, அப்படி இல்லைதான்!’’ வெள்ளைச்சட்டைக்காரன் சிரித்தான். ‘’வெளி உலகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறதென உனக்கு ஒரு கருத்துச் சொல்வதற்கு வசதியாக ஒரு உதாரணத்துக்கு அப்படிச் சொன்னேன். நீ புரிந்து வைத்திருக்கிற மாதிரியான நீதி, நியாயமெல்லாம் இங்கே கிடையாது.’’
‘’ `நீதி` என்றால் என்ன?’’
‘’சரி. நீ உண்மையிலேயே முட்டாள்தான், எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ஆனால் ஒன்று, சிலவேளைகளில் எனக்கு நானே சொல்லிக்கொள்வதுண்டு, ‘’நானும் கூட ஒரு முட்டாளாக இருந்தால், இப்போதிருப்பதைவிட எவ்வளவோ மகிழ்ச்சியாக இருப்பேன்.’’
‘’எனக்குப் புரியவில்லை.’’
‘’ஆமாமா, உனக்குப் புரியாதென்று நான் பந்தயம் வேண்டுமானாலும் கட்டுகிறேன். நீ இதைப் புரிந்துகொள்வதற்கு உலகத்தில் வழியே இல்லை. இப்போது, நீ கொஞ்சம் முன்னால் சொன்னமாதிரி, சந்தைக்குப் போ, காய்றிக்கூடைகளை இறக்கிச் சுமந்து, உதவி செய். உணவு வாங்குவதற்குத் தேவையான பணம், ஏதோ கொஞ்சத்தை நீயே சம்பாதித்துக்கொள்.’’
‘சில சமயங்களில் பணம் தரமாட்டார்கள், அதற்குப் பதில் சாப்பாடு தருவார்கள்.’’
‘’ஆங்., அப்படி வா வழிக்கு, அப்படி இல்லையென்றால் இப்படி, அதைத்தான் நாம் `நீதி` என்கிறோம். ஆனால், இந்தக் காலத்தில் என்னைப் போன்றவர்களெல்லாம் உங்களைப் போல நடப்பதில்லை. அவர்கள் என்ன செய்கிறார்களென்றால் சுமைக் கூடைகளையெல்லாம் உன் தலையில் ஏற்றி, நீ இறக்கிவைத்த பிறகு, உனக்கு சாப்பாடோ, பணமோ கொடுக்காமல் துரத்திவிடுகிறார்கள். உனக்குக் கொடுக்காமலிருந்ததை, அவர்களின் இலாபக் கணக்கில் சேர்த்துக்கொள்கிறார்கள்.’’
‘’இன்னும் கொஞ்சம் ஷிவா சாப்பிட்டுக்கொள்ளட்டுமா? நீங்கள் சொல்வதில் எனக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.’’
‘’தாராளமாக, அது முழுவதும் உனக்கேதான். மறந்துவிட்டாயா? அது, நீ என்னோடு பேசிக்கொண்டிருப்பதற்காக, நான் கொடுக்கும் கூலி.’’
இளைஞன் வாயெல்லாம் பல்லாகக் கண்கள் விரியப் புன்னகைத்து, அந்த அயல்நாட்டு மதுப்புட்டியை வாய்க்கு நேராக உயர்த்தி, ஆசை, ஆசையாக ஒரு மிடறு குடித்தான். நனைந்த மீசையை, அழுக்குப் படிந்த ஆட்காட்டி விரலால் ஒதுக்கிவிட்டுத் துடைத்துக்கொண்டான்.
‘’ என் உலகம் உன்னுடையதைப் போன்றதல்ல; உன்னுடையது முழுக்க முழுக்க நேர்மையானது. என்னுடையது முழுவதுமாகப் பொய்களாலானது.’’
‘’பொய்? நான் பொய் சொல்லுவதில்லை; ஏனென்றால் நான் யாரோடும் பேசுவதில்லை. உண்மையாகச் சொல்வதென்றால், மற்றவர்கள் தான் என்னோடு பேசுவதில்லை.’’
கழுத்தில் தொங்கும் பட்டைத்துணி கட்டியவன் சிரித்தான்.
‘’ஆனால், உனக்கு என்ன தெரியும்? ஒவ்வொரு நாளும், நான் நூற்றுக்கணக்கான பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது. என் நண்பர்களிடம் பொய் சொல்கிறேன், தொழில் கூட்டாளிகளிடம் பொய் சொல்கிறேன், என் கீழ் பணிபுரியும் சார்நிலைப் பணியாளர்களிடம்   பொய் சொல்கிறேன், என் குழந்தைகளிடம் பொய் சொல்கிறேன், என் மனைவியிடம் பொய் சொல்கிறேன். இவ்வளவு பொய் சொல்கிறேன், ஆனாலும் அதைப்பற்றிக் குற்ற உணர்ச்சி கொஞ்சம்கூட இல்லை. இன்னும் மோசம் என்னவென்றால், எனக்காக மற்றவர்களையும் பொய் சொல்லவைக்கிறேன். நான் சொல்வது, நீ தொலைக்காட்சி பார்த்ததில்லை, இல்லையா?’’
‘’பார்த்திருக்கிறேன். எல்லாப் பெட்டிகளிலும் ஒரே நேரத்தில் காட்சி தெரிகிற மாதிரி ஒரு கடை இருக்கிறதே, அங்கே  ரோட்டோரத்தில் நின்று, அவர்கள் என்னை உதைத்து அனுப்பும் வரையில், பார்ப்பேன். அதாவது அவர்கள் கடையைப் பூட்டவேண்டுமல்லவா, அதற்காகத்தான். தொலைக்காட்சி பார்ப்பது நல்ல வேடிக்கையாக இருக்கும். எனக்கு அது ரொம்பவும் பிடிக்கும். இங்கேயே ஒன்றை வைத்துக்கொள்ள எனக்கு ஆசைதான்.’’
‘’நல்லது, அங்கேதான் எனக்காகப் பொய்சொல்லுமாறு மற்றவர்களுக்கு உத்திரவு போடுகிறேன். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. விளம்பரங்கள் எல்லாமே பொய்தான், தெரியுமா?’’
இளைஞன் தலையை அசைத்து மறுத்தான். ‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது.’’
‘’உனக்குத் தெரியாது தான். கோடிக்கணக்கான மக்களுக்கும் தான் தெரியாது; ஏனென்றால், எவ்வளவு மென்மையாகச் சொல்லமுடியுமோ, அவ்வளவுக்கு மென்மையாகச் சொல்லுமாறு அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். மக்களுக்குப் பொய்யைப் பற்றித் தெரிந்துவிட்டால், நான் எப்படி என் தயாரிப்புகளை விற்க முடியும்?’’
‘’நீங்கள் மூத்திரம் பெய்கிறீர்கள், அதைத்தானே சொல்கிறீர்கள்?’’
‘’அதை மறந்து தொலை, அது ஒரு உதாரணத்துக்குச் சொன்னதுதானே. நான் சொல்வது, வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவை மற்றும் என்னால் எதையெல்லாம் தயாரிக்க முடியுமோ, அவை எல்லாவற்றையும். இந்தத் தயாரிப்புப் பொருள்களுக்கு பெரிய பெரிய வார்த்தைகளால், அதுதான் மிக,மிகச்சிறந்ததென  விளம்பரம் - அதாவது எனக்கு நிறைய, இலாபம் கிடைக்கும் வகையில் மக்களை நிறைய வாங்கச் செய்கிற  மாதிரியில் என்னென்ன முடியுமோ, அதைச்  செய்யவைக்கிறேன். 
 இந்த இலாபம் ரொம்பவும் சாமர்த்தியமானதாகத்தான் இருக்கும். நீங்கள் இவ்வளவு நேரமும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்களே.’’
‘’சரியாகச் சொல்கிறாய். இதுதான் உலகத்திலேயே மிகமிகச் சாமர்த்தியமான விஷயம். அதிலும் உனக்கென்ன தெரியும்? இந்தக் காலத்தில், ஒவ்வொரு முறையும் மூச்சினை இழுத்து, வெளிவிடுவதற்குள் நாங்கள் இலாபம் பார்த்துவிடுகிறோம்.
‘’எனக்குப் புரியவில்லை. இலாபத்தை நம்முடைய மூக்கு வழியாக நாம் எடுத்துவிட முடியுமென்றா சொல்கிறீர்கள்?
‘’அட, அது முடியாதுதான், முட்டாளே. அது சும்மா ஒரு பேச்சுக்கான அலங்காரம். இன்னும் கேட்கிறாயா? அதற்கு விருப்பம்தானா?’’
‘’தாடிக்காரன் தலையாட்டினான். ‘’ ஆமாம், நீங்கள் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லைதான்; ஆனால் நல்ல வேடிக்கையாக இருக்கிறது. நன்றாகக் கதை சொல்வதில் நீங்கள் வல்லவர்தான்.’’
‘’இது கதையெல்லாமில்லை. நான் சொல்வது உண்மை; நூற்றுக்கு நூறு உண்மை. இலாபம் என்பது மிகவும் வலிமையானது; உலகத்திலுள்ள இதயங்கள், நெஞ்சங்கள், மனங்கள், மூளைகள் எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கக்கூடிய அளவுக்கு வலிமையானது…….’’ அவனாகவே சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் சொன்னான், ‘’ அதாவது உன்னைத் தவிர. எல்லோரையும், ஏன் ஒவ்வொருவரையும், அதனுடைய அதிகாரத்துக்குக்குள் கொக்கி போட்டு ஈர்த்துக்கொண்டுவிடும்.’’
‘’அதனிடம் நிறைய துப்பாக்கிகள், அப்புறம், அல்லது ஒருவேளை மந்திரவாள் கூட இருக்குமோ?’’
‘’அப்படியெல்லாம் இல்லை. அதனுடைய ஆயுதங்கள், நீ புரிந்துகொண்டிருப்பது போல் வாளோ  துப்பாக்கியோ அல்ல; வெறுமனே தாள், நீ சுற்று அடைப்புக்காக - சுவராகப் பயன்படுத்துகிறாயே, அது போன்றதேதான்.
‘’ஹாங்?’’ வீட்டுக்காரனின் கண்கள் விரியத் திறந்தன. ‘’அப்படியென்றால், நீங்கள் சொல்கிற இந்த இலாபத்தை, நான் இங்கேயே வைத்திருக்கிறேன்! அப்படித்தானே!’’
‘’இல்லை.’’
‘’அதெப்படி இல்லாமல் போகும்? நீங்கள் இப்போதுதானே சொன்னீர்கள், இலாபம் என்பது தாள் மாதிரியென்று. ஓ, நீங்கள் என்னைக் குழப்புகிறீர்கள்.’’
நான் சொல்கிற தாள், பணம். எல்லோருக்கும் பணம் தேவை. பணம், உன்னை எது வேண்டுமானாலும், மிகமிகக் கெட்ட காரியங்களையும் செய்யவைத்துவிடும். உனக்குத் தெரியுமா, பணம் சிலரைக் கொலைகூடச் செய்யவைக்கிறது; மிருங்களைக் கொல்ல, மரங்களை வெட்டிக் காடுகளை அழிக்க, ஏன், எதிரில் தெரிகிற மலை முழுவதையுங்கூட காணாமல் செய்துவிடச் செய்கிறது. என்னைப் பொறுத்தவரையில், அது என்னைப் பொய் பேசவைக்கிறது;  மக்களிடமிருந்து பணம் பறிக்க வசதியாக அவர்களை மாட்டுச்சாணி மடையர்களாக்கச் செய்கிறது.’’
‘’எனக்குப் புரியவில்லை.’’
‘’கவலைப்படாதே, உனக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும், நான் பேசிக்கொண்டேயிருப்பேன்; ஏன், தெரியுமா? நான் இப்படி விவரமாக, உண்மையாகப் பேசிப் பலகாலமாகிவிட்டது. உண்மையாகவே நான் செய்கிற காரியங்களைப் பற்றி  நினைக்கிற ஒவ்வொரு கணமும் நான் எவ்வளவு துன்பப்படுகிறேனென்பதை நீ இப்போதாவது உணருகிறாயா? ஒவ்வொரு நாளும் மனிதனில் கீழுக்கும் கீழானவனாய், அற்பப்பதராக உணர்கிறேன். இலாபத்தைத் தவிர வேறெதைப்பற்றியும் நான் நினைப்பதில்லை. என்னுடைய இலாபம் எவ்வளவுக்கு அதிகமாகிறதோ, அவ்வளவுக்குப் பெரிய பணக்காரனாகிறேன். இந்தக் கோடைகாலத்திற்கு, என் குழந்தைகள் ஐரோப்பாவுக்குச் சுற்றுலா போகவேண்டுமென்கிறார்கள். என் மனைவி சொல்கிறாள், அவள் கணக்கில் ஒரு நூறுகோடி பாத் (183 கோடி இந்திய ரூபாய்) வங்கியில் வைப்புத்தொகையாகப் போட்டுவிடவேண்டுமாம், அவள் வேறு எதையும் என்னிடம் கேட்கமாட்டாளாம்.’’       
 ‘’ நூறு கோடி பாத்? அது  எவ்வளவு பெரிய தொகை? அவ்வளவு பெரிதாகவெல்லாம் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்போதைக்கப்போது, ஒரு பத்து – பாத் நோட்டு ஒன்று கிடைத்தாலே போதும், நான் மகிழ்ச்சியாகி விடுவேனே. தூங்கி விழுகிறவரைக்கும் அதைக் கையிலேயே வைத்துக்கொண்டிருப்பேன்.’’
‘’அதேதான். சரியாகப் பிடித்துவிட்டாய். இப்போதெல்லாம், நாளாக, நாளாக, என்னிடம் இருக்கிற பணத்துக்கெல்லாம் ஏதாவது மதிப்பு உண்டுமா அல்லது அப்படிச் சம்பாதிப்பதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்று எனக்குச் சிறிதளவு கூடத் தெரியவில்லை. நாம் பெரிய பணக்காரப் புடுங்கியாகிவிடலாம், ஆனால் மனிதனாக இல்லாவிட்டால், அதில் என்னய்யா அர்த்தம் இருக்கிறது?’’
‘’எனக்குக் கொஞ்சமும் விளங்காத விஷயங்களை நீங்கள் பேசிக்கொண்டேயிருக்கிறீர்கள். இன்னொரு வாய் குடித்துக்கொள்ளட்டுமா?
‘’நீ கேட்கவேண்டியதே இல்லை. நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே, அது முழுவதும் உனக்குத்தானென்று. ரொம்பச் சீக்கிரமாக ஏற்றிக்கொள்ளாதே, ஏனென்றால், நீ போதையில் படுத்துவிட்டால், அப்புறம், நான் பேசுவதற்கு ஒரு நண்பன் இல்லாமலாகிவிடுமே.’’
‘’நண்பன்? நான் உங்கள் நண்பனென்றா சொல்கிறீர்கள்?’’
‘’ஆமாம். உனக்குத் தெரியும், என் வாழ்க்கையில், இந்த நிமிஷத்தில் எனக்கு நண்பர்களென்று யாரும் இல்லை – நண்பர்கள் என்றால் என்னைப் புரிந்துகொள்பவர்களை, நேர்மையான, உண்மையான அன்புகொண்டவர்களைச் சொல்கிறேன். என்னுடைய சுற்று வட்டத்தில், நண்பர்கள் ஒருவருக்கொருவர் பொய்சொல்பவர்களாக, எப்போதும் அடுத்தவனுடைய பலவீனத்தைத் தெரிந்துகொண்டு, அதில் இலாபம் தேட முயற்சிப்பவர்களாக இருக்கின்றனர். என் நண்பர்கள் என்னை வார்த்தைகளாலும் ஒப்பந்தங்களாலும் கட்டிப்போடுகிறார்கள்; அவர்களுக்கு என் மீது இரக்கமேயில்லை. நான் வாக்கு தவறுபவனாக, ஒப்பந்தம் மீறுபவனாக, அல்லது தடுமாறிக் கீழே விழுந்துவிட்டால், நான் மட்டும் வெள்ளியும் தங்கமும் கொண்டு என்னைப் பாதுகாத்துக்கொள்ளாவிட்டால், என்னைக் கொன்றேவிடுவார்கள்.
‘’எனக்கு நண்பர்கள் இருந்ததே கிடையாது; ஒருவர் கூடக் கிடையாது. உங்கள் நண்பர்களைப் போல உங்களை என்னால் கொலைசெய்யமுடியுமா என்றும் எனக்குத் தெரியவில்லை.’’
‘’எனக்கு நிச்சயமாகத் தெரியும், நீ அதை ஒருநாளும் செய்யமாட்டாய்.’’
‘’இல்லை, அதற்குப் போதுமான அளவுக்கு எனக்குக் கல்நெஞ்சம் இல்லை. சீனப் புத்தாண்டின்போது, கோழிகளின் கழுத்தை அறுக்க என்னை வேலைக்குக் கூப்பிட்டார்கள்; ஆனால், என்னால் அதைச் செய்யவே முடியவில்லை. அவை என் கையால் சாக விரும்பவில்லையென்பதை நான் உணர்ந்தேன்.’’ 
‘’சரியாகச் சொல்கிறாய். யாரும் சாக விரும்புவதில்லை; யாரும் அடிபடுவதற்கு, ஏமாற்றப்படுவதற்கு விரும்புவதில்லை. ஆனால், என் நண்பர்கள் ஒருவருக்கொருவர் கழுத்தினை அறுப்பதற்கான வாய்ப்பு கிடைக்காதாவென்று தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நான் சிறுவனாக இருந்தபோது, என் பள்ளித்தோழர்கள் என்னை எப்போதும் சீண்டிக் கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் பள்ளி முடிந்த பிறகும் காத்திருந்து என்னை அடித்து விளையாடினார்கள். அவர்கள் என்னை அதிகமாகவே காயப்படுத்திவிட்டனர். அவர்கள் என் வாயில் குத்தி உதட்டைக் கிழித்தார்கள்; கண்களில் அடித்துக் கன்னிப்போகுமாறு கறுப்புக் கண்களாக்கிவிட்டனர், அதனால் திருப்பித் தாக்கிச் சண்டையிடுவதென முடிவுசெய்தேன். அதன்பிறகு அவர்கள் என்னைச் சீண்டியதேயில்லை.’’
‘’கழுத்தில் தொங்கும் துணிப்பட்டை அணிந்தவன் சிரித்தான்.
‘’என் நண்பர்கள் என்னை வேறு விதத்தில் தாக்கினார்கள். அவர்கள் வணிகத் தந்திரங்கள் மூலம்,  என் பங்குக்கான இலாபத்தை ஏமாற்றுவதன் மூலம் என்னைத் தாக்கினார்கள். ஓ, நிச்சயம், நாங்கள் ஒருவருக்கொருவர் முறுவலித்துக்கொள்கிறோம்; ஆனால், எங்கள் இதயத்தின் ஆழத்தில் எப்போதும் ஒருவருக்கொருவர் அடுத்தவரின் இலாபத்தைப் பறித்துக்கொள்ள வாய்ப்பினைத் தேடிக்கொண்டுதானிருக்கிறோம். என் நண்பர்களின் இதயங்களை என்னால் ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாதென்பதும் எனக்குத் தெரியும்.
தாடிக்காரன் புட்டியை உயர்த்திக் கடைசிச் சொட்டு மதுவினையும் ருசித்து முடித்தான். அவன் குரல் தடுமாறித் திக்கத் தொடங்கியது. ‘’நீங்கள் ரொம்ப – ரொம் - பப் பெரிய்ய்யப் பணக்காரராகத்தான் இருப்பீர்கள்.’’
‘’எனக்கு ஒரு மிகப் பெரும் பல்பொருள் பேரங்காடி, ஒரு குளிர்பான வியாபாரம், ஒரு காகிதத் தயாரிப்பு ஆலை, கூடவே கள்ளத்தனமாக மரம்வெட்டும் இரண்டு தொழில்கள் அனைத்தும் இருக்கின்றன.’’
‘’அப்படியென்றால் நீ ஒரு மிகப் பெரீய்ய கோ… கோடீஸ்வரன் தான்?’’ 
‘’அது மிகச் சரியானதுதான். ஆனால் ஒன்று தெரிந்துகொள், கோடீஸ்வரனின் வாழ்க்கை ஒன்றும் மகிழ்ச்சியானது அல்ல. எனக்குப் பன்னிரண்டு கார்கள் – வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று, என் மனைவிக்கு இரண்டு, என் குழந்தைகளுக்கு ஆளுக்கொன்று இருக்கின்றன. என் வீடு ரொம்பவும் பெரியது, அதற்குள் நுழைந்தால் எறும்பு மாதிரி உணரத் தொடங்கிவிடுவாய், அது கிட்டத்தட்ட இரண்டு எக்டேர் நிலத்தோடு சேர்ந்திருக்கிறது. ஆனால், உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, உன் வீட்டோடு ஒப்பிட்டால் பாதிக்குக்கூடத் தேறாது; ஏனென்றால், அதில் அன்பு இல்லை, சுகம் இல்லை. முழுவதும் அழுத்தம், விதிமுறைகள், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டுமென்று ஒருநாளும் தீராத, முடிவேயில்லாத பேராசை.’’
‘’நான் உன்னை நம்பமாட்டேன். நானும் ஒரு கோடீசுவரனாகி உனக்குப் போட்டியாகிவிடுவேனோவென்று பயப்படுகிறாய்.’’
‘’ஆகக் கடைசியில் உனக்கும் கிண்டலாகத்தான் ஆகிவிட்டதா? நல்லது, அதைப்பற்றி ஒருநாளும் கனவு காணாதே. அது மாதிரியான ஒரு கனவு கூட பயங்கரமான திகில் நினைவாகத்தான் இருக்கும். என் வாழ்க்கையில் பணத்துக்கு இனிமேலும் மதிப்பு இருக்குமென்ற நினைப்பு எனக்கு இல்லை. என்னை நானே கேட்டுக்கொள்கிறேன், இப்படிப் பைத்தியம் மாதிரி எதற்காக இன்னும் வேண்டும், இன்னும் வேண்டுமென்று நாயாய் உழைக்கிறேன். வங்கியில் போட்டுப் பூட்டவா அல்லது எதிர்காலத்துக்காகச் சேர்க்கவா?’’ அவன் ஒரு நிமிடம் பேசுவதை நிறுத்திவிட்டுத் திரும்பி அவனது இளம் நண்பனிடம் கேட்டான்: ‘’உன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி நீ எப்போதாவது யோசித்திருக்கிறாயா?’’
அந்த இளைஞன் தலையை அசைத்து மறுத்தான். ‘’என்னுடைய எதிர்காலமா? இன்றைக்கு உயிர் வாழ்கிறேன். பசித்தால், சந்தைக்குப் போய்த் தட்டுகளைக் கழுவி உதவுகிறேன்; அவர்கள் எனக்குத் தின்பதற்கு ஏதாவது தருகிறார்கள். குளிக்கவேண்டுமென்று தோன்றினால், சந்தைக்குப் பின்பக்கத்திலுள்ள சதுப்பு நிலத்துக்குள் நடக்கிறேன். அந்தத் தண்ணீர் நாற்றமடிக்கிறதுதான்; ஆனால், அது, என் உடம்பு நாற்றத்தைவிடக் குறைவானதுதான் என்று எனக்குத் தெரியும்.’’
‘’சிலநேரங்களில் வாழ்க்கை என்பது நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கலைப் போன்றதல்ல.’’ என்றான், கழுத்தில் தொங்கும் பட்டைத்துணிக்காரன். ‘’உண்மையான மகிழ்ச்சி என்பது, குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறது? என்னிடம் ஒரு ஆயிரம் கோடி இலட்சம் பாத் என் பெயரில் இருக்கிறதென்றாலும், நிலவொளியில் உதிரும் ஒரு நட்சத்திரத்தை அல்லது உதிரும் ஒரு கனவினைப் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற இன்னும் பல விஷயங்கள் இந்த உலகத்தில் இருக்கிறதென்பதையே நான் முழுவதுமாக மறந்துவிட்டிருக்கிறேன். மாறாக, பணம் ஒன்று மட்டுமே மகிழ்ச்சியைக் கொடுக்குமென்று நினைக்குமளவுக்குப் போயிருக்கிறேன். நீ சொல்வதுதான் சரி : சில நேரங்களில் மனிதன் தனக்குத் தானே மிகவும் அதிகமாக்கிக் கொள்கிறான். நாம் நாளையைப் பற்றி மட்டும் நினைக்கவில்லை, அதற்கும் அடுத்த நாள், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு, அடுத்த பத்தாண்டு, நூறாண்டுகள் எனப் போய்க்கொண்டேயிருக்கிறோம். நாம் நமக்காக மட்டுமல்ல, உழைக்கிறோம், நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மட்டுமல்ல எதிர்காலப் பரம்பரை வாரிசுகள் எல்லோருக்காகவும் உழைக்கிறோம். நான் மட்டும் எதிர்காலம் பற்றி நினைக்கவில்லையென்றால், எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கலாம், என்னால் அப்படி இருக்க முடியாதா?’’ 
‘’என்னால் நிச்சயப்படுத்திச் சொல்ல முடியவில்லை.’’ இளைஞன், அந்தக் கழுத்தில் தொங்கும் பட்டைத்துணியைச் சந்தேகத்தோடு பார்த்தான்.
‘அது எப்படி?’’
‘’உங்கள் கழுத்தைச் சுற்றியிருப்பதை என்னவென்று சொல்கிறீர்கள்?’’
‘’அது, கழுத்துப் பட்டைத்துணி – டை. ஏன்? அது உனக்கு வேண்டுமா?’’
‘’இல்லை. அதைப் போய் எதற்குக் கட்டியிருக்கிறீர்களென்று வியப்பாகத் தோன்றுகிறது. அவ்வளவுதான்.’’
‘’எனக்குந்தான்.’’ அதைப்பிடித்து வேகமாக இழுத்து உருவியெடுத்துவிட்டான், அவன். ‘’இது ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை, உண்மையில் நீ என்னை என் அலுவலகத்தில் பார்க்கவேண்டும்: நான் இதற்கு மேலொரு கோட் போடவேண்டும். எனக்கு இது பிடிக்கவில்லையென்றாலும்,  முடிவேயில்லாத அளவுகடந்த எரிச்சலாக இருந்தாலும், எங்கே போனாலும், இது மாதிரித்தான் ஆடை அணியவேண்டும். சிலநேரங்களில், ஆக்ரோஷமான மனநோயாளிகள் அல்லது சிறைக்கைதிகளுக்கு அணிவிக்கும் ஒரே முழுநீள உடைக்கட்டுக்குள் மாட்டிக்கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றும்.’’
‘’ஆனாலும், நீங்கள் என்னைப் போல உடை அணியமுடியாது.’’
‘’முடியாதுதான், ஆனால், எந்தக் கவலையுமில்லாமல் இவ்வளவு சுதந்திரமாக இருக்கிறாயே என்று எனக்குப் பொறாமைதான்.’’
‘’உண்மையில் எனக்கு உங்களைப் போல ஆடை அணிய ஆசைதான்.’’ 
‘’நல்லது, உலகம் தலைகீழாய் இருக்கிறது. ஹே, இன்னும் கொஞ்சகாலத்துக்கு அப்படித்தான் தலைகீழாக இருக்கவேண்டும். என்னிடம் எதுவுமில்லாமலிருந்தபோது, நானும் உன்னைப் போலவே நினைத்த காலம் இப்போது, நினைவுக்கு வருகிறது. ஒரு சூட்டுக்கும் டைக்கும் ஏங்கி, ஒருநாள் கண்டிப்பாக அது எனக்குக் கிடைக்குமென்று எனக்கு நானே நிச்சயித்துக்கொண்டு, கடைசியில், அதை அணிய முடிகிற நாளில், என்னுடைய ஆடைகளுக்குள் ஒரு கைதியைப் போல உணர்கிறேன். பணம் எனக்கு அலுத்துப் போயிற்று; என் வேலை எனக்குச் சலிப்பாக இருக்கிறது; நான் செய்கிற எல்லாமே எனக்குச் சலிப்பாக இருக்கிறது; ஏனென்றால், வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி என்பது இதுவல்ல என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால், இதுகுறித்து என்னால் எதுவும் செய்யமுடியாது. புலிமேல் சவாரி செய்யும் மனிதனை எப்போதாவது பார்த்திருக்கிறாயா? அதிலிருந்து அவனால் இறங்கமுடியாது. அதிலிருந்து இறங்குகிற நிமிடத்தில், புலி அவன் கழுத்தைப் பிடிக்கும். அதே நிலைமைதான் எனக்கும். இது போன்ற செயற்கையான வாழ்க்கையில் எந்தப் பொருளுமில்லையென்றும், இது எந்தவிதமான மகிழ்ச்சியையும் அளிக்காதென்றும் எனக்குத் தெரியுமென்றாலும், என்னால், இதைவிட்டு வெளியேற முடியாது. நான் இப்படியே பொய்களுக்கு மேல் பொய்களாக அடுக்கிக்கொண்டு,   கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி, அவர்களின் இயலாமையை, பலவீனத்தைப் பயன்படுத்தி, மேலும் மேலும் பணம் சம்பாதித்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். நீ உனக்காகவே ஏற்படுத்திக்கொண்டுள்ள உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ முடிவதைக் கண்டு எனக்குப் பொறாமையாகத்தான் இருக்கிறது. ஆனால், உலகம் எனக்கானதாக ஏற்கெனவே மாறிவிட்டிருக்கிறது. உணவுக்கும், துணிக்கும், மருந்துக்கும், குடியிருக்க இடத்துக்கும் போராடிக்கொண்டிருந்த உலகமல்ல, இது. இப்போது, முழுவதுமாகப் புதியதாகி, எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிப்பதற்காக, ஒவ்வொருவரும் அடுத்தவரோடு சண்டையிடக்கூடியதாக மாறிப் போயிருக்கிறது.’’
‘’உங்களுக்கு, இன்னும் தூக்கம் வரவில்லையா?’’ எனக் கேட்ட இளைஞன் பெரிதாக ஒரு கொட்டாவியை வெளியேற்றினான். ‘’தூங்கவேண்டுமானால், இங்கேயே படுத்துக்கொள்ளுங்கள். நான் தூங்குகிறவரைக்கும் நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.’’ 
‘’அப்படியென்றால், உனக்குத் தூங்கவேண்டும், இல்லையா?’’ என்ற, அந்தச் சட்டையணியந்த மனிதன், கையை உயர்த்தி மணிக்கட்டில் அணிந்திருந்த வைரம் பதித்த தங்கக்கடிகாரத்தைப் பார்த்தான். ‘’காலை நான்கு மணி ஆகிவிட்டது. உனக்குத் தூக்கம் வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நல்லது, என் புட்டியின் மதிப்புக்குச் சரியானதை நான் பெற்றுவிட்டேன். நீ இப்போது தூங்கலாம். நான் கிளம்புகிறேன்.’’
‘’இல்லை, இல்லை. இன்னும் நான் மகிழ்ச்சியைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கிளம்பப்போவது நிச்சயம் தானா?’’
‘’ஆமாம், இன்னும் கொஞ்சம் சொல்லவேண்டுமென்று விரும்புகிறேன்.’’
‘’சரி, சொல்லுங்கள்.’’
வெளியிலிருக்கும் உலகம் (NIC – Network Interface Card) இணையதளங்களின் முகக்கூறுத் தகடுகளின் உலகம். ஒவ்வொருவரும் நிக் – தகடுகளைப் போலவே நினைக்கவும், செயலாற்றவும், வாழவும் செய்கின்றனர். எப்படிப் பெறப்பட்டதென்ற சிந்தனைக்கு இடம் ஏதும் அளிக்காமல், எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவையும் பெற்றுவிடுமாறு கற்பிக்கப்பட்டுள்ள, அந்த ஆன்மா அற்ற நிக் தகடுகளில் ஒன்றாகவே நானும் இருக்கிறேன்.’’
‘’என்னென்னவோ கிண்டலான வார்த்தைகளையெல்லாம் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். எனக்குப் புரியவில்லை.’’
சட்டையணிந்தவன் உரக்கச் சிரித்துக்கொண்டே, நெகிழித்தாள் அடைப்பினைத் திறந்து, தவழ்ந்து வெளியேவந்தான்.
மரியாதைப் பண்பு நிறைந்த வீட்டு உரிமையாளனும் விருந்தாளியை வழியனுப்பத்   தவழ்ந்து வெளியே வந்தான்.   
’ உன்னோடு பேசுவதற்காக, நான் திரும்பவும் வரலாமில்லையா?’’
 ‘’நிச்சயமாக. ஆனால் ஒன்று, நீங்கள் உங்கள் ஷிவாவுடன் தான் வரவேண்டும்.’’
 ‘’அதற்கென்ன, சரி.’’
‘’அப்புறம், இன்னொரு விஷயம்.’’
‘’சொல்லு’’
‘’என் வீட்டு மேலே திரும்பவும் மூத்திரம் பெய்யக்கூடாது.’’
 அவர்கள் இருவரும் ஒரேநேரத்தில் வாய் திறந்து, உரக்கச் சிரித்தார்கள். பின்னர், வெள்ளைச்சட்டை மனிதன் இருளுக்குள் நடக்க, குறுக்கு மறுக்குத் தாடி, குப்பைக்குவியல்  வீட்டுக்குள் நுழைந்து மறைந்தான்.
உதிரும் நட்சத்திரமொன்று வானத்தின் குறுக்காக ஓடிப்பாய்ந்தது. 
*****

 
புதுவிசை இலக்கியக் காலாண்டிதழ் இதழ் – 45 பிப்ரவரி 2016 இல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment