Saturday 9 July 2016

அமெரிக்கச் சிறுகதை - ஒளி புகா இழைகள், புனிதத் தலங்கள் Fiber Optics, Holy Places By AMIE BARRODALE

ஒளிபுகா இழைகள், புனிதத் தலங்கள்  Fiber Optics, Holy Places
ஆங்கிலம்  : ஆமி பரோடேல் ( Amie Barrodale)
தமிழில் ச.ஆறுமுகம்  


Image result for amie barrodale                                  


ஆமி பரோடேல் டெக்சாஸில் புத்த மார்க்கத்தினராக வளர்ந்தவர். பர்னார்டில் கல்லூரிப்படிப்பு முடிந்ததும் தி ஆனியன், வைஸ் போன்ற இதழ்களில் முதுநிலை ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் ஓராண்டுக்கு இந்தியாவில் பணிபுரிந்தார். தற்போது வைஸ் இதழில் புனைவியல் ஆசிரியராகப் பணிபுரியும் அவர் கான்சாஸ் நகரில் கணவருடன் வசிக்கிறார்.

அயோவா எழுத்தாளர் பணிக்கூடத்தின் கற்பித்தல்-படைத்தல் உறுப்பினரான இவரது சிறுகதைகள் மற்றும் கட்டுரைப் படைப்புகள் பாரிஸ் ரிவ்யூ, ஹார்ப்பர்ஸ் மாகஸீன், வைஸ், மெக்ஸ்வீனீஸ் மற்றும் இதர இதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. வில்லியம் வீ என்ற சிறுகதைக்காக பாரிஸ் ரிவ்யூ இவருக்கு பிளிம்ப்டன் டிஸ்கவரி விருதினை 2012ல் வழங்கியுள்ளது.   

தற்போது தமிழாக்கம் செய்யப்படும் சிறுகதை அடங்கியுள்ள அவரது You Are Having a Good Time என்ற சிறுகதைத் தொகுதியில்  மொத்தம் பத்து கதைகள் உள்ளன. ஆமி பரோடேலின் கதை சொல்லும் மாந்தர்கள் அதிகம் குடிப்பவர்களாக, தவறான விஷயங்களைப் பேசுபவர்களாக, தவறான மனிதர்களை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். பேராவல் கொண்டவர்களான இவர்களைப் பற்றிப் பேசும் கதைகள் வழக்கமான கதைகளைப் போலன்றி மாறுபட்டு நிகழ்கின்றன. இருப்பினும் வாசகனுக்குள் வாழ்க்கை மதிப்பீடுகள் குறித்து விரும்பத்தக்க பல சமரசங்களை ஏற்படுத்துவதில் வெற்றிபெறுவதாக அமைகின்றன.
*********

அவர்கள் இருவரும் காதலாகப் புணர்ந்து முடித்த பின், அவன் சொன்னான், “எமா, புதிய புத்தகம் ஒன்று வாசித்துக்கொண்டிருக்கிறேன். அது ஒரு பழைய புத்தகம், ஆனால் அதைப்பற்றி  அதற்கு மேல் அதிகம் தெரிந்தவர் யாரும் இல்லை. அந்த எழுத்து, ஆசிரியரின் வேலைக்கு உலைவைத்து, அவரது பணிவாழ்க்கையையே சிதைத்துவிட்டதென்றாலும், அது ஒரு  அருமையான புத்தகம்.  கவனத்தை ஈர்க்கிற ஒரு கவர்ச்சிகரமான  பெண், அவள் – வேறென்ன சொல்வது, அவள் … ஸ்லோயேன் நிவாம், அவளை உனக்குத் தெரியுமா?”
“அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.” என்றாள், எமா.
“உனக்கு இந்த ஸ்லோயேன் நிவாமைப் பிடிக்கும், பாரேன்.  வேடிக்கையான பெண். அவளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு உன் ஞாபகந்தான்.”
“ நீ என்னதான் சொல்லவருகிறாய்?”
மறுநாள் விமான நிலையத்தில், ஸ்லோயேன் நிவாமின் நினைவுக்குறிப்புகள் புத்தகம் ஒன்றை அவளிடம் கொடுத்த அவன் சொன்னான், “வாசித்துப் பார், நீயே தெரிந்துகொள்வாய்.”
பாதுகாப்புச் சோதனைக்கான வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போதே அவள் வாசிக்கத் தொடங்கிவிட்டாள். மிசௌரியின் மேல் பறக்கும்போது, நாவலின் பாதிக்கு, ஸ்லோயேன் நிவாமும் அவளது முதலாளிக்குமான ஒரு சண்டை கட்டத்துக்கு வந்துவிட்டாள். நடுவான ஒரு இடை வாக்கியத் தொடர். ஸ்லோயேன் நிவாம் எழுதுகிறாள், “ அவரைக் காதலித்தேனென்று நான் இப்போது சொல்வது தவறான நேரமாக இருக்கலாம். ஆனால், நான் காதலிக்கத்தான் செய்தேன்.” எமா புத்தகத்தை மார்போடு அழுத்திக்கொண்டாள்.
“உங்களுக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?” அருகிலமர்ந்திருந்த பெண் கேட்டாள்.
கன்னத்தைத் துடைத்த எமா, தலையாட்டினாள். அந்தப் பெண்ணிடமிருந்து திரும்பிக்கொண்டாள். சிறு சிறு புட்டிகளாக பல ஸ்காட்ச் புட்டிகளை அவள் விழுங்கியிருந்தாள். அவள் கடுகடுப்பானவளாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதனாலேயே அந்தப் பெண்ணிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்ட அவள், “ எவ்வளவு அழகு, ஹூம்? ஜன்னலுக்கு வெளியே, மிசௌரி. தெரிகிறதா? மிஸ்ஸௌரி? மிசெரி, துயரம். அது அப்படித்தான் – நான் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் துயரத்துக்கு மேலாக மிசெரி – மிசௌரிக்கு மேலாக இருக்கிறேன்.”
அந்தப் பெண்ணுக்கு ஒரு மாதிரி, சங்கடமாகத் தோன்றியிருக்கும் போலத்  தெரிந்தது. அவள் மறுபக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.
ஸ்லோயேன் நிவாம் இரண்டு நாவல்கள் எழுதியிருந்தாள். அவை தற்போது அச்சில் இல்லை. அமேசானில் ஒன்று ஒரு பென்னி + அனுப்புகைச் செலவுக்கும் மற்றொன்று 109 டாலருக்கும் விற்பனையில் இருந்தது. எமா இரண்டையும் அனுப்புமாறு எழுதினாள்.    
கிறித்துமசுக்கு முதல்நாள் புத்தகங்கள் வந்தன. எமா அவளுக்குப் பிடித்தமான ஸ்பெஷல் சாம்பெய்ன் சர்பத் தயாரித்தாள். இரண்டு புட்டிகள் சாம்பெய்னை ஒரு பாத்திரத்தில் கவிழ்த்து, உறைவிக்குள் வைத்து, அரைமணி நேரத்துக்கொரு முறை கலக்கிச் செய்யவேண்டியது, அது. படுக்கையில் படுத்துப் படிக்கும்போது, அவள் சாம்பெய்ன் சர்பத்தைக் குடித்து முடித்தாள்.
ஸ்லோயேன் நிவாமின் முதல் நாவல் மணமான ஒரு மனிதனுடனான அவளது நெடுநாள் தொடர்பு பற்றியது. எமாவால் முடியாத ஒன்றினை நிவாம் எட்டிப் பிடித்திருந்தாள். வேடிக்கையானதென்றும் வசியமென்றும் உலகத்தை நினைக்கவைத்த ஒன்றை, ஒருவரைக் காதலிக்கும் வழியினை அவள் முழுவதுமாகக் கைப்பற்றியிருந்தாள்.
எமாவின் மணமான மனிதன் இதைத்தான் சொல்ல முயன்றானா? எமா அப்படி நினைக்கவில்லை. அந்த நாவல்களை அவன் படித்திருந்ததாக அவள் நினைக்கவில்லை; அப்படியே வாசித்திருந்தாலும், அவனால் அதைப் புரிந்திருக்க இயலாது. அவனைப் பொறுத்தவரை அந்த உறவு என்பது ஒரு தப்பித்தலுக்கான வால்வு. ஆனால் அவளுக்கோ, அது கவிதை. ஒருமுறை அதை அவனுக்கு, இப்படிச் சொல்ல முயற்சித்தாள்,”என் கண்ணில்படுகிற அனைத்திலும், ஒவ்வொரு இழையிலும் நீ இருக்கிறாய். டெனிம் ஆடையில் மூன்று இளைஞர்களைக் காணுகிற போதுங்கூட, ஏற்கெனவேயே நான் அதை உனக்கு விவரித்திருக்கிறேன். அதை எனக்குள் விளங்கிக்கொள்ளும் முன்பாக, உன்னுடனான உரையாடலில் ஈடுபடுகிறேன்.” அதன் பின்னர் ஒரு சில மாதங்களுக்கு  லாஸ் ஏஞ்சல்சுக்குச் செல்வதென்பது அவனால் முடியாத காரியமாக இருந்தது.
ஆனால், ஸ்லோயேன் நிவாம் அதைத் தெளிவாகத் தெரிவிக்கிறாள்; ஏனென்றால் அவள் அவளது மணமான மனிதனைப்பற்றி மட்டுமே வெட்டவெளிச்சமாகப் பேசுகிறாள். அதிலும், அவள் அவளது வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிகளாக விவரிக்கிறாள். பிரான்ஸ் நாட்டில் ஒரு விமான நிலைய கட்டிடத்திற்கு வெளியே பயணச்சீட்டுப் பகுதியில் வழிதவறிப்போன அவள் ஒரு இரவு முழுவதும் நீளமான பெஞ்சு ஒன்றில் அன்றாடக் கூலிக்கு வேலை தேடும் பிரெஞ்சு நாடோடிக் குழு ஒன்றுடன் கழிக்கவேண்டியிருந்தது. அவர்களில் ஒருவன் அவளுக்கு ஆப்பிள் ஒயின் கொடுத்து உபசரித்துவிட்டு மற்றவர்களிடம் சொன்னான்,    ”சாதாரணமாக, மிகச் சாதாரணமாகத்தான் இருக்கிறாள். அவளுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை.” அவளது படுக்கையறைக்குள் நுழைந்து, வெளித்தெரிந்த செங்கல் சுவரில் அமர்ந்த வௌவால் ஒன்றினைப் பற்றியும், அவள் அதை எப்படி வெறுங்கையால் பிடித்து  வெளியே எடுத்தாள் என்பது பற்றியும் சொல்கிறாள். அவளது நாவல் முழுக்க பிறமனை நயந்த உறவினை நியாயப்படுத்துவதாக, பொதுவாக ஒவ்வொருவரும் சொல்வதான – அவன் மணவிலக்கு பெறவேண்டும் அல்லது அவள் அவனை விட்டு விலகவேண்டும் என்ற பொதுப்புத்தி விவகாரத்தை முற்றாக நிராகரிப்பதாக இருந்தது. ஸ்லோயோன் நிவாம் எந்த ஒன்றையும் செய்யவில்லை. நாவலின் முடிவில் அவள், மணமான அவனைக் கேட்கிறாள், “நான் உன்னுடனேயே இருக்கவேண்டுமென்று நீ எப்போதும் விரும்புவாயா?” அவன் சொல்கிறான், “நீயே தான்.”     
அதிகாலை மூன்று மணிக்கு நாவலை முடித்ததும், எமா, மணமான அவனுக்கு நீண்ட ஒரு செய்தியைத் தயாரித்தாள். `அனுப்பு` விசையை அவள் தொட்டபோது, அவளது அலைபேசியின் திரை வெற்றானது.  பிரதானத் திரையிலிருந்து அவள் செய்தித்திரைக்குத் திரும்பினாள். அய்யோ! வரைவுச் செய்தியை அது இழந்திருந்தது.
பின்னர் முதல் இரண்டு வரித்தொடர்கள் மட்டும் உருண்டு திரண்டு வந்தன. அவை சென்று சேர்ந்துவிட்டன என்பதை அவள் புரிந்துகொண்டாள்; ஆனால், மீதிச் செய்திகள் அழிந்துவிட்டனவே! அதிர்ச்சியில் திகைத்துப்போன அவள் அந்த இரண்டு வரிகளை மீண்டும் வாசித்தாள். அவை அநியாயத்துக்குப் பரிதாபமாகத் தெரிந்தன : நான் இவ்வளவு நேரமும் ஒளிபுகா இழைகள், புனிதத் தலங்களை வாசித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன். இப்போதுதான் அதை முடித்துக் கீழே வைத்தேன். அவள், ஒரு பூனைக்குட்டியை விவரிக்கிற இந்த அழகான பகுதி அதிலிருக்கிறது – அவள் ஜோன்”
எமா குழம்பிப்போய்விட்டாள். அவளது வரைவிலிருந்து மேலும் இரண்டு வரிகள் உருண்டு வந்தன: ”நிவாம் – காசியின் தெருக்களில் - இது தாங்கவியலாத வியப்பு. அவள் அங்கே, ஒரு குறுகியகாலப்பணிக்காக,   வந்திருக்கிறாள் - அப்போதுதான் பிரார்த்தனைக்காக”
எமா புரிந்துகொண்டாள். அந்த மணமானவனின் பழைய அலைபேசி அவளுடைய நீண்ட செய்தியினை இருபத்திரண்டு துண்டுப்பகுதிகளாகச் சிதைத்துக்கொண்டிருந்தது. அதைத் தடுத்து நிறுத்தும் திறன் அவளுக்கு இல்லை. பிரான்சிலிருந்த அந்த மணமானவனுக்குச் சென்றுகொண்டிருந்த அவளது நீண்ட வரைவிலிருந்து திரண்டுவந்த மற்றுமொரு துண்டுப் பகுதியை அவள் கவனித்தாள்.
மிரட்சியில், அதை நிறுத்துவதற்காக அவளது அலைபேசியை அணைத்தாள். மின் அடுப்புக்குச் சென்று அதைத் திறந்து, கதவில் சாய்ந்து நின்றாள். அங்கிருந்து குளியலறை தெரிந்தது. அப்படியே அலைபேசியைக் கழிப்பறைத் தொட்டிக்குள் வீசிவிடுவதாகக் காட்சிப்படுத்திப் பார்த்தாள். பின்னர் அலைபேசியின் இயக்கு விசையைத் தட்டிவிட்டுக் காத்திருந்தாள்.
திரையில் காட்சிகள் ஒவ்வொன்றாக உருப்பெறத் தொடங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் இதழ்கள், “ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்” எனத் தவித்தன.
வரைவுகள் உண்மையிலேயே திரண்டுவரத் தொடங்கின.
கங்கை ஆறு, முற்றுமாக சலிப்படையச் செய்வதாக அவள் கருதிய அந்த ஆறும் வாசனைத்திரிகளின் புகையும் உடல்களின் நாற்றமுமாக அவள் அப்போதுதான் இருமிமுடித்திருந்தாள்; பின்னர் அவள்”
”இந்த அன்பைக் கோருகிற, வீடற்ற பூனைக்குட்டியை, சிறிது முடியுடனான தோல் போர்த்தப்பட்ட அந்த ஒல்லிக்குச்சியைக் காண்கிறாள்; அவள் அப்போது அந்த மணமானவனுடன் இருக்கிறாள்; அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வதோடு”
“அது முற்றிலுமான ஒரு பைத்தியக்காரத்தனமாக இருந்தபோதிலும், அதனை எடுத்துச் சென்றேயாக வேண்டுமென்று அவர்களுக்குத் தெரிகிறது. அந்தப் பூனைக்குட்டி வேறு மிகவும், வெறுந்தோலாக மெலிந்து, உண்மையில் பிழைக்கிற நிலையிலா இருந்தது? ஆக”
“ அவர்களுடைய அறைக்கு – அவர்கள் பணத்தைத் தண்ணீராக இறைத்திருந்த, மிக ஆடம்பரமான அறைக்கு அதனை எடுத்துவரும்வரையில் கூட அவர்கள் அதனை உணரவில்லை - அவர்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர”
“விடுதியில், வாயில் காப்பவனுக்கு கையூட்டு கொடுக்கவேண்டியிருந்தது; ஏனெனில், அவர்களுக்கு, உடல் முழுதும் சேறாகியிருந்த அந்தப் பூனையை மறைத்து எடுத்துச்செல்லவேண்டுமென்று தோன்றியிருக்கவில்லை – அந்தப் பூனைக்குட்டியின் முன் கையில்”   
“மூன்று இடங்களில்  முறிவு ஏற்பட்டிருந்தது. அதனால், அடுத்தநாள், அவர்கள் அதனை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள்; அங்கேயுள்ள ஒவ்வொரு அழகான, இனிய இந்திய மருத்துவ”
“மாணவரும் பூனையின் கையில் முறிவு ஏற்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்ள- அவர்கள் மாணவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் எப்போது முறிவினைத் தெரிந்துகொண்டார்கள் என்பதை நீங்கள் சொல்லமுடியும், எப்படியென்றால்,”
“பூனைக்குட்டி `மியாவ், மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்` எனக் கத்திக்கத்தி அழுதுகொண்டேயிருக்கிறது! ஆக, ஐந்தாவது மருத்துவ மாணவர் அந்தப் பாவப்பட்ட”
“பிறவியின் கையை அழுத்தும்போது, அதோடு நிறுத்திக்கொள்ளும்படி ஸ்லோயேன் இடையில் புகுந்து சொல்லப் போதும்போதுமென்றாகி, ஆனாலும் அந்தச் சித்திரவதை அத்துடன் ஒழிகிறது. அங்கே முழுவதுமாக பசுக்களின் வரைபடங்கள்”
“நிறைந்த சுவர் மற்றும் ஒரு அறுவைசிகிச்சைக்கூடம், பசுக்களுக்கான காப்புக்கவசம் இருக்கிறது. ஆனால், அந்த வரைபடங்கள், சிறுகுழந்தையால் வண்ணமிடப்பட்டதுபோல இருக்கின்றன; அங்கிருந்த மிக அடிப்படைத் தேவையான”
“பொருட்கள், ஆனால் இந்த மாணவர்கள், பசுவின் உட்புறம் செல்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவார்கள் என்பதை உணர்கிறாள். கோட்டு அணிந்த இந்த இளைய ஆண்களும் அறுவைசிகிச்சை நிபுணர்களும் உள்ளே செல்கிறார்கள்”
“ஆக, அவளுடைய பூனையின் கை ஏற்கெனவே முறிந்துபோனதென்பதால், கையை அறுவைசிகிச்சையால் வெட்டியெடுக்க அதன் மயிர்ப்பகுதியைச் மழித்து நீக்கவேண்டியிருக்கிறது. அதனால், அவர்கள் பூனைக்குட்டியை இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ளும்படி அவளிடம் சொல்ல,”
“பூனை பயந்து மிரண்டுபோயிருக்கிறது. அவள் அதன் முதுகினைப் பற்றியிருக்க, நிகழ்ந்ததிலேயே மிக மோசமான அருவருக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்கள் அந்தப் பிராணியின்”
”மேல்தோலை மழிக்கின்றபோது, பூனை கடந்த இருபத்துநான்கு மணி நேரத்தில் ஏதேனும் உணவு உட்கொண்டதாவெனக் கேட்க, ஸ்லோயேன் நிவாமுக்கும் அவள் காதலில் இருந்த அந்த மணமான மனிதனுக்கும்”
அந்த விஷயம் தெரியாமலிருக்க, அதனால் அறுவைசிகிச்சை செய்யமுடியாமலாகி, அவர்கள் அதனை மீண்டும் விடுதிக்கே கொண்டுசெல்ல, ஆனால் அதுவோ   மேற்கொண்டும் அவர்களின் பிடித்திருக்க”
“அனுமதிக்கத் தயாராக இல்லை. அப்புறமாக அதன் முன்கை அகற்றப்பட, அப்படியே அது பிழைத்து வாழ்ந்துவிட இயலுந்தானென்றாலும், அவள் அதனை வீட்டுக்குள் ஒளித்துவைத்துப் பாதுகாக்கவே, அதனாலும் முன்கை இல்லாமலேயே”
”வாழ்ந்துவிட முடிந்தது. ஆனால், ***ஒரு மாதத்திற்குப் பின்னால்** அவள் வேற்றுப்பணிக்காக ஹைதிக்குச் செல்லவிருந்தபோது, அந்த பாவப்ப்பட்ட பிராணிதான் எடுத்துச் செல்லவியலாத”
“கடைசிப் பொருளாக, ஆனால், அதற்காக அவளால் அதனை அப்படியே தன்னந்தனியாக< விட்டுச்சென்றுவிட  இயலாது. அது இறப்பதற்காக காட்டுக்குச் செல்கிறது, பாலைவனத்தில் ஏசுவைப் போல, என அவள் எழுதுகிறாள், நானோ தேம்பித் தேம்பி”
”அழுதுகொண்டிருந்தேன், அழுதுகொண்டிருந்த நேரத்தில் பாருங்கள், நான் ஏற்கெனவேயே சொல்லியிருக்கிறேனே, என் வீட்டிலிருக்கும் அந்தச் சுண்டெலி  அடுப்பைத் தின்றிருக்கிறது. ஆக, விஷயம் என்னவென்றால், சிலவேளைகளில் வாழ்க்கை அவ்வளவு”
‘அழகாக இருக்கமுடியும்.”
காலையில் சாய்மெத்தையில் கண்விழித்தாள், எமா. அவள் அரணக் காலணிகளைக் கூடக் கழற்றியிருக்கவில்லை. நிர்மலமாக அவள் எழுந்தாள்; பின்னர் கடந்த இரவினை நினைத்தாள். அலைபேசியைப் பாய்ந்து எடுத்தாள்.
அதிகாலை 5.15க்கு அந்த மணமான மனிதன், அவளுடைய வரைவு முழுவதற்குமாகச் சேர்த்து, “GOOD TIMES” என இரண்டே வார்த்தைகளில் பதிலளித்திருந்தான். பின்னர் பலமணி நேரங்கள் கடந்தபின், அவன் வரைவனுப்பியிருந்தான்: நான் நாட்டில் இல்லாதபோது, மின்னஞ்சல்தான் சிறந்தது. வருத்தமாகத்தானிருக்கிறது, இருந்தாலும் ரோமிங் கட்டணங்கள் அநியாயத்துக்குப் பைத்தியம் பிடிக்கவைக்கின்றன.X.”  
மலைகள் இணைய இதழ் எண் 100 நாள் ஜூன்ல் 18, 2016 இல் வெளியாகியுள்ளது.  

Download Pdf                                                                                                                                                                                                                                                 http://h       harpers.org/archive/2016/06/fiber-optics-holy-places/   
           மலைகள் இணைய இதழ் எண் 100 

Single Page

nt PageTop of Form

No comments:

Post a Comment