Sunday, 2 June 2019

ட்ரமான்டனா, வடதிசை மரணக்காற்று Tramontana - காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்


ட்ரமான்டனா, வடதிசை மரணக்காற்று Tramontana
ஸ்பானியம் – காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்(கொலம்பியா)
ஆங்கிலம் – எடித் கிராஸ்மான்
தமிழில் ச.ஆறுமுகம்
மிகவும் பரிதாபகரமான அவனது மரணத்திற்குச் சில மணிநேரம் முன்பாக, நான் அவனை ஒரே ஒரு முறை மட்டுமே, புகழ்வாய்ந்த பார்சிலோனா கிளப்பான பொக்கேசியாவில் பார்த்தேன். அப்போது அதிகாலை மணி இரண்டு. கூடுகை விருந்தினை, கடேக்வெஸ் சென்று முழுமைப்படுத்தும் விருப்பில், அவனைத் தம்முடன் அழைத்துச்செல்ல முயன்றுகொண்டிருந்த ஒரு இளம் ஸ்வீடானியக் குழுவினர் அவனைத் துளைத்துக்கொண்டிருந்தனர். அந்தக் குழுவில் பதினொரு ஸ்வீடானியர்கள் இருந்தனர்; அவர்களில் ஒருவரை, ஒருவர்  வேறுபடுத்திச் சொல்வது மிகவும் கடினம்; ஏனெனில் அவர்கள் ஆண், பெண் எல்லோருமே, அழகாக, ஒரே சாயலாக, ஒடுங்கிய இடுப்பும் நீண்ட பொன்னிற முடியுமாகத் தோன்றினர். அவனுக்கு இருபது வயதுக்கு மேல் இருக்காது. அவனது தலையினை முழுவதுமாக மறைத்து, நீலக் கருஞ்சுருள்கள் நிறைந்திருக்க, அம்மாக்கள் நிழலிலேயே நடக்குமாறு பழக்கிய கரீபியர்களுக்கே உரிய வழுவழுப்பான வெளிறிய மஞ்சள் மேனியும் ஸ்வீடியப் பெண்களை, ஏன், சிலவேளைகளில் ஒருசில பையன்களையும் கூடக் கிறுக்குப் பிடிக்கச்செய்கிற அராபியக் கண்களும் கொண்டிருந்தான். அவர்கள் அவனை மதுவகத்தினுள், பொம்மை ஒன்றைக் கையில் ஏந்தி, அது பேசுவதாகக் குரல்கொடுக்கும் வென்ரிலாக்குயிஸ்ட்2 கலைஞரின் கைப்பாவையைப் போல் அமர்த்திவைத்து, அவனைச் சுற்றிநின்று ஊரறிந்த காதல்வரிப் பாடல்களை, அவற்றுக்கேற்ற தாளத்தில் கைகளைத் தட்டிக்கொண்டே பாடி, அவனைத் தம்முடன் வருமாறு தூண்ட, மீண்டும் மீண்டுமாக முயற்சித்தனர்.
பெருத்த அச்சத்தில், அவன், அவனுக்கேயான காரணங்களை விளக்கிச் சொல்ல முயன்றான். யாரோ ஒருவர் தலையிட்டு, அவனைத் தனியே விட்டுச் செல்லுமாறு கத்த, அந்த ஸ்வீடானியர்களில், சிரிக்கும்போது தள்ளாடுகிற3 ஒருவன் அவரோடு மோதினான்.
“அவன் எங்களுக்குத்தான் சொந்தம், “ என்று உரக்கக் கத்திய அவன். “நாங்கள், அவனைக் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்தோம்.” என்றான்.
நான் சிறிது நேரத்திற்கு முன்புதான், நண்பர்கள் குழுவுடன் பாலவ் இசை அரங்கத்தில் டேவிட் ஆய்ஸ்ட்ராக்கின் நிறைவுப் பாடல் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அங்கு நுழைந்திருந்தேன். ஸ்வீடானியர்களின் ஐயுறவு வாதத்தில் எனக்கு உடலெங்கும் பற்றியெரிந்தது. அந்தப் பையன் சொன்ன காரணங்கள் நம்பிக்கை சார்ந்தவை. கடேக்வசின் நவீன மதுக்கூடம் ஒன்றில் ஆன்டிலியன் தீவுக்கூட்டப் பாடல்களைப் பாடுவதற்காகப் பணியமர்த்தப்பட்ட அவன், கடந்த கோடையில் ட்ரமான்டனாவால் வீழ்த்தப்படும் வரையில், அங்குதான் வாழ்ந்திருக்கிறான். ட்ரமான்டனாவின் இரண்டாம் நாளில் அவன் எப்படியோ அங்கிருந்து தப்பி, இனிமேல் ட்ரமான்டனா இருந்தாலும் அல்லது இல்லாமலிருந்தாலும் அங்கு திரும்பவும் செல்வதில்லையென்று தீர்மானித்ததோடு, அப்படி எப்போதாவது திரும்பிச் சென்றால், மரணம் அங்கே அவனுக்காகக் காத்திருக்கப்போவது நிச்சயமென்றும் நம்பினான். கோடையின் மிகை வெப்பம் மற்றும் அந்தக் காலத்திய காட்டமான கேட்டலான் மதுவகை, எல்லாமாகச் சேர்ந்து மனித இதயங்களில் தூவிய காட்டுவிதைகளின் விளைச்சலான அந்தக் கரீபிய நம்பிக்கையினை ஸ்காண்டிநேவியப் பகுத்தறிவாளர்களால் புரிந்துகொள்ள இயலாதுதான்.
வேறு எவரொருவரையும் விட நான், அவனை நன்றாகவே,  புரிந்துகொண்டேன். கடேக்வஸ், கோஸ்டா ப்ரேவா4 கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள மிக அழகிய நகரங்களில் ஒன்று என்பதுடன் மிகவும் நன்றாகப் பேணிப் பாதுகாக்கப்படுகிறவற்றில் ஒன்றுமாகும். இதில், அந்த நகரத்திற்கான ஒடுங்கிய நெடுஞ்சாலை, அடியற்றப் படுகுழி ஒன்றின் விளிம்பில் முறுக்கிச் செல்வதற்கும் மணிக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் ஓட்டுவற்கான கொஞ்சமும் ஆடாத ஆன்மபலமும் தேவைப்படுகிறதென்ற உண்மைக்கும் ஒரு இடமிருக்கிறது. பழைய வீடுகளெல்லாம் வெள்ளை வெளேரென உயரம் குறைந்தவையாக மத்தியதரைக்கடற்பகுதி மீன்பிடி கிராமங்களின் பாரம்பரியக் கட்டுமான பாணியிலிருந்தன. புதிய வீடுகள், அசல் இணக்கத்தினை மதிக்கின்ற, புகழ்பெற்ற கட்டுமான நிபுணர்கள் கட்டியவை. நகரத்தெருவை ஒட்டி மறுபக்கமாக அமைந்துள்ள ஆப்பிரிக்கப் பாலைவனங்களிலிருந்து வெப்பம் வீசுவதாகத் தோன்றும் கோடைக் காலத்தில், கடேக்வஸ், பாழாய்ப்போன பல்மொழிப் பேபல்5லாகத் தோற்றங்கொண்டு, ஒரு மூன்று மாதங்களுக்கு ஐரோப்பாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர்வாசிகளோடும் குறைந்த விலைக்கு விற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஒரு வீடு  வாங்கும் பேறு பெற்றவர்களான அயல் நாட்டவரோடும் சொர்க்கத்தின் கட்டுப்பாடு6 என்கிற அந்த ஊர்ப் பாரம்பரியம் காக்கும் விதிகளின் காரணமாகப் போட்டியில் மோதிக்கொள்வார்கள். ஆனால், கடேக்வஸ் மிக அதிக ஈர்ப்புடன் தோன்றும் இளவேனில் மற்றும் இலையுதிர்காலங்களில், பேய் போல் விடாப்பிடியாகத் துரத்திப் பற்றிப் பிடித்துக்கொள்ளும் ட்ரமான்டனா நிலக்காற்றின் பயங்கரமான நினைவிலிருந்து யாரொருவரும் தப்பமுடியாதென்றும் அந்தக் காற்றில் பைத்திய நோயின் விதைகள் கலந்திருப்பதாகவும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அங்கே ஏற்கெனவே பாடம் பெற்ற சில எழுத்தாளர்களும் கூறுகின்றனர்.
ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வாழ்க்கையில் ட்ரமான்டனா குறுக்கிடும் வரையில், மிகுந்த பற்றுதலுடன் அந்த நகரத்திற்கு வருபவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியத் தூக்க நேரத்தில், ஏதோ ஒன்று நிகழப்போவதான விவரிக்க இயலாத ஒரு முன்னறியும் உணர்வினால், அந்தக் காற்று வருவதற்கு முன்பாகவே நான் உணர்ந்தேன். எனது வாழியல் உணர்வுகள், கனமான பாரத்தால் கீழிழுக்கப்படுவதாக, எந்தக் காரணமும் இல்லாமலேயே, துயரமாக உணர்ந்ததோடு, அப்போது பத்து வயதுக்கும் குறைவான எனது இரு குழந்தைகளும் இணக்கமற்ற எதிரிப் பார்வையோடு வீட்டைச் சுற்றிச்சுற்றி என்னைப் பின்தொடர்ந்து விரட்டுவதாக ஒரு நினைவு. சிறிது நேரத்திலேயே கதவு சன்னல்களை இழுத்துக் கட்டுவதற்கான சில கடற்கயிறுகள் மற்றும் கருவிப் பெட்டியும் கையுமாக அங்கு வந்த வாயில் காவலர் எனது சோர்வினைக் கண்டு வியப்பேதும் கொள்ளவில்லை.
”இது ட்ரமான்டனா! இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளாக இங்கே வந்துவிடும்.” என்றார், அவர்.
மிக வயதான அந்தக் கடலோடி மனிதர், முன்னர் எப்போதும் அணிந்த பாணியிலான அவரது நீர்க்காப்புச்சட்டை, தொப்பி மற்றும் புகைக்குழாயோடு இந்த உலகத்தின் அனைத்து உப்புகளாலும் பொரிந்துபோன மேனியையும் கொண்டிருந்தார். அவரது ஓய்வு நேரத்தில், பல போர்களில் கலந்து வென்ற படைத்துறை வீரர்களுடன் சதுக்கத்தில் உருட்டுப் பந்து விளையாடுவார். அந்தக்  கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள மதுவகங்களில் பசியைத் தூண்டும் மது வகைகளை அருந்துவார். அவருடைய படைத்துறை மனிதர்களின் கேட்டலான் மொழியால் எந்த மொழியினரும் புரிந்துகொள்ளும்படியான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருந்தது. இந்த பூமிக் கிரகத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்களும் அறிமுகமென்பதில் அவருக்கு மிகுந்த பெருமிதம். ஆனால், அவருக்கு உள் நகரங்களைத் தெரியாது. “பிரான்ஸைப் போலப் புகழ் கொண்டதாக இருந்தாலும் அந்தப் பாரிஸைக் கூட எனக்குத் தெரியாது.” என்பார், அவர். கடலில் செல்லாத எந்த வாகனத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக முதுமையின் பாதிப்பு அதிகமாகி, அவரால் வெளியே செல்லமுடியாமலாகிவிட்டது. அதனால், அவரது பெரும்பகுதி நேரத்தையும், காலமெல்லாம் அவர் வாழ்ந்த அதே மகிழ் விருப்புடன், காவலர் அறையிலேயே கழித்தார். ஒரு தகரப் பாத்திரத்தைச் சாராய விளக்கில் சூடுபடுத்தி, அவருக்கான உணவைச் சமைத்துக்கொண்டார். ஆனால், ஒப்பற்ற கேட்டலான் சமையல் முறையின் சுவைமிக்க உணவு வகைகளை வழங்கி, எங்களை மகிழ்ச்சிப்படுத்த அவருக்கு, அவை மட்டுமே போதுமாக இருந்தன. விடிகாலையில் அவர் ஒவ்வொரு தளமாகச் சென்று, அங்குத் தங்கியிருப்பவர்களைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார். நான் இதுவரை சந்திருத்திருந்த மனிதர்களில், கேட்டலோனியர்களின் தன்னார்வப் பெருந்தகைப்பண்பும் மேற்பூச்சற்ற மென்மையும் கொண்ட மிகமிக இணக்கமிக்கவர்களில், அவரும் ஒருவர். அவர் மிகக் குறைவாகவே பேசினாலும், அவரது பாணி, சொல்லவந்ததை நேரடியாகக் குறிப்பாகச் சொல்வதாக இருந்தது. செய்வதற்கு வேறெதுவும் வேலையில்லாமலிருக்கும் போது, அவர், கால்பந்துப் போட்டிகளின் வெற்றிதோல்விகளை முன்கணிக்கும் படிவங்களை நிரப்பிக்கொண்டிருப்பார்; ஆனால் அவர், அநேகமாக அவற்றை அனுப்புவதேயில்லை.
அன்று அவர் பேரிடரை எதிர்நோக்கி, கதவுகளையும் சாளரங்களையும் பாதுகாப்பாகக் கட்டிக்கொண்டே, எங்களிடம் ட்ரமான்டனாவை, வெறுக்கத்தக்க ஒரு பெண்ணைப் போலில்லாமல், அந்தப் பெண் இல்லாவிட்டால் அவரது வாழ்க்கையே அர்த்தமிழந்துபோவதுபோல் பேசினார். கடலோடி ஒருவர், நிலக்காற்று ஒன்றுக்கு இப்படிப் புகழ் பாடுவது எனக்குப் பெருவியப்பாக இருந்தது.
“இது பழங்காலத்தவற்றில் ஒன்று,” என்றார், அவர்.
மாதங்கள் மற்றும் நாட்களால் அல்லாமல், ஆண்டுகள், ட்ரமான்டனா வீசிய எண்முறைகளால் கணக்கிடப்படுவதான தோற்றத்தை அவர் ஏற்படுத்தினார். ” கடந்த ஆண்டு, இரண்டாவது ட்ரமான்டனா வந்து, இரண்டு மூன்று நாட்களில் குடலழற்சி ஏற்பட்டது.” என்று ஒருமுறை என்னிடம் சொன்னார். இதுவே ஒவ்வொரு ட்ரமான்டனாவுக்குப் பிறகும் ஒருவர் பல ஆண்டுகளுக்கான முதுமையைப் பெறுகிறாரென்ற அவருடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ட்ரமான்டனா மிக மோசமானதென்றும் நம்மை வசப்படுத்திவிடுகிற வருகையாளரென்பதாகவும் அவரை ஆட்டிப்படைக்கும்  நம்பிக்கை அப்படியொரு வலுவுடையது; அதைப்பற்றித் தெரிந்துகொள்கிற பெருவிருப்பத்தை நமக்குள் அவர் நிரப்பிவிடுகிறார்.
நாங்கள் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்கவேண்டியதாக இல்லை. அவர் கிளம்பிச் சென்றதுமே, வீளை ஒலி ஒன்று சிறிது, சிறிதாக வலுவாகித் தீவிரமாகி, நிலநடுக்கத்தின் இடியோசைக்குள் கரைந்துபோனதை நாங்கள் கேட்டோம். பின்னர் காற்று வீசத் தொடங்கியது.      
முதலில் இடைவெளி விட்டுவிட்டு, அலையலையாகப் பின்னர் அதுவே அடிக்கடி நிகழ்வதாகி, அவற்றில் ஒன்று அப்படியே அசையாமல், கணநேர இடைவெளிகூட இல்லாமல், எந்த இடைமூச்சும் எடுக்காமல், அப்படியே நிலைத்துநின்றதோடு தீவிரமும் கொடூரமும் கொண்ட ஒரு மீமிகைத் தன்மைகொண்டதாகத் தோன்றியது. கரீபிய வழக்கத்துக்கு மாறாக, எங்கள் குடியிருப்பு, மலைகளைப் பார்ப்பதாக அமைந்திருந்தமை, கடலை நேசித்த பழங்காலப் பாணி கேட்டலோனியர்களின் அந்த வித்தியாசமான முன்னுரிமை, அக்கறையெடுத்துக் கவனிக்காமலிருந்ததால் ஏற்பட்டிருக்கலாம். அதனால், காற்று எங்கள் தலையை வீழ்த்திவிடுவதுபோல மோதிச் சாளரக்கதவுகளை இழுத்துக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துவிடுவதாகப் பயமுறுத்தியது.
எனக்குள் அதிக ஆர்வமூட்டித் துளைத்தது எதுவெனில், பொன்னிறக் கதிரும் மாசுமறுவற்ற வானமுமாகக் கடல்வெளி மீண்டும் காணமுடியாத ஒரு அழகுடன் விளங்கியதுதான். அதனாலேயே கடலைக் காட்டுவதற்காகக் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்வதென முடிவெடுத்தேன். மெக்சிகன் நிலநடுக்கங்கள், கரீபியன் புயல்களுக்கிடையே வளர்ந்தவர்கள் தானே, அதனால் பெரிதோ, சிறிதோ, சாதாரண ஒரு காற்றுக்காகக் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையெனத் தோன்றியது. வாயிற் காவலரின் அறையை முன்பாதம் ஊன்றிச் சத்தமில்லாமல் கடந்தபோது, அவர் பீன்சும் சுவைச்சாறுமாக ஒரு உணவுத் தட்டத்தின் முன் பிடித்துவைத்த சிலை போல் அமர்ந்திருந்ததைச் சாளரம் வழியே கண்டோம். நாங்கள் வெளியே வந்ததை, அவர் கவனிக்கவில்லை.
வீட்டின் வெளிச்சுற்றில் காற்றுப்படாத பக்கமாக நடக்கும் வரையில் சமாளித்துக்கொண்டோம்; ஆனால், காற்றுத் திசையில் திரும்பிய மூலைக்கு வந்தபோது, காற்றின் திசையில் காற்றோடு காற்றாக அடித்துச் சென்றுவிடாமலிருக்க அருகிலிருந்த விளக்குக் கம்பத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளவேண்டியிருந்தது. எங்களை மீட்பதற்கு அக்கம்பக்கத்தவர் சிலரை அழைத்துக்கொண்டு வாயிற்காவலர் வரும்வரையில், அப்படியே நின்று, அத்தனை கலவரத்துக்கிடையிலும் அசைவற்றுத் தெரிந்த தெளிவான கடலைப் பார்த்து வியந்துகொண்டிருந்தோம். பின்னர், இறுதியாகக் கடவுள் மீது பாரத்தைப் போட்டு, வீட்டுக்குள் அடைந்து கிடப்பதே அறிவுள்ள ஒரே செயலென ஆற்றிக்கொண்டோம். கடவுள் எப்போது வழிவிடுவாரென்பது பற்றித்தான் யாருக்கும் எதுவும் தெரியாமலிருந்தது.
இரண்டு நாட்கள் முடிகின்ற நிலையில், அந்தப் பயங்கரமான காற்று ஒரு இயற்கைச்செயல் அல்லவென்றும் எங்களை நோக்கி, எங்களை நோக்கி மட்டுமே யாரோ ஒருவரால் தனிப்பட்ட பகையினால் ஏவப்பட்டதென்றும் எங்களுக்குத் தோன்றியது, வாயிற்காவலர் இரண்டு நாளிலும் பலமுறை எங்களை வந்து பார்த்துக்கொண்டார்; எங்கள் மனநிலை குறித்துத் தான் அவர் அதிக அக்கறை காட்டினார். அந்தப் பருவகாலத்தில் கிடைத்த பழங்கள் மற்றும் மிட்டாய்களைக் குழந்தைகளுக்காகக் கொண்டுவந்து தந்தார். செவ்வாய்க்கிழமை மதிய உணவுக்கு, கேட்டலோனிய சமையலின் தலைசிறந்த முயல் மற்றும் நத்தைக்கறி தந்து உற்சாகப்படுத்தினார். அதை அவர், அவருடைய தகரப் பாத்திரத்தில் தான் சமைத்திருந்தார். அத்தனை திகிலுக்கு மத்தியில் அது ஒரு பெருவிருந்தாகத் தான் அமைந்தது.
காற்றைத் தவிர வேறு ஏதும் நிகழாத புதன்கிழமை தான் என் வாழ்க்கையிலேயே மிக நீண்ட நாளாக அமைந்தது. ஆனால், அது விடியலுக்கு முன்பான இருட்டைப் போன்ற ஒன்றாகத் தானிருக்கவேண்டும்; ஏனென்றால், நடு இரவுக்குப் பின் நாங்கள் எல்லோரும் ஒரேநேரத்தில் ஒருசேர, மரணத்தின் முன்பு மட்டுமே நிகழக்கூடிய அமைதியான முழுமையான அசைவற்ற நிலையால் மூச்சுத் திணறி விழித்தெழுந்தோம். மலையைப் பார்த்துநின்ற மரங்களில் ஒரு இலை கூட அசையவில்லை. அதனால், நாங்கள், காவலரின் அறையில் விளக்கு எரிவதற்கு முன்பாகவே வெளியே சாலைக்கு வந்ததோடு, விடிவதற்கு முந்தைய வானத்தை அதன் ஒளிரும் அனைத்து விண்மீன்களுடன், பளபளத்துக்கொண்டிருந்த கடலையும் பார்த்து மகிழ்ந்தோம். அப்போது ஐந்து மணிகூட ஆகவில்லையென்றாலும் பல பயணிகளும் அந்தப் பாறைபடிந்த கடற்கரையில், விட்டு விடுதலையான உணர்வினைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். மூன்று நாள் தவம் முடித்த பாய்மரப் படகுகள், பாய்களை விரித்தன. 
நாங்கள் வெளியே சென்றபோது, காவலரின் அறை இருண்டிருந்ததின் மீது எந்தவித கவனமும் கொள்ளவில்லை. ஆனால், வீட்டுக்குத் திரும்பும்போது, கடலைப் போலவே பொழுதும் பளபளக்கையில் அவரது அறைமட்டும், அப்போதும் இருண்டிருந்தது, எனக்கு வித்தியாசமாகத் தோன்றவே, கதவை இரண்டு முறை தட்டினேன்; பதில் எதுவும் வரவில்லை. அதனால், கதவைத் தள்ளித் திறந்தேன். எனக்கு முன்பாகவே குழந்தைகள் பார்த்துவிட்டார்கள் போலும்; திகிலில் அலறிக் கூச்சலிட்டனர். கூரையின் நடுவிட்டத்தில் தொங்கிய தூக்குக் கயிறு கழுத்தை இறுக்கிய நிலையில், சிறந்த மாலுமி விருதுகள் மார்புப் பகுதியில் குத்தப்பட்டிருந்த கடலோடி மேற்கோட்டுடன், அந்த வயதான காவலரின் உடல், அப்போதும் வீசிக்கொண்டிருந்த ட்ரமான்டனாவின் இறுதிக் காற்றலையில் ஊசலாடிக்கொண்டிருந்தது.
விடுமுறையின் மத்தியில், இழந்துவிட்டதான ஏக்கத் துயரம் ஏற்படப்போவது தவிர்க்கமுடியாததென உணர்ந்ததுடன், இனிமேல் ஒருபோதும் இங்குத் திரும்ப வரப்போவதில்லை என்ற மாற்றமுடியாத தீர்மானத்துடன், திட்டமிட்டிருந்ததற்கும் முன்பாகவே நாங்கள் அந்த நகரத்தை விட்டுக் கிளம்பினோம். பயணிகள் நகரத் தெருக்களுக்குத் திரும்பி வந்திருந்தனர். ஓய்வு பெற்ற போர் வீரர்கள் ஒன்றின் மீது ஒன்றினை மோதவிடும் உருட்டுப் பந்து விளையாட மனமின்றிப் போனதால், வெறிச்சிட்ட சதுக்கத்தில் இசை கேட்டது. தாக்குப் பிடித்த நண்பர்கள் சிலர், ஒளிமிக்க ட்ரமான்டனாவின் இளந் தென்றல் பொழுதில் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதைக் `கடல்நேரம்` மதுவகத்தின் தூசிபடிந்த சாளரங்கள் வழியாகக் கண்டோம். ஆனால், அவை எல்லாமே கடந்த காலமாகிவிட்டன.
அதனால்தான், பொக்காசியோவின் அந்த விடிகாலைத் துயர்ப்பொழுதில் கடேக்வசுக்குத் திரும்பப் போகமாட்டேனென்று அடம்பிடிக்கும் ஒருவரின், கண்டிப்பாக இறந்துவிடுவோமென்ற பேரச்சத்தினை, என்னைப் போல வேறு எவரும் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், ஆப்பிரிக்க மூடநம்பிக்கைகளின் பிடிமானங்களிலிருந்து அவனை விடுவிப்பதான ஐரோப்பியத் தீர்க்கத்துடன் அவனை இழுத்துக்கொண்டிருந்த ஸ்வீடானியர்களைத் திசைதிருப்ப எந்த வழியுமில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒரு பகுதியினரின் கைதட்டல் மற்றும் உற்சாகக் கூச்சலில் அவர்கள், கடேக்வசுக்குச் செல்லும் நீண்ட பயணத்துக்கு அந்த மிகவும் பிந்திய இரவு நேரத்தில் கிளம்பத் தயாராகவிருந்த, குடிகாரர்கள் நிரம்பிய வேனுக்குள் அவனை உதைத்து ஏற்றினார்கள்.
மறுநாள் காலையில் தொலைபேசிக்குரல் ஒன்று என்னை எழுப்பியது. விருந்திலிருந்து திரும்பி வந்தபோது சாளரத் திரையினை இழுத்து மூட மறந்திருந்தேன்; அப்போது என்ன நேரமென்று தெரியவில்லையென்றாலும், படுக்கையறை ஒளிமிக்க கோடை வெளிச்சத்தில் நிரம்பியிருந்தது. தொலைபேசியில் ஒலித்த கவலைக்குரலை, என்னால் அப்போதைக்கு இனம்காணமுடியவில்லையென்றாலும், அது என்னைத் தூக்கத்திலிருந்தும் தட்டியெழுப்பிவிட்டது.
”நேற்று இரவு அவர்கள் கடேக்வசுக்குக் கொண்டுசென்ற பையனை உங்களுக்கு நினைவிருக்கிறதா?”
எனக்கு வேறெதுவும் கேட்கவேண்டியிருக்கவில்லை. நான் நினைத்ததை விடவும் அது மிகமிக மோசமானது. கடேக்வசுக்குத் திரும்பச் செல்வதை நினைத்து நடுங்கிய அந்தப் பையன், அறிவு மயக்கத்திலிருந்த அந்த ஸ்வீடானியர்களின் கணநேரக் கவனமின்மையைப் பயன்படுத்தி வேகமாகச் சென்றுகொண்டிருந்த அந்த வேனிலிருந்தும் அந்தப் படுகுழிக்குள் பாய்ந்துவிட்டிருக்கிறான்.
ஜனவரி 1982.  
                
   குறிப்புகள்
1.   ட்ரமான்டனா – ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கோடைகாலத்தில் வீசும் வடதிசை நிலக்காற்று. இக்காற்று மரணத்தைச் சுமந்து வருவதான ஒரு நம்பிக்கை ஸ்பெயினில் நிலவுகிறது.
2.   வென்ரிலாக்குயிஸ்ட் – Ventriloquist
3.   சிரிக்கும்போது தள்ளாடுபவன் – Weak with Laughter என்னும் மரபுத்தொடர்
4.   கோஸ்டா பிரேவா – கேட்டலோனியா நாட்டிலுள்ள கடற்கரை Costa Brava
5.   பேபல் – Babel எபிரேய மொழியில் பாபிலோனியா பேபல் எனப்படுகிறது.
6.   சொர்க்கத்தின் கட்டுப்பாடு – Control of Paradise, செல்லப் பிராணிகள் வளர்ப்பு, நெகிழிப் பயன்பாடு, சூழல் பாதுகாப்புக்கான சிறப்பு ஏற்பாடு, சுற்றுலா நகரங்களில் அழகு கெடாமல் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கைகள் போன்றவை.    
இக்கதையின் ஆங்கிலப் பிரதி Strange Pilgrims (knopf, 1993)pdf – இல் உள்ளது. 
மணல்வீடு, இதழ் எண் 37 - 38 ஏப்ரல் - செப்டம்பர் 2019 சிற்றிதழில் வெளியானது.                  



மகிழ்ச்சி மரியா - காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்


மகிழ்ச்சி மரியா Maria dos Prazeres
ஸ்பானியம் : காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்
ஆங்கிலம் : எடித் கிராஸ்மான்
தமிழில் ச.ஆறுமுகம்

மகிழ்ச்சி மரியா, குளியல் முடித்து எழுந்ததும் சுற்றிக்கட்டும் ஒற்றை ஆடையை மாற்றாமலேயே, தலைமுடியில்  சுருள்கம்பிகளை நீட்டுநீட்டாகப் பொருத்தியிருந்தபோது, பொறுப்பெடுத்துக் கொண்ட நிறுவனத்தின் ஆள், அவ்வளவு சரியாகக் குறித்த நேரத்தில் வந்துவிட, மேலும் அழகுபடுத்த அவள் நினைத்தாலும், காதோரம் ஒரு ரோஜாவைச் செருகுவதற்கே நேரமிருந்தது. கதவைத்திறந்து பார்த்தபோது, மரண வியாபாரிகளெல்லாம் துக்கம் அனுட்டிக்கும் சான்றளிப்புப் பதிவர்கள் போலிருப்பார்களென அவள் நினைத்தது போலில்லாமல் கட்டமிட்ட சட்டையும் பலநிறப் பறவைகள் பளிச்சிடும் தொங்குபட்டையுமாக, மருண்ட பார்வை இளைஞன் ஒருவனைக் கண்டபோது, அவள் குளியல் உடைத் தோற்றத்திலிருந்ததற்காக மிகவும் தன்னிரக்கம் கொண்டாள். பார்சிலோனாவின் இளவேனில் முன்கணிக்க இயலாததாகவும்  காற்றின் போக்கில் சாய்வாகப் பெய்யும் மழை அநேகமாகக் குளிர்காலத்திற்குச் சிறிதும் குறையாமல்  தாங்கமுடியாததாகத் தான் இருக்குமென்றாலும், அவன் மேற்கோட்டு ஏதும் அணிந்திருக்கவில்லை. நேரங்கெட்ட நேரத்திலும் எத்தனையோ ஆண்களை வரவேற்றுப் பணிசெய்துள்ள மகிழ்ச்சி மரியா எப்போதுமில்லாத ஒரு மனச் சங்கடத்தைச் சிறிது உணர்ந்தாள். அவளுக்கு அப்போதுதான் எழுபத்தாறு வந்திருந்தது. கிறித்துமசுக்கு முன் இறந்துவிடுவோமென அவளுக்கு ஒரு நினைப்பு; ஆனாலும், கதவைத் தாளிடும் முன்னர், அந்த ஈமச்சடங்கு விற்பனையாளனை வரவேற்க, அவள் உரியமுறையில் ஆடையணிந்து வருவதற்காக ஒரு நிமிடம் காத்திருக்குமாறு கூறினாள். பின்னர்தான் இருட்டு விலகாத அந்த நேரத்தில் அவன் குளிரில் உறைந்துவிடுவானெனத் தோன்றவும், அவனை உள்ளே வருமாறு அழைத்தாள்.

”இப்படி அரைகுறை ஆடையில் இருப்பதற்குத் தயவுசெய்து, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.” என்றவள், மீண்டும், ‘இந்தக் கேட்டலோனியாவில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வாழ்கிறேனையா, ஆனாலும், குறிப்பிட்ட நேரத்தில் தவறாது வருகை தருகிற ஒருவரை இப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன்!.” என்றாள்.

அவள் நூற்றுக்குநூறு கலப்பற்ற கேட்டலான் மொழியில், தற்போது வழக்கில் இல்லாத ஒரு வகைத் தூயதன்மையோடு பேசினாலும் அவளே மறந்துபோன போர்த்துகீசிய இசையையும் அதில் கேட்கமுடிந்தது. அவளுடைய வயது, தலையில் நீட்டுநீட்டாக உலோகக்கம்பிகள் எல்லாம் ஒருபக்கமிருந்தாலும், அவள் அப்போதும் ஒடுங்கிய உடலும் ஆர்வமுமுள்ள, கறுப்புவெள்ளைக் கலப்பினப் பெண்ணாக வலுவான தலைமுடியும் வெகுகாலத்திற்கு முன்பே ஆண்கள் மீதான பரிவினை இழந்த, இரக்கமற்ற மஞ்சள்நிறக் கண்கள் கொண்டவளாகவும் இருந்தாள். தெருவிளக்கின் கண்கூசும் வெளிச்சத்தில் பாதிப் பார்வையை இழந்த அந்த விற்பனையாளன், எந்தப் பதிலுரையும் கூறாமல், அவனது அரணக்காலணியின் அடிப்பாகத்தைச் சணல் இரட்டில் தேய்த்துத் துடைத்தபின், பணிவான வணக்கமாகக் குனிந்து, அவளது கையில் முத்தமிட்டான்.

“நீ, எங்கள் காலத்து ஆண்களைப் போலிருக்கிறாய்,“ என வாழ்த்துவது போலக் கூர்மையாகச் சிரித்த மகிழ்ச்சி மரியா அவனை உட்காருமாறும் சொன்னாள்.

அவன் அந்தப் பணிக்குப் புதியவனென்றபோதிலும், எல்லாவற்றுக்கும் மேலாக, முதல் பார்வைக்கு, அமெரிக்காவிலிருந்து தப்பி வந்துவிட்ட ஒரு கிறுக்குப் பெண்ணாகத் தோற்றமளிக்கும் இதுபோன்ற கருணையற்ற முதிய பெண்ணிடம், காலை எட்டு மணிக்கெல்லாம் இப்படியான ஒரு விழாக்கால வரவேற்பினை எதிர்பார்க்க முடியாதென்பதைத்  தெரிந்திருந்தான். அதனாலேயே கதவிலிருந்து ஒரு அடி தள்ளியே நின்ற அவனுக்கு, மகிழ்ச்சி மரியா கனத்து, மெத்தென்ற பூம்பட்டு வகைச் சாளரத் திரைகளை விலக்கித் தள்ளியபோது, என்ன சொல்வதெனத்தெரியாமல் விழித்துநின்றான். ஏப்ரல் மாதத்தின் மெல்லிய வெளிச்சம் அப்போதுதான் அந்தப் பிரமாண்டமான அறையின் மூலைகளுக்கெல்லாம் பரவ, அந்த அறை ஒரு வீட்டின் முகப்பறை போலன்றித் தொல் பழம்பொருட்கடையின் காட்சிக்கூடம் போலத் தோற்றமளித்தது. அங்கிருந்த பொருட்களில் அன்றாடப் புழக்கத்துக்குரியவை அதிகமென்றோ, குறைவென்றோ சொல்லமுடியாத அளவிற்கு அவையவை இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் அத்தனை உறுதியான ரசனை உணர்வு வெளிப்பட வைக்கப்பட்டிருந்த பாங்குடன், பார்சிலோனாவைப் போல் தொல் பழமையும் இரகசியத்தன்மையும் கொண்ட ஒரு நகரத்தில் கூட, இவ்வளவு அழகாகத் தோற்றமளிக்கும் வீடு ஒன்றினைக் கண்டுபிடிப்பது அரிதானதே.

“மன்னித்துக்கொள்ளுங்கள்.” ”வீடு தவறி வந்துவிட்டேன்.” என்றான். அவன்.

“அப்படியிருக்கவேண்டுமென்றுதான் எனக்கும் ஆசை. ஆனால், மரணம் ஒருபோதும் தவறு செய்வதில்லையே!” என்றாள் , அவள்.

உணவறை மேசைமீது அந்த விற்பனையாளன், கடற்பயண விவர அட்டவணை போல் பல மடிப்புகள் கொண்டிருந்ததும், தனித்தனி நிறங்களில் எண்ணிறந்த சிலுவைகள் மற்றும் உருவப்படங்கள் கொண்ட பகுதிகளை வெவ்வேறு நிறங்களில் காட்டியதுமான ஒரு வரைபடத்தை விரித்துப் பரப்பினான். அது மாபெரும் மான்ட்ஜுயிக் கல்லறைத் தோட்டத்தின் முழுமையான வரைபடமென்பதை மகிழ்ச்சி மரியா உணர்ந்தாள். அக்டோபர் மழையின்போது மனாஸ் நகர இடுகாட்டில், தாபிர்2 பன்றிகள் புகுந்து பெயர்களற்ற சமாதிகளையும் பல்நிறச் சாயச்சித்திரங்கள் கொண்ட ஃப்ளோரென்டைன்3 கண்ணாடிச் சாளரங்கள் பதிக்கப்பட்ட போர் வீரர்களுக்கான வீறார்ந்த கல்லறை மாடங்களையும் கிளறிச் சிதறடித்த நாள் அவள் நினைவுக்கு வந்தது. அவள் சிறுமியாக இருந்தபோது, ஒருநாள் காலையில் வெள்ளம் பெருக்கெடுத்த அமேசான் நோய்ப்பட்ட, மிக மோசமான சதுப்பு நிலமாகியதோடு அவளது வீட்டுமுற்றத்தில், கிழிந்த துணிகளுடன், பிணங்களின் தலைமுடிகள் வெடிப்புகள் வழியே தொங்கிக்கொண்டிருந்த  உடைந்த சவப்பெட்டிகள் மிதப்பதைக் கண்டாள். அந்த நினைவினால்தான், அவளது இறுதியான ஓய்விடமாக, அவளது இருப்பிடத்திற்கு அருகிலிருப்பதும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததும், சிறியதுமான சான் ஜெர்வாசியா கல்லறைத் தோட்டத்தை அல்லாமல் மான்ட்ஜ்யூக் குன்றினைத் தேர்ந்தெடுத்தாள்.

“ஒருபோதும் வெள்ளம் பாதிக்காத ஓரிடம் எனக்கு வேண்டும்.” என்றாள், அவள்.

“அதற்கென்ன, இதோ இங்கிருக்கிறதே” என அவனது சட்டைப்பையில் பேனாவைப் போலச் செருகியிருந்த சுட்டுவளைகோல் ஒன்றினை எடுத்து வரைபடத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டியவாறே, “ இந்த உலகத்திலுள்ள எந்தப் பெருங்கடலுங்கூட இவ்வளவு உயரத்துக்கு வரமுடியாது.” என்றான்.

                                      
பிரதான வாயிலும் உள்நாட்டுப் போரில் புயூனவென்சுரா டூர்ருட்டி கொல்லப்பட்ட இடத்தில் அருகருகாக, ஒருப்போலத் தோற்றமளிக்கும் மூன்று பெயரறியாக் கல்லறைகள் மற்றும் இரண்டு அரசின்மைவாதத் தலைவர்கள் புதைக்கப்பட்டிருந்த இடமும் கண்ணில்படும்வரை, பல்நிறப் பட்டியல்களை குடைந்துகொண்டிருந்தாள். ஒவ்வொரு இரவிலும் அந்த வெற்றுக் கற்களின் மீது, யாராவது சிலர் அவரவர் பெயர்களை எழுதினர்.

பென்சில், சாயம், கரி, புருவந் தீட்டும் கோல், அஞ்சன மை அல்லது நகச் சாந்து என ஏதாவது ஒன்றால் எழுதியிருப்பதை, ஒவ்வொரு நாள் காலையிலும் கல்லறைக் காப்பாளர்கள் வந்து, அந்த மவுனக்கல்லின் அடியில் புதைக்கப்பட்டிருப்பது யாரெனத் தெரிந்துவிடாதவகையில் சுத்தமாக அழித்தெடுத்தனர். மிகமிகச் சோகமானதும் பார்சிலோனாவில் அதுபோல் எப்போதுமே நிகழ்ந்திராத அப்படியொரு மனக்கொந்தளிப்புடனும் நிகழ்ந்த டூர்ருட்டியின் இறுதி ஊர்வலம் மற்றும் ஈமச்சடங்கில் அவளும் கலந்துகொண்டிருந்தாள். அவரை அடுத்து அமைகிற ஒரு கல்லறையிலேயே அவள் ஓய்வுகொள்ளப் பெரிதும் விரும்பினாள்; ஆனால் அப்படி ஒன்றுகூட இல்லாமற்போகவே, கிடைப்பது கிடைக்கட்டுமென்ற மனநிலைக்கு வந்தாள்.

“ஒரு நிபந்தனை,” என்றவள், “அந்த ஐந்தாண்டு அறையடுக்குகளில் ஏதோ ஒன்றில் அதென்னவோ, ஏதோ ஒரு அஞ்சல் உறையை அஞ்சல் பிரிப்புத் தடுப்பறைக்குள் பிரித்துப் போடுவது போல, என்னைக்கொண்டுபோய்க் குவித்துப்போட நினைக்காதீர்கள்.” என்றாள். பின்னர், திடீரென நினைவுக்கு வந்தது போல, அவள் முடிவாகச் சொன்னாள் : ’’மற்றதெல்லாம் சரிதான், ஆனால் முக்கியமான ஒன்று, என்னைப் படுக்கை நிலையில் தான் புதைக்கவேண்டும்.” 

நன்கு விளம்பரமாகியுள்ள முன்கட்டணம் செலுத்தும் கல்லறைகளுக்கெதிராக, இடத்தை மிச்சம்பிடிப்பதற்காக, செங்குத்து நிலையில் புதைப்பதாக ஒரு வதந்தியைச் சுற்றவிட்டிருக்கின்றனர். முன்னெப்போதுமில்லாத அளவுக்குக் கல்லறைகள், தவணைமுறைத் திட்டத்தில் பெருவிற்பனையாகியுள்ளதை மலினப்படுத்துவதற்காக, வழக்கமான நிறுவனங்களால் கட்டிவிடப்பட்ட கேடுகெட்ட பொய்யே அது என, நன்கு மனப்பாடம் செய்து பலமுறை சொல்லிப்பழகிய நபரின் துல்லியமான தெளிவுடன் அந்த விற்பனையாளன் விவரித்தான். அவன் பேசும்போது, கதவு மூன்றுமுறை மெல்ல,மெல்லத் தட்டப்பட்டதும், அவன் என்னசெய்வதெனப் புரியாமல் சிறிது தயங்கவே, அவனைத் தொடர்ந்து பேசச்சொல்லி, மகிழ்ச்சி மரியா குறிப்பு காட்டினாள்.
“கவலைப்படாதீர்கள், அது ந்நோய்” என மிகவும் அமைதியான குரலில் சொன்னாள்.
விற்பனையாளன், எந்த இடத்தில் விட்டானோ, அந்த இடத்தைப் பிடித்துத் தொடங்கவும், அவனது விளக்கம் திருப்தி அளிப்பதாக மகிழ்ச்சி மரியா உணர்ந்தாள். அப்போதுங்கூட, கதவினைத் திறக்குமுன்னர், மனாஸ் நகரின் பேரூழிப் பெருவெள்ள நிகழ்வினைத் தொடர்ந்து அவளது நெஞ்சுக்குள் பல ஆண்டுகளாக, மிகமிக நுண்ணிய விவரங்கள் வரையிலுமாக ஊறிய சிந்தனைத் திரட்சியின் இறுதி வடிவத்தை அவள் வெளிப்படுத்திவிட முயற்சித்தாள். ”நான் என்ன சொல்லவருகிறேனென்றால்,” எனச் சொல்லி நிறுத்தியவள் மீண்டும், ”இந்த மண்ணுலகத்தில் வெள்ளம் பற்றிய சிக்கல் இல்லாமல், முடிந்தால், கோடையிலுங்கூட நல்ல மரங்களின் நிழலில், அதோடு முக்கியமாகக் குறிப்பிட்ட ஒரு இடைவெளிக் காலம் முடிந்ததும் என்னை இழுத்தெடுத்து குப்பையோடு குப்பையாகத் தூக்கியெறியாத ஒரு இடமாகப் பார்க்கிறேனென்பதுதான்.’’ என்றாள். 

அவள் முன்கதவைத் திறக்கவும், மழையில் நனைந்த  குட்டிநாய் ஒன்று, அதன் இழிந்த தோற்றத்தால் அந்த வீட்டின் இதர அழகுப்பகுதி கெடுமென்றால் அதற்கு நானென்னசெய்வேனென்பது போல உள்ளே வந்தது. ஊரகத் தெருக்களின் ஊடாக அதனுடையத் தினசரி காலை நடையை முடித்துவிட்டுத் திரும்பிய அது, உள்ளே வந்ததும் திடீரென ஏற்பட்ட ஒரு கொந்தளிப்பான அதிருணர்வில் உடலைச் சிலிர்துக் குலுக்கிக்கொண்டது. அது மேசை மீது குதித்தேறி வழக்கம் மீறிய ஒரு வகையில் குரைத்ததோடு, அதன் சேறுபடிந்த பாதங்களால் அநுதக் கல்லறை வரைபடத்தை அநேகமாகப் பாழ்படுத்தியது. அதன் மூர்க்கத்தனத்தை அடக்குவதற்கு அதன் உரிமையாளரின் ஒரு பார்வை மட்டுமே போதுமானதாயிருந்தது. “ந்நோய்!,” என அழைத்த அவள் குரலை உயர்த்தாமலேயே, ’பைக்சா டி ஏசி’ அமைதி, அமைதியாகு,” என்றாள்.
அந்த விலங்கு அப்படியே கூனிக்குறுகி, திக்கித்து அவளை நோக்கியது. பளபளக்கும் இரு துளிக் கண்ணீர் அதன் கன்னங்களில் உருண்டோடியது. பின்னர், விற்பனையாளனை நோக்கிப் பார்வையைத் திருப்பிய மகிழ்ச்சி மரியா, அவன் திகைத்து நிற்பதைக் கண்டாள்.

“அடக்கடவுளே!” என வியந்த அவன், ‘அது அழுகிறது!” என்றான்.
“ஒன்றுமில்லை, இந்த நேரத்தில் அறிமுகமற்ற ஆளைக் கண்டதும் அது குழம்பிப்போய்விட்டது, அவ்வளவுதான், “ என மகிழ்ச்சி மரியா தாழ்ந்த குரலில் மன்னிப்பு கோரினாள். ”பொதுவாகவே அது வீட்டுக்குள் வரும்போது, ஆண்களை விடவும் அதிகக் கவனமாகவே வருகிறது. நீங்கள் மட்டுந்தானென்றில்லை, நான் ஏற்கெனவேயே பார்த்திருக்கிறேன், பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்.”

‘ஆனால், அது அழுகிறதே, நாசமாப் போனது!” என மறுபடியும் சொன்ன அந்த விற்பனையாளன், சிறந்த நடத்தைக்கூறுகளைத் தான் மீறிவிட்டதை உணர்ந்துகொண்டவனாக, முகம் சிவந்து மன்னிப்பு கோரினான். ” என்னை மன்னியுங்கள், ஆனால், இது போன்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை, திரைப்படங்களில் கூட இதுபோல் இல்லை.”

‘’ பழக்குகிற முறையில் பழக்கினால், எல்லா நாய்களும் இதுபோல் செய்யும்.” என்றாள், அவள். ”ஆனால், உரிமையாளர்கள் அவர்களது வாழ்நாள் முழுவதையும், தட்டுகளில் சாப்பிடவும் காரியங்களை அட்டவணைப்படி செய்யவுமாக அவற்றுக்குக் கடினமாயிருக்கிற,  துன்புறச்செய்கிற பழக்கவழக்கங்களை, அவற்றை, ஒரே இடத்தில் கட்டிப் போட்டுக்  கற்றுக்கொடுக்கிறார்கள். அதோடு, அவை மகிழ்ச்சியடைகின்ற, இயற்கையான விஷயங்களான, சிரிப்பது, அழுவது போன்றவற்றை இன்றளவுங்கூட அவை கற்றுக்கொள்ளவிடுவதில்லை. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?”

அவர்கள் அநேகமாக முடித்துவிட்டார்கள்.  நிழல்கள் வீழ்கிற கல்லறைகளை ஆட்சியிலுள்ள பிரமுகர்களுக்கு மட்டுமேயென ஒதுக்கியிருந்ததால், மகிழ்ச்சி மரியா மரங்களில்லாத கோடைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதாயிற்று. மற்றொரு பக்கமெனில், முன்பணம் செலுத்துவதற்கான தள்ளுபடிச் சலுகைகளை அவள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியதால், ஒப்பந்தப் பத்திரத்திலிருந்த நிபந்தனைகளும் விதிகளும் பொருத்தமற்றவையாக இருந்தன.

எல்லாவற்றையும் அவர்கள் முடித்து, விற்பனையாளன் அவனது காகிதங்களையெல்லாம் மீண்டும் அவனது கைப்பெட்டிக்குள் திணிக்கும் நேரத்தில் அவனது கிரகிக்கும் கண்களால் அறை முழுவதையும் பார்த்துவிட்டு, அதன் அழகில் ஒரு மந்திரத்தன்மை  பொதிந்திருப்பதாக நினைத்து நடுக்கம் கொண்டான். அவன் மகிழ்ச்சி மரியாவை அப்போதுதான் முதல் முறையாகப் பார்ப்பது போல் மீண்டும் பார்த்தான்.

“உங்களிடம் விவேகமற்ற ஒரு கேள்வியைக் கேட்கலாமா?” என்றான், அவன்.

அவனோடு கதவை நோக்கி நடந்துகொண்டிருந்த அவள், ”பரவாயில்லை,” என்றாள். ”என் வயது பற்றியதாக மட்டும் இல்லாமலிருந்தால் போதும்.”

“ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கின்ற பொருட்களைக்கொண்டே அவர்களின் தொழிலை ஊகிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. இங்கே உண்மை என்னவென்றால், என்னால் அது முடியவில்லை.” என்ற அவன், நீங்கள் என்ன செய்கிறீர்களென்றும் கேட்டான்.

சிரிப்பால் மூச்சுமுட்டிய மகிழ்ச்சி மரியா, ‘’நானா, நான் ஒரு வேசி, அருமைப் பையனே, ஒருவேளை என்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையோ?” என்றாள்.
அந்த விற்பனையாளன் முகம் சிவந்துபோனான். “நான் வருத்தம் தெரிவிக்கிறேன்..” 
‘’நானல்லவா அதிகம் வருந்தவேண்டும்,” என்ற அவள், அவன் கதவில் மோதிவிடாதபடி அவன் கையைப் பற்றியிழுத்தாள். ‘’கவனமாக இரு! என்னை உரிய முறையில் புதைப்பதற்குமுன் உனது மண்டையை உடைத்துவிடாதே, இளைஞனே! கவனமாக இரு!” என்றாள்.

கதவை மூடியதும் அவள் அந்தச் சிறிய நாயைக் கையில் தூக்கிச் செல்லம் கொஞ்சத் தொடங்கியதோடு, அடுத்த வீட்டு மழலைப்பள்ளியிலிருந்து அப்போதுதான் கேட்கத் தொடங்கியிருந்த குழந்தைகளின் பாடல்களோடு அவளது அழகிய ஆப்பிரிக்கக் குரலில் இணைந்துங்கொண்டாள். மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் கனவில், அவளது இறப்பு குறித்து அவளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்திலிருந்தே அவளது தனிமையின் குழந்தையோடு முன்னெப்போதையும்விட அதிக நெருக்கம்கொண்டதாக உணர்ந்தாள். அந்தக் கணத்திலேயே கூட அவள் இறந்துவிட்டாலும் அவளது உடல் புதைக்கப்படுதலோடு, உடைமைகள் பிரித்தெடுத்துக்கொள்ளப்படுவது வரையிலும் யாருக்கும் எந்தவிதத் தொந்தரவுமில்லாமல், சிறப்பாக நடந்தேறவேண்டுமென அவள் விரும்பினாள்.

அவள், காலமெல்லாம் சிறுகச்சிறுக, ஆனால் பெரிய அளவுக்கான கடினத் தியாகமென்றெல்லாம்  எதுவுமில்லாமல் சேர்த்த செல்வத்தோடு, அவளுடைய சொந்த விருப்பாற்றலின்படியே, ஓய்வு பெற்று, அப்போதே விரிவாக்கம் விழுங்கிக்கொண்டிருந்த மிகப்பழமையும் மாட்சிமைப் பெருமையுங்கொண்ட கார்சியா நகரத்தைத் தனது கடைசி இருப்பிடமாகத் தெரிவுசெய்தாள். சிதைந்துபோயிருந்த இரண்டாவது தள, அடுக்ககக் குடியிருப்பு ஒன்றை, அதன் நிரந்தரமான ஹெர்ரிங் மீன் சுடும் வாசனையோடும் வெடியுப்பு அரித்துப் பொங்கிப்போயிருந்தாலுங்கூட ஏதோ ஒரு பிரபலமல்லாத போரில் ஏற்பட்ட குண்டுத் துளைகளைக் காட்டிக்கொண்டிருந்த சுவர்களோடும் வாங்கினாள். அக்குடியிருப்புக்குக் காவலாள் யாருமில்லை என்பதோடு, அனைத்து இல்லங்களிலும் ஆட்கள் குடிவந்துவிட்ட போதிலுங்கூட, ஈரம் நசநசத்து, இருண்டுகிடந்த படிக்கட்டில் இரண்டொரு படிகள் இல்லாமலிருந்தது. 

மகிழ்ச்சி மரியா சமையலறை, குளியலறைகளில் மாற்றங்கள் செய்து, சுவர்களை பளிச்சிடும் வண்ணத்துணிகளால் மறைத்து, சாளரங்களில் தடித்த கண்ணாடிக் கதவுகள் பொருத்தி, வெல்வெட் திரைகளைத் தொங்கவிட்டாள். பின்னர், அவள், அழகுநயம் மிக்க பயன்பாட்டுப் பொருட்கள், கலைப்பொருட்கள் மற்றும் பட்டாடை அடுக்குகள் மற்றும் அணிகலங்கள், பதக்கங்கள் போன்றவற்றை உட்கொணர்ந்தாள்; அப்பொருட்கள் கலவரத்தின் போது, தோல்விபயத்தில் குடியரசுவாதிகள் கைவிட்டோடிய வீடுகளில் பாசிசவாதிகள் திருடிச்சென்றவை; அவற்றை ஒவ்வொன்றாகப் பல ஆண்டுகளாக, ரகசிய ஏலங்களில் பேரம்பேசி வாங்கி, அவள் சேர்த்திருந்தாள்.

அப்போதும் கடந்தகாலத்தோடு அவளுக்கு எஞ்சியிருந்த ஒரே இணைப்பு என்பது கார்டோனாப் பெருமகனுடனான உறவு மட்டுமே; அவர் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை விருந்துக் காதலுக்குப்பின் இரவு உணவு முடித்து மேற்கொள்ளும் தளர்வான ஓய்வுக்காக வருவதைத் தொடர்ந்துகொண்டிருந்தார். ஆனால், அவளது இளமைக்காலத்திலிருந்தே தொடரும் அந்த நட்புறவுங்கூட மறைத்தேவைக்கப்பட்டிருந்தது. தன்னூர்தியைச் சந்தேகம் ஏற்படாதவொரு தூரத்தில் கண்மறைவாக  நிறுத்தும் பெருமகன் அவரது மேற்கோட்டினை ஊர்தியிலேயே விட்டுவிட்டு, அவளது கௌவுரவத்தை, அவருடையதாகவே கருதிக் காப்பாற்றுவதற்காகவே அவளது இரண்டாவது தளத்திற்கு, நிழல் மறைவிலேயே நடந்துசென்றார்.

அந்தக் கட்டிடத்தில் மகிழ்ச்சி மரியாவின் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டுக்குக்  குடிவந்து, அப்படியொன்றும் நெடுநாட்களாகிவிடாத மிகவும் இளமையான இணையரையும் அவர்களது ஒன்பது வயது பெண்குழந்தையையும் தவிர வேறு யாரையும் அவளுக்குத் தெரியாது. அது அவளுக்கேகூட நம்புவதற்கு இயலாத ஒன்றாகத்தான் தோன்றியது; ஆனாலும் மெய்யாகவே அவள், வேறு யாரொருவரையும் படிக்கட்டுகளில் கூட சந்தித்திருக்கவேயில்லை.

அவளுடைய உடைமைகளைப் பிரித்தளித்திருந்த பாங்கு, அவள் சார்ந்திருந்ததாகக் கருதப்பட்டதும், அதன் தேசியகவுரவமாக பண்புநயமிக்க கண்ணியத்தைக்  கொண்டதுமான மறுகட்டமைக்கப்பட்டிராத கேட்டலோனிய சமுதாயத்தில் அவளது வேர்கள் அதிகமாகவே பரந்திருந்ததைக் காட்டியது.  எந்த முக்கியத்துவமுமேயில்லாத சிறுநகைகளையும் அவளது வீட்டுக்கு மிக அருகில் வசித்த, அவள் இதயத்தில் இடம்பிடித்திருந்த மிக நெருக்கமானவர்களுக்கு அளித்திருந்தாள். அப்படி, அனைத்தையும் செய்து முடித்த பின்னும் மிகவும் நியாய உணர்வோடு நடந்துகொண்டதான நிறைவினை அவள் பெற்றுவிடவில்லையெனினும் தகுதியற்ற எவரையும் அவள் மறந்துங்கூட சேர்த்துவிடவில்லையென்பதில் அவள் நிச்சயமாக இருந்தாள்.

அவளது உயில்களை அவள் அப்படியொரு கடினமான கட்டுதிட்டத்தோடு தயாரித்திருந்தாள். எல்லாவற்றையும் பார்த்திருப்பதாகப் பீற்றிக்கொள்ளும் கால்லே டெல் அர்பாலின்  சான்றளிப்புப் பதிவருக்கு, மத்தியகாலக் கேட்டலான் உச்சரிப்பில் அவரது எழுத்தர்களுக்கு அவளது உடைமைகள் ஒவ்வொன்றினது மிகச்சரியான பெயர் மற்றும் விளக்க விவரங்களுடனான விரிவான பட்டியல், மற்றும் அவற்றைப் பெறுகின்றவரின் பெயர், தொழில், முகவரி மற்றும் அவளது இதயத்தில் அவர் பிடித்திருக்கும் இடம் முதலியனவற்றைக் கூறும் முழுமையான பட்டியலினை, அவள் நினைவிலிருந்தே வாய்மொழியாகச் சொல்லியதைக் கண்ட அவரது கண்களை அவராலேயே நம்பமுடியவில்லை.

ஈமச்சடங்கு விற்பனையாளன், அவளது வீட்டுக்கு வந்துசென்ற பின்னர், அவளும் கல்லறைக்குச் செல்கின்ற, எண்ணற்ற ஞாயிற்றுக் கிழமைப் பார்வையாளர்களில் ஒருவராக மாறிப்போனாள். அவளது பக்கத்துக் கல்லறையாளர்களைப் போலவே, அவளும் ஆண்டு முழுவதும் பூக்கள் பூக்கும் செடிகளை பெரியபெரிய சாடிகளில் நட்டு, புதிதாக நட்ட புல்லுக்குத் தண்ணீர் ஊற்றியதோடு மேயர் அலுவலகத் தரைவிரிப்புகள் போல அது தோற்றமளிக்கும் வகையில் புல்வெட்டும் கத்தரியால் வெட்டிச் சமப்படுத்தினாள். இப்படியாக அந்த இடம் இறுதியில் அவளுக்கு மிகப்பழகிய ஒன்றாக மாறியபோதிலும் முதலில் அது, அவளுக்கு எதனால் அப்படியொரு பாழிடமாகத் தோன்றியதென அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை.

அவள் முதல்முறை அக்கல்லறைத் தோட்டத்துக்கு வந்த நாளில், வாயில் அருகிலிருந்த அந்தப் பெயரற்ற மூன்று கல்லறைகளைக் கண்டதும் அவளது இதயம் ஒருமுறை துடிக்கத் தவறிய போதிலும், விழிப்புடனிருக்கும் காவலாள் அவளுக்கும் முன்பாக ஒரு சில அடி தூரத்திலேயே நின்றதால், அவள் அவற்றின் பக்கம் பார்வையைத் திருப்புவதற்காகக்கூட நிற்கவில்லை. ஆனால், மூன்றாவது ஞாயிறு அன்று கணநேரக் கவனமின்மையைப் பயன்படுத்திக்கொண்டு, அவளது நெடுநாள் கனவினை நிறைவேற்ற முதல் கல்லறையின் மழைநீர் கழுவிய பலகைக்கல் மீது உதட்டுச் சாயத்தால் அவள் எழுதினாள் : டுர்ருட்டி. அன்றிலிருந்து எப்போதெல்லாம் முடியுமென்று அவள் கண்டாளோ, அப்போதெல்லாம், சிற்சிலவேளைகளில் ஒரு கல்லறைக் கல்லில், அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே, ஒரு உறுதியான நாடித்துடிப்புடனும் துயர நினைவுகளால் கலங்கிய இதயத்துடனும் எழுதினாள்.
செப்டம்பர் மாதக் கடைசியில் ஒரு ஞாயிறு அன்று, அந்த மலைக்குன்றில் முதல் சவ அடக்கத்தினை, அவள் கண்டாள். மூன்று வாரங்களுக்குப் பின், குளிரும் காற்றுமான ஒரு பிற்பகலில் அவளது கல்லறைக்கு அடுத்ததில் இளம் மணப்பெண் ஒருத்தியைப் புதைத்தனர். அந்த ஆண்டின் இறுதிக்குள் ஏழு குழிகள் நிரம்பின; ஆனால் குறைந்த நாட்களே நீடித்த அந்தக் குளிர்காலம் மகிழ்ச்சி மரியாவுக்குக் கேடு எதனையும் விளைவிக்காமல் கடந்துசென்றது. அவள் எந்தவிதமான நிலைகுலைவுக்கும் ஆட்படவில்லை; வளிமண்டலம் சிறிதுசிறிதாக வெப்பமேறி, பருவகால மழைக்காற்றின் உயிரொலி திறந்த சாளரங்கள் வழியாக உள்நுழைந்து பொழியவே, அவள் கனவுகளின் புதிர்களையும் மீறி உயிர்த்திருப்பதெனத் திட்டவட்டத் தீர்மானமாக உணர்ந்தாள். வெப்பத்தின் உச்சம் தொட்ட மாதங்களை மலைப்பகுதியில் கழித்துத் திரும்பிய கார்டோனா பெருமகன், அவளது அசாதாரணமான ஐம்பது வயது இளமையிலிருந்ததைவிடவுங்கூட, அவள்  கவர்ச்சியோடிருப்பதாகக் கூறினார்.

மனத்தளர்ச்சியடையச் செய்த பல முயற்சிகளுக்குப் பின், ஒரே மாதிரியான கல்லறைகள் நிறைந்த மாபெரும் கல்லறைத் தோட்டத்தில் ந்நோய் அவளது கல்லறையை இனங்கண்டுகொள்ளுமாறு பழக்கியதில் வெற்றிபெற்றாள். பின்னர், அவளுடைய மரணத்திற்குப் பின் அந்தக் கல்லறையின் முன்னிருந்து அழுகின்ற பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, அதனை வெற்றுக் கல்லறை முன் நின்று அழுமாறு கற்றுக் கொடுப்பதில், அவள் தன்னை அர்ப்பணித்துக்கொண்டாள். அவளது வீட்டிலிருந்து கல்லறைக்கு அதனுடன் பலமுறை நடந்துசென்று, ராம்ப்ளாஸ் பேருந்து வழித்தடத்தை அது நினைவில் கொள்ளுமாறு வழியிலுள்ள நிலக்கூறு அடையாளங்களைக் காட்டி, அது தனியாகச் சென்று வரும் திறமை பெற்றுவிட்டதென அவள் நம்பும் வரையில் பயிற்சியளித்தாள். 

ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு, அவள் கோடைவெப்பம்  காற்றில் தெரியவே, அதன் இளவேனில் உடையில் ஒரு பகுதியைக் களைந்துவிட்டு, மறுபகுதியை அது முழு அம்மணமாகத் தெரிவதை மறைக்கட்டுமென அப்படியே விட்டுவிட்டு, கடைசித் தேர்வாக, அதன் சங்கிலியை அவிழ்த்துவிட்டாள். 

வேகமான துள்ளுநடையில் அது தெருவின் நிழல் பக்கமாக இறங்கிச் செல்வதை, மகிழ்ச்சியோடு அசைந்தாடும் வாலின் கீழ் இறுக்கமாகவும் சோகமாகவும் தெரிந்த அதன் சிறுபிட்டத்தைக் கண்டாள். இது எல்லாமே அது, கால்லே மேயர் தெரு மூலையில் திரும்பி, கடலை நோக்கிச் செல்வதைக் காணும் வரையில் அவள், தனக்காக, அந்த ந்நோய்க்காக அழாமலிருப்பதற்காக கசப்பு மிகுந்த பல ஆண்டுகளாகப் பகிர்ந்துகொண்ட விழிமாறாட்டத் தோற்றங்களே.

பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர் அருகிலுள்ள ப்ளாசா டி லெஸ்ஸெப்ஸ் சென்ற அவள் ராம்ப்ளாஸ் பேருந்தில் ஏறிச் சாளரம் வழியாக அதனைக் காண முயற்சித்தும், முடியாமல் தவித்துக் கடைசியில் அது தூரத்தில் பாசியோ டி கார்சியோவில் போக்குவரத்து அடையாள விளக்கு மாறுவதற்காக ஞாயிற்றுக்கிழமைக் குழந்தைகள் கூட்டத்துடன் அக்கறை மிகுந்த காத்திருப்பாக நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள்.

“ஓ. கடவுளே,” என அவள் பெருமூச்சிட்டாள். “அது மிகவும் தனிமையில் தவிப்பதாகத் தெரிகிறது.”

இரக்கமேயில்லாத மான்ட்ஜூயிச் கடும் வெய்யிலில் அவள் இரண்டுமணி நேரத்துக்கும் அதிகமாக அதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க வேண்டியதாகிவிட்டது. அங்கே நிற்கையில், பலரையும் அவள் கனிவோடு வரவேற்றாலும், அவர்களில் பறிகொடுத்தோர் பலரை அவள் காணமுடிந்தாலும் நினைவு மங்கிப்போன ஞாயிறுகளில் அவர்களைப் பார்த்து நீண்ட காலமாகிவிட்டதால் அவளால் இன்னாரென அடையாளம் தெரியமுடியவில்லை. அவர்கள் இப்போது துக்கத்தோடும் அழுதுகொண்டும் இல்லாமல் இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் ஏதுமில்லாமலே கல்லறை மீது பூக்களைப் பரப்பினர். சிறிது நேரத்தில்  அவர்களெல்லாம் அங்கிருந்து சென்ற பின், கடற்பறவைகளைத் திடுக்கிட்டுப் பறக்கச்செய்த, துயரம்தோய்ந்த முழக்கொலி ஒன்று அவள் காதில் விழவும், கடலை நோக்கிய அவள் கண்களில் பிரேசில் நாட்டுக் கொடி பறக்கும் பிரமாண்டமான, வெண்ணிறப் பயணிகள் கப்பலொன்று தெரியவும், பெர்னாம்புகோ சிறையில் அவளுக்காக மரித்த யாராவது ஒருவர் எழுதிய கடிதம் ஒன்றினை அக்கப்பல் கொண்டுவரவேண்டுமென அவள் மனதார விரும்பினாள்.

ஐந்து மணி கழிந்த சிறிது நேரத்தில், எதிர்பார்த்ததற்கும் பனிரெண்டு நிமிடம் முன்னதாகவே, கடும் வெப்பம் மற்றும் சோர்வினால் எச்சில் நுரை ஒழுக, ஆனால் வெற்றிக்களிப்பு மிக்க ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு, ந்நோய் அக்குன்றின் மேல் தோன்றியது. அந்தக் கணத்தில்தான், கல்லறை முன் தனக்காக அழுவதற்கு யாருமில்லையே என்ற துக்கத்தை மகிழ்ச்சி மரியா விட்டொழிப்பதில் வெற்றிகண்டாள்.

அதைப் பின்தொடர்ந்த இலையுதிர்காலத்தில்தான், அவள் கெட்ட அறிகுறிகளைக் காணத் தொடங்கினாள்; அவற்றின் பொருளை அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லையென்றாலும் அது அவளது இதயத்தைக் கனக்கச் செய்தது. மிகப் பழமையானதென்றாலும் அப்போது மீண்டும் நடப்புக்கு வந்திருந்த  நரிவால் கழுத்து மேற்கோட்டும் கலைநயமிக்கச் செய்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தொப்பியும் அணிந்து ப்ளாசா டெல் ரிலோஜில் பொன்னாகப் பொலிந்த வேலமரங்களின் கீழ் அமர்ந்திருந்த அவள் மீண்டும் ஒரு காபி அருந்தினாள். அவளது உள்ளுணர்வு மேலும் தீவிரம் பெற்றது. அவளது சொந்த அமைதியற்ற நிலையைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் ராம்பிளாஸில் குருவிகள் விற்றுக்கொண்டிருந்த பெண்ணின் அழைப்பொலியை, பற்பல ஆண்டுகளிலும் முதல்முறையாகக் காற்பந்து பற்றிப் பேசுவதை விடுத்துப் புத்தகக்கடைகளில் நின்று பேசும் ஆண்களின் வம்புப் பேச்சுக்களை, ரொட்டித் துகள்களைப் புறாக்களுக்கு வீசிக்கொண்டிருக்கும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களின் அமைதியைக் கூராய்ந்து பார்க்கப் பார்க்க, அவள் எல்லா இடங்களிலும் ஐயத்திற்கே இடமில்லாமல் மரணத்தின் அறிகுறிகளைக் கண்டாள். 

கிறித்துமசின்போது, வேலமரங்களில் தொங்கிய பன்னிற விளக்குச் சரங்களும்  நிலா மாடங்களிலிருந்து விரிந்து பரந்த இசையும் மகிழ்ச்சிக் குரல்களும் நடைமேடைக் கபேக்களில் நுழைந்த சுற்றுலாக் கூட்டமுமாக விழாக்கோலம் கொண்டாலும், அதன் மத்தியிலும் அரசின்மைவாதிகள் தெருக்களுக்கு வந்து எதிர்ப்பதற்குமுன் நிலவிய கடும் அடக்குமுறை அழுத்தப்பதற்றத்தை உணர்வதாகவே இருந்தது.

மாபெரும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் காலத்தையெல்லாம் வாழ்ந்து கடந்துவிட்ட மகிழ்ச்சி மரியாவால் அவளது மன உளைச்சலை அப்போதைக்குக் கட்டுப்படுத்த முடியாமலிருந்ததோடு, முதன்முறையாக அவள் பயத்தின் பிறாண்டலால் தூக்கத்திலிருந்தும் விழித்தெழுந்திருந்தாள். அவளது சாளரத்துக்கு வெளியே, ஒரு இரவில் அரசுக் காவல் பணியாளர்கள்  விஸ்கா கேட்டலனியா விடுதலை அமைப்பின் பெயரைக் கிறுக்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவனைச்  சுட்டுக்கொன்றனர்.

“ ஓ, கடவுளே,” என அதிர்ச்சியில் பதறிய அவள், “எல்லோரும் என்னோடு சேர்ந்து இறப்பது போல இருக்கிறதே! என்றாள்.

இதுபோன்ற மனக்கலக்கத்தை அவள் மனாஸ் நகரில் சிறுமியாக இருந்த நாட்களில், விடிவதற்கு முன்பான கணத்தில் இரவின் எண்ணற்ற ஒலிகள் திடீரென்று அடங்கிப்போகவும், வெள்ளம் பெருக்கெடுத்துப் பெருக, காலம் தயங்கிநிற்கவும் அமேசான் காடுகள் ஆழம் காணமுடியாத அமைதிக்குள் ஆழ்ந்துவிட, அதுவே மரணத்தின் அமைதிபோலத் தெரிந்தபோது உணர்ந்திருந்தாள். அப்படியான ஒரு தடுக்கவோ, தவிர்க்கவோ, இயலாத அழுத்தப் பதற்றத்தின்போது, ஏப்ரல் மாதக் கடைசி வெள்ளியன்றி வழக்கம்போல இரவு உணவுக்காக கார்டோனா பெருமகன் வந்தார்.

அவரது வருகை ஒரு சடங்கைப் போல உருமாறியது. நேரம் தவறாத பெருமகன் இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணிக்குள் எவர் கவனத்தையும் ஈர்க்காதவகையில், அன்றைய மாலைச் செய்தித்தாளில் சுற்றிய உள்ளூர் சாம்பெய்ன் மதுப்புட்டி ஒன்றும் ட்ரஃப்ல்ஸ் என்ற விலை உயர்ந்த காளான் வகைக் கொறிப்பான் நிறைந்த பெட்டியுமாக வந்து சேருவார். மகிழ்ச்சி மரியா, பழங்காலத்துச் செல்வமிக்க கேட்டலோனியன் பொற்காலக் குடும்பங்களின் விருப்பமிகு உணவுவகைகளான  கன்னெல்லோனி அவ் கிராட்டின் என்ற காய்கறியோ இறைச்சியோ நிரப்பிய பாஸ்தா சுருள் மீது ரொட்டித்தூள் மற்றும் பாலேட்டுக்கலவையால் அழகுபடுத்தும் இத்தாலிய உணவுவகை மற்றும் இளம் கோழியில் செய்யும் பிரெஞ்சு வகைக் கோழிச்சாறும் சமைத்து, அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழத்துண்டுகளை ஒரு கிண்ணத்தில் நிறைத்தும் வைப்பாள். அவள் சமையலில் ஈடுபட்டிருக்கும்போது, பெருமகன் கிராம்போன் இசைத்தட்டுகளில் இத்தாலிய இசை நடனக்குழுக்களின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டே, அந்த இசைத்தட்டுகள் முடியும் வரை மது நிறைந்த கண்ணாடித்தம்ளரிலிருந்து சிறுசிறு உறிஞ்சல்களாக உறிஞ்சி விழுங்கிக்கொண்டிருப்பார்.

அவசரமில்லாத இரவு உணவு மற்றும் உரையாடலுக்குப் பின், இருவரும் நினைவிலாழ்ந்து ஈடுபட்ட நிதானமான காதல், அவர்கள் இருவருக்கும் சுவையின் உச்சத்தைத் தொட்டுக்காட்டியது. அங்கிருந்து கிளம்புவதற்கு முன், எப்போதுமே நடு இரவாகிவிடுவதை நினைத்துப் பதற்றப்படும் பெருமகன் படுக்கையறைச் சாம்பல் கிண்ணத்தினடியில் இருபத்தைந்து பெசெட்டா நோட்டுகளை வைப்பார். அது, பரலேலோவில் ஒரு இடைக்கால விடுதி ஒன்றில் அவர் மரியாவை முதல்முதலாகச் சந்தித்தபோது மரியாவுக்கான கட்டணம்; காலங்கள் மாறிய பின்னும் அது அப்படியே மாறாமலிருந்தது.

அவர்கள் இருவரில் யாரும் அவர்களின் நட்பு எந்த அடிப்படையிலானதென எப்போதுமே நினைத்துப் பார்த்ததில்லை. அவர் செய்த சிறுசிறு உதவிகளுக்காக மரியா அவருக்கு நன்றிசெலுத்தக் கடன்பட்டிருந்தாள். அவளுடைய சேமிப்புகளை நிர்வகிப்பதற்குப் பல பயனுள்ள அறிவுரைகளை அவர் வழங்கினார். அவள் சேகரித்திருந்த பழம்பொருட்களின் உண்மையான மதிப்பினை அவள் தெரிந்துகொள்ளுமாறும், அவற்றைத் திருட்டுப் பொருட்களென யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு எப்படிப் பாதுகாக்கவேண்டுமென்றும் அவளுக்குக் கற்றுக்கொடுத்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவள் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட விபச்சார விடுதியில் நவீன காலச் சுவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு அவளுக்கு வயதாகிவிட்டதென்றும் அதனால் ஐந்து பெசட்டா கட்டணத்திற்கு பையன்களுக்கு எப்படிக் காதலிக்கவேண்டுமென்று கற்றுத் தருவதும் ஓய்வுபெற்ற இரவுப்பெண்கள் தங்குவதுமான ஒரு இல்லத்துக்கு அவளை அனுப்பப் போவதாகச் சொன்னபோது, கிரேசியா மாவட்டத்தில் கண்ணியமான ஒரு முதிய வயது வாழ்க்கைக்கான பாதையைக் காட்டியவர் அவர். அவளுக்குப் பதினான்கு வயதாகியபோது, மனாஸ் துறைமுகத்தில் அவளது அம்மா, அவளை விற்றுவிட்டதாகவும் துருக்கியக் கப்பலொன்றில் பணியாற்றிய அந்த முதல் துணைவன், அட்லாண்டிக் சந்திப்பைக் கடக்கும்போது, அவளைச் சிறிதுகூட இரக்கமின்றிப் பயன்படுத்திக்கொண்ட பின்னர், பணமில்லாமல், மொழியும் தெரியாமல், பெயரும் தெரியாத பரலேலோவின் வெளிச்சம் நிரம்பிய சதுப்பு நிலத்தில் அவளைக் கைவிட்டுச் சென்றதாக அவள் அவரிடம் கூறினாள்.                                

அவர்கள் இருவருக்குமிடையே பொதுவான எதுவுமேயில்லையென்பதை உணர்ந்திருந்த இருவரும் இணைவாகச் சேர்ந்திருந்தபோது அவர்கள் ஒருபோதும் தனிமையாக உணர்ந்ததேயில்லை; ஆனால், அவர்களில் எவரொருவரும் வழக்கமாகிப்போன மகிழ்ச்சியைக் குலைக்கத் துணிந்ததில்லை. பல ஆண்டுகளாக, அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் வெறுத்தனர், அதேநேரத்தில் இருவரும் எவ்வளவு மென்மையுடன் நடந்துகொண்டனர் என்பதை இருவரும் ஒருசேர நினைக்கும்போது, அது அவர்களுக்கிடையே ஒரு தேசிய எழுச்சியை உணரச்செய்தது.

அது திடீரெனப் பற்றிக்கொண்ட பெருநெருப்பு. லா பொஹீமில், லிசியா அல்பனீசும் பெனியமினோ கிக்ளியும் பாடிய காதல் பாடல் ஒன்றினை, கார்டோனா பெருமகன் ரசித்துக்கொண்டிருந்தபோது, வானொலிச் செய்தித் தொகுப்பு ஒன்றினை அவரும், சமையல் செய்துகொண்டிருந்த மகிழ்ச்சி மரியாவும் கேட்க நேர்ந்தது. உன்னிப்பாகக் கேட்பதற்காக அவர் நாற்காலி விளிம்புக்கே வந்துவிட்டார். ஸ்பெயின் நாட்டின் நிரந்தர சர்வாதிகாரியான ஜெனரல் ஃப்ரான்சிஸ்கோ ஃப்ரான்கோ, அப்போதுதான் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பாஸ்க் பிரிவினைவாதிகள் மூவரின் தலைவிதியையும் தீர்மானிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருந்தார். பெருமகன் விடுதலைப் பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டார்.

” அப்புறமென்ன, சந்தேகமேயில்லாமல் அவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள், ஏனென்றால் காடில்லோ ஒரு நியாயமான மனிதன்.” என்றார், அவர்.

மகிழ்ச்சி மரியா, ராஜநாகம் ஒன்றின் தீக்கங்காக மின்னும் கண்களுடன் அவரை வெறித்து நோக்கி, தங்கச் சட்டமிட்ட கண்ணாடியின் பின்னால் தெரிந்த இரக்கமற்ற கருவிழிகளை, கோரப்பற்களை, இருட்டிலும் ஈரத்திலும் நடமாடிப் பழக்கப்பட்டுப் போன ஒரு விலங்கின் கலப்பினக் கரங்களைக் கண்டாள். அவர் இருந்த நிலையிலேயே அவரை, அவள் அப்படிக் கண்டாள்.

‘நல்லது, அப்படி நடக்கக்கூடாதென்று பிரார்த்தித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால், அவர்களில் ஒருவரைச் சுட்டாலுங்கூட நீங்கள் குடிக்கும் சூப்பில் நஞ்சைக் கலந்துவிடுவேன்.” என்றாள்.

பெருமகன் அதிர்ச்சியில் உறைந்து போனார். “ஏன் அப்படிச் செய்வாய்?”

“ஏனென்றால் நானுங்கூட ஒரு நியாயமான வேசிப்பெண்தான்.”

அப்போது கிளம்பிய கார்டோனா பெருமகன் திரும்பி வரவேயில்லை. அவளது வாழ்க்கையின் கடைசிச் சுற்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டதென மகிழ்ச்சி மரியாவுக்கு நிச்சயமாயிற்று. கொஞ்சநாட்களுக்கு முன்பு வரையிலுங்கூட,  பேருந்தில் அவளுக்கு யாராவது ஒருவர் இருக்கை அளிக்க முன்வந்தாலோ, சாலையைக் கடக்க உதவிசெய்ய முனைந்தாலோ, அல்லது படிகளில் ஏறும்போது தாங்கலாக அவள் கையைப் பிடித்தாலோ, உண்மையில், வெறுப்பாக உணர்ந்திருக்கிறாள்; ஆனால், இப்போது அவள் அவற்றையெல்லாம் அனுமதிப்பதோடு, அவையெல்லாம் வெறுப்புக்குரிய தேவைகளென விரும்பவும் தொடங்கிவிட்டிருந்தாள். அப்போதுதான், அவள் பெயர், நாள் எதுவும் பொறிக்காத அரசின்மைவாதக் கல்லறை நினைவுப்பலகை ஒன்றைச் செய்து வாங்கியதோடு, வாயிற்கதவினை மூடாமலேயே உறங்கத் தொடங்கினாள். ஒருவேளை தூக்கத்திலேயே அவள் இறந்துவிட்டாலும் ந்நோய் வெளியில் சென்று செய்தி சொல்லுமென்பது அவள் நினைப்பு. 
ஒரு ஞாயிற்றுக் கிழமை, அவள் கல்லறைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, இறக்கத்திற்கு மறுபக்கமாக அமைந்துள்ள அடுக்ககத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியைச் சந்தித்தாள். பல கட்டடங்கள் தாண்டியும் சிறுமியிடம் ஒரு பாட்டியின் வெகுளித்தன்மையோடு பேசிக்கொண்டே நடந்த அவள், சிறுமியும் ந்நோயும் பழகிய நண்பர்கள் போல் விளையாடுவதைக் கண்டாள். ப்ளாசா டெல் டயமெண்டேயில் அவள் திட்டமிட்டவாறே, சிறுமிக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தந்தாள்.

”உனக்கு நாய்களைப் பிடிக்குமா?” எனக் கேட்டாள், அவள்.

”ரொம்பவே பிடிக்கும்,” என்றாள், சிறுமி.

பின்னர், நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த திட்டம் ஒன்றை அவள் சிறுமிக்குச் சொன்னாள். “எனக்கு ஏதாவது நடந்துவிட்டால், ந்நோயை நீ எடுத்துக்கொள், “ என்றாள். “ஒரே நிபந்தனை, ஞாயிற்றுக் கிழமைகளில் நீ அதை அவிழ்த்துவிட்டால் போதும், அதற்கு வேறெதுவும் வேண்டாம். என்ன செய்ய வேண்டுமென்று அதற்குத் தெரியும்.”

சிறுமிக்குப் பெரு மகிழ்ச்சி. மகிழ்ச்சி மரியாவின் இதயத்திற்குள் உருக்கொண்டு பல ஆண்டுகளாக முதிர்ந்துகொண்டிருந்த கனவு நனவாகிய மகிழ்ச்சியோடு அவள் வீடு திரும்பினாள். ஆனால், அந்த மகிழ்ச்சி அவளது முதுமையின் சோர்வினாலோ அல்லது கனவில் வந்த மரணம் உண்மையாகாமல் தாமதமாவதனாலேயோ அல்ல. அது அவள் எடுத்த முடிவு கூட அல்லவே. 

 வாழ்க்கை அவளுக்காகவே, பனிக்கட்டியாகக் குளிர்ந்த ஒரு நவம்பர் பிற்பகலில் அவள் கல்லறையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது திடீர்ப் புயலொன்றாக வெடித்தது. அந்த மூன்று கல்லறைப்பலகைகள் மீதும் அவள் பெயர்களை எழுதிவிட்டு பேருந்து நிலையத்திற்கு நடந்தபோது கொட்டிய மழை அவள் மேனியை மட்டுமில்லாமல் உள்ளுக்கும் நனைத்தது. கைவிடப்பட்டுப் பாழடைந்த ஒரு மாவட்ட வளாக வாயிலில்தான் அவளுக்கு ஒதுங்கிநிற்க முடிந்தது. அந்த வேற்று நகர எல்லை வளாகம், சிதைந்த சேமிப்புக்கிடங்குகளும் தூசியடைந்த தொழிலகங்களும் பெரிய, பெரிய தொடரிழுவை உந்துகளுமாக நிறைந்து புயலின் ஊளைச்சப்தத்தை மேற்கொண்டும் பயமுறுத்துவதாக, பயங்கரமாக இருந்தது.

முழுவதுமாக நனைந்துவிட்ட நாயை அவளது உடல் அணைப்பினால் வெதுவெதுப்பாக்க முயன்றவாறே, கடந்துசென்ற நெரிசல் மிகுந்த பேருந்துகளைப் பாத்தாள். காலி வாடகை உந்துகள் அவற்றின் வெள்ளைக்கொடிகள் உயர்ந்து பறக்கச் சென்றதையும் அவள் பார்த்தாள்; ஆனாலும் அவளுடைய துயரச் சைகைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் எந்த ஒரு அதிசயமுங்கூட நிகழ வாய்ப்பில்லையென நினைக்கும்பொழுதில், வேண்டாவெறுப்புடன், அநேகமாக சத்தம் எதுவுமில்லாமல் மங்கலான எஃகு நிறமுள்ள மகிழுந்து ஒன்று வெள்ளமோடிய சாலையில் கடந்து சென்று, திருப்பு முனையில் திடீரென நின்று, அவள் நின்ற இடத்திற்குப் பின்னோக்கி வந்தது. சாளரக் கண்ணாடிகள் இறங்க, ஏதோ மந்திரம் போல, ஓட்டுநர், காரில் ஏற்றிக்கொள்ள முன்வந்தார்.

“நான் ரொம்ப தூரம் போகவேண்டும்,” என மிகுந்த நேர்மை தொனிக்கச் சொன்ன மகிழ்ச்சி மரியா, பாதிதூரத்தில் இறக்கிவிட்டாலுங்கூட நீங்கள் எனக்குப் பேருதவி புரிந்ததாகும்.” என்றாள். 
“நீங்கள் எங்கு போகிறீர்கள்? சொல்லுங்கள்.” என வற்புறுத்தினார், ஓட்டுநர்.
‘’கிரேசியாவுக்கு,” என்றாள், அவள். 
அவர் தொடாமலேயே கதவு திறக்க, “அது நான் போகிற வழிதான், ஏறிக்கொள்ளுங்கள்,” என்றார்.

உள்வாசனை குளிரூட்டப்பட்ட மருந்து மணமாக இருந்தது. அவள் உள்ளே ஏறியதும் மழை ஒரு கற்பனை விபத்தாகிவிட, நகரத்தின் நிறமும் மாறித்தோன்ற, எல்லாமே முன்திட்டமிடப்பட்ட ஒரு புதுமையான மகிழ்ச்சி மிக்க உலகத்திற்கு அவள் வந்துவிட்டதாக உணர்ந்தாள். போக்குவரத்துச் சீர்குலைவுக்கு மத்தியிலும் ஓட்டுநர் ஏதோ மாயமந்திரம் போல எளிதாக அவருக்கான வழியை ஏற்படுத்திக்கொண்டு விரைந்தார்.

மகிழ்ச்சி மரியா, அவளது சொந்த துயரத்தால் மட்டுமல்லாமல், இரக்கத்துக்குரிய அந்தச் சிறுநாய் அவள் மடியிலேயே தூங்கிப்போனதிலும், அவள் மட்டும் துன்புறுத்தப்படுவதாக உணர்ந்தாள்.

“இது ஒரு பயணக் கப்பலேதான்,” ஏதாவது பொருத்தமாகப் பேசவேண்டுமென்று உணர்ந்ததால் அப்படிச் சொன்ன அவள், “ இதைப்போல ஒன்றை என் கனவிலுங்கூட நான் கண்டதில்லை.” என்றும் பகர்ந்தாள்.

“உண்மைதான், இதிலுள்ள தப்பான ஒரே விஷயம், இது எனக்குச் சொந்தமானதில்லை.” என அருவருப்பான கேட்டலான் தொனியில் சொன்ன அவர் சிறிது இடைவெளிவிட்டு, “ வாழ்நாள் முழுவதற்கும் நான் சம்பாதிப்பது கூட இதை வாங்குவதற்குப் போதாது.” எனக் காஸ்டிலியன் மொழியில் கூறினான்.
”உம், எனக்குப் புரிகிறது,” என அவள் பெருமூச்சிட்டாள்.

கடைக்கண்ணால் நோக்கி, முன்னறைப்பகுதியின் பச்சை ஒளியில் அவனை அளவிட்ட அவள், குட்டையான சுருள் முடியும் ரோமானிய வெண்கலச்சிலை போன்ற தோற்றமுமாக, அவனுக்கு வளரிளம் பருவம் தாண்டிச் சிறிதுதான் அதிகமிருக்குமென்றும் கண்டாள். அவன் அழகாக இல்லையென அவள் நினைத்தாலும் அவனது நாட்பட்ட, மலிவான தோற்சட்டை அவனுக்கு மிகப்பொருத்தமாக இருப்பதாகவும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு வகை வசீகரமிருப்பதாகவும், அவன் வாசற்படியில் நடந்துசெல்வதைக் கேட்கும் அவனது அம்மா, மிகப் பெருமித மகிழ்வு கொள்வாளென்றும் நினைத்தாள். உழைப்பவர்களுக்கேயான அவனது கைகள் மட்டுந்தான், அவன் இந்த மகிழுந்தின் உரிமையாளரில்லை என்பதை நம்பச்செய்வதாக இருந்தது.

அந்தப் பயணத்தின் எஞ்சிய பகுதியில் அவர்கள் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லையென்றாலும், அவன் கடைக்கண்ணால் அவளைப் பலமுறை நோக்கியதை உணர்ந்து இத்தனை வயதுக்கு மேலும் இன்னும் உயிரோடிருக்கவேண்டியிருக்கிறதேயென மீண்டுமொரு முறை தன்னிரக்கம் கொண்டாள். மழை தொடங்கியதும் தலையைச் சுற்றி அணிந்துகொண்ட    பணிமகள் சால்வை மற்றும் நைந்துபோன இலையுதிர்கால மேற்கோட்டில் அவள் அருவருப்பாகவும் இரங்கத்தக்கதாகவுமிருப்பதாக உணர்ந்தாள். அவள் இறப்பைப் பற்றி நினைத்துக்கொண்டேயிருந்துவிட்டதால், ஆடை மாற்றிக்கொள்வது பற்றி நினைத்துங்கூடப் பார்த்திருக்கவில்லை.

கிரேசியா எல்லைக்கு அவர்கள் வந்துசேரும்போது, மழை வெளி வாங்கி, இரவு இறங்கி, தெருவிளக்குகளெல்லாம் வெளிச்சமிட்டுக்கொண்டிருந்தன. அருகிலுள்ள ஒரு திருப்பத்தில் இறக்கிவிடுமாறு மரியா கேட்டும், அவன், அவளது முன் வாயில்வரை கொண்டுவந்து விடுவதாக வலியுறுத்தியதுடன், அவள் மகிழுந்திலிருந்தும் இறங்கும்போது நனைந்துவிடாமலிருப்பதற்காக நடைமேடை ஓரமாகக்கூட வண்டியைக்கொண்டுவந்து நிறுத்தினான்.

அவள் நாயை மடியிலிருந்தும் இறக்கிவிட்டு, அவளது உடல் எவ்வளவுக்கு இசைந்துகொடுக்குமோ அவ்வளவு கண்ணியமாக வெளிவர முயலுகையில், அவனுக்கு நன்றிசொல்லத் திரும்பியபோது, அவளது மூச்சினை நிறுத்திவிடுமளவுக்கான ஒரு ஆணிய வெறித்து நோக்குதலை எதிர்கொண்டாள். யார் எதற்காகக் காத்திருக்கிறார், அல்லது யாரிடமிருந்து பெறுவதற்காகக் காத்திருக்கிறாரெனப் புரிந்துகொள்ளவியலாத குழப்பத்திலிருந்த அவள் அந்தப் பார்வையை ஒரு கணம் பொறுத்துக்கொண்ட பொழுதில் அவன் கேட்டான் : நான் மேலே வரட்டுமா?

மகிழ்ச்சி மரியா அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாள். “இங்கே என்னைக் கொண்டுவந்து இறக்கிய உன் இரக்க குணத்திற்காக நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்தான், ஆனால் அதற்காக நீ என்னை வைத்து வேடிக்கை செய்வதை அனுமதிக்கமாட்டேன்,” என்றாள்.

“யாரையும் வேடிக்கை செய்வதற்கு, எனக்கு என்ன இருக்கிறது, அதுவும் உன்னைப் போன்ற ஒரு பெண்ணிடம்?” என முழுமையான தீவிரத்துடன், காஸ்டிலியனில் தெள்ளத் தெளிவாகச் சொன்னான்.

மகிழ்ச்சி மரியா, இவனைப் போன்ற பல ஆண்களை அறிவாள், இவனைவிடவும் துணிச்சலான பல ஆண்களைத் தற்கொலையிலிருந்தும் காப்பாற்றியிருக்கிறாள், ஆனாலும் அவளது நீண்ட நெடிய வாழ்க்கையில் ஒரு முடிவெடுக்க அந்தக் கணத்திற்போலப் பயந்ததில்லை. குரலில் சிறிதளவு கூட மாற்றமுமில்லாமல் அவன் சொல்லியது அவள் காதில் கேட்டது: ”நான் மேலே வரட்டுமா?”                                            

மகிழுந்துக் கதவை மூடாமலேயே வெளிவந்த அவள், அவனுக்குத் தெளிவாகப் புரியட்டுமென்று காஸ்டிலியனில் பதில் சொன்னாள்: ” உனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்துகொள்!”

தெருவிளக்கின் சாய்வான ஒளியில் மங்கலாகத் தெரிந்த முன்கூட வெளிக்குள் நுழைந்த அவள், கால் மூட்டுகள் நடுங்க, மரணத்தின்போதுதான் ஏற்படுமென அவள் கருதியிருந்த ஒரு பய உணர்வுடன் முதல் தொகுதிப் படிக்கட்டுகளில்  ஏறத்தொடங்கினாள். இரண்டாம் தளத்தில் வாசற்கதவு முன்,   அவளது கைப்பைக்குள் சாவியைத் தேடும் விரக்தியில் நடுக்கத்துடன் அவள் நின்றபோது, தெருவில் ஒன்றன் பின் ஒன்றாக இரு மகிழுந்துக் கதவுகளும் அறைந்து சார்த்தப்படும் சத்தம் அவள் காதில் விழுந்தது. அவளுக்கு முன்பாகவே வந்துவிட்ட ந்நோய் குரைக்க முயற்சித்தபோது, “அமைதியாயிரு,” எனப் பல்லைக் கடித்த முணுமுணுப்பொலியில் அவள் அதை அடக்கினாள்.. பின்னர் அவள், படிக்கட்டின் இறுக்கம் தளர்ந்து அசையும் படிகளில் முதல் காலடிச் சப்தங்களைக் கேட்டதும், அவள் இதயம் வெடித்துவிடுமோவெனப் பயந்தாள். அடுத்த ஒரு நொடிக்குள் கடந்த மூன்று ஆண்டுகளாக அவளது வாழ்க்கையையே மாற்றிப் போட்டுவிட்ட அந்த முன்னனுமானக் கனவினை மறு பரிசீலனை செய்ததோடு, அதை அவள் தவறாகப் பொருள்கொண்டுவிட்டதையும் கண்டாள். 
“ஓ, கடவுளே,’’ என வியப்பில் அவளுக்குள்ளாகவே சொல்லிக்கொண்ட அவள் முணுமுணுத்தாள். “ ஆக. அது மரணம் இல்லை.” 

கடைசியாக அவள், இருட்டில் கேட்கும் அளவான காலடிச்சப்தங்களைக் கவனித்துக்கொண்டு, இருட்டில் யாரோ ஒருவர் அவளைப் போலவேயான வியப்பில் இழுத்துவிடும் மூச்சினைக் கவனித்துக்கொண்டு, பூட்டைக் கண்டுபிடித்துவிட்டாள். பல ஆண்டுகள் காத்திருப்பதும் இருளில் அத்தனை துன்பங்களை அனுபவிப்பதும் அந்தக் கணத்தில் வாழ்வதற்கேயான தகுதியுடையதென்று, பிறகுதான் அவளுக்குத் தெரியவந்தது,

மே 1979.    



குறிப்புகள்
  1. மகிழ்ச்சி மரியா – Maria dos Prazeres ப்ரேசரெஸ் என்னும் பெயரில் போர்த்துக்கல் நாட்டில் இரு நகரங்கள் உள்ளன. எனவே ப்ரேசரெஸ் நகரைச் சேர்ந்தவரென்ற முறையில் மரியாவின் பெயரோடு அச்சொல் சேர்த்து ஊர்மக்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவரது தாய்நாடு பிரேசில் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவளது முன்னோர் அந்த நகரைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம். இரண்டாவதாக ப்ரேசரெஸ் என்பது குடும்பப் பெயராகவுமிருக்கலாம். இப்பெயரைக் குடும்பப்பெயராகக் கொண்ட குடும்பங்கள் மூவாயிரத்துக்கும் மேல் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மரியாவின் தாய்நாடு பிரேசில் என்றும் அவளது கேட்டலான் உச்சரிப்பில் போர்த்துக்கீசிய இசை ஒலிப்பதாகவும் கதைசொல்லி குறிப்பிடுகிறார். போர்த்துக்கீசிய மொழியில் ப்ரேசரெஸ் என்ற சொல்லுக்கு இன்பம், மகிழ்ச்சி என்ற பொருள் உள்ளது. நடுவிலுள்ள dos என்ற போர்த்துக்கீசியச் சொல் ஆங்கிலத்தின் of சொல்லைப் போலச் செயற்படுகிறது. இப்பாத்திரத்திற்கு அந்த அடிப்படையில் கதைசொல்லியால் பெயர் சூட்டப்பட்டிருக்கலாமென்ற புரிதலில் `மகிழ்ச்சி மரியா` எனத் தமிழாக்கப்பட்டது.

2.    தாபிர் பன்றிகள் – tapirs – தென்னமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியக் காடுகளில் காணப்படும்  தாவரம் உண்ணும் பாலூட்டிகளில் ஒரு வகை. இது பன்றியின் உருவத்தை ஒத்து நீளமான தாடையின் மூக்கில் மிகச் சிறிய துதிக்கை நீட்சியும் உடையது.

3.    ஃப்ளோரன்டைன் கண்ணாடி – இத்தாலி நாட்டின் ப்ளோரன்ஸ் நகரில் தயாரிக்கப்படும் பல்வண்ணச் சித்திரங்கள் நிழற்படங்களாகப் பதிக்கப்பட்ட கண்ணாடி 

மலைகள் இணைய இதழில் வெளியானது.