Friday, 2 September 2016

எபிரேயச் சிறுகதை - ஒரு பந்தயம் A Bet By ETGAR KERET

ஒரு பந்தயம் A Bet
எபிரேயம் : எட்கர் கெரெட் Etgar Keret
ஆங்கிலம் : மிரியம் ஷ்லேசிங்கர் Miriam Shlesinger
தமிழில் ச.ஆறுமுகம்
Image result for etgar keret
எட்கர் கெரெட், இஸ்ரேல்


பெண் படைவீரரைக் கொலைசெய்த அரபிக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததென்ற செய்தியை ஒளிபரப்பியதால் பலதரப்பட்ட மக்களும் அது குறித்து விவாதிப்பதற்காக தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்ததாகவும் அதனால் அன்றைய மாலைச்செய்தி இரவு பத்தரை வரையிலும் தொடர்ந்ததாகவும், அதனால் `மூன்லைட்` நிகழ்ச்சியை ஒளிபரப்பமுடியவில்லையென்றும் தொலைக்காட்சியில் அறிவித்தனர். அதனால் அப்பா மிகவும் எரிச்சலடைந்தார்; என் நல்வளர்ச்சிக்காக, அவர் புகைக்கக்கூடாதென்றபோதிலும் அவருடைய நாற்றம் பிடிக்கும் புகைக்குழாயைப் பற்றவைத்தார். அவர், என் அம்மாவிடம் அவளும் அவளைப் போன்ற பைத்தியக்காரர்களும்,  வலதுசாரிகளுக்கு வாக்களித்ததால்தான் பாரசீகர்களெல்லாம் எங்கிருந்து முளைத்தார்களோ, அந்த ஈரானைப்போல நாடு மாறிப்போனதெனக் கூச்சல் போட்டார். இதற்கு நாம் பெரும் விலை கொடுக்கவேண்டியிருக்குமென்பது மட்டுமில்லை; இது நமது அறநெறி சார்ந்த மனத்திண்மையை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டிருக்கிறது – இந்த வார்த்தை நிச்சயமாக எனக்குப் புரியவில்லை – அமெரிக்கர்கள் இதை அவ்வளவு எளிதில் விட்டுவிடவும் போவதில்லை  என்றார்.
அடுத்த நாள் வகுப்பில் இதைப்பற்றிப் பேசினார்கள். ஒருவரைத் தூக்கில் போடும்போது அவரது குறி பாலுறவுப்படங்களில் போலக் கடுமையாக விரைத்துக்கொள்ளுமென்றான், சியான் ஷெமெஷ். அதனால் எங்கள் வகுப்பு ஆசிரியை சில்லா, அவனை வகுப்பறையிலிருந்தும் வெளியே துரத்திவிட்டு, மரணதண்டனைத் தீர்ப்பு குறித்த அபிப்பிராயங்கள் என்று வரும்போது, அவையனைத்தும் ஒருங்குசேரும்போது, வாதங்கள் ஒட்டியோ அல்லது எதிராகவோ, எதுவானாலும், அந்த வாதங்கள் எவ்வளவுதான் நல்லவையென்றபோதிலும், அவையெல்லாமே உண்மையில் அவரவர் இதயத்துக்குள் தான் இருக்கின்றன, என்று சொன்னாள். அதைத்தொடர்ந்து, மூன்றாம் ஆண்டாக  அதே வகுப்பில் இருக்கும் மக்கு சாச்சி, சிரித்துத்தொலைத்தது மட்டுமில்லாமல் ஆமாமாம், எல்லாமே அரபிகளின் இதயத்துக்குள்தாம் இருக்கின்றன, ஆனால், அவர்களது கழுத்தில் கயிற்றை மாட்டித் தூக்கில் போடும்போது எப்படியானாலும் அவர்களின் இதயம் துடிப்பதை நிறுத்திவிடுமென்று சொல்லவே, சில்லா அவனையும் வகுப்புக்கு வெளியே துரத்தினாள். அதன் பிறகு, இனிமேலும் இதுபோன்ற வெட்டிப்பேச்சை அவள் அனுமதிக்கப்போவதில்லையென்றும் வழக்கமான பாடங்களை மட்டுமே நடத்தப்போவதாகவும் சொல்லிவிட்டு, டன் கணக்கில் வீட்டுப்பாடத்தை எங்கள் தலையில் சுமத்திப் பழிதீர்த்துக்கொண்டாள்.
பள்ளிக்கூடம் முடிந்தபின், ஒருவரைத் தூக்கில்போட்டு, அவர் இறப்பது, மூச்சுமுட்டியா அல்லது கழுத்து முறிவதாலா எனப் பெரிய பையன்கள் மத்தியில் மிகப்பெரிய வாதம் நிகழ்ந்தது. பின்னர், அவர்கள் சாக்லேட் பால் புட்டிகளைப் பந்தயமாக வைத்து, ஒரு பூனையைப் பிடித்து கூடைப்பந்துக்கம்பத்தின் இரும்புவளையத்தில்  மாட்டி, தூக்கில் போட, பூனை கடுமையாக அலறி அலறிக் கடைசியில், அதன் கழுத்து உண்மையிலேயே முறிந்துபோனது. ஆனால் மிக்கி, சாக்லேட் பாலுக்கான விலையைக் கொடுக்கவில்லை. அதற்கு அவன், கபி வேண்டுமென்றே கயிற்றை மிகக் கடுமையாக இழுத்துவிட்டானென்றும், இன்னுமொரு பூனையைப் பிடித்துத் தூக்கில்போட்டு, யாருமே தொடாமல் பார்க்கவேண்டுமென்றான். அவன் மட்டமான ஒரு கழுதையென்று எல்லோருக்கும் தெரியுமென்பதால், அவனை வற்புறுத்திப் பணத்தைக் கொடுக்கச்செய்தனர். நிஸ்ஸிமும் ஜிவ்வும் சியான் ஷெமெஷைப் பிடித்து மண்டையில் குட்டி, நன்றாகக் கொடுக்கவேண்டுமென்றனர்; ஏனென்றால், பூனையின் குறி விரைத்துப் பெரிதாகவேயில்லையே, அதனால் அவன் ஒரு  புழுகுணிப்பயல். அந்தவழியாக வந்துகொண்டிருந்த, பள்ளிக்கூடத்திலேயே மிக அழகானவளாக இருக்கக்கூடிய மிச்சல் எங்களைப்பார்த்து, நீங்களெல்லாம் வெறுக்கத்தக்கவர்களென்றும் மிருகங்களைப் போன்றவர்களென்றும் சொன்னாள். நான் ஒரு ஓரமாகச்சென்று வாந்தியெடுத்தேன்; ஆனால், அதற்குக் காரணம் அவளல்ல.   



மலைகள் இணைய இதழ் எண் 104 ஆகஸ்ட் 18, 2016 இல் வெளியானது.

No comments:

Post a Comment