Saturday, 7 October 2017

மாதுளை - யசுநாரி கவாபட்டா - POMOGRANATE - YASUNARI KAWABATTA

மாதுளை : யசுநாரி கவாபட்டா Yasunari Kawabatta ஆங்கிலம் : எட்வர்டு ஜி. சீய்டன்ஸ்டிக்கர் Edward G. Seidensticker 

தமிழில் : ச.ஆறுமுகம்

download (90)
இரவு அடித்த பெருங்காற்றில் மாதுளை மரத்தின் இலைகள் அனைத்தும் ஆடைகளைப் போல் உருவப்பட்டிருந்தன. 
இலைகள் அடிப்பாதத்தைச் சுற்றி வட்டமாகக் கிடந்தன.
கிமிகோ, காலையில் அந்த மரத்தை நிர்வாணமாகப் பார்த்ததாக அதிர்ந்தாள்; வட்டத்தின் குறையற்ற முழுமையைக் கண்டு வியந்தாள். காற்று அந்த வட்டத்தைக் குலைத்திருக்குமென அவள் எதிர்பார்த்திருப்பாளாக இருக்கலாம்.
மிகவும் அழகான மாதுளம்பழம் ஒன்று மரத்திலேயே விடப்பட்டிருந்தது.
“அம்மா, இங்கு வந்து பாரேன்,” அவள் அம்மாவை அழைத்தாள்
“மறந்து விட்டிருக்கிறேன்” அம்மா, மரத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குத் திரும்பினாள்.
அது கிமிகோவை, அவர்களுடைய தனிமை பற்றிச் சிந்திக்கவைத்தது. மாதுளம் பழமும் தாழ்வாரத்திலிருந்து பார்க்கும்போது தனிமையாகவும் மறக்கப்பட்டுவிட்ட ஒன்றாகவும் தோன்றியது.
ஒரு இரண்டு வாரம் போல இருக்கும், அவளுடைய வீட்டுக்கு வந்திருந்த ஏழு வயது மருமகன், உடனடியாகவே மாதுளம் பழங்களைக் கண்டுவிட்டான், அவ்வளவுதான், மரத்தின் மேலே தொற்றிப்பிடித்து ஏறிவிட்டான். கிமிகோவுக்கு வாழ்க்கையின் முன்னால், உயிர்ப்புடன் நிற்பது போலிருந்தது.
“மேலே ஒன்று, பெரிதாகக் கிடக்கு, பாரு,” அவள் தாழ்வாரத்திலிருந்து கூவினாள்.
“அது சரி. ஆனால், அதைப் பறித்துவிட்டு, நான் கீழே இறங்க முடியாதே.“
அது உண்மை. இரண்டு கைகளிலும் மாதுளைகளை வைத்துக்கொண்டு, இறங்குவதென்பது எளிதில்லைதான். கிமிகோ புன்னகைத்தாள். அவன் மனதுக்கு நெருக்கமானவன்.
வீட்டுக்கு, அவன் வருகிறவரையில், அவர்கள் மாதுளையை மறந்துதான் விட்டிருந்தார்கள்; மீண்டும் இவ்வளவுநேரம் வரையில் கூட மறந்துதான் இருந்தார்கள்.
அதன் பின்னர் பழம், இலைகளுக்கிடையே மறைந்துபோயிருந்தது. இப்போது, வானத்திற்குச் சவால்விட்டுக்கொண்டு தெள்ளத்தெளிவாகத் தொங்குகிறது.
பழத்திலும் அடிப்பாதத்திலிருந்த இலைவட்டத்திலும் உயிர் இருந்தது. கிமிகோ மூங்கில் கழி ஒன்றை எடுத்துவந்து, பழத்தை அடித்து வீழ்த்தினாள்.
அது நன்கு பழுத்து, உள்ளிருக்கும் விதைகள் தாம் அதனை வெடிக்கச்செய்தது போலத் தோன்றியது. கிமிகோ அதைத் தாழ்வாரத்தில் வைத்தபோது, விதைகள் வெயிலில் மினுமினுத்தன. வெயில், விதைகளுக்குள் ஊடுருவிச்செல்ல முயற்சிப்பதாகத் தோன்றியது.
ஏதோ ஒருவகையில் அவள் தவறுசெய்துவிட்டதாக, அவளுக்குள் தோன்றியது.
பத்து மணி வாக்கில், அவள் மாடியில் தையல் வேலையிலிருந்தபோது , கெய்கிச்சியின் குரலை, அவள் கேட்டாள். கதவு தாழிடப்படாமலிருந்தாலும், அவன் தோட்டத்துக்குச் சுற்றுவழியில் வந்ததாகத் தோன்றியது. அவன் குரலில் அவசரம் தெரிந்தது.
”கிமிகோ, கிமிகோ!” அம்மா கூப்பிட்டாள். “கெய்கிச்சி வந்திருக்கிறான்.”
கிமிகோ நூலிலிருந்தும் ஊசியை உருவினாள். அதனை ஊசிமெத்தையில் குத்தி நிறுத்தினாள்.
“ நீ போவதற்கு முன்பு உன்னை ஒருமுறை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று கிமிகோ சொல்லிக்கொண்டிருந்தாள். “கெய்கிச்சி, போருக்குப் போய்க்கொண்டிருக்கிறாய். இருந்தாலும், யாரும் கூப்பிடாமல் நாங்களாக வந்து உன்னைப் பார்க்கவும் முடியாது. நீயும் வரவில்லை. இன்று நீயாகவே வந்துவிட்டாய். உனக்கு நல்ல மனசு.”
மதியம் சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு அம்மா எவ்வளவோ சொன்னாள்; ஆனால், அவன் அவசரப்பட்டான்.
“நல்லது, ஒரு மாதுளம் பழமாவது சாப்பிடு. நம்ம வீட்டிலேயே விளைந்தது.” அவள் கிமிகோவை மீண்டும் அழைத்தாள்.
அவள் இறங்கிவரும் வரையில் காத்திருப்பதற்கு, அது எவ்வளவோ மேலென்பதைப் போல, அவன் அவளைக் கண்களாலேயே வரவேற்றான். அவள் படிக்கட்டிலேயே நின்றுகொண்டாள்.
அவன் கண்களுக்குள் ஏதோ ஒன்று வெதுவெதுப்பாக நிறைவது போலத் தோன்றியது. அப்படியே, அவன் கைதவறி, மாதுளை கீழே விழுந்தது.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முறுவலித்தார்கள்.
தான் புன்னகைத்துக்கொண்டிருப்பதாக, அவள் உணர்ந்தபோது, வெட்கத்தில் சிவந்தாள். கெய்கிச்சி தாழ்வாரத்திலிருந்தும் எழுந்தான்.
“ உடம்பைப் பார்த்துக்கொள், கிமிகோ.”
‘நீயும் தான், நன்றாகப் பார்த்துக்கொள்.”
அவன் அதற்குள்ளாகவே எழுந்து, அந்தப் பக்கமாகத் திரும்பி, அவளிடம் கையசைத்து விடைபெற்றுக்கொண்டிருந்தான்.
அவன் சென்ற பிறகு, கிமிகோ தோட்டத்துக் கதவினை ஏறிட்டுப் பார்த்தாள்.
”அவனுக்கு அவ்வளவு அவசரம் போல,” என்றாள், அம்மா. “ ம், எவ்வளவு அழகான ஒரு மாதுளம்பழம்.”
அவன், அதைத் தாழ்வாரத்திலேயே வைத்துவிட்டுப் போயிருந்தான்.
அவன் கண்களுக்குள் ஏதோ ஒன்று வெதுவெதுப்பாக நிறையும் போதே, பழத்தை இரண்டாகப் பிளக்கத் தொடங்கிய நிலையிலேயே, அவன் அதைத் தவறவிட்டிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அவன் அதனை முற்றாக, இரண்டாகப் பிளந்துவிடவில்லை. விதைகள் மேலே தெரிய அது, தாழ்வாரத்தில் கிடந்தது.
அம்மா, அதனை அடுக்களைக்கு எடுத்துச் சென்று கழுவித் துடைத்து, கிமிகோவிடம் கொடுத்தாள்.
கிமிகோ முகம் சுழித்து ஒரு அடி பின்வாங்கிப் பின், மீண்டுமொரு முறை முகம் சிவந்து, சிறிது குழப்பத்துடனேயே அதைக் கையிலெடுத்தாள்.
கெய்கிச்சி அதிலிருந்து ஒன்றிரண்டு விதைகளை எடுத்திருப்பான் போலென அவளுக்குத் தோன்றியது.
அம்மா முன்பாக, அதைச் சாப்பிட மறுப்பது கிமிகோவுக்கு என்னவோ போலத் தோன்றியிருக்கவேண்டும். அவள் விருப்பமற்று, அதனுள் சிறிது கடித்தாள். புளிப்பு அவள் வாய்க்குள் பரவியது. அது, அவளுக்குள் அடிவரைக்கும் துளைத்து இறங்குவதாக அவள் ஒரு வருத்தமான மகிழ்ச்சியை உணர்ந்தாள்.
அம்மா, அங்கு ஆர்வமில்லாமல், வெறுமனேதான் நின்றுகொண்டிருந்தாள்.
அம்மா கண்ணாடி முன் சென்று அமர்ந்தாள். “ என் தலையைத் தான் பாரேன், கிமிகோ, இந்தப் பரட்டைத்துடைப்பத் தலையோடுதான் நான் கெய்கிச்சியை வழியனுப்பியிருக்கிறேன்.”
தலை வாரும் ஒலி கிமிகோவின் காதில் விழுந்தது.
”உன் அப்பா இறந்தபோது,” அம்மா மெல்லிய குரலில் சொன்னாள், “என் தலையை வாருவதற்குப் பயந்தேன். தலை வாரத் தொடங்கும்போது, நான் என்னசெய்துகொண்டிருக்கிறேனென்பதையே மறந்துவிடுவேன். தன்னுணர்வுக்கு வரும்போது, நான் தலைவாரி முடிக்கட்டுமென்று உன் அப்பா காத்திருந்தது போலத் தோன்றும்.”
images (66)
அப்பா, சாப்பிட்டுவிட்டுத் தட்டில் மீதி வைத்திருப்பதை அம்மா வழக்கமாக உண்பதை கிமிகோ பார்த்திருக்கிறாள்.
அவளை ஏதோ ஒன்று உள்ளிழுப்பதாக, அவளுக்கு அழவேண்டும்போல் தோன்றச்செய்கிற ஒரு மகிழ்ச்சியினை உணர்ந்தாள்.
மாதுளையைத் தூர எறிவதற்கு மனமில்லாமல், அம்மா அவளிடம் அதனைக் கொடுத்திருக்கலாம். பொருட்களை வீணாகத் தூக்கியெறியாமலிருப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. அதனாலேயே அவள் அதை அவளுக்குக் கொடுத்திருப்பாள்.
கிமிகோ, அவளுடைய தனிப்பட்ட மகிழ்ச்சியினாலேயே, அம்மாவின் முன்பாக, வெட்கமாக உணர்ந்தாள்.
கெய்கிச்சி அறிந்திருந்த வழியனுப்புகைகளுக்கெல்லாம் மேலானதாக, இது அமைந்துவிட்டதாகவும், அவன் திரும்பிவருவதற்கு எவ்வளவு நீண்ட காலமானாலும் அவளால் காத்திருக்கமுடியுமென்றும் அவள் நினைத்தாள்.
அவள் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். அம்மா அமர்ந்திருந்த கண்ணாடிக்கு அப்பால் காகிதத் தோரணங்கள் மீது வெயில் வீற்றிருந்தது.
இருந்தாலும், எதனாலோ, அவள் மடியிலிருந்த மாதுளையை எடுத்துக் கடிக்கப் பயந்தாள்.
*****
ஹோவர்ட் ஹிப்பெட் தொகுத்த சமகால ஜப்பானிய இலக்கியம் (நியூயார்க் : A.A.Knopf, 1977) பக்கம் 293 – 295.
http://afe.easia.columbia.edu/special/japan_1950_kawabata.htm 
மலைகள் இணைய இதழ் எண் 125 ஜூலை 03, 2017 இல் வெளியானது.

No comments:

Post a Comment