Thursday, 29 November 2018

மழைச் சொற்கள்

மழைச் சொற்கள்  .
.
இடி, மின்னல், காற்று எதுவுமில்லை. மழையான மழையுமில்லை. விட்டு விட்டுத் தூறலும் சிறு மழையுமாகத் தொடர்ந்த ஒரு மழைநாளில், மழைச் சொற்களைத் தேடியபோது கிடைத்தவற்றைத் தொகுத்திருக்கிறேன். நாஞ்சில், நெல்லை மற்றும் கரிசல் பகுதியின் பேச்சு வழக்குச் சொற்களே அதிகம் நினைவில் கிடைக்கின்றன. பல சொற்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்புள்ளது. நண்பர்கள் சுட்டிக்காட்டி பொருளுடன் பகிர்ந்துகொண்டால் இப்பட்டியலுடன் இணைத்துக்கொள்ள இயலும்.
மழைச் சொற்கள்
1. அடைமழை
2. அந்திமழை
3. அமிலமழை ( அமிலவாயுக்கள் அதிக அளவில் கரைவதால் ஏற்படுவது)
4. அமுதமழை
5. அவமழை - (சூடாமணி நிகண்டு - நாட்டிற்கு ஏற்படும் ஏழு குற்றங்களுள் ஒன்று.)
6. அழிமழை
7. அழுவினி மழை (சிணுசிணுவென அழுவது போல் பெய்யும் மழை)
8. ஆலங்கட்டிமழை
9. ஆலி
10. ஆழிமழை – கடலில் பெய்யும் மழை
11. ஆனிஆடிச்சாரல்
12. இடிமழை
13. இயற்கை மழை
14. இரவுமழை – இரவு மழை பயிருக்கு நல்லதல்லவெனச் சிலர் கூறுவதுண்டு.
15. இன்மழை
16. உயிர்மழை
17. உழவுமழை ( பொடிப்பருவம், மானாவாரியில் உழவுக்கான மழை)
18. ஊத்துமழை ( ஊற்றுகளில் நீர் ஊறுமளவுக்குப் பெய்கிற மழை)
19. ஊசித்தூற்றல்
20. ஊசிமழை
21. ஊழிமழை
22. எறசல்
23. எறிதூறல்
24. கடுமழை
25. கல்மழை (ஆலங்கட்டி மழை)
26. கனமழை
27. காலமழை
28. கார்
29. கார்காலமழை
30. கார்மழை
31. காற்றுமழை
32. குளிர்மழை
33. கூதல்மழை ( ஆடு மாடுகளும் குன்றிப்போகுமளவுக்குக் குளிர் ஏற்படுத்துகிற மழை)
34. கெடுமழை
35. கொட்டுமழை
36. கொடுமழை
37. கோடைமழை
38. சார மழை ( ஊதல் காற்றோடு நுண்தூறல்)
39. சாரல்
40. சுழிமழை (பரவலாகப் பெய்யாமல், அங்கங்கே பெய்யும் மழை)
41. செயற்கைமழை
42. சோனை (விடாமழை)
43. தலைப்பெயல் – முதல் மழை, ஐங். 80-3.
44. துணைமழை (முதல் மழையைத் தொடர்ந்த சிறுமழை)
45. துவலை – மழைத்தூறல், ஐங். 141 – 2.
46. துளி
47. தூவல் – மழை, ஐங். 206 – 3.
48. தூவானம் (சிதறுமழை)
49. தூறல்
50. நச்சுமழை (நச்சுநச்செனப் பெய்யும் மழை)
51. பட்டத்து மழை ( அந்தந்த விவசாயப் பருவத்துக்குத் தக்கவாறு பெய்யும் மழை) சித்திரைப் பட்டத்து மழை, ஆடிப்பட்டம்)
52. பரவல் (பரவலான மழை)
53. பருவமழை
54. பருவட்டு மழை (ஒவ்வொரு துளியும் பெரிது பெரிதாக, ஆனால் மேலெழுந்த வாரியாகவே பெய்யும் மழை. சடசடவெனப் பெய்யும், ஆனால் மண் நனைவதற்குள் நின்றுவிடும்.)
55. பனிமழை
56. புயல் – மழை, ஐங். 25 – 1.
57. புயல்மழை
58. பூந்தூறல்
59. பூமழை
60. பெய்
61. பெய்தும் பெய்யாத மழை ( உழவுக்கோ, விதைப்புக்கோ போதுமான அளவுக்குப் பெய்யாத மழை
62. பெயல் – மழை, ஐங். 469 – 4.
63. பெருமழை
64. பேய்மழை
65. பொசும்பல்
66. பொடித்தூறல்
67. மழை
68. மாமழை
69. மார்கழிமழை - மார்கழி மாதத்து மழை, மார்கழியில் பயிர் நெற்பயிர் கதிர்கொண்டு தைமாதம் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் நெற்பயிருக்கு உகந்ததல்ல.
70. மாரி
71. முதல்மழை
72. முதற்பெயல்
73. மும்மாரி
74. மேகமழை
75. மேல்மழை (மேற்கொண்டு பெய்யவிருக்கும் மழை - முதல் மழைக்கு உழுதுவிட்டு விதைப்புக்கு மேல்மழையை எதிர்பார்த்தல்.)
76. வடமதி மழை ( நாஞ்சில் நாட்டின் வடபகுதியில் மட்டும் பெய்கிற மழை)
77. வதி மழை (மண், சேறாகும் அளவு பெய்கிற மழை)
78. வம்பமாரி – காலம்தவறிப் பெய்யும் மழை, குறு.66 – 5.
79. வான்
80. வான்மழை
81. விடாமழை
82. விதைப்பு மழை ( பொடிப்பருவம் மற்றும் மானாவாரி விதைப்புக்கான மழை)
83. வெக்கை மழை ( வெக்கையைக் கிளப்பும் மழை)
84. வெள்ள மழை ( வெள்ளம் ஓடப் பெய்த மழை)
85. வெள்ளை மழை ( பயனின்றிப்போன மழை – கரிசல் வட்டாரம்)
86. வேண்டாத மழை ( அறுவடைக்காலத்தில் பெய்து அறுவடையைக் கெடுக்கும் மழை)
87. ரவைத்தூறல்
பின்னிணைப்பு
1. கிழக்கத்திய மழை
2. மேற்கத்திய மழை
3. தெற்கத்திய மழை
4.வடக்கத்திய மழை
5. காரிருள் மழை
6. மிகுமழை
7.குறைமழை.

Monday, 12 November 2018

காட்டுயானைகளுடன் பழந்தமிழர் வாழ்க்கை

காட்டு யானைகளுடன் பழந்தமிழர் வாழ்க்கை.
யானைபற்றிய குறிப்புகளை, அவற்றின் பழக்க வழக்கங்கள், உறுப்பு நலன்களென சங்கக் கவிதைகள் பலவற்றிலும் காணுகிறோம். போர் யானைகளைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
காட்டு யானைகள் மத்தியில் பழந்தமிழரின் வாழ்க்கை எப்படியிருந்ததென்றும் யானைகளுக்கும் அன்றைய மனிதர்களுக்குமான உறவினைப் புரிந்துகொள்ளவும் ஏதுவான தரவுகளைத் தேடித் தொகுத்ததில் பழந்தமிழர் குடியிருப்புகள் யானைகளின் வாழிடத்திலேயே அமைந்திருந்ததும் காட்டுயானைகளைத் தந்தத்திற்காக வேட்டையாடிய குறிப்புக்கள் உள்ளனவென்ற போதிலும் இணக்கமான உறவு நிலவியதற்கான பதிவுகள் உள்ளமையும் தெரிய வருகின்றன.
ஊர் மன்றத்தில் விளவுக்கனிமரம் ஒன்று நிற்கிறது. அதன் பழம் ஒன்று அருகிலிருக்கும் வீட்டு முற்றத்தில் விழுகிறது. அங்கிருக்கும் எயிற்றியின் மகனும் காட்டின் பெரிய பெண்யானையின் சிறு கன்றும் அதனை ஓடிவந்து எடுக்கின்றனர். (புறம் 181) அப்படியெனில் அந்த யானைக்கன்று ஊர்நடுவே எவ்வித அச்சமும் இன்றித் திரிகிறது. மக்களும் நடமாட விட்டுள்ளனர். பெண்யானையும் தன் கன்றுக்கு எவ்வித அபாயத்தையும் முன்னுணராமல் கன்றினைக் குடியிருப்புக்குள் நடமாடுவதை அனுமதித்துள்ளது என்பதை நம்மால் உணரமுடிகிறது. எனவே யானையும் மனிதனும் மோதல் எதுவுமில்லாமல் வாழ்ந்திருக்கிறார்களென்பதற்கு இத்தரவு சான்றாக அமைகிறது.
நற்றிணைத் தலைவன் ஒருவன் பொருள் தேடிச் செல்ல நினைக்கிறான். இதனை உணர்ந்த தோழி, முன்னர் களவுக்காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத் தலைவனுக்கு நினைவுபடுத்துகிறாள். காட்டுவழியில் தலைவியை அழைத்து வந்த தலைவன், தலைவியின் வழிநடை வருத்தம் தணிப்பதற்காகப் பெரிய அடிமரத்தையுடைய ஒரு ஓமை மரத்தின் புள்ளிகள் நிறைந்த நிழலில் தலைவியோடு தங்குகிறான். அந்த நேரத்தில் அங்கு வருகிற மிகப்பெரிய தந்தங்களையுடைய ஒற்றை யானை, அவர்களுக்கு எவ்விதத் துன்பத்தையும் இழைக்காமல், அதன் இயல்பானபோக்கில் சென்று குழையை ஒடித்து உண்ணுகையில், திடீரென ஏதோ நினைத்துக்கொண்டதுபோல் அதன் புள்ளிகள் நிறைந்த பெரிய துதிக்கையைச் சுருட்டி உயர்த்திப் பிளிற, பெண்யானை அந்தக் காடு முழுதும் எதிரொலிக்குமாறு புலம்பிப் பிளிறியதை நினைவுகொள்வீராக எனக் கூறுகிறாள். (நற். 318) இந்தத் தரவில் தனியாகத் திரிகின்ற மிகப்பெரிய கொம்பன் யானை அதன் வழியில் மனிதர்களைக் கண்ணுற்றபோதும் எவ்விதத் துன்பமும் இழைக்காது அதன் போக்கிலேயே சென்று வழக்கமான இடத்தில் குழையைப் பறித்து உண்கிறது. யானையும் மனிதர்களும் எவ்வித மோதலுமின்றி வாழ்ந்திருக்கிறார்களென்பதற்கு இப்பதிவே சான்றாக விளங்குகிறது.
வேட்டுவச் சிற்றூர் ஒன்றில் அதனை அடுத்த கிணற்றிலிருந்து ஆநிரைகளுக்காக எடுத்து வைத்திருக்கும் தெளிந்த நீர்ப்பத்தர் இருக்கிறது. அதனை மூடியிருக்கும் விற்பொறியை முறித்துத் திறக்கின்ற களிறு, கன்றுக்கும் பிடிக்கும் நீரூட்டிப் பின் செல்கிறது. நற். 92.
அம்குடிச் சீறூர் ஒன்றிலும் கோவலர் ஆநிரைக்காக தரிசுநிலத்தில் கற்களை உடைத்து நல்ல ஊற்றுக் கண்ணுடைய கூவல் (கிணறு) தோண்டுகின்றனர். கன்றுடன் கூடிய பிடியையும் அழைத்துக்கொண்டு களிறு ஒன்று அக்கிணற்றுக்கு நீரருந்த வருகிறது. (அகம் 321)
மற்றொரு தரவில் இரண்டு யானைகள் குளவித் தண்கயம் கலங்குமாறு ஒன்றையொன்று தீண்டி விளையாடி, சோலை வாழையை வேண்டுமென்ற அளவுக்குத் தின்று, பின் அதை வெறுத்து, அருகிலுள்ள வேரல்வேலிச் சிறுகுடி அலறும்படியாகச் செங்காற் பலவின் இனிய பழங்களைப் பறித்துத் தின்கின்றன. (நற்.232) இத்தரவிலிருந்து வேரல் வேலிச் சிறுகுடியின் அருகிலேயே யானைகள் கயத்தில் விளையாடி, சோலைவாழையைத் தின்றுவிட்டு பலாத் தோட்டத்துக்குள் நுழைந்து பலாப்பழங்களைப் பறித்துத் தின்கின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
குறுந்தொகைத் தலைவன் ஒருவன் இரவில் வந்து தலைவியின் வீட்டுக் கதவைத் திறக்க யானை முயல்வது போல் முயன்றதாகவும் அதனைக் கேட்டுத் தலைவி எழ முயற்சிக்கும் போதெல்லாம் தாய், தன் மகள் யானையின் முயறல் ஒலி கேட்டு அஞ்சுவதாக நினைத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டதால் தலைவனைச் சந்திக்க, இரவுக்குறிக்குச் செல்ல இயலாமலாயிற்றென குறுந்தொகைப் பாடல் 244 குறிப்பிடுகிறது. இத்தரவு மூலம் காட்டு யானைகள் இரவில் குடியிருப்புக்குள் வந்து வீடுகளைத் திறக்க முயல்வதென்பது இயல்பான ஒரு நிகழ்வு என்றும் அதைக் கண்டு பெண்களுங்கூட அஞ்சுவதில்லையென்பதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
முழந்தாள் நீண்ட, பெரிய பெண்யானையின் சிறிய தலையை உடைய கன்று, கள் நிறைந்த பாக்கத்துக் குறச் சிறுவர்களோடு மீண்டும் மீண்டுமாக வந்துச் சுழல ஓடி விளையாடியதாகவும் அப்படி விளையாடிய கன்றே வளர்ந்து பெரிய யானையாகி, அவர்களின் தினைப்புனத்தை மேய்வதாகவும் குறிப்பு உள்ளது. குறு. 294.
வெண்ணெல் தின்ற யானை சந்தனக்காடு நிறைந்த மலைப்பக்கத்தில் தங்குவதையும் ( நற். 7) பச்சிலை மரத்தை இழுத்துத் தள்ளிச் சேற்றில் ஆடி ஆசினிப்பலாவை ஒடித்த யானையையும் (நற். 51) காண்கிறோம்.
களிறு, பாந்தட் பெரும்பாம்பின் வாய்ப்பட்டதென பிடி கதறுவதையும் ( நற்.14), ஆண்யானையைப் புலி கொன்றதென இயக்கமற்றுத் தன் கன்றினை அணைத்தவாறு நிற்கும் பிடியின் சோகத்தையும் (நற். 47) கவிஞர்கள் பதிவு செய்துள்ளதைக் கண்ணுறுகையில் காட்டு யானைகளின் வாழ்க்கையை பழந்தமிழர்கள் அருகிருந்து கண்டுணர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
மற்றொரு பாடலில் முல்லை ஆயர்கள் அவர்களது மந்தையைக் காட்டினுள் மேய்த்து மாலை வீட்டுக்கு வந்தபோதுதான் மந்தையோடு யானைக் கன்று ஒன்றும் வந்துவிட்டதைத் தெரிந்து, அதனை மந்தையிலேயே பாதுகாத்து மறுநாள் கொண்டுபோய் அதன் தாய் யானையோடு சேர்த்துவிடுகின்றனர்.
நீர்வேட்கை மிகுந்த பெண்யானை மலைப்பக்கம் செல்கிறது. அவ்வாறு செல்ல இயலாத யானைக்கன்று ஆன்கன்றுகளோடு சேரிப்பெண்கள் துணுக்குறும்படியாக ஊருக்குள் வருகிறது. நற். 171.
யானை தாக்கவந்தாலும் சூல்மகள் கூட அஞ்சமாட்டாளென்றும் ஒரு பதிவு உள்ளது. பெரும் பாணாற்றுப்படை 135 - 137.
புலி, களிற்றொடு பொரும்போதுகூடக் குறக் குறு மாக்கள் அஞ்சாமல் துறுகல் மீது ஏறி நின்று பறை முழக்குவர். நற். 104 - 1 - 6.
களிறு ஒன்று பெரிய புலி ஒன்றினை அதன் குகைக்கே சென்று கொம்புகளால் குத்திக் கொல்கிறது, அதனால் செம்மறுப்பட்ட கொம்புகளைச் சாரலிலுள்ள அருவியில் கழுவிய பின்னும் அங்கேயே நிற்கிறது. அதனால் இரவில் தலைவியைச் சந்திக்க வரவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறான். நற்.151 - 2 - 5. அந்தப் பகுதியில் நிற்கும் யானையைப் பார்த்த தோழி, அந்த வழியில் தலைவனை இரவில் வராதே எனக் கூறுவதிலிருந்து, பகல் எனில் யானையைக் கண்டு ஒதுங்கிக் கொள்ள இயலும், இரவெனில் யானை கண்ணுக்குத் தென்படுவது அரிது, மேலும் அந்த யானை புலியோடு போரிட்ட ஆவேசம் தீராமலுள்ளது. எனவே அந்த யானையை வழியில் எதிர்கொள்வது அபாயகரமானது என்பது பெறப்படுகிறது. எனவே பழங்காலத் தமிழர் யானைகளின் போக்கு அறிந்து செல்லும் திறத்துடனிருந்தனர் என்பதை உணரலாம்.
மொத்தத்தில் எல்லாவற்றையும் ஆய்ந்து நோக்கும்போது, இக்காலத்தில் நாம், பசுக்கள் எருதுகள், கோயில் மாடுகள் போன்றவற்றோடு சேர்ந்து வாழ்வது போலவே அவர்களும் காட்டு யானைகளோடு சேர்ந்து வாழ்ந்திருக்கவேண்டுமென்பதும் பாய்ந்தோடி வரும் காளையைக் கண்டதும் நாம் சிறிது ஒதுங்கிக்கொள்வதுபோல் யானைகள் எதிர்ப்படும்போது சிறிது ஒதுங்கி வழிவிட்டுப் பின் தொடர்ந்து அவர்கள் வழியில் சென்றிருக்க வேண்டுமென்பதையும் அவதானிக்க முடிகிறது.
இக்காலத்தில் தாம் யானைகளின் வழித்தடத்தை நாம் ஆக்கிரமிக்க, அவை நம் நகருக்குள் புக, நமக்கும் அவற்றுக்குமான மோதல் போக்கு தொடர்கிறது.
தரவுகள்
வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை,
தண்ணறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தினவாடு பெருங்காட்டே. நற். 7 நல்வெள்ளியார்
இனம்சால் வயக்களிறு பாந்தட்பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல்
நெடுவரை விடரகத்து இயம்பும். நற். 14. மாமூலனார்.
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்
பயநிரைக்கு எடுத்த மணிநீர்ப்பத்தர்,
புன்தலை மடப்பிடி, கன்றொடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும் கொல்களிறு. நற். 92.
பாடியவர் பெயர் தெரியவில்லை.
படுமணி இனநிரை உணீய கோவலர்
விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல்
கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும்
புன்தலை மன்றத்து அம்குடிச் சீறூர். அகம். 321. கயமனார்.
பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்
பைதலம் குழவி தழீஇ, ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும். நற். 47 நல்வெள்ளியார்.
பெருந்தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ்சேறு ஆடிய நுதல, கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்தது – நற். 51. பேராலவாயர்
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முனைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
செங்காற் பலவின் தீம்பழம் மிசையும் நற். 232 முதுவெங் கண்ணனார்.
நினைத்தலும் நினைதிரோ – ஐய! அன்று நாம்
பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனமாக
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக்கொண்ட ஓங்குமருப்பு யானை
பொறிபடு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ், விடரகம் சிலம்ப,
புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே?
– பாலை பாடிய பெருங்கோ. நற்.318
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உரவுக்களிறு போல் வந்து இரவுக்கதவு முயறல்
கேளேம் அல்லேம்! கேட்டனெம் – பெரும!
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட்டாங்கு, யாம்
உயங்குதொறும் முயங்கும் அறனில் யாயே!
குறு. 244. கண்ணனார்
முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறிஇறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,
முன்நாள் இனியது ஆகி, பின்நாள்
அவர் தினைப்புனம் மேய்ந்தாங்கு,
பகை ஆகின்று, அவர் நகைவிளையாட்டே.
குறு. 394 குறிஇறையார்.
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
நிலம் செல, செல்லாக் கயந்தலைக் குழவி
நேரிஅம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும். நற். 171 - 1 -5
--- பாடியவர் பெயர் தெரியவில்லை
யானை தாக்கினும் அரவு மேற்செலினும்,
நீல்நிற விசும்பின் வல்ஏறு சிலைப்பினும்,
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை. பெரும்பாண். 135 - 137. கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
பூம்பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றை
தேம்கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும். நற்.104 - 1-6
பேரி சாத்தனார்.
கொல்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச் செம்மறுக் கொண்ட வெண்கோடு யானை
கல்மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்கதில்ல
--- நற்.151 - 2 - 5. இளநாகனார்.

Wednesday, 7 November 2018

கொட்டானும் தையல் இலையும். (அபுனைவு)

கொட்டானும் தையல் இலையும் (அபுனைவு)

கொட்டானும் தையல் இலையும்
வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருக்கும் எனது மகள் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஜப்பானிலுள்ள மியசாகி பல்கலைக்கழகத்தில் பத்து நாட்கள் தங்கி பயிற்சி முடித்துத் திரும்பினார்.
இந்தப் பயிற்சி “ Japanese Support System to inspire and encourage young women in medical sciences, for better health and Quality Of Life in India” என்ற பெயருடன் ஜப்பானியப் பல்கலைக்கழகத்தால் நிதி வழங்கி நடத்தப்படுகிறது.
இது எப்படி இருக்கிறது பாருங்கள்! நமது நல்வாழ்வு, உடல் நலம், வாழ்க்கைத் தரம் உயர்த்துவது குறித்த ஆராய்ச்சியில் நம் நாட்டுப் பெண்கள் ஈடுபடுவதற்கு வேற்று நாட்டுப் பல்கலைக்கழகம் முனைந்து பயிற்சியளிக்கிறது.
பயிற்சியின் போது பயிற்சியாளர்கள் ஜப்பானியப் பண்பாடு குறித்துத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படவேண்டுமென்பதும் இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
பயிற்சியின் இடைவேளை நேரங்களில் நொறுக்குத் தீனி (snacks)யினை மூங்கில் கிண்ணங்களில் வழங்கியுள்ளனர். இயற்கைப் பொருளான மூங்கிலை உணவுக்கலமாகப் பயன்படுத்தும் முறை பயிற்சியாளர்களைக் கவர்ந்துள்ளது. அவர்கள் அதைப் போன்ற கிண்ணம் ஒன்றினை தங்கள் தாயகத்திற்கு எடுத்துச் செல்லவிரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மறுநாளே அப்படியான மூங்கில் கிண்ணம் ஒன்றினை ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றனர்.
ஜப்பானிய ஷிண்டோ வழிபாட்டு முறைக் கோவில், பண்பாட்டு நடனம், தேநீர் விருந்து, சேக் மது அனைத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். நேரம் தவறாமை மற்றும் பணியில் கவனம் போன்ற ஜப்பானியப் பணிப்பண்பாடு குறித்தும் விளக்கியுள்ளனர்.
நான் ஏற்கெனவே ஜப்பானிய தேவதைக்கதைகள் மொழிபெயர்ப்புக்காக இணையத்தில் தேடித் தெரிந்துகொண்ட ஜப்பானியப் பண்பாட்டுத் தகவல்களும் என் மகள் நேரில் சென்று தெரிந்து வந்திருக்கும் பண்பாட்டுச் செய்திகளும் ஒன்றாகவே இருந்தன. அது ஒரு மகிழ்ச்சி.
பயிற்சி முடிந்து திரும்பிய மகள் இந்த மூங்கில் கிண்ணத்தைப் பெருமிதத்தோடு என்னிடம் காட்டியபோது, மக்கா, நாம் இதை கொட்டான் என அழைப்போம். இதைக் கொண்டுதான் மாடுகளுக்கு மருந்து புகட்டுவோம். நாஞ்சில் நாட்டு விவசாயிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் மாட்டுக்கு மருந்து புகட்ட பருத்த மூங்கிலில் செய்த முழ நீள கொட்டானும் கன்றுக்குட்டிக்காக, கால் படி (அரை லிட்டர்) பிடிக்குமாறு சிறிய மூங்கிலில் செய்த சிறிய கொட்டானும் இருக்குமென்றும் சிறுவயதில் கன்றுக்குட்டிகளுக்கு நானே கொட்டானில் கஞ்சித்தண்ணீர் புகட்டியிருக்கிறேனென்றும் தெரிவிக்க, பேச்சு அப்படியே நமது பழைய பண்பாட்டுத் தகவல்களுக்கு மாறியது.
சங்க காலத்தில் முல்லைநில ஆயர்கள், மந்தையை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும்போது, மதிய உணவுக்காக இன்புளிச் சோறு செய்து மூங்கில் குழாயில் அடைத்து மாட்டின் கழுத்தில் கட்டி எடுத்துச் சென்றதற்கும், அந்த புளிச் சோற்றினைப் பசியோடிருக்கும் வழிப்போக்கர்களைக் கண்டால் அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கும் பாடல் பதிவுகள் உள்ளன.
மூங்கில் குழாய்களில் தேன் பத்திரப்படுத்தியிருக்கின்றனர். மதுவினையும் மூங்கில் குழாய்களில் எடுத்துச் சென்றதாகப் பதிவுகள் உள்ளன.
இறைச்சி மற்றும் உணவுப் பொருள்களையும் கடகம் அல்லது வட்டிகளில் எடுத்துச் சென்றதாக மலைபடுகடாம் பதிவுசெய்துள்ளது.
உணவு உண்பதற்கும் தேக்கிலை, வாழை இலை, தாமரை இலை, ஆம்பல் இலை பயன்படுத்திய பதிவுகள் உள்ளன.
பிற்காலத்திலும் தேக்கிலை, தாமரை இலை, வாழை இலை, கூவை இலை பயன்பாட்டிலிருந்தது.
ஆல், அத்தி, அரசு, மற்றும் மந்தாரை இலைகளை ஈர்க்கோல் முனைகளைக் கொண்டு தைத்து அந்த இலைகளைப் பயன்படுத்தினர். அது தையல் இலை எனப்பட்டது.
பனை ஓலையைப் பட்டையாகப்பிடித்து உணவுக்கலமாகப் பயன்படுத்தினர். கமுகம் பாளையும் உணவுத் தாலமாகப் பயன்பட்டது.
தேக்கிலையில் உணவு அருந்தும்போது, இயற்கையாகவே உள்ள தேக்கு மணம், உணவின் சுவையை அதிகப்படுத்தும். தேக்கிலையில் மடித்துக் கொணரும் காரச்சேவு, பக்கோடா போன்ற பண்டங்கள், இலையில் குத்திக் கிழிப்பதால் ஏற்படும் சுவை குறித்து சிறுவயதில் எவ்வளவு பேசி மகிழ்ந்திருப்போம்!
அது போலவே தாமரை இலையில் சூடான இட்லி, ஆப்பம் போன்றவை சாப்பிடும்போது, அவற்றுக்கொரு தனிச் சுவை கிடைப்பதாக உணர்ந்திருக்கிறோம்.
பனை ஓலைப் பட்டையில் மாலைப் பதநீர், நுங்கோடு அருந்தியிருக்கிறோம். ஊன்பொதிப் பசுங்குடையாகப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். சோறு உண்பதைப் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.
கி. ராவின் கோபல்லபுரத்து மக்களில் துணைப்பாத்திரமான ஒரு பனையேறும் தொழிலாளி அக்கிராமத்தில் தனியாக வசிப்பார். அவர் இரவுச் சாப்பாட்டுக்கு மீன் குழம்பும் சோறும் சமைப்பார். சமைத்து முடித்த பின் ஒரு பச்சைப் பனை ஓலைப் பட்டையைக் குடுவையாக்கி அதில் சோற்றைக் கொதிக்கக் கொதிக்கக் கொட்டி, மீன் குழம்பு முழுவதையும் அதிலேயே ஊற்றி, பட்டையின் இரு முனைகளிலும் கசிவு ஏற்படாதபடி கட்டி வீட்டுத் தரையில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு உருட்டுவாராம். அப்படியே போய் ஊருணியில் குளித்துவிட்டு வந்து சாப்பிடத் தொடங்குவாராம். இது அவரது மாற்றமேயில்லாத தினசரி நடவடிக்கையாம். பனை ஓலையின் பச்சைப் பசும் மணம் சூடான சோறு மற்றும் மீன் குழம்பில் கலந்து தனிச்சுவை ஏற்படும் போலிருக்கிறது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த போது வாசித்ததிலிருந்து அந்த நினைவு என்னைவிட்டு அகலவேயில்லை.
இயற்கையோடு இயற்கையாக நாமும் வாழ்ந்திருந்தோம்தான். ஆனால் இப்போது அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு உலோகத்தாலான சமையற் கலங்கள் மற்றும் உண்ணும் தாலங்களைப் பயன்படுத்துகிறோம்.
அதைவிட மோசம்! அவற்றைக் கழுவுவதற்கு தேங்காய்ச் சவுரி, புளிக் கோது, சாம்பல் எனப் பயன்படுத்திய நாம் இப்போது என்னென்னவோ வேதியியல் பொருட்களைப் பயன்படுத்திக் கைகளைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது பாத்திரம் கழுவும் பெண்கள் அநேகம் பேருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளங்கைகள் முழுவதும் வெடிப்பும் சொரசொரப்புமாகியிருக்கிறது. ஆனாலும் தேங்காய்ச்சவுரியையோ புளிக் கோரினையோ பயன்படுத்தத் தயாரில்லை. .
ஏதோ ஒன்று, உரையாடலென்று தொடங்கினால் நடப்பு வாழ்க்கை முறையில் தான் வந்து முடிகிறது. அதையும் முகநூலில் பகிர்ந்து கொள்வதென்பது கிராமத்துப் புளிய மரத்தடி அல்லது கோயில் முகப்பு, படிப்புரை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதைப் போல ஒரு அத்யந்த மகிழுணர்வு.