கொட்டானும் தையல் இலையும் (அபுனைவு)
கொட்டானும் தையல் இலையும்
வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருக்கும் எனது மகள் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஜப்பானிலுள்ள மியசாகி பல்கலைக்கழகத்தில் பத்து நாட்கள் தங்கி பயிற்சி முடித்துத் திரும்பினார்.
இந்தப் பயிற்சி “ Japanese Support System to inspire and encourage young women in medical sciences, for better health and Quality Of Life in India” என்ற பெயருடன் ஜப்பானியப் பல்கலைக்கழகத்தால் நிதி வழங்கி நடத்தப்படுகிறது.
இது எப்படி இருக்கிறது பாருங்கள்! நமது நல்வாழ்வு, உடல் நலம், வாழ்க்கைத் தரம் உயர்த்துவது குறித்த ஆராய்ச்சியில் நம் நாட்டுப் பெண்கள் ஈடுபடுவதற்கு வேற்று நாட்டுப் பல்கலைக்கழகம் முனைந்து பயிற்சியளிக்கிறது.
பயிற்சியின் போது பயிற்சியாளர்கள் ஜப்பானியப் பண்பாடு குறித்துத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படவேண்டுமென்பதும் இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
பயிற்சியின் இடைவேளை நேரங்களில் நொறுக்குத் தீனி (snacks)யினை மூங்கில் கிண்ணங்களில் வழங்கியுள்ளனர். இயற்கைப் பொருளான மூங்கிலை உணவுக்கலமாகப் பயன்படுத்தும் முறை பயிற்சியாளர்களைக் கவர்ந்துள்ளது. அவர்கள் அதைப் போன்ற கிண்ணம் ஒன்றினை தங்கள் தாயகத்திற்கு எடுத்துச் செல்லவிரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மறுநாளே அப்படியான மூங்கில் கிண்ணம் ஒன்றினை ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றனர்.
ஜப்பானிய ஷிண்டோ வழிபாட்டு முறைக் கோவில், பண்பாட்டு நடனம், தேநீர் விருந்து, சேக் மது அனைத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். நேரம் தவறாமை மற்றும் பணியில் கவனம் போன்ற ஜப்பானியப் பணிப்பண்பாடு குறித்தும் விளக்கியுள்ளனர்.
நான் ஏற்கெனவே ஜப்பானிய தேவதைக்கதைகள் மொழிபெயர்ப்புக்காக இணையத்தில் தேடித் தெரிந்துகொண்ட ஜப்பானியப் பண்பாட்டுத் தகவல்களும் என் மகள் நேரில் சென்று தெரிந்து வந்திருக்கும் பண்பாட்டுச் செய்திகளும் ஒன்றாகவே இருந்தன. அது ஒரு மகிழ்ச்சி.
பயிற்சி முடிந்து திரும்பிய மகள் இந்த மூங்கில் கிண்ணத்தைப் பெருமிதத்தோடு என்னிடம் காட்டியபோது, மக்கா, நாம் இதை கொட்டான் என அழைப்போம். இதைக் கொண்டுதான் மாடுகளுக்கு மருந்து புகட்டுவோம். நாஞ்சில் நாட்டு விவசாயிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் மாட்டுக்கு மருந்து புகட்ட பருத்த மூங்கிலில் செய்த முழ நீள கொட்டானும் கன்றுக்குட்டிக்காக, கால் படி (அரை லிட்டர்) பிடிக்குமாறு சிறிய மூங்கிலில் செய்த சிறிய கொட்டானும் இருக்குமென்றும் சிறுவயதில் கன்றுக்குட்டிகளுக்கு நானே கொட்டானில் கஞ்சித்தண்ணீர் புகட்டியிருக்கிறேனென்றும் தெரிவிக்க, பேச்சு அப்படியே நமது பழைய பண்பாட்டுத் தகவல்களுக்கு மாறியது.
சங்க காலத்தில் முல்லைநில ஆயர்கள், மந்தையை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும்போது, மதிய உணவுக்காக இன்புளிச் சோறு செய்து மூங்கில் குழாயில் அடைத்து மாட்டின் கழுத்தில் கட்டி எடுத்துச் சென்றதற்கும், அந்த புளிச் சோற்றினைப் பசியோடிருக்கும் வழிப்போக்கர்களைக் கண்டால் அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கும் பாடல் பதிவுகள் உள்ளன.
மூங்கில் குழாய்களில் தேன் பத்திரப்படுத்தியிருக்கின்றனர். மதுவினையும் மூங்கில் குழாய்களில் எடுத்துச் சென்றதாகப் பதிவுகள் உள்ளன.
இறைச்சி மற்றும் உணவுப் பொருள்களையும் கடகம் அல்லது வட்டிகளில் எடுத்துச் சென்றதாக மலைபடுகடாம் பதிவுசெய்துள்ளது.
உணவு உண்பதற்கும் தேக்கிலை, வாழை இலை, தாமரை இலை, ஆம்பல் இலை பயன்படுத்திய பதிவுகள் உள்ளன.
பிற்காலத்திலும் தேக்கிலை, தாமரை இலை, வாழை இலை, கூவை இலை பயன்பாட்டிலிருந்தது.
ஆல், அத்தி, அரசு, மற்றும் மந்தாரை இலைகளை ஈர்க்கோல் முனைகளைக் கொண்டு தைத்து அந்த இலைகளைப் பயன்படுத்தினர். அது தையல் இலை எனப்பட்டது.
பனை ஓலையைப் பட்டையாகப்பிடித்து உணவுக்கலமாகப் பயன்படுத்தினர். கமுகம் பாளையும் உணவுத் தாலமாகப் பயன்பட்டது.
தேக்கிலையில் உணவு அருந்தும்போது, இயற்கையாகவே உள்ள தேக்கு மணம், உணவின் சுவையை அதிகப்படுத்தும். தேக்கிலையில் மடித்துக் கொணரும் காரச்சேவு, பக்கோடா போன்ற பண்டங்கள், இலையில் குத்திக் கிழிப்பதால் ஏற்படும் சுவை குறித்து சிறுவயதில் எவ்வளவு பேசி மகிழ்ந்திருப்போம்!
அது போலவே தாமரை இலையில் சூடான இட்லி, ஆப்பம் போன்றவை சாப்பிடும்போது, அவற்றுக்கொரு தனிச் சுவை கிடைப்பதாக உணர்ந்திருக்கிறோம்.
பனை ஓலைப் பட்டையில் மாலைப் பதநீர், நுங்கோடு அருந்தியிருக்கிறோம். ஊன்பொதிப் பசுங்குடையாகப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். சோறு உண்பதைப் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.
கி. ராவின் கோபல்லபுரத்து மக்களில் துணைப்பாத்திரமான ஒரு பனையேறும் தொழிலாளி அக்கிராமத்தில் தனியாக வசிப்பார். அவர் இரவுச் சாப்பாட்டுக்கு மீன் குழம்பும் சோறும் சமைப்பார். சமைத்து முடித்த பின் ஒரு பச்சைப் பனை ஓலைப் பட்டையைக் குடுவையாக்கி அதில் சோற்றைக் கொதிக்கக் கொதிக்கக் கொட்டி, மீன் குழம்பு முழுவதையும் அதிலேயே ஊற்றி, பட்டையின் இரு முனைகளிலும் கசிவு ஏற்படாதபடி கட்டி வீட்டுத் தரையில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு உருட்டுவாராம். அப்படியே போய் ஊருணியில் குளித்துவிட்டு வந்து சாப்பிடத் தொடங்குவாராம். இது அவரது மாற்றமேயில்லாத தினசரி நடவடிக்கையாம். பனை ஓலையின் பச்சைப் பசும் மணம் சூடான சோறு மற்றும் மீன் குழம்பில் கலந்து தனிச்சுவை ஏற்படும் போலிருக்கிறது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த போது வாசித்ததிலிருந்து அந்த நினைவு என்னைவிட்டு அகலவேயில்லை.
இயற்கையோடு இயற்கையாக நாமும் வாழ்ந்திருந்தோம்தான். ஆனால் இப்போது அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு உலோகத்தாலான சமையற் கலங்கள் மற்றும் உண்ணும் தாலங்களைப் பயன்படுத்துகிறோம்.
அதைவிட மோசம்! அவற்றைக் கழுவுவதற்கு தேங்காய்ச் சவுரி, புளிக் கோது, சாம்பல் எனப் பயன்படுத்திய நாம் இப்போது என்னென்னவோ வேதியியல் பொருட்களைப் பயன்படுத்திக் கைகளைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது பாத்திரம் கழுவும் பெண்கள் அநேகம் பேருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளங்கைகள் முழுவதும் வெடிப்பும் சொரசொரப்புமாகியிருக்கிறது. ஆனாலும் தேங்காய்ச்சவுரியையோ புளிக் கோரினையோ பயன்படுத்தத் தயாரில்லை. .
ஏதோ ஒன்று, உரையாடலென்று தொடங்கினால் நடப்பு வாழ்க்கை முறையில் தான் வந்து முடிகிறது. அதையும் முகநூலில் பகிர்ந்து கொள்வதென்பது கிராமத்துப் புளிய மரத்தடி அல்லது கோயில் முகப்பு, படிப்புரை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதைப் போல ஒரு அத்யந்த மகிழுணர்வு.
No comments:
Post a Comment