Thursday, 6 December 2018

வள்ளிமலைக் குன்றும் சமணர் குடைவரைக்குகையும்.

வள்ளிமலைக் குன்றும் சமணர் குடைவரைக் குகையும்

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில், வேலூரிலிருந்து 25 கிமீ தூரத்தில் வள்ளிமலைக்குன்று அமைந்துள்ளது.
வடக்கு தெற்காக அமைந்திருக்கும் இக்குன்றின் அடிவாரத்தில் ஒரு முருகன் கோவிலும் குன்றின் உச்சியில் ஒரு முருகன் கோவிலும் அமைந்துள்ளன.
மலை மேலுள்ள கோவில் மலைக்கோவில் என அழைக்கப்படுகிறது. இது தவிர அடிவாரக் கோவிலின் பின்புறம் அழகான ஒரு தெப்பக்குளம் அமைந்துள்ளது. இத் தெப்பக்குளம் சரவணப்பொய்கை என்ற பெயரில் அழைக்கப்படுவதுடன் மிகவும் அழகான முறையில் பராமரிக்கப்படுகிறது.
தெப்பக்குளக் கரையிலும் ஒரு கோவில் உள்ளது. இக்கோவில் அருகிலிருந்து மலைக்கோவிலுக்குச் செல்லும் படிகள் தொடங்குகின்றன. மொத்தம் 444 படிகள் உள்ளன.
மலைக்கோவிலுக்கும் அடிவாரக்கோவிலுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சமணர் குகைக் கோவிலும் உள்ளது. இதைக் குடைவித்த அரசன் கி.பி. 816 – 845 இல் ஆட்சி புரிந்த கங்க வம்சத்து ராஜமல்லன் எனத் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கல்வெட்டுப் பலகை தெரிவிக்கிறது.
தற்போது கார்காலமென்பதால் குன்று முழுவதும் பசுமை மிகுந்த வனப்பும் மஞ்சள் வண்ணப் பூக்களின் அழகும் மிகுந்து அற்புதக் காட்சிகளாக மின்னுகின்றன.
பன்னீர் மரங்களிலும் பூங்கொத்துகள் அடர்ந்து அவற்றின் கீழும் உதிர்ந்த வெள்ளை மலர்களாகக் கண்கொள்ளாக் காட்சி காணக் கிடைக்கிறது.
மலை மீதுள்ள அத்தனை சுனைகளும் நிரம்பி, தாமரை, ஆம்பல், அல்லி எனப் படர்ந்து அழகுத் தோற்றம் கொண்டுள்ளன.
இக்கோவில், வள்ளிமலையைச் சுற்றிலுமுள்ள கிராம மக்களின் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த செல்வாக்கினைச் செலுத்துகிறது. குழந்தை இல்லாதவர்கள் இக்கோவிலில் பிராத்தனை செய்தால் குழந்தை பிறக்குமென கிராம மக்கள் நம்புகின்றனர்.
திருமணங்கள், காது குத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் இத்திருத்தலத்தில் நிகழ்த்துதல் நல்லதென்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
எத்தனை மனத் துன்பங்கள் இருப்பினும் இக்கோவிலுக்கு வந்தால் அமைதி கிடைப்பதாகவும் நம்பிக்கைகள் நிலவுவதால் அடிவாரத்து கோவில் சன்னதியில் பல்வேறு சமூகத்தினரும் தங்கிடவும் விழாக்கள் நடத்திடவும் வசதியாக மண்டபங்கள் அமைத்துள்ளனர். மாசி மகம் தொடர்ந்த பதினொரு நாட்கள் பிரமோற்சவமும் தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு சமூகத்தினர் செலவில் வாகனம் எடுப்பித்துச் சிறப்புச் செய்கின்றனர்.
செங்குந்த முதலியார்கள் மயில் வாகனம், நாவிதர்கள் பெருச்சாளி வாகனம், விண்ணம்பள்ளி சைவ வேளாளர் தங்கமயில் வாகனம், மேல்பாடி சைவ வேளாளரின் நாக வாகனம், சீர் கருணீகர் அன்ன வாகனம், அகமுடைய முதலியார்கள் சிம்ம வாகனம், வன்னியர் யானை வாகனம் என சுற்றுப்பட்டு கிராமங்களின் அனைத்து சமூகத்தினருக்கும் இந்த விழா முக்கியத்துவமுடையதாகிறது.
பொதுவாக எல்லா ஊர்களிலும் தேரோட்ட நாளில் காலையில் சன்னதியிலிருந்து புறப்படும் தேர், கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள் சுற்றி வந்து மாலைக்குள் நிலைக்கு வந்துவிடும்.
ஆனால் வள்ளிமலைத்தேர் மாலையில் புறப்பட்டு துண்டுக்கரை மூலைக்குச் சென்றதும் நின்றுவிடும். மறுநாள் இரவு சோமநாதபுரம் எல்லையில் நிற்கும். மூன்றாம் நாள் இரவு பெருமாள் குப்பம் எல்லையில் நிற்கும். நான்காம் நாள் தான் நிலைக்கு வரும். நிலைக்கு வந்ததும் வள்ளி திருமண நிகழ்ச்சி தொடங்கும்.
இப்பகுதியிலுள்ள இருளர் மக்கள், தம் இனத்தில் தான் வள்ளி வளர்ந்ததாக நம்புகின்றனர். அதனால் வள்ளி திருமணத்திற்குப் பெண் வீட்டுச் சீதனமாக தேன், தினைமாவு, வளையல், சேலை துணிமணிகளைப் பெண்கள் தாம்பாளங்களில் ஏந்தி வர. கூடவே அவ்வினத்து ஆண்கள், உடல் முழுதும் வேப்பந்தழையால் மூடி, உடுக்கை அடித்து ஆட்டமும் பாட்டமுமாய் ஊர்வலமாக மணமண்டபத்துக்கு வந்துசேர்ந்தபின் திருமணம் தொடங்குகிறது.
திருமணம் முடிந்ததும் மொய் எழுதுபவர்கள் மொய் எழுதலாமென அறிவித்ததும் பணமும், துணியும், நகையும் பாத்திரமுமாக மக்கள் மொய் எழுதிக் காணிக்கை செலுத்துகின்றனர்.
வள்ளிமலையைச் சுற்றி அமைந்துள்ள கிராமப்பகுதி மக்கள், அவர்களது வாழ்க்கையின் சிக்கலான நேரங்களில் சிக்கலைத் தீக்குமாறு வள்ளிமலையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகின்றனர். ஆபத்துகளிலிருந்து தப்பிக்கும்போதும் வள்ளிமலை முருகன் அருளாலேயே தப்பித்ததாக நினைத்துக் காணிக்கை செலுத்துகின்றனர்.
விவசாயிகள் தேர்த் திருவிழாவின் போது அவர்கள் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் அவர்களது மாடுகளையும் குளிப்பாட்டி, மங்கல அணிகள் அணிவித்து அவற்றையும் அழைத்துக்கொண்டுதான் வள்ளிமலையைச் சுற்றிவருகின்றனர்.
தேர்த்திருவிழா நாட்களில் வள்ளிமலையைச்சுற்றி ஏழெட்டு இடங்களில் கூத்தும் நடத்துகின்றனர்.
ஆடிக் கிருத்திகையின் போது நான்கு நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கிறது.
வள்ளிமலையை, அப்பகுதி மக்களின் வாழ்க்கையிலிருந்தும் தனியாகப் பிரித்துவிடமுடியாது. அப்படியேதான் கவிப்பித்தனின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான `நீவாநதி` நாவல் வள்ளி மலையை முன்னிறுத்துகிறது.
ஆர்வமுள்ளவர்கள் கவிப்பித்தனின் நாவலை வாசிப்பதோடு வள்ளிமலைக்கு வந்து அதன் கார்கால அழகினைக் கண்குளிரக் கண்டு மகிழலாம். .
வேலூரிலிருந்து காட்பாடி, சேர்க்காடு வழியாக 25 கி.மீ தூரத்தில் வள்ளிமலை அமைந்துள்ளது. வேலூரிலிருந்து 13 கி.மீ தூரத்திலுள்ள திருவலம் சென்று அங்கிருந்து பொன்னை செல்லும் சாலை மேல்பாடி மற்றும் வள்ளிமலை அடிவாரம் வழியாகச் செல்கிறது. திருவலம் – வள்ளிமலையின் தூரம் 16.கி.மீ.
இக்குன்றும் கோவிலும் சமணர் குகையும் தொல்பொருள் பாதுகாப்புத்துறையின் பராமரிப்பிலுள்ளது.

No comments:

Post a Comment