Saturday 13 January 2018

சங்க இலக்கியத் துளிகள் - 11

சங்க இலக்கியத் துளிகள் - 11
மயங்காதே தோழி
கற்பிடைப் பிரிவு ; தலைவன் வினைமேற்செல்லும் போது, கார்காலத்தில் வந்துவிடுவேன், அதுவரை பொறுத்திருப்பாயாக, எனச் சொல்லிச் சென்றான். கற்புத் தலைவியும் அவன் சொற்படி ஆற்றியிருக்கிறாள்.
திடீரென மேகங்கள் ஒலித்து மழை பெய்கிறது; கார்கால மழையைக் கண்டமயிலினம் அகவி ஆலுகிறது; பிடவமும் பூக்கிறது. தலைவன் சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டதே, தலைவனை இன்னும் காணோமேயென தலைவி உள்ளுக்குள் படபடக்கிறாள். இதைக் கண்ணுறும் தோழி
“ தோழியே, நீ வாழ்வாயாக; இடிமுழக்க மழையைக் கண்டு மயில்கள் ஆடி அகவியதோடு பிடவம் பூக்கவும் செய்தன; உண்மையில் இப்போது மழையைப் பெய்த மேகங்கள் நம்நாட்டுக்குரியவை இல்லை; அவை கடந்த மாரியில் கொட்ட மறந்த பழைய நீரைக் கொட்டிவிட்டு, புது நீரை முகந்துகொள்ள வந்த அயலின நொதுமல் மேகங்கள்; இது தெரியாத மயில்கள் ஆலவும் பிடவம் பூக்கவும் செய்துள்ளன. உண்மையில் இது கார்காலமன்று. தோழியே நீ கலங்காதிருப்பாயாக என்று ஆற்றுவிக்கிறாள்.
பாடல் :
மடவ வாழி - மஞ்ஞை மா இனம் காலமாரி பெய்தென, அதன் எதிர் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; கார் அன்று - இகுளை! - தீர்க உன் படரே! கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் புதுநீர் கொளீஇய, உகுத்தரும் நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.
- இடைக்காடன், குறுந்தொகை 251. (முல்லை)
எப்படியிருக்கிறது பாருங்கள்; புலவன் தோழி மீது ஏற்றிய கற்பனைப் புனைவு.
கார்காலத்தின் முதல் மழை பெய்கிறது. அதைக் கண்டு மயில் ஆடுகிறது. கார்காலப் பிடவம் பூக்கிறது.
தோழி சொல்கிறாள், அந்த மழை உண்மையான கார்கால மழை இல்லையாம்; மழையைக் கொட்டிய மேகங்கள் அவர்கள் நாட்டு மேகங்கள் அல்லவாம்; அவை வேற்று நாட்டு மேகங்களாம்! அதுவும் எப்படி? சென்ற கார்காலத்தில் கொட்டியிருக்க வேண்டிய நீரைக் கொட்டாமல் ஒளித்து வைத்திருந்ததாம்; புதிய நீரை மொண்டுகொள்வதற்காக பழைய நீரை ஒழிக்கவேண்டுமல்லவா? அதனால் அப்பழைய நீரை, அதற்குச் சொந்தமான நாட்டில் கொட்டாமல் இவர்கள் நாட்டில் கொண்டு வந்து கொட்டியனவாம்; இது தெரியாமல் ஆடிய மயிலும் பூத்த பிடவமும் அறியாமை மிக்கனவாம்.
அஃதாவது, தலைவன் என்று வருகிறானோ, அன்றுதான் கார்காலம் தொடங்கும்.

No comments:

Post a Comment