Friday 19 January 2018

கீரைப்பண்பாடு - அபுனைவு 5.

கீரைப்பண்பாடு
.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருவாய்த் துறை ஊழியர்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வன்று மதிய உணவுக்காக வேலூரின் முக்கிய உணவுவிடுதி உரிமையாளரிடம் ( அவர் உணவு விடுதி உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் கூட) தொடுகறிகளில் கீரை ஒன்றும் கண்டிப்பாக வேண்டுமென்று கூறியபோது, நிகழ்ச்சி நாளன்று நிறைந்த அமாவாசை, வேலூர் ஆட்கள் சாப்பிடுவார்கள். மற்ற மாவட்ட ஆட்கள் அமாவாசையன்று கீரை சாப்பிடுவதை விரும்பமாட்டார்களேயென்றார். அன்றுதான் நமது உணவுப் பண்பாட்டில் கீரையின் இடம் பற்றிய சிந்தனை விதை எனக்குள் விழுந்தது. அன்றைய விருந்தில் கீரைக் கூட்டினைச் சேர்த்தேயிருந்தோம். எல்லோரும் சாப்பிட்டிருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
ஆரிய பவன் போன்று தமிழ்நாடெங்கும் உணவு விடுதிகள் நடத்துபவர்களின் ஓட்டல்களிலும் வேலூரிலெனில் மூன்று கூட்டுவான்களில் ஒன்று கீரையில் செய்ததாகவே இருக்கும். மற்ற இடங்களில் இப்படியில்லையென்றே நினைக்கிறேன். வேலூர் மெஸ்களில் சாம்பார், காரக்குழம்புடன் கீரைக்குழம்பும் பரிமாறப்படுகிறது. வேலூரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கேப்பைக்களி எனப்படும் கேழ்வரகுக் களி கிடைக்கும். இக்களிக்கு
கலவன் கீரை ( பலவகைக் கீரை) கொண்டு சமைக்கப்படும் கீரைக்குழம்பு தருகின்றனர். களிக்கு முருங்கைக்காய் சாம்பார், கருவாட்டுக் குழம்பு, பச்சை மிளகாய்க் காரத்துடன் கத்திரிக் காய்க் கடைசல், வெண்டைக்காய் கடைசல் போன்றவையும் நல்ல இணையாக இருந்தாலும் கீரைக் குழம்பின் இடம் தனித்துத் தான் விளங்குகிறது.
வேலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அமாவாசை, கிருத்திகை, காரடையான் நோன்பு எனப்படும் தீபாவளிக்கு மறுநாளான வரலட்சுமி விரதம், கௌரி விரதம், புரட்டாசி சனி போன்ற நாட்களிலும் நீத்தார் நினைவு நாட்களிலும் பலரும் `ஒரு பொழுது` என விரதமிருக்கிறார்கள். அன்று குளித்து விளக்கு முன் படையலிட்டு, சாமி கும்பிட்டு விட்டுத் தான் உணவு சாப்பிடுகிறார்கள். அதுவரையிலும் சாப்பிடுவதில்லை. அது போன்ற நாட்களில் அலுவலக நண்பர்கள் சிலருக்கு வீடுகளிலிருந்து வரும் மதிய உணவில் கனமான வட்டு வட்டுகளாகத் தோசைக்கல்லில் புரட்டிப் புரட்டி வேகவைத்த (DAWA FRY) வாழைக்காயும் துவரம் பருப்பு சேர்த்த முருங்கைக் கீரைப் பொரியலும் வடை பாயசமும் இடம்பெற்றிருக்கும்.
எண்பதுகளில் நான் சாப்பிட்ட மெஸ்ஸில் அது போன்ற நாட்களில் பருப்பு போளியும் வடையும் விலையின்றிப் போடுவார்கள். மெஸ்ஸில் கீரைக் குழம்பு இல்லாத நாளில் சிறுகீரையுடன் காராமணி அல்லது தேங்காய்ச் சீவல் சேர்த்த பொரியல் இருக்கும்.
வேலூரில் எங்கள் குடியிருப்புப் பகுதிக் காய்கறிக் கடைகளில் வாழை இலையும் வாழைக்காயும் முருங்கைக் கீரையும் இருந்தால், சரி, இன்று அமாவாசை அல்லது கிருத்திகை என்று உறுதிசெய்துகொள்ளலாம். நாஞ்சில் நாடு, நெல்லைப் பகுதி, முகவை, மதுரை போன்ற இடங்களில் வெள்ளிக் கிழமை, அமாவாசை விரத நாட்களில் கீரை சேர்ப்பதில்லை. அத்தகைய நாட்களில் கீரை ஒரு அபசகுனப் பொருளாகவே கருதப்படும்.அதுபோல விருந்தினருக்குக் கீரை பரிமாறும் பழக்கம் கண்டிப்பாக இல்லை.
நாஞ்சில் நாட்டில் சித்திரை மாதத்தில் அநுசரிக்கப்படும் நைனார் நோன்பு (சித்திர புத்திர நயினார் பிறந்த நாள்) அன்று மட்டும் பல்வகைக் கீரைப் பொரிய்லு்ம வேப்பம் பூப் பச்சடியும் மதிய உணவில் சேர்க்கவேண்டுமென்பது ஒரு மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
விக்கிரம சிங்க புரத்தில் எனக்கு ஒரு விதவை அத்தை இருந்தார்கள். சிவ தீட்சை பெற்றிருந்தார்கள். சிவஞான மடம் அருகில் தான் வீடு. அவர்கள் மாதந்தோறும் ஏகாதசிக்குப் பட்டினி விரதம் இருப்பார்கள். மறுநாள் துவாதசி அன்று காலையில் தான் சமையல் செய்து சாப்பாடு. அன்றைய சாப்பாட்டில் அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் சேர்க்க வேண்டுமென்று ஒரு நியதியாம். அதற்காக அகத்திக் கீரையைக் காயவைத்துப் பாடம் பண்ணி ஹார்லிக்ஸ் புட்டியில் வைத்திருப்பார்கள்.
கீரை குறித்து இதர மாவட்டங்களிலுள்ள பண்பாட்டுத் தடைகள் வேலூர்ப் பகுதியில் இல்லை. இங்கே கீரைகளிலும் ஏகப்பட்ட வகைகள் பயிரிடுகின்றனர். தினமும் காலையில் தலைச்சுமையாகவே சிறுகீரை, முளைக் கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, மணத்தக்காளி, பசலை, பண்ணை, பொன்னாங்கண்ணி, சக்கரவர்த்திக் கீரை, முடக்கத்தான், தூதுவளை, வல்லாரை, பாலக்கீரை, புளிச்சக் கீரை என விதவிதமாகக் கிடைக்கிறது. முருங்கை, அகத்தியும் எக்காலமும் கிடைக்கிறது. லஜ்ஜை கெட்ட கீரை எனப்படும் நஞ்சுகொன்றான் கீரை மரம் இங்கே பல வீடுகளில் வளர்க்கின்றனர். என் வீட்டிலும் ஒன்று வளர்க்கிறேன். பலரும் அதனை விரும்பிச் சாப்பிடுகின்றனர். மஞ்சள் கரிசலாங்கண்ணி, கீழ்வாய் நெல்லி போன்ற மருத்துவ மூலிகைகளையுங் கூட பருப்பு சேர்த்து கடைந்து உண்ணுகிறார்கள். உணவில் கறிவேப்பிலை சேர்க்கிறார்களோ இல்லையோ கொத்தமல்லித் தழை கண்டிப்பாகச் சேர்க்கிறார்கள். புதினாவும் கொத்தமல்லியும் சேர்த்து வதக்கி அரைக்கும் சட்னி மிகவும் பிரபலம். முள்ளங்கிக் கீரை, சேப்பங்கீரையையும் சாப்பிடுகிறார்கள். முள்ளங்கிக் கீரையோடு நிலக்கடலை பொடித்துப் போட்டு வதக்கி, விருப்பத்தோடு உண்ணுகின்றனர். உழவர் சந்தையில் ஆவாரம் பூ கிடைக்கும் பருப்பு சேர்த்து உண்ணலாம். அதைச் சாப்பிடுவது தங்க பஸ்பம் சாப்பிடுவதற்கு இணையானதென்கிறார்கள். அதைக் கண்டால் வாங்கி வந்து சமைத்துவிடுவதுதான்.
கறிவேப்பிலையையும் வறுத்து அரைத்து புளிக்குழம்பு பக்குவத்தில் கறிவேப்பிலைக் குழம்பு செய்கின்றனர்.
பெங்களூர் பசலி என்றும் பருப்புக் கீரை என்றும் ஒரு வகையைக் குறிப்பிடுகின்றனர். இத்தாவரம் தான் கொரியா, ஜப்பான், சீனாவில் `ஜின்செங்` என அழைக்கப்படுகிற ஜீவதாது (சகலரோக நிவாரணி) என சன் டிவி புகழ் சக்திசுப்பிரமணியம் தெரிவிக்கிறார். இக்கீரையும் இங்கே தலைச் சுமையில் கீரை விற்கும் பெண்களிடம் கிடைக்கிறது. இச் செடி எங்கள் வீட்டில் மானாங்காணியாக வளர்கிறது. தண்ணீர், உரம் எதுவும் தேவையில்லை. என் அப்பாவைப் பெத்த பாட்டி சொல்லுவாள், மரஞ் செடி கொடியிலும் ராட்சச வகை, மனுச வகை என்று இரண்டு இருக்கிறதாம். உரம் தண்ணி எதுவுமில்லாவிட்டாலும் செழிக்க வளர்வதுதான் இராட்சச வகையாம். இந்த ஜின் செங்கும் அப்படிப் போலிருக்கிறது. இதோடு சிறுபருப்போ, துவரம் பருப்போ சேர்த்து கூட்டு வைக்கலாம். சிவப்புக் கொடிப் பசலையும் சில நேரங்களில் உழவர் சந்தைக்கு வருகிறது. குரோட்டன்ஸ் வகையிலான சிவப்புப் பொன்னாங்கண்ணியுங்கூட விற்பனைக்கு வருகிறது.
பொதுவாக எந்தக் கீரையானாலும் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், துவரம் பருப்பு சேர்த்து வேகவைத்து கல்சட்டியில் மத்து கொண்டு கடைந்து குழம்பாக சோற்றில் அல்லது களியில் தளரப் பிசைந்து சாப்பிடுவது வழக்கம். இந்தத் தயாரிப்பு முறை சிறப்பானதாகவே படுகிறது. பொரியல், கூட்டு போன்ற வகையிலும் பயன்படுத்தப்படுகிறது.
லத்தேரி, தொண்டான் துளசிப் பகுதிகளில் காசினிக் கீரை பயிரிடப்படுகிறது. இது சிறுநீரகக் கற்களைத் தகர்க்க வல்லதென நம்புகிறார்கள். கண்ணுக்கு நல்லதென்றும் சொல்கிறார்கள். இதனை `போண்டாத்தழை` என அழைக்கிறார்கள். இதையும் நாஞ்சில் நாட்டுத் துவரன் மாதிரியில் தேங்காய், சீரகம் சேர்த்து வதக்கிப் பார்த்தேன். சரிப்பட்டுவரவில்லை . சிறிது கசப்புள்ள கீரைவகை. இங்கே அதை நமது உள்ளிவடைப் பக்குவத்தில் கடலைமாவோடு சேர்த்துப் பிசைந்து போண்டாவாக எண்ணெயில் பொரித்து சாப்பிடுகின்றனர். பெரிய ஓட்டல்களில் இது கிடைப்பதில்லை. கிராமங்களிலும் நகரத்தின் டீக்கடைகளிலும், சாலையோரத்தில் அடுப்பு கூட்டி மாலை நேரங்களில் மட்டும் சுடச்சுட விற்பனையாகும் பஜ்ஜி போண்டாக் கடைகளிலும் கிடைக்கிறது. இப்போதுங்கூட அதன் விலை மூன்று ரூபாய்தான். எளிய மக்களின் உணவு. கீரை போண்டாவுக்கு சட்னி சாம்பார் எதுவும் தேவையில்லை. தரவும் மாட்டார்கள்.
வேலூர்க்க கடைகளில் பெரிய உணவு விடுதிகளிலுங்கூட கீரைவடை கிடைக்கிறது. அது ஒன்றுமில்லை, சாதாரண உழுந்து வடைக்கான மாவோடு அரைக்கீரை அரிந்து சேர்த்துப் பிசைந்து பொரிக்கும் உழுந்து வடைதான். இதற்கு சட்னி, சாம்பார் எல்லாம் பொருத்தம் தான்.
எனக்குத் தெரிந்த சமையல் கார ர் ஒருவர் உழுந்துவடைக்கு முட்டைக் கோஸ் அரிந்து போடுவார்.
பாலக் கீரை, முருங்கைக் கீரை போன்றவற்றைக் கொண்டும் கீரை போண்டாக்கள் செய்யப்படுவதாக இணையத்தில் குறிப்புகள் உள்ளன.
ஒருமுறை ஹரித்துவார் சென்று திரும்பு்ம் போது ஒரு உணவுவிடுதியில் மாலை நேர சிற்றுண்டியாக கீரை பஜ்ஜி கொடுத்தார்கள். அந்த மாதிரியில் நானும் நமது சிவப்புப் பசலிக்கீரையை பஜ்ஜி மாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிட்டுப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது.
நமது சமய சாத்திரப் பண்பாடுகள் எவ்வாறிருப்பினும் காய்கறிகளும் கீரையும் எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் சேர்க்கிறோமோ, அந்த அளவுக்கு மருத்துவச் செலவுகள் குறையும்.
இன்றுங்கூட எங்களது மதியச் சாப்பாட்டுக்கு வேலூர் மாடல் கலவன் கீரைக் கடைசல், நாஞ்சில் நாட்டுக் கூட்டவியல், பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், புளி, பெருங்காயம் சேர்த்துச் செய்த மிளகாய்ப் பச்சடி.
தினசரி உணவில் கீரை சேர்க்கும் பழக்கத்தினை குழந்தைகளிடம் வளர்ப்போம்.
ஜனவரி 16, 2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது. விருப்பம் 155, பகிர்வு 37 பின்னூட்டம் 43 

No comments:

Post a Comment