Monday 12 February 2018

சங்க இலக்கியத் துளிகள் - 12

சங்க இலக்கியத் துளிகள் - 12
மருதம்; கற்பு நிலையில் ஊடல்
பரத்தை வீட்டிலிருந்து திரும்பித் தன் வீட்டுக்குள் நுழைவதற்காக வாசலில் நிற்கும் தலைவனை தலைவி ஏறிட்டு நோக்குகிறாள். அவன் மார்பில் சிதைந்த சந்தனம்; வாடித் துவண்ட மாலை. அவளுக்கு சந்தனக்குறியிட்டு, மாலை சார்த்திக் கழிக்கப்பட்ட தாழி நினைவுக்கு வருகிறது. அவள் அவனிடம் கூறுகிறாள்;
வராதே! அப்படியே போய்விடு. என் ஊர் எப்படிப்பட்டது தெரியுமா? வந்து கேட்போருக்கெல்லாம் தேர் வழங்குகின்ற வள்ளன்மையுடைய விரானைத் தலைவனாகக் கொண்ட ஊர்; நெல் அரியும் உழவர்கள் கொட்டும் தண்ணுமை ஒலி கேட்டு வயலுக்குள்ளிருந்த பல்வகைப் பறவைகளும் பயந்து வரப்பில் வளைந்த கிளைகளுடன் நிற்கும் மருதமரத்தில் சென்று தஞ்சமடைவதால் மருதமரத்தில் தொங்கும் பூங்கொத்துகள் உதிரும் ஊர். அந்த இருப்பையூரின் அழகினைப் போன்ற எனது இளமைக்கால அழகெல்லாம் பாழாகிப் போனாலும் போகட்டும். நீ, என்னைத் தொடவிடமாட்டேன். அப்படி விட்டேனென்று வை; முன்பு உன்னைத் தழுவி மகிழ்ந்த என் கைகள் உன்னைத் தாங்கிக்கொள்வதற்காக நீளும். வலிமை மிகுந்த, குவிந்த மார்பகங்கள் முயங்கியதால், உன் மார்புச் சந்தனம் சிதைந்துள்ளது. அதனாலேயே நீ அணிந்துள்ள பூமாலையும் துவண்டு கிடக்கிறது. உன்னைத் தழுவிக்கொள்வதும் கழிப்பு கழித்த கலத்தைத் தழுவிக்கொள்வதும் ஒன்றுதான். அதனால் நீ வீட்டுக்குள் வந்துவிடாதே! உன்னைத் தழுவி முயங்கினாளே, அந்த ஒருவள் வாழ்க.
பாடல் :
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழனப் பல் புள் இரிய, கழனி
வாங்கு சினை மருதத் தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்
தொல் கவின் தொலையினும் தொலைக! சார
விடேஎன்; விடுக்குவென்ஆயின், கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை; வாடிய கோதையை;
ஆகில் கலம் தழீஇயற்று;
வாரல் வாழிய கவைஇ நின்றோளே.
- பரணர், நற்றிணை ,350.
அருஞ்சொற்பொருள் :
வெண்ணெல் அரிநர் – நெல் அறுவடை செய்வோர்; தண்ணுமை வெரீஇ – தண்ணுமை ஒலிக்குப் பயந்து; பழனப் பல்புள் இரிய– வயலிலிருக்கும் பல்வகைப் பறவைகளும்;
கழனி வாங்கு சினை மருதம் – வயலோரம் நிற்கின்ற வளைந்த கிளைகளுள்ள மருதமரங்கள்;
தூங்கு துணர் உதிரும் – தொங்கும் பூங்கொத்துகள் உதிரும்;
தேர் வண் விராஅன் – தேர்களைக் கொடையளிக்கும் வள்ளன்மையுடைய விரான் என்ற தலைவனின்; இருப்பை அன்ன – இருப்பையூரினை ஒத்த;
என் தொல் கவின் தொலையினும் தொலைக - என் இளமைக்கால அழகெல்லாம் தொலைந்தாலும் தொலைந்து போகட்டும்;
சார விடேஎன் – நீ, என்னை நெருங்கவிடேன்; விடுக்குவென் ஆயின் – அப்படி நெருங்க விட்டேனென்றால்;
கடைஇ கவவுக் கை தாங்கும் – முன்னர் உன்னைத் தழுவிய என் கைகள் உன்னைத் தாங்குவதற்காக நீளும்;
மதுகைய – வலிமைமிக்க;
குவவு முலை சாடிய சாந்தினை – குவிந்த முலைகள் முயங்கிச் சிதைந்த சந்தனத்தைக் கொண்டிருக்கிறாய்:
வாடிய கோதையை – துவண்ட மாலையினை அணிந்திருக்கிறாய்,
ஆகில் கலம் – பயன்படுத்தக் கூடாத கலம், கழிப்பு கழித்த கலம், தாழி முதலியன;
தழீஇயற்று – தழுவியதைப் போன்றதாகும்;
வாரல் – வராதே;
வாழிய கவைஇ நின்றோளே – உன்னை முயங்கி நின்ற அந்த ஒருவள் வாழ்க.
கவிதை நயம் :
பரத்தை வீட்டிலிருந்து வந்திருக்கும் தலைவனை சந்தனக்குறியிட்டு, மாலையும் சார்த்திக் கழித்த கலத்திற்கு உவமித்து, `ஆகில் கலம் தழீஇயற்று` எனக் கடிந்திருக்கும் கருத்து பொருட்பெண்டிரைத் தழுவுவது `ஏதில் பிணந்தழீயற்று` என்ற வள்ளுவரின் கருத்தோடு ஒப்புநோக்கற்பாலது.
வள்ளுவரின் கருத்து, பொருட்பெண்டிருடனான முயக்கத்தைக் கடியும் பொதுநோக்காகக் கூறப்பட்டது. பரணரோ, பரத்தையோடு உறவாடியவனின் மனைவியின் பார்வையில் `உன்னைப் பார்க்கும் போதெல்லாம் `முதுமக்கள் தாழி` தானடா கண்ணுக்குத் தெரிகிறதென்கிறார்.
மேற்காணும் அறங்கூறும் திறத்தை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிட்டு மருதத்தின் அழகினையும் ஊடல் என்ற உரிப்பொருள் நிலையில் இருபால் உளவியல் மொழியும் கவித்திறத்தை உன்னியுணர்வது மேலதிக இன்பம் பயப்பதாக உள்ளது.
மருத நிலத்தின் வளமையாக நெல் அறுவடையும் பண்பாட்டுமரபாகத் தண்ணுமை ஒலிப்பும் பல்வகைப் பறவைகளுக்கும் வாழ்வளிக்கும் பழனங்களும் கழனி ஓரங்களில் வளைந்த கிளைகளுடன் நிற்கும் மருதமரங்களும் அவற்றில் தொங்கும் பூங்கொத்துகள் பறவைகளின் இயக்கத்தால் உதிர்வதுமாக நில அழகினைக் காட்டியதோடு, தேர்களைக் கொடையளிக்கும் வள்ளன்மை மிக்க மனவளத்தையும் சுட்டிக் கூறி, அத்தகைய அழகுக்கு இணையானது தலைவியின் `தொல்கவின்` என அவளது வளப்பமான உடலழகினையும் உயர் பண்பாடு மிக்க உள்ள அழகினையும் உணர்த்தியுள்ள பாங்கு உன்னி மகிழத்தக்கது.
பரத்தையை வாழ்கவென வாழ்த்தும் உயர் பண்பு தலைவிக்கிருக்கிறது. தலைவன் இல்லாமல் தனது அழகு பாழாகுமென்று அவளுக்குத் தெரிகிறது. அதைச் சுட்டிச் சொல்லியே, ஆனாலும் பரவாயில்லை; பரத்தையோடு உறவுகொண்டதால் அவனைத் தன்னிடம் நெருங்கவிடமாட்டேன் என்கிறாள். அந்த நிலையிலேயே உறுதியாக நிற்கவில்லை. அவளது வாய்மொழிகளின் தொடர்பினை உற்றுநோக்கும்போது, அவற்றின் முரண் நிலை தெளிவாகத் தெரிகிறது.
சார விடேன், விட்டேனாயின் கவவுக்கை தாங்கும், வலிமை மிக்க குவிந்த முலைகள், சிதைந்த சந்தனம், துவண்ட மாலை, உடல் தழுவுதல், கழிப்பு கழித்த கலம், வாரல், வாழ்க அவள்.
நான் ஏன் உன்னை நெருங்கவிடமாட்டேனென்று சொல்கிறேன் தெரியுமா? அப்படி நெருங்க விட்டால், மனம், மொழியால் நான் மறுப்பினும் என் உடலைப் பொருந்திய கைகள் முன்னர் உன்னைத் தழுவிய பழக்கத்தால் இப்போதும் உன்னைத் தாங்கிக்கொள்வதற்காக நீளும்” என்கிறாள். இதைச் சொல்லிய வாயாலேயே, பரத்தையின் குவிமுலைகள் முயங்கிய உன்னைத் தழுவுது கழிப்பு கழித்த கலத்தைத் தழுவுவது போன்றதுதானென்கிறாள். நீ வாராதே என்றும் சொல்கிறாள். உன்னைத் தழுவி முயங்கிய அவள் வாழ்கென்கிறாள். மறுப்பு மொழியும்  இணக்க மொழியும் ஒன்றையொன்று தொடர்கின்றன.
முற்றாக விலக்க இயலாமல், தலைவனின்பால் புணர்ச்சி விருப்புடனேயே இருக்கும் தலைவியின் மனநிலை, ஊடல் மனநிலையே என்பதனைத் தலைவன் இல்லாமல் பாழாகும் தொல்கவின், `கவவுக்கை தாங்கும்` என்ற சொற்களும் பரத்தையின் மார்புகளை இழித்துக் கூறாமல் விதந்து கூறுவதும், அவளை வாழ்த்துவதுமான கூற்றுச் சொற்களும் உணர்த்தாமல் உணர்த்தி நிற்கின்றன. இக்கவிதையில் `ஆகில் கலம்` தவிர்த்த இதர மொழிகள் அனைத்துமே உயர்வு மற்றும் இணக்க மொழிகளே. சிதைந்த சந்தனமும் துவண்ட மாலையும் அவமொழிகளாகா. சந்தனத்தைச் சிதைப்பதுவும் பூமாலை துவள்வதும் இறுக்கமான முயக்கத்தை நினைவுபடுத்துவன. அதைச் சுட்டியதன் மூலம் முன்னம், தன்னுடைய முயக்கத்தால் சந்தனம் சிதைந்ததையும் பூமாலை துவண்டதையும் அதற்குரிய உரிமைபெற்றவள் தான்மட்டுமேயென்பதையும் தலைவனுக்கு உணர்த்துவதுமாம். எனவே `ஆகில் கலம் தழீஇயற்று` என்பது சுடுமொழியன்று; ஊடல்மொழிதானென்பது தெற்றென விளங்கும்.
இத்துணை உளவியல் பாங்கினையும் உணர்த்தும் திறத்தோடு தமிழ்க் கவிதைகள் விளங்குவதால்தான் காலத்தைவென்று நிற்கின்றன.
இந்தச் சங்கப்பாடலில் நாம் அறியக் கிடக்கும் செய்திகள்
1. நெல் அறுப்பவர்கள் அறுவடைக்கு முன் தண்ணுமை என்னும் பறையினை முழக்கியிருக்கின்றனர்.
2. மருத மரத்தில் பறவைகள் தங்கும். (பறவைகள் தங்காத மரங்களும் உள்ளன. நாம் இப்போது அழகுக்காக நடுகின்ற சாலையோர மரங்கள் பலவற்றிலும் பறவைகள் அமர்வதில்லை.)
3. தேர்களைக்கூட கொடை வழங்கும் வள்ளன்மை மிக்கவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் விராஅன்; அவனது ஊர் இருப்பை.
4. ஆணின் அண்மை இல்லையேல் பெண்மையின் அழகு குலையும் என்ற கருத்து பல பாடல்களிலும் பயின்று வருதல்.
5. ஆண்கள் மார்பில் சந்தனமும் மாலையும் அணிவது வழக்கமாயிருந்திருக்கிறது.
6. கழிப்பு கழித்த கலங்களுக்கு மாலையிடுவதும் சந்தனக்குறிகளிடுவதும் மரபாக இருந்திருக்கிறது.
7. பரத்தைமை கடுமையாகக் கடியப்பட்டுள்ளது.
9.02.18 அன்று முகநூலில் பதிவு செய்யப்பட்டது. விருப்பம் 72, பகிர்வு 12, பின்னூட்டம் - 23.

No comments:

Post a Comment