Monday 12 February 2018

முகநூல் கவிதை

என் செல்ல மகனே, கேள்.
என் செல்ல மகனே!
மூன்று பக்கம் கடல்,
வடக்கில் வானுயர்ந்த மலை
இந்த நாடு மிகப்பரந்தது
இதன் நீண்ட கடற்கரை அழகானது.
இதன் ஆறுகள் புனிதமானவை.
பருவக் காற்றுகள் மாறிமாறி வீசுகின்றன
மலைகள், காடுகள், கடல்படுபொருட்கள்,
விளைநிலங்கள், அணைகள், கனிமச் சுரங்கங்கள்,
நவரத்தின, மகா ரத்தினத் தொழிற்சாலைகள்
பொது வங்கிகள், நிதியங்கள்,
நாடு முழுவதையும் இணைக்கும் நான்குவழி, ஆறுவழித் தங்க நாற்கரச் சாலைகள்
உலகிலேயே பெரிய தொடர்வண்டி இணைப்பு
பறக்கும் தொடரி, நீர்விமானம்
உலகை வலம்வருகின்ற வானூர்திகள்
நிலவுக்கும் ஆய்வுக்கும் விண்கலங்கள், செயற்கைக் கோள்கள்
எல்லாமே இருக்கின்றன.
நூற்றுக்கணக்கான உன் உடன்பிறப்புத் தொழிலதிபர்கள்
உலகக் கோடீசுவரர்களை மிஞ்சிடும் வகையில் வளம் சேர்க்கின்றனர்;
எல்லாமே உனக்காகத்தான்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்;
எதுவும் பேசாமல் உழைத்துக்கொண்டேயிருக்கவேண்டும்
இன்னொன்று -
நீ நாட்டுப் பற்றோடிருக்கவேண்டும்.
இந்த நாடு உனது.
உனக்காகவே பாராளுமன்றம் நீதிமன்றம்
உனக்காகவே அரசியல் சட்டம்
உனக்காகவே நிதி ஆயோக்
உனக்காகவே பிரதமர் முதல் பியூன் வரை
உழைக்கிறார்கள், உழைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
நம்பிக்கை கொள்;
உனது மதம் உலகிலேயே உயர்ந்தது.
பெருமிதம் கொள்; ஒரு இந்து நாட்டினை ஆள்கிறார்.
மறந்தும் அண்டை நாட்டுப் பெயரை உச்சரித்துவிடாதே
இலவசங்களை எதிர்பார்க்காதே; தன்மானத்தோடு வாழ்.
நாட்டுக்காக, மதத்துக்காக நீ எப்போதும் இரத்தம் சிந்தத் தயாராக இரு.
இரவுக்கான உணவா, கேட்காதே!
ஈரத்துணியால் இறுகக்கட்டிக்கொள்
சிறிது கூட முனகிவிடாதே!
அப்புறம் நீ தேசத் துரோகி.
அவ நம்பிக்கையாளன். 
ஜனவரி, 24, 2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது. விருப்பம் 68 பகிர்வு 6 பின்னூட்டம் 14

No comments:

Post a Comment