Thursday 15 February 2018

தென்கொரியச் சிறுகதை - மலையை விட்டுச் செல்லுதல் Leaving the mountains

மலையை விட்டுச் செல்லுதல் (Leaving the Mountains) கொரியமொழி : கிம் சியாங் டாங் (KIM SEO`NG – DONG), தென்கொரியா ஆங்கிலம் : ஜான் எம். ஃப்ராங்க்ல் (John M Frankl) / தமிழில் ச. ஆறுமுகம்.


download (10)
எனது முதல் விழிப்புணர்வினை நினைவுகொள்கிறேன்.
ஆம். மலைகளின் நடுவே அந்த ஆழமான பள்ளத்தாக்கு என் நினைவுக்கு வருகிறது. அது இளவேனிற்காலம்; அடர்ந்து வளர்ந்திருந்த மரஞ்செடிகொடிகள் அனைத்துமே ஆழ்ந்த பச்சைநிறத்தை வாரிப் பூசிக்கொண்டிருந்தன. வியப்பின் ஆழப்பெருமூச்சு ஒன்றினை வெளிப்படுத்தி, என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில், பரந்த வானத்தைப் பயமுறுத்துவது போல் ஓங்கி வளர்ந்திருந்த அந்த ஓக் மரத்தின் அடிப்பாகத்தை என் இருகரங்களாலும் பற்றிக்கொண்டேன்.
அனைத்தும் நெடுங்காலமாக அப்படிக்கப்படியே இருந்துவருவதான உணர்வு. மலையின் மிக ஆழமான பள்ளத்தாக்கு, பாய்ந்தோடும் கானாறுகள், வண்ண வண்ணமாக, அனைத்து வண்ணங்களிலும் தலைவிரித்து, வேனில் சுமக்கும் மரஞ்செடிகொடிகள், எங்கெங்குமாகக் கேட்கும் வினோதப் பறவையொலிகள்,
மண்ணுலகத்திலிருந்து வேறு எவருமே இல்லை; ஆனாலும் என் இதயத்திற்குள் புத்தரைக் காணமுடியவில்லை. நிலைமையை இன்னும் கடினமாக்கிக் கதிரும் மறைந்துபோக, மீண்டுமொரு இரவு வந்தேவிட்டது; நாளின் அந்த நேரத்தைக் கழிப்பதில் எனக்குக் குறிப்பிட்டதொரு கடும் பிரச்னை இருந்தது. மலைக்கென்ன, அது என்றென்றைக்கும் அமைதிப்புன்னகை வீசும், ஆனால் எனக்குத் தெரியும், அங்கேயே நின்று, அலைந்துதிரியும் ஊசலாட்டத்திலேயே நான் மற்றுமொரு நாளினை வீணாக்கிவிட்டேன். என் இளமைப்பருவத்திலேயே, நான் ஒருநாள் திடீரெனப் போதிமனத்தின் அழகொளியைப் பெறுவேனெனச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்;
அதனாலேயே துறவியாவதற்காக மலைகளுக்குள் வந்துவிட்டேன். அதிலும் குறிப்பிட்ட இந்த நாளில், நான் எவ்வளவுதான் முயற்சியெடுத்து எவ்வளவு உயரம் ஏறினாலும் மலையின் உச்சி கண்ணுக்குத் தென்படவேயில்லை. அது தென்படாமலிருப்பது என்னை மேலும் மேலும் முயற்சியெடுத்து இன்னும் உயரத்திற்கு ஏறச் செய்யவேண்டியதுதான் நியாயமென்றாலும், மற்றுமொரு பகல்பொழுது வீணாகக் கழிந்ததில், என்னால் செய்யக்கூடியதெல்லாம் இம்மண்ணுலகப் பாவங்களால் கறைபடிந்த இந்த உடலத்தைக் கீழே சாய்க்க ஒரு இடத்தைத் தேடுவதுதான்.
நான் குந்தியமர்ந்து, நாடிக்குத் தாங்கலாகக் கால் மூட்டுகளைக் கொடுத்தேன். பின்பு நான் `குவான் சேயும் போசால்` (கருணை மிக்க போதிசத்துவரே) என அழைத்துப் பழக்க தோஷத்தில் அவரது புனிதப் பெயரை மீண்டுமொருமுறை உச்சரித்தேன். நான் முழுவதுமாக மனச்சோர்வுற்றிருந்தேன்.
நான் துறவியாக இல்லாதிருந்தால், சாதாரண மனிதன் ஒருவனைப் போல வண்ண ஆடைகளும் மழிக்கப்படாத நீண்ட தலைமுடியுமாக இருந்தால், என்னால் ஒரு சிகரெட் புகைக்கமுடியும் என்பதோடு அறியாமையைப் போல அதன் முனையிலிருந்து எழும் புகைச்சுருள்களில் என் துயரம்படிந்த மனத்தினை ஒரு கணமாவது ஆற்றிக்கொள்ளமுடியும்.
ஆனால், மீன், இறைச்சி, மது மற்றும் புகையிலையை பிளேக் நோயைப் போல விலக்கவேண்டிய புத்தத் துறவியாகிய நான், அங்கே அமைதியாக உட்கார்ந்து அனைத்து புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் பெயர்களை வெறுமனே உச்சரிப்பதில் தான் ஆறுதல் காணமுடியும்.
இருட்டில் அந்தப் பாதையில் ஊர்ந்தாவது சென்றுவிடத்தான் நான் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தேன். அந்த மலைத்தொடரில் எங்கேயோ ஓரிடத்தில் வசிப்பதாகச் சொல்லப்படுகிற மகா குரு ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தேன். அதற்காகவே மலையேறும் நான் அவரது தோற்றத்தைப் பற்றிச் சிறிது கேள்விப்பட்டிருக்கிறேன்.
முதல் பார்வைக்கே, அவரது தடந்தோள் உடலமைப்பு மற்றும் நிமிர்ந்த பெருநடைப் பாவனை காரணமாக, அவர் மலைகளில் தனித்து ஒதுங்கி வசிக்கும் காவித்துறவி போலன்றிப் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட போர்ப்படையினை நடத்தும் தலைமைத்தளபதி போலவே பெரிதும் தோன்றுவார். அப்புறம், அவரது கண்கள் இருக்கவே இருக்கின்றன;
புலியினுடையதைப் போன்ற அவரது கண்களில் தெறிக்கும் நெருப்பொளியினை நோக்கும் எந்த மனிதனானாலும் சரி, தானாகவே தலைகுனிந்து வணங்குவான். அவரது இடியொலிக் குரலின் அதிர்வு சிங்கத்தின் முழக்கத்தை ஒத்து, கேட்பவரின் செவிப்பறையை, வெடிச்சத்தமாகத் துளைத்துக் கிழிக்கும்.
அவரது வயதினைப் பொறுத்தவரையில், சராசரி உலகினரின் கணக்குப்படி அவரது வயது 71. ஆனால், அவர் மிக இளமையிலிருந்தே அவரது முழு வாழ்க்கையினையும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து, பாவக்கறையற்ற அவரது மாமிச உடலினை புத்தர் மற்றும் லாவோஜியின் போதனைகளுக்கே அர்ப்பணித்துள்ளார். அவரது குருவின் போதனைகளின்படி மட்டுமே மனம் மற்றும் உடலினை இயக்குகிறார். இந்த 71 வயதிலுங்கூட அவர் அந்த போதனைகளிலிருந்து ஒரு மயிரளவு அகலம் கூட விலகியதேயில்லை.
யுக, யுகங்களுக்கும் அவரே உண்மையான ஒரு குருவாகத் திகழ்கிறார். அது மட்டுமல்ல. அவர் பெற்றிருக்கிற புத்தொளியறிவு எவ்வளவுக்கு மேம்பட்டதென்றால், இந்த உலகின் அனைத்து வழிமுறைகளும் எல்லையற்ற அண்டப்பெருவெளியின் அனைத்தியக்கக் கொள்கைவிதிகளும் – பிறரால் கணிக்கக்கூட முடியாத, எக்காலத்திற்கும், எல்லா இடம், பொருளுக்கும் பொருந்துவதும் பெரும் புதிர்களாகத் தோற்றமளிப்பவற்றையுங்கூட – அவர் அறிவார்.
ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால், மேன்மைக்குரியதும் அழகானதுமான அவரது பெயரினை ஒருவர் கேள்விப்படுவதென்பது எப்போதுமே வதந்தி வடிவத்திலேயேயிருக்கிறது. அவரது பேரழகுத் தோற்றத்தைக் கண்ணால் கண்டவரோ அல்லது பிரவாகமாய்ப் பொங்கிவரும் அவரது உரைகளைத் தம் காதால் கேட்டவர்களோ யாருமே இல்லை.
அதுபோலவே அவரது கருணைமிக்க வழிகாட்டுதலில் புத்தொளியறிவினைப் பெற்றவர்கள் எவருமேயில்லை. ஆனாலும், வினோதம் பாருங்கள், அவரது தோற்றம் குறித்த கதைகளும் அவரது போதனைகளும் மலைகளிலிருந்தும் இறங்கி, மக்களை வந்தடைந்துள்ளதுடன் மண்ணுலகின் பாவங்கள் நிறைந்த தெருக்களில் அவற்றை எல்லோராலும் கேட்கமுடிகிறது.
அவரது பெயர் `ஒற்றைவிரல்`. அவரொன்றும் அப்படிக் கூப்பிடுமாறு யாரிடமும் வேண்டிக்கொள்ளவில்லை; சொல்லப்போனால் யாராவது அவரிடம் `நல்வழி` பற்றிக் கேட்கும்போது எதுவும் சொல்லாமல் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியதால்தான் அப்படியொரு பெயரைப் பெற்றார். போதாக்குறைக்கு, அவர் ஒரு விரலை வேறு இழந்திருந்தார். அதைப்பற்றி ஒரு கதைகூட இருக்கிறது.
அவர் ஒரு குருவின் வீட்டில் தங்கி, இளம் பயிற்சித் துறவியாகப் பணிவிடைகள் செய்திருந்த போது, வெளியே சென்றிருந்த அவரது குருவைச் சந்தித்து வணக்கம் செலுத்திச் செல்வதற்காக, அலைந்து திரியும் துறவி ஒருவர் வந்திருந்தார். துறவியை வரவேற்ற அவர், என்ன விஷயமாக அவர் வந்திருக்கிறாரென வினவினார். முதிய குருவின் அறிவுரைகளைக் கேட்பதற்காக வெகுதூரம் பயணித்து வந்திருப்பதாக, அவர் தெரிவித்தார்.
குரு எப்போது திரும்பிவருவாரென்று சரியாகச் சொல்வதற்கு எந்த வழியுமில்லையென துறவியிடம் அவர் கூறினார். நேரம் தவறிப் போனதற்கு ஏதோ காரணத்தை முனகிக்கொண்ட துறவி உதட்டைச் சுழித்து, சுச்சுச்சூவென இச்சுக் கொட்டியபோது, அவரது முகம் சோர்விலிருந்து துயரம்மிக்கதாக மாறியது. பயிற்சித்துறவி, விருந்துத் துறவியிடம் ஏன் மிகக் கவலையாகத் தோன்றுகிறீர்களெனக் கேட்க, வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு, குருவிடம் `நல்வழி` குறித்துக் கேட்க வந்ததாக, மிகுந்த துயரத்துடன், கூறினார். பயிற்சித்துறவி, பொங்கிவந்த சிரிப்பினை அடக்க மேற்கொண்ட கடினமுயற்சியில் குடற்காற்று ஒன்று அவர் அறியாமலே பறிந்து வெளியேறியது.
இந்த அலைந்து திரியும் துறவிகள் நாள் தவறாமல் வரிசையில் வந்து அதே கேள்வியைக் கேட்கவும், நாளும் அவரது குரு அமைதியே காத்து ஒற்றைவிரலை உயர்த்திக் காட்டுகிறார். `நல்வழி` குறித்த இந்தக் கேள்விக்கு நூறுமுறையென்றாலும் திடமுடன் பதில்சொல்லத் தேவையானதை பயிற்சித்துறவி அறிவார். அமைதியும் மாட்சிமையும் கொண்ட தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிய, பயிற்சித்துறவி அவர் பார்த்திருந்த புத்தர் சிலைகளின் பத்மாசனத்தில் கால்களை மடக்கி அமர்ந்து, துறவியிடம் `நல்வழி`
எதுவெனக் கேட்குமாறு கூறினார். துறவி வாயடைத்துப் போனாரென்றாலும் பயிற்சித்துறவியின் சீர்மைத்திறம் அவரை ஆட்கொண்டது. பற்பல முதுநிலைத்துறவியருக்கு ஒரு இளம் விறகுவெட்டியின் இசைக்குழலொலியில் ஏற்பட்ட திடீர் விழிப்புணர்வினை அல்லது மிருகங்களின் விளையாட்டினை லயித்துப் பார்த்திருக்கும்போது ஐயுறவுகளெல்லாம் அற்றுப்போனதை அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.
`நல்வழி`யைத் தேடி வெகுதூரம் பயணித்து வந்திருந்த அ
வர், பிறரொருவரின் வயதினை வைத்துத் தீர்ப்புகளை உருவாக்கக்கூடாது என்பதை நன்கு அறிவார். தனது முட்டாள்தனத்தை தனக்குத்தானே நொந்துகொண்ட அவர், அவரது காவியுடைகளை நேர்படுத்திச் சீராக்கிக்கொண்டு, இளம் பயிற்சித் துறவியை முதிய குருவாகவே பாவித்து, அவரது முகத்தை ஏறிட்டு நோக்கி, மும்முறை வணக்கத்தினைப் பவ்யமாகச் செலுத்தி,
`நல்வழி எது?` வெனப் பணிந்துகேட்டார். பத்மாசனத்தில் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்த இளம் பயிற்சித்துறவி, வெறுமனே ஒற்றை விரலை உயர்த்திக்காட்ட, அந்த ஊசலாட்டத் துறவி குழப்பத்தில் ஆழ்ந்தாலும், அவருக்கு அங்கிருந்து புறப்படுவதைத் தவிர வேறு வழியில்லாமற்போனது.
முதிய குரு வந்து சிறிதுநேரத்திற்குள்ளாகவே, பயிற்சித்துறவி நிகழ்ந்த கதையை அவரிடம் ஒப்பித்தார். இரு கைகளையும் தட்டி, உரக்கச்சிரித்த குரு, பயிற்சித்துறவியின் முதுகினை மெல்லத் தட்டி, சிங்கக்குருளை ஒன்று என்னிடம் பயிற்சிபெறுவது எனக்குத் தெரியாமற்போயிற்றே, இதை நான் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கவில்லையே, என்றார்.
அதைக்கேட்ட பயிற்சித்துறவி, நான் சரியாகச் செய்தேனாவெனக் கேட்க, குருவோ சிங்கங்கள் சிங்கத்தைத்தான் வாரிசாகப் பெறும், மானையல்ல, என்றார். ஆனால், அதன் பின்னர், ”நீ என் வித்தையைக் கற்றுக்கொண்டால், நான் பூவாவுக்கு என்ன செய்வே”னென முனகினார். நீங்கள் என்ன சொல்கிறீர்களென பயிற்சித்துறவி, குருவைக்கேட்க அதொன்றும் முக்கியமில்லையென்றதோடு, நான்தான் உன்னிடம் `நல்வழி` கேட்க வேண்டுமென்றார்.
நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்களெனப் பயிற்சித்துறவி சொல்ல, குரு மும்முறை தலைவணங்கி, `நல்வழி` எதுவெனக் கேட்டார். உடனேயே பயிற்சித்துறவி கண்களை மூடி, ஒற்றைவிரலை உயர்த்திக்காட்டித் திடீரெனக் கையைப் பெரும் வலியுடன் பின்னுக்கிழுத்தார். குரு அவரது உள்ளங்கையில் மறைத்துவைத்திருந்த குறுங்கத்தியால் அந்த ஒற்றைவிரலை வெட்டியெடுத்திருந்தார்.
வலியில் கத்திக்கதறி, இரத்தம் ஒழுகும் கையை மறுகையால் பிடித்துக்கொண்டு, தர்ம கூடத்தைவிட்டு ஓடிய பயிற்சித்துறவி, குருவின் இடியோசைக்குரலைக் கேட்டதும், நின்று, தலையை மட்டும் திருப்ப, ஒற்றை விரலைத் தூக்கிக் காட்டியவாறு வீற்றிருந்த குருவைக் கண்டார். பயிற்சித்துறவி திடீரென, அங்கேயே சுற்றிச்சுற்றி ஆனந்த நடனமாடத் தொடங்கினார். அந்தக் கணத்தில் அவர் புத்தொளியறிவு பெற்றதாக, கதிர், நிலவு, வானம், விண்மீன், மலை, பூமி, கடலென அண்டப் பெருவெளி அனைத்துமே அந்த ஒற்றை விரலுக்குள் சுற்றியதைப் பயிற்சித்துறவி கண்டதாக, பிற்காலத்தில் கூறிக்கொண்டார்கள்.
கோவில்களிலும், மண்ணுலக வீதிகளிலும் நான் சுற்றியலைந்து, அந்த மகா குரு ஒற்றைவிரலை இழந்த கதையாக, இதைத் தான் கேள்விப்படமுடிந்தது. அதுவும் முழுக்க முழுக்க வதந்தியாக, எவ்வித நிரூபணமும் இல்லாமலிருந்ததால் தான், அவரை நான் நேரில் சந்திக்கத் துடித்தேன். அவரைப்பற்றி உறுதியான எந்த ஒரு தகவலும் இல்லாதநிலைதான், அவரைத் தேடுவதைத் தவிர்க்கமுடியாத ஒரு நிலைக்கு என்னை இட்டுச்சென்றதென்பதை நான் சொல்லித்தானாக வேண்டும். அதன் முடிவில்தான்,
குளிர்காலத் தியானக் கூட்டத்தொடர் நிறைவுபெற்ற உடனேயே, நான் அவரை நாடு முழுவதிலும் அலைந்து திரிந்து தேடத் தொடங்கினேன். மலைகளின் ஆழக்குகைகளிலும் சந்தைக் கூடங்களின் மழிப்பகங்களிலும் அவரைத் தேடினேன். வேசிகள் நிறைந்த விபச்சார விடுதிகளிலும், குண்டர்கள் நடத்திய சூதாட்டக் களங்களிலும், பரபரப்பாளர்கள் நிகழ்த்திய களியாட்டக் கூடங்களிலும் அடிமைகளிலும் அடிமைகள் உழன்ற தொழிற்பட்டறைகளிலும் நான் தேடியலைந்தேன். இம்மண்ணுலகத்தின் அருவருப்பு நிறைந்ததும், மட்டத்திலும் மட்டமானதுமான இருட்டுக் குகைகளுக்குள் எனது நற்பெயர், துறவியாடை மற்றும் தூய உடலினைக் கொண்டலைந்ததற்குக் காரணம்,
அந்த மகா குருவினைச் சந்தித்து `நல்வழி` யினைக் கற்றுக்கொள்ளும் தணிக்கமுடியாத எனது ஆவல்தான். ஆனால், அவர் எங்கு சென்றிருந்தாரென்றோ, எங்கே செல்லக்கூடுமென்றோ எந்தவொரு சிறு யூகத்திற்கும் வழியில்லாமல் செய்திருந்தார். இதோ இங்கிருக்கிறாரெனக் கேள்விப்பட்டு அங்கு செல்வதற்குள் அவரது ஆறு வளையக் கைத்தடியை எடுத்துக்கொண்டு அடையாளமற்ற எங்காவது சென்றுவிடுகிறார்.
இம்மண்ணுலகில் நெடுநாட்களாக, அவரைத் தேடியலைந்த நான், ஒருநாள் கடைசியாக, சிவப்பு அல்லது நீலத்தில் ஏதாவதொரு ஒளிவீசும் அரிக்கன் விளக்குகளுடன் வரிசை வரிசையாக விபச்சாரவீடுகள் அமைந்த தெருவுக்குள் வந்துவிட்டதை உணர்ந்தேன். அந்த வீடுகளின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வேசிகளும் அவர்களின் வாடிக்கையாளர்களும் உடற்பேரின்பத்தை மகிழ்ந்து அனுபவிக்கும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.
தொங்கிக்கொண்டிருந்த அரிக்கன் விளக்கு ஒன்றின் அடர் சிவப்பு வெளிச்சத்தின் நேர்கீழாக, வேசி ஒருத்தி தனிமையில் நின்றிருந்ததைக் கண்டேன். முடிந்த அளவு வேகத்தோடு அவளைக் கடந்துவிடத்தான், நான் முயன்றேன். ஆனால், அவள் என்னை அழைத்துவிட்டாள்.
”அடிகளே, இங்கு வாருங்கள்”.
அவள் அருகில் சென்றதும்தான், அம்மைத்தழும்புகள் நிறைந்த அவளது முகத்தையும் பன்றியைப் போல் சப்பையான மூக்கினையும் கண்டேன் – நான் அதுவரைப் பார்த்திருந்ததிலேயே மிகமிக அருவருப்பான ஒரு பெண் அவள்தான். அந்தக் கோரத் தோற்றத்தினால்தான் வாடிக்கையாளர் எவரும் கிடைக்காமல், இந்தப் பிந்திய இரவிலும் போவோர்வருவோரை அவள் தீனக்குரலில் வீணாக அழைப்பதாகவும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
“நீங்கள் என்னிடமா பேசினீர்கள்?” என நான் கேட்டேன். அவளோ வாடிக்கை பற்றி நான் பேசாததாலோ, என்னவோ என் சட்டைக்கை ஒன்றினைப் பற்றிக்கொண்டாள்.
”என்ன செய்கிறாய்?’’ எனக்கேட்டுக்கொண்டே, அந்தக் கீழ்மகளின் கையைத் தட்டிவிடுவதற்காக எனது ஆடையைப் பிடித்து வெட்டியிழுத்தேன்.
அவள் என்னைப் பார்த்து அடித்தொண்டைக் குரலில், “நீ பார்க்கிற பார்வையிலேயே சொல்லிவிடுவேனே, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறவன் தானென்று, உனக்கு நான் ஏன், என் உடலை அர்ப்பணிப்பாகத் தரக்கூடாதென்றாள்.
நான் வாயடைத்துப்போனெனென்றாலும் சமாளித்து, நீங்கள் ஒரு வேசியாக இருக்கலாம்; ஆனால், அதற்காக இந்த உலகத்தைத் துறந்து, கண்டிப்பான புத்தமதப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் என்னைப் போன்ற துறவியிடம் நீங்கள் இப்படியாக நடந்துகொள்வது எந்த விதத்திலும் ஏற்கத் தக்கதில்லையென்றேன்.
எந்த வேசியும் அப்படிச்செய்யத் துணியாத ஒரு காரியமாக அவள் என்னைப்பார்த்து, இரண்டு கையையும் விரித்து, அய்யய்ய வென வலிப்புக் காட்டினாள்; . பின்னர், ஒற்றைக்கண்ணை அநேகமாக மூடுமளவுக்குச் சுழித்து, என்னைக் குத்திவிடுவது போல் ஒரு முட்டியை மடக்கிக் காட்டினாள். பின்னர் மீண்டும் அவளாகவே பேசினாள்.
“உனக்கு என்னதான் பிரச்சினை? நான் அசிங்கமாக இருக்கலாம், ஆனால் இங்கே சுற்றுவட்டத்தில் யாரானாலும் என்னைப் போல் குறைந்த தொகைக்கு, வரமாட்டார்கள். என்னோடு ஒருமுறை வந்துபார், மெய் மறக்கும் இன்பத்தில், உன் உடம்பு முழுவதும் அப்படியே உருகிப்போய்விடும்; நீ அப்படியே அழியாவுடல் தாவோயிசனைப் போல் நேரடியாக சொர்க்கத்துக்குப் போய்விடுவாய்.” என்றாள்.
”கருணை மிக்க போதிசத்துவரே!”
போதிசத்துவரை அழைத்த வாயாலேயே நான், அந்த வேசியைத் திட்டத் தொடங்கினேன். ஆனால், அவளோ மீண்டும் முன்பு போலவே பசப்புவார்த்தை பேசத்தொடங்கினாள்.
“கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு அதை இலவசமாகவே தருகிறேன். நான் எவ்வளவுதான் கீழ்த்தரமானவளாக இருந்தாலும், `கொடையளித்தல்` என்பதன் மிகச்சிறந்த வடிவத்தை நானுங்கூட அறிவேன். தாகத்திலிருப்பவருக்கு தண்ணீர் தருவதும், பசியோடிருப்பவருக்கு உணவளிப்பதும், நோயுற்றவருக்கு மருந்து கொடுப்பதும் சரியானதாக, இருக்கும்போது, பெண்ணுடலுக்காக ஏங்கித் தவிக்கும் ஒருவருக்கு என் உடலையளிப்பதற்குப் போய் நீங்கள் எதனால் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?” என்றாள்.
புத்தரின் போதனைகளிலிருந்து இந்தத் துண்டு துணுக்குகளை இவள் எப்படித் தெரிந்துகொண்டாளென எனக்குத் தெரியாது. ஆனால், அவற்றை அவள் பேசியவிதம், அவளை அப்படியே அறைந்து நசுக்கிவிட வேண்டுமென என்னைத் தூண்டியது. என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவளிடம் மிகுந்த மரியாதையோடு பேசத் தொடங்கினேன். “ நீங்கள் சொல்வதில் முழுமையான உண்மையில்லையெனச் சொல்லிவிடமுடியாது தானென்றாலும், `நல்வழி` தேடும் பிக்கு ஒருவரிடம் உடலின்ப ஆசை பற்றிப் பேசுவது, முழுக்கமுழுக்கப் பண்பாடற்ற செயல்.” என்றேன்.
”நாக்கால் உதடுகளைத் தடவிக்கொள்ளும் ஒருவரிடம் நான் பசியைக் காண்பது போல், உன்னிடம் நான் காண்பது, ஒரு பாழடைந்த கோவிலின் அழிவுகளைத்தான். பத்து வருட வேசித்தொழிலில் எனக்கு மிஞ்சியது என் புழை விரிந்தகன்றதும், மனிதர்களை முகம் பார்த்தறியும் திறமையை நான் பெற்றதும்தான். நீ மட்டும் பொம்பளைப்பசியோடில்லையென்றால் இந்த இரவுநேரத்தில் வேசிவீடுகளைச் சுற்றிக்கொண்டிருக்கமாட்டாய்.” என்றாள்.
‘ஓ` நான்! – துறவி, அவனது மலையைவிட்டுக் கீழிறங்கினால் இப்படியான நிந்தனைக்குத்தான் ஆளாகவேண்டும். நான் மகாகுரு ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் …”
”மகாகுரு என்றா சொன்னீர்கள்?”
“ஆமாம், அவரை உங்களுக்குத் தெரியுமா?”
“என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நான் உடலை விற்பதனாலேயே உங்கள் மகாகுருவைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதென நினைக்கிறாயா?” அந்த வேசி எள்ளிநகைத்து, அவள் ஆடையைத் திரைத்து மேலேற்றிக்கொண்டே, இருட்டுக்குள் செல்லவிருந்தாள். இப்போது நான் அவள் கையைப்பற்றி இழுக்கவேண்டியதாயிற்று.
“நான் தவறு செய்துவிட்டேன், இல்லை, எனக்கு வேண்டியது அதுவல்ல …. அதாவது நான் சொல்லவருவது, என் மீது கோபப்படாதீர்கள் அல்லது வேறெப்படியும் குறைப்படாதீர்கள், ஆனால் …….., நல்லது, எனக்குத் தெரிய வேண்டியது, நான் சொல்கிற மனிதரைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா என்பதைத்தான். அதாவது அவரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”
திரைத்த ஆடையை அப்படியே கீழே இறக்கிவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். “ஆமாம், அவரைப் பார்த்திருக்கிறேன்தான். ஏன், நேற்று இரவுகூட அவர் இங்குதான் இருந்தார். இன்றைய இரவுக்கும் கூட மீண்டும் வருவாரென்றுதான் நினைக்கிறேன்.”
‘’நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவரைப்போன்ற மனிதர் ஒருவர் இந்த மாதிரி ஆசைகளோடு ….. “ நான் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு, சட்டென்று என் கேள்வி முறையை மாற்றிக்கொண்டேன்.
“நீங்கள் சொல்வது உண்மையென்றால், தயவுசெய்து எனக்கு அவரைப்பற்றி எனக்குச் சொல்லுங்கள்.”
அவளது கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; கடுமையான நடுக்கம்கொண்ட குரலில் பேசத் தொடங்கினாள். “அவர் அடிமட்ட மக்களின் நண்பர். இனியும் உயிர் வாழ்வது முடியாததென்றும் இந்த உலகம் தாங்கமுடியாத அளவுக்கு அருவருப்பானதென்றும் நாங்கள் உணர்கின்ற தருணங்களில் எப்போதுமே மிகச்சரியாக, அவர் வருகிறார்;
ஆனால் உங்களைப் போல பெரிய பெரிய சிக்கல்நிறைந்த வார்த்தைகளில் பேசியதேயில்லை. ஒருமுறை நான், சிபிலிஸ் பெண்குறிநோய் வந்து, படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட முடியாமல் கிடந்தபோது, என் ஆடைகளை அவர்தான் அலசித் துவைத்துக் கொடுத்தார். அது மட்டுமல்ல. ஒருமுறை எனது தோழி சாம்-வெல் தெரியாத்தனமாக காவல்துறை காவலர் ஒருவரை, தொழிலுக்காகக் கையைப் பிடித்திழுக்கப்போய், காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று, அவள் பின்புறம் முழுதும் இரத்தக்காடாகுமாறு அடித்துத் துவைத்துவிட்டார்கள்; அப்போதும், அவர்தான் வந்து அவளை மீட்டுவந்தார். அவரெல்லாம் …..”
முடிவேயில்லாமல், பேசிக்கொண்டேபோன அவள் ஒருகட்டத்தில் உணர்வற்றுப்போனதுபோல் உளறத்தொடங்கியதும், நான் அவள் கையைப் பிடித்து உலுக்கி நிறுத்தவேண்டியதாயிற்று. ”நீங்கள் உண்மையிலேயே அவரைப் பார்த்திருந்தால், அவர் எப்படியிருப்பாரென்று சொல்லுங்கள்.”
முன்பு போல் கண்களை மூடியவாறே அவள் பேசத் தொடங்கினாள். ‘அவர் நம் எல்லோரையும் போல்தான் இருக்கிறார். அவரது முகம் அழகற்றது. முடிச்சுமுடிச்சான அவரது கைகள் வெயிலில் கறுத்திருக்கும்.
ஆனால், அவர் நாங்கள் புரிந்துகொள்ளமுடியாத கடின வார்த்தைகளை ஒருபோதும் பேசியதேயில்லை.” பெருங்கஷ்டம். முட்டாள்தனமாக அவள் பேசியதிலிருந்து, எனக்கு நன்றாகப் புரிந்தது, அவள் புத்திகெட்டுப்போன ஒரு பைத்தியமென்று. ‘’ஓ, இது பெருங்கஷ்டம், நான் மகாகுருவைக் கண்டுபிடித்த மாதிரித்தான்,” என எனக்குள்ளாகவே முனகிப்பெருமூச்சுவிட்டுத் திரும்பத் தொடங்கினேன்.
ஆனால் அவள் மீண்டும் என் சட்டைக்கையைப் பற்றிக்கொண்டு, என்னைப் போகவிட மறுத்தாள். “என்ன தப்பாகிவிட்டது? நீ பணம் எதுவும் தரவேண்டாமென்று சொல்லிவிட்டேனே! நீ இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு, முகத்தை மறைத்து,
உன் பெயரைக் காப்பாற்றியிருக்கிறாய், போதும், வா, இரவை அனுபவித்துவிடுவோம்.” என்றாள். “என்னைப் போகவிடு! கீழ்த்தரப் பிறவி, விபச்சாரி, நீ, ஒரு புனிதத் துறவியின் ஆடைமீது கைவைக்கிற அளவுக்கு உனக்கு துணிச்சலா?” என்று உண்மையிலேயே கோபத்தில் பொங்கிய நான் கத்திக் கூச்சலிடத் தொடங்கினேன்.
ஆனால் அந்தக் காமப்பிசாசு என்னை விடாதது மட்டுமில்லாமல், அவளது ஒரு கையால் என் இடுப்பைச் சுற்றிப்பிடித்துக்கொண்டு, மறுகையால் என் தொடைகளுக்கிடையே வருடத் தொடங்கினாள். ‘இப்ப என்னை விடப்போகிறாயா, இல்லையா?. தேவடியா நீ, எவ்வளவு கொழுப்புடீ, உனக்கு ….? கருணைமிக்க போதிசத்துவரே. பயிற்சியை அவமதிப்பவர் எல்லாம் கடைசியில் இறந்து மதக்குற்றம் புரிந்தவர்களைப் போல நரகத்துக்குத் தான் போகவேண்டும்.” என் பலம் முழுவதையும் உபயோகித்து அவளை உதறித் தள்ள முயன்றதில், நான் மல்லாந்து விழ,
அழுக்குப் படிந்த என் உள்ளாடைகள் விலகித் தெரியக் கிடக்கவேண்டியதாயிற்று. உடனேயே எம்பிக்குதித்த அவள், என் கழுத்தில் கிடந்த பிரார்த்தனை மாலையைக் முரட்டுத்தனமாகப் பற்றிக்கொண்டு, உச்சக் குரலில் கத்தத் தொடங்கினாள். “நாய்க்குப் பிறந்தவனே, நீதான் இந்த உலகத்திலேயே பெரிய ஏமாற்றுப் பேர்வழி; நீ துறவி கிடையாது, திருடன்தான். என் நல்ல மனதுக்கு, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறானெனப் பார்த்தாலே தெரிகிற ஒரு துறவி என்று, நல்ல மனதோடு என் உடம்பை உனக்கு அர்ப்பணிக்கிறேனென்று சொன்னால், என்னைத் திட்டுவதோடில்லாமல் அடிக்கவுமா செய்கிறாய்.”
இந்தக் குழப்பத்தில், எல்லா வேசிகளும் வெறும் உள்ளாடைகளும் கையுமாக ஓடிவர, அவர்கள் பின்னாலேயே காற்சட்டைகளை, இடுப்பில் ஏற்றிக்கொண்டு ஓடிவந்த வாடிக்கையாளர்களும் என்னைப் பார்த்து ஹோவெனச் சிரித்தனர். மிகப்பெரிய அவமானத்தில் சிக்கிவிட்டதை உணர்ந்தாலும் வேறுவழி எதுவும் புரியாமல் புத்தர், போதிசத்துவர்களின் பெயரை
உச்சரித்துக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும் நடுவில், அந்தப் பழிகாரி மீண்டும் பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு என் மீதான தாக்குதலைத் தொடர்ந்தாள். “ நாய்க்குக் பொறந்த பயல் நீ; திருடன்களிலேயே மோசமான பெரிய திருடன் நீ, என்னை நரகத்துக்குப் போவாயென்கிறாய். இதுதாண்டா நரகம், இதைவிட மோசமான ஒரு நரகம் எங்கேயாவது இருக்குமென்றா நினைக்கிறாய். இப்ப நான் சொல்றண்டா, புத்தர் வழி என்று சொல்லிக்கொண்டு நடிக்கிற உன் நடை, உடை பாவனையால்,
ஒற்றை விரலைக்கூட உன்னால் அசைக்க முடியாது, அடுத்தவன் சாப்பாட்டைத் தாண்டா நீ திருடித் தின்கிறாய், நீ செத்து சொர்க்கம் போவாய், எங்கள் உடம்பையே வித்து, எங்கள் சாப்பாட்டை நாங்களே தேடிக்கொள்கிற நாங்கள் நரகத்துக்குப் போவோமா?” என் கழுத்து மாலை திடீரென அறுந்து மணிகளெல்லாம் சிதறி ஓடின. என் இதயம் வேகவேமாகத் துடித்துக்கொண்டிருந்தது; ஆனால், அவளோ அப்போதும் விடாமல் கத்திக்கொண்டிருந்தாள். “ஓஹோ, அது சரி. நாங்கள் அருவருப்பானவர்கள், கீழிலும் கீழானவர்கள்,
உடம்பை விற்கிற குற்றத்துக்காக, நரகத்துக்குப் போவோம், நல்ல வளர்ப்பும், புத்திசாலியுமான நீ சொர்க்கத்துக்குப் போய் அனுபவிக்கலாமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்,” நல்லவேளை, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, புத்தரின் கருணையை முழுவதுமாகத் தெரிந்த அந்த வயதான பெண்ணுக்குத் தான் நன்றிசொல்ல வேண்டும். அவள் மட்டும் இல்லையென்றால் நான் தப்பி வந்திருக்கவே முடியாது, ஆனால், என்ன, ஒற்றை விரலை நான் கண்டுபிடிக்கமுடியாமல் போனதுடன், வேசி ஒருத்தியிடம் மிகப்பெரிய அவமானத்தைச் சுமக்க
வேண்டியதாயிற்றென்பதால், இனிமேலும் இந்த மண்ணுலகத்தில் நம்மால் அலைந்து திரிவது முடியாததென்று உணர்ந்தேன். ஆனாலும், அதுவுங்கூட, மகா குருவைத் தேடும் எனது ஆர்வத்தைக் கைவிடுவதற்குப் போதுமானதாக இல்லை. அதனால் இந்த மண்ணுலகில் காண்கிற அனைத்துக் கீழான மற்றும் கறைபடிந்த இடங்களிலெல்லாம் அவரைத் தேடும் எனது பெருமுயற்சியைத் தொடர்ந்தேன். ஒவ்வொன்றிலும், அந்த விபச்சார விடுதியில் எனக்கேற்பட்டது போன்ற அவமானத்தையும் ஏமாற்றத்தையுமே சந்தித்தேன்.
உலகின் மிக உன்னதமான `நல்வழி`யைத் தேடுகின்ற ஒரு துறவியாகிய நான், இந்த உலகத்தின் கடுமை நிறைந்த பாழிடங்களிலெல்லாம் நுழைந்து துன்பத்தை மேற்கொள்வதற்கான ஒரே காரணம், மகா குருவான ஒற்றை விரலைச் சந்தித்து `நல்வழி`ப் புத்தொளியறிவினைப் பெற்றேயாக வேண்டுமென்ற தணிக்கமுடியாத தாகத்தினால் தானென்பதைச் சொல்லியேயாகவேண்டும். ஆனால், மாண்புமிக்க அரசவைப் பெண்டிராலும், அரசு அதிகாரிகளாலும் கொடையளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைந்துள்ள கோவில்களை விட்டுவிட்டு அவர் ஏன், உலகின் மிகவெறுக்கத்தக்க தீமை நிறைந்த இடங்களில் வாழ்வதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரென்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
ஆம். உண்மையிலேயே இது என்னைப் புதிரில் ஆழ்த்துவதாக இருக்கிறது. ஆனால், அதுபோன்ற இடங்களில்தான் மக்கள் அவரைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். ஆக, என் தேடுதலால், விபச்சார விடுதிகளின் வேசிகளிடமும், சூதாட்டக்கூடங்களின் குண்டர்களிடமும், களியாட்டக் கூடங்களின் எத்தர்களிடமும், இறுதியில், தொழிற்கூடங்களின் அடிமைகளிலும் அடிமைகளிடமும் மிகமிகக் கேவலமான அவமானங்களைச் சந்திக்கவேண்டியதாயிற்று.
அடிமைகள் அரசனுக்காக புதிய களியாட்ட மாளிகை ஒன்றினைக் கட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலரது கழுத்துகளில் மாடுகளைப் போல் நுகம் இருக்க,
வேறுசிலர் வீடுகள் அளவுக்குப் பெரிதாயிருந்த அரவை ஆலைகளை இயக்கிச் சுழற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் எல்லோருமே என் மீது காறித்துப்புவதாக வேலையை நிறுத்தினர். தலைமுறை, தலைமுறைகளாக, அவர்களின் மூதாதைகளும் அவர்களும் கடினமான உடலுழைப்பின் துன்பங்களிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாக மரணம் மட்டுமே உள்ளதென்று அவர்களின் விதியைக் கூறிக் குறைப்பட்டனர். அதைக் கேட்டதும், அவர்கள் மீது கருணை மீதூர, அவர்களுக்காக புத்தரின் அறிவுமொழி ஒன்றினை ”கருணை மிக்க போதிசத்துவரே”
என அறிமுகம் செய்யத் தொடங்கினேன். இப்பிறவியில் நீங்கள் படும் கஷ்டங்களுக்கெல்லாம் இதற்கு முந்தைய பிறவியில் நீங்கள் செய்த பாவமே காரணம். அதனால் நீங்கள், உங்கள் கர்மவினைகள் அல்லாமல் வேறு யாரையும் அல்லது எதனையும் நிந்திப்பதற்கு எதுவுமில்லை. வெறுப்பும் சீற்றமும் பாவத்தின் விதைகள். அதனால், புத்தரிடம் மனமுருகிப் பிரார்த்தனைசெய்வதில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்; உலகினை வீணாகச் சபிக்க வேண்டாம்……..”
இதைக் கேட்டார்களோ இல்லையோ எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு என்மீது காறித்துப்பத் தொடங்கியதோடு, காகங்களின் கூட்டமொன்று கத்துவது போல் என்னைப் பார்த்துப் பெருங் கூச்சலிட்டனர்.
“ சாப்பாடு, துணிமணி, தங்குமிடம் எதற்கும் கவலைப்படாமல் நல்வழியை மட்டும் தேடி, அல்லது மலக்குவியலையோ அல்லது வேறு ஏதோ ஒரு இழவினைத் தேடும் உன்னால் எங்கள் கஷ்டத்தின் அளவினைப் புரிந்து கொள்ளமுடியாதுதான். சாவின் விளிம்பில் நிற்பவர்களிடம், நியாயமிழந்து பசியில் தவிப்போரிடம், நியாயமிழந்து நோய்ப்பட்டோரிடம்,
நியாயமற்ற முறையில் சிறைக்குள் அகப்பட்டோரிடம் போய், அவர்களின் கஷ்டங்களுக்கெல்லாம் அவர்களின் செய்கைகளே காரணமென்றும் நடப்பினை ஏற்றுக்கொள்ளுமாறும் சொல்கிறாய். எதிர்காலத்தில் அவர்கள் சிறிது நல்ல இடத்தில் பிறக்க விரும்பினால், புத்தரைப் பிரார்த்திக்க வேண்டுமென்கிறாய்;
நீ தான் சரியான ஏமாற்றுப்பேர்வழி என்பது நன்றாகவே தெரிகிறது.” அவர்கள் அப்படியே என்னை விழுங்கிவிடுவது போல் பேசி, வெறித்து நோக்கியதில் எனக்குள் தோன்றியதென்னவென்றால் அவர்கள் கண்களில் வெளிறிய நீலநிற ஒளியொன்று வெளிப்படுவதோடு,
அவர்களின் கழுத்தின் பின்புறம் அந்தக் கனமான நுகங்களின் எடை மட்டும் இல்லாமலிருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள் என்பதுதான். எப்படிப்பார்த்தாலும், இந்த மண்ணுலகம் அறியாமை மற்றும் இரக்கமற்ற பிறவிகளால் நிறைந்திருப்பதோடு, உன்னதமான நல்வழியினைத் தேடுவதற்கு என்னைப் போன்ற ஒரு மனிதனுக்கு உகந்ததாக இல்லாமல் கீழானதாகவும் தீமை விளைவிப்பதாகவும் இருக்கிறது.
நான் எழுந்து நின்றதும், எனது உடம்பின் கனத்தால் என் கால் மூட்டுகள் முனகின. மனித மனத்தைப் பீடிக்கின்ற முடிவற்ற மாயத்தோற்றங்களும் வேதனைகளுமாக அவதிப்பட்ட நான் நெடுநேரம் குத்துக்காலிட்டே உட்கார்ந்திருந்ததில், என் கால்கள் தூக்கத்தில் ஆழ்ந்து, உணர்வினை மறந்து போக, மயக்கக் கிறக்கத்திலிருந்த என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் எங்காவது விழுந்து உறங்கவேண்டுமென்பதுதான். விரைவிலேயே மையிருள் கவிந்து மிகச்சிறிய தூரம் கூட தெரியாமலாகியது. ஆழ வெடிப்புகள்,
குகைகள் மற்றும் பொந்துகள் ஒவ்வொன்றிலிருந்தும் உயிர்ப்பிராணிகளின் தனிமையும் பசியும் நிறைந்த குரல்கள் எழுந்து எங்கும் பரவ, நான் மகா குருவைக் கண்டுபிடிக்க்கப்போவதில்லையென்பது மட்டுமில்லாமல் இந்தக் காட்டிலேயே இறந்து அடர்ந்த மலைகளுக்குள் அலையும் ஆவியாகத் திரியப் போகிறேனென்று நினைத்தேன். அனைத்து போதிசத்துவர்களையும் நடுங்கும் குரலில் அழைத்து, எனது மூட்டையை இறுகக்கட்டி, என் காலணிக் கட்டைகளையும் அவிழ்த்து மீள இறுக்கிக் கட்டினேன். பின்னர், மரக்கிளைகளை ஒதுக்கித் தள்ளிக்கொண்டு, என் பாதையில் முன்னேசெல்லத் தொடங்கினேன்.
அங்கே நான், ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதற்காக விழுந்து எழுந்துகொண்டிருந்தாலும், உண்மையில் இலக்கு ஏதுமின்றித் தான் அலைந்துகொண்டிருந்த போதுதான், நேருக்கு நேராக, என் கண் முன்பாகவே, வெளிச்சத்தின் ஒளிமுனை ஒன்றினைக் கண்டேன். அந்த ஒளியின் அளவிலிருந்து, அது ஒரு வீடாகத்தானிருக்கவேண்டுமென்றும், இவ்வளவு ஆழ்ந்து அடர்ந்த மலைகளுக்குள் ஒரு வீடெனில், அது மகா குரு ஒற்றைவிரலுடையதாகத்தானிருக்குமென்றும் நான் நினைத்தேன். அவ்வளவுதான், நான் இடைவெளியே விடாமல் ஒரே ஓட்டமாக ஓடினேன்.
அது, தங்க வேட்டைக்காரர்களோ அல்லது ஜின்செங் கிழங்கு அகழ்வோரோ மலையில் தங்கியிருந்த காலத்தில் கட்டிய சிறுகுடிசை போலத் தோன்றியது. அதன் முன்பாக வெளிப்புறத்தில் ஊசியிலைத் தேவதாருப் பிசின் விளக்கின் வெளிறிய வெளிச்சத்தில் குந்தி அமர்ந்திருந்த வயதான கிழவன் ஒருவன் பரட்டைத் தலையிலிருந்து பேன் எடுத்து நகங்களுக்கிடையில் வைத்துக் குத்திக் கொண்டிருந்தான். அவனுடைய வற்றி உலர்ந்துபோன உடலையும், கிழிந்த ஆடைகளையும் பீளை நிறைந்து சுருங்கிப்போன கண்களையும் பார்க்கும் போதே, அவன்,
சமூகத்தால் துரத்தப்பட்ட ஒரு பிச்சைக்காரன் தானென்பது தெரிந்தது. மகாகுருவைச் சந்திக்கப்போகிறோமென நினைத்த நேரத்தில் இது மாதிரியான ஒரு பிண்டத்தைப் பார்ப்பது தாங்க வியலாததாயிருந்தது. தியானத்திற்காகப் படுக்கலாமென நினைத்தபோது, இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே, அந்த ஆளிடம் கேட்டுப் பார்க்கலாமேயென நினைத்தேன்.
‘’ஐயா, பெரியவரே, ஒற்றை விரல் என்ற பெயருள்ள மகா குரு ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” ஆனால், அந்தக் கிழவன், காது கேட்காதவர் போலப் பதில் எதுவும் சொல்லாமல் பேன் குத்துவதே கண்ணாக இருந்தான். அவன் பேன்களை நசுக்கும் போது, பட் பட்டென வெடித்த சப்தம் வித்தியாசமாக இருந்தது. ”எனக்கு நன்கு தெரிந்தவராகத் தான் இருப்பார். மிக உன்னதமான ஒரு மகா குருவைப் பற்றி, நீ என்னென்னவெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?” இந்தக் கிழவனிடம் எதுவும் பேசக் கூடாதென்று தீர்மானித்துவிட்டேன். பின், பழக்கத்தினால், தியானத்திற்குப் படுக்கும் முன் புத்த சூத்திரம் ஒன்றை உச்சரிக்கத் தொடங்கினேன். ‘’சர்ஃப் சுரி மகாசுரி சுசுரி சபஹா ஒபங்கனேயேஏ
அன்விஜயேஷின்ஜிரியான்…..” ‘’வாயை மூடுறியா, நான் தூங்கவேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், மனசுக்குள்ளேயே செய்துகொள். சத்தமாகப் பிரார்த்தனை செய்து அடுத்தவன் அமைதியைக் கெடுக்கவேண்டுமென்று சட்டமா இருக்கிறது?’’ இதைக் கேட்டதும் நான் கண்களைத் திறந்தேன்; ஆனால், அந்தக் கிழவன் அதற்கு முன்பாகவே விளக்கை அணைத்துவிட்டான்; அவன் குறட்டையைத் தான் நான் கேட்க முடிந்தது. அந்தக் காலம் முழுவதுமாக மண்ணுலகில் அலைந்து முழுவதுமாகக் களைத்துப் போன நானும், குறிப்பாகப் பிந்திய அந்தக் காலைவேளை வரையில் கூடத் தூங்கியிருக்கிறேன்.
நான் கண்விழித்த போது வெயில் என் தலைக்கு மேலாகவே வந்திருந்தது. அந்தக் கிழவனை எங்கும் காணவில்லை. அரிசியும் பார்லியும் கலந்து அரைத்த மாவை என் மூட்டையிலிருந்து எடுத்துப் பசியை அடக்கிவிட்டு காலணிக்கட்டைகளை இறுகக் கட்டிக்கொண்டு, கனத்த இதயத்தோடு என் முன்னால் நீண்டுகிடந்த வரிசை வரிசையான மலைத் தொடர்களை ஏறிட்டு நோக்கிப் பெருமூச்செறிந்தேன்.
மற்றொரு நாளும் வந்து போய்விட்டது. இப்போது நான் எங்கே போகவேண்டும்? மகாகுருவைச் சந்திக்க எங்கு செல்லவேண்டும்? எனக்குத் தெரியவில்லை; ஆனால் நகர்ந்துகொண்டேயிருக்கவேண்டும். பெரும் பாறை ஒன்றினை நெஞ்சுக்குள் வைத்து அழுத்தியது போன்ற கனத்த இதயத்துடன் நான் வேகமெடுத்து நடக்கத் தொடங்கும்போது, திடீரென்று யாரோ என்னைக் கூப்பிடுவது போன்ற சப்தத்தைக் கேட்டேன்.
“ஓ, மாபெரும் ஆசிரியரே, மாபெரும் ஆசிரியரே,” நான் திசையை மாற்றவில்லை; ஆனாலும் என் தலை மட்டும் திரும்பிய போது அந்தக் கிழவன் அங்கிருந்தான். எதனாலேயோ, அவன் இனிமையாகவென்று கூடச் சொல்லலாம், புன்னகைத்தான். “ஆக, நீ ஒரு `உண்மையான மகா குரு`வைத் தேடிக்கொண்டிருக்கிறாய், ஹூம்? நான் வாயடைத்துப் போய் தலையை மட்டும் ஆட்டினேன். கிழவன் ஏளனமாக வெடித்துச் சிரித்தான். பின்னர் என்னைப் பரிதாபத்திற்குரிய ஜீவனைப் போலப் பார்த்து, என் தோளில் தட்டி, “ முட்டாளே! ஒரு உண்மையான மகா குருவைத் தேடுகிறேனென்று சொல்கிறாய், இல்லையா?” “அப்படித்தான்.” நானும் ஏளனமாகப் பதில் சொன்னதும் கிழவன் ஏமாற்றத்தில் நாக்கை `ப்ச்` கொட்டினான்.
பின்னர், அவன் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான். “ உலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, உண்மையான மகா குரு ஒருவர் இங்கே மலையில் உட்கார்ந்துகொண்டு பேன் குத்திக்கொண்டிருப்பாரென்றா நீ நினைக்கிறாய்?’’ அந்தக் கணத்தில் என் நெஞ்சில் அழுத்திக்கொண்டிருந்த பாறாங்கல் அகன்றுவிட்டதை உணர்ந்தேன்.
அவ்வளவுதான், என்னைச் சுற்றியிருந்த எல்லாமே ஒளிபெற்று மிளிர்ந்தன. நான் மலையை விட்டுச் சென்றாகவேண்டும். அந்த வயது முதிர்ந்த பெரியவரின் வார்த்தைகளில் நான் திடீரென விழித்துக்கொண்டேன். `விழிப்புணர்வு` என்கிறேன், நான்;
ஆனால், அது, வெளிப்படையாகத் தெரிந்த ஏதோ ஒன்று, நான் மலையை விட்டுச் சென்றாக வேண்டுமென்பதுதான். கீழ்மட்டத்துக் கறைபடிந்த மண்ணுலகிற்கு இறங்கிச்சென்று இரத்தமும் சதையுமாக அல்லல்படுவோர் மத்தியில் வாழவேண்டும். புத்தொளியறிவான போதியறிவினைக் களங்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாதென்றும் பரிசுத்த பூமியும் இந்த உலகமும் வெவ்வேறானதல்ல என்றும் புத்தர் சொன்னதே உண்மை. பிரச்சினைகள் மற்றும் ஆசைகளால் முடிவற்ற பரிணாம மாற்றங்களே நித்தியமான நமது உலகிலிருந்தும் நாம் விடுபடுவோமேயானால், பரிசுத்த பூமியை நாம் ஒருநாளும் அடையமுடியாது.
அந்தப் பாலியல் தொழிலாளி சொன்னதுபோல இந்த உலகில் உயிர்வாழ்வதற்காக, வயிற்றுப் பாட்டுக்காக, உடலை விற்கவேண்டியிருக்கிறதென்றால், உண்மையிலேயே இதுதானே நரகம்; இந்த நரகத்தில் தானே நான் வாழ்வினைக் கண்டுணரவேண்டும்.
நான் , மகா குருவைக் கண்டுபிடித்தேனோ இல்லையோ அல்லது, இந்த ஒளிமிக்க விழிப்புணர்வினை எனக்களித்த அந்த முதியவர் தான் நான் மூச்சைப் பிடித்துத் தேடிக்கொண்டிருந்த மகாகுருவின் புனித வெளிப்பாடோ என்பதெல்லாம் இப்போது பொருளற்றுப்போகின்றன. ஆனால், `விழிப்பு` என நான் கூறுவது உண்மையான அதுதானா என்பது இப்போதுங்கூட எனக்கு நிச்சயமில்லை.
படைப்பாளர் பற்றிய குறிப்பு : கிம் சியாங் டாங் கொரியாவில் 1947 – இல் பிறந்தவர். பத்தொன்பதாவது வயதில் துறவுகொண்டு பத்தாண்டுகள் புத்த மதப் பயிற்சி மேற்கொண்ட பின்னர், துறவினைவிட்டு வெளியேறி இலக்கியம் படைக்கத் தொடங்கினார்.
அவரது முதல் கதை 1975 இல் வெளியானது. இலக்கியப் படைப்புகளுக்காக, பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் படைத்துக்காட்டும் புத்தறிவுபெற்ற மனிதன் மலைகளில் வசிக்கும் துறவிகளையும் சராசரி மனிதர்களையும் அரவணைத்துச் செல்பவனாயிருக்கிறான்
http://www.ekoreajournal.net/issue/view_pop.htm?Idx=2816 
ஜனவரி, 02, 2018,    மலைகள் இணைய  இதழ் 137  இல் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment