Wednesday 23 May 2018

கோவைக்காய் (அபுனைவு 20)

கோவைக்காய்
கோவை மிகச் சாதாரணமாக எல்லா ஊர்களிலும் வேலிகளில் படர்ந்து கிடப்பதைக் காணமுடியும். கோவைப்பழத்தை கிளி விரும்பி உண்ணும். நாங்கள் உண்டதில்லை. கோவைப்பழத்தை இலேசாக எண்ணெய் தடவிக் கசக்கிக்கொண்டேயிருந்து கடைசியாகச் சிறு துளையிட்டு உள்ளிருக்கும் கூழ் முழுவதையும் வெளியேற்றிய பின் அதனைப் பெண்பிள்ளைகள் சொடக்காக நெற்றியில் அடித்து விளையாடும்.
யாராவது அரளிக் காய் அரைத்துக் குடித்த விபரம் தெரிந்தால் உடனடியாகக் கோவை இலையை அரைத்துச் சாற்றினை செம்பு, செம்பாக உள்ளுக்குக் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். வயிற்றில் கிடப்பது அனைத்தும் வாந்தியாக வெளிவரும்.
கோவைப் பழம், தமிழில் கொவ்வைப் பழம் என்றும் அழைக்கப்படுவதோடு சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதால், பெண்களின் இதழ்களைக் கொவ்வையிதழ் எனத் தமிழ்க்கவிதைகள் கொண்டாடுவதுண்டு.
கோவைக்காயும் சமைத்து உண்ணத்தகுந்த ஒரு காய்வகை என்பதை எனது முப்பதாவது வயதில் வேலூர் வரும் வரையிலும் அறிந்திருக்கவில்லை.
நாஞ்சில், நெல்லை, முகவை, மதுரை, கம்பம் பகுதிகளில் தங்கி வசித்திருந்தாலும் கோவைக்காயை சந்தைகள் மற்றும் காய்கறிக் கடைகள் எதிலும் கண்டதில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் உணவு விடுதிகளிலும் சமைத்துப் பறிமாறப்பட்டதைப் பார்த்ததில்லை.
வேலூர் வந்தபின் நண்பர் ஒருவருக்குத் துணையாக நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்கப் போனபோதுதான் கோவைக்காய்களும் விற்கப்படுவதை அறிந்தேன். இதையுமா சாப்பிடுவார்கள்? என வியந்ததோடு சரி. எங்கள் குடும்பங்களிலும் யாரும் கோவைக்காய் சாப்பிடுவதாகத் தெரியவில்லை.
வருவாய்த்துறைப் பணியென்பதால் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், முதல் அமைச்சர் என முக்கியப் பிரமுகர் வருகைப் பணியிலுமிருந்ததால் வேலூரில் அனைத்து உணவுவிடுதிகளிலும் சமைக்கப்படும் உணவு வகைகள் பற்றி அறிவேன். அப்போதைய புகழ் பெற்ற கன்னா ஓட்டலில் பாகற்காய் சாம்பார் கூடப் போட்டிருக்கிறார்கள். கோவைக்காய் கூட்டு, பொரியல், சாம்பார் எதுவும் எந்த உணவுவிடுதியிலும் பார்த்ததாக நினைவில்லை.
1995 இல் குடும்பச் சுற்றுலாவாக மைசூர், கோவா, ஹம்பி சென்றிருந்தோம். கோவா செல்லும் வழியில் ஒரு உணவுவிடுதியில் மதிய உணவின் போது சக்கை(பலாக்காய்)யும் பெரும்பயறும் போட்டு ஒரு குழம்பும் கோவைக்காய் வதக்கலும் பரிமாறினார்கள். இரண்டுமே புது வகையாக வேண்டுமளவு உண்ணத்தக்கதான சுவையில் இருந்தன. கோவைக்காய்களை நீளவாக்கில் மூன்று அல்லது நான்கு துண்டுகளாக அரிந்து எண்ணெயில் வதக்கி, தேங்காய் சீரகம் அரைத்துப்போட்டிருந்தனர். அந்தப் பக்குவத்தில் எங்கள் குடும்பங்களில் கத்தரிக்காய் வதக்குவதுண்டு. கத்தரிக்காயில் இல்லாத மென்புளிப்புச் சுவையும் சிறிது அதிகமான கடினத்தன்மையும் கோவைக்காய் வதக்கலுக்கு அதிகச் சுவையைக் கொடுக்கின்றது.
வேலூர் மற்றும் சென்னைக் காய்கறிக்கடைகளில் கோவைக்காய் எப்போதும் கிடைப்பதால், கோவைக்காயை மேற்சொன்ன பக்குவத்தில் சமைத்து உண்ணத் தொடங்கினோம்.
1997 இல் சர்க்கரை நோய் இருப்பதாகவும் மாத்திரை உட்கொள்வதோடு உணவு முறையிலும் கட்டுப்பாடுகள் வேண்டுமெனத் தெரிவித்தனர்.
சி.எம்.சியில் உணவுப் பட்டியல் ஒன்றும் கொடுத்தனர். அதன்படி 1997 இல் நான் உணவாக எடுத்துக்கொண்டிருந்த மாவுப்பொருள் உணவில் பாதியும் அதை ஈடுகட்டுவதற்குக் காய்கறியும் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆறு இட்லியை மூன்றாகக் குறைத்துக்கொண்டு மீதி இடத்திற்கு முள்ளங்கி, காரட், வெள்ளரி போன்ற பச்சைக்காய்கறியும் சாம்பார்க் காய்கள், கூட்டு முதலியவற்றையும் சேர்த்துக்கொண்டேன்.
மதிய உணவாக இரண்டு கப் சாதத்தை ஒரு கப் அளவாகக் குறைத்து ரசம் மற்றும் மோர் சாதத்தைத் தியாகம் செய்துவிட்டு பொரியல் மற்றும் கூட்டாக இரு காய்கறிகள் + சாம்பார் அல்லது குழம்புக்காய்கள் என மூன்று காய்களாக மாற்றிக்கொண்டேன். அதனால் கோவைக்காயை வாரத்திற்கு இரு முறையாவது உண்ணும் வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் புதிய செய்முறைகளை முயற்சி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வட்டு வட்டாக அரிந்து வதக்கிப் பின் வேகும் அளவுக்குத் தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைத்து, பாசிப்பருப்பு, தேங்காய், சீரகம், மஞ்சள்பொடி மற்றும் சிறிதளவாக மிளகாய்ப்பொடி சேர்த்து வதக்கிப் பொரியலாக்கிப் பயன்படுத்தினோம்.
ஒரு முழு வெங்காயம் வெட்டிப்போட்டுத் தாளித்து, அதனோடு வட்டுவட்டாக அரிந்த கோவைக்காய், மஞ்சள் பொடி, சிறிது மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி சேர்த்து வதக்கித் தேவையான தண்ணீரைத் தெளித்துத் தெளித்து வதக்கி வேகவைக்கும் தேங்காய், பருப்பு இல்லாத பொரியலுக்கும் விரும்பிச் சாப்பிடும் சுவை கிடைத்துவிடுகிறது.
மதிய உணவுக்கான சாம்பாரில் கோவைக்காய், காரட், குடமிளகாய் (Capsicum) மூன்று மட்டும் போட்டுச் செய்துபார்த்தபோது, அந்த சாம்பாருக்கென ஒரு தனிச் சுவை உருவாகிறது.
கோவைக்காயில் பி1, பி2, பி3, சி உயிர்ச்சத்துக்களும், இரும்பு, சுண்ணாம்பு மற்றும் பொட்டாசியம் சத்துக்களும் கார்போ ஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளன.
கோவைக்காயில், கல்லீரல் சுரப்புக்குத் தேவையான Glucose-6-phosphatase இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது தமிழ் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறையில் கோவைக்காய் சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. Glucose-6-phosphatase தான் இன்சுலின் சுரப்பினை அதிகப்படுத்துவதற்குக் காரணமாக அமைகிறதென்றும் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
கோவைக்காய் சோர்வை அகற்றுவதாகவும், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பதாகவும் நரம்பு மண்டலம் மற்றும் உடலின் உயிரியக்கச் செயல்பாடுகளைச் சீரமைப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
வாரம் இருமுறையாவது கோவைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதெனத் தெரிய வருகிறது.
Major Nutrition
Iron, Fe 1.4 mg (17.50%)
Vitamin B2 0.08 mg (6.15%)
Vitamin B1 0.07 mg (5.83%)
Total dietary Fiber 1.6 g (4.21%)
Calcium, Ca 40 mg (4.00%)
Protein 1.2 g (2.40%)
Carbohydrate 3.1 g (2.38%)
Vitamin C 1.4 mg(1.56%)
Potassium, K 30 mg (0.64%)
Vitamin B3 0.07 mg (0.44%)
Health Benefits
• Prevents Kidney Stones
• Fatigue
• Protects the Nervous System
• Maintains a Healthy Metabolism
• Fiber keeps the digestive tract healthy
Calories in 1cup (100gm) 18
முகநூலில் 22.05.18 ல் பதிவு. விருப்பம் 98 பகிர்வு 23, பின்னூட்டம் 24 

No comments:

Post a Comment