Wednesday 9 May 2018

வேப்பமரமும் என் பாட்டியும்

வேப்ப மரமும் என் பாட்டியும்


வேப்பமரமும் என் பாட்டியும்
என் வீட்டு வாசலில் ஒரு வேப்பமரம்
அப்பா அமைத்த வேலிக்குள்
பாட்டி ஊற்றிய தண்ணீர் குடித்து
ஆனந்தமாய்க் கிளை வீசி
அற்புதமாய்ப் படர்ந்தது.

ஒருகை வீட்டுமுற்றம் நோக்கி,
மறுகை தெருவின் குறுக்காக நீட்டி,
பெயர் தெரியாத அந்த மலையைப் பார்த்துக்
காற்றின் சேதி தெரிந்துகொண்டதாய்த்
தலையசைத்து நிற்கும் அந்த மரம்.

விருட், விருட்டெனப் பறக்கும் தேன்சிட்டும்
தத்திநடக்கும் தவிட்டுக் குருவியும்
அந்த மரத்துக்குத் தினசரி விருந்தாளிகள்.

கறுப்புச் சிறகும் வெள்ளை வாலுமாக ஒரு வெள்ளைக்குருவி
நீலநிறத்தில் நீளமூக்குடன் மீன்கொத்தி
எப்போதாவது ஒருமுறை வந்து ஓய்வெடுக்கும்.

சாம்பல்நிறக் கழுத்துடன் இணைக்காக்கை ஒன்று
ஒரே கூட்டினை ஒரே நாளில் கட்டியது.
இரண்டு மாதங்கள் கழிந்து அந்தக் காக்கைக் குடும்பம்
குஞ்சுகளுடன் கூட்டைவிட்டு இடம்பெயர்ந்தது.
கூடு மட்டும் மரத்துக்கு மகுடம் போல்.

பறவைகளைக் காட்டித்தான்
பாட்டி எங்களுக்கு
நிறங்களைக் கற்றுத் தந்தாள்.

கரும்போத்து எருமை ஒன்று,
மணிக்கழுத்துப் பசுவோடு
செங்கல் நிறத்தில் ஒரு காளைக் கன்றும்
மதிய வேளைகளில் படுத்து அசைபோடும்.
ஒருபிடி முருங்கைக் கீரையோ
கிழிந்த வாழை இலையோ கொடுத்தால்
நாக்கை நீட்டி வளைத்துக்கொள்ளும்.
கொம்பின் நடுவில் வருடிக் கொடுத்தால்
நம் பாதங்களில் தலைசாய்க்கும்.

வீதி வழியே செல்லும்
உப்புச் செட்டியார் முதல் நெகிழி விற்பவர் வரை
பழக்கூடைப் பெண்டிர் முதல் பேருந்தில் இறங்கி வருவோர் வரை
அந்த மரத்தின் அடியில் நின்று
என் பாட்டி தரும் தண்ணீர் குடித்து, இளைப்பாறித்
தங்கள் நடையைத் தொடர்வர்.

அந்த மரத்தடியில் தான்
நாங்கள் பாட்டியிடம் பல்லாங்குழியும்
தாயமும் பழகிக்கொண்டோம்.
பாட்டியின் மடியில் தலைசாய்த்துக்
கதைகேட்டுத் தூங்கியும் போவோம்.
சித்திரை மாதத்தில் அந்த மரம்
உதிர்க்கும் வெண்முத்துப் பூக்களையள்ளி
என் பாட்டிக்கு அபிஷேகம் செய்வேன்
அவள் எனக்கு முத்தங்களைப் பரிசளிப்பாள்.

அந்த மரம் செய்த
குறும்புகளுக்கும் அளவில்லை.
எங்கள் வீட்டின் சுற்றுச்சுவரில்
விரிசல்கள் ஏற்படுத்தும்.
அதன் வேர்க்கரங்களால் தண்ணீர்க்குழாய்களை
முறுக்கி உடைக்கும்.
ஊராட்சியின் தண்ணீர்ப் பணியாளர்
அந்த மரத்தை வெட்டினால்தான்
ஆயிற்றென்று ஒற்றைக் காலில் நின்றார்.
பாட்டிதான் சமாளித்து அவரை அனுப்பினாள்.

ஒரு கந்தசஷ்டி நாளன்று முற்றத்தில்
பொத்தென்று விழுந்த பச்சைப் பாம்பு
தலையை உயர்த்தி வீட்டுக்குள்ளே உற்றுப் பார்த்தது.
அலறியடித்து விரட்டியபோது
செம்பருத்தியிலேறி மறைந்தது.

பக்கத்து வீட்டுப் பெரியம்மா காற்றும்
கறுப்பும் அந்த மரத்தில் உறைந்திருப்பதாக முறையிட்டாள்.
ஆனாலும் பாட்டி மரத்தை
வெட்டவிடாமல் பார்த்துக்கொண்டாள்.                     

இப்பொழுது பாட்டியும் இல்லை
அந்த மரமும் இல்லை.

(1996 இல் என் மகள் எழுதிப் பார்த்த கவிதை)
  
  

No comments:

Post a Comment