Thursday 17 May 2018

பள்ளி நினைவுகள்


பள்ளி நினைவுகள்

ச.ஆறுமுகம் பிள்ளை முதுகலை(பொது நிர்வாகம்); முதுகலை (தமிழ்)
வட்டாட்சியர் (பணிநிறைவு)
(தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர்.)

எனக்கு நான்கு வயதே ஆகியிருக்கும்போது பூஜைவைப்பு முடிந்த மறுநாள் காலையில், புது காக்கி நிக்கரும் பிஸ்கெட் நிற சட்டையும் அணிந்து, பிள்ளையார் கோயிலில் பூஜை முடித்து, பாயாசம் குடித்த கையோடு  அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றதும் பள்ளிக்குள் டிரில் மாஸ்டர் இலட்சுமணன் பிள்ளை முன் நின்று வயது விசாரிப்பு முடிந்து, ஐந்து வயது முடிந்துவிட்டதாகச் சேர்க்கை ஆகி, முதல் வகுப்பில் செங்கல் தளம் பாவி, அங்கங்கே உடைந்து மண்தரையுமாக இருந்த அறைக்குள் அமரவைத்ததும் நன்கு ஞாபகம் இருக்கிறது. முதல் வகுப்புக்கு பெஞ்சு எதுவும் கிடையாது. தரையில் தான் அமரவேண்டும். முதல் வகுப்பில் இரண்டு பிரிவுகள்; இரண்டும் அடுத்தடுத்ததாகத் தான் இருந்தன. எனது வகுப்புக்கு சிவகாமி என்பவரும் இன்னொரு பிரிவுக்கு சுகுமாரி என்பவரும் ஆசிரியைகளாக இருந்தனர்.

முதல் நாளில் எனக்கு அருகில் இருந்த பையன் என்னை விடவும் பெரியவனாக இருந்தான். அவன் சட்டை ஏதும் போட்டிருக்கவில்லை. அழுக்கு நிக்கரின் இருமுனைகளையும் இடுப்புக்குக் கீழாக, அரை முடிச்சாக இறுக்கிக் கட்டியிருந்தான். நான்தான் சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். அவன் கால்களை நீட்டி விரித்தவாறுதான் இருந்தான்; நேராக எனது சட்டையைத் தடவி, ”போத்தி, பைக்குள்ள என்ன வச்சிருக்கேரு,” எனக் கேட்டுக்கொண்டே என் பைக்குள் துளாவி, சோற்றுப் பருக்கை ஒன்றை எடுத்துக் காட்டி, “பரவால்லையே, போத்தி தினமும் எனக்கு உம்ம பைக்குள்ள போட்டு சோறு எடுத்து வருவேரா?” என்றவன் அந்தக் காய்ந்த பாயாசப் பருக்கையை அப்படியே வாயில் போட்டு மென்றுதின்றான். எனக்குத் திகைப்பாக இருந்தது. நான் எதுவுமே பேசவில்லை. `சரி, இரண்டு பேரும் விளையாடலாம்` என்றவன் நொண்டிச் சாமி விளையாடலாமா? எனக் கேட்டான். அது எனக்குத் தெரியாது; அதனால் நான் மண்ணாகத் தான் இருந்தேன். ”சரி, உமக்கு அதைச் சொல்லித் தாரேன்,” என்றவன் இடது கைச் சுண்டுவிரல் மீது அடுத்த விரலைக் கொக்கி போட்டு மேலேற்றினான். அப்படியே ஒவ்வொரு விரலாக மேலே மேலே ஏற்றியவன் கோணையாக இருந்த அந்தக் கைவிரல்களோடு பெருவிரலையும் ஒட்டிக்கொண்டான். அதைப் போலவே வலது கைவிரல்களையும் ஒன்றன் மேலொன்றாகக் கொக்கி சேர்த்துச் சப்பாணி போலான இருகைகளையும் கும்பிடுவது போல வைத்துக்கொண்டு, ‘நொண்டி சாமியக் கும்பிடப் போனேன், கை நொண்டியாகிப் போச்சு” என்றவன், நொண்டிக்கையை என் முகத்துக்கு நேராக ஆட்டி, இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக்கொண்டே அதே பாட்டைத் திருப்பித் திருப்பிப் பாடினான். அவன் முகம் வேறு நொண்டிக்கையாகிப் போன வேதனையைக் காட்டியது. இந்த விளையாட்டு தெரியாத நான் அவன் கை உண்மையிலேயே நொண்டியாகித்தான் விட்டதோ எனப் பரக்கப் பரக்க விழிக்கும்போதே, பொசுக்கென்று கைகளைப் பின்பக்கம் கொண்டு சென்றவன்  விரிந்த விரல்களோடு கைகளை என் முகத்தின் முன்னால் காட்டி ஆட்டிக்கொண்டே, ‘நல்ல சாமியக் கும்பிடப் போனேன், நல்ல கையாகிப் போச்சு,” என்று ராகமாகச் சொன்னான். அன்று எனக்குத் தோன்றியது : என்னைவிட அவன் விவரமானவன், எனக்குத் தெரிந்ததைவிட அவனுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரைக்கும் என்னைவிட எல்லோரும் விவரமானவர்கள்; எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு  மாறியதேயில்லை. நண்பர்கள், உறவுகள், தினமும் காணுகிற பிற மனிதர்கள், என எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்பவனாகவே இன்றும் இருக்கிறேன்.

அந்த முதல் நாளுக்குப் பிறகு அவனைப் பள்ளியில் பார்த்ததாக நினைவு இல்லை. ஆனால், பின்னால் ஒருநாள் நான் அப்பாவுடன் வயலுக்குச் செல்லும்போது நம்பிகுளத்துச் சாலை, புதுக்குளம் ரோட்டுக்கு ஏறுகின்ற வளைவில் அவனையும் அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு சிறுமியும் எதிரில் வந்ததைப் பார்த்தேன். அவன் கழுத்தில் இருபுறமுமாக உயிருள்ள தண்ணீர்ப் பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருந்தது. அந்தச் சிறுமியின் கழுத்தில் தண்டினை ஒடித்துச் சங்கிலியாகத் தொடுத்த ஆம்பல் பூ ஒன்று தொங்கியது. அதன் பிறகு அவனை எங்கும் பார்க்கவில்லை. அவன் பெயர் என்னவாயிருக்குமென்று பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். பூதத்தான், புதுக்குணத்தான், யோசேப்பு, மார்க்கு, குணசேகரன், கருப்பையா …. ஊகூம், எனது முதல் ஆசானான அவனது பெயரை மறந்ததற்காக நான் இப்போதும் என்னை நொந்துகொள்கிறேன்.

பள்ளி விடுமுறை விட்ட ஒரு நாளில் அம்மா, அப்பா, எல்லோருமாக எங்கேயோ புறப்பட்டிருந்தோம். நான்கு மணி பேருந்து வரவில்லை. வயல் பத்து பாதைக்கு நடந்து, செக்கடி வழியாக மேலாறு தாண்டி, வீரணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் கரையேறும்போது இரண்டு ஆசிரியைகளும் இறச்சகுளத்துக்கு நடந்து செல்வதைக் கண்டதும் ஓடியே போய், எங்க டீச்சர், எங்க டீச்சர் என்று சிவகாமி டீச்சரின் கையைப் பிடித்துக்கொண்டு ஆடியது நினைவுக்கு வருகிறது. அம்மா, அப்பா அவர்களிடம் ஏதோ பேசினார்கள். பய பரவால்லையே, பயமில்லாம இருக்கானே என்றவர்கள் அந்த இரு ஆசிரியைகளுக்கும் மணமாகவில்லையென்றும் அவர்களின் சாதி குறித்தும் பேசிக்கொண்டதும் நினைவிலிருக்கிறது.

அடுத்த நினைவு என்றால், எனது இரண்டாம் வகுப்பு; வகுப்பாசிரியர், வேலாயுதப் பெருமாள் பிள்ளை, டிரில் மாஸ்டர் இலட்சுமணன் பிள்ளை, இருவருடன் இன்னும் ஒரு சிலருமாக என் வீட்டு வாசலுக்கு வந்தார்கள்; தலைமை ஆசிரியர் ஜோஷ்வா கமலம் வந்தாரா என்பது நினைவில்லை. பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நன்கொடை கேட்டார்கள். அப்பாவுக்கு சுத்தமாகக் காது கேட்காது. நான் அப்பாவின் கையைப் பிடித்து நிறையக் கொடுக்கச் சொல்லிச் சைகை காட்டினேன். அப்பா பத்து ரூபாய் கொடுத்தார்கள். வந்தவர்கள் வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். நான் அப்பாவிடம், கூடக் கொடுத்திருக்கலாமேயென்றேன். அப்பா சிரித்துக்கொண்டே, ‘நீ படிச்சு வேலைக்குப்போவையில்லா, அப்ப நிறையக் கொடு,’’ என்றது நினைவிருக்கிறது. புதிய கட்டிடம் கட்டி முடித்து திறப்பு விழா நடந்தது. அன்று `வேலுத்தம்பித் தளவாய்` நாடகம் நடத்தப்பட்டதும் நினைவில் வருகிறது. திறப்பு விழாவுக்கும் பின்னர் ஒருநாள் தலைமை ஆசிரியர் ஜேசுதாசன் மற்றும் ஆசிரியர்கள் நன்கொடை விவரம், செலவு அனைத்தையும் கணக்கெழுதி அச்சிட்டு வெள்ளை நிறத்தில் நான்கு பக்க நோட்டீசாகக் கொடுத்தார்கள். அந்த நோட்டீசை அப்பா கையில் வைத்திருக்கும்போதே, படிப்புரையில் அவர் பின்பக்கமாக நின்று நானும் பார்த்தேன். ஊர்வகையிலிருந்து 15,000 கொடுத்திருக்கிறார்கள். கிருஷ்ணன் கோவில் டிரஸ்டில் 1000 கொடுத்திருக்கிறார்கள்; வேறு பெரிய வீடுகளிலெல்லாம் 100, 150 தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்பாத்துரை பார்த்தியார் மட்டும் ரூ 1000 கொடுத்திருக்கிறார், அய்யர் ஒன்றும் அவ்வளவு பணக்காரர் இல்லை; அவர் அவ்வளவு கொடுத்திருப்பது ரொம்பப் பெரிசுதான் என அப்பா புகழ்ந்ததும் எனக்கு நினைவிருக்கிறது. அன்று முதல் அப்பாத்துரை அய்யர் வீட்டு வாசலைக் கடக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு உயர் எண்ணம் எழுவதுண்டு. அவரது மகன் பத்து என்ற பத்மநாபன் ஐந்தாம் வகுப்பிலிருந்து பதினொன்று வரையில் என்னுடன்தான் படித்தான். ஒரே பெஞ்ச் தான்; பிறகு வாழ்க்கைச் சுழலில் எங்கெங்கோ சென்றுவிடுகிறோம்; நினைவுகள் மட்டுமே துணையாக மிஞ்சுகின்றன. 1950 களில் உயர்நிலைப் பள்ளிக்காக அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு மனையும் ரூ 15,000 மும் ஊர்வகையில் கொடுத்து, எங்களின் தந்தை தலைமுறையினர் ஆற்றிய அறிவுப்பணிக்கு ஈடு ஏது இருக்க முடியும்! (அன்று ஒரு கோட்டை நெல்லின் விலை ரூ 5 அல்லது பத்துக்குள் தான் இருந்திருக்கும்.)

ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாக வேலாயுதப் பெருமாள் பிள்ளை, சவரி முத்து, வேலாயுதம், பிச்சை ஆகியோரும் அதைத் தொடர்ந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்தியவர்களில் சங்கர மூர்த்தி, நீதி நாயகம், இந்தி ஆசிரியை சுமன் நினைவில் நிற்கின்றனர். இன்னொரு ஆசிரியர் கொச்சங்காய் மண்டை ( முன் நெற்றியில் இருபுறமும் புடைத்திருந்ததால் எங்கள் குறும்புக்கார அண்ணன்கள் அப்படிப் பெயரிட்டு அழைத்தனர்.) மன்னிக்கவும், அந்த ஆசிரியரின் பெயரை மறந்ததற்காக எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம். வெள்ளை ஜிப்பா, வேட்டியுடன் அப்பெருமகன் எனது ஏழாம் வகுப்பில் பூகோளம் பாடம் நடத்திய ஈடுபாடும் அக்கறையும்  இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது. தலைமை ஆசிரியர் அல்லாமல் பள்ளிக்கு முதன் முதலாக முழுநீளக் காற்சட்டையும் மேற்சட்டையும் அணிந்து டிப்டாப்பாக வந்தவர் சுப்பையா என்ற ஆசிரியர். அவரது படைப்பூக்க ஆர்வத்தால்  வகுப்புத் தேர்வுகளுக்கும் அச்சடித்த கேள்வித்தாள், மாறுபட்ட கட்டுரை எழுத்து முறை, வகுப்பை கட்டபொம்மன், சிவாஜி என இரண்டு அணியாகப் பிரித்து மாணவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி ஏற்படச் செய்தது, சிறப்பு அக்கறை மேற்கொண்டு அனைவரையும் நன்கு படிக்கச் செய்வது  என அதிகப்பணியை இழுத்துப் போட்டுச் செய்தவர். தேர்வு இல்லாத குடிமைப்பயிற்சி வகுப்புக்கு டிரில் மாஸ்டர் கொடுத்த அழுத்தம், அதற்காக அவரது முன் தயாரிப்புகள், அந்த வகுப்பினை அவர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய விதம் இப்போதும் அயரவைக்கிறது; ஆனால், அதுதானே குடிமகனாக நாம் தேசத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை உணரவைத்திருக்கிறது. எட்டாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் ஆங்கில இலக்கணத்தில் நல்ல பயிற்சி அளிக்கப்படவேண்டுமென்பதற்காக வாரத்தில் இரண்டு வகுப்புகளை அதற்கென ஒதுக்கிக் கொடுத்து, பயிற்சியளிக்கும் பொறுப்பு அப்போதைய பட்டதாரி ஆசிரியரான திரு வி. சுவாமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதே ரென் & மார்ட்டின் வைத்துக்கொண்டு, அதன் செய்முறைப் பயிற்சிகளையெல்லாம் எங்களுக்கு விளக்கிய அவரது அயராத முயற்சி ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பும் அதிலும் குறிப்பாக மொழிபெயர்ப்பில் ஈடுபடும் எனக்கு இப்போதும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது என நன்றியுடன் குறிப்பிட விழைகின்றேன்.

திரு. வி. சுவாமி அவர்களிடம், எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என நான்கு ஆண்டுகள் பயிற்சி பெறும் நல் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது. அவர் பாடம் நடத்தும் முறையே தனி. ஆங்கிலம், வரலாறு புவியியல் பாடங்களை பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களைப் பெற்று அதனடிப்படையில் பாடத்திட்டத்தை ஒழுங்கமைத்து, விளக்குவது அவருடைய தனிப்பாணி. பாடக் குறிப்புகளை அவர் வாசிக்கும் போதே, மாணவர்கள் புரிந்து எழுதுகின்றனரா அல்லது இயந்திரத்தனமாக எழுதிச் செல்கிறார்களா என்பதைக்கூட இடையிடையே நோட்டமிட்டு உறுதி செய்வார். எடுத்துக்காட்டாக ஆங்கிலக் கட்டுரைக்கு குறிப்பெழுதிச் செல்கையில் are, or போன்றவற்றை ஆர் என்றுதானே உச்சரிப்போம்; ஆனால் எழுதும் போது உரிய முறையில் எழுதினராவெனக் கேட்கவும் பார்க்கவும் செய்வார். மிகவும் கண்டிப்பானவர்; மிகப்பெரிய கனத்த கம்பால் அடித்துத் தண்டனை வழங்கத் தயங்காதவர்; எனினும் அவரது வகுப்புகள் மிகவும் சுவாரசியமானவையாகவே மாணவர்களால் கருதப்பட்டன. நாங்கள் அப்போது 30 பேர்கள் பொதுத் தேர்வு எழுதியதில் 28 பேர் வெற்றி பெற்றோம். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய வெற்றி. எங்களுக்கு முந்தைய ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் முப்பதுக்கு நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்கள்.
எங்கள் ஆசிரியர்கள் திரு சுவாமி, அறிவியல் ஆசிரியர் வேலப்பன் என்ற சுப்பிரமணிய பிள்ளை, கணித ஆசிரியர் சந்திரா, தலைமை ஆசிரியர் ஞானசிரோன்மணி என அநேகமாக, எல்லோருமே (விதிவிலக்குகள் ஒன்றிரண்டு எப்போதுமே இருப்பதுதான்; அதைக் கணக்கில் கொள்ளவேண்டுமா, என்ன?) மிக எளிமையானவர்களாக, எளிதில் அணுகத் தக்கவர்களாக, கண்ணும் கருத்துமாகப் பணியாற்றுவதைத் தலையாய கடமையென உணர்ந்ததோடு, அதனை உணர்த்துவதையும் தலைமேற் பணியாகக் கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர். என்னைப் பொறுத்தவரையில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்ததாகவே உணர்கிறேன். பள்ளியில் எந்த ஆசிரியரைக் கண்டும் எனக்கு அச்சம் தோன்றியதில்லை. பள்ளியில் அல்லாமல் வேற்றிடங்களில் சந்திக்க நேரும்போதும் நான் எவ்விதமான கூச்ச உணர்வும் கொண்டதில்லை.  கடமை, நேர்மை, பணிப்பண்பாடு, விடா முயற்சி போன்ற அனைத்தும்  நான் அவர்களிடமிருந்து பெற்றதென்றே உணர்கிறேன். இப்பள்ளியில் நான் பெற்ற பதினோராண்டுப் பயிற்சியும் தாழக்குடி மக்களிடம் நான் கற்றுக்கொண்ட நன்னெறி வாழ்க்கையும் என்னை நல்லதொரு கடமை தவறாத அரசுப் பணியாளனாக, நேர்மையுடன் மக்கள் பிரச்னைகளை அணுகும் பக்குவத்தை எனக்குள் ஏற்படுத்தி, முப்பதாண்டு வருவாய்த்துறைப் பணியை முடித்து மனநிறைவோடு ஓய்வுபெற வைத்துள்ளது. 

எனது மூத்த தலைமுறையினரின் அறிவுத்திறத்தால் உருவான கிருஷ்ணவிலாசம் நூலகத்தில் நான் பெற்ற உலக இலக்கியப் பரிச்சயம் எனக்கு அரசிடமிருந்து சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற விருதினையும் பெற்றுத் தந்துள்ளது. இப்பள்ளியும் நூற்றாண்டு காணும் நூலகமும் பெருமைக்குரியவை; அவற்றைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியதும் நமது கடமை.

பள்ளியைப் பற்றிய நினைவாக ஒளவையார் பிள்ளைத் தாத்தாவைக் குறிப்பிடாவிட்டால் எப்படி நிறைவு பெறும்? வெள்ளை வேட்டி, கதர்ச்சட்டை, கறுப்புக்குடை சகிதம் தினசரி பள்ளி வளாகத்தில் காணப்பட்ட அவர் கட்டிடப் பணி முதலான அனைத்தையும் மேற்பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.                  

கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவரும் மாபெரும் தமிழ்ப் பேரறிஞரும் தமிழ் இலக்கண நூல்களை மலையாளத்துக்கும் மலையாளத்தின் பல நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தவரும் தமிழின் நவீனப் படைப்பாளிகளில் ஒருவரான நகுலனின் நண்பரும் புதுக்கவிதைகள் படைத்தவருமான திரு மா. இளைய பெருமாள் அவர்களின் தந்தையான திரு மாணிக்கவாசகம் பிள்ளையும் பள்ளிக்கு அவ்வப்போது வந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடிச் செல்வதைக் கவனித்திருக்கிறேன்.  

நூற்றாண்டு விழாக் காணும் இந்நாளில் முன்னாள் மாணவர்களும் இன்றைய பெற்றோரும் இப்பள்ளியின் மீது கொண்டுள்ள அக்கறையினால் ஸ்மார்ட் வகுப்பறைகளும் நூலகமுமாகத் திகழ்வது பெருமகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர், உறுப்பினர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
அன்புடன்,
ச.ஆறுமுகம்.

No comments:

Post a Comment