Saturday, 2 April 2016

கனடா சிறுகதை - 1 =1 அன்னே கார்சான் - 1=1 By ANNE CARSON

1 = 1 

(கனடியன் ஆங்கிலம்):அன்னே கார்சன் ANNE CARSON 

தமிழில்  ச.ஆறுமுகம்


anne-carson
அன்னே கார்சன் (ஜூன் 21, 1950 இல் பிறந்தவர்) ஒரு கனடியக் கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் செவ்வியல் பேராசிரியர். பிரின்ஸ்டன், மிச்சிகன் மற்றும் மெக்கில் பல்கலைக் கழகங்களில் 1980 – 1987 வரை பணிபுரிந்தார். 1998 இல் குக்கென்ஹீம் ஃபெல்லோஷிப் மற்றும் 2000 இல் மாக்ஆர்தர் ஃபெல்லோஷிப் பெற்றார். லேனான் இலக்கிய விருதினையும் வென்றுள்ளார்.
செவ்வியல் மொழிகள், ஒப்பியல் இலக்கியம், மானுடவியல், வரலாறு மற்றும் வணிகவியல் கலை போன்ற அறிவுப்புலங்களின் பின்னணி கொண்ட செவ்வியல் பேராசிரியரான இவர், பல்வேறு துறைகளிலிருந்தும் அடிப்படைக் கருத்துகள் மற்றும் சிந்தனைகளைக் கலந்து படைப்புகளை உருவாக்குகிறார். இதுவரையில் கவிதை, கட்டுரை, உரைநடை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நாடக உரையாடல், புனைவு மற்றும் புனைவற்றதென அனைத்து வகைகளின் கலப்புவகையினமாக 18 படைப்புகள் வெளியாகியுள்ளன.
11.01.2016 நியூயார்க்கரில் வெளியாகியிருப்பதும், தற்போது தமிழாக்கம் செய்யப்படுவதுமான படைப்பும் அந்த வகையினதாகப் புரிந்துகொள்ளக் கடும் முயற்சியைக் கோருவதாகவே உள்ளது.
****
அவள், பிறரைப் பார்த்துவரச் சென்றிருக்கிறாள். அதிகாலை விடியலில் அவர்கள் எல்லோரும் விழித்தெழுவதற்கு முன்பாகவே, பாச், முதல் க்ளாவிச்சோர்டு1 இசைக் கோர்வையினைக் கேட்டுக்கொண்டே ஏரிக்கு நடக்கிறாள். என்றைக்கு அதை முதன் முதலில் கேட்டாளோ, அன்றிலிருந்தே, அதை நினைக்கும்போதெல்லாம் ஈரம் கசிகிற அவள், ஏதோ ஒரு நாளில் நடைபெறப்போகும் அவளது ஈமச்சடங்கில் அதுதான் இசைக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டிருந்த அதே இசையைக் கேட்டுக்கொண்டே நடந்துசெல்கிறாள். காற்றின் இடைவிடாக் கசையடிக் கடைதலில், ஏரி அலைவுற்றுக்கொண்டிருக்க, அலைகள் (பெரிய ஏரி) என்ன செய்யுமோ அதைச் செய்துகொண்டிருக்க, அது உள்ளேயா அல்லது வெளியேயா என்பது மட்டும் அவளுக்குத் தெரியவேயில்லை. கரையில் ஒரு ஆண் நின்றுகொண்டிருக்க, பெரிய நாயொன்று வாயில் கம்புடன் அவனை நோக்கித் திரும்பி நீந்திக்கொண்டிருக்கிறது. இது மீண்டும், மீண்டும் நிகழ்கிறது. நாய் களைப்படையவில்லை. அவள் நீச்சல் தொப்பி ஒன்றினைத் தலையில் ஒட்டிக்கொண்டு, நீர்க்கண்ணாடியணிந்து, ஏரிக்குள், குளிர்கிற ஆனால் அதிரவைக்காத நீருக்குள் நுழைகிறாள். நீந்துகிறாள். உயரமான அலைகள் ஒரே திசையில். நாய் போய்விட்டிருக்கிறது. இப்போது அவள் மட்டும் தனிமையில். நன்றாக நீச்சலடிப்பதற்கும் இந்த நீரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்குமான உந்துதல் இருக்கிறது. நீச்சல் என்பது மிகமிக எளிதானதென்றும் முயற்சியே தேவையற்றதென்றும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் அது பெரும் எதிர்பார்ப்புகள் நிறைந்தது. அது ஒரு குளியல்! ஒவ்வொரு நீர்நிலைக்கும் அது, அதற்கே உரிய தனித்த விதிகளும் பேணல்களும் உள்ளன. தவறாகப் பயன்படுத்துவதென்பதை விவரிப்பது கடினமானது. அது, அழகினைத் தெரிந்துகொள்ளும் போராட்டத்துடன், மிகச் சரியாக அழகினைத் தெரிந்துகொள்வது, ஒருவரைச் சரியான பாதையில் செலுத்துவது, வானம்பாடியின் பாடல் கேட்கின்ற சரியான இடத்தில் அமர்வது, மணமகன் மணமகளை முத்தமிடுவதைக் காண்பது, வால்நட்சத்திர நேரத்தைக் கணக்கிடுவதோடு இணைகின்ற பொதுவிடம் கொண்டதுவோ! ஒவ்வொரு நீரும் நிலைகொள்ளவேண்டிய சரியான இடமொன்று இருக்கிறது, ஆனால், அந்த இடம் அசைந்துகொண்டேயிருக்கிறது. நீங்கள் அதைக் கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கவேண்டும், அதோடு அது உங்களைத் தேடிக்கண்டுபிடிக்குமாறும் செய்யவேண்டும். ஒவ்வொரு உந்துகையிலும் நீங்கள் உள்ளுக்குள்ளாக ஆழ அமிழ்ந்து, வெளிவர வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதனைத் தோற்கடிக்கமுடியும். அதன் பொருள் என்னவென்கிறீர்கள், `தோற்கடியுங்கள்` என்பதுதான்.
சிறிது நேரம் சென்றதும், அவள் கற்களின் மேலாக ஏறி, வெளிவந்து, சின்னஞ்சிறு துடுப்பணி2களை அணிந்துகொண்டு மீண்டும் நீருக்குள் நுழைகிறாள். வேறுபாடு என்னவெனில், அழகிய பொருள் ஒன்றினை மேலோட்டமாகப் பார்ப்பதற்கும் வெறித்துநோக்குவதற்குமான வேறுபாடுதான். இப்போது அவள் நீரின் வழியிலேயே சென்று அங்கேயே தங்கிவிடமுடியும். அவள் தங்குகிறாள். அவளுக்குத் தெரிந்த மிகமிக மோசமான தன்னலவாதிகளில் அவளும் ஒருத்தி; இதனைப்பற்றி, நீச்சலின்போதும், அதன் பின்னர் கரை மீதிலும், நடுங்கிக்கொண்டே துவர்த்திக்கொள்ளும்போதும், அவள் நினைத்துப் பார்க்கிறாள். அது, ஆளுமையின் ஒரு வகைக் கூறு, மாற்றுவதென்பது கடினம். பெருந்தன்மைப்போக்கினைக் கடைப்பிடிக்க, அவள் முயற்சிக்கின்றபோது, அது, கரடியின் மயிர்ப்பாதம் கொண்டு துடைப்பது போல, அடுத்தவர்களின் வாழ்க்கைக்குள்ளும் விஷயங்களை மேற்கொண்டும் கெடுத்துவிடுவதாகத்தான் தெரிகிறது. மேலும், மற்றொரு நபருடனான செயலாற்றுகையில், பகிர்தலில், கருணைக்கொடையில், இரக்கத்தில், அவள் உத்வேகத்தைக் காண்பதில்லை; அது வானத்தை நோக்கிய ஒவ்வொரு திசையிலும் வெற்றிடமே நிரம்பியுள்ள உலகத்துடனான, அசைவுகளற்ற, அமைதியான ஒரு காலையில் நீருக்குள் நுழைவதைப் போன்றதான, திருகாணியின் பரிசுத்தமான உயிர்த்தன்மையினை ஒருபோதும் அளித்ததில்லை. அந்த முதல் நுழைவு. உணர்வின் எல்லையினைக் கடந்து உள்ளுக்குள்ளாக, எதற்குள்ளாக?
மேலும், (அவள் பொருத்தமான சொல்லைத் தேடுகிறாள்) நீருக்குள்ளாக, அதன் போக்கிலேயே சமநிலைகொள்வதற்கான புரிதல் என்பது, தெளிவாகப் புலனாகிற, அனுசரிப்புடன் கூடிய எண்ணற்ற இணக்கச் செயல்முறைகள்; அது, அவளது வாழ்க்கையிலிருந்தும் மைல்கணக்கில், தொலைவுக்கும் தொலைவாக விலகிநிற்காமல், மாறுபட்டு விரியும் அதனைப் பார்த்துக்கொண்டே, ஆனால், அதற்குள்ளாகவே, அதனைப் போலவே, அதுவாகவே, காலத்தையும் மனத்தையும் ஒரேநிறமாக்கித் தோய்ப்பதாகும். தியானத்தைப் போன்றதல்ல, அது – சிந்தனையற்று, எப்போதும் கூறப்படுகிற ஒரு ஒப்புமை – ஆனால், மிகுதியும் தடய அறிவியல், கூர்ந்த கவனத்துடனான ஒரு செயல்பாடு, அதேநேரத்தில் ஓரளவுக்குத் தன்னிச்சையான அனிச்சைஇயக்கம். இந்தச் செயல்பாட்டு முறைகள் ஒன்றையொன்று விலக்கிக் கொள்வதில்லையென நீச்சல் அறிவுறுத்துகிறது. அதில் ஒரு கல்தன்மை இருக்கிறது. கற்களிலிருந்து காற்று வேறுபடுவது போல, நீரும் வேறுபடுகிறது. அதனாலேயே, அதன் அமைப்பு, அதன் தொன்மை, உங்கள் இருப்பு பற்றி எதிர்வினை ஏதுவுமில்லாத அதன் முழுமை, அப்படியான நிலையிலும், வலியப்புகுத்திய உங்களின் ஊடுருவலுக்கு இணங்குவதுமான வரலாற்று வழியில் உங்கள் பாதையை நீங்கள் தேடிக்கண்டடையவேண்டும். அங்கே உங்களுக்கென, மனிதப்பண்பு ஏதும் இல்லை. மேலும், நீருக்கு, அதன் மேலேயே ஆர்வமற்ற நிலை. கற்களின் கதையை எத்தனை அருமையாகச் சொன்னாலும், கற்கள் அக்கறைகொள்வதில்லை. உங்கள் மென்மை உணர்வுகள், ஆச்சரியப்படத்தக்க உங்கள் நற்பேற்று வாழ்க்கை, உங்கள் தாய்ப்பாசம், அழகாகக் கட்டமைக்கப்பட்ட உங்களின் மிகச்சிறந்த உவமைகள் அனைத்தும் ஆழத்தின் ஆழத்திற்கான சரிவில், தூய்மை, தூய்மைக்கேடு, இரக்கமற்ற தன்மைகளோடு காணாமற்போகின்றன. இதில் தன்னலத் துறப்பு (ஒப்பீடு: தியானம்) ஏதுமில்லை, பற்றறுப்பதான போராட்டம் இல்லை, இந்த விஷயங்கள், கடந்துபோயிருக்கின்ற இவையெல்லாவற்றிற்கும் நீங்கள் பெயர்சொல்ல முடியும். பொருள், `சென்றுவிட்டன` அவ்வளவுதான்.
அவளது உறவாடல் முடிகிறது. மீண்டும் வீட்டில், செய்தித்தாள்கள், ஐரோப்பாவில் தரையோடு தரையாக நசுங்கிய கதவுடன் ஒரு தொடர்வண்டிப் பெட்டியோடு தென்கோடிப் போர்ப்பகுதி ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களில் தப்பித்துப் பிழைத்தவர்கள் மற்றும் போக்குவரத்து மறுக்கப்பட்ட மக்களின் முதல்பக்கப் புகைப்படங்கள். உயிர்பிழைத்திருக்கவேண்டிய அவசியத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அழுத்தப்பட்ட அழுக்கான குடும்பங்கள் மற்றும் துயர ஆன்மாக்கள், கணக்கிட இயலாத கைகள் மற்றும் கால்கள், விரியத்திறந்து சிவந்த கண்கள், தொடர்வண்டிக்குள் அடைபட்டு, இரவு முழுவதும் விடியலுக்கான காத்திருப்பு, அவளுக்கேயான தனித்த காலைநேரத்துக்குள், அவளால் நுழையமுடியாத, எதிர்க்கருத்து நிறைந்த ஒரு காட்சி.
நாம் வாழ்கிற இந்த உலகில் இந்த இரண்டு விடியற்பொழுதுகளும் அருகருகாகவே நிகழ்வது, எந்த மாதிரியான உணர்வைத் தோற்றுவிக்கிறது என்பது ஒரு கேள்வியாக வடித்தெடுக்கப்படுமானால், அந்தக் கேள்விக்குத் தத்துவம், கவிதை, செல்வம் அல்லது அவளது மேம்போக்கான அறிவுநிலை அல்லது ஆழ்மனத்தாலுங்கூடப் பதிலளிக்கமுடியாதென அவள் அஞ்சுகிறாள். `பகுத்தறிவு` போன்ற சொற்கள், மிகுதியாகவே, நகைக்கத்தக்கனவாகின்றன. புலம்பெயர்வோர், நீந்துவோர், தன்னலவாதி, அடிமட்டத்தில் உழலும்படி விதிக்கப்பட்டோர் போன்ற பன்மைத்துவக் கூட்டுப்பொருட்களுக்கு, பகுத்தறிவு வாதங்கள் பொருந்துபவை; ஆனால், இருத்தலியலும் உணர்வும் ஒருமைக்கே உரியவை. கூட்டுப்பொருள் ஒன்றினைப்பற்றி நீங்கள் தீர்வுகளை உருவாக்கிவிடலாம். ஆனால், அதையே உங்களைநோக்கித் திருப்பிப் பார்க்குமாறு கேட்கமுடியாது. தீர்வுகள் தந்திரமானவை; கட்டுக்குள்ளிருந்து உங்களை மட்டும் வெளியேற விட்டுவிடுகின்றன;
அவள் கீழ்த்தளத்திற்கு இறங்கி, படிக்கட்டு முகப்பில் சிறிது குளிர்ச்சியாக இருக்குமென்று, அங்கு செல்கிறாள்.
சாலை ஊர்திகள் கடும்வேகத்தில் பறந்து, மறைகின்றன. ஓரப்பாதையில் சாண்ட்லர் சுண்ணக்கட்டி ஓவியம் ஒன்றை வரைந்துகொண்டிருக்கிறான். தோழர் சாண்ட்லர் என அவள் அழைக்கிறாள். அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. என்ன ஓவியம்? அவன் சுண்ணக்கட்டியைத் தேய்த்துக்கொண்டிருக்கிறான். அவனது பார்வை அதற்குள்ளேயே தோய்ந்து மேற்செல்கிறது. அவன் வீட்டுக்குப் பின்புறம் எங்கேயோ வசிக்கிறான்; அதிகம் பேசுவதில்லை; நிறையவே வரைகிறான். அவள் அவனைத் தோழர் என அழைப்பதற்குக் காரணம் அவள், அவனைச் சந்தித்த கோடையில் ரஷ்யப் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தாள் என்பதோடு அவனை அந்தரங்கமானவனென நினைத்ததுந்தான். இது ஒரு தவறு. அந்தரங்கம், ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை மீதான அக்கறையைக் காட்டுவதாகிறது. சாண்ட்லர் எந்த ஒரு அறைக்குள்ளும் நுழைவதை, அங்கு இருப்பதை அல்லது அறையினைவிட்டு வெளியேறுவதை, சிறிய ஒரு மனித அலை பின்னிட்டுச் சுருங்கிக்கொள்வது போல, மெல்ல ஊறிக் கசிந்து மறைவதை, ஒருபோதும் கண்டிருக்க இயலாது.
அவன் அருகிலேயே, அவள் நிற்கிறாள். ஓவியம் ஒரு பேரிக்காய் மரம். மரம் முழுவதும் பச்சைச் சுண்ண உருண்டைகளாக, மஞ்சள் நிறப் பாலேட்டு வெண்மை தெறிக்கும் அழகழகானச் சிறுசிறு காய்களை அவள் காண்கிறாள். அவற்றில் ஒன்றையாவது கடித்துவிடவேண்டுமென்று, குனிய நினைக்கிறாள், அய்யோ! ஆணியின் தலையிலேயே அடித்துவிட்டீர்கள்! தோழர், என்கிறாள். அவன் பதில் பேசவில்லை. ஒருமுறை அவர்கள் பேசிக்கொண்டபோது, சிறுசிறு துண்டுகளாகப் பல மாதங்களுக்கு நீண்ட அந்த உரையாடல், காளான்கள் பற்றியதாக இருந்தது. அவனது சிறைக்காலத்தை வெறுப்பாக்கிய ஒரே பொருள் இந்தக் காளான்கள்தான், என்றான், அவன். உணவைக் குறிப்பிடுவதாக இருந்தால், அது ஒரு பிரச்சினையாகிற அளவுக்கு, சிறையில் காளான் உணவு பரிமாறினார்கள் என்று அர்த்தமாகிறது; அல்லது சுவர் மூலைகளில் பூசணங்கள் படர்கிற மாதிரியான ஈரக்கசிவுள்ள அறையாக அவனது அறை இருந்ததெனப்பொருள்கொள்ளலாமென்றால், அது மிகமிக அதிகபட்சமாகத் தோன்றுகிறதேயெனப் பல நாட்களுக்கு அவள் இதை நினைத்து வியந்துகொண்டிருந்தாள்; பின்னர்தான், அவனது அறைச் சாளரம் வழியாக குடைக்காளான்கள் பூத்துக்கிடந்ததைப் பார்த்தானென்றும், அவன் சிறுபையனாக இருந்தபோது அவனது அம்மாவோடு காளான் பறிக்கக் காட்டுக்குப் போவது வழக்கமென்றும், அது அவனைத் துயரம்கொள்ளச் செய்ததென்றும், மெல்லமெல்ல அவள் புரிந்துகொண்டாள். காளான் மீது ஈர்ப்பு ஏதுமில்லாத அவளுக்கு, அந்தநேரத்தில் விஷயபூர்வமாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லாமலிருந்ததால், ஜான் கேஜு3ம் காளான் பறிப்பவராக இருந்தவர்தான் என்றும், அவர் அதைப்பற்றி ஒரு நூல் எழுதியிருப்பதாகவும், அது ஒரு வழிகாட்டி வகைப்பட்டதென்றும், அவள் அதனை அவனுக்குத் தருவதாகவும் சொன்னாள். சாண்ட்லர் பதிலெதுவும் சொல்லவில்லை. அவன் புத்தகங்கள் படிப்பவனா அல்லது அவனுக்கு ஜான் கேஜைத் தெரிந்திருக்குமாவென அவளுக்கு உறுதிப்பட எதுவும் தெரியவில்லை. உரையாடல் நிலையற்ற போக்குடையது. இப்போது, வட்டவட்டமான வெளிறிய சுண்ணப் பேரிக்காய்களைப் பார்க்கும்போது அவள் மனத்துக்குள் காளான்களின் நினைவு எழ, அவள் சொல்கிறாள்: ஒருநாள், எனக்கு நினைவிருக்கிறது, ஜான் கேஜ், அவரது அம்மாவுடன் காளான் பறித்துக்கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் போலக் கழிந்தபின், அவள் அவன் பக்கம் திரும்பிச் சொல்கிறாள்: நாம் கடைக்குப் போய் எப்போதுமே உண்மையான காளான்கள் சிலவற்றை வாங்க முடியும்.
சாண்ட்லரிடம் அமைதி. பேரிக்காய்க் காட்சிப்பகுதியில் அங்கும் இங்குமாகச் சில சிவப்புத் தீட்டல்களைச் செய்துகொண்டிருந்தான். பின்னர், திடீரென அவன், வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான். நகை அவனைவிட்டும் பிரிந்து மறைந்தது. அவன் சுண்ணப்பூச்சுக்குத் திரும்பினான். சீக்கிரம், சீக்கிரம் என்றும், அவளால் சரியாகக் கேட்கமுடியாத ஏதோ ஒன்றுமாக, அவனுக்குள்ளாகவே முணுமுணுக்கிறான்; அது, சின்னப்பிள்ளைத்தனமான ஏமாற்றாக இருக்கிறதே என்பது போலக் கேட்டது. அவள் படிக்கட்டு முகப்புக்குத் திரும்பிச்சென்று கீழ்ப்படியின் மேல் ஏறிநிற்கிறாள். இப்போது அந்தி சாய்ந்துவிட்டது. ஆனாலும் வெக்கையைப் பாரேன். நெடிய நாள்தான் சாண்ட்லர், என அவள் அவனது பிடரிப்பக்கம் சொல்கிறாள். அவன் நடைமேடையிலேயே கையில் சிவப்புச் சுண்ணக்கட்டியுடன் மேலும் நகர்ந்து, புதிய ஓவியத்திற்கான இடம் குறிக்கிறான். அது ஒரு நரியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் முடிக்கும்போது, அவன் ஒரு நரியைத்தான் விரும்பித் தேர்வுசெய்கிறான்.
மாடி. நீந்தமுடியாமற்போன தோல்வியைப்பற்றியே மீண்டும், மீண்டுமாகச் சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதை அவள் உணர்கிறாள். அது, எண்ணல், எடுத்தல், முகத்தல் மற்றும் நீட்டலென அனைத்து அளவையியல் சார்ந்ததாக அதேநேரம், பண்புசார்ந்துமிருக்கலாம். இப்போதுங்கூட உலகில் எத்தனை குளம் குட்டை, தடாகங்கள், ஏரிகள், நீரிணைப்புகள், வளைகுடாக்கள், நீரோடைகள், நீச்சலுக்கு வசதியான நீர்க்கரை நீட்சிகள், இருக்கின்றன என்று கற்பனைசெய்து பாருங்கள், அவற்றில் பாதியாவது நீந்துவோர் இல்லாமல், இரவு அல்லது கருத்தின்மை காரணமாக வெறுமையாகக் கிடக்கின்றன. வெறுமை, ஆனாலும் முழுமையான பரிபூரணத்துவமுடையவை. என்ன ஒரு வீணடிப்பு, என்னவொரு அறிவுக்கொவ்வாத செய்கை – இவற்றுக்கெல்லாம் ஒருவரை ஏன் பொறுப்பாக்கக்கூடாது? மின்னித்தோன்றும் பர்ட் லங்காஸ்டரை4 ஒருபக்கமாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, ஒவ்வொன்றாக அல்லது அனைத்தையும் ஒரே நேரத்தில் புவியியல் அடிப்படையில் அல்லது கருத்தாக்க அடிப்படையில், எல்லா நீர்நிலைகளும் யாராவது ஒருவராலாவது பயன்படுத்தப்படவேண்டும். அவளது ஆழ்மனப் பெருங்கடலின் ஊடாக, நெரிசலாகப் பல வரிசைகளில் திணிக்கப்பட்டிருந்த பயணிகளுடன் புகலிடம் தேடும் அகதிகள் பலருமிருந்த, அவசரத்துக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிப்படகு ஒன்று ஆடிஆடி, ஓரமாக அமர்ந்திருந்த பயணிகள் சிலரை கடலில் உதிர்த்துக்கொண்டு மிதந்துவந்தது. அந்தப் படத்தை அவள் பார்த்திருக்கிறாள். பெருங்கப்பல்கள் மிக அருகிலேயே பயணிக்கும்போது, அவர்களின் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு, சிறிது தயங்கி நின்று, பின்னர் கிளம்பிச் செல்வதாகப் படித்திருக்கிறாள். அவற்றின் எந்திரங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் முன், சிலநேரங்களில் குடிநீர் அல்லது பிஸ்கோத்துப் புட்டிகள் கப்பல்களிலிருந்து அள்ளி வீசப்பட்டன. கப்பலின் எந்திரம் மீண்டும் இயங்கத் தொடங்குவதைக் கண்ணுறும்போது, அந்தக் கணத்தின் பாழ்நிலைக்கு மாற்றாக அவள் எதைக் குறிப்பிடமுடியும். அந்தப் பாழ்நிலை பெறவேண்டிய விலை என்ன, அதை யார் கொடுப்பார்கள். சில கேள்விகளுக்குக் கேள்விக்குறிகள் தேவைப்படவில்லை.
பயணிகள். பயணிக்க. நிறைவோடு பயணிக்க. விட்டுக் கடந்து செல்ல. தன்னைவிட்டுக் கடந்துசெல்லுமாறு செய்ய. யார்தலையிலாவது சுமத்திக் கழிக்க. துப்பித்தொலைக்க. கழன்றுகொள்ள. ஒருவரின் மதிப்பினைப் பெற. அழைப்பு மணி ஒலிக்கும்போது அவள் தயிர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்; சட்டையின் கைப்பகுதியால் வாயைத் துடைத்துவிட்டு, அந்த மணி வேலைசெய்கிறதென்பதே தெரியாதெனச் சொல்லிக்கொண்டே, வாசலுக்கு வருகிறாள். தோழர் சாண்ட்லர் பதிலெதுவும் சொல்லவில்லை. தெருவைப் பார்க்குமாறு தலையாலேயே சைகை காட்டுகிறான். அவர்கள் இறங்குகிறார்கள். படியிறங்கும்போது உனது கண்புருவத்தில் தயிர், எனத் தலையைத் திருப்பித் தோளுக்கு மேலாகச் சொல்கிறான். ஓ, நன்றி என்கிறாள், அவள். தெருவிளக்கு ஒன்றின் கீழாக, வரைந்து முடிக்கப்பட்ட நரி ஓவியம் ஒளிர்கிறது. ஒளி உமிழும் நிறமிகள் கொண்ட ஏதோ ஒரு வகைச் சுண்ணக் கட்டியைப் பயன்படுத்தியிருக்கிறான்; பளபளக்கும் நீலப்பச்சை வண்ணத் திண்கூழ் ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த நரி, எழுகின்ற வாய்ப்புள்ள விளக்கங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிவிடுகிற ஒரு பார்வையை அதன் முகத்தில் கொண்டிருக்கிறது. அவள் நீலப்பச்சையை வெறித்துப் பார்க்கிறாள். அதில் தெளிவு, ஈரத்தன்மை, குளிர்மை, தனக்குள்ளேயே மூழ்கிப்போகும் தண்ணீரின் ஆழ்ந்த ஒளி அனைத்தும் தெரிகிறது. ஒரு ஏரியையே உருவாக்கிவிட்டீர்கள், எனச் சொல்லிக்கொண்டே அவன் பக்கம் திரும்புகிறாள்; ஆனால், அவனோ, போய்விட்டிருக்கிறான். இப்போது இரவு. கட்டவிழ்த்து, விடுவிக்கப்படுகின்ற போதெல்லாம் எங்கெங்கு போவானோ, அங்கு போய்விட்டான். அவள் சிறிதுநேரம் நிற்கிறாள், நரி நீந்துவதைப் பார்த்துக்கொண்டு, அந்த நாளினைத் திரும்பிப் பார்த்து, அதன் பிம்பங்கள் மிகமிக வலிமையானதாக இருந்தாலும், அதன் ஆன்மா – எப்படி, அதன் வாயில் எப்போதும் அமைதியைத் தக்கவைத்துக்கொள்கிறது, உயிர்ப்புடனிருக்கும்போதே அமைதிக்குள் வாயை மூடிக்கொண்டிருக்கிறதே, அது எப்படி? உயிர்ப்புடனிருப்பதே உள்ளுக்கும் வெளியிலுமான இந்த ஊற்றும் பொழிவும் தான். தேடிக்காணுதல், இழத்தல், இழைத்தல், கொடு எனக் கோருதல், முழுதும் பிடித்தாட்டுதல், தலையை நெருக்கமாக முன்நகர்த்துதல். நீச்சலுக்கு எவ்வளவு வலிமை தேவைப்படுகிறதென்று நினைக்காமலேயே நீந்த முயலுங்கள். நம்முடைய நெஞ்சைப்பிளந்த இந்தச் சிறு ஊழிக்காலத்தைப் போல அல்லாமல் உங்களால் செய்ய முடிவதைச் செய்ய முயலுங்கள். போலச் செய்வது எளிதானது. நெற்றியை ஒரு தென்றல் தழுவுவதாக உணர்கிறாள். இரவுக்காற்று. நரி சளப், சளப்பென அடிக்கும் ஒலி எதுவும் எழாமல், முன்னோக்கி உந்துகிறது. நரி தோற்பதில்லை
க்ளாவிச்சோர்டு – Clavichord – மத்திய கால இசைக்கருவி, கம்பி வாத்தியம்
துடுப்பணிகள் – Flippers – நீச்சலின்போது கை கால்களில் அணிவது.
ஜான் கேஜ் – John Cage புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்
பர்ட் லங்காஸ்டர் – Burt Lancaster ஆண் அழகுக்குப் பெயர்பெற்ற அமெரிக்க நடிகர்
http://www.newyorker.com/magazine/2016/01/11/1-equals-1?mbid=social_twitter
மலைகள் இணைய இதழ் 93  மார்ச் 02, இதழில் வெளியானது.

No comments:

Post a Comment