இருட்டின் இதழ்கள்
(Winner of the
INDEPENDENT FOREIGN FICTION PRIZE 2012 of Book Trust)
எபிரேயம் – அகரான் ஆப்பெல்ஃபெல்டு AHARON APPELFELD
ஆங்கிலம் – ஜெஃப்ரே எம். கிரீன். JEFFREY M.GREEN
தமிழ் – ச.ஆறுமுகம்.
(
அகரான்
ஆப்பெல்ஃபெல்டு முந்தைய ருமேனியாவின் ஜடோவா என்ற நகரத்தில் 1932ல் பிறந்த யூதர். இந்த நகரம் இப்போது உக்ரேனில் உள்ளது. அவருக்கு
எட்டு வயதிருக்கும்போது 1941ல் ருமேனிய இராணுவம் தாக்கியதில், அவரது அம்மா இறந்து போனார்.
அவரும் அவரது அப்பாவும் நாஜி வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர். ஆப்பெல்ஃபெல்டு மட்டும்
வதை முகாமிலிருந்து தப்பி மூன்றாண்டுகள் ஒளிந்து வாழ்ந்த போது, சோவியத் படையினர் அவரைக்
கண்டெடுத்து ஒரு சமையல்காரராகச் செம்படையில் சேர்த்துக்கொண்டனர். இரண்டாம் உலகப்போர்
முடிந்தபின் அவர், இத்தாலியிலுள்ள ஒரு அகதிகள் முகாமில் பல மாதங்கள் தங்கி, இஸ்ரேல்
சுதந்திரம் பெறுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர், 1946ல் பாலஸ்தீனம் வந்து சேர்ந்த
அவர், தற்போது இஸ்ரேலில் வசிக்கிறார். இருபது வருடங்களுக்குப் பின்னர் அவரது தந்தையுடன்
இணைந்தார். அந்த நேரத்து உணர்ச்சிகளைத் தன்னால் இதுகாறும் எழுத்தில் வடிக்க முடியவில்லையென்கிறார்,
ஆப்பெல்ஃபெல்டு.
ஆப்பெல்ஃபெல்டின் தாய்மொழி ஜெர்மன்.
அவர் தனது இருபதாவது வயதுக்குப் பின் இஸ்ரேலில் ஹீப்ரு மொழியைக் கற்று, அந்த மொழியிலேயே
இருபத்தைந்தாவது வயதில் எழுதத் தொடங்கினார்; ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் படிப்பினை
முடித்து அங்கேயே ஹீப்ரு இலக்கியம் கற்பிக்கவும் செய்தார். இதுகாறும் நாற்பதுக்கும்
மேற்பட்ட நாவல்களை ஹீப்ரு மொழியில் படைத்துள்ள அவரிடம் நீங்கள் ஏன் தாய்மொழியான ஜெர்மனில்
எழுதுவதில்லையென ஒரு பேட்டியாளர் கேட்ட போது ` அது ஒரு கொலைகாரர்களின் மொழி (My
mother-toungue is a murderer`s language. Hebrew is my mother-language) எனப் பதிலளித்தார்.தற்போது
மேவசெரெட் ஜியான் நகரில் வசிக்கும் அவர் இப்போது 81வது வயதிலும் நெகெவ் பென்குரியான்
பல்கலைக்கழகத்தில் ஹீப்ரு இலக்கியம் கற்பிக்கிறார்.
ஹீப்ரு இலக்கிய முன்னணிப் படைப்பாளர்களில் ஒருவராகத் திகழும்
இவருக்கு யுகோஸ்லேவியன், உக்ரேனியன், ருஷ்யன், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய
மொழிகளும் தெரியும்.
ஆப்பெல்பெல்டின் படைப்புகளில் மவுனம், செயலற்ற நிலை மற்றும்
துன்பங்களே கருக்களாக இருக்கின்றன. இயலாமையே வாழ்வின் வலிமையாக மாறுவதை
எடுத்துக்காட்டும் இவரது படைப்புகள் பியாலிக் விருது, இஸ்ரேல் விருது, ப்ரிக்ஸ்
மெடிஸிஸ், நெல்லி சாச்ஸ் விருது, ப்ரென்னர் விருது தேசிய யூத இலக்கிய விருது எனப்
பல விருதுகளை வென்றுள்ளன.
மிகச்சிறந்த 200 இஸ்ரேலியர்களில் 157 வது நபராகச் சிறப்பிக்கப்படுகிற இவரையே பிலிப் ராத் என்ற
படைப்பாளர் அவரது ஆப்பரேசன் ஷைலாக் என்ற நாவலில் ஒரு பாத்திரமாகப் படைத்துள்ளார்.
புக் டிரஸ்டின் அயலகப் படைப்புகளுக்கான 2012 விருது பெற்ற Blooms of
Darkness என்ற நாவலின் முதல் ஐந்து அத்தியாயங்களிலிருந்து இந்தக் கதைப் பகுதி
தமிழாக்கம் செய்யப்படுகிறது)
1
நாளையோடு
ஹ்யூகோவுக்குப் பத்து முடிந்து பதினொன்று ஆகிறது.
அன்னாவும் ஓட்டோவும் நாளை அவன் பிறந்தநாளுக்கு வருவார்கள். ஹ்யூகோவின் நண்பர்கள் அநேகமாக எல்லோரும் தூரத்துக்
கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். எஞ்சியிருக்கும் சிலரும் விரைவில் அனுப்பப்பட்டுவிடுவார்கள்.
யூதர் முகாமான கெட்டோவில் நிலவுகின்ற பதற்றம் பயங்கரமானது. ஆனாலும்
அங்கே யாரும் அழுதுவிடவில்லை. தமக்கு
என்ன நிகழப்போகிறதென்பதை குழந்தைகள் ஒருவாறு உணர்ந்தே இருந்தார்கள்.
பயத்தை ஏற்படுத்திவிடக்கூடாதென்றே பெற்றோர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். ஆனாலும் கதவுகளையும் சன்னல்களையும்
யாரால் மூடமுடியும்? அவை தாமாகவே அடித்துக்கொள்கின்றன,
அல்லது, பட்டென்று திறந்துகொள்கின்றன. காற்று நடைபாதைகளினூடே சாட்டைகளால்
விளாசிக்கொண்டே இருக்கிறது.
சிலநாட்களுக்கு
முன்புதான் ஹ்யூகோவை மலைகளுக்கு அனுப்புவதாக இருந்தார்கள். ஆனால், அவனை அழைத்துச்செல்வதாக
இருந்த விவசாயி வரவேயில்லை. இடையில்
அவன் பிறந்தநாள் வரவே, ஹ்யூகோ தன்
வீட்டையும் பெற்றோரையும்
என்றென்றும் நினைவுகொள்ளும்படியாக ஒரு விருந்து நடத்த
வேண்டுமென அவனது அம்மா விரும்பினாள்.
நாளைக்கு, ஏன், இந்தக் கணத்தில்கூட
என்ன நிகழுமென்று யாருக்குத் தெரியும்? அந்த நினைப்புதான் அவளுக்குள்
தகித்துக்கொண்டிருந்தது.
ஹ்யூகோவை
மகிழ்ச்சிப்படுத்துவதற்காக
அம்மா ஜூல்ஸ் வெர்னின் மூன்று
புத்தகங்களையும் கார்ல் மேயின் ஒரு
தொகுதியையும் ஏற்கெனவே வெளியேற்றப்படவிருந்த நண்பர்களிடமிருந்து வாங்கி வைத்திருந்தாள். அவன்
மலைகளுக்குச் செல்வதாக இருந்தால் இந்தப் புதிய பரிசுகளையும்
எடுத்துச் செல்லுவான். டோமினோக் கட்டைகளையும் சதுரங்கப்பலகை, காய்களையும், ஒவ்வொரு இரவிலும் அவன்
தூங்கும் முன்பு படித்துக் காட்டும்
அந்தப் புத்தகத்தையும் அவனுக்கே கொடுத்துவிடுவதாக இருந்தாள்.
மலையிலும்
அவன் படிப்பதாகவும் கணிதங்களைச் செய்துபார்ப்பதாகவும் இரவுகளில் அம்மாவுக்குக் கடிதம் எழுதுவதாகவும் மீண்டும்
ஒருமுறை உறுதியளித்தான். அவன் அம்மா கண்ணீரை
அடக்கிக்கொண்டு, வழக்கமான குரலில் சாதாரணமாகப் பேச
முயற்சித்தாள்.
அன்னா,
ஓட்டோவின் பெற்றோர்களோடு, ஏற்கெனவே மலைகளுக்கு அனுப்பப்பட்டிருந்த சிறுவர்களின் பெற்றோர்களும் பிறந்தநாள் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் அக்கார்டியனோடு வந்திருந்தார்.
வாழ்க்கை
என்னவோ சாதாரணமாக இருப்பது போலவே, எல்லோரும் அவரவர்
அச்சங்களையும் கவலைகளையும் முடிந்தவரை மறைக்க முயற்சித்தனர். ஓட்டோ
உயர்வான ஒரு பரிசோடு வந்திருந்தான்;
அது முத்துப் பதித்து அழகுபடுத்தப்பட்டிருந்த ஒரு பேனா.
அன்னா சாக்லேட் கட்டி ஒன்றும் அல்வாப்
பொட்லம் ஒன்றும் கொண்டுவந்திருந்தாள். இனிப்புகளும் மிட்டாய்களும்
குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தின. பெற்றோர்களின் துயரம் கூட ஒரு
கணம் மறைந்து இனிமை தோன்றியது;
ஆனாலும் அக்கார்டியனால் உணர்வுகளைத் தட்டியெழுப்பி உற்சாகத்தைக் கொண்டுவர முடியவில்லை.
அக்கார்டியன் வாசிப்பவர் என்னவோ மிகுந்த பாவத்தோடு
இராகங்களின் முழுப்பரிமாணங்களுக்கும் பயணித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சித்தார்தான்;
என்றாலும் அது, துக்கத்தையே
அதிகமாக்கியது.
`நடவடிக்கை`களைப்பற்றியோ, எங்கே, என்னவென்று எதுவும்
கூறாமல் அழைத்துச்செல்லப்படும் கட்டாய உடலுழைப்புக் குழுக்கள்
பற்றியோ, அனாதை இல்லம், முதியோர்
விடுதி பற்றியோ, அவற்றில் தங்கியிருப்போர் திடீர்த்திடீரென எவ்விதத்தகவலுமின்றி நாடுகடத்தப்படுவது பற்றியோ, ஏன், ஒரு மாதத்துக்குமுன்
ஹ்யூகோவின் அப்பாவை வீட்டிலிருந்தும் பலவந்தமாக
இழுத்துச் சென்றார்களே, அதைப்பற்றியோகூட யாரும் வாய்திறக்கவில்லை. ஹ்யூகோவின்
அப்பா எங்கே? அவர் என்னவானார்?
எதுவுமே தெரியவில்லை.
எல்லோரும்
புறப்பட்டுச் சென்றபிறகு ஹ்யூகோ கேட்டான், ‘’ அம்மா,
நான் எப்போது மலைக்குப் போக
வேண்டியிருக்கும்?’’
‘’தெரியவில்லை.
என்னென்ன முடியுமோ, அத்தனையிலும்
பார்க்கிறேன்.’’
`என்னென்ன
முடியுமோ, அத்தனையிலும் பார்க்கிறேன்`
என்பதன் பொருளை ஹ்யூகோவால் விளங்கிக்
கொள்ளமுடியவில்லை. அம்மா இல்லாமல் தன்னந்தனியாகத்
தன்னைத்தானே கவனித்துக்கொள்ளுவதும், மிகுந்த பணிவுடையதுமான ஒரு
வாழ்க்கையை அவன் கற்பனைசெய்து பார்த்தான்.
அவன் அம்மா திரும்பவும் கூறினாள்,
‘’ நீ எதையும் கெடுத்துவிடக்கூடாது. அவர்கள் உன்னை
என்ன செய்யச் சொன்னாலும், அவை
எல்லாவற்றையும் நீ செய்யவேண்டியிருக்கும். அம்மாவால் முடிந்தவரை
உன்னைப் பார்க்க வருவதற்கு முயற்சிப்பேன்.
ஆனால், அது என் கையில்
இல்லை. எல்லோரையும் எங்கெங்கோ அனுப்புகிறார்கள். எது எப்படியிருந்தாலும் நீ
என்னை அதிகம் எதிர்பார்க்கக்கூடாது. என்னால் முடிகிறபோதெல்லாம்
வந்துவிடுவேன்.’’
‘’அப்பாவும்
வருவாரா, அம்மா?’’
அம்மாவின்
முகம் ஒருகணம் இறுகிப்போனது. அவள்
சொன்னாள்: ‘’உடலுழைப்பு முகாமுக்குக் கூட்டிப்போன நாளிலிருந்தே அவரைப்பற்றி எந்தத்தகவலும் தெரியவில்லை.’’
‘’அவர்
எங்கே இருக்கிறார்?’’
‘’அந்த
ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.’’
`நடவடிக்கை`களுக்குப்பிறகு, அம்மா, அவளுடைய துயரத்தின்
வெளிப்பாடுகளில் ஒன்றாக, ‘’அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.’’
என்று அடிக்கடி சொல்லிப் பெருமூச்சு விடுவதை அவன் கவனித்தான்.
`நடவடிக்கை`கள் தொடங்கிய பிறகு
உயிரோடிருப்பதையே ரகசியமாக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. அம்மா
எல்லாவற்றையும் விவரமாகக்கூறி அவனை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறாள்.
ஆனால் கண்முன் நடக்கிற எல்லாமே,
இனந்தெரியாத ஒரு பயங்கரத்தை அவனுக்கு
உணர்த்துகின்றன.
‘’ எல்லோரையும்
எங்கே கூட்டிப்போகிறார்கள்?’’
‘’கட்டாய
உடலுழைப்புக்கு,’’
‘’அப்படியென்றால்,
எப்போது திரும்பி வருவார்கள்?’’
அவன்
கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் அம்மா
முன்புபோல் பதில் சொல்வதில்லையென்பதை அவன்
உணரத்தொடங்கினான். சில கேள்விகள் காதில்
விழாததுபோல இருந்துவிடுகிறாள். சிலவற்றை அலட்சியம் செய்கிறாள். அவன் இப்போதெல்லாம் கேள்வி
கேட்காமலிருக்க முயற்சிக்கிறான்; பதிலாக வார்த்தைகளின் நடுவே
உறைந்து கிடக்கும் மவுனத்தைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொண்டான். ஆனால் அவனுக்குள்ளிருந்த குழந்தைமை!
ஒருசில மாதங்கள் முன்புவரை பள்ளிக்குச் சென்றுகொண்டும், வீட்டுப்பாடங்களை எழுதிக்கொண்டுமிருந்த அவன் தன்னைக் கட்டுப்படுத்த
முடியாமல் கேட்பான், ‘’அம்மா, எல்லோரும்
வீடுகளுக்கு எப்போது திரும்பி வருவார்கள்?’’
அநேகமாக
எல்லாநாட்களிலும் அவன் தரையில் உட்கார்ந்து
டோமினோக்களை அல்லது சதுரங்கத்தைத் தனியொருவனாகவே
ஆடிக்கொண்டிருப்பான். சிலநேரங்களில் அன்னா வருவாள். அவள்
ஹ்யூகோவைவிட ஆறுமாதம் சிறியவள். ஆனால், அவனைவிடச் சிறிது
உயரமாக வளர்ந்திருந்தாள்; கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பாள். அவள் மிக
நன்றாகப் பியானோ வாசிப்பாள். நிறையப்
புத்தகம் படிப்பாள். அவளின் மதிப்பைப் பெற்றுவிட
வேண்டுமென்று ஹ்யூகோ விரும்பினான். ஆனால்
அது எப்படியென்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. அவன் அம்மா அவனுக்குப்
பிரெஞ்சு கற்றுத் தந்திருந்தாள். ஆனால்,
அதிலும் அன்னாவே அவனைவிடத் திறமையாக
இருந்தாள். அவள் பேசும் முழுமையான
பிரெஞ்சு வார்த்தைகளைக் கேட்கும்போது, அன்னாவால் எதை வேண்டுமானாலும் எளிதில்
கற்றுக்கொள்ள முடியுமென்று அவனுக்குத் தோன்றும். பதிலுக்கு எதுவும் செய்ய முடியாமல்
அவன் துள்ளுகயிற்றை இழுப்பறையிலிருந்தும் எடுத்துக் கயிறுதுள்ளிக்கொண்டிருப்பான். அதில் அவன்
அன்னாவைவிடக் கொஞ்சம் திறமையாக இருந்தான்.
அன்னா அதில் வெகுவாக முயற்சித்தாளானாலும்
அந்த விளையாட்டில் அவளது திறமை ஒரு
குறிப்பிட்ட வரையறைக்குள்ளேதான்.
‘’உனக்காக
ஒருவரை, உன் அப்பா,அம்மா
கண்டுபிடித்துவிட்டார்களா?’’ ஹ்யூகோ
மிகுந்த எச்சரிக்கையுடனேயே கேட்டான்.
‘’ இல்லை;
இன்னும் இல்லை. வந்து கூட்டிச்
செல்வதாகச் சொன்ன விவசாயி இந்தப்பக்கம்
இன்னும் தலையைக்கூடக் காட்டவில்லை. அந்த ஆளின் முகம்
கூடத் தெரியாது.’’
‘’ என்னுடைய
விவசாயியும் அப்படியேதான்.’’
‘’ நாம்
எல்லோருமே கிழவர்களோடுதான் போகவேண்டியிருக்கும் போல.’’
‘’ அது
ஒரு விஷயமே இல்லை.’’ என்ற
ஹ்யூகோ ஏதோ வளர்ந்து நிரம்பவும்
தெரிந்துவிட்டவன் போலத் தலையைக் குனிந்து
கொண்டான்.
ஒவ்வொரு
இரவிலும் அம்மா அவனை ஏதாவது
ஒரு புத்தகத்திலிருந்து ஒரு அத்தியாயத்தையாவது படிக்கச்
செய்துவிடுவாள். கடந்த சில வாரங்களாக
அவள் பைபிளிலிருந்து சில கதைகளை வாசித்துக்காட்டுகிறாள்.
மதநம்பிக்கையாளர்கள் தாம் பைபிள் வாசிப்பார்களென
ஹ்யூகோவுக்குத் தெரியும். ஆனால், அம்மா! அவள்
பைபிள் வாசிப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. அவன் கதைகளைத் தெளிவான
காட்சிகளாகக் காண்கிறான். தெருமூலையில் மாவுப்பலகாரம் விற்கும் கடைக்காரரைப்போல, ஆபிரகாம் மிகவும் உயரமாகத் தெரிகிறார்.
அந்தக் கடைக்காரர் குழந்தைகளை நேசித்தார். அவர் கடைக்குள் நுழையப்போகிற
ஒவ்வொரு குழந்தைக்குமாக ஏதாவது ஒரு ஆச்சரியமான
பரிசு அங்கே காத்துக்கொண்டிருக்கும்.
பலியிடுவதற்காக
ஈசாக் கட்டப்படுவதை அம்மா வாசித்து முடித்ததும்,
ஹ்யூகோ வியப்புடன் கேட்டான்:
“ அம்மா!
இது நீதிக்கதையா? இல்லை, வெறுங்கதையா?’’
‘’ அது….,
கதைதான்’’ - அம்மா மிகுந்த கவனத்தோடு
சொன்னாள்.
ஈசாக்
பலியிடப்படாமல் காப்பாற்றப்பட்டதைக் கேட்டு அவன் மிகவும்
மகிழ்ச்சியடைந்தான்; ஆனால் பலியான ஆட்டுக்காகத்
துயரம் கொண்டான்.
‘’ கதை,
ஏன் அப்படியே நின்றுவிட்டது,
மேலே போகவில்லை?’’ என்று
கேட்டான் ஹ்யூகோ.
‘’ நீயே
கற்பனை செய். முயற்சித்துப்பார்.’’ என அறிவுறுத்தினாள்,
அம்மா.
அம்மா
சொன்ன அறிவுரை வேலைசெய்ய ஆரம்பித்தது.
கண்களை மூடியதும் உயரமான, பசுமை போர்த்திய
கார்பாத்தியான் மலைகள் கண்முன் வந்தன.
அடேயப்பா! ஆபிரகாம் எவ்வளவு உயரம்! அவரும்
அவரது சிறிய மகன் ஈசாக்கும்
மெதுவாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பின்னாக ஆடு, அதன்
விதியைத் தெரிந்துகொண்டது போலத் தலையைத் தொங்கப்
போட்டுக்கொண்டே தொடர்கிறது.
2
அடுத்த
நாள் இரவில் ஒரு விவசாயி
வந்து அன்னாவை அழைத்துச் சென்றுவிட்டார்.
காலையில் அதைக் கேள்விப்பட்டதும் ஹ்யூகோவின்
இதயம் இறுகிப்போனது. அவனுடைய நண்பர்கள் அநேகம்
பேரும் மலையில்தான் இருந்தார்கள். அவன் மட்டுந்தான் எஞ்சியிருக்கிறான்.
அவனுக்கான இடத்தை வெகு விரைவில்
கண்டுபிடித்துவிடுவதாக அம்மா சொல்லிக்கொண்டிருக்கிறாள். குழந்தைகள் தேவையற்ற
சுமையாகிப் போனார்களோ? அதனால்தான் வேற்றிடங்களுக்கு அனுப்புகிறார்களோ எனச் சில நேரங்களில்
அவனுக்குத் தோன்றியது.
‘’அம்மா,
குழந்தைகளை எதற்காக மலைக்கு அனுப்புகிறார்கள்?’’
அவனால் வாயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
‘’கெட்டோ
அபாயமாகிவிட்டதை நீ பார்க்கவில்லையா?’’ என்றாள்,
அம்மா, வெடுக்கென்று.
ஹ்யூகோவுக்கும்
தெரிகிறது. கெட்டோ மிகவும் அபாயகரமாகிவிட்டது.
கைதுகளும் பலவந்தக் கடத்தல்களும் அன்றாடமாகி, அவை இல்லாத நாள்
ஒன்றுகூட இல்லையென ஆகிவிட்டது. வெளியேற்றப்படும் மக்களால் தொடர்வண்டிநிலையச்சாலை நிரம்பி வழிகிறது. அவர்களால்
சுமக்க இயலாத அளவுக்குச் சுமைகள்
அவர்கள் முதுகில் ஏற்றப்பட்டிருந்தன. அவர்கள் நடக்கமுடியாமல் திணறியபோது
படைத்துறையினரும் காவலர்களும் அவர்கள் மீது சாட்டைகளைச்
சுழற்றி அடித்து முடுக்கினார்கள்.
இயலாதவர்கள் சுமைகளோடு தடுமாறி விழுந்தார்கள். ‘’குழந்தைகளை
ஏன் மலைகளுக்கு அனுப்புகிறார்கள்?’’ என்ற கேள்வி முட்டாள்தனமானதென
ஹ்யூகோவுக்கு இப்போது புரிந்தது. தன்னைக்
கட்டுப்படுத்திக்கொள்ளாமல்
அப்படியொரு கேள்வியைக் கேட்டதற்காக இப்போது வெட்கினான்.
ஒவ்வொரு
நாளும் அவனுடைய அம்மா சின்னச்சின்ன
அறிவுரைகளை அவனுக்குள் ஏற்றிக்கொண்டேயிருந்தாள். அவள் திரும்பத்திரும்பச் சொல்கிற
ஒரு பொது விதி அல்லது
கட்டளை:
“நீ எப்போதும் உன்னைச் சுற்றியிருப்பதை, சுற்றிலும்
நடப்பதைக் கவனித்துப் பார்க்கவேண்டும். கவனமாகக் கேட்கவேண்டும். ஆனால், கேள்வி மட்டும்
கேட்காதே. கேள்வி
கேட்கப்படுவதை எப்போதுமே வேற்றாட்கள் விரும்புவதில்லை.’’
அம்மா
இல்லாத ஒரு தனிவாழ்க்கைக்கு அவன்
தயார்படுத்தப்படுவதைப் புரிந்துகொண்டான்.
கடந்த சிலநாட்களாக அவள் எதனாலேயோ தன்னைச்
சிறிது தூரத்திலேயே தள்ளிவைப்பதாக உணர்ந்தான். சில நேரங்களில் அவள்
வலிமை குறைந்து, மனம் உடைந்து அழுகிறாள்,
முனங்குகிறாள், முணுமுணுக்கிறாள்.
ஓட்டோ
சத்தமின்றித் தலையைக்காட்டினான். அவன் சதுரங்கம் ஆடுவதற்காக
வருவான். அந்த விளையாட்டில் ஓட்டோவைவிட
ஹ்யூகோ கொஞ்சம் திறமையானவன்; அவனை
எளிதாகத் தோற்கடித்துவிடுவான்.
தோற்கப் போவதைத் தெரிந்ததுமே ஓட்டோ கைகளை உயரமாகத்
தூக்கி, அகல விரித்துச் சொல்வான்,
‘’ நீதான் ஜெயித்தாய். இனி ஒன்றுமே செய்ய
முடியாது.’’. ஹ்யூகோ ஓட்டோவுக்காக வருந்தினான்.
ஓட்டோவால் நன்கு விளையாட முடியவில்லை.
தாக்க முயற்சிக்கும் நகர்வின் மிரட்டலைக்கூட அவனால் சிறிதளவும் விளங்கிக்கொள்ள
இயலவில்லை. ஹ்யூகோ இதமாக, அவனை
ஆறுதல்படுத்துவதற்காகச் சொன்னான்,’’ மலையில் உனக்குப் போதுமான
அளவுக்கு நேரம் கிடைக்கும். நீ
மீண்டும் மீண்டும் செய்து பார்க்கலாம். போர்
முடிந்து நாம் சந்திக்கும்போது நீ
நன்கு விளையாடும் பயிற்சி பெற்றுவிடுவாய்.’’
‘’எனக்குப்
போதிய திறமை இல்லை, ஹ்யூகோ.’’
‘’நீ
நினைப்பது போல அது ஒன்றும்
புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிக்கலானதல்ல.’’
‘’எனக்கு,
அது பெரிய சிக்கலாகத் தெரிகிறது.’’
‘‘நீ
யாருடைய துணையுமில்லாத ஒரு தனியான வாழ்க்கைக்கு
உன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.’’
என்று சொல்லத் தோன்றியது, ஹ்யூகோவுக்கு; ஆனால் சொல்லவில்லை.
ஓட்டோ
எல்லாவற்றுக்கும் பணிந்து போகிறவன். அந்த
வகையில் அவன், அவனுடைய அம்மாவைப்
போலவேதான். அவனுடைய அம்மா எப்போதும்,
‘’போரினால் நல்ல வாழ்க்கை வாழ்கிறவர்களும்
இருக்கிறார்கள். நான்
இரண்டு கைகளையும் உயரத்தூக்கிக்கொண்டு சரணாகதியடைந்துவிடப் போகிறேன். ரொட்டிக்காகச் சண்டை போடும் திராணி
எனக்கு இல்லை. அப்படியிருக்கும்போது என்ன மாதிரி
ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட முடியும்?’’ என்று
புலம்பத் தொடங்கிவிட்டாள்.
ஓட்டோவின்
அம்மா ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை.
ஊர்மக்கள் இப்போதும், இந்தச் சீரழிந்த நிலையிலும்
அவரை மதிக்கிறார்கள். முன்பெல்லாம் அவர், பண்டைக்கால மற்றும்
நவீன வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளை முன்வைத்து அபிப்பிராயங்களையும் மதிப்பீடுகளையும் தெரிவிப்பார். இப்போது அவர் தோள்களைக்
குலுக்கிக்கொண்டே, ‘’ இந்த உலகத்தில் புது
மாதிரியான ஒரு சிந்தனை முளைத்திருக்கிறது.
என்னால் ஒன்றும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.’’
என்கிறார்.
கண்ணில்
கிடைத்த எல்லாவற்றையும் ஹ்யூகோ நெஞ்சில் பதிவு
செய்துகொண்டான். சிலர் கலவர முகத்தோடு
வீட்டுக்குள் நுழைவார்கள்; ஏதாவது ஒரு பயங்கரச்
செய்தியைச் சொல்லிவிட்டு வேகமாகச் செல்வார்கள். வேறுசிலரோ மெதுவாக வந்து மேசையருகில்
அமர்வார்கள்; ஆனால், ஒரு வார்த்தைகூடப்
பேசமாட்டார்கள்; அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். வீடு முன்பு போல்
இல்லை. நினைத்துப் பார்க்க முடியாதபடி நிரம்பவும்
மாறிவிட்டது. சாளரங்கள் இறுக மூடியிருந்தன. திரைகள்
வேறு, இருளை இன்னும் அதிகமாக்கின.
முற்றத்தைப் பார்க்கத் திறந்திருந்த ஹ்யூகோவின் ஒடுங்கிய சன்னல் வழியாக ரயில்வேத்
தெருவை மட்டும் பார்க்கமுடிந்தது. அந்தத்
தெரு வழியாக நாட்டை விட்டு
வெளியேற்றுவதற்காகத் திரட்டிக் கொண்டுசெல்லப்படும் மனிதர்களைக் காணமுடிந்தது. சிலநேரங்களில் பிடித்துச் செல்லப்படுபவர்களில் அவனது வகுப்புக் குழந்தைகளையோ
அல்லது அவர்களின் பெற்றோர்களில் ஒருவரையோ அவன் அடையாளம் காண்கிறான்.
அவன் விதியும் அவர்களைப் போன்றதாகவே இருக்கப்போகிறதென்றும் வேறுமாதிரி இருக்கப்போவதில்லையென்றும் அவனுக்குத் தெரிகிறது. இரவில் போர்வைக்கு அடியில்
சுருண்டுகொள்கிறான்; அது ஏதோ பாதுகாப்பானது
போல் நினைத்துக்கொள்கிறான்.
தாத்தா
இறந்தபோது நிகழ்ந்தது போலவே, கதவைத் தட்டாமல்,
அனுமதி கேட்காமலேயே வீட்டுக்குள் நுழைகிறார்கள். அம்மா அவர்களை வணக்கம்
கூறி வரவேற்கிறாள்; ஆனால் அவர்களுக்கு ஒரு
தம்ளர் காப்பியோ எலுமிச்சைத் தண்ணீரோகூடக் கொடுக்க முடியவில்லை. அவள்
கைகளைப் பிசைந்துகொண்டு, ‘’உங்களுக்கு ஏதாவது குடிக்கத் தரவேண்டுமென்றால்
கூட என்னிடம் ஒன்றுமே இல்லை,’’ எனக்
கைவிரித்துக் கண்கலங்குகிறாள்.
‘’வீட்டின்
ஒவ்வொரு மூலையும் என் நினைவிலிருக்கும்.’’ ஹ்யூகோ
தனக்குத்தானே நினைத்துக்கொள்கிறான். ‘’ஆனால் வீட்டைவிடவும் மேலாக
அம்மாவை நினைவில் வைத்திருப்பேன். அப்பா இல்லாமல் அம்மா
ஒன்றுமில்லாமலாகிவிட்டாள்.
அவள் தேவையான எல்லாவற்றையும் செய்கிறாள்;
என்னை மலைக்கு அழைத்துச்செல்லும் ஒரு
விவசாயியைக் கண்டுபிடிக்க மூலைக்கு மூலை முட்டி மோதுகிறாள்.’’
‘’ நேர்மையான
விவசாயி என்பதை நாம் எப்படித்
தெரிந்துகொள்ளமுடியும்?’’ அவனது அம்மா இயலாமைத்
துயரத்தோடு ஒருவர் தவறாமல் எல்லோரிடமும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறாள்.
‘’அப்படித்தான்
எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.’’ என அவர்கள் பதில்
சொல்கிறார்கள்.
எல்லோருமே
இருட்டுக்குள்தான் துளாவுகிறார்கள், கடைசியில் ஒரு இரவில் முன்பின்
தெரியாத ஒரு விவசாயியிடம் அவர்களது
குழந்தைகளைக் கொடுத்தனுப்புகிறார்கள். விவசாயிகள் பணத்தை எடுத்துக்கொண்டு, குழந்தைகளைப்
போலீசில் ஒப்படைத்துவிடுவதாகச் சில கெட்டவதந்திகளும் உலவுகின்றன.
அந்த வதந்திகளினாலேயே சில பெற்றோர்கள் தங்கள்
குழந்தைகளை விவசாயிகளோடு அனுப்ப மனமில்லாமலிருக்கிறார்கள். ‘’குழந்தை நம்மோடு இருந்தால்
நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.’’ என்று பயந்து வெளிறிய
முகத்தோடு பெற்றோர் ஒருவர் சொல்கிறார். இருந்தாலும்
எதனாலேயோ ஹ்யூகோவுக்குப் பயமாகத் தோன்றவில்லை. ஒருவேளை,
அவன் கோடை காலங்களில் தாத்தா,பாட்டி வீட்டுக்குப் போவது
வழக்கம் என்பதால் அப்படி இருக்கலாம். சிலவேளைகளில்
அவன் அவர்களோடு ஒரு வாரம் கூடத்
தங்கியிருக்கிறான். அடர்த்தியான புள்ளிகள் பெருமளவில் பரந்த
பசுக்கள் மேயும் புல்வெளிகளும் மக்காச்சோள
வயல்களும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. அவனது
தாத்தாவும் பாட்டியும் மிகவும் அமைதியானவர்கள்; நல்ல
உயரமானவர்கள். அவர்கள் கொஞ்சமாகத்தான் பேசினார்கள்,
விவசாயிகளின் மத்தியில் அவனது வாழ்க்கை ரம்மியமாகத்தான்
இருக்குமென்று அவன் கற்பனை செய்தான்.
அவன் ஒரு குதிரையும் நாயும்
வைத்துக்கொள்வான். அவற்றுக்கு உணவளித்து நன்கு கவனித்துக்கொள்வான். அவன்
எப்போதுமே விலங்குகளை நேசித்தான். ஆனால் அவனது பெற்றோர்
அவனை நாய்வளர்க்க அனுமதிக்கவில்லை. இனிமேல் அவன் இயற்கையோடு
இயற்கையாக, மதியநேரங்களில் மரநிழல்களில் கண்ணயரும் விவசாயிகளைப்போல வாழப்போகிறான்.
இரவுகளில்
பாதுகாப்புக்காக அவனும் அம்மாவும் வீட்டிலுள்ள
பாதாள அறைக்குள் சென்று பதுங்கி உறங்குகிறார்கள்.
இரவுகளில் தான் படைவீரர்களும் பிரெஞ்சுக்
காவலர்களும் வீடுகளுக்குள் புகுந்து தேடிக் குழந்தைகளைப் இழுத்துக்கொண்டு
போகிறார்கள். ஒருசில குழந்தைகள் ஏற்கெனவேயே
பிடிபட்டிருக்கிறார்கள். பாதாள அறைக்குள் மிகவும்
குளிராக இருக்கும்; அவர்கள் கம்பளிகளைப் போர்த்துக்கொள்ளும்போது
குளிர் உள்ளே நுழைவதில்லை.
ஓட்டோ
பதுங்கிப் பதுங்கி வந்தான். அன்னா,
மலைக்குப் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்துவிட்டதாகவும் அவளிடமிருந்து அவனுக்குக்
கடிதம் வந்திருப்பதாகவும் சொன்னான். மலையிலிருந்து வருகிற ஒவ்வொரு கடிதமும்
அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றிதான்.
துர்நம்பிக்கையாளர்கள் எப்போதுமேயான அவர்களின் அவநம்பிக்கையில், ‘’ எந்த மாதிரிச் சூழ்நிலையில்
அந்தக்கடிதம் எழுதப்பட்டதென்று யாருக்குத் தெரியும்? கடிதம் கொண்டுவரும் விவசாயிகள்
மீண்டும் மீண்டும் பணம் கேட்கிறார்கள். அவர்களிடம்
மனிதநேயம் சிறிதளவுகூட இல்லை. பேராசைக்காரர்கள்!’’ என்கிறார்கள்.
அவநம்பிக்கையின்
குரலைத் தெரிந்துகொண்ட ஹ்யூகோ, ‘’ ஓட்டோ, நீ இவ்வளவு
தூரத்துக்கு அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. அது உன்னைக் கீழே
வீழ்த்திவிடும். உன் அம்மாவுக்கு நீதான்
தைரியம் சொல்லவேண்டும்.’’ எனச் சொல்ல நினைத்தான்.
முதலில்
பெரும்பாலானோரும் நம்பிக்கையோடுதான் இருந்தார்கள். போகப்போகத்தான், அவர்கள் அருகிச் சிறுபான்மையாகிவிட்டார்கள்.
மக்கள் நம்பிக்கை இழக்க இழக்க, கெட்டோ
இயலாமைத் துயரத்தில் மூழ்கியது.
அவனை
மறைவாக வைத்துக் காப்பாற்றும் ஒரு விவசாயியைக்கூடக் கண்டுபிடிக்க
முடியவில்லையென்பதை அம்மா, அன்று இரவில்
ஒப்புக்கொண்டாள். வேறுவழியில்லாவிட்டால், அவள், அவனை மரியானாவிடம்
அழைத்துச் செல்வாள்.
மரியானா
உக்ரேனியப்பெண். அம்மாவோடு அவள் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப்
படித்திருந்தாள். அவள் சிறுமியாக இருக்கும்போதே
பள்ளிக்கு வராமல் நின்றுவிட்டதோடு தரம்
தாழ்ந்தும் போய்விட்டாள். `தரம் தாழ்ந்து போய்விட்டாள்`
என்பதன் பொருள் என்னவாயிருக்குமென ஹ்யூகோ
தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். லாரி உருண்டு உருண்டு
மலைப்பள்ளத்துக்குள் தலைகுப்புற விழுவதைக் கேட்கமுடிகிறது. ஆனால் மனிதர்கள் தரங்குறைந்து
வீழும்போது சப்தமே கேட்பதில்லை.
சொற்களைக்
கவனித்து உள்வாங்குவதை ஹ்யூகோ எப்போதும் விரும்பினான்.
சில சொற்கள் ஒலிக்கும்போதே அவற்றின்
பொருட்களை அவனுக்குத் தெளிவாக உணர்த்திவிடும். வேறுசில
சொற்கள் அவனுக்குள் எந்த பிம்பத்தையும் ஏற்படுத்தாமல்,
எந்தக் காட்சியுமில்லாமல் விரைந்து கடந்துவிடுகின்றன.
ஹ்யூகோ
அம்மாவிடம் சிலநேரங்களில் ஏதாவது ஒரு சொல்லின்
பொருளைக் கேட்பான். அம்மா அந்தச் சொல்லின்
பொருளை விவரித்து வரையறுத்துச் சொல்ல முற்படுவாள்; ஆனால்
அந்தச் சொல்லிலிருந்து ஒரு பிம்பத்தை அவனுக்குள்
ஏற்படுத்த அவளால் முடியவில்லை.
அப்போதுதான்
ஃப்ரீதா அத்தை வீட்டுக்கு வந்தார்.
அந்த அத்தையை ஹ்யூகோவுக்கு நன்கு
தெரியும். எல்லோரும் அவரைப்பற்றிப் பேசும்போது குறிப்பிட்ட, ஒரு வகையானப் புன்சிரிப்போடுதான்
பேசுகிறார்கள். அவர் இரண்டு முறை
திருமணம் செய்துகொண்டார். இப்போது அவரை விடவும்
வயது குறைவான ஒரு உக்ரேனிய இளைஞனுடன்
வசிக்கிறார்.
‘’ கவலைப்படாதே,
ஜூலியா, என்னுடைய உக்ரேனிய சிநேகிதன் உன்னை அவனது கிராமத்துக்கு
அழைத்துச் செல்லச் சம்மதிக்கிறான். ஒளிந்துகொள்ள
வசதியாக ஒரு அருமையான மறைவிடம்
அவனுக்குச் சொந்தமாக இருக்கிறது.’’
அம்மா
அதிர்ந்து போனாள். அவள் ஃப்ரீதாவை அணைத்துக்கொண்டு,
‘’ எனக்கு என்ன சொல்லுவதென்றே விளங்கவில்லை.’’
என்றாள்.
‘’நம்பிக்கை
இழக்காதே, கண்ணே.’’என்றார், ஃப்ரீதா.
குடும்பம் அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டதில்
மிகவும் உற்சாகமாகிவிட்டார், அவர்.
ஃப்ரீதா
ஒரு அழகான பெண். அவர்
வித்தியாசமான உடை அணிகிறார். எப்போதும்
ஏதாவது ஒரு வம்பை வலிய
இழுத்துக்கொள்கிறார். கண்டபடி அலையும் அவரது
வாழ்க்கைமுறையால் குடும்பம் அவரைத் தள்ளியே நிறுத்தி
வைத்தது. ஏழைகளுக்கும் அவசரத் தேவையில் இருப்பவர்களுக்கும்
எப்போதும் உதவுகிற அவன் அம்மாகூட
ஃப்ரீதாவிடம் இயல்பான அன்போடு இல்லை.
ஃப்ரீதா,
அவருக்காகவும், அவர் குடும்பத்துக்காகவும், அபாயத்தை எதிர்கொள்ளத்
தயாராக இருந்த அவரது உக்ரேனிய
சிநேகிதனைப்பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். ‘’ உக்ரேனியர்களால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற
முடியும்; ஆனால் அவர்கள் அப்படி
நினைக்கவேண்டும்.’’ என்றார், அவர். குடும்பம் அவரைத்
தள்ளிவைத்துவிட்ட போதிலும், இப்போது அவரால் குடும்பத்துக்கு
உதவமுடிகிறதென்பதில் மிகமிக மகிழ்வதாகக் கூறினார்.
ஹ்யூகோவின்
அம்மா மீண்டுமொருமுறை அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, நான்
ஏற்கெனவே நொந்து போயிருக்கிறேன்.’’ என்றாள்.
‘’ நீ
மனம் தளரக்கூடாது.’’ என்றார், ஃப்ரீதா. இந்த வார்த்தைகளை அவர்
பலகாலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாரென்று தெளிவாகத் தெரிகிறதுதான். இருந்தாலும், இப்போது அவர் மனத்தளர்ச்சியை
ஒரு மாயைதானென விவரித்துவிடுவார் போலத் தோன்றியது.
‘’எப்போதுமே
ஒரு வழி பிறக்கும். யாராவது
ஒருவர் உனக்கு அன்பு காட்டி
நல்லது செய்வார். நாம் செய்யவேண்டியதெல்லாம், அவருக்காகப் பொறுமையாகக்
காத்திருப்பது தான்.’’ ஹ்யூகோ அவரை
நெருக்கத்தில் கூர்ந்து பார்த்தான். ஆச்சரியப்படும்படியாக அவரது முகத்தில் ஒரு
சிறுமியின் குழந்தைத்தனத்தை, அவன் கண்டான்.
3
கெட்டோ
காலியாகிக்கொண்டிருக்கிறது.
தெருக்களிலிருந்தும் வீடுபுகுந்தும் வயதானவர்களையும்,
குழந்தைகளையும் பிடித்துச்செல்லத் தொடங்கிவிட்டார்கள். இருண்ட பாதாள அறைக்குள்ளேயே
பகல் முழுதும் அரிக்கன்விளக்கு வெளிச்சத்தில் ஹ்யூகோ எதையாவது வாசித்துக்கொண்டும் சதுரங்கம் விளையாடிக்கொண்டும் கழித்தான். அடர்ந்த இருள் அவனைத்
தூக்கத்தில் ஆழ்த்தியது. அவன் காவலர்களிடமிருந்து தப்பி
ஒரு மரத்தில் ஏறிவிடுகிறான்; ஆனால், கடைசியில் ஒரு
குழிக்குள் விழுந்துவிடுகிறான். விழித்துப் பார்த்தபோது, தனக்கு அடி,இடி
ஏதும் படவில்லையெனக்கண்டு மகிழ்ந்தான்.
மணிக்கொரு
முறை அல்லது இரண்டு மணிக்கொரு
தடவை அம்மா அவனைப் பார்க்க
வருவாள். வெண்ணெய் தடவிய ரொட்டித்துண்டு, அல்லது
ஒரு ஆப்பிள், அல்லது ஒரு பேரி,
அல்லது, வேறு ஏதாவதொன்றைக் கொண்டுவருவாள். அவனுக்குக் கொடுப்பதற்காகவே அவள் இப்போதெல்லாம் உண்ணாமலிருப்பது
அவனுக்குத் தெரிகிறது. அவன் தன்னுடையதில் ஒரு
பகுதியை அம்மாவுக்குக் கொடுப்பான். ஆனால் அம்மா மறுத்துவிடுகிறாள்.
ரயில்வேத்தெருவில்
மீண்டும் ஆட்களைக் கொண்டுசெல்கிறார்கள். அந்த ஒடுங்கிய சன்னலருகே
நின்று, ஹ்யூகோ கவனித்தான். முரட்டுத்தனமாக
நெருக்கித்தள்ளுவதும் கடும் வெறுப்பான சண்டையும் அலறலும் கூச்சலுமாக இருந்தது.
நெருக்கமான அந்தக் கூட்டத்தில் ஃப்ரீதாவின்
அழகிய உருவம் தனித்துத் தெரிந்தது.
அவர் பூப்போட்ட ஆடை அணிந்திருந்தார். அவரது
தலைமுடி கலைந்திருந்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது அவரை நெருக்கித் தள்ளிச்செல்வது அவருக்குச் சிரிப்பாகத் தெரிந்தது போல் இருந்தது. அவர் ஏதோ
பிடிபடவில்லையென்றும்,
அவராகவே விருப்பப்பட்டு விடுமுறையைக் கொண்டாடச் சுற்றுலா செல்வது போலவும் அவரது
கைகளை அசைத்துக்கொண்டிருந்தார்.
‘’அம்மா,
ஆட்களைப் பிடித்துச்சென்றதில் ஃப்ரீதா அத்தையைப் பார்த்தேன்.’’
‘’இருக்காது.’’
‘’என்
கண்ணாலேயே நான் பார்த்தேன், அம்மா.’’
ஃப்ரீதா
பிடிபட்டதோடு அவரது எந்த உடைமையையும்
எடுத்துச்செல்ல அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்டார் என்பதை மாலையில் அம்மா
தெரிந்துகொண்டாள். அவரது உக்ரேனிய சிநேகிதன்
அவர்களுக்கு அடைக்கலமளிப்பான் என்ற ஒரே நம்பிக்கையும்
தகர்ந்துபோயிற்று.
ஹ்யூகோவின்
அம்மா மீண்டும் மீண்டுமாக மரியானாவைப்பற்றி அதிகமாகச் சொல்லத்தொடங்கினாள். மரியானா நகரத்துக்கு வெளியே
வசிக்கிறாள். பாதாளச் சாக்கடை வழியாகத்தான்
அவளது இருப்பிடத்துக்குச் சென்றடைய முடியுமென்று தெரிந்தது. பாதாள வடிநீர்க் குழாய்கள்
அகன்று விரிந்தவை. நடுஇரவுக்குப் பின் அசுத்தநீர் கொஞ்சமாகவே
செல்லும். அம்மா சாதாரணமான குரலில்
பேசவே முயன்றாள்; அது என்னமோ வீரதீரச்
செயல்போல இடையிடையே கொஞ்சம் சேர்த்துச் சொன்னாள்.
அவனை அமைதிப்படுத்துவதற்காகவே அப்படிச் சொல்கிறாளென அவன் புரிந்துகொண்டான்.
‘’ஓட்டோ
எங்கே?’’
‘’அவனும்
ஒரு பாதாள அறைக்குள் ஒளிந்துகொண்டிருப்பான்
என்றுதான் நினைக்கிறேன்.’’ என்றாள், அம்மா, வெடுக்கென்று.
மரியானாவின்
வீட்டுக்குப் பாதாளச் சாக்கடை வழியாக
அழைத்துச் செல்வதாக அம்மா கூறியதிலிருந்தே, ஹ்யூகோ,
மரியானாவின் முகத்தைத் தனக்கு நினைவு தெரிந்த
நாளிலிருந்தே மீட்டெடுத்துக் காண முயற்சித்தான். அவனும்
உடனிருந்தபோது, அம்மாவை அணைத்துக்கொண்ட அவளது
உயரமும், நீளமான கைகளும் தான்
நினைவுக்கு வந்தன. அந்தச் சந்திப்புகள்
எல்லாமே அநேகமாக மிகக் குறுகிய
நேரத்துக்குள் நிகழ்ந்தவை. அவனுடைய அம்மா அவளிடம்
இரண்டு பொட்டலங்களைக் கொடுப்பாள். மரியானா அம்மாவைப் பிரியத்தோடு
அணைத்துக்கொள்வாள்.
‘’மரியானா
ஊர்ப்புறத்திலா வசிக்கிறாள்?’’ இருளுக்குள் புதிய தடம் தேடுவது
போல ஹ்யூகோ கேட்டான்.
‘’கிராமத்தில்.’’
‘’நான்
வெளியே விளையாட முடியுமா?’’
‘’அப்படி
நான் நினைக்கவில்லை. மரியானா உனக்கு எல்லாவற்றையும்
விளக்கிச் சொல்லுவாள். நாங்கள் சிறு வயதிலிருந்தே
தோழிகள். அவள் மிகவும் நல்லவள்;
ஆனால், விதி அவளுக்குச் சாதகமாயில்லை.
அவ்வளவுதான். அவள்
செய்யச் சொல்வதையெல்லாம் நீ நிரம்பவும் ஒழுக்கத்துடன்
சரியாகச் செய்ய வேண்டும்.’’
`விதி
அவளுக்குச் சாதகமாயில்லை` என்பதன் பொருள் என்னவாக
இருக்குமென்று நினைத்து ஹ்யூகோ ஆச்சரியப்பட்டான். அந்த
உயரமான அழகிய பெண்ணை ஏமாற்றமும்
மனத்தளர்ச்சியுமாக, மதிப்புக்குறைவான தோற்றத்தில் கற்பனைசெய்ய அவனுக்கு மனமில்லாமலிருந்தது.
அம்மா
மீண்டும் சொன்னாள்: ‘’ ஒவ்வொருவருக்கும் அவரவர் தலைவிதி என
ஒன்று இருக்கிறது.’’
இந்தத்
தொடரும் முந்தையதைப்
போலவே புரிந்துகொள்ள இயலாதது.
இதற்கிடையில்
ஒருநாள், அம்மா பின்புற முதுகுப்பை
ஒன்றையும் சூட்கேஸ் ஒன்றையும் பாதாள அறைக்குள் எடுத்துவந்தாள்.
முதுகுப்பைக்குள் புத்தகங்களையும் சதுரங்கப் பெட்டியையும் டோமினோக்களையும் வைத்தாள். ஆடைகளையும் காலணிகளையும் சூட்கேசுக்குள் திணித்தாள். அது உப்பிப் பருத்துக்
கனத்தது.
‘’கவலைப்படாதே,
மரியானா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள். நான் அவளோடு பேசிவிட்டேன்.
அவளுக்கு உன்னைப் பிடித்துவிட்டது.’’ என
நடுங்கும் குரலில் சொன்னாள், அம்மா.
‘’ நீ
எங்கே போவாய், அம்மா?’’
பக்கத்து
கிராமத்தில் ஒளிந்துகொள்ள ஏதாவது ஒரு புகலிடம்
தேடிக்கொள்வேன்.’’
அம்மா
பைபிள் வாசிப்பதை நிறுத்தினாள். ஹ்யூகோ அரிக்கன் விளக்கை
அணைத்ததும் அம்மா கூப்பிடுவது போல்
கேட்டது. அவள் குரல் மென்மையாக,
இனிமையாக, ஆனால், கண்டிப்பானதாக இருந்தது.
‘’நீ
வயதான பிள்ளையாகப் பெரியவனாக நடந்துகொள்ளவேண்டும்.’’ என்றாள். ஆனால்,
அது அம்மாவின் குரல் போலவே இல்லை.
`மரியானா சொல்வதையெல்லாம் கேட்டு, அப்படியே செய்வேன்`
என்று சொல்ல நினைத்தான். ஆனாலும்
தனக்குள்ளாகவே நிறுத்திக்கொண்டான்.
இரவில்
வெளியே எழுந்த கலவரக் கூச்சலில்
பாதாள அறை அதிர்ந்தது. காவலர்களிடம்
குழந்தைகளைப் பறிகொடுத்த அம்மாக்களின்
அவலக்குரலே அதிகமாக இருந்தது. அவர்கள்
துணிச்சலாகக் காவலர்களின் பின்னாலேயே ஓடித் தங்கள் குழந்தைகளைத்
தந்துவிடுமாறு கெஞ்சினார்கள். அதனாலேயே காவலர்கள் வெறிகொண்டு, அந்தப் பெண்களை மூர்க்கமாகத்
தாக்கினார்கள்.
குழந்தைகளைச்
சிறைபிடித்துக் கடத்துவது முடிந்தபின் கல்லறைத்தோட்ட அமைதி நிலவியது. எப்போதாவது
ஒரு தேம்பல் மட்டும் அடங்கிய
குரலில் கேட்டது.
ஹ்யூகோ
விழித்துக்கொண்டே படுத்திருந்தான். தெருவில், வீட்டில், நிகழ்கிற எல்லாமே அவனைப் பாதித்தன.
ஏதோ ஒரு வாய்ப்பில், அவன் காதில்விழுகின்ற வார்த்தைகள்,
இரவில் அவனுக்குள் உறுமலோடு மீண்டெழுகின்றன. அவனால் படிக்க, சதுரங்கம்
விளையாட, எதுவுமே முடியவில்லை. எல்லாமே
கடினமாக இருந்தன. பிம்பங்களும் சப்தங்களுமே அவனுக்குள் நிறைந்திருந்தன.
‘’ ஓட்டோ
எங்கே?’’ அவன் அம்மாவை விடாமல்
கேட்டுக்கொண்டிருந்தான்.
‘’ பாதாள
அறையில்.’’
ஓட்டோவும்
பிடிபட்டு, வாகனத்துக்குள் வீசப்பட்டு, உக்ரேனுக்குச் சென்றுகொண்டிருப்பானென்று ஹ்யூகோவுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.
அவன்
அம்மா கால்களைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, குந்தியமர்ந்து, மரியானா வசிக்கும் இடத்தை
விவரித்துக் கொண்டிருந்தாள். ‘’ அவளுக்கு ஒரு நல்ல விசாலமான
பெரிய அறையும் அதற்குள் ஒரு
தனியறையும் இருக்கிறது. பகலில், நீ பெரிய
அறையில் இருக்கலாம். இரவில் தனியறைக்குள் தான்
தூங்க வேண்டும்.’’
‘’நான்
மரியானாவின் வீட்டுக்குள்ளிருந்தாலும் அவர்கள் வந்து என்னைப்
பிடிக்கலாமா?’’ மிகுந்த முன்னெச்சரிக்கையோடு ஹ்யூகோ கேட்டான்.
‘’ மரியானா
ஒரு கழுகு மாதிரி உன்னைக்
காப்பாற்றுவாள்.’’
‘’நான்
ஏன் தனியறைக்குள் படுக்கவேண்டும்?’’
‘’பாதுகாப்புக்காகத்தான்.’’
‘’எனக்காக
அவள் பைபிள் வாசிப்பாளா?’’
‘’நீ
கேட்டால்.’’
‘’அவளுக்குச்
சதுரங்கம் விளையாடத் தெரியுமா?’’
‘’தெரியாதென்றுதான்
நினைக்கிறேன்.’’
கேள்விகளும்
குறுகிய பதில்களும் மறைவான பயணத்துக்கான தயாரிப்பு
என அவனுக்குத் தோன்றியது. பாதாள அறைக்குள் அமர்ந்து
அமர்ந்து அவனுக்கும் வெறுப்பாகிப்போனது. முதுகுப்பையைச் சுமந்துகொண்டு அம்மாவுடன் பாதாள வடிகுழாய்க்குள் இறங்கிச்செல்லும்
நாளை அவன்
ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கிவிட்டான்.
‘’ அங்கே
பள்ளிக்கூடம் இருக்குமா?’’ அவன் திடீரென்று கேட்டான்.
‘’அடேய்,
கண்ணா, நீ அங்கே மறைவாக
ஒளிந்திருக்கப் போகிறாய். பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை.’’ அம்மா வேறு மாதிரியான
ஒரு குரலில் கூறினாள்.
அது
அவனுக்கான தண்டனையென்று அவனுக்குப்பட்டது. அவன் கேட்டான்: “எல்லாநேரத்திலும்
நான் ஒளிந்தேதான் கிடக்க வேண்டுமா?’’
‘’போர்
முடியும் வரை.’’
`அப்பாடா`
என்றானது, அவனுக்கு. போர் அதிக நாட்கள்
நீடிக்காதென அவன் கேள்விப்பட்டிருந்தான்.
ஹ்யூகோவின்
கேள்விகள் இருட்டில் தட்டுத்தடுமாறித் துழாவுவது போன்றவைதாம்; என்றாலும் அவை அவனது அம்மாவைத்
துளைத்தன. வழக்கமாக அவள் முழுத் தொடர்களாக அல்லது
பாதியாகப் பதில் சொல்வாளென்றாலும் அவனை
ஏமாற்றியதில்லை. அவளுக்கென ஒரு விதி வைத்திருந்தாள்,
அது `ஒருபோதும் ஏமாற்றாதே.` என்பதுதான். ஆனால் உண்மையாகச் சொல்வதெனில்,
இப்போதெல்லாம் அவள் சில விஷயங்களை
மழுப்புவதும், சிலவற்றில் அவனை வேறுதிசைக்கு இழுத்து,
உண்மைகளை மறைப்பதுமாகச் சிலநேரங்களில் நிகழ்கிறது. அதனாலேயே அவளது மனச்சாட்சி முள்ளாக
உறுத்துகிறது. மனச்சாட்சியின் குத்தல்களிலிருந்தும் தப்பிப்பதற்காகவே அவள் ஹ்யூகோவிடம், ‘’ ஒன்றை
மட்டும் நன்றாகத் தெரிந்துகொள். எவர் என்ன சொன்னாலும்
கவனமாகக் கேட்டுக்கொள். நாம் வேறுமாதிரியான காலகட்டத்தில்
இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள். முன்பிருந்ததுபோல் இல்லை, இப்போது’’ என்றாள்.
அம்மா
வருந்துவதைப் புரிந்துகொண்ட ஹ்யூகோ, ‘’அம்மா, நான் எப்போதும்
கேட்கத்தான் செய்கிறேன். எல்லாநேரத்திலும் கவனித்துக் கேட்பேன்.’’ என்றான்.
‘’நன்றி,
கண்ணா.’’ என்கிறாள், அம்மா. இப்போதெல்லாம் வார்த்தைகளின்
மீதான கட்டுப்பாட்டை அவள் இழந்துவிட்டதாக உணர்கிறாள். அவை அவள் வாயிலிருந்தும்
வெளியேறுகின்றன; ஆனால் மையத்தைத் தொடுவதில்லை.
உதாரணமாகச் சொல்வதென்றால் மரியானாவைப்பற்றியும் அவளது தொழில்பற்றியும் ஹ்யூகோவிடம்
சொல்லிவிட வேண்டுமென நினைக்கிறாள். அதற்காக அவள் தேடும்
வார்த்தைகள்தாம் அவளுக்கு உதவ மறுக்கின்றன.
‘’மன்னித்துக்கொள்.’’
என்கிறாள், திடீரென்று.
‘’எதற்காக,
அம்மா?’’
‘’ஒன்றுமில்லை,
என் தப்புதான்,’’ என்று சொல்லிக் கைக்குட்டையால்
வாயைப் பொத்திக்கொள்கிறாள்.
ஹ்யூகோ
மீண்டும் தன்னிலை இழந்தான். அவனுடைய
அம்மா ஏதோ ஒரு பெரிய
ரகசியத்தைத் தன்னிடம் சொல்ல முயற்சிப்பதும், ஆனால்
ஏதோ காரணத்துக்காகத் தயங்குவது போலவும் அவனுக்குத் தோன்றியது.
அந்தத் தயக்கமே மேற்கொண்டும் அவனைப்
பேசத்தூண்டியது. அவன் ஏற்கெனவே கேட்டவற்றையே
மீண்டும் கேட்டான்:
“மரியானாவுக்குக்
குழந்தைகள் இருக்கிறார்களா?’’ அவன் வேறுவழியில் முயற்சித்துப்
பார்க்கிறான்.
‘’அவளுக்குத்
திருமணமாகவில்லை.’’
‘’ அவள்
என்ன செய்கிறாள்?’’
‘’வேலை
பார்க்கிறாள்.’’
விசாரணைக்
கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அவள், ‘’ இவ்வளவு தூரம் துளைத்துக்
கேட்கவேண்டிய அவசியமே இல்லை. நான்
திருப்பித் திருப்பிச் சொல்கிறேன். மரியானா நல்லவள். அவள்
உன்னைக் கழுகு போலக் காப்பாற்றுவாள்.
நான் அவளை நம்புகிறேன்.’’ என்றாள்.
இப்போதும்
ஹ்யூகோ அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தான். அவன் சொன்னான்: ‘’ நான்
இனிமேல் எதையும் கேட்க மாட்டேன்,
அம்மா.’’
‘’நீ
எப்பொழுதுமே கேட்கலாம்தான். ஆனால், எல்லாக் கேள்விகளுக்குமே
விடை உண்டு என்பதில்லை; அதை
நீ சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். விளக்கம் சொல்லமுடியாத விஷயங்கள் சில இருக்கின்றன. உன்
வயதுப் பையன்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களும் உண்டு.’’
அவனை
ஆறுதல்படுத்துவதற்காகவே அம்மா மீண்டும் சொன்னாள்:
‘’ என்னை நம்பு, உனக்கு எல்லாமே
தெளிவாகத் தெரியும் காலம் வரும். சீக்கிரமாகவே
நிறைய விஷயங்களை நீ புரிந்துகொள்வாய். நீ
புத்திசாலிப் பையன். விடைகள் இல்லாமலேயே
உனக்கு விளங்கும்.’’
அவன்
அம்மா கண்களை அகலத் திறந்தாள்.
அவை இரண்டும் சிரித்தன.
4
கடைசியாக
அந்த இரவு வந்தேவிட்டது. அதற்குமுன்,
பகலில் வீட்டுக்குவீடு
புகுந்து தேடுதலும் குழந்தைகளைப் பிடுங்கிச் செல்லுதலும் துயரத்தின் உச்சகட்டமும் அழுகையும் அலறலுமாக இருந்தது. கண்ணி மேலும் மேலுமாக
இறுகிக் கொண்டிருந்தது. அன்று நடுஇரவுக்குப் பின்
வெளியேறுவதென அம்மா முடிவெடுத்தாள். பாதாள
அறைக்குள்ளிருந்த நாட்களிலெல்லாம் அவன் பயந்ததில்லை. இப்போது
முட்டுக்காலிட்டு முதுகுப்பைக்குள் புத்தகங்களைத் திணிக்கும்போது அவன் கைகள் தாமாகவே
நடுங்கின.
‘’எதையாவது
மறந்துவிட்டோமோ?’’ விடுமுறை நாட்களில் வெளியே கிளம்புகையில், வழக்கமாகக்
கேட்பதைப்போலவே அம்மா கேட்கிறாள்.
அன்று
நள்ளிரவுக்குப் பின்னர்தான் அவர்கள் அந்த இருண்ட
வீட்டிலிருந்தும் படிக்கட்டில் இறங்கினார்கள். ஹ்யூகோவால் அவனது அறையைக் காண
முடிந்தது – எழுதும் சாய்வுமேஜை, அலமாரி,
புத்தக அடுக்கு. அவனது பள்ளிக்கூடப்பை மேஜையின்
அடியில் கிடந்தது. ‘’இனிமேல் எங்கே பள்ளிக்கூடம்
போகப்போகிறோம்?’’ என்ற ஏக்கம் தோன்றிக்
கடந்தது.
ஹ்யூகோவின்
அம்மா அவசர அவசரமாகச் சிலவற்றைக்
கைப்பையில் திணித்தாள். அவர்கள் பின்வாசல் வழியாகத்
தெருவுக்குள் இறங்கினார்கள். தெரு இருண்டு மவுனமாகத்தான்
கிடந்தது. இருந்தாலும் எவர் கண்ணிலும் பட்டுவிடாமலிருக்கச்
சுவற்றோடு சுவராக ஒட்டி நடந்தார்கள்.
முன்பு ரொட்டிக்கடையாக இருந்த இடத்துக்கு முன்பக்கத்தில்தான்
வடிகுழாயின் ஆள்நுழைபுழை
இருந்தது. அதன் மூடியை அம்மா
இழுத்துத் தூக்கி உள்ளே இறங்கினாள்.
ஹ்யூகோ சூட்கேசையும் முதுகுப்பையையும் அவளிடம் கொடுத்துவிட்டுக் கால்களைக்
கீழாகத் தொங்கவிட்டான். அம்மா அவனைக் கைகளில்
ஏந்திக்கொண்டாள்.
நல்லவேளையாக
அந்த நேரத்தில் சாக்கடை ஆழமாக இல்லை.
ஆனால் நாற்றமும் மூச்சுத் திணறடிக்கும் அசுத்தக் காற்றும் அவர்களின் வேகத்தைக் குறைத்தது.
சாக்கடையிலிருந்து வெளியேறும்போதும் சிலர் பிடிபட்டார்கள் என்பது
ஹ்யூகோவுக்கும் தெரியும். ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் மதுவின்
மயக்கத்திலிருக்கும் காவலர்கள், தப்பி ஓடுகிறவர்களைப் பிடிப்பதற்காக
கெட்டோவுக்கு வெளியே வந்து காவல்கிடக்கமாட்டார்களென
அம்மா கணித்தாள். நேரம் போகப்போகச் சாக்கடையின்
ஆழம் அதிகமாகிக் கெட்ட காற்று மூச்சுக்குழலை
இறுக்கியது. ஹ்யூகோ நிலைகுலைந்தான். அம்மா
முயற்சியில் சற்றும் தளர்ந்தாளில்லை. அவள்
அவனைப்பற்றி இழுத்தாள்; கடைசியாகத் தூக்கி உயர்த்தி, வெளியே தள்ளினாள்.
கண்விழித்தபோது அவன் புல்தரையில் கிடந்தான்.
‘’என்னம்மா
ஆயிற்று?’’ அவன் கேட்டான்.
‘’மூச்சடைத்தது.
நீ மயக்கமாகிவிட்டாய்.’’
‘’ எனக்கு
எதுவுமே நினைவில்லை.’’
‘’நினைப்பதற்கு
என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை.’’ அம்மா
அவன் கவனத்தைத் திருப்ப முயற்சித்தாள்.
ஹ்யூகோ
அந்த இருண்ட இரவைப்பற்றி மீண்டும்
மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தான்; நிகழ்ந்தவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப்
பார்த்தான்; அவன் உயிரோடிருக்கிறான்! அம்மா,
சாக்கடைக்குள்ளேயிருந்து அவனை
எப்படி ஆள் உயரத்துக்குத் தூக்கி,
வெளியே கொண்டுவந்தாளென நினைத்து நினைத்து அதிசயப்பட்டான்.
திறந்தவெளியில்,
அவர்கள் அப்படியிருப்பது, அபாயமாயிற்றே! அவர்கள் கூனித் தவழ்ந்து
புறப்பட்டார்கள். இடையிடையே அடிக்கடி மண்டியிட்டு நின்று, கவனித்துத்தான் நகர்ந்தார்கள்.
ஒருவழியாக, அருகிலிருந்த தோப்பு மரங்களுக்கிடையே மறைந்துவிட்டார்கள்.
‘’மரியானா
இரவில்தான் வேலை செய்வாள். நீ
தனியாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.’’ அம்மா மற்றுமொரு விபரத்தைக்
கூறுகிறாள்.
‘’நான்
புத்தகம் படிப்பேன், கணக்குகளைச் செய்து பார்ப்பேன்.’’
‘’மரியானாவின்
தனியறையில் ஒரு விளக்கு இருக்குமென்றுதான்
நினைக்கிறேன்,’’ அம்மாவின் குரல் நடுங்கியது.
‘’என்னைப்பார்க்க
எப்போது வருவாய்?’’
‘’ அது
என்கையில் இல்லை.’’ என்றாள், அம்மா. மெல்ல ஒலித்த
அந்த வாக்கியத்தின் எந்த வார்த்தையிலும் அழுத்தம்
தெரியவில்லை.
பின்னர்,
சிறிது நேரம், எதுவும் பேசாமல்
அமைதியாக இருந்தார்கள். பாதாள அறையை விட்டு
வெளியேறிச் சாக்கடை வழியாக நடந்து
மேலேறி வெளியே வருவதற்குப் பலமணி
நேரம் ஆகிவிட்டதைப் போலவே அவனுக்குத் தோன்றியது.
‘’அப்பாவும்
என்னைப் பார்க்க வருவார்களா?’’ அவனுடைய
இக்கேள்வி அம்மாவைத் துயரப்படுத்துமென அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
‘’வெளியே
வருவது மிகமிக அபாயமானதென்பதை நீ
பார்த்தாயில்லையா?’’
‘’ஆமாம்.
சரி. போர் முடிந்த பிறகு
வருவீர்களா?’’
‘’உடனேயே
வந்துவிடுவோம். ஒருநிமிடம் கூடத் தாமதிக்கமாட்டோம்.’’ இப்போது
சரியான வார்த்தைகள் கிடைத்துவிட்டதற்காக அவள் மகிழ்ந்தாள்.
பின்னர்,
அவள் வீட்டுக்குத் திரும்பிப் போகப்போவதில்லையென்றாள். அவள் அருகிலுள்ள கிராமத்துக்குச்
செல்வாள். அங்கே அவளுக்கு ஒரு
பள்ளித்தோழி இருக்கிறாள். பிரச்சினைகள் தீரும்வரை அவள் பாதுகாப்பில் ஒளிந்துகொள்ளச்
சம்மதிப்பாளென அம்மா நம்புகிறாள். ஒருவேளை
அவள் மறுத்துவிட்டால், கிளினிட்சியா கிராமத்துக்குச் செல்வாள். அங்கே ஹ்யூகோவின் தாத்தா,பாட்டி வீட்டில் வேலைசெய்த
நல்ல,
இணக்கமான, வயதான
பெண் ஒருத்தி இருக்கிறாள்.
‘’நீ
ஏன் என்னோடேயே இருக்கக்கூடாது?’’
‘’அந்தத்
தனியறையில் எனக்கு இடம் போதாதே.’’
பின்னர்
அவள் சத்தமாக வாசிப்பதைப் போல,
மனப்பாடம் ஒப்பிப்பதைப் போலக் கடகடவெனப் பேசிக்கொண்டிருந்தாள்.
அவள் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தாளென ஹ்யூகோவுக்குப் புரியவில்லை. தெரிவிக்கக் கடினமான ஏதோ ஒன்றைத்
தனக்குச் சொல்லமுயற்சிக்கிறாளென்று மட்டும் உணர்ந்துகொண்டான். அது,
அவள் குரல்தான், ஆனால் வழக்கமானதாக இல்லை.
‘’அம்மா?’’
‘’என்ன?’’
‘’அப்படியென்றால்,
நீ என்னைப் பார்க்க வருவாய்.
அப்படித்தானே?’’ வார்த்தைகள் அவன் வாயிலிருந்தும் வெடித்தன.
‘’நிச்சயமாக
வருவேன். அதிலென்ன சந்தேகம் உனக்கு?’’
மவுனம்
இருளோடு இணைந்து கனத்தது. மென்மையான
தரையிலிருந்து புல்லின் வாசம் கிளம்பியது. ‘’இலையுதிர்
காலம்’’ என்றாள், அம்மா. அந்த இரவின்
நினைவுகளை, அச்சங்களை, மூச்சுத்திணறல்களை, அவள் குரல் துடைத்தெறிந்தது.
அவன் நினைவுகளுக்குள்ளிருந்து அமைதியும் இனிமையும் கொண்ட கடந்தகாலக்காட்சிகள் எழுந்தன.
இலையுதிர்
காலத்தில் எப்போதும், அவர்கள் ஒரு வாரம்
கார்பாத்தியான் மலைகளுக்கு இலைகள் உதிர்வதைக் காண்பதற்காகவே
செல்வதுண்டு. பூமியின் மீது இலையுதிர் காலம்
பலப்பல வண்ணங்களாகப் படுத்துக்கிடக்கும். அவர்கள் மெது மெதுவாகக்
காலெடுத்து வைப்பார்கள். மரங்களிலிருந்து உதிர்ந்து கிடக்கும் பெரும்பெரும்
ஒளிர்வண்ண இலைகளை மிதித்துவிடக் கூடாதல்லவா!
அவன் அப்பா குனிந்து ஒரு
இலையை எடுத்துப் பார்த்து, ‘’வீணாகிவிட்டது,’’ என்றார்.
‘’எது
வீணாகிவிட்டது?’’ அம்மா படக்கென்று குறிப்பாகக்
கேட்டாள்.
‘’ அதன்
அழகுதான்.’’
இன்னும்
எத்தனையோ அற்புதமான விஷயங்கள் அப்போது பேசப்பட்டன. ஆனால்,
ஹ்யூகோ அவற்றை உள்வாங்கிக்கொள்ளவில்லை, அல்லது, அவற்றை
அவன் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. அந்தக் காலங்களில் பெற்றோருடனான
அவனது பிணைப்பு மென்மையும் இனிமையுமானது.
‘’ தவறான
முடிவு, நாம் தவறு செய்துவிட்டோம்.
பரவாயில்லை;
இப்போதாவது சரிப்படுத்திக் கொள்வோம். நாம் வீட்டுக்குப் போய்விடலாம்.
ஏற்கெனவே தாமதமாகிவிட்டது’’ என அம்மா சொல்லப்போவதாக
ஒரு கணம் அவனுக்குத் தோன்றியது.
பலநேரங்களில் அம்மா அதுபோன்ற நம்பிக்கை
வாசகங்களைப் பயன்படுத்துவதுண்டு. அது அம்மாவின் நல்லார்வ
உறுதிப்பாடு. அவனுடைய தந்தை அக்கூற்றுகளை
விரும்பியதோடு அவரது தனிவழிகளில் அவற்றைக்
கடைப்பிடிக்கவும் முயல்வதுண்டு.
அம்மா,
கண்களை அகலத்திறந்து, ஹ்யூகோவை நேராகப் பார்த்து, ‘’இப்போது,
எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டாள்.
‘’ நன்றாக,
அருமையாக.’’
‘’ கடவுளுக்குத்தான்
நன்றிசொல்லவேண்டும். இன்னும் அரைமணி நேரத்தில்
நாம் மரியானாவின் வீட்டுக்குப் போய்விடலாம்.’’
கார்பாத்தியான்
நினைவுகளில் திளைத்திருந்த ஹ்யூகோ, முடிந்தவரையிலும்
பிரிவினைத் தாமதப்படுத்தும் விருப்பத்தில், ‘’ ஏன், அப்படி ஓடவேண்டும்?’’
என்றான்.
‘’மரியானா
ஏற்கெனவே நமக்காகக் காத்துக்கொண்டிருப்பாள். இப்போதே நேரங்கடந்துவிட்டது. இனிமேலும்
அவளைத் தாமதிக்க வைக்கக் கூடாது.’’
‘’ இன்னும்
கொஞ்ச நேரந்தான், அம்மா.’’
‘’ கூடாது,
கண்ணா. நான் நினைத்ததையும் தாண்டி
நிரம்பவும் நேரமாகிவிட்டது.’’
`நான்
நினைத்ததையும் தாண்டி` என்ற சொற்றொடரை
ஹ்யூகோ அறிவான். ஆனால், இப்போது அது
பிறிதொரு இடத்திலிருந்து, பிறிதொரு நேரத்தில் பெயர்த்தெடுக்கப்பட்டது போல அவனுக்குத் தோன்றியது.
‘’இப்போது,
மணி என்ன இருக்கும்?’’ ஹ்யூகோ
கேட்டான்.
‘’நள்ளிரவு
தாண்டி இரண்டரை.’’
‘’ இது
என்ன புதுமை! என்ற சிந்தனை
அவனுக்குள் தோன்றிப் பரவிக்கொண்டிருந்தது. எதற்காக அம்மா அப்படிச் சொல்லவேண்டும்? `நள்ளிரவு தாண்டி`?
ஊர் முழுவதற்குமே வெளிச்சம் இல்லை. எங்குமே இருட்டுதான்.
ஒரே மையிருள். அப்படியும் `நள்ளிரவு தாண்டி` என ஏன்
சொல்லவேண்டும்? இரண்டரை என்றாலே போதாதா?
‘’காலம்
கடந்து, நிரம்ப, நிரம்பவும் நேரமாகிவிட்டது.
மரியானா இன்னும் கவலைகொள்ளும்படித் திகைக்க
வைக்கக்கூடாது. நாம் கொஞ்சம் முயன்றால்
போதும், அரைமணி நேரத்தில் அங்கே
போய்விடலாம்.’’ அம்மா மென்மைக் குரலில்
கூறினாள்.
5
ஹ்யூகோவின்
அம்மா சரியாகத்தான் சொன்னாள். நெடுநேரம் ஆகும் முன்பே அவர்கள்
ஒரு ஒடுங்கிய மரக்கதவு வாயில் முன் நின்றார்கள்.
அம்மா கதவைத்தட்டியதும், யாரெனக் கேட்ட பெண்குரலுக்கு
`ஜூலியா` என்றாள்.
கதவு
திறந்தது. வாயிலில் நீண்ட இரவு உடை
அணிந்த ஒரு உயரமான பெண்
தோன்றினாள்.
‘’வந்துவிட்டோம்,’’
என்றாள், அம்மா.
‘’உள்ளே
வாருங்கள்,’’
‘’உனக்குத்
தொந்தரவளிக்க மாட்டேன். சூட்கேசில் ஹ்யூகோவின் ஆடைகள் இருக்கின்றன. முதுகுப்பையில்
புத்தகங்களும் விளையாட்டுச் சாமான்களும் வைத்திருக்கிறேன். சாக்கடைக் குழாய்கள் வழியாகத்தான் வந்தோம். உடைகள் அழுக்காகியிருக்காதென்றுதான் நினைக்கிறேன். உனக்கு ஹ்யூகோவைத் தெரியும்தானே?’’
அவள்,
‘’முன்பு பார்க்கும்போது இருந்ததைவிடவும் நன்கு வளர்ந்திருக்கிறான்.’’ என்று சொல்லிக்கொண்டே
அவனைப் பார்த்தாள்.
‘’நிரம்பவும்
நல்ல பையன்.’’
‘’நிச்சயமாக’’
மரியானா
உன்னைக் கவனித்துக்கொள்வாள். நீ நிரம்ப சின்னப்பிள்ளையாக
இருக்கும்போதிலிருந்தே உன்னை ஞாபகம் வைத்திருக்கிறாள்.’’
‘’அம்மா,’’
மேற்கொண்டும் பேசவிடாமல் அவன் உதடுகள் தடுத்தபோதும்
அழைத்தான்.
‘’நான்
உடனே கிளம்பவேண்டும். விடிவதற்குள் கிராமத்திற்குப் போய்விடவேண்டும்.’’ அம்மா என்றுமில்லாத அவசரத்தில்
பேசினாள். அவள் கைப்பையிலிருந்து பளபளப்பான
ஒன்றை எடுத்து மரியானாவிடம் அளித்தாள்.
‘’ என்ன?
இது!’’ என்று நகையைப் பார்க்காமலேயே
மரியானா கேட்டாள்.
‘’ இது,
உனக்கு.’’
‘’அய்யோ,
கடவுளே! அப்படியென்றால், நீ?’’
‘’ இப்போதே
கிளம்பி செரீனாவிடம் போய்விடப்போகிறேன். சூரியன் உதிக்கும் முன்னாலேயே
போய்விடலாமென நினைக்கிறேன்.’’
‘’ கவனமாகப்
போ.’’ என்ற மரியானா, அம்மாவை அணைத்துக்கொள்கிறாள். ’அம்மா’’ இன்னும்
ஒரு கணமாவது அம்மாவோடு நீடித்திருக்க
அவன் முயற்சித்தான்.
‘’நான்
போகவேண்டும், கண்ணா, பத்திரமாகப் பார்த்து,
நடந்துகொள்.’’ எனச் சொல்லிய அம்மா,
அவன் நெற்றியில் முத்தம் பதித்துத் தன்னை
அவனிடமிருந்தும் விடுவித்துக்கொள்கிறாள்.
`அம்மா`
மீண்டும் அழைக்கவிருந்த அவன் தொண்டைக்குள்ளேயே வார்த்தைகள்
அடைத்துக்கொண்டன.
அம்மா
பிரிந்து செல்வதைக் காண, ஹ்யூகோ எப்படியோ
சமாளித்துக்கொண்டான். புதர்களுக்குள்ளாக அவள் புகுந்து, தாவித்தாவி,
விரைவாகச் சென்றாள். அம்மா முழுவதுமாக இருளுக்குள்
மறைந்தபின், மரியானா கதவை இழுத்து
மூடினாள்.
அது
நிரந்தரமான பிரிவு. ஆனால், ஹ்யூகோ
அதை முழுவதுமாக உணரவில்லை. ஒருவேளை, இரவின் குளிர் காரணமாக,
அப்படி இருந்திருக்கலாம். அல்லது அவன் நனைந்துபோயிருந்ததால்,
அல்லது அவனது சோர்வின் காரணமாக
இருக்கலாம்.
அவன்
மிகவும் குழம்பிப் போயிருந்தான். ‘’அம்மா போய்விட்டாள்’’ என்றான்.
‘’ மீண்டும்
வருவாள்.’’ என்றாள், மரியானா, உணர்வில்லாமலேயே. சும்மா, ஒரு பேச்சுக்காக.
***
குறிப்பு : மரியானா பாலியல் விடுதியிலேயே தங்கித்
தொழில் செய்பவள். அந்தப் பாலியல் விடுதிக்குள்ளேயே எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி ஹ்யூகோவை யாருக்கும் தெரியாமல் மறைவாக வளர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment