சமுதாய ஆன்மீகப் பார்வையும் இரண்டு கம்யூனிஸ்டு கதைகளும்
`சமுதாய ஆன்மீகப் பார்வை` என்று அடிக்கடி கூறுகிறீர்களே அது என்ன என்பதை விளக்கிக் கூறுங்களேன்!
ஜெயகாந்தன் : நமக்கென்று ஒரு சமுதாயப் பார்வை இருக்கின்ற காரணத்தினால்தான் விபசாரத்தைப் பற்றியும் அதற்கு இணையான இன்னும் பல சமூகக் கேடுகளைப்பற்றியும் நாம் ஆராய ஆரம்பிக்கின்றோம். ......
அதனை ஒரு வேடிக்கை விஷயமாக, அதனை ஒரு செய்தியாக, ஒரு அதிர்ச்சிக்காக, ஒரு கவர்ச்சிக்காக அதனைக் கையாளும்போது ஓர் எழுத்தாளன் என்கிற முறையில் இவர்கள் மனித இதயத்தைத் தொடத் தவறிப் போகிறார்கள். இது நியாயமில்லை
அதனை ஒரு வேடிக்கை விஷயமாக, அதனை ஒரு செய்தியாக, ஒரு அதிர்ச்சிக்காக, ஒரு கவர்ச்சிக்காக அதனைக் கையாளும்போது ஓர் எழுத்தாளன் என்கிற முறையில் இவர்கள் மனித இதயத்தைத் தொடத் தவறிப் போகிறார்கள். இது நியாயமில்லை
நிருபர் : இதனை ஒரு உதாரணம் காட்டி விளக்க முடியுமா?
ஜெயகாந்தன் ..... ஒரு விபசாரியின் கதையை எழுதும்போது, You can even justify prostitution. But you have no right to recommend it. விபசாரியான நியாயங்களைக் கூட நீங்கள் கூறலாம். அதனைச் சிபாரிசு செய்யலாகாது.
நிருபர் : விபசாரத்தை விட்டுவிட்டு வேறு உதாரணத்தைக் கூறுங்கள்.
ஜெயகாந்தன் : ரொம்ப சரி, நானே நினைத்தேன். பல வருஷங்களுக்கு முன்னால் நான் ஒரு கதை படித்தேன். அதில் தலைமறைவாகத் தன் வீட்டில் தங்கியிருக்கின்ற தொழிற்சங்கத் தலைவரைப் போலீஸ் கைது செய்யவரும்போது, தன் மடியில் பால்குடித்துக்கொண்டிருக்கிற குழந்தையை, அந்தப் போலீஸ்காரர்களுக்கு முன்னால் தரையிலே அறைந்து கொன்றுவிடுகிறாள் ஒரு தாய். அதைக் கண்டு போலீஸ்காரர்கள் பயந்தும் திகைத்தும் நிற்கையில் அந்தத் தொழிற்சங்கத் தலைவர் தப்பி ஓடிவிடுகிறார். இந்தக் கதையைப் படித்து நான் மிகவும் வருத்தப்பட்டதுண்டு. கடமையைச் செய்யப் போன இடத்தில் ஒரு கொடுமையைக் கண்டு திகைத்துக் கடமையை மறந்துநின்ற போலீஸ்காரர்களையே என் மனம் வாழ்த்தியது.
இந்தக் கதை கொலையைச் சிபாரிசு செய்கிற மாதிரி அமைந்துவிட்டது. ஆனால், கொலையை நியாயப்படுத்திய இன்னொரு கம்யூனிஸ்டு கதையையும் நான் படித்திருக்கிறேன். இது ஒரு வியட்நாம் கதையோ கொரியக் கதையோ நினைவில்லை. கதை இதுதான். எதிரிகளின் ராணுவம் ஒரு கிராமத்தையே வளைத்துக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கு அடைக்கலம் தந்திருந்த ஒரு தாய், தன் குழந்தையுடன் கம்யூனிஸ்டு வீரர்களோடு சேர்ந்து தப்பிப்போய் ஒரு பாலத்தின் அடியில் ஒளிந்திருக்கிறாள். தலைக்கு மேலே ஆயுதம் ஏந்தி ராணுவம் அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அப்போது அவளுடைய கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. அந்தக் குழந்தை அழுகிற சத்தம் கேட்டால், அங்கே ஒளிந்துகொண்டிருக்கிறவர்கள் அத்தனைபேரையும் ராணுவம் சுட்டுக் கொன்றுவிடும். எனவே, அந்தத் தாய் அழும் குழந்தையின் வாயை அழுத்தமாகக் கையால் பொத்துகிறாள். குழந்தையோ திமிறிக்கொண்டு மூக்கால் சிணுங்குகிறது. அப்போது மூக்கையும் அழுத்தி அடக்குகிறாள், தாய். எதிரியின் அணிவகுப்பு மிக நீளமாக அணிவகுத்துப் போய்க்கொண்டிருக்கிறது. கையையும் காலையும் உதைத்துத் துடிதுடித்துக்கொண்டிருந்த குழந்தையின் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது. கடைசியில் குழந்தையின் உயிர்த் துடிப்பு ஒரேயடியாக நிற்கும்போது, குழந்தையின் தாய் தன்னையும் அறியாமல் வீறிடப் பார்க்கிறாள். அருகில் இருந்த கணவன் அவள் வாயை அழுந்தப் பொத்துகிறான். இங்கே கதை முடிகிறது.
இந்த இரண்டாவது கதையை எழுதியவரும் கம்யூனிஸ்டு தான். இவரிடம் கட்சிப்பார்வையோடு சமுதாயப் பார்வையும் ஆன்மீகப் பார்வையும் இருக்கிறது.
நிருபர் : இதில் சமுதாயப் பார்வை என்றும் ஆன்மீகப் பார்வை என்றும் எதைக் கூறுகிறீர்கள்?
ஜெயகாந்தன் : கதைக்கு விளைவுகள் உண்டா, இல்லையா என்ற விவாதங்களுக்குள் நான் இறங்கவில்லை. ஆனால், எழுதுகிறவருக்கு, அந்தக் கதைகளினால் விளைவுகள் ஏற்படும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். முன்னவரின் கதை அவர் நோக்கத்துக்கு மாறாக ஒரு கொலையைச் சிபாரிசு செய்கிற கதையாகப் போய்விடுகிறது. பெற்ற குழந்தையைக் கொல்கிறவர்கள் செய்கிற கதையாகப் போய்விடுகிறது. பெற்ற குழந்தையைக் கொல்கிறவர்கள் எல்லாம் நாளைக்கு இம்மாதிரியான ஒரு காரணத்தைக் கூறிக் கொலையை நியாயப்படுத்திவிடலாம். ஆனால் பெற்ற குழந்தையையே கொல்லநேருகிறபோது, அந்த இடத்தில் யார் இருந்தாலும் படிக்கிறவனையும் கூட இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்த அனுபவத்தில் பங்கு பெறவைத்து, அந்தக் கொலைக்கு உடந்தையாக்கி, மனம் குமுற வைக்கின்ற ஆன்மீக சக்தி அந்த இரண்டாவது கதையில் இருக்கிறது.
இது கொலைக்கு மட்டுமல்ல; ஒரு விபசாரியைப் பற்றி எழுதினாலும், ஒரு திருடனைப் பற்றி எழுதினாலும், இந்த த் தவிர்க்கமுடியாத எந்தவழியில் பார்த்தாலும் தவிர்க்க முடியாத - நிர்ப்பந்தங்களை முன்னிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் அது சமுதாயத்தைக் கெடுக்கும் என்பதோடு, இன்னும் அதிகமாக இலக்கியத்தையே கெடுக்கிற முயற்சியாகிவிடும்.
நிருபர் : நீங்கள் எழுதிய கதைகள் எல்லாம் இப்படி இருக்கிறதா?
ஜெயகாந்தன் இருக்கிறதோ, இல்லையோ - இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
பக்கம் 246 - 249 ஜெயகாந்தன் இலக்கியத் தடம், காவ்யா, முதல் பதிப்பு டிசம்பர், 1997, பெங்களூரு.
No comments:
Post a Comment