ஜி. முருகனின் கண்ணாடியும் முரகாமியின் தோள்வார் காற்சட்டையும்.
ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் சிறுகதை ஒன்றில் ஒரு பெண் தன்னுடைய அப்பாவை அவளது அம்மா தள்ளிவைத்துவிட்டாளெனச் சொல்வாள். ஏனென்று கேட்கும்போது `எல்லாம் ஒரு தோள்வார் காற்சட்டையின் காரணமாகத்தான்` என்பாள்.
அதெப்படியெனக் கேட்கிறபோது விவரம் சொல்கிறாள். அந்தப் பெண்ணின் தாய் ஜெர்மனிக்கு உறவினர் வீட்டில் சிலநாள் தங்கி உறவாடச் செல்கிறாள். அவள் கணவனிடம் ஜெர்மனியிலிருந்து உங்களுக்கு என்ன வாங்கி வரவேண்டுமென்று கேட்டபோது அவர் ஜெர்மன் தோள்வார் காற்சட்டை என்று சொல்லியிருக்கிறார். தோள்வார்காற்சட்டை வாங்கப்போன தையற்கூடத்தில் அதைப் பயன்படுத்தப் போகும் நபர் வந்து அளவுகொடுத்தால்தான் தைக்கமுடியுமென்கிறார்கள்.
அந்தக் கடைப் பக்கமாக வருகிற ஒரு நபர் அவளது கணவரின் உடற்கட்டுக்குப் பொருத்தமாகத் தோற்றமளிக்கிறார். அவரைக் கெஞ்சி அளவு கொடுக்குமாறு கோருகிறாள். அவரும்அ ஒப்புக்கொண்டு அளவு கொடுக்கிற நேரத்தில், அவரது முகத்தில், அவளை நோட்டம் பார்க்கும் அசட்டுச் சிரிப்பு தெரிகிறது. அந்தநேரத்தில் சட்டை தைக்கிற தொழிலாளிகள் இருவரும் அளவு கொடுப்பவருமாக அவளுக்குத் தெரியாத ஜெர்மன் மொழியில் எதையோ பேசிச் சிரிக்கிறார்கள். அவள் அவமானமாக உணர்கிறாள்; அப்போதே கணவனை விவாக ரத்துசெய்யும் முடிவுக்கு வந்து முதல் நடவடிக்கையாக அவரைத் தள்ளிவைக்கிறாள். எல்லாவற்றுக்கும் காரணம் தோள்வார் காற்சட்டைதான் என்கிறாள். அவள் மகளும் அதையே கூறுகிறாள். கதையைக் கேட்டுக் கொண்டிருப்பவரின் மனைவியும் அப்படியே நம்புகிறாள். உண்மையில் அவள் கணவரும் பெண்களைப் பார்த்து நோட்டமிடும் அசட்டுச் சிரிப்பு சிரிப்பவர். திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளாக, அதை அசட்டையாக ஒதுக்கியவள் இப்போது அதற்காகவே விவாகரத்து கோருகிறாள். அந்த ஜெர்மன்காரனின் சிரிப்புதான் அவள் கணவன் அசட்டுத்தனமாக பிறபெண்களைப் பார்த்துச் சிரிக்கும் தோற்றத்தைக் காட்டி அவமானமாக உணரவைத்தது. உண்மை இப்படி இருக்கும்போது தோள்வார்காற்சட்டையினால்தான் அவள் கணவரைத் தள்ளிவைத்துவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள்.
இதுபோலவே யானை காணாமலாகிறது கதையிலும் யானை காணாமல் போனதற்கான உண்மைக் காரணம் மிகப்பெரிய அரசியல் ஊழலாக இருக்க, கதைசொல்கிறவன் யானை நாளுக்கு நாள் உருவம் சுருங்கியதாக விவரிப்பான்.. அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பெண்ணோ அதையெல்லாம் உணராமல் எங்கள் வீட்டிலும் ஒரு பூனை காணாமல் போனதென்பாள். இப்படியாக உண்மையை உணராமல் அபத்தமாக ஏதாவது பேசித் திரிவதுதான் பொது இயல்பாக உள்ளதென்பதை முரகாமி மறைபொருளாகச் சுட்டுவார்.
(முரகாமியின் தோள்வார்காற்சட்டை மற்றும் யானை காணாமலாகிறது இரு கதைகளும் `மலைகள்` இணைய இதழில் வெளியாகியுள்ளன. இந்த வலைப்பக்கத்திலும் `ஜப்பானியச் சிறுகதைகளில் வாசிக்கலாம்.)
இதே அபத்தம், டிசம்பர், தடம் இதழில் வெளியாகியுள்ள ஜி. முருகனின் `கண்ணாடி` கதையில் மிகுந்த நகைச்சுவையோடு நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. கண்ணாடியைக் கட்டியிருந்த நெகிழிக் கயிறு அவிழ்ந்து கண்ணாடி கீழே விழுந்து உடைகிறது. கதைசொல்லி சிறுவனாக இருக்கும்போது சூரிய ஒளியினைக் குறிப்பட்ட இடத்தில் படுமாறு முகம் பார்க்கும் கண்ணாடியைத் திருப்பும்போது அவனது கவனக்குறைவினால் கண்ணாடி கீழே விழுந்து உடைகிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் பேருந்து கண்ணாடி உடைவதற்கு கல்லெறி காரணமாயிருந்திருக்கலாம். அதேபோல ஏ.டி.எம். அறையின் கண்ணாடி உடைவதற்கு அதைச் சரியாகப் பொருத்தாமல் இருந்திருப்பார்களாயிருக்கலாம். ஆனால், கதைசொல்லியோ கண்ணாடிக்கும் ஏதோ ஆன்மா போன்ற ஒன்று இருப்பது போலவும், அதற்கும் அவனுக்கும் ஜென்மப்பகை போன்ற ஏதோ ஒன்று இருப்பதாகவும் விவரிப்பது நல்ல நகைச்சுவைதான். அதிலும் கதைசொல்லி ஒரு ஊடகத்தில் செய்தி ஆசிரியராக இருப்பவர். அதாவது அறிவுஜீவி. இப்படித்தான் வாழ்க்கையிலும், இலக்கியத்திலும், மொழிபெயர்ப்பிலும் அரசியலிலும் நிர்வாகத்திலும் எத்தனையோ அபத்தங்கள் நடந்தேறுகின்றன. அதை நாம் பார்வையாளராகச் சகித்துக்கொண்டிருக்கிறோம், என்பது கதையின் மறைபொருள்.
No comments:
Post a Comment