Monday, 23 April 2018

ருசியச் சிறுகதை -2 - அவதூறு A Slander - By Anton Chekhov

அவதூறு  (A Slander)  
ஆண்டன் பாவ்லோவிச் செகாவ்  Anton Pavlovich Chekov (1860 – 1904)
ஆங்கிலம் வழி தமிழில் ச.ஆறுமுகம்

எழுத்துப் பேராசான், ஆசிரியர் செர்கெய் கபிட்டோனிச் அகிநீவ் அவரது மகளை வரலாறு, புவியியல் ஆசிரியருக்கு மணமுடித்துக் கொடுக்கவிருந்தார். மண விழாக் குதூகலக் கொண்டாட்டங்கள் உச்சத்திலிருந்தன.  வரவேற்பு அறையில் ஒரே பாட்டு, நடனம், கும்மாளம்! வாடகைக்கமர்த்தப்பட்டிருந்த மகிழ் மன்றகப் பரிமாறுகைப் பணியாளர்கள் கருநிறப் பட்டாம்பூச்சி ஆடையும் அழுக்கடைந்த வெண்ணிறக் கழுத்துப் பட்டியும் அணிந்து அங்கும் இங்குமாக, அறை, அறையாகப் பறந்து பறந்து கவனத்தை ஈர்த்தனர். ஆரவாரக் கூச்சலும் உரையாடல்களின் உரத்த ஒலிகளும் அளவு மீறித் தொடர்ந்தன. சாய்மெத்தையில் பக்கம்பக்கமாக அமர்ந்திருந்த கணித ஆசிரியரும் பிரெஞ்சு ஆசிரியரும் இளநிலை வரிக் கணக்கீட்டாளரும் உயிரோடு புதைக்கப்பட்டவர்கள் குறித்த நேர்வுகள் பற்றியும் ஆன்மீகம் பற்றிய கருத்துகளையும் விருந்தினர்களுக்கு, ஒருவரையொருவர் மறித்து, வேக வேகமாக உரைத்துக்கொண்டிருந்தனர். அவர்களில் யாரும் ஆன்மீகத்தை நம்பவில்லை; ஆனால், இந்த உலகில் பல நிகழ்வுகள் எப்போதுமே மனித மனத்தையும் கடந்ததாக இருப்பதாக எல்லோரும் ஒப்புக்கொண்டனர். அடுத்த அறையில் இலக்கியப் பேராசான், வழிநடையாகக் கடந்து செல்பவர்களைக்கூடச் சுடுவதற்கான உரிமை படைக்காவலாளுக்கு இருக்கும் நேர்வுகளைப் பற்றிப் பார்வையாளர்களுக்கு விவரித்தவாறிருந்தார். அவரிடம் அகப்பட்டுக் கொண்டவர்கள், நீங்கள் மனக்கண்ணில் காண்பதுபோலவே, விழிபிதுங்க, ஒருவித பீதியில் கேட்டுக்கொண்டிருந்தாலும் அதனை முழுக்க ஏற்றுக்கொள்பவர்களாகவே இருந்தனர். மணவீட்டுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்ட சமூகப் படிநிலையில் கீழிருந்த மனிதர்கள் முற்றத்திலிருந்தவாறே, சாளரங்கள் வழியாக எட்டிப்பார்த்து நின்றனர்.
நடு இரவானதும் வீட்டின் உரிமையாளர், இரவு விருந்துக்கான அனைத்தும் தயாராகிவிட்டனவா எனப் பார்ப்பதற்காகச் சமையலறைக்குச் சென்றார். சமையலறையின் தரைத்தளம் முதல் கூரை வரையிலுமாக, வாத்து  மணமும் உயரவகைப் பெருவாத்து மற்றும் பல்வகைக் கறிமணங்களும் கலந்த புகை மண்டலமாக நிறைந்திருந்தது. இரண்டு மேஜைகளில் குடி வகைகள்,  மெல்லூக்கப் பானங்கள், தேவையான உபகரணங்களுடன் ஒரு கலைத்தன்மை பொருந்திய ஒழுங்கற்ற பரவலாக வைக்கப்பட்டிருந்தன. இடுப்புப் பட்டை சுற்றிய பீப்பாய் போன்றிருந்த சிவந்த முகத்துப்பெண்ணான சமையலர், மார்ஃபா மேஜைகளுக்கிடையே அமளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.
”ஸ்டர்ஜியான் மீனை எனக்குக் காட்டு, மார்ஃபா,” என்றார், அகிநீவ், உள்ளங்கைகளைத் தேய்த்துக்கொண்டும், உதடுகளை நாவால் தடவிக்கொண்டும். ‘’என்ன ஒரு மணம்! முழுச் சமையலையும் நானே சாப்பிட்டுவிடுவேன். வா, ஸ்டர்ஜியானை எனக்குக் காட்டு.”
அங்கிருந்த பெஞ்சுகளில் ஒன்றை நோக்கிச் சென்ற மார்ஃபா மிகுந்த கவனத்துடன், எண்ணெய் படிந்த செய்தித்தாள் விரிப்பு ஒன்றினை ஒருபக்கமாகத் தூக்கி உயர்த்திப் பிடித்தாள். செய்தித்தாளின் கீழே எண்ணெய் மசாலாவுக்குள் மூழ்கடிக்கப்பட்ட மிகப் பெரிய ஒரு ஸ்டர்ஜியான் மீது பசுங்கீரைகள், ஆலிவ்கள் மற்றும் காரட்டுச் சீவல்களால் அலங்கரிக்கப்பட்ட மகத்தான ஒரு கறி. அகிநீவ் ஸ்டர்ஜியானை விரிந்த கண்களால் பார்த்து வாய் பிளந்தார். அவரது முகம் ஒளிமிக்கதாகப் பரந்து, அவரது கண்கள் மேல்நோக்கி உயர்ந்தன. அப்படியே கீழ் நோக்கிக் குனிந்த அவரது உதடுகள் மையற்ற சக்கரத்தின் ஒலியொன்றை உமிழ்ந்தன.  ஒரு கணம் அங்கேயே நின்று கைவிரல்களில் சுடக்கொலியினை எழுப்பி மகிழ்ந்து மீண்டும் ஒருமுறை உதடுகளை மடித்துச் சுவைத்துக்கொண்டார்.
”ஆஹ் ஹா! என்னவொரு அன்பான முத்தத்தின் ஒலி …..” ”இளம் மார்ஃபாவே, அங்கே யாரை முத்தமிடுகிறாய்?” அடுத்த அறையிலிருந்துதான் அந்தக் குரல் கேட்டது; கூடவே கதவுநிலையில் கிராப்புத் தலையுடன் நின்றார், உதவி வரவேற்பாளர், வான்கின். “யார் அது? ஆ-ஹ்! …. உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! செர்கெய் கபிட்டோனிச்! நீங்கள் ஒரு அருமையான தாத்தா, இதை நான்  சொல்லியேயாகவேண்டும்!”
“நான் எதையும் முத்தமிடவில்லையே,” என்ற அகிநீவ், குழப்பத்துடன்,  “முட்டாளே, யார் அப்படிச் சொன்னது? நான் வெறுமனே….. உதட்டைச் சப்புக்கொட்டினேன் ….. அது …. மீனைப் பார்த்த…..   ஒரு சந்தோஷத்தின் அடையாளம்.”  என்று விளக்கமும் அளிக்க முயன்றார்.
“அதை அந்தக் கப்பல்காரர்களிடம் போய்ச் சொல்லுங்கள்!” உறுத்து நோக்கும் பார்வை மறைந்து, பற்களைக் கரகரக்கும் கடுப்பான முகமாக மாறியது.
அகிநீவுக்குக் குப்பென்று வியர்த்தது.
“ சனியனைத் தூக்கில் போடவேண்டும்!” என நினைத்த அவர், “இந்த நாய் இப்போது வெளியே போய் அவதூறு கிளப்பும். கழுதை, ஊர் முழுக்க என்னைக் கேவலப்படுத்தும்.”
வரவேற்பு அறைக்குள் மருட்சியுடன் நுழைந்த அகிநீவ், வான்கின் இருக்கிறானாவெனச் சுற்றிலுமாக ஓரப் பார்வை பார்த்தார். வான்கின், பியானோ அருகில் நின்று நகைத்துக்கொண்டிருந்த ஆய்வாளரின் மைத்துனியிடம் எதைப்பற்றியும் துளிகூடக் கவலையில்லாத போக்கில், குனிந்து ஏதோ இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.       
“என்னைப்பற்றித்தான் பேசுகிறான்!” என நினைத்தார், அகிநீவ். “என்னைப்பற்றித்தான், உதைக்கவேண்டும் அவனை! அவள் வேறு அதனை நம்பித்தொலைக்கிறாள்…. சிரிக்கிறாள்! அய்யோ நம்பிவிட்டாள்! கடவுளே, கருணை காட்டுங்கள்! இல்லை, இதை நான் அப்படியே விட்டுவிடமுடியாது. …. .. இது அப்படியே நீடிக்கக்கூடாது… எல்லோரும் நம்புவதைத் தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும். ….. எல்லோரிடமும் நான் பேசியாக வேண்டும், அவன் ஒரு முட்டாள் என்பதோடு வம்பு பேசுகிறவன் என்பதையும் காட்ட வேண்டும்.”
அகிநீவ் தலையைப் பிய்த்துக்கொண்டதோடு பெருத்த தர்மசங்கடத்தில் தவித்து, பிரெஞ்சு ஆசிரியரிடம் சென்றார்.
”இரவு உணவு வேலை எப்படியாகயிருக்கிறதென்று பார்ப்பதற்காக, இப்போதுதான் சமையலறைக்குப் போயிருந்தேன்,” என அந்த பிரெஞ்சுக்காரரிடம் தொடங்கிய அவர், “ எனக்குத் தெரியும் உங்களுக்கு மீன் என்றால், கொள்ளைப் பிரியமாயிற்றே. எனது அன்பான நண்பரே, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ஸ்டர்ஜியான் சமைத்திருக்கிறோம்! ஒன்றரை கஜம் அதாவது நாலரை அடி நீளம்! ஹ,ஹ,ஹா! அப்புறம் …… ….. கொஞ்சம் மறந்துவிட்டேன் … …. சமையலறையில் அந்த ஸ்டர்ஜியானை வைத்து … …  ஒரு சின்ன சம்பவம் … இப்போதுதான் இரவு உணவுப் பதார்த்தங்களைப் பார்ப்பதற்காகச் சமையலறைக்குப் போய்வந்தேன். ஸ்டர்ஜியானைப் பார்த்து ஆசையோடு என் உதடுகளை மடித்துச் சப்புக்கொட்டினேன்…… …. என்னவொரு சுவாரசியமான மணம்., ஆஹா. அந்த மிகச்சரியான தருணத்தில், அந்த முட்டாள் வான்கின் உள்ளே வந்து சொல்கிறான் …… “ஹ, ஹ, ஹா! ஆ, நீங்கள் இங்கே முத்தமிட்டுக்கொண்டிருக்கிறீர்களா?” சமையலர், மார்ஃபாவை முத்தமிடுவது! எப்படியான ஒரு கற்பனை பாருங்கள், அடி முட்டாள்! அவளுக்கு ஏற்கெனவே ஒரு, சரியான ஒரு கோர முகம், எல்லாப் பிராணி முகங்களையும் ஒன்றாகச் சேர்த்துச் செய்த மாதிரி, அந்தப் பெண்ணைப் போய் முத்தமிடுவதாம், என்ன பேச்சுப் பேசுகிறான் பாருங்கள்! மக்கு மீன்!”
“யார் அந்த மக்கு மீன்?” எனக் கேட்டுக்கொண்டே வந்தார் கணித ஆசிரியர்.
“ஏன், அவன்தான் …. வான்கின்! நான் சமையலறைக்குப் போயிருந்தேனா … .. ”
அப்படியே அவர் வான்கின் கதையைச் சொன்னார். “ ….. மக்கு மீன், என்னைப் பொங்கப் பொங்கச் சிரிக்கவைத்துவிட்டான்! என்னைக் கேட்டால் சொல்வேன், ஒரு நாயைக் கூட முத்தமிட்டாலும் முத்தமிடுவேன், ஆனால் மார்ஃபாவைப் போய்,” என்றார் அகிநீவ். அவர் சுற்றிலும் பார்த்தார்; இளநிலை வரிக் கணக்கீட்டாளர் மிகச்சரியாக அவரின் பின்னால்தான் நின்றார்.
”வான்கினைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம், “ என்றார். “மக்கு மீன், அவன் தான்! அவன் சமையலறைக்குள் வந்தானா, மார்ஃபாவின் பின்னால் நான் நிற்பதைப் பார்த்தானா, முட்டாள்தனமாகக் கதை கட்டத் தொடங்கிவிட்டான்.  “நீங்கள் ஏன் முத்தமிட்டீர்கள்?” எனக் கேட்கிறான். ஒரு துளி அதிகமாகத்தான் அவன் குடித்திருக்கவேண்டும். `மார்ஃபாவை விட நான் வான்கோழியின் பின்புறத்தைக் கூட முத்தமிட்டிருப்பேன்,` என்றேன், நான். “அதுமட்டுமில்லை, முட்டாளே, எனக்கென்று ஒரு மனைவி இருக்கிறாள், “ என்றேன். உண்மையிலேயே அவன் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டான்!”
“யார் உங்களை ஆச்சரியப்படுத்தியது?” எனக் கேட்டவாறே, பள்ளியில் மதநூல் கற்பிக்கும் பாதிரியார், அகிநீவிடம் வந்தார்.
“வான்கின். நான் சமையலறையில் நின்றுகொண்டிருந்தேனா, அதுதான், ஸ்டர்ஜியானைப் பார்த்துக்கொண்டு … … “
இப்படியே தான் போய்க்கொண்டிருந்தது. அரைமணி நேரம் போல ஆகியிருக்கும் ஸ்டர்ஜியான் – வான்கின் சம்பவத்தைப் பற்றி விருந்தினர் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
“இப்போது சொல்லட்டும் அவன்!” எனக் கறுவிக்கொண்டார், அகிநீவ், உள்ளங்கைகளை உரசித் தேய்த்துக்கொண்டே. “சொல்லட்டும் அவன்! கதையை அவன் சொல்லத் தொடங்கும் முன்பாகவே எல்லோரும் அவன் மூஞ்சியில் அடித்த மாதிரியில், “போதும், முட்டாளே, உன் அடாவடி முட்டாள் தனம், அதைப்பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும்!” என்பார்கள்.
அத்துடன் அகிநீவ் `அப்பாடா` என ஆசுவாசமாகி, அந்த மகிழ்ச்சியிலேயே எத்தனையோ அதிகமான நான்கு கோப்பைகள் குடித்தார். இளம் மணமக்களை அவர்களின் அறைக்கு அனுப்பிவைத்துவிட்டு, அவர் படுக்கையில் போய் விழுந்து ஒரு பச்சைக்குழந்தையைப் போல உறங்கி, மறுநாள் காலை அந்த ஸ்டர்ஜியான் சம்பவத்தை நினைத்துப்பார்க்கக்கூட மறந்துவிட்டார். ஆனால்,   பரிதாபம்! மனிதன் ஏதோ ஒன்றினை நினைக்கிறான்; ஆனால்,  கடவுள் வேறு மாதிரி அல்லவா நினைக்கிறான்! ஒரு கெட்ட நாக்கு அதன் கெட்ட வேலையைச் செய்திருக்க, அகிநீவின் தந்திரமோ பலிக்கவில்லை. ஒரு வாரம் தான் கழிந்திருக்கும் – குறிப்பாகச் சொல்வதென்றால், புதன் கிழமை மூன்றாம் பாடவேளைக்குப் பின், ஆசிரியர் அறை நடுவில் நின்று, அகிநீவ், வைஸ்கின் என்ற மாணவனின் தீய மனப்போக்குகள் பற்றி விளக்கிக்கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியர் நேராக அவரிடம் வந்து தனியாக அழைத்துக்கொண்டு போய், “இங்கே பாருங்கள், செர்கெய் கபிட்டோனிச், “முதலில் என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும் … … … இது என் வேலையில்லை; ஆனால், எப்படியும் நான் உங்களுக்குப் புரியவைத்தேயாகவேண்டும்… … … அது என் கடமை. பாருங்கள், நீங்கள் அந்த, … .. அந்தச் சமையலரோடு .. .. காதல் களியாட்டமாடுவதாக வதந்திகள் வருகின்றன. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, ஆனால் அவளை உரசுவீர்களோ, முத்தமிடுவீர்களோ … … அது உங்கள் விருப்பம், ஆனால், அதை தயவுசெய்து, எல்லோருக்கும் தெரியும்படி செய்யாதீர்கள். உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்! நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதை மறந்துவிடாதீர்கள்.”              
அகிநீவ் குளிரில் விரைத்தது போலாகி உணர்வற்ற நிலைக்கு ஆளானார். தேன் கூட்டின் மொத்த ஈக்களிடமும் கொட்டு வாங்கிய ஒரு மனிதன் போல், கொதிநீரில் வெந்துபோன ஒரு மனிதனைப்போல அவர் வீட்டுக்கு நடந்துசென்றார். அவ்வாறாக அவர் நடந்துசெல்கையில் தார்ச்சட்டியைத் தலையில் கவிழ்த்துக் கறைப்பட்டுக்கொண்டது போல் மொத்த நகரமும் அவரையே பார்ப்பது போல அவருக்குத் தோன்றியது. வீட்டில்  புதியதான பிரச்சினை ஒன்று அவருக்காகக் காத்திருந்தது.    
”எப்போதும் போல சாப்பாட்டை விழுங்கித் தொலைக்கவேண்டியதுதானே, இன்றைக்கு என்ன ஆயிற்று?” என, உணவு மேஜையில் கேட்டாள், மனைவி. “ஏன் கிறக்கமாக இருக்கிறீர்கள்? உங்கள் காதல் களியாட்ட நினைப்போ? உங்கள் மார்ஃபா மீதான ஏக்கமோ? எனக்கு எல்லாம் தெரியும், முரட்டு மனிதனே! என்னுடைய உயிர்த் தோழிகள் என் கண்களைத் திறந்துவிட்டார்கள்! நீ – நீ - நீ! .. .. ..ஒரு காட்டுமிராண்டி !”
முகத்திலேயே அறைந்தாள், அவள். மேஜையிலிருந்து எழுந்த அவர், காலுக்குக் கீழாக பூமி நழுவிவிட்டது போலாகி, கோட்டும் தொப்பியும் மறந்து, வான்கின் வீட்டை நோக்கிப் புறப்பட்டார். அவனை அவன் வீட்டிலேயே பிடித்துவிட்டார்.
எடுத்த எடுப்பிலேயே, “ஏண்டா, அயோக்கியப்பயலே!” என்றவர், “இந்த ஊர் முழுவதும், என்மீது சேற்றை வாரி இறைத்திருக்கிறாயே, ஏண்டா இப்படி? என் மீது இந்த அவதூற்றினைக்  கிளப்பிவிட்டிருக்கிறாயே, ஏன்?” எனப் பொரிந்தார்.   
“என்ன அவதூறு? எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்?”
“மார்ஃபாவை நான் முத்தமிட்டதாக யார் வதந்தி கிளப்பியது? நீதானே? சொல்லுடா, நீதானே அது, திருட்டுப் பயலே?”
வான்கின் பேந்தப் பேந்த விழித்தான். அவனுடைய மறுமொழியின் ஒவ்வொரு முனையும் வெட்டி முறிக்கப்பட, புனிதச் சிற்பத்தை நோக்கி விழிகளை உயர்த்திய அவன், “உங்களைப் பற்றி நான் ஒரு வார்த்தை பேசியிருந்தாலும், கடவுள் என்னைத் தண்டிக்கட்டும்! என் கண்களைக் குருடாக்கட்டும்! என்னைத் தூக்கி வெளியே எறியட்டும் ! வீடு வாசல் இல்லாமல்  தெருத் தெருவாக அலைய வைக்கட்டும்! காலராவை விடவும் மோசமான நீக்கம்பு என்னைப் பீடிக்கட்டும்!” என்று சத்தியம் செய்தான்.
வான்கினின் வாய்மையில் எந்த ஐயுறவுக்கும் இடமில்லை. அந்த அவதூறினைக் கிளப்பியது அவனல்ல என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
“அப்படியானால் யார், அது யார்?” மனதுக்குள் யார் யாரையெல்லாமோ நினைத்து, மார்பில் அடித்துக்கொண்டு அகிநீவ் கலங்கித்தவித்தார். “அப்படியென்றால் யார்?” 
Source :  http://www.classicshorts.com/bib.html#slander 

அடவி சிற்றிதழில் வெளியானது.

Friday, 20 April 2018

சித்திரைப் பிறப்பு (அபுனைவு - 16)

சித்திரைப் பிறப்பு.
நாஞ்சில் நாட்டின் விவசாய வாழ்வில் சித்திரைப் பிறப்புக்கென ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை என்றாலே பரபரப்புதான்.
சித்திரைப் பிறப்பு அன்று காலையிலேயே குளித்து முழுகி, மாடுகளையும் குளிப்பாட்டிக் கட்டி, கனி காணுதல் முடித்து, சர்க்கரை அவல், தேங்காய்த்துவையல் போட்டு விரவிய எரிப்பு அவலுமாகக் காலை உணவு முடித்தாலும் விவசாயம்தான் அவன் நெஞ்சுக்குள் துடித்துக்கொண்டிருக்கும்.
நான் சொல்கிற அறுபது மற்றும் எழுபதுகளில் விவசாயி, ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட்ட காலம் அது; மாநில அரசும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு பசுமைப் புரட்சி, பசுமைப் புரட்சியெனக் கோஷமிட்டுக்கொண்டிருந்தன. கோவை, ஆடுதுறை, அம்பாசமுத்திரம், திண்டிவனம் என தமிழ்நாட்டில் மட்டும் 14 நெல் ஆராய்ச்சி நிலையங்கள் நாளும் ஏடிடி 32, கோ 1, ஐஆர் 8, ஐஆர் 20, ஏஎஸ்டி 14, டிவிஎம் எனப் புதிதுபுதிதாக நெல், கரும்பு, பயறுவகை எனப் பல்வேறு பயிர் ரகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தன. விவசாயத்துறையில் புதிது புதிதாக தென்னைக்கென்று ஒன்று, கரும்புக்கென்று ஒன்று எண்ணெய் வித்துக்களுக்கென்று ஒன்று, தீவிர விவசாயத்துக்கென்று ஒன்று எனப் புதியபுதிய அலுவலகங்கள் முளைத்துக்கொண்டிருந்தன. அநேகமாக அனைத்து விவசாயிகளின் வீடுகளிலும் பாலுக்குப் பசு அல்லது எருமையும் உழவுக்கென ஓரிணை காளை மாடுகள் அல்லது கருமத்த மாடுகள் என்கிற எருமைக் கடாக்களும் இருந்தன. பெருங்கொண்ட விவசாயிகள் பத்துப் பதினைந்து இணை எருமைக் கடாக்கள் பராமரித்தனர். ஊருக்குள்ளேயே வீட்டை அடுத்து இரண்டு ஆள் ஆழத்துக்குங்கூடப் பெரிய பெரிய சாணிக்குண்டுகள் இருந்தன. தெருவில் கிடக்கும் சாணத்தையும் சிலர் சேகரித்து குண்டுகளில் சேர்த்துவிடுவர்.
ஆவணி, புரட்டாசியில் நடவான வாசறுமுண்டான், செந்தி போன்ற நெற்பயிர்கள் அனைத்தும் தை மற்றும் மாசி மூன்றாம் வாரத்துக்குள் அறுவடை முடியும். அறுவடை முடிந்ததும் அப்பாடா என்று ஓய்ந்துவிடமுடியாது. மாசி பங்குனி வெயில் காலத்தில் அடுத்த விதைப்புக்கான முன் தயாரிப்புகள் தொடங்கிவிடும்.
நாஞ்சில் நாட்டில் அறுவடையின் போது இதர பகுதிகளைப் போல நெற்பயிரின் தாளினை தரையோடு தரையாக அறுத்தெடுப்பதில்லை. ஈர நிலமென்பதால் அப்படி அறுத்தெடுக்கவும் இயலாது. குறைந்தது ஒரு கைப்பிடி உயரத்துக்காவது தாள் தரையிலேயே நிற்கும்.
அந்த அடித்தாள் முழுவதையும் அகற்றும் பணி முதலில் தொடங்கும். அதைத் `தாள் பொறுக்குதல்` என அழைப்பர். அத்தனை தாளினையும் கைகொண்டு பிடுங்கி வரப்போரங்களில், வயல்நடுவில் வசதிக்கேற்பக் குவியல் குவியலாகக் குவித்து மாலையில் வீட்டுக்குக் கிளம்பும்போது நெருப்பு வைத்துக் கொளுத்திவிடுவர். இப்பணியை அறுவடை முடிந்து நிலம் ஈரமிழந்து நல்ல காய்ச்சலிலிருக்கும்போதே முடித்துவிட வேண்டும். கொஞ்சம் சோம்பலாக இருந்துவிட்டால் பங்குனியின் முதல் கோடை மழை வந்துவிடலாம். அப்படி மழை பெய்துவிட்டால் நிலம் களியாகி, தாள் நனைந்து தாளைப்பிடுங்குவது சிரமமாகிவிடும். அப்படியான சமயங்களில் உழுத பின்பு, தாள்களைப் பொறுக்கிக் கொளுத்துவர்.
ஊருக்குள்ளும் வயல்களுக்கு நடுவேயுள்ள சாலையோரங்களிலும் குண்டுகள் எனப்படும் எருக்குழிகளில் சேர்த்து வைத்திருக்கிற மாட்டுச் சாணம் மற்றும் இயற்கை உரம் முழுவதும் வயல்களுக்குச் சென்று சேரவேண்டும். சில ஊக்கமுள்ள விவசாயிகள் ஆடி, ஆவணியில் குளத்தில் சேரும் பாசிவகைகளை ஆள்விட்டு அரித்து அதையும் உரக்குண்டுகளில் போட்டு செம்மண்ணால் மூடி உரமாகத் தயாரித்திருப்பார்கள்.
இரவும் பகலுமாக அத்தனை உரமும் மாட்டு வண்டிகளிலும் தலைச்சுமையிலுமாக வயலுக்குள் கொண்டு சேர்த்துப் பின் வயலின் அனைத்துப் பக்கமும் ஒரு சேரப் பரவலாகச் சிதற வேண்டும். ஒரு சிலர் குளத்து வண்டல் மண் எடுத்து வயலுக்குப் போடுவார்கள். இந்தப் பணி முழுவதுமாக முடித்துவிட்டு உழுவதற்காக கோடையின் முதல் மழைக்காகக் காத்திருப்பார்கள்.
மழை விழுந்ததோ இல்லையோ ஊர் மொத்தமும் மாடுகளும் கலப்பையுமாக வயல்பத்தில்தான் பார்க்கமுடியும். உழுது முடித்து அடுத்த மழைக்குக் காத்திருப்பார்கள். பங்குனியிலேயே இரண்டாம் மழையும் கிடைத்துவிட்டால் இன்னும் மகிழ்ச்சி. இரண்டாவது உழவும் முடித்து சித்திரை பத்துக்குக் காத்திருப்பார்கள்.
காத்திருப்பதென்றால் என்னவென்று கேளுங்கள். ஊர்ச் சந்தி, கோயில் முகப்புகள், திண்ணை, படுப்புரைகள், ஒடுத்திண்ணைகள் எல்லாவற்றிலும் மட்டுமில்லை, ஆறு குளங்களில் மாடு குளிப்பாட்டும்போதும், அவர்கள் குளிக்கும்போதும் பேச்சு எதைப்பற்றியதாக இருக்குமென்கிறீர்கள். மழை பற்றியதாகத் தான் இருக்கும்.
சித்திரை பத்தாம் நாள், எங்கள் கிராமத்திற்கு முக்கியமான நாள். அன்று காலையில் அழகம்மன் கோயிலிலுள்ள ஜெயந்தீசுவரர் கருவறை லிங்கத்தின் மீது கதிரொளி விழும். அன்று விதைப்புக்கேற்ற பருவத்தில் மழை கிடைத்துவிட்டால் பெருமகிழ்ச்சி. அந்த ஓரிருநாள் இடைவெளியில் எப்படியும் மழை பெய்துவிடும். அப்படியொரு புவியியல் அமைப்பில் தான் எங்கள் கிராமங்கள் இருந்தன.
மழை பெய்த மறுநாள் காலையிலேயே உழவு ஏர்களுடன் வித்தும் கையுமாக வயலில் நிற்பார்கள். ஒரு முறை காலையில் மழை பெய்தது. அன்று மதியத்துக்கு மேல் ஒரு சில அனுபவசாலிகள் உழுது விதைக்கத் தொடங்கிவிட்டார்கள். கட்டிச்சம்பா தான் விதைப்பார்கள்.
முந்தைய பூவிலேயே வித்துக்குத் தேவையான நெல்லை போதுமான பக்குவத்தில் உணர்த்தி, புங்க இலைகள் சேர்த்து விரவி மூட்டைகளில் வைத்திருப்பார்கள். அந்தப் பச்சை நெல்லை அப்படியே கொண்டு போய்த் தூவி விதைப்பதுதான். இந்த மாதிரியான விதைப்பினை பொடி விதைப்பு என்கிறார்கள். நெல்லைப் பகுதியிலும் சரி, வேறு எங்கும் இப்படி விதைப்பதாகத் தெரியவில்லை.
தொழி விதைப்பு மற்றும் நாற்றுப் பாவுவதற்கென்றால் நெல்லை கோணியோடு சேர்த்துக் குறுக்கும் மறுக்குமாக இறுகக்கட்டி ஆறு குளங்களுக்குள் அமிழ்த்தி வைப்பார்கள். சிலர் வீட்டிலேயே அப்படி வைத்திருந்து காயக் காய தண்ணீர் ஊற்றிக்கொண்டிருப்பார்கள். ஒரு முழுநாள் கழிந்தபின்பு மறுநாள் பார்த்தால் எல்லா நெல்லிலும் முளை வந்திருக்கும். அதைக் கொண்டு போய் நன்கு தொழி கலக்கியிருக்கும் வயலில் விதைப்பார்கள். இந்தச் சித்திரைப் பருவத்தில் தொழி விதைப்பு என்பது கிடையாதென்றே கூறிவிடலாம்.
அப்படியாகப் பொடி விதைப்பு செய்தபின்பும் மூன்று முதல் ஏழு நாட்கள் வரையில் மரம் (பரம்பு) அடிப்பார்கள். இதை மூன்றாம் கொம்பு மரம், ஐந்தாம் கொம்பு மரம் எனப் பரம்படிக்கும்போது களிக்கட்டிகள் எல்லாம் உடையும். உடையாத கட்டிகளைப் பொறுக்கி மரத்திலேயே அடித்து உடைப்பதுமுண்டு. ஐந்தாம் நாளில் மண்ணைக் கொஞ்சம் கிளறிப்பார்த்தால் நெல் முளை விட்டிருப்பது தெரியும். ஏழாங்கொம்புக்குப் பிறகு மரம் அடிப்பதில்லை. அப்படி அடித்தால் முளை முறியும்.
அப்படி முளைத்த நெல் வைகாசி 15 வரையில் தண்ணீர் எதுவும் பாய்ச்சாமலேயே வளர்ந்துவிடும். வைகாசி 15 ல் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளிலிருந்து புத்தனாற்றில் தண்ணீர் திறப்பார்கள். அந்தத் தண்ணீரைக் குளங்களில் தேக்கி, வாய்க்கால்கள் மூலம் வயலுக்குப் பாய்ச்சிக் கொள்வார்கள். இப்படிப் பாய்ச்சுகிற தண்ணீரைக் காச்ச வெள்ளம் (காய்ந்துகிடக்கிற பயிருக்கு, நிலத்துக்குப் பாய்ச்சுகிற வெள்ளம்) என்பார்கள். காச்ச வெள்ளம் பாய்ச்சும்போதுதான் உனக்கு முந்தி, எனக்கு முந்தி, மேல் மடை, கீழ் மடை, கடைமடை என்று தகராறு வரும். அதுவும் ஒரு மாதிரியாக முடிந்துவிட்டால் பிறகு தண்ணீரைப் பிள்ளைத் தொழி வாடாமல் நிலையாக நிறுத்தத்தொடங்கிவிடுவார்கள்.
முதல் களையெடுத்து முடித்த பின், பாக்டம்பாஸ் மிக்சர் தூவுவதுண்டு. இந்த நேரத்தில் பயிர் நன்கு பிடித்து கரும் பச்சைக்கு மாறும்.
சில நேரங்களில் பரவலாக முளைக்காமல் குப்பல் குப்பலாக முளைத்தும் சில இடங்கள் காலியாகக் கிடந்தாலும் குப்பலிலிருந்து தொழியோடு எடுத்து இடைவெளிகளை நிரப்புவார்கள். இதை `ஊடு கோரிப் போடுதல்` என்போம். இதற்கெனத் தனி மண்வெட்டி உண்டு. மண்வெட்டியின் நீள அகலம் பத்து அங்குலத்துக்கும் குறைவாகவும் பிடி மட்டும் ஆள் உயரத்துக்கு நீண்டும் இருக்கிற ஊடு மம்பட்டி – வட்டவடிவக் களைக் கொட்டு போல உயரமான கைப்பிடியுடனிருக்கும்.
சித்திரைபற்றிப் பேச வந்த கட்டுரை சாகுபடிக்குப் போய்விட்டது. ஆகச் சித்திரை முழுதும் விதைப்பும் கொம்பு மரம் அடிப்பதுமாகத்தான் பொழுது கழியும். இதன் நடுவிலேயே சித்ரா பவுர்ணமி, நைனார் நோன்பு, இருக்கிறது. பவுர்ணமிக்கு பத்திரகாளியம்மன் வாகனம் எடுப்பித்து மிகப் பெரிய அளவில் ஊட்டுக்குச் சமானமாக சிறப்பு நடக்கும்.
சிறுவர்களுக்கு கோடை விடுமுறை. பங்குனியில் பட்டம் விடுவதற்கு வசதியாக இருந்த வயல் பத்தில் சித்திரையில் விதைக்கத் தொடங்கிவிடுவதால் பம்பரத்துக்கு மாறுவார்கள்.
இப்போது விவசாயத்தை அரசு முற்றிலுமாகக் கைகழுவிவிட்டது. விவசாயி தற்கொலை மனநிலையில்.
முகநூல் பதிவு 20.04.2018. விருப்பம் 60, பகிர்வு 6 

Monday, 9 April 2018

அமெரிக்கச் சிறுகதை - 10 - நண்பர்கள் ஆங்கிலம் : லூசியா பெர்லின் Friends : Lucia Berlyn

நண்பர்கள் ( Friends ) – ஆங்கிலம் : லூசியா பெர்லின், ( அமெரிக்கா.) Lucia Berlin – தமிழில் : ச. ஆறுமுகம்.


லூசியா பெர்லின் (1936 – 2004)
1960, 70, 80களில் மிகவும் அறிவு பூர்வமாகப் புனைவுகளைப் படைத்த லூசியா பெர்லினுக்கு மிகச் சிறிய வாசகர் வட்டமே அமைந்திருந்தது. அவர் இறந்து பதிபொரு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கதைகள் பிரபலமடைந்துள்ளன. லூசியாவின் படைப்புகள் கனடாவின் ஆலிஸ் மன்றோ, ருசியாவின் செகாவ் போன்றோரின் படைப்புகளுக்கு இணையான இடத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவையெனத் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள `நண்பர்கள்` கதை, புதுமைப்பித்தனின் செல்லம்மாள், ஆலிஸ் மன்றோவின் `மலைமேல் வந்தது, கரடி` கதைகளோடு இணைத்துச் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.
*****
சாமின் உயிரைக் காப்பாற்றிய நாளில்தான் அன்னாவையும் சாமையும் லொரேட்டா சந்தித்தாள்.
அன்னாவும் சாமும் முதியவர்கள். அவளுக்கு 80, அவரோ 89. பக்கத்து வீட்டு எலெயினின் நீச்சல் குளத்துக்கு லொரேட்டா நீச்சலுக்குச் செல்லும் நாட்களில் அவ்வப்போது அன்னாவைப் பார்த்திருக்கிறாள். ஒருநாள் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு வயதான முதியவரை நீச்சலுக்கு இணங்கவைக்க முயலும்போது அவள் நின்று கவனித்தாள். கடைசியில் அவர் ஒப்புக்கொண்டு, இறுக்கமான முகத்தோடு நாய் நீச்சலில் கைகளைத் தப்படித்தபோது கைகால்கள் இழுத்துக்கொண்டன. குளத்தின் ஆழமற்ற முடிவுப் பகுதியில் நின்ற அந்த இரண்டு பெண்களும் இதைக் கவனிக்கவில்லை.
லொரேட்டா, காலணிகளைக்கூடக் கழற்றாமல் அப்படியே குளத்தில் குதித்து அவரைப் படிக்கட்டுக்கு இழுத்து, குளத்துக்கு வெளியேயும் கொண்டுவந்தாள். அவருக்கு இதய மீளுயிர்ப்புச் சிகிச்சை எதுவும் தேவைப்படவில்லை; பயத்தில் கைகால்கள் ஓடவில்லை; அவ்வளவுதான். வலிப்பு நோய்க்கான சில மருந்துகளை அவர் உட்கொள்ளவேண்டியிருந்தது.
மூன்று பெண்களுமாக அவருக்கு உடல் துவர்த்தவும் ஆடைமாற்றவும் உதவிசெய்தனர். அவர் நல்லநிலைக்குத் திரும்பி, அந்தக் கட்டிடத் தொகுதியின் அருகாகவேயிருந்த அவர்களுடைய வீட்டுக்கு நடந்துசெல்லமுடிகிற வரையில் அவர்கள் எல்லோரும் அங்கேயே அமரவேண்டியிருந்தது. லொரேட்டா, அவரது உயிரைக் காப்பாற்றியதற்காக, அன்னாவும் சாமும் நன்றி கூறிக்கொண்டேயிருந்ததுடன் மறுநாள் மதிய உணவுக்கு அவர்கள் வீட்டுக்கு வந்தேயாகவேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.
அடுத்த சில நாட்களுக்கு அவள் வேலைக்குச் செல்லமுடியாதபடியாக இருந்தது. கண்டிப்பாகச் செய்தேயாகவேண்டிய சில விஷயங்கள் இருந்ததால், அவள் மூன்று நாட்கள் ஊதியமில்லாத விடுப்பு எடுத்தாள். அவர்களுடனான மதிய உணவு என்பது நகரத்திலிருந்து பெர்க்கிலி சென்று திரும்பும் தூரத்தை உள்ளடக்கியதென்பதோடு திட்டமிட்ட நாளில் எல்லாவற்றையும் செய்துமுடிக்கமுடியாமலுமாகும்
இது போன்ற நிலைமைகளில் அவள் கையற்றுப் போவதாக உணர்கிறாள். நீங்கள் ஐயோ என உங்களுக்குள்ளாகவே புலம்பிக்கொள்வீர்களே அதைத்தான் அவளும் செய்துகொள்ளமுடியும், அது அவ்வளவு நல்லது. நீங்கள் அதைச்செய்யவில்லையெனில் குற்றவுணர்வுகொள்வீர்கள்; அதைச் செய்தாலோ பலவீனமாக உணர்வீர்கள்.
அவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்த கணத்திலேயே அவள், அவநோக்கு மனநிலையை மாற்றிக்கொண்டாள். வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர்கள் வாழ்ந்த பழங்கால மெக்சிகோ வீட்டைப் போலவே, அந்த வீடும் விரியத் திறந்ததாக நல்ல வெளிச்சத்துடனிருந்தது. அன்னா தொல்லியலாளராகவும் சாம் பொறியாளராகவும் இருந்தனர். டியோட்டிஹ்யாகன் மற்றும் பிற தொல்லியல் தளங்களில் அவர்கள் இணைந்தே பணியாற்றியிருந்தனர்.
அவர்களின் குடியிருப்பு, அருமையான ஒரு நூலகத்துடன் அழகிய மண்கலங்கள், புகைப்படங்கள் நிறைந்து விளங்கியது. படிக்கட்டில் இறங்கியதும் பின்புறப் பகுதியில் ஒரு பெரிய காய்கறித் தோட்டம், பலவகைப் பழ மரங்கள் மற்றும் பேரிவகைத் தாவரங்கள். லொரேட்டாவுக்கு ஒரே வியப்பு; பறவைகளைப்போல மென்மைகொண்ட அந்த இருவரும் அவர்களின் வேலைகளை அவர்களாகவே செய்துகொள்கின்றனர். இருவருமே கைத்தடி கொண்டு, மிகவும் சிரமத்துடனேயே நடந்தார்கள்.
மதிய உணவுக்கு வதக்கிய பாலாடைக்கட்டி பொதியப்பம், சௌசௌ சூப் மற்றும் அவர்களின் தோட்டத்துக் காய்களைக் கொண்டு ஒரு கலவை. அன்னாவும் சாமும் இருவருமாகவே சேர்ந்து உணவு தயாரித்து, மேசையை அழகுபடுத்தியிருந்ததோடு, அவர்களாகவே பரிமாறினர்.
ஐம்பது ஆண்டுகளாகவே, இருவரும் இணைந்தே எல்லாக் காரியங்களையும் செய்துவருகின்றனர். இரட்டைக் குழந்தைகளைப் போல, அவர்கள் ஒருவரையொருவர் எதிரொலித்தார்கள் அல்லது ஒருவர் தொடங்கும் வாக்கியத்தை மற்றவர் முடித்தனர். மதிய உணவு மகிழ்வாக நிகழ்ந்தது; அவர்கள் மெக்சிகோவிலுள்ள பிரமிடுவிலும் பிற அகழாய்வுத் தளங்களிலும் பணியாற்றிய அனுபவங்கள் சிலவற்றை ஒருசேர ஸ்டீரியோ ஒலிபெருக்கி போல அவளுக்குச் சொன்னார்கள். அந்த இரு முதியவர்களால், அவர்கள் பகிர்ந்துகொண்ட இசை மற்றும் தோட்டக்கலை ரசனையால், அவர்கள் ஒருவர் மீதொருவர் கண்டுகொண்ட இன்ப அனுபவத்தால், லொரேட்டா முழுவதுமாக அவர்கள்பால் ஈர்க்கப்பட்டாள்.
அவர்கள் இருவரும் உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் முழுவதுமாகக் கலந்துகொண்டு, ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பு நிகழ்வுகளுக்குச் செல்வதும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஊடகச் செய்தியாளர்களுக்கு அஞ்சல்கள் எழுதுவதும், தொலைபேசியில் பேசுவதுமாக இருப்பதைக் கண்டு அவள் வியப்புகொண்டாள். ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு செய்தித்தாள்களை அவர்கள் வாசித்தனர்; இரவுகளில் ஒருவருக்கொருவர் நாவல்கள் அல்லது வரலாற்று நூல்களை வாசித்துக் காட்டினர்.
நடுங்கும் கைகளோடு சாம் மேசையைச் சுத்தம்செய்யும்போது, லொரேட்டா, அன்னாவிடம் இப்படியொரு நெருக்கமான வாழ்க்கைத் துணை அமைந்திருப்பது எத்துணை பொறாமைகொள்ளச்செய்கிறதென்றாள். ஆமாம், என்ற அன்னா, ஆனால், சீக்கிரமே எங்களில் ஒருவர் போய்விடுவோம் போலிருக்கிறதென்றாள்.
அந்த அறிக்கைச் சொற்றொடரை லொரேட்டா நிரம்ப நாட்களுக்கு நினைவுவைத்து, அவர்களில் ஒருவர் மரணிக்கும் காலத்துக்கு எதிராக ஒரு ஆயுள் காப்பீடு போல அன்னா அவளோடு ஒரு நட்பினை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினாளோவென வியந்தாள். ஆனால், அது அப்படியில்லையென்றும், அது இன்னும் மிக எளிய ஒன்று என்றும் அவள் நினைத்தாள். அவர்கள் இருவருமே போதிய தற்சார்பு மற்றும் தன்னிறைவு கொண்டவர்களாகவும் வாழ்க்கை முழுவதுமே ஒருவர் மற்றவருக்காகப் போதுமான அளவுக்கு ஈடுகொடுப்பவர்களாகவும் இருந்துவந்திருக்கின்றன்; ஆனால் சாம் இப்போதெல்லாம் அடிக்கடி கனவுவயப்படுவதுடன் தொடர்பற்றுப் பேசுபவராகவும் மாறிக்கொண்டிருக்கிறார்.
ஒரே கதையை மீண்டும் மீண்டுமாகச் சொல்கிறார்; அன்னா எப்போதுமே அவரிடம் பொறுமையோடுதானிருக்கிறாளென்றாலும் பேச்சுத் துணையாக இன்னுமொருவர் இருந்தால் அன்னா மகிழ்ச்சிகொள்வாளென லொரேட்டா உணர்ந்தாள்.
காரணம் எதுவாக இருந்தாலும், சாம் மற்றும் அன்னாவின் வாழ்க்கையில் மேலும் மேலுமான ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அவர்களால் மேற்கொண்டு கார் ஓட்டமுடியவில்லை.
லொரேட்டா வேலையிலிருக்கும்போது, தொலைபேசியில் அன்னா, தோட்டத்திற்கான நார்க்கழிவு வாங்கிவருமாறோ, சாமை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறோ கூறுகிறாள். சிலநேரங்களில் அவர்கள் இருவருமே கடைக்குச் செல்ல முடியாதது போல் உணர்ந்ததால், அவர்களுக்காக லொரேட்டா பொருட்கள் வாங்கிவரவேண்டியிருந்தது. அவர்கள் இருவரையும் அவள் விரும்பியதோடு அவர்களை நினைத்து வியந்து பாராட்டவும் செய்தாள். அவர்கள் துணைக்கு ஏங்குவதாகத் தோன்றியதால், அவள் வாரம் ஒருமுறையோ மிகவும் அதிகபட்சம் இரண்டு வாரத்துக்கொருமுறையோ அவர்கள் வீட்டு இரவு உணவுக்குச் சென்றுவிடுவாள்.
சிலவேளைகளில் அவர்களைத் தன் வீட்டுக்கு இரவு உணவுக்கு வருமாறு அழைத்தாள்; ஆனால், அவள் வீட்டுக்கு அதிகம் படியேறவேண்டியிருந்ததோடு, மேலே வந்ததும் அவர்கள் முழுவதுமாகச் சோர்ந்துவிட்டதால் அவள் அதை நிறுத்திக்கொண்டாள். அதனால் அவள், அவர்கள் வீட்டுக்கு மீன், கோழி அல்லது பாஸ்தா உணவு எதையாவது கொண்டுசெல்வாள். இரவு உணவோடு சேர்த்து அருந்துவதற்காக, அவர்கள் காய்கறிக் கலவை தயாரித்து, தோட்டத்துப் பேரிவகைகளுடன் பரிமாறுவார்கள்.
இரவு உணவுக்குப் பின்னர், கோப்பை கோப்பைகளாக, புதினா அல்லது ஜமைக்கா தேநீருடன் மேசையில் சுற்றி அமர, சாம் கதைகள் சொல்வார்.
யுகேட்டான் காட்டுக்குள் அகழப்பட்ட தளம் ஒன்றிலிருக்கையில் அன்னாவை வாத நோய் தாக்கியபோது அவளை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள், அங்கிருந்த மக்கள் எவ்வளவு அன்பும் இரக்கமும் நிறைந்தவர்களாயிருந்தார்கள் என்பது பற்றியது. க்சாலப்பாவில் அவர்கள் கட்டிய வீட்டைப் பற்றித்தான் அநேகக் கதைகள். மேயரின் மனைவி, பார்வையாளர் ஒருவரைத் தவிர்ப்பதற்காக சாளரம் ஒன்றிலேறிக் குதித்ததில் காலை உடைத்துக்கொண்டாராம். சாமின் கதைகள் எப்போதுமே “ அது எனக்கு அந்தக் காலத்தை நினைவுபடுத்துகிறது……” எனத் தொடங்கின.
சிறிது சிறிதாக, அவர்களின் வாழ்க்கைக் கதை முழுவதும் லொரேட்டாவுக்கு மனப்பாடமாயிற்று.
டாம் சிகரத்தில் அவர்களின் பிணைப்பு. அவர்கள் பொதுவுடைமைவாதிகளாக இருந்தபோது நியூயார்க்கில் ஏற்பட்ட காதல். பாவத்திலேயே வாழ்ந்தது. அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேயில்லை. அந்த மரபுமீறிய தன்மைக்காக அவர்கள் அப்போதும் பெருமிதமும் நிறைவும் கொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் தூரத்து நகரங்களில் இருந்தனர். குழந்தைகள் சிறியவர்களாக இருந்தபோது கலிபோர்னியக் கடற்கரையான பெரிய சூர் அருகிருந்த கால்நடைப் பண்ணை பற்றியும் கதைகள் இருந்தன. ஒரு கதை முடியும் போது லொரேட்டா சொல்வாள், “ எனக்கு இங்குவிட்டுப் போவதற்கு வெறுப்பாகத் தானிருக்கிறது. ஆனால், நாளை காலை சீக்கிரமாகவே வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது.” அப்படியே புறப்பட்டுவிடுவாள்தான்.
இருந்தாலும் சாம் சொல்வார், “ கையால் சுற்றும் கிராமபோனுக்கு என்ன நிகழ்ந்ததென்று சொல்கிறேன், கேட்டுவிட்டுப் போயேன்.” நேரம் பிந்தி, ஓக்லாந்திலுள்ள அவள் வீட்டுக்கு காரோட்டிச் செல்லும்போது, இப்படியே போய்க்கொண்டிருக்க முடியாதென அவள் தனக்குள் சொல்லிக்கொள்வாள். அப்படியே அங்கு சென்றுவந்தாலும் அதற்கொரு குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும்.
அவர்கள் ஒருபோதும் சலிப்புறவோ அல்லது ஆர்வமற்றுப்போகவோ இல்லை. மாறாக, அந்த இணையர்கள் இருவரும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் மனதறிந்த தெளிவுடனும் முழுமையான ஒரு வாழ்க்கையினை வளத்தோடு வாழ்ந்தனர். கடந்துசென்ற அவர்களது உலகத்தின் மீது அவர்கள் அதீத ஆர்வத்துடன் விளங்கினார்கள். ஒருவருக்கொருவர் கூடுதல் விளக்கங்கள் அளிப்பதும் நாள் மற்றும் விவரங்கள் பற்றி விவாதிப்பதுமாக அப்படியொரு நல்ல பொழுது அவர்களுக்கு அமைந்தநிலையில், அவர்களுக்கிடையில் புகுந்து தடைப்படுத்தவோ அல்லது அவர்களை அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பவோ லொரேட்டாவுக்கு மனமில்லை.
அதுவே அவள் அங்கு செல்வதை நல்லதென உணரவும் செய்தது. ஏனெனில் அவளைப் பார்ப்பதில் அந்த இருவரும் அவ்வளவு மகிழ்ச்சி கொண்டார்களே! ஆனாலும் சில வேளைகளில், மிகுதியாக க் களைப்புற்றிருக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் செய்யவேண்டியதிருக்கும்போதோ அங்கு போகாமலிருக்கலாமேயென உணர்வாள். கடைசியில் அவள், மறுநாள் காலையில் மிகவும் கடினமாயிருப்பதால், அவ்வளவு பின்னேரத்துக்கு அவள் தங்கமுடியாதெனக் கூறுவாள். ஞாயிற்றுக்கிழமை காலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட பிரஞ்சுக்கு வா என்றாள்.
காலநிலை நல்லதாயிருக்கும்போது, அவர்களின் முன்பக்கத் தாழ்வாரத்தில் செடிகளும் பூக்களுமாகச் சூழ்ந்திருக்க, மேசை அமைத்து அதில் உண்டனர். பறவை உண்கலங்களில் அவர்கள் உணவினை இடுவதால் நூற்றுக்கணக்கான பறவைகள் அங்கு நேராகவே வந்தமர்ந்தன.
குளிர் அதிகமாகும்போது அவர்கள் உள்ளுக்குள்ளேயே இரும்பு அடுப்பில் சமைத்து அங்கேயே உண்டனர். அடுப்புக்குத் தேவையான விறகினை சாம், அவராகவே கீறியெடுத்து நெருப்பினைக் கவனித்துக்கொண்டார். அவர்கள் சிறுவகை அப்பம் அல்லது சாமின் சிறப்பு ஆம்லெட் சாப்பிட்டார்கள்; சிலவேளைகளில் மாவைக் கொதிக்கவைத்துச் செய்யும் பேகல் ரொட்டியும் அதனுடன் சல்மான் மீனின் வயிற்றுப்பகுதி மென்தசையோடு சேர்த்துண்ணும் லாக்சும் கொண்டுவருவாள்.
சாம் கதைகள் சொல்லச் சொல்ல, அன்னா அவற்றுக்குத் திருத்தமும் விளக்கங்களும் அளிக்க, ஒவ்வொரு மணி நேரமும் செல்லச் செல்ல, நாளும் கடந்துபோகும். சிலநேரங்களில் முன்பக்கத் தாழ்வார வெயிலில் அல்லது அடுப்பின் இதமான வெம்மையில் விழித்திருப்பது மிகவும் கடினமாகிவிடும்.
அவர்களின் மெக்சிகோ வீடு கான்கிரீட் செங்கல்களால் கட்டப்பட்டது; ஆனால், உத்தரங்களும் முன்பக்கக் கொடுக்கல் வாங்கல் இடங்களும் நிலையடுக்குகளும் தேவதாரு வகை செடார் மரத்தாலானவை. முதலாவதாக பெரிய அறை – அடுக்களை மற்றும் வசிப்பறை – கட்டப்பட்டது. அவர்கள் கட்டிடம் கட்டும் முன்பாகவே செடிகள், மரங்கள் நடத்தொடங்கியிருந்தனர். வாழை, இலந்தை வகைப் பிளம், ஜகரண்டா மரங்கள். அடுத்த ஆண்டு படுக்கையறை ஒன்றினைக் கட்டிப் பின் பல ஆண்டுகள் கழித்து மற்றொரு படுக்கையறையும் அன்னாவுக்காக ஒரு ஓவிய அறையும் அமைத்தனர்.
படுக்கைக் கட்டில்கள், வேலைசெய்வதற்கான விசுப்பலகைகள் மற்றும் மேசைகள் அனைத்தும் செடார் மரங்கள். மெக்சிகோவின் மற்றொரு மாநிலத்தின் களங்களில் பணியாற்றிய பின்னர் அவர்கள் அந்தச் சிறிய வீட்டிற்கு வந்தனர். வீடு எப்போதும் தண்மையாகவும் செடார் வாசனையோடும் ஒரு பெரிய செடார் பெட்டியைப் போலிருந்தது.
அன்னாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதில் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டியதாயிற்று. நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவள் இல்லாமல் சாம் எப்படிச் சமாளிப்பாரென்று, அவள் நினைவு முழுவதும் சாம் மீதுதானிருந்தது. வேலைக்குச் செல்லும் முன்பாகச் சென்று, சாம் மாத்திரை மற்றும் காலை உணவு சாப்பிடுவதைக் கவனித்துக்கொள்வதாகவும் வேலை முடிந்து வந்த பின்னர் இரவு உணவு சமைத்துக்கொடுப்பதாகவும், அவரை மருத்துவமனைக்கு அவளைப் பார்க்க அழைத்து வருவதாகவும் லொரேட்டா அன்னாவுக்கு உறுதிகூறினாள்.
இதில் அநியாயம் என்னவெனில், சாம் பேசவேயில்லை. லொரேட்டா அவருக்கு உடைமாற்ற உதவும்போது அவர் படுக்கையின் ஒரு ஓரமாக நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
எந்திரத்தனமாக அவர், காலை உணவுக்குப் பின் மாத்திரையை விழுங்கி, அன்னாசிச் சாற்றினைக் குடித்துவிட்டு கவனமாக வாயைத் துடைத்துக்கொண்டார். மாலையில் அவள் வரும்போது முன்பக்கத் தாழ்வாரத்தில் நின்று அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்; முதலில் மருத்துவமனைக்குப் போய் அன்னாவைப் பார்த்துவிட்டுப் பிறகு இரவு உணவினை உண்ணலாமென்றார்.
அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, அன்னா, அவளது நீண்ட வெள்ளைத் தலைமுடி ஒரு சிறுமியினுடையதைப் போல் இரட்டைச் சடையாகத் தொங்க, வெளிறிக் கிடந்தாள். நரம்பு வழியாகக் குளுகோசும் மருந்தும் ஏறிக்கொண்டிருக்க, உயிர்வளியும் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.
அவள் பேசவில்லை; ஆனால், புன்னகைத்தாள். சாம், ஒரு சுமை துணி துவைத்ததாகவும், தக்காளிக்குத் தண்ணீர் பாய்ச்சியதாகவும், பீன்ஸ் செடிகளுக்கு மண் அணைத்ததாகவும், சமையல் பாத்திரங்களைக் கழுவி வைத்ததாகவும் லெமனேடு தயாரித்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவள் சாமின் கையைப் பற்றிக்கொண்டாள். அவர் மூச்சுவிடாமல் ஒவ்வொரு மணித்துளியும் என்ன செய்தாரென்று பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் கிளம்பும் போது, அவர் தடுக்கித் தள்ளாடவே, லொரேட்டா, அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
காரில் வீட்டுக்குச் செல்லும்போது, அவர் மிகவும் கவலைப்பட்டு அழுதார். ஆனால், அன்னா வீட்டுக்கு நல்லபடியாகத் திரும்பி வந்தாள்; தோட்டத்தில்தான் வேலைகள் நிறைய இருந்தன. அடுத்த ஞாயிறு அன்று பிரஞ்ச் முடித்தபின்பு லொரேட்டா தோட்டத்தில் களையெடுத்து, கறுப்புப் பேரிக்கொடிகளை வெட்டினாள். உண்மையிலேயே அன்னா நோய்வாய்ப்பட்டுவிட்டால், என்னவாகுமென லொரேட்டா கவலைப்பட்டாள்.
இந்த நட்பில் அவளின் இடம் எது? அந்த இணையர் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும், அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் பெரும் அபாயத்திலிருப்பதும் அவளை துயர்கொள்ளச் செய்ததுடன் அவள் நெஞ்சை உருக்கவும் செய்தது.
அவள் வேலைசெய்துகொண்டிருக்கும்போதே இந்தச் சிந்தனைகள் அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தன; குளிர்ந்த கறுப்பு மண்ணும் அவள் முதுகில் பட்ட வெயிலும் அவளுக்கு இதமாக இருந்தன. பக்கத்துப் பாத்தியில் களையெடுத்துக்கொண்டிருந்த சாம் அவருடைய கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை லொரேட்டா அவர்களுடைய வீட்டுக்குத் தாமதமாகச் சென்றாள். அவள் அதிகாலையிலேயே எழுந்துவிட்டிருந்தாள் தான், இருந்தாலும் அவள் முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. அவள் உண்மையில் வீட்டிலேயே இருக்க விரும்பினாள்; ஆனால், அவர்களை அழைத்து அவர்களிடம் அங்குசெல்வதை ரத்துசெய்வதாகக் கூறுகின்ற இதயம் அவளுக்கில்லை.
வழக்கம்போல் முன் வாயிற் கதவு தாழிடப்பட்டிருக்கவே, அவள் பின்பக்கப் படிக்கட்டு வழியாகச் செல்ல தோட்டத்திற்குள் நுழைந்தாள். தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக உட்புறமாக நடந்துசென்றாள். தக்காளி, மஞ்சள் பூசணி, பனிக்காலப் பட்டாணியாகப் பசுமை நிறைந்து விளங்கியது. மயக்கத்தில் கிடந்த பட்டாணி.
அன்னாவும் சாமும் மேல்மாடி முன்மாடத்தில் வெளிப்புறமாக அமர்ந்திருந்தனர். லொரேட்டா அவர்களை அழைக்கலாமென எண்ணினாள்; ஆனால் அவர்கள் தீவிர உரையாடலிலிருந்ததாக அவளுக்குத் தோன்றியது.
”அவள் இதற்குமுன் இதுபோல் பிந்தியதே இல்லை. ஒருவேளை வரமாட்டாளோ.”
“ ஓஹ், வருவாள்,…இந்த காலை நேரங்கள் அவளுக்கு மிக முக்கியமானவை.”
“ ஐயோ பாவம். அவள் தனிமையில் தவிக்கிறாள். அவளுக்கு நாம் தேவைப்படுகிறோம். நாம்தான் அவளுடைய ஒரே குடும்பம்.”
”நிச்சயம் அவள் என் கதைகளை ரசிக்கிறாள். அன்பே, இன்றைக்குப் பார்த்து அவளுக்குச் சொல்வதற்கென எந்த ஒரு ஒற்றைக்கதைகூட நினைவிற்கு வரமாட்டேனென்கிறது.”
“எதாவது வரும்……”
“ஹல்லோ! வீட்டில் யாராவது இருக்கிறீர்களா?” என அழைத்தாள், லொரேட்டா. 

https://www.vice.com/en_au/article/read-a-story-from-lucia-berlins-a-manual-for-cleaning-women-0810 

Sunday, 8 April 2018

கிட்டிப்புள் என்னும் செங்கட்டை.

கிட்டிப்புள் என்னும் செங்கட்டை
கிட்டிப்புள், கில்லி எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்ட இந்த விளையாட்டு நாஞ்சில் நாட்டிலுள்ள எங்கள் கிராமத்தில் `செங்கட்டை` என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
முழநீள உருட்டுக் கம்புக்கு `தள்ளை` என்றும் இருபுறமும் கூராக்கப்பட்ட சிறுகம்புக்கு செங்கட்டை என்றும் பெயர்.
இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடப்படும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர். குழுவிலுள்ள ஒவ்வொருவருக்கும் எதிர் குழுவில் ஒருவர் போட்டியாளராக நியமிக்கப்படுவார்.
பரந்த மைதானம். நடுவில் ஒரு அரைமுழம் அளவில் ஒரு கோட்டுக்குழி தோண்டப்படும். அந்தக் குழியின் மேலாக செங்கட்டையை வைத்து தள்ளையைக் கொண்டு கோரவேண்டும். இதற்குக் கோருதல் என்றே பெயர். இந்த விளையாட்டின் விதிகளை எல்லாம் பதிவுசெய்வது இப்போது தேவையில்லாதது.
கோருகுழிக்கும் சிறுகட்டை விழுந்த இடத்துக்கும் இடையிலுள்ள தூரத்தை அளப்பதற்கு ஒரு தனி அளவுமுறை உண்டு. குழியிலிருந்து சிறுகட்டை நோக்கி, தள்ளையால் அளக்கப்படும். தள்ளையின் முதல் அளவு சாக்கொட்டான், அடுத்தது சாத்தியம் பற, அடுத்து முக்குறுணி, நாக்குறுணி, ஐங்குறுணி, ஆரஞ்சு, குளோஸ். அப்படி ஏழு அளவை முடியும் போது குளோஸ் 1 தொடர்ந்துள்ள தூரங்கள் எத்தனை குளோஸ் எனக் கணக்கிடப்படும். 50 குளோஸ் அல்லது 20 குளோஸ் என இலக்கு நிர்ணயித்துக்கொள்வார்கள். எந்த அணி அந்த இலக்கினை முதலில் அடைகிறதோ அது ஜெயித்த அணி.
இதற்குப் பிறகுதான் விளையாட்டின் உச்சகட்டம் ஆரம்பிக்கிறது. ஜெயித்த அணித் தலைவன் கட்டையை அடிக்க, அதை எதிரணித்தலைவன் பிடிக்கவேண்டும். பிடிக்க முடியவில்லையெனில் கோருகுழியின் அருகில் படுக்கைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் தள்ளையை நோக்கி எறிய வேண்டும். அதில் தள்ளையில் பட்டுவிட்டால் ஆட்டம் நிறுத்தப்படும். தள்ளையில் படாமல் தூரமாகப் போய்விழுந்தால் மீண்டும் ஆட்டம் தொடரும். அதன் பெயர் திகைதல், திகைக்கவைத்தல். திகைதல் நடக்கும் போது தோற்ற அணியின் ஒவ்வொருவர் மீதும் அவரது போட்டியாளர் குதிரை ஏறியமர்வார்.
வெற்றித் தலைவன் எவ்வளவு அதிகத் தூரத்துக்கு கட்டையை அடிக்க முடியுமோ அவ்வளவு அதிகத் தூரம் போகுமாறு செங்கட்டையைத் திறமையோடு அடிப்பான். திகைக்கும் தலைவனும் முழுத்திறமையோடு தள்ளையை நோக்கி வீசுவான். குதிரை ஏறும் அணியினருக்குக் கொண்டாட்டம். சுமக்கும் அணிக்குத் திண்டாட்டம். ஒரே கும்மாளம் தான்.
சாயங்காலம் 4.00 மணிக்குத் தொடங்கிய ஒரு ஆட்டமே முடிய இரவாகிவிடும். அவ்வளவுதான். வீட்டுக்குப் போய்விடுவோம். அநேகமாக பெரிய குளத்தங்கரையில் கோவிலை ஒட்டியுள்ள பெரிய மைதானத்தில் தான் இந்த ஆட்டம் நடக்கும்.
முபநூல் பதிவு 04.04.18.  விருப்பம் 146 பகிர்வு 48 பின்னூட்டம் 43

Saturday, 7 April 2018

சங்க இலக்கியத்துளிகள் - 16 - உள்ளின் உள்ளம் வேமே

சங்க இலக்கியத் துளிகள் - 16.
உள்ளின் உள்ளம் வேமே.
களவு – பாலை – உடன்போக்கு – மனைமருட்சி – மகள் தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிட்டதை உணர்கின்ற நற்றாய் தன் வீட்டில் இருந்தநிலையிலேயே மனம் அழிந்து வருந்துதல்.
உற்றார், உறவினர், தமர் அறியத் திருமணம் நடக்கவியலாத சூழ்நிலையில் தலைவன் தலைவியை உடன் போக்கில் கொண்டு கழிதலும், தலைவி உடன் செல்லுதலும் அறத்தாறு என்றே தமிழர் வரித்தனர். கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலையான என்பது தொல்காப்பியக் கற்பியல் சூத்திரம். கரணம் என்பது திருமணம்.
தலைவி, தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிடுகிறாள். தாயின் துயரத்துக்கு அளவேயில்லை; புலம்பித் தவிக்கும் நற்றாயிடம் அக்கம்பக்கத்தவர்கள், வேறென்ன செய்வது, இந்தத் துயரத்தையும் தாங்கிக்கொண்டுதான் உயிர்வாழ வேண்டுமென ஆறுதல் கூறுகின்றனர். அதைக்கேட்டு அந்த நற்றாய் மொழிவதான கூற்று :
எனக்கிருப்பது ஒரே மகள் தானே; அவளும் போர்த்திற வலிமையுடையவனும் எப்போதும் கூர்மைமிகு வேலினைக் கையில் கொண்டிருப்பவனுமாகிய இளங்காளை ஒருவனுடன் நேற்று பெரும் மலையின் கடத்தற்கரிய காட்டு வழியில் சென்றுவிட்டாள். நடந்தால் கண்ணின் மணியில் தெரிகின்ற பாவை தெருவில் இறங்கி நடைபழகுவதைப் போன்றவளாகிய இயல்பிலேயே அழகிய என் குறுமகள் விளையாடிய, நீலமணியைப் போன்ற அழகிய நொச்சி மரத்தினையும் தெற்றி மரத்தினையும் காணும்போதெல்லாம், அவள் நினைவு வரும். அவளை நினைத்து நினைத்து என் நெஞ்சு வெந்து சாகுமே! என்னைப் போய், இதைத்தாங்கிக் கொள் என அறிவுறுத்தும், அறிவுடைப் பெருமக்களே, இது முடிகிற காரியமா? ,
பாடல் :
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்;
'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! 5
உள்ளின் உள்ளம் வேமே- உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.
பாடியவர் பெயர் தெரியவில்லை. - நற்றிணை 184.
கூற்று மனை மருட்சி
கூற்றுவிளக்கம் : தலைமகன் தலைமகளைக் கொண்டு தலைக்கழிந்த பின் ஈன்ற தாய் புலம்பினள். அயலகத்து மாதர் அவளைத் தேற்றினர். இஃது அறத்தாறு என்றனர். அவ்வாறு கூறியோரிடம் `அவள் பிரிவை நான் எங்ஙனம் தாங்குவேன், அவள் விளையாடிய இடம் காணும்போதெல்லாம் என் உள்ளம் வேகின்றதே` எனக் கூறியது.
அடி நேர் உரை : ஒரு மகள் உடையேன் மன்னே – எனக்கு ஒரு மகள் தானே இருக்கின்றாள் ( நான் ஒற்றைப் பிள்ளைக் காரியாயிற்றே) ; அவளும் செருமிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு – அவளும் போர்த்திற வலிமையுடன் கூரிய வேற்படையினைத் தாங்கிய இளங்காளையோடு; பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள் – பெருமலையின் கடத்தற்கரிய காட்டுவழியில் நேற்று சென்றனள்; `இனியே, தாங்கு நின் அவலம் என்றீர் – இனிமேல் என்னசெய்ய இயலும், உன் துயரத்தை நீதான் தாங்கிக்கொள்ளவேண்டும் என்கிறீர்கள்; அது மற்று யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையோரே! – அது எப்படி இயலும்? அறிவுள்ள பெருமக்களே!; உள்ளின் உள்ளம் வேமே – நினைத்தாலே நெஞ்சம் வெந்து போகுமே; உண்கண் மணி வாழ் பாவை நடை கற்றன்ன – கண்ணின் மணியினுள் வாழ்கின்ற பாவை தெருவில் இறங்கி நடை பழகினாற் போன்ற; என் அணி இயற் குறுமகள் ஆடிய – அழகினை இயல்பாகவே உடைய என் இளமகள் விளையாடிய ; மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே. – நீலமணியின் அழகினை ஒத்த கருநொச்சிமரத்தையும் தெற்றி மரத்தையும் காணும் போது.
அருஞ்சொற்பொருள் : செரு – போர்த்திறம்; மொய்ம்பு – வலிமை; அருஞ்சுரம் – கடத்தற்கரிய காட்டு வழி; ஒல்லுமோ – இயலுமோ; உள்ளுதல் – நினைத்தல்; வேம் – வேகும், வெந்துபோகும்; உண்கண் மணி – கண்ணினுள் உள்ள மணி; பாவை – பிம்பம்; அணி – அழகு; இயல் – இயல்பாக; மணி – நீலமணி; ஏர் – அழகு, ஒப்ப எனும் உவம உருபு; தெற்றி – திண்ணை, மேட்டிடம், மாடம், சித்திரக்கூடம், மரவகை.
கவிதை நயம் : இப்பாடலின் நோக்கம் துயரத்தில் புலம்பும் நற்றாயின் துயரத்தினைத் தெளிவுறப் படம் பிடித்து உணர்த்துவதே.
எப்போதுமே தனக்கு நேர்ந்ததை, நிகழ்ந்ததைப் பெரிதுபடுத்திப் பேசுவதென்பது ஒரு சிலரின் இயல்பு. அதிலும் வயது முதிர்ந்த பெண்களின் துயர அரற்றலில் இதனை அதிகம் காணலாம்.
அவர்களுக்கு நிகழ்ந்த நன்மையெனில் அது மிகமிகச் சிறப்பு வாய்ந்ததெனப் பெருமிதம் பொங்கப் பேசுவதும், அவர்களுக்கேற்பட்ட துன்பமென்றால் அதைப் போன்ற துன்பம் உலகில் வேறெவருக்குமே நிகழ்ந்திருக்காது என்பதுபோல அரற்றுவதும் மற்றவரிடம் மேலதிக இரக்கத்தைக் கோருவதான ஒரு உளவியல் செயல்பாடு. இந்த உளவியல் இக்கவிதையில் சிறப்பாக வெளிப்படுகிறது.
நேற்றுத்தான் மகள் உடன் போக்கில் சென்றனள். அதனால் நெருநல் என்ற ஒற்றைச் சொல்லிலேயே தாயின் துயரம் திடீரெனப் பெருந்தீப்பட்டதுபோன்ற ஒன்றென்றும் அதனால் அளவு கடந்ததென்பதும் உணர்த்தப்படுகிறது. எனக்கு ஒரு மகள் தானே இருக்கிறாள். நான் ஒற்றைப் பிள்ளைக் காரியாயிற்றே என்ற தன்னிரக்கப் புலம்பல், என் துயரம் மற்றவர்களைப் போன்றதில்லை; ஒரு பிள்ளை போனாலென்ன அடுத்த பிள்ளை இருக்கிறது எனத் தேற்றிக்கொள்ள வழியேயில்லாத துயரமென்பதை மன்னே என்ற அசைச்சொல்லின் ஏகாரம் உணர்த்திவிடுகிறது.
மகளின் மேல் எந்தக் கோபமும் இல்லை; அவள் மீது எந்தப் பழிச்சொல்லும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தாயின் உள்ளம் மிகவும் கவனமாக இருக்கிறது. அதனாலேயே என் மகள் யாருடன் போயிருக்கிறாள் தெரியுமா? அவன் போர்த் திறமை மிக்க வலிமைவாய்ந்தவன்; அது மட்டுமல்ல எப்போதும் கூரிய வேற்படையைக் கையிலேயே வைத்திருக்கும் இளங்காளை. போர்த்திறம் மிகுந்த வலிமையும் கூரிய வேற்படையும் கொண்ட காளை என்று கூறுவதில் ஒரு பெருமிதம் தொனிக்கிறது.
அதே நேரத்தில் அவன் போர்த்திறமிக்க வலிமையுடைய இளங்காளை என்பதால் அவனோடு போரிட்டு மகளை மீட்கவும் இயலாத அவலநிலை இருப்பதும் வெளிப்படுத்தப்பட்டுவிடுகிறது.
மகள் சென்ற மலை பெருமலை; வழியோ கடத்தற்கரிய காட்டுவழி.
எல்லோரையும் போன்றவளில்லையாம் அவரது மகள்; இயல்பிலேயே அழகினைக் கொண்ட அவள் கண்ணின் மணிக்குள் வாழும் பாவையை ஒத்தவள்; அவள் நடப்பதே தனி அழகு! அந்தப் பாவை நடை பயிலும் சாயலைப் போலவே அவள் நடப்பாள் என அவளும் உயர்வு மிக்கவள் என்கிறாள்.
பொதுவாகவே பெண்கள் பிள்ளை வளர்ப்பு என்றாலே, நான் அவனை என் கண்ணுக்குள் வைத்தல்லவா வளர்த்தேன்` எனக் குறிப்பிடுவது வழக்கம். அந்த வழக்கத்தில், அவள் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறாளே என்ற பேச்சு நினைவில்தான் உண்கண் மணி வாழ் பாவை என்ற சொற்கள் பிறக்கின்றன. பாவையின் சாயலில் நடைகொண்டவள் பெருமலையின் கடத்தற்கரிய காட்டு வழியில் எப்படி நடந்துசெல்வாளோ என்ற துயரத்தையும் உள்ளடக்கியே அவளது மொழிகள் அமைகின்றன.
மகள் விளையாடிய மரத்தடியும் அந்த மேட்டுநிலமுங்கூட தனிச் சிறப்பும் உயர்வும் கொண்டவை என்பதை உணர்த்தவே மணி ஏர் நொச்சியும் தெற்றியும்.
இப்பாடலுக்கு உரை கண்ட பலரும் மணி ஏர் நொச்சி என்பதற்கு நீலமணி போன்ற பூக்களைக் கொண்ட நொச்சி என்றும் தெற்றி என்பதற்கு திண்ணை என்றும் பொருள்கொண்டுள்ளனர். தெற்றி என்பதற்கு திண்ணை என்ற பொருளும் உண்டெனினும் மேட்டிடமும் மேட்டு நிலமும் மேடும் ஒரு வகை மரமும் தெற்றி என்றுதான் அழைக்கப்பட்டுவந்திருக்கிறது.
அகநானூறு 259 ஆம் பாடலின் `` தெற்றி உலறினும், வயலை வாடினும், நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்” என்ற அடியின் அடிப்படையில் தெற்றி என்பது உலறுமெனக்கொண்டால் திண்ணை பொருந்தவில்லை. உலறுமென்பதற்குப் பொலிவிழத்தல் என்றொரு பொருளுமுள்ளது. நிலமும் மரமும் பொலிவிழப்பதுண்டு. எனவே இந்த நேர்வில் தெற்றிக்கு மேட்டு நிலமென்றோ, மரமென்றோ பொருள் கொள்வதே பொருத்தம்.
நொச்சி கருநிறக் கிளைகளும் நீலநிறப் பூக்களும், பசிய இலைகளுமாக மொத்த மரமுமே மணி மிளிற்றும் பசிய நீலமும் கருமையும் கலந்த நிறத்துடன் அழகும் கொண்டது; இங்கே மணி போன்ற பூக்கள் என வருவிக்கவேண்டிய தேவை எழவில்லை.
நொச்சி பத்துப் பதினைந்து அடிக்கு மேல் உயரமாக வளருவதில்லை; அதன் அடிமரம், கிளைகள், பூக்கள், இலைகள் அனைத்துமே உருவில் சிறியவை; மெல்லியல்பு கொண்டவை. நொச்சியைவிடவும் அடர்ந்த, தண்ணிய நிழல் கொடுக்கும் மரங்கள் பலவுமிருக்க, கவிஞர் நொச்சியைத் தேர்ந்தெடுத்து, மணி ஏர் நொச்சி என இக்கவிதையில் குறிப்பிடுவதற்கு, சங்க காலத் தமிழர் வாழ்க்கையில் நொச்சி அத்தகையதொரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
புறத்திணையில் நொச்சியென ஒரு தனித்திணை உள்ளது. நொச்சியைத் தொடலையாக, தழையாடையாக மகளிர் அணிந்துள்ளனர். அரண் காக்கும் போரின் போது வீரர்கள் தலையில் நொச்சிக் கண்ணி அணிவர். நொச்சியைப் `போதுவிரிப் பன்மரத்துள் காதல் நன்மரம் நீ!` என்கிறார் மோசிசாத்தனார். (புறம் 272.)
நொச்சிக்கு ஆங்கிலத்தில் `கற்பு மரம்` Chaste tree என்ற பெயருமுள்ளது. சங்க காலத்தின் இணைக்காலத்தில் கிரேக்க நாட்டு கன்னித்தெய்வம் ஹெஸ்டியா வுடன் இணைக்கப்பட்டு புனித மரமாகக் கருதப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் நோக்கினால் இக்கவிதையில் நொச்சி `மணி ஏர் நொச்சி` எனக் குறிப்பிடப்படுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
பாவை நடந்தாற் போல் நடக்கும் அழகு மகள் ஆடி, ஓடி விளையாடிய அழகினையும் மறக்கமுடியுமா? நொச்சியையும் தெற்றியையும் காணும்போதெல்லாம் அவள் நினைவுதானே வரும். அதை நினைக்க, நினைக்க உள்ளம் வேகுமே, அறிவுடைப் பெருமக்களே, எனக்கேட்கும்போது, நீங்கள் தெரியாமல் பேசுகிறீர்கள் என்ற குத்தலும் தொனிக்கிறது.
இப்பாடலில் ஓசை நயமும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு மகள், செருமிகு, பெருமலை, அருஞ்சுரம், மணிவாழ், அணி இயல், மணி ஏர் என எதுகைச் சொற்களும் உள்ளின் உள்ளம், உண்கண் என மோனை அமைவதையும் உன்னி ஓர்ந்து மகிழ்க.
சங்க அகப்பாடல்கள் வெறுமே கற்பனைக் காதலைப் பேசுவதில்லை. வாழ்க்கையோடு தொடர்புடைய மானுட உளவியலையும் காட்சிப்படுத்துவதைப் புரிந்துகொள்ளலாம்.

Sunday, 1 April 2018

சங்க இலக்கியத் துளிகள் - 15. புணரி பொருத பூமணல்.

சங்க இலக்கியத் துளிகள் - 15
புணரி பொருத பூமணல்
களவுக்காதல் – நெய்தல் - தலைவனும் தலைவியும் இரவுக்குறி நிர்ணயித்துப் புணர்ந்து பிரிய, ஊருக்குள் அலர் மிகுகிறது; எனவே காவல் மிகுதியாகிறது. காவல் மிகுந்ததால் ஏற்கெனவே நிர்ணயித்த குறியிடத்திற்கு தலைவி வரமுடியாமல், இரவுக்குறி தவறிப்போகிறது. காவல் மிகுதியாவதால் மேற்கொண்டு களவுப் புணர்ச்சிக்கு வழியில்லை; தலைவி வருந்தி உடல் மெலிகிறாள். தலைவன், தலைவியைக் காண, மறைவாக வந்து நிற்பதைத் தோழி காண்கிறாள். ஆனாலும் அவனைக் காணாதது போல, அவன் காதில் விழுமாறு, தலைவியிடம் கூறுகிறாள்.
“அவர் குறிப்பிட்ட இரவுக்குறி தவறிப்போனதென்று, சூடாத பூமாலை போல வாடி, உடல் மெலிகிறாய்; அயலாரின் பழிச்சொல் கேட்டு, அவர் இனிமேல் நிச்சயமாக நம்மிடம் வரமாட்டாரென நினைக்கின்ற எதிர்மறை எண்ணத்தை நெஞ்சிற்குள் புகவிடாமல் தொலைத்து ஒழிப்பாயாக; அங்கே பார்! அலைகள் வந்து மோதி, மோதிப் பூமணல் அடர்ந்து சேர்ந்திருக்கும் கடற்கரையில், தலைவனின் தேர்க்காலில் நண்டுகள் பட்டுவிடாமல் பாதுகாப்புடன், கடிவாள வாரினைப் பிடித்துத் தேர்ப் பாகன் செலுத்தப் போதுமான அளவுக்கு கடற்கரைச் சோலைக்குள்ளும் நிலவொளி பரந்து விரிகிறது.
பாடல் :
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிகமாள, நின் நெஞ்சத்தானே; 5
புணரி பொருத பூ மணல் அடைகரை,
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.
- – உலோச்சனார், நற்றிணை 11.

கூற்று : காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம் : காவல் மிகுதியாலே தலைவனைக் கூடப் பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி, நீ வருந்தாதே, நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவரெனக் கூறுவாள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்தும், அதனாலே தலைவி படும் துன்பமும் சிறைப் புறத்திருக்கும் தலைவன் கேட்குமாறு கூறி வரைவொடு புகுமாறு வற்புறுத்துவது.
அடி நேர்ப் பொருள் : அவர்செய் குறி பிழைப்ப – அவர் குறித்த இரவுக்குறி தவறிப்போனதென்று; பெய்யாது வைகிய கோதை போல – அணியாமல் வீணாகும் பூமாலை போல; மெய் சாயினை – உடல் வதங்கி வாடுகிறாயே; உள்ளி நொதுமலர் நேர்பு உரை – அயலாரின் பழிச்சொல்லை நினைத்து; தெள்ளிதின் வாரார் என்னும் புலவி – அவர் இனிமேல் நம்மிடம் நிச்சயமாக வரமாட்டாரென நினைக்கின்ற எதிர்மறை வெறுப்பினை; உட்கொளல் ஒழிகமாள நின் நெஞ்சத்தானே – உன் நெஞ்சத்தால் நினைப்பதைக்கூட விட்டுத் தொலைப்பாயாக; புணரி பொருத பூமணல் அடைகரை – அலை வந்து மோதி, மோதிப் பூமணல் அடர்த்தியாகச் சேர்ந்த கடற்கரையில்; ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நண்டுகள் தேர்ச் சக்கரத்தில் படாதவாறு; வலவன் வள்பு ஆய்ந்து ஊர – தேர்ப்பாகன் கடிவாள வாரினைப் பிடித்துக் கவனமாகச் செலுத்தத் தேவையான அளவுக்கு; நிலவு விரிந்தன்றால் கானலானே - கடற்கரைச் சோலைக்குள்ளும் நிலவொளி பரந்திருப்பதைக் காண்பாயாக!
பொழிப்புரை :
அவர் குறித்த இரவுக்குறி தவறிப்போனதென்று, அணியாமல் வீணாகும் பூமாலை போல, உடல் வதங்கி வாடுகிறாயே; அயலாரின் பழிச்சொல்லை நினைத்து, அவர் இனிமேல் நம்மிடம் நிச்சயமாக வரமாட்டாரென நினைக்கின்ற எதிர்மறை வெறுப்பினை, உன் நெஞ்சத்தால் நினைப்பதைக்கூட விட்டுத் தொலைப்பாயாக; அலை வந்து மோதி, மோதிப் பூமணல் அடர்த்தியாகச் சேர்ந்த கடற்கரையில், நண்டுகள் தேர்ச் சக்கரத்தில் பட்டுவிடாதவாறு, தேர்ப்பாகன் கடிவாள வாரினைப் பிடித்துக் கவனமாகச் செலுத்தத் தேவையான அளவுக்குக் கடற்கரைச் சோலைக்குள்ளும் நிலவொளி பரந்திருப்பதைக் காண்பாயாக!
அருஞ்சொற்பொருள் : பெய் – அணிதல், பெய்யாது – அணியாமல்; வைகு – கழிதல், வற்றுதல், வதங்குதல், வைகிய – வீணாகிப் போன கோதை – பூமாலை; சாய் – சாய்தல், தளர்தல், வருந்துதல், மெலிதல், வற்றுதல், அழிதல்; பிழை - பிழைத்தல், பலிக்காமலாகுதல், தவறிப்போதல்; உள் – உள்ளம், உள்ளுதல், நினைத்தல்; நொதுமலர் – அயலார்; நேர்பு – எழுதல், நிகழ்தல்; புலவி – ஊடல், வெறுப்பு (எதிர்மறை எண்ணம்); புணரி – கடல், அலை; ஆழி – தேர்க்கால், சக்கரம்; அலவன் நண்டு; வலவன் – தேர்ப்பாகன், தேர் வல்லவன்; வள் – கடிவாளம், வார்; கானல் – கடற்கரைச் சோலை.
கவிதை நயம் :
தலைவன் குறித்த இடத்திற்குச் செல்லமுடியாதவாறு காவல் மிகுந்துவிட்டதால் தலைவி தலைவனைச் சென்று சந்திக்க முடியவில்லை. அதனால் உடல் மெலிந்து மனம் வாடிப் பெரும் குழப்பத்திலிருக்கிறாள். ஊர் பேசும் அலரை நினைத்து, தலைவன் மேற்கொண்டு வராமல் நின்றுவிட்டால், தன் வாழ்க்கை என்னாகுமென அஞ்சிப் பதறுகிறாள். அந்தப் பதற்றத்தைத் தலைவனுக்கு அறிவிப்பதற்காகவே, `இரவுக்குறி தவறிப்போனதென்று சூடாத மாலை போல வாடி உடல் மெலியும்’ தகவலோடு `நொதுமலர் நேர்பு உரை உள்ளி தெள்ளிதின் வாராரெனும் புலவி உட்கொளல் ஒழிகமாள நெஞ்சத்தானே` எனத் தெரிவிப்பதால் தலைவன் இனிமேல் வரமாட்டானோ என தலைவி நினைப்பதும் தலைவனுக்கு உணர்த்தப்பட்டுவிடுகிறது. அதனைத் தொடர்ந்து கடற்கரையில் நண்டுகள் மீது தேர்க்கால் ஏறிவிடாதபடி தேரைச் செலுத்துவதற்கான நிலவொளி பரந்துவிரிகிறதென்பதன் மூலம் இரண்டு விவரங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. ஒன்று தலைவன், காதலியைச் சந்திக்க விரையும் ஆவல்மிக்க பயணத்தின்போதுகூட நான்கறிவேயுள்ள நண்டுகளுக்குக்கூடத் துன்பம் நேர்ந்துவிடக்கூடாதென நிலவொளி விரிந்தபின்னர் வருகின்ற கருணைமிக்கவன்; எனவே கலங்காதே உன்னைக் கைவிடமாட்டாரெனத் தலைவிக்கு உணர்த்துவது. இரண்டு, தலைவன் குறியிடத்திற்கு வந்துநின்றாலும், நிலவொளி மிகுந்திருப்பதாலும் காவல் மிகுதியாலும் தலைவியால் அவனைச் சந்திக்க இயலாமலிருப்பதால் மேற்கொண்டும் காலம் நீடிக்காமல் உடனேயே வரைவு மேற்கொள்ளத் தமருடன் வருவாயாக என்பதும் உணர்த்தப்பட்டுவிடுகிறது.
தலைவனே, நாங்கள் அறிவோம், நீ நண்டுகள் கூட துன்பமுறக்கூடாதென நினைக்கும் கருணைப்பண்பு மிக்கவன். அதனால் நீ வரைவுடன் வருவாயென நாங்கள் நம்புகிறோமென தலைவனின் மக்கட்பண்பு தூண்டப்படுகிறது.
எதிர்மறை எண்ணத்தை நெஞ்சத்தாலும் நினைக்காதேயென உறுதிபடக் கூறுமொழிகள் தலைவனின் உள்ளத்தில் எளிய நெஞ்சமுள்ள இவர்களின் நம்பிக்கை சிதையுமாறு எந்த எண்ணத்தையும் தன்னுள்ளத்தும் கொள்ளக்கூடாதென்ற உறுதியை மேற்கொள்ளச் செய்யுமல்லவா!
புணரி பொருத பூமணல் அடைகரை சுட்டப்படுவதன் மூலம் அனைத்துமே அழகும் மென்மையும் மிக்கதென்றும் அதேநேரத்தில் உறுதியானதென்றும் உணர்த்தப்படுவதோடு இருள் மறைந்து நிலவொளி விரிந்து பரவுவதாகக் குறிப்பிடுவதன் மூலம் நன்னம்பிக்கை ஊட்டப்படுகிறது.
போர்க்குணம் மிக்கவனாகவும், போரில் விழுப்புண் பெற்று மடிவதையே பெருமகிழ்வாகக் கொள்ளும் வாழ்க்கையெனினும், போர்க்களத்தைத் தவிர மற்ற வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்திலும் பிற உயிர்களுக்கு இடையூறு நேராவண்ணம் வாழவேண்டுமென்பது அந்நாளைய உயர் பண்பாடென்றும் இக்கவிதை உணர்த்துவதை உன்னி மகிழ்வோம்.
முழுக்க, முழுக்க நேர்முகச் சிந்தனையுடனான நன்னம்பிக்கை மொழிகளைத் தேர்ந்து இக்கவிதை படைக்கப்பட்டுள்ளதை உணரும் போது வாசக உள்ளத்திலும் அதே நல்லுணர்வுகளோடு மகிழ்வும் மேலெழும்.