Thursday, 28 June 2018

வேலூரில் ஒரு சதிக்கல்

வேலூரில் ஒரு சதிக்கல்
வேலூர் சத்துவாச்சாரியில் வள்ளலார் பேருந்து நிறுத்தம் அருகில் மெரினா கபே விநாயக முதலியார் நிறுவிய வள்ளலார் நடுநிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளி அமைந்துள்ள தோப்பிலேயே நீத்தார் வழிபாட்டுக்கூடம் ஒன்றும் உள்ளது.  இந்த நீத்தார் வழிபாட்டுக்கூடம் (இறந்தவர்களுக்கு பதினாறாம் நாள் செய்கிற நீர்க்கடன், அலுவல் அல்லது காரியம்) 1959 இல் ஒரு அறச்செயலாக நிறுவப்பட்டுள்ளது. இன்றும் பொதுமக்கள் அந்தக் காரியத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.
பிற்காலத்தில் நடுநிலைப்பள்ளியும் குருகுலம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இவை அமைந்துள்ள தோப்பு பத்துப் பதினைந்து ஏக்கர் பரப்புடையது. மா, புளி, தென்னை, பனை, ஆல், அரசு, இலவம், புங்கு, வேம்பு எனப் பல்வகை மரங்களும் வளர்ந்து அக்குடியிருப்புப் பகுதிக்கு நற்காற்று வழங்கும் தொழிற்சாலையாக உள்ளது. வீட்டு வசதி வாரியம் அமைத்துள்ள பகுதி 3 குடியிருப்புப் பகுதிக்கு இத்தோப்பு உண்மையில் ஒரு Lung Space ஆக விளங்குகிறது.
இப்பகுதியிலேயே குடியிருந்தாலும், பராமரிப்பு குறைவான அத்தோப்புக்குள் சென்று பார்த்ததில்லை. நேற்று தோப்புக்குள் சுற்றிப் பார்த்தபோது முழுவதுமாக வெட்டப்பட்ட அரச மரம் ஒன்றின் அடிமரப்பகுதியை ஒட்டி வளர்ந்த தளிர் மரமாகி அந்த அடிமரம் முழுவதையும் மறைக்கும்படியாக வளர்ந்திருந்ததைப் பார்த்தேன். அம்மரத்தின் அடியிலேயே பாறைக்கல் ஒன்றில் செதுக்கப்பட்ட சிற்பங்களும் இருந்தன. அம்மரமும் கற்பாறைச் சிற்பங்களும் வழிபாட்டுக்குரியவையாக மஞ்சள்
குங்குமத் தீற்றல்களும் உள்ளன.
இதே தோப்பின் உட்புறம் பனைமரம் ஒன்றின் மீது விழுந்து முளைத்த அரசு விதை மரமாகி அதன் வேர்கள் பனை மரம் முழுவதையும் மறைத்திருக்கிறது. இப்போது பார்த்தால் அரசமரத்துக்குள் பனை முளைத்து வளர்ந்துள்ளது போல் தோற்றம் தருகிறது.
மற்றிரு ஆலமரம் அடிமரமே இல்லாமல் விழுதுகளே அடிமரமாகத் தோற்றமளிக்கிறது.
ஆல், அரசு போன்ற மரங்களுக்கு இத்தகைய வளர் இயல்பு உள்ளது. எங்கள் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது நம்பிகுளத்தின் வடமேற்கு மூலையில் ஒரு அரசங்கன்றும் வேப்பங்கன்றும் நட்டு அதைச் சுற்றி மண்மேடையும் அமைத்தோம். அந்த அரசங்கன்று அடியிலிருந்தே இரண்டாகக் கிளைத்து வளர்ந்தது. இரு கிளைகளும் நன்கு விரிந்து வளரட்டுமென்று இரண்டுக்கும் நடுவில் பெரிய குண்டுக்கல் ஒன்றை நண்பர்கள் வைத்திருந்தனர். ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே இருகிளைகளும் சேர்ந்து அந்தக் கல்லை மூடிவளர்ந்துவிட்டன. இப்போது அந்த மரம் நன்கு பெரியதாகிவிட்டது. அதன் அடிமரத்தினுள் அக்கல் இருக்கிறது. பிற்காலத்தில் அந்த மரத்தின் அடிமரத்தை வெட்டுபவர்களுக்கு மரத்தினுள் கல் இருப்பது பெருத்த வியப்பினை அளிக்கும்.
பொதுமக்கள் நன்மைக்காக அறச்செயல்கள் புரிந்துள்ள தொண்டுள்ளத்தினையும் சுற்றுப்புறத்திலுள்ள மரங்கள் பற்றிய தகவல்களை இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்பதற்காகவுமே இப்பதிவு.
பி.கு. மேலே குறிப்பிட்டுள்ளது போல் அரசமரத்தடியில் இருக்கும் கல் பாறைச் சிற்பம் அல்லவென்றும் அது சதிக்கல் என்றும் தொல்லியல் ஆர்வலரான மனோன்மணி குறிப்பிட்டுள்ளார். அதாவது அக்கல்லில் செதுக்கப்பட்டுள்ள ஆண் இறந்தபோது அவரது மனைவி உடன்கட்டை ஏறியதாகவும் அதனை நினைவுகொண்டு அமைக்கப்பட்ட கல் என்பதாகிறது. இது போன்ற ஒரு கல் எனது சொந்த கிராமமான தாழக்குடியில் நான் மேலே குறிப்பிட்ட அரசமர மேடை அருகில் உள்ளது. அதனை அத்தெரு மக்கள் தீப்பாய்ஞ்ச அம்மன் என்று குறிப்பிடுவர். ஆனால் அதற்கு எவ்வித மரியாதையுமில்லாமல் இருந்தது. பிற்காலத்தில் 1990களில் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் `அடித்தள மக்கள் வரலாறு` என்னும் நூலினை வாசிக்கும்போதுதான் அந்த தீப்பாய்ஞ்சான் சிலை சதிக்கல் என்றும் அப்படி தீப்பாய்ந்தவரின் பெயர் மாணிக்கரசி என்றும் தெரிந்துகொண்டேன். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து அச்சிலை அருகிலேயே பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் விளையாடியிருந்த நான் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆய்வறிஞரின் நூலில் இருந்துதான் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது. அவ்வளவுதான் நமது வரலாற்று உணர்வு.

ஜூன் 26 அன்று முகநூலில் பதியப்பட்டது. விருப்பம் 186 பகிர்வு 24 

Tuesday, 26 June 2018

உளுந்தங்களி (அபுனைவு 23)

பேத்திக்காக பாட்டி கிண்டிய உளுந்தங்களி.
நெல்லை மற்றும் நாஞ்சில் நாட்டில் பெண்குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் நல்லதென்று உளுந்தங்களி கொடுத்து சாப்பிடவைப்பதைப் பாரம்பரியமாகவே கடைப்பிடிக்கின்றனர்.
பூப்படையும் பருவத்திலும் அதனைத் தொடர்ந்த நாட்களிலும் பெண்குழந்தைகள் உளுந்தங்களி சாப்பிடுவதால் உடல் வளர்ச்சி சீராக இருக்குமென்றும் பிற்காலத்தில் இடுப்பெலும்பு வலுப்பெற்று மகப்பேற்றின் போது எளிதாக இருக்குமென்றும் நம்புகின்றனர். அதனால் பாட்டிகள் அடிக்கடி உளுந்தங்களி கிண்டுவது வழக்கம்.
தேவையான பொருட்கள்
1. ஒரு பங்கு உளுந்தம்பருப்போடு (தோல் நீக்கவேண்டிய அவசியமில்லை) ஒரு பங்கு பச்சரிசி கலந்து திரித்த மாவு,
2.இரண்டு பங்கு கருப்புக்கட்டி,
3. நூறு மி.லி நல்லெண்ணெய்.
செய்முறை
வாணலியில் மாவுக்கு இரண்டு பங்கு தண்ணீர் மட்டும் ஊற்றிக் கொதிக்கவைத்து, பொடித்த கருப்புக்கட்டியை அதில் கொட்டிப் பாகு காய்ச்சி, அதனை வலைக்கரண்டியில் வடிகட்டியபின்னர், பாகினை மீண்டும் வாணலியில் சூடுபடுத்தவேண்டும். பாகு கொதித்துவரும்போது மாவினைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிப்பிடிக்காமல் தேவைக்கேற்றவாறு நல்லெண்ணெய் ஊற்றிக் கட்டிசேராமல் கிண்டிக்கொண்டேயிருக்கவேண்டும்.
பிசுபிசுப்பு மாறி வாணலியில் ஒட்டாமல் திரள்கின்ற பக்குவத்தில் இறக்கிவைத்து எண்ணெய் தொட்டுத் தொட்டு தேவைக்குத் தக்க உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளலாம். களியில் சேர்த்த எண்ணெய் சிறிதாக மேலாக க் கசிந்து வரத்தான் செய்யும் அந்த எண்ணெயோடுதான் சாப்பிடவேண்டும்.
ஒன்றிரண்டு நாட்களில் காலிசெய்துவிடுவதே உத்தமம்.
மாதமொரு முறை இதுபோன்ற உளுந்தங்களியினைப் பெண்கள் சாப்பிட்டு வருவதால் உடல்நலம் சிறக்குமென நம்புகின்றனர்.
நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல் ஆண்களுக்கும் சிறிது கிடைக்கும். இது ஒரு பழந்தமிழ்க் கிராமத்து அல்வா எனக்கருதிக்கொள்ளலாம்.


Monday, 25 June 2018

வேலூர்- சென்னை பேருந்து போக்குவரத்து

வேலூர் - சென்னை பேருந்து போக்குவரத்து.

1984 முதல் 1997 வரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய காலத்தில் உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், சேப்பாக்கம், எழிலகம், குறளகம், மிண்ட், அரசு அச்சகம் என ஏதாவது ஒரு வேலையாகப் பணிநாட்களில் அடிக்கடி, வாரத்தில் இரண்டு, மூன்று நாட்களெனச் சென்னைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திலிருந்தேன்.
எனது வீடு வள்ளலாரில் இருப்பதால் வள்ளலார் பேருந்து நிறுத்தத்தில் நின்று சென்னை பேருந்தில் ஏறிக்கொள்ள வசதியாக இருந்தது. என்ன! இருக்கை கிடைக்காது, நின்றுகொண்டேதான் செல்ல வேண்டும். சில நேரங்களில் படிக்கட்டுப் பாதையில் உட்கார இடம் கிடைக்கும். செய்தித்தாளை விரித்து அதன் மேலமர்ந்து, ஏதாவதொரு புத்தகத்தைப் படித்துக்கொண்டே அதில் ஆழ்ந்துவிடுவது வழக்கமாக இருந்தது.
இப்போதுமாதிரி, விரைவுப்பேருந்து, 1 - 3 நிறுத்தம், இடைநில்லாப் பேருந்து, எல்லாமே புறவழிச்சாலை, பாய்ண்ட் டு பாய்ண்ட் மாதிரியான பேருந்துகள் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
வேலூரில் கிளம்பினால் ஆற்காடு, இராணிப்பேட்டை, முத்துக்கடை, வாலாசா, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, ராஜகுளம், பாலுசெட்டி சத்திரம், வெள்ளைகேட், காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், நசரத் பேட்டை, பூந்தமல்லி, போரூர், மவுண்ட், கிண்டி, SIET, தேனாம்பேட்டை, சிம்சன்,டிவிஎஸ், எல்.ஐ.சி, அண்ணாசிலை, பல்லவன் என முப்பதுக்கும் மேற்பட்ட நிறுத்தங்களிலும் நின்று ஆளிறக்கி, ஆள் ஏற்றி பிராட்வே சென்றுசேர்வதற்கு மூன்றே முக்கால் மணிக்கும் அதிகம் தான் ஆகுமே தவிர குறைவதில்லை.
திரும்பி வரும்போதோ பிரச்னை மேல் பிரச்னையாகத்தான் இருக்கும். அநேகமாக வெள்ளை கேட்டில் ரயில்வே கேட் போட்டு அரை மணி நேரமாவது தாமதமாகும். வீடு போய்ச்சேருவதற்கு பத்து அல்லது பதினொரு மணியாகி விடும்.
அப்போது வேலூர் - சென்னை பேருந்துகள் அனைத்தும் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட்டன. அதிலும் அந்தப் பேருந்து நிலையத்தில் வேலூர் பேருந்து புறப்படுமிடம் இருக்கிறதே, அது அப்படியொரு கண்ணராவியான சூழ்நிலையில் சிறுநீர் மற்றும் திறந்தவெளிக் கழிவறை நாற்றத்தோடிருந்தது. பேருந்துகளும் அரைமணி, முக்கால் மணி நேரத்துக்கொருமுறை தான் புறப்படும். இடம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். அங்கிருந்து வேலூர் வரையிலுங்கூட நின்றுகொண்டே பயணித்த நாட்கள் அதிகம்.
2002 -இல் கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்கத் தொடங்கியபின் வேலூர் பேருந்து போக்குவரத்து எவ்வளவோ சீரடைந்திருக்கிறது. பிராட்வேயை ஒப்பிட்டால் CMBT எவ்வளவோ சுத்தமான ஒரு பராமரிப்பு.
பேருந்துகளும் அதிகம் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு சென்றால் உடனடியாகவே ஏதாவதொரு வேலூர் பேருந்து புறப்படத் தயாராக இருக்கும். ஏறி உட்கார வேண்டியதுதான்.
புறவழிச்சாலை பேருந்துகளில் இரண்டரை மணி நேரத்தில் வேலூர் போய்ச் சேர்ந்துவிடமுடிகிறது. இதர பேருந்துகளென்றாலும் இரண்டே முக்கால் மணி நேரத்திற்குள் வேலூர் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார்கள்.
அரசு பேருந்து சேவைகளைப் பொறுத்த வரையில் வேலூர் - சென்னை சேவை மிகமிகச் சிறப்படன் செயலாற்றுவதாக உறுதிபடக்கூற முடிகிறது.
நடத்துநர்களின் பழகுமுறை, பயணிகளுக்கு மதிப்பு அளிப்பது போன்ற நடவடிக்கைகள் எல்லாமே சிறப்பாக இருக்கின்றன. வாரத்தில் மூன்று நாட்களேனும் சென்னை சென்று வந்துகொண்டிருந்த காலத்தில் அநேகமாக எல்லா நடத்துநர்களுமே எனக்கு நண்பர்களாகிவிட்டிருந்தனர்.
நண்பர்களென்றால் அதற்காகத் தோளில் கைபோட்டுப் பேசுபவர்கள் என்று அர்த்தமில்லை; நட்பு பாவத்துடன் ஒரு புன்சிரிப்பு; ஒரு சிறிய முக அசைப்பு, இன்று கொஞ்சம் வெயில் அதிகந்தான் என்பது மாதிரியான ஒரு இணக்க மொழி; சார், வாலாசாவில் அந்த சீட் இறங்கும், நீங்கள் போய் அமர்ந்துவிடுங்களென்ற முன்தகவல்; இவ்வளவு போதாதா. அவர்களெல்லோருமே நட்புணர்வுடன்தான் செயல்பட்டனர்.
நன்றி செலுத்தப்படவும் நினைவுகூரவும் தகுதியான சிறந்த பணியாளர்கள்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊழலை ஒழித்து, மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தி வளர்ச்சிக்கான முயற்சியினை மேற்கொள்ளவேண்டியது அரசின் கடமை என்பதை இப்போது நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

Saturday, 23 June 2018

காட்சி நோக்காடி Viewfinder By RAYMOND CARVER

காட்சிநோக்காடி VIEWFINDER ஆங்கிலம் : ரேமண்ட் கார்வர் Raymond Carver – தமிழில் ச.ஆறுமுகம்.



ரேமண்ட் கார்வர் Raymond Carver
கைகளில்லாத ஒரு மனிதர், எனது வீட்டின் புகைப்படம் ஒன்றினை என்னிடம் விற்பதற்காக என் வாசலுக்கு வந்தார். குரோமியக் கொக்கிகள் தவிர்த்து, அவர் ஒரு சாதாரணமான ஐம்பது அல்லது அதுமாதிரியான தோற்றமுள்ளவராகவே இருந்தார்.
அவருடைய தேவையினை அவர் சொல்லி முடித்ததும் ”உங்கள் கைகளை எப்படி இழந்தீர்கள்?” என நான் கேட்டேன். “அது வேறு கதை,” என்றார், அவர்.
”உங்களுக்கு இந்தப் படம் வேண்டுமா, வேண்டாமா?”
“உள்ளே வாருங்கள்,” என்றேன், நான். “இப்போதுதான் காபி போட்டேன்.”
கூடவே, பழவகை இனிப்பாக ஜெல்லோவும் இப்போதுதான் செய்து முடித்திருந்தேன். ஆனால் அதை, அந்த மனிதரிடம் சொல்லவில்லை.
உங்கள் கழிவறையை நான் பயன்படுத்தலாமாவெனக் கேட்டார், அந்தக் கையில்லா மனிதர். அவர் குவளையை எப்படிப் பிடிப்பாரென்பதைப் பார்த்துவிடவேண்டுமென்று, நான் நினைத்தேன்.
புகைப்படக்கருவியை அவர் பிடிக்கும் விதத்தை நான் அறிவேன். அது ஒரு பழைய போலராய்டு, பெரிது, கருப்பு. அவரது தோளோடும் முதுகோடும் சேர்த்திணைத்தத் தோல்வாரோடு அந்தப் புகைப்படக்கருவி பிணைக்கப்பட்டிருந்தது.
அதனால் அது, அவரது நெஞ்சுப்பகுதியில் பத்திரமாகத் தொங்கியது. உங்கள் வீட்டின் முன்பான ஓர நடைபாதையில் நின்றுகொண்டு, காட்சி நோக்காடி வழியாக உங்கள் வீட்டினைப் பார்த்து, அவரது கொக்கிகளில் ஒன்றால் புகைப்படக்கருவியின் விசையைத் தட்டி, உங்கள் வீட்டின் படத்தினை எடுத்துவிடுவார். என் வீட்டுச் சாளரம் வழியாக நான் கவனித்துக்கொண்டுதானிருந்தேன், பார்த்துக்கொள்ளுங்கள்.
”கழிவறை எங்கிருக்கிறதெனச் சொன்னீர்கள்?”
‘’ உள்ளேதான், வலதுபக்கம் திரும்புங்கள்.”
வளைந்து, குனிந்து தோள்வார்க்கட்டுக்குள்ளிருந்தும் கழன்றுகொண்ட அவர், நிழற்படக்கருவியை சாய்மெத்தை மீது வைத்துவிட்டு, மேல்சட்டையை நேர்படுத்தி இழுத்துவிட்டுக்கொண்டார்.
”நான் வரும்வரையில் நீங்கள் இதைப் பார்த்துக்கொண்டிருங்கள்.” அவரிடமிருந்த நிழற்படத்தை நான் கையில் எடுத்தேன். சிறு புல்வெளிச் செவ்வகம் ஒன்றுடன் காரோடும் பாதை, கார் ஷெட், முன்புறப்படிகள், புடைப்புச் சாளரம் மற்றும் சமையலறையிலிருந்து நான் கவனித்துக்கொண்டிருந்த சாளரமும் இருந்தது.
அப்படியிருக்கையில் இந்தத் துயர நிழற்படம் எனக்கு எதற்கு?
நான் இன்னும் நெருக்கமாகப் பார்த்தபோது சமையலறைச் சாளரத்தில் என் தலையை, என் தலையையேதான் பார்த்தேன். என்னை அதைப்போலப் பார்த்தபோது அது, என்னைச் சிந்திக்கவைத்தது. ஆம். அது ஒரு மனிதனைச் சிந்திக்கச்செய்கிறதென்பதை என்னால் உங்களுக்குக் கூறமுடியும். கழிவறையில் நீர் ஊற்றப்படுவது எனக்குக் கேட்டது. அவர் ஜிப்பினை மேலிழுத்துக்கொண்டு, சிரித்தவாறே, ஒரு கொக்கி அவரது இடைக்கச்சினைப் பிடித்திருக்க, இன்னொன்றால் காற்சட்டைக்குள் மேற்சட்டையை உட்தள்ளிக்கொண்டே அறைக்கூடத்துக்குள் வந்தார்.
“என்ன, சிந்தனை?” எனக்கேட்டவர், “எல்லாம் சரிதான்!” என்றும் சொன்னார்.
என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே நன்றாகப் போகிறதென்றுதான் நினைக்கிறேன். நான் என்னசெய்கிறேனென்பது எனக்குத் தெரியாமல் போகுமா? எதையும் எதிர்கொள்வோம், அது ஒரு அலுவல் சார்ந்த போட்டி.
அவர் அவரது கவட்டையில் சொரிந்துகொண்டார்.
”காபி இங்கிருக்கிறது” என்றேன்.
”நீங்கள் தனியாகத்தான் வசிக்கிறீர்கள், சரிதானே? என்ற அவர், வசிப்பறைக்குள் நோக்கிவிட்டுத் தலையைக் குலுக்கினார். “கஷ்டம், கஷ்டம்” என்றார்.
அவர் நிழற்படக்கருவியின் அருகில், பெருமூச்சுடன் பின்பக்கம் சாய்வாக அமர்ந்த பின், அவர் தெரிந்துகொண்டதை என்னிடம் சொல்லப்போவதில்லை என்பது போல முறுவலித்தார்.
‘காபியைக் குடியுங்கள், ” என்றேன், நான்.
ஏதாவது பேசவேண்டுமே, என்ன பேசலாமென நான் யோசிக்க முயற்சித்தேன். ”மூன்று பையன்கள், நடைபாதை ஓரக்கல்லில் என் முகவரியைத் தீட்டுவதாகக் கூறி இங்கு வந்து நின்றார்கள். அதற்காக ஒரு டாலர் கேட்டார்கள். உங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதில்லையா, இல்லை, தெரியுமா?”
அது ஒரு தொலைதூரக் காட்சிப்பிடிப்பு. ஆனால், நானும் அவரை அப்படியேதான் பார்த்திருந்தேன்.
அவர் முன்பக்கமாக, முக்கியமாக அவரது கொக்கிகளுக்கிடையில் தம்ளரைச் சமநிலைப்படுத்திக்கொண்டு முற்சாய்ந்தார். அவர் அதனை மேசை மீது வைத்தார்.
“ என் வேலைகளை நானாகவேதான் செய்துகொள்கிறேன்.” என்ற அவர், “எப்போதுமே, இனிமேலும் அப்படித்தான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
“நான் இணக்கமான இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தேன்.” என்றேன். எனக்குத் தலை வலித்தது. அதற்குக் காபி நல்லதில்லையென்று எனக்குத் தெரியும்; ஆனால், சிலசமயம் ஜெல்லோ அதைச் சரிசெய்துவிடும். நான் அந்தப் படத்தைக் கையிலெடுத்தேன்.
“ நான் சமையலறையிலிருந்தேன்.” என்றேன், நான்.
]
“வழக்கமாக நான் பின்பக்கத்தில் தான் இருப்பேன்.”
“அது எல்லா இடத்திலும் அப்படித்தான் நிகழ்கிறது.” என்றார், அவர். “ஆக, அவர்கள் அப்படிக்கப்படியே உங்களை விட்டுப் போய்விட்டார்கள், சரிதானே? இப்போது, நீங்கள் என்னை எடுத்துக்கொள்ளுங்களேன், நான் தனியாகத்தான் பணிசெய்கிறேன். இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? உங்களுக்குப் படம் வேண்டுமா?”
“அதை நான் வாங்கிக்கொள்கிறேன்.” என்றேன், நான்.
நான் எழுந்து தம்ளர்களை எடுத்துக்கொண்டேன்.
“ நிச்சயம் வாங்கிக்கொள்வீர்கள்,” என்றார், அவர். ”நகரமையத்தில் ஒரு அறை வைத்திருக்கிறேன். எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. வெளியே செல்லும் பேருந்து ஒன்றில் ஏறிச் சென்று ஊர்ப்புறங்களில் வேலை முடிந்த பிறகு மற்றொரு நகர்மையத்துக்குப் போகிறேன். நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களா? ஹூம், ஒரு காலத்தில் எனக்கும் குழந்தைகள் இருந்தனர். எல்லாம் உங்களைப் போலவேதான்.” என்றார், அவர்.
நான் கையில் தம்ளர்களோடு, சாய்மெத்தையில் அவர் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்ததைக் கவனித்து நின்றேன்.
“அவர்கள் எனக்குத் தந்ததுதான் இதுவெல்லாம்.” என்றார், அவர். என்முன் நீண்ட அந்தக் கொக்கிகளைக் கண்கள் விரியப் பார்த்தேன்.
“ காபிக்கு நன்றி. கழிவறை பயன்படுத்த அனுமதித்ததற்கும் நன்றி. எனக்கும் இரக்கமாகத்தானிருக்கிறது. “
அவர் எழுந்து கொக்கிகளைத் தாழ்த்திக்கொண்டார்.
” காட்டுங்கள்.” என்றேன், நான். “எவ்வளவென்று காட்டுங்கள். வீட்டையும் என்னையுமாக இன்னும் அதிகப் படமெடுங்கள்.”
“அதெல்லாம் வேலைக்காகாது” என்றார், அந்த மனிதர். “அவர்களெல்லாம் மீண்டும் வரப்போவதில்லை.” அவர் தோல்வாரை மாட்டிக்கொள்வதற்கு, நான் உதவி செய்தேன். “ எதாவது ஒரு விலையைச் சொன்னால் தானே, நான் இதை உங்களுக்குத் தர முடியும்’’ என்றார், அவர். ”ஒரு டாலருக்கு மூன்று.” ”நான் இதற்கும் கீழே குறைத்தால், என்னால் வெளியே போகமுடியாது.” என்றார், அவர்.
நாங்கள் வெளியே சென்றோம். அவர் கருவியின் மூடுகதவினைச் சரிசெய்தார். நான், எங்கே நிற்கவேண்டுமென்று அவர் சொன்ன இடத்திற்கு நாங்கள் இறங்கிச் சென்றோம். நாங்கள் வீட்டைச் சுற்றி நடந்தோம். எல்லாமே முறைப்படியானது தான்.
சிலநேரங்களில் நான் ஓரப்பாதைகளைப் பார்ப்பேன். சிலநேரங்களில் நேருக்கு நேராகப் பார்ப்பேன்.
‘’நல்லது,” என்பார், அவர். “அதுவும் நல்லது,” என, நாங்கள் வீடு முழுவதும் சுற்றிப் பின்பக்கம் வந்து, பின்னர் முன்பக்கம் வந்தபோதும் சொன்னார்.
“இருபது ஆகிவிட்டது. இது போதும்.”
“இல்லை,” என்றேன், நான். “கூரை மேலேயும்,” என்றேன்.
“சேசுவே,” என்றார், அவர். அவர் கட்டிடத்தை மேலும் கீழுமாகக் கண்களாலேயே அளவிட்டார்.
“நிச்சயமாக,” என்றவர், “இப்போதுதான், நீங்களாகப் பேசுகிறீர்கள்.” என்றார்.
‘’மொத்தமாக எல்லாமும். அவர்கள் துடைத்தெடுத்துவிட்டார்கள்.” “ இதைப் பாருங்கள்.” என்ற அந்த மனிதர் மீண்டும் கொக்கிகளை மாட்டினார்.
நான் உள்ளேசென்று நாற்காலி ஒன்றினை எடுத்துவந்து, கார் ஷெட் கூரை அடியில் வைத்தேன். ஆனாலும் அந்த உயரம் போதவில்லை. அதனால் நான் அளிக்கூடை ஒன்றை எடுத்து வந்து நாற்காலியின் மீது வைத்தேன்.
கூரை மீது ஏற அது போதுமானதாக இருந்தது.
மேலே ஏறி நின்று, சுற்றிலும் பார்த்தேன். நான் கையசைத்தேன்; அந்தக் கையில்லாத மனிதர் பதிலுக்குக் கொக்கிகளை அசைத்தார்.
அப்போதுதான் நான் அவற்றைப் பார்த்தேன். சிறுகற்கள். புகைபோக்கிக் கூண்டின் மீது ஒரு கூடு போல அந்தக் கற்குவியல் இருந்தது. உங்களுக்குத்தான் அந்தப் பையன்களைத் தெரியுமே. அவர்கள் கற்களைப் புகைபோக்கிக்குள் வீசுவதாக நினைத்து எப்படி வீசுவார்களென்றும் உங்களுக்குத் தெரியுமே.
”ரெடியா?” எனக்கேட்ட நான் ஒரு கல்லைக் கையிலெடுத்துக்கொண்டு, காட்சி நோக்காடியில் நான் தெரிவதை அவர் சரிப்படுத்தும் வரை அப்படியே நின்றேன்.
“ஓ.கே.” என்றார், அவர்.
நான் கையைப் பின்னுக்கு இழுத்து, “இந்தா வாங்கிக்கோ!” எனக்கத்தி, அந்தப் பொட்ட நாய்க்குப் பிறந்தமகன் மீது எவ்வளவு தூரமாக எறியமுடியுமோ அவ்வளவு தூரத்துக்கு எறிந்தேன்.
”எனக்குத் தெரியாது, நானென்ன, அசையும் படமா பிடிக்கிறேன் ” என அவர் கத்துவது என் காதில் விழுந்தது.
“ திரும்பவும் எடுங்கள்!” எனக்கத்திக்கொண்டே இன்னொரு கல்லை எடுத்தேன். 
மலைகள் இணைய இதழ் 147 ஜீன் 3, 2018 இல் வெளியிடப்பட்டது.

Friday, 22 June 2018

பழந்தமிழ் ஊர்ப்பெயர்கள்

பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து அறியமுடிகிற ஊர்களில் சில : 

1. அட்டவாயில்
2. அரிமணவாயில்
3. அலைவாய் - திருச்சீரலைவாய் - திருமுருகு. 125. நாமனூரலைவாய் என்றும் வழங்கியதாக நச்சர் உரை.
4. அழுந்தை
5. அழும்பில் அகம். 44 - 15
6. அம்பர். நற்.141 - 10.
6.அ. அம்மூர்
7. ஆமூர். சிறுபாண்.188
8. ஆலங்கானம் – அகம் 36, 209
9. ஆவினன்குடி திருமுருகு.176
10. ஆமுற்றம்
10. ஆன்பொருநை
11. இருப்பை நற். 350-4.
11.அ. இடைக்கழிநாட்டுநல்லூர் - சிறுபாண்.
12. இடையாறு
12.அ. இலங்கை - தொண்டைநாட்டுச் சிற்றூர் சிறுபாண்.119, 120
13. உறத்தூர்
14. உறந்தை - சிறுபாண்.83.
15. உறந்தைக்குன்றம்
16. ஊணூர் - அகம்.220 - 13, 227 - 18.
17. எருமை நன்னாடு
18. ஏரகம் திருமுருகு 186. திருவேரகம்.
18.அ. ஏழில் - அகம் 152 - 12, 345 - 7
18.ஆ. ஒய்மான்நாடு. சிறுபாண்.
19. கச்சி. பெரும்பாண். 420
19.அ. கடிகை
19.ஆ. கடியலூர் - பெரும்பாண்.
20. கண்டீரம்
21. கருவூர்
22. கவிரம்
23. கழாஅர்
24. கழுமலம்
25. கள்ளில்
26. கள்ளூர்
27. காமூர்
27.அ. காவிரிப்பூம்பட்டினம் முல்லைப்பாட்டு
28. குடந்தை அகம்.60 - 13
29. குடவாயில்
30. குடநாடு
31. குடபுலம்
32. குடவரை
33. குதிரைமலை
34. குறுக்கைப்பறந்தலை
35. குறுக்கை அகம் 45 - 9
36. குறும்பொறை
37. குழுமூர்
38. குன்று, குன்றம் -திருப்பரங்குன்றம் திருமுருகு.77
38.அ. குன்று தோராடல் - திருத்தணி - திருமுருகு.215
39. கூடல் - திருமுருகு. 71
40. கூடற்பறந்தலை
41. கொடுங்கால்
42. கொல்லி
42.அ. கொற்கை சிறுபாண். 62., நற்.23 - 6.
43. கோடி – கோடிக்கரை – அகம் 70.- 13.
44. கோடை
45. கோவல் திருக்கோவிலூர் – அகம்.35 - 14.
45.அ. சாய்க்காடு - திருச்சாய்க்காடு . நற். 73 - 9
46. சாய்க்கானம் - அகம்.220 - 18.
47. சிறுகுடி – நற்.340. 357
48. சிறுமலை
49. செல்லி
50. செல்லூர்
51. தகடூர்
52. தலையாறு
52.அ. திருவெஃகா - பெரும்பாண்.
53. தேமுதுகுன்றம்
54. தொண்டி அகம் 10, 60, நற். 8-9
55. நல்மா இலங்கை - சிறுபாண் 120
55.அ. நியமம்
56. நீடூர் அகம்.266 - 10
57. நீர்ப்பெயற்று - பெரும்பாண்.317
58. நெடுவரை
59. பட்டினம், எயிற்பட்டினம். சிறுபாண்.153
60. பரங்குன்றம்
61. பருவூர்ப்பறந்தலை
62. பவத்திரி
62.அ. பழமுதிர்சோலை திருமுருகு316.
63. பறம்பு
64. பாக்கம் பொருந.210, பெரும்.367
65. பாரம் - நற்.265 - 5
66. பாணாடு
67. பாழி
68. பாழிப்பறந்தலை
69. பாணன் நாடு
70. புகார்
71. புள்ளிருக்கு வேளூர்
72. புறந்தை
73. புன்னாடு
74. பெருந்துறை
75. பொதியில் - பொதிகை மலை நற்.379 - 11
76. பொதினி - பழனி அகம். 1 - 4, 61 - 16.
77. போஓர் - நற்.10 - 7
78. மதுரை - சிறுபாண்.67
78.அ. மரந்தை, ஒரு சேரர் நகரம். நற்.35, 395
79. மருங்கூர்ப்பட்டினம் நற்.258 - 10
79.அ. மருங்கை - மருங்கூர் நற்.358-10
80. மாங்காடு
81. மாந்தை
82. மிளைநாடு
83. முசிறி
84. முள்ளூர் அகம் 209 - 13
85. மோகூர் அகம் 251 - 10.
86. வஞ்சி - சிறுபாண்.50 அகம்.263 - 12.
87. வடவரை
88. வல்லம் அகம்.356 - 13
89. வாகைப்பறந்தலை
90. வாகை
91. வீரை
92. வியலூர் - பதி.5-11
93. விளங்கில்
94. வெண்ணி பொரு.147
95. வெண்ணிப்பறந்தலை
96. வெண்ணிவாயில்
97. வெண்ணிமணிவாயில்
98. வெளியம் அகம்.359 - 6
99. வேங்கடம்
100. வேம்பி . அகம்.249 - 9
101. வேலூர் - சிறுபாண்173.
102. வேளூர்
ப.சரவணன், சங்ககாலம் என்ற இணைய நூலிலிருந்து திரட்டப்பட்டது. https://books.google.co.in/books…
சங்க காலப்புலவர்களின் பெயர்களிலிருந்து அறியப்படும் ஊர்ப்பெயர்கள்
1. அஞ்சில்
2. அதங்கோடு
3. அரிசில்
4. அள்ளூர்
5. அளக்கர்ஞாழல் – மதுரையளக்கல் ஞாழலார் மகனார் மள்ளலார்
6. ஆடுதுறை
7. ஆமூர்
8. ஆர்க்காடு
9. ஆலங்குடி
10. ஆலத்தூர்
11. ஆலம்பேரி
12. ஆலி
13. ஆவூர்
14. இடைக்கழிநாட்டு நல்லூர்
15. இடைக்காடு
16. இடைக்குன்றூர்
17. இரணியமுட்டம்
18. இருந்தையூர்
19. இளம்பால் மதுரையிளம்பாலாசிரியர் சேந்தன்கூத்தனார்
20. இளம்புல்லூர்
21. உம்பர்க்காடு
22. உகாய்க்குடி
23. உமட்டூர்
24. உவர்க்கண்ணூர்
25. உரோடகம்
26. உறையூர்
27. எருக்காட்டூர்
28. எருமைவெளி
29. ஐயூர்
30. ஒக்கூர்
31. ஒல்லையூர்
32. கச்சிப்பேடு
33. கடம்பனூர்
34. கடியலூர்
35. கம்பூர் – புதுக்கயத்து வண்ணக்கண் கம்பூர்கிழார்
36. கயத்தூர்
37. கல்லாடம்
38. கருவூர்
39. கழாத்தலை
40. கழார்
41. கள்ளிக்குடி
42. கள்ளில்
43. களத்தூர்
44. காட்டூர்
45. காப்பியங்குடி
46. காப்பியாறு
47. காரி
48. காவிரிப்பூம்பட்டினம்
49. கிடங்கில்
50. கிள்ளிமங்கலம்
51. கீரந்தை
52. குடபுலம்
53. குடவாயில்
54. குதிரைத்தறி
55. குமட்டூர்
56. குமிழி
57. குராப்பள்ளி
58. குறுங்குடி
59. குறுங்கோழியூர்
60. குன்றம்
61. குன்றூர்
62. கூடலூர்
63. கொட்டம்பலம்
64. கோக்குளம்
65. கோட்டியூர்
66. கோடிமங்கலம்
67. கோவூர்
68. கோளியூர்
69. கோனாட்டு எறிச்சலூர்
70. சிறைக்குடி
71. சுள்ளம்போது – மதுரைச் சுள்ளம்போதனார்
72. செயலூர்
73. செல்லூர்
74. முகையலூர்
75. குளமுற்றம்
76. கோட்டம்பலம்
77. தங்கால்
78. தண்கால்
79. தாமப்பல்
80. துறையூர்
81. தேனீக்குடி
82. தொண்டி ஆமூர்
83. நல்லாவூர்
84. நல்லூர்
85. நல்விளக்கு
86. நற்றம் நத்தம்
87. நொச்சிநியமம்
88. படுமரம், படுமாற்றூர்
89. பறநாடு
90. பாலி – குண்டுகட் பாலி ஆதன்
91. பிசிர்
92. பிரான்மலை
93. புல்லாற்றூர்
94. பூங்குன்றம்.
95. பெருங்குன்றூர்
96. பெரும்பாக்கம்
97. பேரெயில்
98. பொதும்பில்
99. பொருந்தில்
100. போந்தை
101. மதுரை
102. மதுரைக்கள்ளில்
103. மதுரைக்கடையம்
104. மருங்கூர்
105. மருங்கூர்ப்பாகை
106. மாங்குடி
107. மாடலூர்
108. மாற்றூர்
109. மாறோக்கம்
110. மிளை
111. முக்கல்
112. முப்பேர்
113. முரஞ்சியூர்
114. முள்ளியூர்
115. மோசி, மோசிக்கரை
116. வாயில்
117. விரிச்சியூர்
118. விரியூர்
119. விற்றூறு
120. வீரைவெளி
121. வெண்ணி
122. வெண்மணி
123. வெள்ளோடு
124. வெள்ளூர்
125. வெள்ளைக்குடி
126. வேம்பற்றூர்
வி.பாலசாரநாதன் பதிப்பாசிரியர், சங்ககாலப் புலவர்கள், மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல்நிலைய முதற்பதிப்பு, 1986 சென்னை, என்ற நூலிலிருந்து திரட்டியது
திரட்டியவர் ச.ஆறுமுகம்.
இப்பட்டியல் முடிவுற்ற பட்டியல் எனக்கொள்ளவியலாது. இன்னும் தேடல் தொடரும்.

Wednesday, 13 June 2018

சங்க இலக்கியத் துளிகள் - 18 தூங்கல் வங்கம்

சங்க இலக்கியத் துளிகள் - 18
தூங்கல் வங்கம்
 களவுக்காதல் – நெய்தல் திணை – இரங்கல் – பகற்குறி வந்து தலைவியைச் சந்திக்க இயலாமல் திரும்பும் தலைவனுக்குத் தோழி கூறிய கூற்று.
கொண்கனே! தலைவியை வீட்டுக்குள் இற்செறித்து, தாய் அங்கேயே காவல் இருக்கின்றாள். (அதனால்தான் தலைவியால் உன்னைச் சந்திக்க இங்கே வர இயலவில்லை) இதை உனக்குச் சொல்வதற்காகவே பலப்பலவாகப் பூக்கள் பூத்துள்ள இந்தப் பூஞ்சோலையினுள் பகற்பொழுதுக்குரிய குறியிடமாகிய இங்கு வந்தேன்.
கற்களும் கொதிக்கும்படிக் காய்கின்ற வெயிலில் நடக்கும் கால்கள் வெம்பிப் பழுத்துப்போகின்ற பகல்பொழுதில் செல்வமும் அழகும் சிறப்பும் மிகுந்து பொலிவுடன் விளங்குகின்ற பெரிய நகருக்குள் வருகின்ற விருந்தினருக்குப் படைப்பதற்காகப் பொற்றொடி மகளிர் சமைத்த, கொக்குகளின் நகம் ஒத்த சோற்றில் ஒரு பகுதியினை முற்றத்தில் பலியாக வைக்க, அதனை உண்ணுகின்ற, குளிர்ச்சி தோன்றும் கண்களைக்கொண்ட காக்கை நாட்பொழுது மறைகையில், பெரும்பெரும் அங்காடிகளின் அசைகின்ற நிழற்பகுதியில் குவிந்திருக்கும் பசும் இறாலினைக் கவர்ந்துகொண்டு, நங்கூரமிட்டு அசைந்துகொண்டிருக்கும் மரக்கலங்களின் பாய்மரக் கூம்பில் சென்று அமருகின்ற மருங்கூர்ப்பட்டினத்தை ஒத்த அழகினையுடைய தலைவியின் இறுக்கமான அழகிய வளைகள் கழன்று விழுந்துவிடுவது போல் நெகிழ்வதைக்கண்டே தாய் அப்படிச் செய்கிறாள்.
பாடல் :
பல் பூங்கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்பக் கல் காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் 10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே.
நற்றிணை 258, நக்கீரர், நெய்தற் திணை – தோழி தலைவனிடம்சொன்னது
அடிநேர் உரை : பல் பூங்கானல் பகற்குறி மரீஇ – பலப்பலவாகப் பூக்கள் பூத்துள்ள இப் பூஞ்சோலையினுள் பகற்பொழுதுக்கான குறியிடத்துக்கு;
செல்வல் – வந்துள்ளேன்; கொண்க – கடற்கரைத் தலைவனே!; செறித்தனள் யாயே தலைவியை வீட்டுக்குள் இற்செறித்துக் காவலிருப்பது, அவளது தாய்தானே.;
கதிர் கால் வெம்ப க் கல் காய் ஞாயிற்று – வெயிலில் நடக்கும் கால்கள் வெம்பிப் பழுக்குமாறும் கல்லுங்கூடக் கொதிக்கின்ற பகற்பொழுதில்;
திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார் – செல்வமும் அழகும் பெருமையும் மிக்க பெரும் நகருக்கு வருகின்ற விருந்தினருக்கு வழங்குவதற்காக;
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த – பொன்னாலாகிய வளைகளை அணிந்த மகளிர் சமைத்து முற்றத்தில் பலியாக வைத்த;
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி , எல் பட, - கொக்கின் நகம் ஒத்த சோற்றினைப் பெருமளவில் உண்டு, நாட்பொழுது மறைகையில்;
அகல் அங்காடி அசை நிழல் குவித்த – அகன்ற பெரும் அங்காடிகளின் அசைகின்ற நிழற்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும்;
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை – பசுமையான இறாவினைக் கவர்ந்த குளிர்ந்த கண்களையுடைய காக்கை;
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் – அசைந்தாடிக்கொண்டிருக்கும் கப்பலின் பாய்மரக் கூம்பில் சென்று தங்கும்.
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் – மருங்கூர்ப்பட்டினத்தின் அழகினை ஒத்த தலைவி;
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – இறுக்கமாக அணிந்திருந்த அழகிய வளையல்கள் கழன்றோடுவதுபோல் நெகிழ்ந்தமை கண்டதாலேயே.
அருஞ்சொற்பொருள் :
கால் – கால்கள்; காற்று எனினும் ஒக்கும். வியல் நகர் – நகரம்; பெரிய வீடு எனினும் ஒக்கும். உகிர் – நகம்; நிமிரல் – சோறு; மாந்தி – பெருமளவில் உண்டு; எல் – பகற்பொழுது; பட – மறைய; பச்சிறா – பசுமையான இறா, அப்போதுதான் கடலிலிருந்தும் கொண்டுவந்த இறா; தூங்கல் – அசைதல் ; வங்கம் – கப்பல், மரக்கலம்; கூம்பு – பாய்மரக் கூம்பு ; சேக்கும் – தங்கும், அமரும். நெருங்கு – இறுக்கமாக, நெருக்கமாக; ஏர் – அழகு ; எல்வளை – ஒளிபொருந்திய வளையல்.
கவிதை நயம் :
கொண்க, இற்செறித்தனள் யாயே எனக் கூறுவதன் மூலம் தலைவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவனுக்கு, தலைவனைச் சந்திக்கத் தலைவியால் வரமுடியாத நிலையும் தலைவி, அவளது தாயாலேயே இற்செறிக்கப்பட்டுள்ளாளென்ற முதல் செய்தியினையும், தோழி, அவசர அவசரமாக, தலைவனின் அச்சம் மற்றும் கவலையைத் தீர்க்குமாறு கூறிவிடுகிறாள். அதனைத் தொடர்ந்த செய்தியாக, காலைப் பொசுக்குகின்ற கதிரின் வெம்மையும் கல்லும் கொதிக்கின்ற அளவுக்கான பகற்பொழுது குறித்துக் கூறுகிறாள். இது அவள் தலைவியின் நலம் மற்றும் தலைவனுக்குத் தகவல் தெரிவிக்கும் முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு கல்லும் காயும் பகல்பொழுதில் கால்கள் வெம்ப நடந்துவந்த சிரமத்தை, தலைவன் மற்றும் தலைவியின் வாழ்க்கை மீதான அக்கறையினை வெளிக்காட்டுவதான முயற்சி. அதனைத் தொடர்ந்து மருங்கூர்ப்பட்டினத்துக்கு வருகின்றவர்களுக்காக விருந்து சமைக்கப்படுவதும் காக்கைக்கு பலிச்சோறு வழங்கப்படுவதும் குறிப்பிடுவதன் மூலம் தமது ஊர்மக்களின் விருந்தோம்பும் உயர் பண்பாட்டினைப் பொற்றொடி மகளிர் தலையாகக் கருதுவதும் காக்கைக்கும் உணவளிக்கின்ற ஈரநெஞ்சத்தினையும் மரபினை மதிக்கும் மாண்பும் உணர்த்தப்படுகிறது. அடுத்த செய்தி மருங்கூர்ப்பட்டினத்தின் பெரும்பெரும் அங்காடிகளும் அவற்றின் நிழற்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் பச்சிறாக் குவியல்களும் அசைந்தாடிக்கொண்டிருக்கின்ற கப்பல்களும் அந்த நகரத்தின் வணிகம் மற்றும் செல்வநிலையினை உணர்த்துகிறது. அத்தகைய மருங்கூர்ப்பட்டினம் ஒத்த அழகுடையவள் தலைவி எனும் போது விருந்தோம்பலும், உயிர்களுக்கு உணவிடும் கருணைநெஞ்சமும் மரபினை மதிக்கும் மாண்புமுடையவள் தலைவியென அவளது உள்ள அழகும் பண்பாட்டு உயர்வும் கூறப்படுகிறது. தலைவி பெருஞ்செல்வமுள்ள நகரில் பெருஞ்செல்வ வாழ்க்கையினை உடையவளென்பதும் உணர்த்தப்படுகிறது. மருங்கூர்ப்பட்டினத்தின் பேரழகினைக்கொண்ட தலைவி ஏன் இற்செறிக்கப்பட்டாளென்ற கேள்விக்கு பதிலாக, அவளது இறுக்கமான வளைகள் நெகிழ்ந்தமை கண்டு தாய் ஐயமுற்று இற்செறித்தாள் எனக்கூறிவிடுகிறாள். தலைவியின் வளை ஏன் நெகிழவேண்டுமெனில் தலைவனைச் சந்திக்கவியலாமற்போகும் சூழ்நிலை நினைந்தே தலைவன் மீதுள்ள ஏக்கத்தாலேயே வளை நெகிழ்ந்ததென்பது தலைவனுக்கு குறிப்பாக உணர்த்துவதாகிறது. எனவே உள்ள அழகும் உடலழகும் செல்வ உயர்வும் பண்பாட்டு மேன்மையுமிக்க தலைவியை உடனடியாக தலைவன் தமருடன் வந்து வரைந்துகொள்ளவேண்டுமென்பது தலைவனுக்கான உடனடிச் செய்தியாக உணர்த்தப்படுகிறது.
தலைவன் தலைவியைத் திருமணம் செய்தேயாக வேண்டுமென்பது தோழியின் நோக்கம். அந்த நோக்கத்திற்கேற்ப சமுதாயப் பண்பாட்டை பெருமைபட எடுத்துரைத்து, நகரின் செல்வம் மற்றும் வணிகப்பெருமையைக் கூறி, தலைவியின் உள்ள அழகும் பண்பாட்டுச் சிறப்பினையும் உணர்த்துகின்ற உளவியல் பாங்கினை உன்னி உணர்ந்து மகிழ்தற்குரியது.
இக்கவிதையில் நாம் அறியக்கிடக்கும் செய்திகள்
1. அலரென்று எதுவும் தெரியவராமலேயே,மகளின் வளை நெகிழ்ந்ததைக் கண்டதுமே தாய் ஐயுற்று இற்செறிக்கின்ற, தாயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
2. மருங்கூர்ப்பட்டினத்தில் கோடைகால வெய்யில் கல்லும் கொதித்துக் கால்கள் வெம்புமளவுக்கு இருந்துள்ளது.
3. வருவிருந்தோம்பலுக்காகப் பொற்றொடி மகளிர் கொக்கு உகிர் நிமிரல் (உயர் ரக அரிசி) சமைத்தனர்.
4. தம் வீட்டு முற்றத்தில் காக்கைகளுக்கு பலிச்சோறு படைத்தனர்.
5. மருங்கூர்ப்பட்டினத்தில் பெரும்பெரும் அங்காடிகள் இருந்தன.
6. பெரும் அங்காடிகளின் கட்டிட நிழல்களில், கடலில் பிடித்து வந்த இறா மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
7. மருங்கூர்ப்பட்டினத்துக் கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நின்றன.
8. மருங்கூர்ப்பட்டினம் ஒரு பெருவணிகத்தலம்; சிறந்த துறைமுகமுமாக விளங்கியது.
மருங்கூர்ப்பட்டினம் குறித்து தீக்கதிரில் வெளிவந்துள்ள கட்டுரை :
பாண்டியனின் துறைமுகப் பட்டினமான மருங்கூர்பட்டினம் சோழனின் காவிரிப்பூம்பட்டினத்தினை ஒத்ததாக அமைந்திருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகப் பகுதியானது மருகூர்ப்பாக்கம் என்றும் நகர்ப்பகுதி பட்டினப்பாக்கம் என்றும் இருகூறாகப் பிரிந்திருந்தது போன்றே மருங்கூர்ப் பாக்கத் துறைமுகமும் ஊணூர், மருங்கூர் பட்டினம் எனஇரு கூறாகப் பிரிந்திருந்தது. மேலும்காவிரிப்பூம்பட்டினத்தின் பட்டினப்பாக்கமானது மதிலையும் அகழியையும் கொண்டுஅமைந்திருந்தது போன்று ஊணூரையும் மதில் சூழ்ந்திருந்தது. பிற்காலப் பாண்டியர்களின் பல்வேறு ஆட்சிக் காலத்தில் கிழக்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்கள் பல உருவான நிலையில் தொன்மையான மருங்கூர் பட்டினம், கொற்கை, தொண்டி முதலானவை செல்வாக்கிழந்தன. குலோத்துங்க சோழப் பட்டினம், அம்மப் பட்டினம், ஆவுடையார் பட்டினம், பவித்ர மாணிக்கப்பட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம், நானாதேசிப் பட்டினம், மேன்தோன்றிப் பட்டினம், பெரியப் பட்டினம், நினைத்ததை முடித்தான் பட்டினம், குலசேகரப் பட்டினம், மானவீரப் பட்டினம், காயல் பட்டினம், சோணாடு கொண்டான் பட்டினம், வென்றுமுடி சூடிய சுந்தரபாண்டியன் பட்டினம், வீரபாண்டியன் பட்டினம் முதலான பட்டினங்கள் பிற்காலத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்திருந்த பாண்டிய அரசர்களின் பட்டினங்களாக அறியப்படுவனவாகும்.
சங்ககால மருங்கூர் பட்டினத்தின் மேற்கே ‘ஊணூர்’ என்ற ஊர் அமைந்திருந்தது. இவ்வூர் மதிலை அரணாகக் கொண்டிருந்தது என்பதை அகம். 227 ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. பாடல் வரிகள்(18-20) வருமாறு: “கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர் / விழுநிதிதுஞ்சும் வீறுபெறு திருநகர் / இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம்” . இனி ஊணூரின் அமைப்பினையும் அதன் தன்மைகளையும் பின்வரும்படி சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம் : – இவ்வூரானது கடல் அலைகள் எப்பொழுதும் வந்து மோதும் பகுதியினை உடையது. – நெல்வளம் மிக்க வயல்களை உடைய ஊர்களைக் கொண்டிருந்தது. மேலும், குளிர்ச்சிப் பொருந்திய சாய்க்கானம் என்னும் பகுதியில் நெடிய கதிர்களைக் கொண்ட நெல்வயல்கள் பல இருந்தன. – இறால் மற்றும் பிற மீன் இனங்களைப் பிடிக்கும் பகுதியாக கடற்கரைப்பகுதி அமைந்திருந்தது. – இவ்வூர் பகுதியில் கடற் சோலை என்ற பகுதி அமைந்திருந்தது. – கடல் பரப்பின் மணல் மேடான பகுதியில் நாவாய்கள் இடம் அறிந்து செல்ல ஒளிபொருந்திய விளக்கு (கலங்கரை விளக்கம்) அமைக்கப் பட்டிருந்தது. (அகம். 255)- இப்பகுதியில் உள்ள கடல் அலைகளுக் கிடையில் புலால் நாற்றம் வீசியபடி இருக்கும். – வெண்ணெல் இப்பகுதியில் சிறப்பாக விளைந்திருந்தன. – நெல், தேன் எடுத்து உண்பவர்களான குயவர் சேரி ஒரு பக்கமும் சிறு சிறு மீன்களைப் பிடித்து உண்ணும் மக்கள் வாழும் பாண்சேரி ஒரு பக்கமும் என ஊணூர் அமைந்திருந்தது. (புறம் . 348)- நீர் துறையில் உள்ள மரங்களில் யானைகள் கட்டப்பட்டிருந்ததால் அம்மரங்களின் வேர்கள் வெளியே தெரிந்தன. – இவ்வூரில் உள்ள மரநிழலில் பெரிய பெரிய தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ‘தழும்பன்’ என்ற அரசனே ஊணூரினை ஆட்சி செய்தான் என்பதை சங்கப் பாடல்கள் (நற். 300, புறம் 348, அகம். 227) பதிவு செய்கின்றன. யானை மிதித்த காரணத்தால் ‘வழுதுணங்காய்’ போன்ற தழும்பினை இவன் பெற்றான். இதனாலேயே இவன் ‘தழும்பன்’ அல்லது ‘வழுதுணைத் தழும்பன்’ என அழைக்கப்பட்டான்.
தழும்பன் குறித்து ‘தூங்கல் ஓரியார்’ என்ற புலவர் பாடியுள்ள பாடல் கிடைக்கவில்லை. இனி மருங்கூர் பட்டினத்தின் அமைப்பினைப் பார்ப்போம். ஊணூரினை அடுத்து அமைந்திருந்த மருங்கூர் பட்டினம் பெரும்செல்வ வளம் நிறைந்த பகுதியாக இருந்தது. பொலிவாக இப்பட்டினம் தோன்றும். மேலும் இப்பட்டினத்தில் உப்பு விளையும் வயல்கள் பல இருந்தன. இரவில் ஒளி வீசும் கடைத்தெருக்கள் இருந்தன. அத்தெருக்களில் எப்பொழுதும் ஆரவாரம் எழுந்தபடி இருக்கும். (அகம். 227) பட்டினத்தில் உள்ள கடைகளில் குவித்து வைத்திருந்த இறால்களை காகங்கள் கவர்ந்து சென்று துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாவாய்களின் பாய்மரக் கம்பத்தில் அமர்ந்திருக்கும் என (நற்றிணை 258 ஆம் பாடல்) குறிப்பிடுகின்றது. இவ்வாறாக மருங்கூர் பட்டினம், ஊணூர் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் ‘தழும்பன்’ ஆட்சிப் பரப்பில் அவை எவ்வாறு சிறந்து விளங்கின என்பதை விவரிக்கின்றன. மருங்கூர் பட்டினத்தின் வர்த்தகம் அதுசார்ந்து கிடைத்த பொருள்வளம் தழும்பன் அரசனை செல்வந்தனாக மாற்றியிருந்தது. இதன் பொருட்டு அவன் தன்னைப் பாடிவரும் புலவர்களுக்குக் குறைவின்றி பெரும் பொருட்களை வழங்கியதால் அவன் புகழ் தமிழகம் முழுவதும் பரவியிருந்தது எனஅகம். 227 ஆம் பாடலில் குறிப்பு உள்ளது. மதுரைக்காஞ்சியில் பாண்டியன்நெடுஞ்செழியனின் கடற்கரைப்பட்டினமான ‘நெல்லூர்’ குறிப்பிடப்படுகின்றது. மருங்கூர் பட்டினமும், ஊணூரும் சேர்ந்துதான் ‘நெல்லூர்’ என பிற்காலத்தில் பெயர்பெற்றிருக்க வேண்டும் என மயிலைசீனி. வேங்கடசாமி தனது ஆய்வின் வழி நிறுவுகின்றார். ஊணூர் பகுதியில் நெல் அதிகமாக விளையும் என சங்க இலக்கியம் குறிப்பிடுவதை நாம் முன்பே பார்த்தோம். காலப்போக்கில் இவ்வூர் நெல்லூர் எனப் பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்நெல்லூர் ‘சாலியூர்’ எனவும் குறிக்கப்பட்டது. தாலமி குறிப்பிடும் ‘சாலூர்’ என்பது இவ்வூரையே குறிப்பதாகும், என்ற முறையில் மயிலை சீனி. வேங்கடசாமி தனது ஆய்வு முடிவுகளை முன்வைத்தார். இனி ‘மதுரைக்காஞ்சி’ மருங்கூர் பட்டினம் குறித்து கூறும் பகுதியினைப் பார்ப்போம்.
‘தொடுவானமும் கடலும் ஒன்றாக அமைந்த அச்சம் தருகின்ற பெரிய கடலிலேஅலைகளைக் கிழித்துக் கொண்டு காற்றின்உதவியினால் இக்கரையை அடைவதற்குப் பாய்களை விரித்துக் கொண்டு வந்த பெரிய நாவாய்கள், இந்தத் துறைமுகத்தில் கூட்டமாக வந்து தங்கியிருந்தன. நாவாய்களில் இருந்து பண்டங்களை இறக்குமதி செய்த போது முரசு முழங்கிற்று. கப்பல்கள் துறைமுகத்தில் தங்கியிருந்த காட்சியானது வெள்ளத்தை முற்றுகை செய்யும் மலைபோலத் தோன்றும். இத்தகைய துறைமுகத்தோடு ஆழ்ந்த கடலாகிய அகழியையும் உடைய நெல்லூரை வென்று கைக்கொண்ட உயர்ந்த வெற்றியுடைய வேந்தன் பாண்டியன். (மதுரைக்காஞ்சி. 75-88 )இவ்வாறாக மருங்கூர்பட்டினம் தழும்பன் என்ற அரசனின் ஆட்சியின் கீழும்,பிற்காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனால் வெற்றி பெறப்பட்டு அவன் ஆட்சியின் கீழும் இருந்ததை மதுரைக்காஞ்சியின் வழி அறியலாம். பரணர், நக்கீரர், மதுரை மருதன் இளநாகனார் ஆகியோரால் ‘தழும்பனும்’ அவன் ஊர்களும் பாடப்பட்டுள்ள நிலையில்மாங்குடி மருதனார் பாண்டியனையும் மருங்கூரையும் சேர்த்துப் பதிவு செய்துள்ளது சங்கப் பாடல்களுக்கு இடையில் உள்ள கால இடைவெளியைக் காட்டுகின்றது. மருங்கூர் என்ற பெயரில் தமிழத்தில் சிலஊர்கள் இன்றும் உள்ள நிலையில் தொண்டிக்கு மேல் உள்ள மருங்கூர் பட்டினமே சங்க இலக்கியம் குறிப்பிடும் மருங்கூர் பட்டினமாகும். ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி இப்பட்டினத்தை வரைபடத்தில் குறிப்பிடும்பொழுது வைகை ஆற்றுக்கும் தாமிரபரணி ஆற்றுக்கும் இடையில்குறிப்பிடுகின்றார். இது பொருத்தமற்றதாகவே உள்ளது. இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘பாம்பாறு’ கடலில் கலக்கும் பகுதியிலேயே இம்மருங்கூர் பட்டினம் அமைந்துள்ளதைப் பார்க்கலாம். மேலும் இப்பட்டினத்தை ஒட்டி ‘அலையாத்திக் காடுகள்’ உள்ள பகுதி அமைந்துள்ளது. சிதம்பரம் அருகில் அமைந்துள்ள பிச்சாவரம் காடுகளைப் போன்று பரந்த அளவில் அல்லாமல் சிறிய அளவிலே அவை இங்குள்ளதைக் காணலாம். சங்கப் பாடலில் குறிக்கப்படும் (அகம். 220) ‘கடல் சோலை’ என்ற பகுதியை அலையாத்திக் காடுகள் உள்ள பகுதியோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவ்வாறு ஒப்பிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென தொல்லியல் ஆய்வாளர் ர. பூங்குன்றன் அவர்களும் விளக்கினார்.
‘தூங்கல் ஓரியார்’ என்ற புலவர் தழும்பன் என்ற அரசனைப் பாடியுள்ள நிலையில்இன்றைய மருங்கூர் பட்டினத்தில் அமைந்துள்ள ஓரியூர், ஓரூர் என்ற ஊர்களின் பெயர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது ‘ஓரியார்’ என்பதுடன் ஒத்துப்போவதை அறியலாம். மேலும் இன்றைய மருங்கூர் பட்டினம் மதுரையின் நேர் கிழக்கே கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளதையும் மதுரை மருதன் இளநாகனார் இதனை சிறப்பாக பதிவு செய்துள்ளதையும் பார்க்கலாம்.. மேலும் அவர் (அகம். 255 அம் பாடலில்) மருங்கூர் பட்டினப் பகுதியை பெயர் குறிப்பிடாமல் குறிப்பால் உணர்த்திப் பதிவு செய்துள்ளது அப்பகுதிக்கும் அவருக்குமான நெருக்கத்தையே காட்டுகின்றது. மாறாக, இராமநாதபுரத்தில் அமைந்துள்ள ‘அழகன்குளம்’ துறைமுகப்பகுதிதான் பண்டைய மருங்கூர் பட்டினம் என ஆய்வாளர் சம்பகலட்சுமி குறிப்பிடுவது பொருத்தமற்றது என தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். இன்றைய ‘அழகன்குளம்’ பகுதி சங்க இலக்கியத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பது குறித்த பதிவுகள் இல்லை. மாறாக இப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வு முடிவுகளில் இப்பட்டினம் பலநாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததைக் காட்டுவதுடன் மட்டுமல்லாமல் அங்கு கிடைக்கப் பெற்ற பானையோடுகளின் காலம் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன் என்பதையும் காட்டுகின்றன. இந்நிலையில் இவ்வளவு தொன்மையான பட்டினம் மருங்கூராகத்தான் இருக்கும் என்று ஆய்வாளர்கள் சிலர்தம் கருத்தினை முன்வைப்பது வலுவற்றதாகவே உள்ளது.
மேலும் இப்பகுதி சங்ககாலத்தில் எவ்வாறு குறிப்பிடப்பட்டது என்றும், மாறாக அது குறித்த பாடல்கள் பிற்காலத்தில் கிடைக்காமல் மறைந்து போனதா? என்பதெல்லாம் ஆய்வுக்குரிய ஒன்றுதான்.இவ்வாறாக நாம் முன்பு பார்த்த முடிவுகளின் அடிப்படையில் இன்றைய இராமநாதபுரம் பகுதியில் உள்ள ‘பாசிப்பட்டின’த்திற்கு மேல் அமைந்துள்ள மருங்கூர் பட்டினமே சங்ககால துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.
PREVIOUS ARTICLE

Sunday, 10 June 2018

சோறுவகைகள்

சோறு வகைகள்
அரிசிச்சோறு
கோதுமைச் சோறு
குதிரைவாலிச் சோறு
சோளச்சோறு
கம்மஞ்சோறு
வரகரிசிச்சோறு
தினையரிசிச்சோறு
குறுணைச் சோறு - குறுநொய்ச்சோறு
கற்றாழைச் சோறு – காழ் அற்ற மூங்கில் மரங்களின் பகுதி பப்பாளிச் சோறு
பனஞ்சோறு
தென்னஞ்சோறு
வாழைச்சோறு – வாழைக்கிழங்கில் அகழ்ந்த சோறு
புற்றாஞ்சோறு - புற்றுக்குள் ஈசலுடன்கலந்த மண்
பத்தியச்சோறு
கீரைச்சோறு
பருப்புச்சோறு
சாம்பார்ச் சோறு
ரசம் சோறு
மோர்ச்சோறு
தயிர்ச்சோறு
புளிச்சோறு
எள்ளுச்சோறு
உளுந்தஞ்சோறு
கூட்டாஞ்சோறு
வடிசோறு
கறிசோறு
கலவைச்சோறு
வெந்தசோறு
வேகாத சோறு
வயிற்றுச் சோறு – வயிற்றுச் சோற்றுக்குப் பஞ்சமில்லை.
பிச்சைச்சோறு
அரைவயிற்றுச் சோறு – அரைவயிற்றுச் சோறு சாப்பிட்டு வளர்ந்த பிள்ளை.
திருமணச் சோறு
பலிசோறு
பொங்கச்சோறு
பச்சரிசிச் சோறு
புழுங்கரிசிச் சோறு
பழுப்பரிசிச் சோறு
நெய்ச்சோறு
பால்சோறு
ஊன்சோறு
மீன்சோறு
கொழுஞ்சோறு – கொழுப்பு (நிணம்) கலந்து சமைத்தது
செஞ்சோறு (1) – செஞ்சோற்றுக்கடன்
செஞ்சோறு (2) – சிவப்பரிசிச் சோறு.
வெண்சோறு
தண்ணிச்சோறு
வெறுஞ்சோறு
பழையசோறு
சுடுசோறு
வீட்டுச் சோறு
கடைச்சோறு
எடுப்புச்சோறு
விலைச்சோறு
பட்டைச்சோறு
கைச்சோறு
கூட்டாஞ்சோறு
விளையாட்டுச்சோறு
நிலாச்சோறு
காடாங்கரைச் சோறு
ஆற்றங்கரைச் சோறு
கத்தரிக்காய்ச் சோறு
தேங்காய்ச்சோறு
மாங்காய்ச்சோறு
தக்காளிச்சோறு
எலுமிச்சைச்சோறு
நெல்லிக்காய்ச்சோறு
கிச்சிலிச்சோறு
கறிவேப்பிலைச் சோறு
மல்லிச் சோறு
புதினாச்சோறு
தீயல் சோறு
ஒருவாய்ச் சோறு – ஒருவாய்ச்சோற்றுக்குக்கூட வழியில்லை.
கட்டுச்சோறு
சட்டிச்சோறு
பானைச்சோறு
படைப்புச்சோறு
ஊட்டுச்சோறு
எச்சில் சோறு
எட்டுவீட்டுச் சோறு
சிறுசோறு
பெருஞ்சோறு
வார்ப்புச்சோறு
உருளிச்சோறு
அண்டாச்சோறு
படியரிசிச்சோறு
நாழியரிசிச்சோறு – நாய் நினைத்தால் நாழியரிசிச்சோறு; பேய் நினைத்தால் ஒரு பிள்ளை
ஒரு உருண்டைச் சோறு – கையில் உருட்டும் ஒரு உருண்டைச் சோறு.
ஒருபிடிசோறு - ஜெயகாந்தனின் ஒருபிடி சோறு சிறுகதை
கைப்பிடிச் சோறு
பருப்புப்பொடிச் சோறு
காணப்பொடிச் சோறு
மிளகுச்சோறு
சர்க்கரைச்சோறு
ஊசச்சோறு
மல்லிப்பூ சோறு
புத்தரிசிச் சோறு
நாய்ச்சோறு - உன் வீட்டு நாய்ச்சோறு கூட எனக்கு வேண்டாம்.
மாப்பிள்ளைச் சோறு
விருந்துச்சோறு
சாவுச்சோறு – இழவு வீட்டுச் சோறு
கோயில் சோறு – கோயில் பணியாளர்களுக்குக் கூலியாகத் தினமும் வழங்கப்படும் உணவு.
உண்டைக்கட்டிச் சோறு
நைவேத்தியச்சோறு
சொந்தச் சோறு – சொந்த உழைப்பில் கிடைக்கும் உணவு.
பேய்ச்சோறு (1) - பேய்க்கு வழங்கப்படும் சோறு
பேய்ச்சோறு (2) – அவனா பேய்ச்சோறு தின்பானே! அளவுமீறிச் சாப்பிடும் உணவு
எட்டு ஆள் சோறு – அவன் ஒரே ஆள், எட்டு ஆள் சோறு தின்பானே!
ஊர்ச்சோறு – சலவை மற்றும் சவரத் தொழிலாளர்களுக்குக் கிராமத்து வீடுகளில் தினமும் உணவு வழங்கப்பட்டு வந்தது. இவ்வுரிமை மடவளி என அழைக்கப்பட்டு வந்துள்ளது. (கவிப்பித்தனின் மடவளி நாவல்). இப்படியான சோற்றினை வாங்கி வருவதை ஊர்ச்சோறு வாங்கிவருதல் எனக்குறிப்பர்.
கொண்டிச்சோறு – சென்னைப் புறநகர் மற்றும் சேரிப்பகுதிகளில் சோறு பொங்கி அதனை மூன்று நாட்கள் புளிக்கவைத்து போதைக்காக விற்பனைக்குக் கிடைப்பது.
மாஞ்சாச்சோறு – மனிதரின் நெஞ்சுக்கறி என்பதற்கான சென்னைப் பேச்சு வழக்கு
தண்டச்சோறு – உழைக்காமல் தின்பவன். ஒன்றுக்கும் உதவாதவன், பூமிக்குப் பாரம் சோற்றுக்குக் கேடு.
ஓசிச்சோறு
திரளைச்சோறு – இரத்தம் கலந்து விரவி பேய்களுக்கு எறியும் சோறு
விரதச் சோறு - விரதமிருந்து சாப்பிடும் உணவு
மண்சோறு - கோயிலில் பிரார்த்தனையாகச் சாப்பிடும் சோறு.
படிச்சோறு - திருவிடைமருதூர் நாறும்பூ நாதர் கோவிலில் படிப்பாயாசம் உண்பது போல் ஆற்றங்கரைப்படியில் உண்பது.