வேலூர் - சென்னை பேருந்து போக்குவரத்து.
1984 முதல் 1997 வரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய காலத்தில் உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், சேப்பாக்கம், எழிலகம், குறளகம், மிண்ட், அரசு அச்சகம் என ஏதாவது ஒரு வேலையாகப் பணிநாட்களில் அடிக்கடி, வாரத்தில் இரண்டு, மூன்று நாட்களெனச் சென்னைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திலிருந்தேன்.
எனது வீடு வள்ளலாரில் இருப்பதால் வள்ளலார் பேருந்து நிறுத்தத்தில் நின்று சென்னை பேருந்தில் ஏறிக்கொள்ள வசதியாக இருந்தது. என்ன! இருக்கை கிடைக்காது, நின்றுகொண்டேதான் செல்ல வேண்டும். சில நேரங்களில் படிக்கட்டுப் பாதையில் உட்கார இடம் கிடைக்கும். செய்தித்தாளை விரித்து அதன் மேலமர்ந்து, ஏதாவதொரு புத்தகத்தைப் படித்துக்கொண்டே அதில் ஆழ்ந்துவிடுவது வழக்கமாக இருந்தது.
இப்போதுமாதிரி, விரைவுப்பேருந்து, 1 - 3 நிறுத்தம், இடைநில்லாப் பேருந்து, எல்லாமே புறவழிச்சாலை, பாய்ண்ட் டு பாய்ண்ட் மாதிரியான பேருந்துகள் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
வேலூரில் கிளம்பினால் ஆற்காடு, இராணிப்பேட்டை, முத்துக்கடை, வாலாசா, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, ராஜகுளம், பாலுசெட்டி சத்திரம், வெள்ளைகேட், காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், நசரத் பேட்டை, பூந்தமல்லி, போரூர், மவுண்ட், கிண்டி, SIET, தேனாம்பேட்டை, சிம்சன்,டிவிஎஸ், எல்.ஐ.சி, அண்ணாசிலை, பல்லவன் என முப்பதுக்கும் மேற்பட்ட நிறுத்தங்களிலும் நின்று ஆளிறக்கி, ஆள் ஏற்றி பிராட்வே சென்றுசேர்வதற்கு மூன்றே முக்கால் மணிக்கும் அதிகம் தான் ஆகுமே தவிர குறைவதில்லை.
திரும்பி வரும்போதோ பிரச்னை மேல் பிரச்னையாகத்தான் இருக்கும். அநேகமாக வெள்ளை கேட்டில் ரயில்வே கேட் போட்டு அரை மணி நேரமாவது தாமதமாகும். வீடு போய்ச்சேருவதற்கு பத்து அல்லது பதினொரு மணியாகி விடும்.
அப்போது வேலூர் - சென்னை பேருந்துகள் அனைத்தும் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட்டன. அதிலும் அந்தப் பேருந்து நிலையத்தில் வேலூர் பேருந்து புறப்படுமிடம் இருக்கிறதே, அது அப்படியொரு கண்ணராவியான சூழ்நிலையில் சிறுநீர் மற்றும் திறந்தவெளிக் கழிவறை நாற்றத்தோடிருந்தது. பேருந்துகளும் அரைமணி, முக்கால் மணி நேரத்துக்கொருமுறை தான் புறப்படும். இடம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். அங்கிருந்து வேலூர் வரையிலுங்கூட நின்றுகொண்டே பயணித்த நாட்கள் அதிகம்.
2002 -இல் கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்கத் தொடங்கியபின் வேலூர் பேருந்து போக்குவரத்து எவ்வளவோ சீரடைந்திருக்கிறது. பிராட்வேயை ஒப்பிட்டால் CMBT எவ்வளவோ சுத்தமான ஒரு பராமரிப்பு.
பேருந்துகளும் அதிகம் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு சென்றால் உடனடியாகவே ஏதாவதொரு வேலூர் பேருந்து புறப்படத் தயாராக இருக்கும். ஏறி உட்கார வேண்டியதுதான்.
புறவழிச்சாலை பேருந்துகளில் இரண்டரை மணி நேரத்தில் வேலூர் போய்ச் சேர்ந்துவிடமுடிகிறது. இதர பேருந்துகளென்றாலும் இரண்டே முக்கால் மணி நேரத்திற்குள் வேலூர் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார்கள்.
அரசு பேருந்து சேவைகளைப் பொறுத்த வரையில் வேலூர் - சென்னை சேவை மிகமிகச் சிறப்படன் செயலாற்றுவதாக உறுதிபடக்கூற முடிகிறது.
நடத்துநர்களின் பழகுமுறை, பயணிகளுக்கு மதிப்பு அளிப்பது போன்ற நடவடிக்கைகள் எல்லாமே சிறப்பாக இருக்கின்றன. வாரத்தில் மூன்று நாட்களேனும் சென்னை சென்று வந்துகொண்டிருந்த காலத்தில் அநேகமாக எல்லா நடத்துநர்களுமே எனக்கு நண்பர்களாகிவிட்டிருந்தனர்.
நண்பர்களென்றால் அதற்காகத் தோளில் கைபோட்டுப் பேசுபவர்கள் என்று அர்த்தமில்லை; நட்பு பாவத்துடன் ஒரு புன்சிரிப்பு; ஒரு சிறிய முக அசைப்பு, இன்று கொஞ்சம் வெயில் அதிகந்தான் என்பது மாதிரியான ஒரு இணக்க மொழி; சார், வாலாசாவில் அந்த சீட் இறங்கும், நீங்கள் போய் அமர்ந்துவிடுங்களென்ற முன்தகவல்; இவ்வளவு போதாதா. அவர்களெல்லோருமே நட்புணர்வுடன்தான் செயல்பட்டனர்.
நன்றி செலுத்தப்படவும் நினைவுகூரவும் தகுதியான சிறந்த பணியாளர்கள்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊழலை ஒழித்து, மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தி வளர்ச்சிக்கான முயற்சியினை மேற்கொள்ளவேண்டியது அரசின் கடமை என்பதை இப்போது நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment