Tuesday, 26 June 2018

உளுந்தங்களி (அபுனைவு 23)

பேத்திக்காக பாட்டி கிண்டிய உளுந்தங்களி.
நெல்லை மற்றும் நாஞ்சில் நாட்டில் பெண்குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் நல்லதென்று உளுந்தங்களி கொடுத்து சாப்பிடவைப்பதைப் பாரம்பரியமாகவே கடைப்பிடிக்கின்றனர்.
பூப்படையும் பருவத்திலும் அதனைத் தொடர்ந்த நாட்களிலும் பெண்குழந்தைகள் உளுந்தங்களி சாப்பிடுவதால் உடல் வளர்ச்சி சீராக இருக்குமென்றும் பிற்காலத்தில் இடுப்பெலும்பு வலுப்பெற்று மகப்பேற்றின் போது எளிதாக இருக்குமென்றும் நம்புகின்றனர். அதனால் பாட்டிகள் அடிக்கடி உளுந்தங்களி கிண்டுவது வழக்கம்.
தேவையான பொருட்கள்
1. ஒரு பங்கு உளுந்தம்பருப்போடு (தோல் நீக்கவேண்டிய அவசியமில்லை) ஒரு பங்கு பச்சரிசி கலந்து திரித்த மாவு,
2.இரண்டு பங்கு கருப்புக்கட்டி,
3. நூறு மி.லி நல்லெண்ணெய்.
செய்முறை
வாணலியில் மாவுக்கு இரண்டு பங்கு தண்ணீர் மட்டும் ஊற்றிக் கொதிக்கவைத்து, பொடித்த கருப்புக்கட்டியை அதில் கொட்டிப் பாகு காய்ச்சி, அதனை வலைக்கரண்டியில் வடிகட்டியபின்னர், பாகினை மீண்டும் வாணலியில் சூடுபடுத்தவேண்டும். பாகு கொதித்துவரும்போது மாவினைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிப்பிடிக்காமல் தேவைக்கேற்றவாறு நல்லெண்ணெய் ஊற்றிக் கட்டிசேராமல் கிண்டிக்கொண்டேயிருக்கவேண்டும்.
பிசுபிசுப்பு மாறி வாணலியில் ஒட்டாமல் திரள்கின்ற பக்குவத்தில் இறக்கிவைத்து எண்ணெய் தொட்டுத் தொட்டு தேவைக்குத் தக்க உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளலாம். களியில் சேர்த்த எண்ணெய் சிறிதாக மேலாக க் கசிந்து வரத்தான் செய்யும் அந்த எண்ணெயோடுதான் சாப்பிடவேண்டும்.
ஒன்றிரண்டு நாட்களில் காலிசெய்துவிடுவதே உத்தமம்.
மாதமொரு முறை இதுபோன்ற உளுந்தங்களியினைப் பெண்கள் சாப்பிட்டு வருவதால் உடல்நலம் சிறக்குமென நம்புகின்றனர்.
நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல் ஆண்களுக்கும் சிறிது கிடைக்கும். இது ஒரு பழந்தமிழ்க் கிராமத்து அல்வா எனக்கருதிக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment