Sunday, 12 August 2018

சங்க இலக்கியத் துளிகள் - 19 செய்ப எல்லாம் செய்தனன், இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ, படுவழிப்படுக, இப்புகழ் வெய்யோன் தலையே!

சங்க இலக்கியத் துளிகள் - 19
செய்ப எல்லாம் செய்தனன், இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ, படுவழிப்படுக!
வீரநிலைக் காலத் தமிழ்ச் சமூகத்தில், நாட்டுக்காக விழுப்புண்படுதலே வாழ்வின் விழுமியமென்பதோடு, அவ்வாறு விழுப்புண்பட்டு இறப்போரே வீரசுவர்க்கம் புகுவர் என்னும் நம்பிக்கையும் ஆழமாகப் படிந்திருந்தது. மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தோரே துறக்கம் பெறுவர். (தொல். அகத்திணை சூ 44. நச்சினார்க்கினியர் உரை.)
ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும் தமது குடும்பத்து ஆண்கள் போரில் வீரமரணமடைதலையே உயர்வாகக் கருதினர். போரில் வாளால் உண்டான விழுப்புண் மிக்க உடம்பினை உடைய கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடிப்பதைப் படைத்துக் காட்ட `உவகைக் கலுழ்ச்சி` என ஒரு துறையையே வகுத்துள்ளனரெனில், அற்றைக்காலத்து வீரநிலை உணர்வினை விளக்குதற்கு வேறு சான்று தேவையற்றதாகிறது.
வீரமரணமடைந்தவரின் வாழ்வினைப் போற்றும் வகையில் அவரது பேரும் பீடும் பொறித்து வீரக்கல் நடுவதும் அக்கல்லுக்கு நெல்லும் மலரும் தூவி, உயிர்ப்பலி கொடுத்து, கள் படைத்து வழிபடுவதும் வழக்காறாக இருந்திருக்கிறது.
போர்ப் படையின் மத்தியில் வாளால் வெட்டுண்டு சிதைந்து வேறாகிய சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி, வாடுமுலை ஊறிச் சுரந்தன, விடலை தாய்க்கே என ஔவை பாடுகிறார். (புறம் 295.)
பலர் முன்னிலையில் கள்மண்டையினை வழங்கிய அரசனுக்காக என் மகன் உயிர் கொடுக்கும் காலம் வரவில்லையே என ஒரு தாய் கவலைகொள்வதாக, அதே ஔவை புறம்.286 இல் குறிப்பிடுகிறார்.
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும், ஆள் அன்று என்று வாளின் தப்பார் எனக் குறிப்பிட்டுக் கணைக்காலிரும்பொறை கலங்கித் தவிப்பதைப் புறம். 74 இல் காண்கிறோம். ஆண் குழந்தை அல்லது குழந்தையாக முதிச்சிபெறாத ஊன்தடி யென்றாலும் வாளால் போழ்ந்த பின்னரே புதைத்துள்ளனர்.
போரில் காயமுறாமல் நோயாலோ மூப்பாலோ இறப்பவரைத் தருப்பைப் புல் மீது கிடத்தி, நான்மறை முதல்வர், ‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீழ்கழல் மறவர் செல்வுழிச் செல்க! என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ` என ஔவை குறிப்பிடும் புறம். 93 லிருந்து விழுப்புண்படாமல் இறந்தோரை வாளால் போழ்ந்து அடக்கம் செய்துள்ளனர் என்பது பெறப்படுகிறது. இதே செய்தியினை
`தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து
செருப்புகன் மன்னர் செல்வழிச் செல்கென
மூத்து விளிதலிக் குடிப்பிறந் தோர்க்கு
நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்தே` என்னும் மணிமேகலை சிறைவிடுகாதை 13 – 16 அடிகளிலுங் காண்கிறோம்.
இத்தகைய நம்பிக்கை ஊறியிருந்த காலத்தில், புகழ் பெற்ற போர் மறவனான நம்பி நெடுஞ்செழியன் என்ற பாண்டிநாட்டுக் குறுநிலத்தலைவன் போரில் அல்லாமல் சாதாரணமான ஒரு நாளில் இறந்துவிடுகிறான். அவன் தலையை வாளால் போழ்வதா, வேண்டாமா, அவனது உடலைப் புதைப்பதா அல்லது சுடுவதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மரணச் செய்தி கேட்டு அங்கு கூடியிருந்தவர்களிடம் இதைக் கேட்டபொழுது பேரெயில் முறுவலார் என்ற சான்றோர், `செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின், இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ, படுவழிப் படுக , இப்புகழ் வெய்யோன் தலையே!` எனக் கூறிய செய்தி புறநானூற்றில் 239 ஆம் பாடலாகக் காணக்கிடக்கிறது.
பாடல் :
பாடியவர்: பேரெயின் முறுவலார்.
பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
தொடி யுடைய தோள் மணந்தனன் ;
கடி காவிற் பூச் சூடினன் ;
தண் கமழுஞ் சாந்து நீவினன் ;
செற் றோரை வழி தபுத்தனன் ;
நட் டோரை உயர்பு கூறினன் ; 5
வலியரென, வழி மொழியலன் ;
மெலியரென, மீக் கூறலன்;
பிறரைத் தான் இரப் பறியலன் ;
இரந் தோர்க்கு மறுப் பறியலன் ;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்; 10
வருபடை எதிர் தாங்கினன் ;
பெயர் படை புறங் கண்டனன் ;
கடும் பரிய மாக் கடவினன் ;
நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ;
ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்; 15
தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்;
பாண் உவப்பப் பசி தீர்த்தனன்;
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்-
இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! 20
படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!

பொழிப்புரை : தொடியணிந்த இளைய மகளிரை மணந்தான்; காவலுடைய அழகிய சோலைகளின் மலர்களை அணிந்தான்; குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய சந்தனத்தை மார்பில் பூசிக்கொண்டான்.
அவனைப் பகைத்தோரின் வம்சம் தழைக்காதபடி அழித்தான். அவனோடு நட்பு கொண்டோரின் உயர்வினைக் கூறிப் புகழ்ந்தான்.
அவனைவிடவும் வலியவர்கள் என்பதற்காக அவர்கள் கூறியதை வழிமொழியவில்லை; அவனை விட மெலிந்தவர்கள் என்பதற்காக இகழ்ச்சியாகக் கருதவுமில்லை.
பிறரிடம் சென்று தனக்கொன்று வேண்டுமெனக் கேட்கும் இரப்பினை அறியாதவன்; ஆனால், அவனை வேண்டிக்கேட்டோருக்கு இல்லையென மறந்தும் கூறாதவன்.
வேந்தனின் அவையில் மிகுந்த புகழுடன் விளங்கினான். அவனை எதிர்த்து வருகின்ற படையின் முன்நின்று போராடினான். போரில் அவனிடம் புறங்கண்டு ஓடிய படைகள் பலவற்றைப் பார்த்தவன், அவன்.
மிகவும் வேகம் மிகுந்த குதிரைகளை ஓட்டியவன்; அகன்ற தெருக்களில் விரைந்து செல்லும் தேர்கள் பலவற்றையும் ஓட்டியவன். பெரிய யானைகளையும் அவற்றின் மீதமர்ந்து செலுத்தியிருக்கிறான்.
இனிய மதுக்குடங்கள் பலவற்றையும் வழங்கித் தீர்த்தவன்; பாணர்கள் மகிழுமாறு அவர்களின் பசியைப் போக்கியவன். பிறருக்குப் புரியாதவாறு மயக்குடைய மொழிகளைப் பேசாதவன், அதாவது அறங்கூறும் அவையத்து திரிபுதருமாறு மொழியலனெனப் பொருள்படும்.
ஆகவே, இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து செய்வன அனைத்தையும் செய்து முடித்துவிட்டவன். இப்படிப் புகழ்பெற்ற உயர்ந்தவனாகிய அவன் தலையைப் புதைப்பதோ, சுடுவதோ, செய்யத் தகுந்தது எதுவானாலும் செய்க.
கருத்து : மனிதன், செய்யவேண்டுவன எல்லாவற்றையும் செய்து மிகச்சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து முடித்துப் புகழ்பெறுவதே சிறப்பு. தலையைப் போழ்வதோ, புதைப்பதோ, சுடுவது எதுவாயினும் செய்துகொள்ளலாம். அதில் சிறப்பொன்றுமில்லை.
கவிதை நயம் : இக்கவிதை தோன்றிய காலத்தில் ஆண்மகனெனில் போரில் விழுப்புண் பெற்று மரணமடைந்தால் மட்டுமே துறக்கம் செல்லமுடியுமென்ற நம்பிக்கை வலுவாக வேரூன்றியிருந்திருக்கிறது. அப்படி விழுப்புண் பெறாமல், மூப்பினாலோ பிணியினாலோ இறப்பின் இறந்தவரின் தலையை வாளால் போழ்ந்து வீர மறவர் செல்லும் வழி நீயும் செல்க எனக் கூறிப் புதைத்தால் மட்டுமே அந்த உயிரும் துறக்கமடையும் என்ற நம்பிக்கையில் அவ்வாறான வழக்காறு நடைமுறையிலிருக்கும்போது, புலவர், வாழும் காலத்து அறங்களைக் கைக்கொண்டு, செய்வன எல்லாம் முடித்துப் புகழ்பெறுவதே சிறப்பு எனக் கூறுவதன் மூலம் துறக்கமென்றெல்லாம் எதுவுமில்லையென்றோ, வாளால் போழ்வதும் போழாதிருப்பதிலும் எந்தச் சிறப்புமில்லையென்றெல்லாம் நேரிடையாகக் கூறாமலேயே கவிதை வரிகளுக்கிடையில் மவுனமாகப் புதைத்துள்ள திறமையே இக்கவிதையின் நயம். இதுவே அறிவியல் அணுகுமுறை.
வலியவரை வழிமொழியாமலும் மெலியவரை மீக்கூறாமலும், தான் எதுவொன்றும் இரக்காமல், இரப்போருக்கு மறுக்காமல் என அறத்தின் இருமைநிலைகளையும் விளக்கியிருத்தலும் சிறப்பு.

No comments:

Post a Comment