Friday, 24 August 2018

மானுடத்தின் அழகு செய்நேர்த்தி (அபுனைவு)

மானுடத்தின் அழகு செய்நேர்த்தி (அபுனைவு 31)
திருநெல்வேலி சென்று திரும்பிய அன்று மதியம் பேச்சுவாக்கில் இனியனுக்கு இரண்டாம் முடி எடுக்கவேண்டும், இரத்தினகிரியில் எடுத்துவிடலாமா என்றாள், மருமகள். உடனேயே கிளம்பிப் போய்விட்டோம். கோயில் உச்சிக் கால வழிபாடு முடிந்து நடை சாத்தியிருந்தார்கள்.
மகிழுந்தினைக் கோயில் அரசமரத்தடியில் நிறுத்தி, இறங்க, குச்சி ஐஸ் விற்பவர் மிதிவண்டியுடன் எங்கோ வெறிக்கப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார். வாடிக்கையாளர் யாருமே தென்படாத, எதை எடுத்தாலும் 20 ரூ. கடைகளையும் பொரி மற்றும் குழந்தைத் தின்பண்டக் கடையினையும் தாண்டிய மைதானம் ஒரு மணி வெயிலில் செக்கச் செவேரென்று பரந்து கிடந்தது. அதன் எதிர்புறம் தான் முடி நீக்கும் கூடம்.
நாங்கள் அங்கு செல்லவும் அந்தக் கூடத்தைப் பூட்டுவதற்கிருந்த நபர் முடியெடுக்கவேண்டுமா, சாப்பிட்டுவிட்டு கோபி ஒன்றரைக்கு வந்துவிடுவார். இன்று டியூட்டி அவருக்குத் தான், உட்காருங்கள் என்று சொல்லி, மின்விசிறியைச் சுழலவிட்டுக் கூடத்தைப் பூட்டாமலேயே கிளம்பினார்.
வாயிலுக்குச் சென்றதும் திரும்பிநின்று, எங்களைப் பார்த்து, ஒன்றரைக்கு கோபி வரவில்லையெனில் அதோ அந்த நம்பருக்கு போன் பண்ணுங்கள், வந்துவிடுவார் என்று சுவரில் எண்கள் குறித்திருந்த இடத்தைக் காட்டினார்.
சரி, அரை மணி நேரம் தானே, வந்தது வந்துவிட்டோமெனக் காத்திருந்தோம். இரண்டு பேர் வந்து, முடியெடுக்கிறவர் இல்லையா எனக் கேட்க, ஒன்றரைக்கு வந்துவிடுவாராமெனப் பொறுப்பாகப் பதில் சொன்னோம். அவர்களும் அப்புறம் வருகிறோமெனச் சொல்லிச் சென்றனர். அப்படிச் சொல்லாமல் போயிருந்தால் நாமென்ன வருத்தப்படவா போகிறோம்? எல்லாம் மனிதருக்கு மனிதர் ஒரு மரியாதைதான்.
கூடம் செவ்வக வடிவில் இரண்டு யானைகள் கட்டுமளவுக்குப் பெரிய கொட்டகையாக இருந்தது. ஹாலோ பிளாக் அடுக்கிக் கட்டிய உயரமான சுவர்கள்; வாயிலில் முன்பக்கமாக ஒரு மேசையும் நாற்காலியும் முடி நீக்கும் சீட்டு வாங்குமிடம் எனச் சுவரில் எழுதியிருந்த அறிவிப்பின் கீழ் இருந்தன.
அடுத்து சுவர் ஒட்டி இரண்டு ஹாலோ பிளாக் செங்கல்களை ஒன்று மேலாக ஒன்று வைத்து மூன்று தாங்கு சுவர்கள். அவற்றின் மீது நீட்டுக்கு ஒரு சிமென்ட் இருக்கைப் பலகை. அந்தப் பலகையில் சவரக்கத்தி மற்றும் கருவிகள் இருந்த சிறிய தகரப்பெட்டியின் மேல் மூடி திறந்து சுவரில் சாய்ந்த நிலையிலிருந்தது. அதில் கடவுச்சீட்டு அளவுக்கும் பெரிதாக திருப்பதி வெங்கடாசலபதி படமும் முருகன் படமும் ஒட்டியிருந்தது.
அதை அடுத்து கையும் சாய்மானமும் இல்லாத நாற்கால் மர இருக்கைகள் இரண்டு, (ஸ்டூல்கள்) அடுத்து சுவர் ஓரமாகச் சுவரில் சாய்த்தவாறே இருசக்கர மிதிவண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
அதை அடுத்து இரண்டு நீட்டிருக்கைப் பலகைகளை ஒன்றாக ஒட்டி ஒரு கட்டில் போலப் போட்டிருந்தது. அதில் தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.
நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தின் மேல் மின்விசிறி சுழன்றாலும் உயரமான மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்ததால் காற்று வருவதான உணர்வே இல்லை. இன்னுங்கொஞ்சம் இறக்கி மாட்டியிருந்தால் நல்ல காற்று வந்திருக்கும். வெளியில் மைதானத்தில் வானமும் பூமியும் நீயா, நானா போட்டியில் வெக்கையை வீசிக்கொண்டிருந்தன.
எதிர்ச் சுவரில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று நிறமிழந்த சட்டத்தில் `எனக்கொன்றும் தெரியாது` பாவனையில் மலங்க, மலங்க விழித்தது.
அந்தக் கண்ணாடி மிகவும் நாட்பட்டதாகியிருக்கவேண்டும். ஒளி மங்கித் தோன்றியது. ஒரு வேளை பின்பக்க ரசப்பூச்சு அதன் வீரியத்தை இழந்திருக்கலாம். மொட்டைத்தலையைக் காட்ட அது போதாதா என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
கண்ணாடியை அடுத்து அலுவலக அறிவிப்பு ஒன்றும் அட்டவணைப் பட்டியல் ஒன்றும் ஒட்டப்பட்டிருக்க, அதை அடுத்துத் தான் நான்கு பேர்களின் பெயர்களும் எண்களும் சிவப்புச் சாயத்தில் எழுதப்பட்டிருந்தன.
அதற்கும் அடுத்து நல்லி பொருத்தப்பட்ட தண்ணீர்க்குழாயும் அதனடியில் ஒரு வாளியும் இருந்தன. வாளியின் வெளிப்புறமாகக் கொழுவிய நீலநிற நெகிழிக் கோப்பை ஒன்று சாய்வாகத் தொங்கியது. அந்தக் கூடத்துக்குள் அந்தக் கோப்பை ஒன்று தான் புதிதாகத் தெரிந்தது.
நல்லியில் சிந்தும் தண்ணீர் கூடத்தில் பரந்துவிடாமல் வெளியேறும் அமைப்பில் ஒற்றைச் செங்கலில் கட்டிய தடுப்புமிருந்தது.
கூடத்தின் சொரசொரப்பான கான்கிரீட் தளம் சுத்தமாகப் பெருக்கித்தான் இருந்தது. ஆனாலும் அதன் அழுக்கு நிறம் `அதற்கு நான் என்ன செய்வேன்` பாவனையில் துணிச்சலாக முகம் காட்டியது.
சிமென்ட் இருக்கைப் பலகைக்கும் மிதிவண்டிக்கும் நடுவில் மழித்த முடிக்குவியல் சுவரோரமாகக் கூட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. நரை, செம்பட்டை, மெல்லிய கருமை, பூனை முடியென எல்லாம் கலந்த குவியலாக இருந்தாலும் அதில் பளபளக்கும் கருப்பாக எதுவும் இல்லை. அதாவது இளமை முடியாக எதுவும் தெரியவில்லை. குவியல் கொஞ்சம் பெரிதுதான். நிச்சயமாகக் காலையிலிருந்து மதியம் வரையில் மழிக்கப்பட்டதாகத்தானிருக்கும். இரண்டு மூன்று நாளாகவா அள்ளி வெளியே போடாமலிருப்பார்கள்; எப்படியும் குறைந்தது இருபது பேருடைய முடியாக இருக்கலாமென்று ஒரு கணக்கு மனத்திற்குள் எழுந்தது.
முடிக்குவியலின் மேலாகப் புல் வாரியல் என்று சொல்கிற பெருக்குமாறு ஒன்று சுவரில் சாய்ந்தவாறு, இவையெல்லாவற்றையும் நான் தான் கூட்டி வாரினேனென்று சொன்னதோடு, அதற்குக் காவல் நிற்பது போல், அடங்கிய தோற்றத்துடன் எதிர்ச் சுவரைப் பார்த்தது.
ஒன்றரை ஆகிவிட்டது, யாரும் வரவில்லை. அப்போது பார்த்து, முதியவர் ஒருவர் வந்து சிமென்ட் பலகையில் உட்கார்ந்தார். அவர் எங்களிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஒருவேளை வழக்கமான வாடிக்கையாளரோ, என்னவோ. எனக்குள் ஒரு நிம்மதி. வேறொன்றுமில்லை, நாம் செல்வதென்றாலும் கூடத்தின் பொறுப்பை விட்டுச் செல்ல ஒருவர் கிடைத்துவிட்டிருக்கிறார், இல்லையா.
சுவரிலிருந்த கோபியின் எண்ணுக்கு அலைபேசியைத் தட்டியதும், மறுமுனை வேண்டாவெறுப்பாக, யாரப்பா என்று கேட்டது. நீங்க கோபி தானே, முடியெடுக்க வந்து காத்திருக்கிறோமென்றதும் இரண்டு மணிக்குத் தாம்பா வருவாங்க என்று ஏதோ தர்மத்துக்குத் தகவல் சொல்கிற மாதிரிச் சொல்லிவிட்டுத் துண்டித்துக் கொண்டது, அந்தக்குரல்.
பாவம், அவருக்கு என்ன சந்தர்ப்பமோ, என்ன சூழலோ, இடையிட்டதில் கடுப்பாகியிருக்கலாம்.
எனக்கு, இந்த கோபி சரியில்லை, இவன் இரண்டு மணிக்கு வருவானோ, இரண்டரைக்கு வருவானோ, எவ்வளவு நேரம் காத்திருப்பது எனத் தோன்றியது. நான் வேறு, மதியம் சாப்பிடவேண்டிய டெப்லட் ஏ மாத்திரை எடுத்துவரவில்லை.
சுவரில், கண்ணாடியை அடுத்துத் தொங்கிய அறநிலையத் துறை செயலரின் அலுவக ஆணைக்குறிப்பு முடிநீக்கும்பணிநேரம் காலை 6.30 முதல் இரவு 7.30 வரை என்று தெரிவித்தது. எந்தெந்தத் தேதிக்கு யார், யார் முறைப்பணி செய்யவேண்டும் என்ற விவரமிருந்தது. அதை ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான் இன்றைய பணி வெங்கடாசலம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
சரி, எப்படியோ போகட்டும், வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு ஓய்வெடுத்து மாலையில் வரலாமெனக் கூறி, நானும் மகனும் மகிழுந்துக்குள் அமரவும், மருமகள் வந்து, முடியெடுக்கிறவர் வந்துவிட்டார், எடுத்துவிட்டுப் போய்விடலாமே எனவும், இருவரும் இறங்கி, மைதானத்தைக் கடந்து கூடத்துக்குள் போவதற்குள் அங்கே உட்கார்ந்திருந்த முதியவருக்கு முடி மழிக்கத் தொடங்கியிருந்தார், முடிமழிப்பவர். சீட்டுக் கொடுக்கும் இடத்திலும் ஒரு பணியாளர் அமர்ந்திருந்தார்.
முடி மழிப்புக் கலைஞர், பார்வைக்கு ரொம்பவும் சிறு பையனாகத் தெரிந்தார். மிஞ்சிப்போனால் ஒரு பதினைந்து, பதினாறிருக்கலாம். இன்னும் மீசை கூட முளைக்கவில்லை. குழந்தைமை அகன்று ஆணுக்குரிய இளமைப் பொலிவும் வலுவான உடற்கட்டும் இனிமேல்தான் உருவாகவேண்டும்.
மங்கிப்போன ஒரு காவி வேட்டியை அழகுபட உடுத்தியிருந்த இலாகவம் எனக்குப் பிடித்திருந்தது. எத்தனையோ அமைச்சர்கள், தமிழறிஞர்கள், அரசியல் அண்ணன்கள், தம்பிமார்கள், பெருந்தொந்திகள் வேட்டி உடுத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். உ.வே.சா. போல பஞ்சகச்சம் கட்டிய தலைமை ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர்களையும் பார்த்திருக்கிறோம். தொலைக்காட்சியில் விளம்பரப் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் எவனெவனோ வேட்டியின் மகிமையென்று சொல்லிப் பாட்டுப் பாடி நடந்து வேறு காட்டுகிறான். அப்போதெல்லாம் தோன்றாத எண்ணம் இந்தப் பையன் கட்டியிருந்ததில் அழகுடன் ஒளிர்வதாகத் தெரிந்தது. உண்மையில் அவ்வளவு நேர்த்தியாக, சிரத்தையெடுத்துக் கட்டியிருந்தான்.
அவன் அணிந்திருந்த வெளிர், முழுக்கை ஊதாச் சட்டையில், மார்புப் பட்டி, சட்டைப்பை மற்றும் கழுத்துப்பட்டியில் கூடுதலாக ஒட்டித் தைத்திருந்த இளஞ்சிவப்புப் பட்டைகள் எடுப்பாகத் தெரிந்ததுடன் தையல்கலைஞரின் கைவண்ணத்தை நினைவுபடுத்துவதாக உணர்ந்தேன்.
வெறுமையாகத் தெரிந்த கூடம் உயிர் பெற்றதாகத் தோன்றியது. . எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் தண்ணீர் மட்டும் புரட்டிய தலை மற்றும் முகத்து முடிகளை அந்தச் சிறுவன் இலாகவமாக வழித்தெறிந்த விதம் தொழிலில் தேர்ந்துவிட்ட திறமையைக் காட்டியது.
முடி நீக்கத்துக்கான சீட்டினைப் பெற்றுக்கொண்டு அந்தக் கூடத்தை அண்ணாந்து பார்த்தேன். இரண்டு மின்விசிறிகள். வெளியில் வெயில் எரிக்கும் செம்மண். மைதானம். கத்திக்கு வாக்காக முகம் கொடுக்கிற முதியவருக்கு எளிதாக மழித்துவிடுகிற இந்தச் சிறுவனால் அடம் பிடிக்கும் மூன்று வயதுப் பையனுக்கு முடி மழித்துவிட முடியுமா?
அவன் கையிலிருந்த கத்தி புதியதாக எவர்சில்வர் பளபளப்பில் இருந்தது. கொஞ்சம் தவறினாலும் காது மடலைச் சீவியெறிந்துவிடும். எனது ஐயுறவு மகன், மருமகள், என் மனைவிக்கும் இருந்துகொண்டிருப்பது அவர்கள் முகத்தில் தெரியத்தான் செய்தது. எல்லாவற்றுக்கும் தயார்படுத்திக் கொள்வது எனக்கும் புரியத் தான் செய்கிறது. பேரன் அம்மாவின் இடுப்பில் மகிழ்ச்சியாக உட்கார்ந்து முடி மழிப்பதை ஒரு புதுமையாகப் பார்ப்பது, அவனது கண்களில் தெரிந்தது.
திருப்பதி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர், சமயபுரம், என முடி காணிக்கை செலுத்துமிடங்களில் எல்லாமே குழந்தைகளின் தலையில் கோரைப்படுத்தாமல் முடியெடுப்பதென்பது இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் திறமையும் அனுபவமும் கொண்ட முதிய கலைஞரென்றாலும் ஒரு சிறு சிராய்ப்பாவது ஏற்பட்டுவிடுகிறது. ஒரு இரத்தத் துளியாவது தோன்றிவிடுகிறது. சில குழந்தைகளின் தலை ரத்தக்களரியாகவே ஆகிவிடுவதுண்டு.
முதியவருக்கு மழித்து முடித்ததும், அச்சிறுவன் முடி காணிக்கைக்குச் சீட்டு வாங்கிவிட்டீர்ளா? எனக்கேட்டுக்கொண்டே என் மருமகளிடம் ஸ்டூலில் அமருமாறு கைகாட்டினான்.
என் மகன், பேரனை வாங்கி, மடியில் அமர்த்திக்கொண்டு ஸ்டூலில் அமர்ந்தான். முடி மழிக்கும் சிறுவன் கையில் கத்தியுடன் அருகில் வந்தது தான், பேரன் அழுது ஆர்ப்பாட்டம் தொடங்கினான்.
சிறுவன், மருமகளிடம் பேரனை வாங்கிக்கொண்டு ஸ்டூலில் அமரச் சொன்னான். மருமகள் ஸ்டூலில் அமர்ந்ததும், பேரன், அவன் அம்மாவின் முகத்தை இரு கைகளாலும் தாங்கிக்கொண்டு `வேண்டாம்மா, வேண்டாம்மா` என்று கெஞ்சத் தொடங்கினான்.
அடுத்த ஸ்டூலை அருகில் இழுத்துப் போட்டு, என் மகனை அமரச் சொன்ன சிறுவன், பேரனின் தலையைப் பிடித்துக்கொள்ளுமாறு சொன்னான். மகன் பேரனின் தலையைப் பிடித்துக்கொண்டதும் சிறுவன் முடி மழிக்கத் தொடங்கினான்.
துளிர்க்கப் போகும் இரத்தத் துளிகள், என் கண்முன் ஆடின. சிறுவன் அவசரப்படவேயில்லை. பேரனின் கண்ணில் படாமலேயே, அவன் அலுங்காத தருணங்களில் மட்டும் நிதானமாக மழித்தான். அவன் கத்தி தலையில் படுவது போலவே இல்லை. பேரனின் அழுகைக்கிடையிலேயே, முடிந்து விட்டது. குழாயில் குளிக்க வைக்கிறீர்களா? இல்லை, வெந்நீர் கொண்டுவரட்டுமா எனக் கேட்டான், சிறுவன்.
பச்சத்தண்ணியே போதுமென, மருமகள் குழாயடிக்குச் சென்று குளிப்பாட்டித் திரும்பிவந்தாள். பேரன் தலையில் பச்சை நரம்புகள், மயிர்த்துளைகள் தெரிந்தன. சிறு இரத்தத்துளி இல்லை; சிறு சிராய்ப்பு கூட இல்லை. எனக்கு வியப்போ, வியப்பு. மகிழ்ச்சியும் தான்! அவன் தொழிலைக் கலையாகப் பழகி, அதன் நுணுக்கத்தை, முழுவதுமாகக் கற்றிருக்கிறான்.
சிறுவனிடம் உன் பெயர் என்ன தம்பி, என்றேன். செந்தில் குமார் என்றான். அழகான பெயர், என்ன வயது என்றேன். பதினெட்டு என்றான். நிச்சயம் பதினெட்டு இருக்காது, குழந்தைத் தொழிலாளி என நினைத்துவிடக் கூடாதென்பதற்காக அப்படிச் சொல்கிறானென எனக்குப் புரிகிறது. என்ன படிக்கிறாய்? என்றேன். பத்து முடித்துவிட்டேன் என்றான். மேற்கொண்டு படிக்கவில்லையா எனக் கேட்டதற்கு தவில் படிக்கிறேன் என்றான்.
திருவையாறு அரசு இசைக்கல்லூரி பற்றிச் சொல்லிவிட்டு கையைக் கொடு எனப் பாராட்டிக் கை குலுக்கிவிட்டு நூறு ரூபாய் கொடுத்தேன். மகிழ்ச்சியும் நன்றியும் அவன் கண்களில் தெரிந்தது.
எல்லோரும் கூடத்தை விட்டு வெளியில் வந்தோம். மைதானத்தின் வடக்குப் பக்கத்தில் தெப்பக்குளத்தின் கரையில் இரண்டு குல்மோகர்கள் இலைகள் முழுவதையும் உதிர்த்துவிட்டுச் சிவப்பாகப் பூத்திருந்தன.
மரங்கள் பூக்கும்போது மண் மகத்துவம் பெறுகிறது.
செய்நேர்த்தி சிறக்கும்போது மானுடம் மகத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment