அளிசமரம் என்னும் அழிஞ்சில் மரம்
முழுக்க முழுக்க நெல் விவசாயம் மட்டுமே சார்ந்திருந்த எங்கள் கிராமத்திலிருந்த சிறிய வெற்றிலை பாக்குக் கடைகளில் (பெட்டிக்கடைகள்) கூட மாடு அடிக்கும் உழவு கம்புகளும் சாட்டைக்கம்புகளுமாக ஒரு கட்டுக் கம்புகள் எப்போதும் கடை முன்பு சார்த்திவைக்கப்பட்டிருக்கும். சாட்டைக்குத் தேவையான நூல், நரம்பு, குஞ்சம், உழவுகம்புக்குத் தேவையான தார் (சிறிய ஆணி) எல்லாமே கிடைக்கும். உழவு மாடு அடிப்பதற்கு அளிசங் கம்பினைத் தான் தேடுவார்கள். சாட்டைக்குத் துவரங்கம்பு. ஓரளவுக்கு விளைந்த (முற்றிய) அளிசங்கம்பு எருமை மாட்டின் மீது என்ன அடி அடித்தாலுங்கூட, இதர கம்புகளைப் போல் பிளந்து கீறுவதில்லை. அது நார் நாராக உரிவது போலச் சிறுசிறு சிறாய்களாகத்தான் கீறும். அதனால் உழவுகம்புக்குப் பொதுவாக அளிசங்கம்பைத் தான் தேடுவார்கள். மலங்காட்டிலிருந்து தான் கம்பு வெட்டிக் கொண்டுவருவார்கள்.
ஆர்வம் காரணமாக அளிசமரம் குறித்துக் கேட்டபோது தான் எங்கள் ஊர்ப் புதுக்குளத்தங்கரையில் நின்றிருந்த இரண்டு மூன்று அளிசம் புதர்களை அப்பா, காட்டினார். அதன் பிறகு அவற்றைக் கவனிப்பது எனது பழக்கமாக மாறிப்போயிருந்தது. பேருந்து அந்தப் பக்கமாகத்தான் செல்லும். அப்போதும் அந்தப் புதர்களை எட்டிப் பார்ப்பது வழக்கம். ஆனால் அவை மரங்களாக வளரவே இல்லை. கம்பு கொஞ்சம் முற்றினாலே போதும் நறுக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பிறகெங்கே அது வளர்வது. கம்பிலும் முள் இருக்கும் முள்ளைச் செதுக்கியெடுத்த இடம் கணுப் போலத் தெரியும்.
வளர்ந்து வேலைக்கெல்லாம் போனபின்பு, 80, 85களில் அழகியபாண்டிபுரம் கிருஷ்ணன் நம்பியின் `மருமகள் வாக்கு` சிறுகதை படிக்கக் கிடைத்தது.
வெளிப்பார்வைக்கு அன்பாயிருப்பது போல் காட்டிக்கொள்ளும் மாமியாரின் அடக்குமுறைக்குள் மருமகள் யதேச்சையாகவே அடங்கிப் போவது குறித்த ஒரு கதை அது. அப்போது நடக்கின்ற தேர்தலில் பூனைக்கு ஓட்டுப் போடும்படி மாமியார் சொல்லியிருப்பார். மருமகளான ருக்மணிக்கோ கிளிக்குத் தான் ஓட்டுப் போட விருப்பம். கிளி இருக்கும்போது யாராவது பூனைக்கு ஓட்டுப் போடுவார்களோ? என்பது அவள் தனக்குத் தானே கேட்டுக்கொண்ட கேள்வி. கிளி இல்லாமலிருந்தால் பூனைக்குப் போடலாம்தான் என்பது அவள் கருத்து. வாக்குச் சாவடியில் வரிசையில் நிற்கும் போது அங்கு ஒரு மூலையில் நின்ற ஒரு அளிச மரம் அவள் கண்ணில்பட, அப்படியே அவள் சிறுமியாகிவிடுகிறாள். அவளுடைய சொந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இருந்த அளிசமரமும் அதில் அவள் பாவாடையைத் தார் பாய்ச்சிக் கட்டிக்கொண்டு ஏறிப் பழம் பறித்துத் தின்றதும் நினைவுக்கு வரும். அப்படியே பழைய நினைவுகளில் அவள் ஊசலாடிக்கொண்டிருக்கும் போதே வாக்குச் சீட்டு அவள் கையில் கொடுக்கப்படுகிறது. பட்டென்று ஏதோ ஒன்றில் குத்திப் போட்டுவிட்டு வருகிற அவளிடம் உடன் வந்தவர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டாயென்று கேட்கிறார்கள். எங்க மாமியாருக்குத் தான் போட்டேன்` என்கிறாள், அவள். அதுதான் கதை.
அளிசம் பழங்கள் அவ்வளவு சுவையானவையென்று ருக்மணி சொன்னதைப் படித்ததிலிருந்து எனக்கு அந்தப் பழங்கள் மீது ஒரு விருப்பம் ஏற்பட்டது. ஆனால் என்ன கொடுமையென்றால் அதற்கு முன்பு நான் அளிசமரத்தையோ, அளிசம் பழங்களையோ பார்த்திருக்கவில்லை. அன்றிலிருந்து அளிச மரம் மாதிரி தெரிகிற மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைவிலிருந்த புதுக்குளத்து அளிசம் புதரோடு ஒப்பிட்டு இது அளிச மரமில்லையென உறுதிப்படுத்துவது பழக்கமாகியிருந்தது. பெண்ணாடம், இறையூர் கிராமத்தில் எனது சகலை வீட்டுக்குப் போயிருந்த போது சுமாராக ஒரு பத்தடி உயரத்தில் அளிச மரமொன்றைப் பார்த்தேன். அங்கிருந்த யாருக்கும் அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. அந்த மரத்திலும் பூ, காய், பழம் ஏதுமில்லை. ஆனால் எனக்கு அது அளிசமரந்தானென்று உறுதியான ஒரு எண்ணம் ஏற்பட்டது. அதன் பின்னரும் பேருந்துகளில் செல்லும் போது ஒன்றிரண்டு மரங்கள் (ஆரணி – சேத்துப்பட்டு சாலையில்) தென்பட்டதாக நினைவிருக்கிறது.
கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று வழக்கமாக நான் காலைநடை செல்லும் பாதையை மாற்றி செங்காநத்தம் மலைக்குச் செல்லும் பாதையில் சென்றபோது மலையடிவாரத்துக்கும் முன்பாக மாந்தோப்பு வேலி ஒன்றில் அடுத்தடுத்து நின்ற இரண்டு மரங்களைப் பார்த்தேன். உடனேயே இவை அளிச மரங்கள் தாமென எனக்குள் தோன்றினாலும் உறுதிப்படுத்திக்கொள்ளலாமேயேன அந்தப்பாதையில் வந்த ஓரிருவரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் வேலைக்காகவில்லை. இரண்டு புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டேன்.
இணையத்தில் அளிச மரம், அளிசம் பழம் என்றெல்லாம் தட்டிப் பார்த்தால் அது போல் எதுவுமில்லையென்றது. ஏதோ ஒரு நினைவு, அது எப்படி எனக்குள் ஏற்பட்டதென்றுதான் எனக்குப் புதிராக இருக்கிறது. அழிஞ்சில் எனத் தட்டிப் பார்த்தால் நான் தேடியது கிடைத்துவிட்டது. இதன் பழத்தைச் சாப்பிட்டிருப்பதாக குழந்தை செல்வா என்பவரின் பக்கத்தில் படத்துடன் குறிப்புகள் இருந்தன.
அழிஞ்சில் என்ற இந்த மரத்தின் வேர், பட்டை, விதைகள் இலை அனைத்துமே மருத்துவ குணமுடையவை என்கிறார்கள், பாம்புக்கடிக்குங்கூட இது மருந்து என்கிறார்கள். தொழு நோய்க்கும், சகல தோல் நோய்களுக்கும் இது மருந்தாகிறதென்கின்றனர். எப்படியானாலும் மருத்துவர் ஆலோசனையின்றிச் சாப்பிடுவது சரியல்ல.
அழிஞ்சில் என்ற இந்த மரத்தின் வேர், பட்டை, விதைகள் இலை அனைத்துமே மருத்துவ குணமுடையவை என்கிறார்கள், பாம்புக்கடிக்குங்கூட இது மருந்து என்கிறார்கள். தொழு நோய்க்கும், சகல தோல் நோய்களுக்கும் இது மருந்தாகிறதென்கின்றனர். எப்படியானாலும் மருத்துவர் ஆலோசனையின்றிச் சாப்பிடுவது சரியல்ல.
அழிஞ்சிலின் ஆங்கிலப் பெயர் Alangium Salviifolium. மலையாளத்தில் இதன் பெயர் அலஞ்சி என்றும் அதிலிருந்துதான் ஆங்கிலப் பெயர் ஏற்பட்டதென்றும் குறிப்பிடுகிறார்கள். அங்கோலா என வடமொழியில் குறிப்பிடப்படுவதால் மருத்துவத் தமிழில் இதற்கு அங்கோலம் என்றொரு பெயரும் உள்ளது.
இப்போதும் அழிஞ்சில் பழத்தை நேரில் பார்க்கவில்லை. செங்கா நத்தம் செல்லும் சாலையிலுள்ள மரத்தை அவ்வப்போது கவனித்துப் பார்த்து வருவதாகத் தீர்மானித்திருக்கிறேன்.
இப்போதும் அழிஞ்சில் பழத்தை நேரில் பார்க்கவில்லை. செங்கா நத்தம் செல்லும் சாலையிலுள்ள மரத்தை அவ்வப்போது கவனித்துப் பார்த்து வருவதாகத் தீர்மானித்திருக்கிறேன்.
அழிஞ்சில் மரம் குறித்து சங்க இலக்கியப் பதிவு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னிடமிருக்கும் பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களிலுள்ள அருஞ்சொற் பொருள் அகர நிரல்களில் அழிஞ்சில் என்ற சொல்லோ, அளிசு, அளிசம் என்ற சொற்களோ காணப் பெறவில்லை.
அளிசம் பழத்தை மூக்குச்சளிப்பழம், ஒட்டுப் பழம் என்றும் அழைப்பதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதன் பொருத்தப் பாடும் உறுதியாகத் தெரியவில்லை.
அளிசம் பழம் குறித்த இலக்கியப் பதிவு கிருஷ்ணன் நம்பியின் சிறுகதை ஒன்றாகத் தான் இருக்குமென நினைக்கிறேன்.
அழகியபாண்டிபுரம், கடுக்கரை, குறத்தியறை, காட்டுப் புதூர், பூதப்பாண்டி போன்ற ஊர்களிலிருப்போருக்கு (மேற்குமலைத் தொடர் அவர்களுக்குப் பக்கம்.) அளிசம் பழம் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அந்த நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டால் எல்லோருக்கும் பயனாகும் . நன்றி.
ச.ஆறுமுகம்.
ச.ஆறுமுகம்.