Thursday, 8 March 2018

சங்க இலக்கியத் துளிகள் - 14.

சங்க இலக்கியத் துளிகள் – 14.
நகாரோ – பெரும!
கற்பு நிலை – மருதம்
மருதநிலத் தலைவன் ஒருவன் பரத்தையர் இல்லத்தில் நீடு தங்கிப் பின் தயங்கித் தயங்கித் தன் மனையகம் புகுந்தபோது, அந்தத் தலைவனிடம், அவன் மனைவி வினவுகிறாள் :
மருதத்தலைவனே! நீ, குற்றம் ஏதுமற்ற, ஏராளமான புது வருவாய் கொண்ட ஒளிமிக்கவன்! தண்ணெனக் குளிர்ந்ததும் நறுமணம் மிக்கதுமாகிய பொய்கையில் வெண்மையான நெற்றியும் அரிப்பு அரிப்பது போன்ற குரலுமுடையதுமான கம்புட் கோழி, அதன் சேவலும் உறவுகளுமாகச் சேர்ந்து மகிழ்ந்து ஆரவாரிக்கும். நீயோ சிறுவர் செய்கை போல் இப்படிச் செய்கிறாய்! பெருமகனே! உன் செயல்களைப் பார்க்கின்றவர்கள், எள்ளி நகையார்களோ, (சொல்வாயாக)
பாடல் :
வெண் நுதற் கம்புள் அரிக்குரற் பேடை
தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறு இல் யாணர் மலி கேழ் ஊர! நீ
சிறுவரின் இனைய செய்தி;
நகாரோ – பெரும! நிற் கண்டிசினோரே?
- ஓரம்போகியார், ஐங்குறுநூறு, 85. மருதம் புலவி விராயப் பத்து.
கூற்று : தலைமகன் பரத்தையர் மேல் காதல் கூர்ந்து நீடித்துச் செல்வுழி, மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது.
அருஞ்சொற் பொருள் : வெண்ணுதல் – வெண்மையான நெற்றி; கம்புள் – கம்புட் கோழி, நீர்க்கோழி, சம்பங்கோழி, நாமத் தாரா; அரிக்குரல் – அரித்தெடுப்பதுபோன்ற குரல், குர், குர் என விட்டுவிட்டுக் கொக்கரிப்பது; பேடை – பெட்டைக் கோழி; தண் – தண்மை, குளிர்ச்சிபொருந்திய; நறும் – நறுமணம் பொருந்திய; பழனத்து – வயலில், மருத நிலத்தில், பொய்கையில்; கிளையோடு – உறவுகளோடு, சேவலோடு; ஆலும் – ஆரவாரிக்கும்; மறு இல் யாணர் – குற்றம் ஏதும் இல்லாத புது வருவாய், தீதில் செல்வம்; மலி – மிகுதியான; கேழ் – ஒளி, நிறம் பொருந்திய; ஊர – மருதநிலத் தலைவனே; நீ சிறுவரின் இனைய செய்தி – நீ சிறுபிள்ளைகள் போல இப்படிச் செய்கிறாயே; நகாரோ – எள்ளி நகைக்கமாட்டாரோ; பெரும – பெருமானே, பெருமைக்குரிய பெருமகனே!; நின் கண்டிசினோரே – உன்னைப் பார்ப்பவர்கள்; உன் செயலைக் காண்பவர்கள்.
பொழிப்புரை : வெண்மை நிற நெற்றியை உடையதும் அரிப்பு அரிப்பதுபோன்ற குரலுடையதுமான கம்புட் கோழி, அதன் சேவலுடனும் உறவுகளோடும் சேர்ந்து குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட பொய்கையில் ஆரவாரிக்கும். குற்றம் ஏதுமில்லாத புது வருவாயை மிகுதியாகக் கொண்டுள்ள ஒளிமிக்க ஊரனே, நீ சிறுவர் செய்யும் செயல்களாக இப்படிச் செய்கிறாயே, பெருமகனே!, நின் செயல்களைக் காண்போர் எள்ளி நகையாடமாட்டாரோ! (சொல்வாயாக)
கிளையோடு என்பதற்கு சேவலுடன் என்றும் சேவல் இல்லாமல் இதர இனப்பறவைகளோடென்றும், சேவலும் அதன் உறவுப்பறவைகளோடுமென்றும் அவரவர் புரிதலுக்கேற்பப் பொருள் கொள்கின்றனர். அது போலவே பழனம் என்பதற்கு ஊர்ப்பொது நிலம் என்றும் ஊரனின் வயல் என்றும் பொய்கை என்றும் பொருள் கொள்ள இடமுள்ளது. போலவே ஊரன் என்பதற்கு ஊரைச் சேர்ந்தவன் எனப் பொருள் கொண்டு, மறுஇல் யாணரையும் ஊருக்குப் பொதுவாக்கியும் சிலர் பொருள் கண்டுள்ளனர்,. ஊருக்குரிய பெருமைகளாகவோ, பண்புகளாகவோ பாடலில் குறிப்புகள் எதுவும் கூறப்படாத நிலையில், ஊரன் என்ற சொல், மருதத்திணைக்குரிய கருப்பொருள்களில் மக்களைப் பொதுவாகக் குறிக்கும் மகிழ்நன் போன்ற பொதுப் பொருளிலேயே இப்பாடலிலும் பொருள்கொள்ளப்படவேண்டும்.
உரை விளக்கம் :
தலைவன் குற்றமில்லாத புது வருவாயை மிகுதியாக உடையவன்; ஒளி மிக்கவன். தீதில் செல்வமும் புகழும் கொண்டுள்ளதால் பெருமைமிக்கவன். அப்படியிருக்க, பரத்தையர் வீட்டில் நீடு தங்கி, தற்போது வீடு வந்திருக்கிறான். தலைவன் செய்துள்ள செயல் நல்லது கெட்டது அறியாத சிறுவர் செயலாகாதா? இதைக் காண்பவர் எள்ளி நகையாடினால், தலைவன் பெருமைக்கு, புகழுக்குப் பழி சேராதா என்னும் கேள்விகளை உள்ளடக்கியே தலைவி நகாரோ, பெரும! என விளிக்கிறாள். இக் கேள்வி தலைவனைப் புலந்து அல்லது கடிந்து கேட்பதா அல்லது நயந்து கேட்பதா அல்லது இடித்துரைப்பதா? என்னும் ஐயம் நமக்கு எழுகிறது. இங்கேதான் கம்புட்கோழி கிளையோடு ஆலுகின்ற தகவலின் உள்ளுறையை நன்கு பரிசீலிக்க வேண்டியவர்களாகிறோம்.
கம்புட்பேடை சேவலின்றியே சுற்றத்தோடு, தன் இனப்பறவைகளோடு மகிழ்ச்சியாக ஆரவாரிக்கிறது எனப் பொருள் கொண்டால், தலைவன் இல்லாமலேயே தலைவி, எந்தக் குறைவுமின்றித் தன் சுற்றத்தாருடன் மகிழ்வுடனிருப்பதான உள்ளுறை கொண்டு, தலைவி, நீ இல்லாமலும் என்னால் மகிழ்ச்சியோடு வாழ்ந்துவிடமுடியுமென்ற இறுமாப்போடு, பெரும, என எள்ளல் பொருளில் விழித்துப் பழிப்பதாக, புலந்து கடிவதாகப் பொருள் கோட முடிகிறது. இருப்பினும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்துள்ள ஐங்குறுநூறு நூலில் இப் பாடலுக்குப் பழைய உரை பின் வருமாறு உள்ளது.
(ப-ரை.) கம்புட்பேடை சேவலொழியக் கிளையுடனே ஆலுமூர
என்றது ‘கிளையுடனே வாழ்கின்ற எமக்கு நின்னினீங்கிய மெலிவு
உளதாகக் கூறுகின்றே மல்லேம்; நின் குலத்தொழுக்கத்துக்குத்
தகாது? எனக் கழறியதாம்; ?தாய்போற் கழறித் தழீஇக் கோடல்,
ஆய்மனைக் கிழத்திக் குரித்தென மொழிப? என்றதூஉம் இத்திற
னோக்கியெனக் கொள்க.
குறிப்பு. கம்புள் - சம்பங்கோழி. அரிக்குரல் - இனிய குரலை
யுடைய. கிளையோடு-தன் கூட்டத்தோடு. ஆலும்-கூவும்; ஆடு
கின்ற. மறு-குற்றம். யாணர்-புதுவருவாய். சிறுவரின்-சிறுவரைப்
போல. இனைய-இத்தன்மையான செயல்களை. செய்தி-செய்கிறாய்.
நிற் கண்டி சினோர்-நின்னைக் கண்டோர். கண்டிசினோர் நகாரோ.
?தாய்போற்.............. மொழிப? என்பது தொல். கற்பு 32.
அதே பேடை சேவலோடு சேர்ந்து ஆரவாரிக்கிறதெனப் பொருள் கொண்டால், பறவை கூட சேவலோடு இணைந்து மகிழ்கிறது; நானோ நீயின்றித் தனிமையில் தவிக்க வேண்டியதாயிருக்கிறதென்ற கழிவிரக்கத்தில், இது நியாயமோ எனக் கேட்பதாக உள்ளுறை கொள்ள இடமுள்ளது.
கம்புட் பேடை, அதன் சேவலோடும், உறவுகளோடும் சேர்ந்து மகிழ்ந்திருப்பதாகப் பொருள் கொள்ளும் போது, பேடை கூடத் தன் சேவலோடும் கிளைகளோடும் மகிழ்ச்சியாக உள்ளதே, நீயோ குற்றமற்ற வருவாயை மிகுதியாக உடையவன்; ஒளிமிக்கவன் என்பதால் பெருமகன். அத்தகைய பெருமகனாகிய நீ சிறுவர் போல் இப்படிச் செய்கிறாயே, உன் செயல்களைக் காண்போர் எள்ளி நகையாடுவாரே, அதனால் உனக்குப் பழி சேருமேயென்ற கவலையை உள்ளடக்கி, நகாரோ- பெரும! என வினவுவதாக, இதை விட்டுவிடெனச் சொல்லித் தொல்காப்பியப் பொருளதிகாரக் கற்பியல் நச்சினார்க்கினியர் உரை 173 ஆம் சூத்திரத்திற்கு – தாய்போற் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக்கிழத்திக்கும் உரித்தென மொழிப - இணங்கத் தழுவிக்கொள்வதாக உள்ளுறை கொள்ள இடமுள்ளது.
கம்புட் பறவை குறித்துப் பறவையியல் குறிப்புகளை ஆராயும் போது, இது white-breasted waterhen (Amaurornis phoenicurus) என்ற நீர்ப் பறவையென்று தெரியவருகிறது. , இது நன்னீர் வகையெனினும் சதுப்பு மற்றும் உப்பங்கழிகளிலும் வசிப்பதுண்டு. அதிகாலை இரைதேடும் (crepuscular) பழக்கமுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் பரவலாகக் காணப்படுகிறது. கூடிய வரையிலும் ஒரே பகுதியில் வாழும் பழக்கமுள்ளது. மழைக்காலத்தின் முதல் மழையின் போதும் முட்டையிடும் காலத்திலும் மீண்டும் மீண்டுமாக உரக்கக் கொக்கரிக்கும் (croaking) பழக்கமுடையது. முட்டையிட்டு அடைகாக்கும் போது, சேவலும் அடைகாக்கும் பண்புள்ளதென்றும், குஞ்சு வளர்ப்பில் சேவலும் பங்குகொள்வதாகவும் ( Both sex incubate the eggs and take care of chicks ) பறவையியலார் குறிப்பிடுகின்றனர். மேலும் இப்பறவையினச் சேவல் ஒற்றைப் பேடையோடு மட்டுமே வாழும் monogamous வாழும் பண்புள்ளது. இப்பறவைகள் எப்போதுமே சத்தமாகப் பரபரப்புடன் இயங்குபவை; அதிலும் குறிப்பாக சூரிய உதயம் மற்றும் அந்தி சாயும் நேரங்களில் உரக்கக் குரலெழுப்பும். இப்பாடலில் மருதத்திணைக் கருப்பொருளான நீர்க்கோழி என பொதுப்பெயரால் குறிப்பிடாமல் கம்புள் பறவையெனத் தனியாக ஓரினப்பறவையினைக் குறிப்பிடுவதற்கும் கம்புட் பேடையினை அரிக்குரற் பேடை எனவும் ஓரம்போகியார் குறிப்பிடுவதற்குமான அடிப்படை பறவையியலார் குறிப்பில் கிடைத்துவிடுகிறது.
பறவையியலார் குறிப்பிடும் கம்புள் பறவையின் பண்புகளை நோக்குங்கால், கம்புள் சேவல், ஒருதார மணப் (monogamous) பழக்கமுடையதென்பதும் அதுவுங்கூடப் பொறுப்புடன் அடைகாப்பதும் குஞ்சு வளர்ப்பில் அக்கறை காட்டுவதும் கிளைகளுடன் பேடை மகிழ்ந்து ஆலுவதாகவும் கவிதையில் குறிப்பிடும்போது பரத்தையர் வீட்டில் நீடு தங்கிய பொறுப்பற்ற செயலை உள்ளுறையாகச் சுட்டிக்காட்டுவதாகிவிடுகிறது. எனவே கம்புட் பேடை கிளையோடு ஆலுமெனக் குறிப்பிட்டுள்ளதை சேவலொழியக் கிளையோடெனப் பழைய உரைகாரர் பொருள் கொண்டது கம்புட்பறவையின் இயல்பு தெரியாமல் ஏற்பட்ட பிழையென்பது நன்கு விளங்குகிறது. கம்புட் சேவல் அடை காப்பதோடு குஞ்சும் பேணும் இயல்பினது என்கிறபோது, அது பேடையைப் பிரியும் பண்பினதில்லையென்றும் நமக்குத் தெளிவாகிவிடுகிறது.
எனவே தலைவி கம்புட் பறவையை அதன் இயல்பு தெரிந்தே குறிப்பிடுவதோடு, பெருமகனே, நகாரோ, அச்செயலை விட்டுவிடெனத் தாய் போல் கழறித் தழீஇக் கொண்டாளெனப் பொருள்கொள்வது சிறப்புடையதாகிறது. புலந்தோ, கடிந்தோ சொல்வதற்கு இக்கவிதையில் எதிர்மறைச் சொல்மொழியோ மறுப்பு மொழியோ இல்லாமலிருப்பதும் ஒரு சான்றாகும். எனவே பெரும! என்ற விளியில் எள்ளல் இல்லையென்பதும், அது உண்மையிலேயே மதிப்புறக் கூறிய மொழி என்பதும், நகாரோ என்ற வினவுமொழியிலும் நின் புகழின் மேல் பழிக்கு இடமாகிவிடுமே` என்ற அக்கறையும் அரவணைப்பும் வெளிப்படுவதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.
கவிதை நயம் :
இப்பாடலின் முதல் இரண்டு அடிகளாகிய `வெண்ணுதல் கம்புள் அரிக்குரற் பேடை தண்ணறும் பழனத்துக் கிளையொடு ஆலும்` என்ற பகுதியின் உள்ளுறை மிகச் சிறப்பானது.
`இன்னுமென்ன, சின்னப் பிள்ளைங்க மாதிரி, பார்க்கிறவர்கள் சிரிக்க மாட்டார்களா?` என மிகச் சாதாரணமாக இன்றும் வழங்குகின்ற உரையாடல் மொழி தான், கவிதையில் ` சிறுவர் இனைய செய்தி; நகாரோ – பெரும, நின் கண்டிசினோரே` என இலக்கியமாகிக் காலங்கடந்தும் நிற்பதை நோக்கும் போது பெருமகிழ்வு ஏற்படுகிறதன்றோ!
பரத்தையிற் பிரிவு ஏற்பட்டு, தலைவன் மீண்டு வருங்காலை தலைவி, தாய்போற் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப எனச் சூத்திரமும் கண்ட தொல்காப்பியத் திறம் என்றென்றும் தமிழ்க்கவிதையின் உயர்வுக்கும் தமிழ் இலக்கண மாண்புக்கும் சான்றாக நிற்கும். 
முகநூலில் 06.03.2018 அன்று பதிவிடப்பட்டது விருப்பம் 22 பகிர்வு 3 . பின்னூட்டம் 0 

No comments:

Post a Comment