Thursday, 8 March 2018

நெல்லிக்காய்ச் சாறு

நெல்லிக்காய் (காட்டு நெல்லி எனப்படும் பெருநெல்லி)
நெல்லிக்காயின் அருமையைச் சொல்லித் தெரியவேண்டியதில்லையென்றாலும் நினைவுபடுத்த வேண்டியதாயிருக்கிறது.
அதன் பயன்கள் குறித்து பள்ளிக் காலத்திலிருந்தே கேள்விப்படுகிறோம். ஆனாலும் அதனை உணவில் சேர்ப்பதென்பது மிகக் குறைவாகவே உள்ளது.
இக்காயைக் கொண்டு செய்யப்படும் `கிச்சடி` நாஞ்சில் நாட்டு விருந்துகளில் கட்டாயம் பரிமாறப்படும். ஏகாதசி அன்று பட்டினி விரதமிருந்து மறுநாள் காலையில் விரதச் சாப்பாட்டின் போது அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் சேர்க்கப்படவேண்டுமென்பதை ஒரு சாஸ்திரமாகச் சொல்கின்றனர்.
நெல்லிக்காய்க் கிச்சடி என்பது நெல்லிக்காய், பச்சைமிளகாய், தேங்காய், உப்பு சேர்த்தரைத்த துவையலில் தயிர் சேர்த்து, தாளிதம் செய்துகொள்வது. அவ்வளவுதான். இதையும் அதிகம் சாப்பிடமுடியாது. கொஞ்சமாகத் தொட்டுக்கொள்ளலாம்.
பெருநெல்லிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவதென்பது மகிழ்ச்சியான ஒன்றாக இல்லை. தயிர்ச் சோற்றோடு ஊறுகாயாகச் சாப்பிடுவது சுவையானதென்றாலும் ஊறுகாய்த் தயாரிப்பில் உப்பும், காரமும், எண்ணெயும் அதிகமாகச் சேர்க்கப்படுவதால், ஊறுகாயைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் ஊறுகாயைக் கண்கொண்டுகூடப் பார்க்கக் கூடாதென்கிறார்கள்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை, எடையைக்குறைக்கும் தன்மை, வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் இ கிடைப்பது போன்ற பயன்களை நினைத்துப் பார்க்கும்போது, நெல்லிக்காய்ச் சாற்றினைத் தினமும் அருந்துவது மிக நல்லதென்றே தெரிகிறது.
ஒரு நபருக்கு பெரிய நெல்லிக்காயில் இரண்டு அல்லது மூன்று போதுமானது. கத்தியால் பிறை வடிவத்துண்டுகளாக்கிப் பின்பும் சிறு துண்டுகளாக்கிச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துச் சாறெடுத்து அப்படியே அருந்தலாம். தேவையெனில் சிறிது உப்பும் இஞ்சிச் சாறும் சேர்த்துக்கொள்ளலாம். அருந்தி முடித்தபின் தொண்டை வரையில் மகிவான ஒரு இனிப்புச் சுவையை உணரலாம்
இதைக் காலையில் வெறும் வயிற்றில் தான் அருந்த வேண்டுமென்றில்லை. பதினோரு மணிக்கு காபி, தேயிலை அருந்துவதற்கு மாற்றாக நெல்லிச் சாறினை அருந்திப் பார்க்கலாம். உடலுக்கு ஒத்துக்கொள்ளும். உடல் ஆரோக்கியமாக இருப்பதான ஒரு நல உணர்வினைப் பெறுவீர்கள். அப்படி ஒத்துக்கொள்ளவில்லையெனில் விட்டுவிடவேண்டியதுதான்.
என்ன, கொஞ்சம் வேலை அதிகம். சோம்பல் படாமல் செய்யவேண்டியதுதான். வேலைக்குப் போகும் இளம் பிள்ளைகளால் இதெல்லாம் முடியாது். அவர்களுக்குத் தான் நேரம் கிடைப்பதே பெரியபாடாயிற்றே. நாம் தான் சிரமம் பார்க்காமல் செய்து கொடுத்து அவர்களின் நலத்தையும் பாதுகாக்கவேண்டும்.
முகநூல் பதிவு நாள் 24.02. 2018 விருப்பம் 120 பகிர்வு 51 பின்னூட்டம் 25.

No comments:

Post a Comment