Sunday, 4 March 2018

வேட்டைக்கத்தி - மதிப்புரை - சா.தேவதாஸ்.

மதிப்புரை - வேட்டைக்கத்தி - மொழியாக்கச் சிறுகதைகள் தொகுப்பு

Image result for வேட்டைக்கத்தி




`வேட்டைக்கத்தி` - மதிப்புரை,

சா. தேவதாஸ்.

ஹாருகி முரகாமி என்னும் ஜப்பானிய எழுத்தாளரின் இரு சிறுகதைகளையும், மெய்லிமெலாய் என்னும் அமெரிக்க எழுத்தாளரின் ஒரு சிறுகதையையும், மோனிகா ஹ்யூக்ஸ் என்னும் ஆங்கிலேய - கனடிய எழுத்தாளரின் ஒரு சிறுகதையையும் தமிழில் தருகிறார், ச.ஆறுமுகம் இத்தொகுப்பில்.

பணி ஓய்வுக்குப் பிறகு இவர் உற்சாகத்துடன் கலை-இலக்கிய ஈடுபாடுகளில் ஆர்வம் காட்டுகின்றார். இது ஒரு நல்ல விஷயம். சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்த இவரிடம் ஒரு தேவதைக் கதையை மொழிபெயர்க்குமாறு ஒப்படைத்தபோது கவனத்துடன் சிறப்பாக மொழியாக்கம் செய்து தந்து, தன்னை மொழிபெயர்ப்பாளராக அறிமுகப்படுத்திக் கொண்டவர். தொடர்ந்து ஜப்பானிய தேவதைக் கதைகளை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாகவே வெளியிட்டார். அவரின் ஒரு கொரிய நாட்டார் கதை மொழியாக்கம் திசை எட்டும் இதழில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்றது.

அடுத்து அவரிடம் இருந்து வந்திருப்பது இச்சிறுகதைத் தொகுப்பு. மொழிபெயர்க்கும்போது எதை மொழிபெயர்க்கவேண்டும், அதை எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்பவைதான் கவனிக்கவேண்டிய முக்கிய இரு அம்சங்கள். இந்தக் கவனங்கள் ஆறுமுகத்திடம் இருக்கின்றன என்பதற்கு இத்தொகுப்பு ஒரு சான்று.

பிறமொழிகளில் படிக்கக் கிடைப்பவற்றை எல்லாம் அப்படியே தந்துவிடாமல், புதிய எழுத்தாக்கத்தையும் வேறுபட்ட கண்ணோட்டத்தையும் வித்தியாசமான ஆளுமைகளைப் பரிச்சயப்படுத்துவதுமான புனைவுகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் நோக்கம் இவருக்கு இருப்பது தெரியவருகிறது.

முரகாமியின் `வேட்டைக்கத்தி` மற்றும் `இருபதாவது பிறந்த நாளில் அவள்` என்னும் இருகதைகளுமே ஆழ்மனதில் கடக்கும் இரகசியங்களை, ஆவேசங்களை, விரக்திகளை வசீகரிக்கும் மொழியில் புனைவாக்குபவை.

கால்கள் முடமாகி சக்கர நாற்காலியில் தாயினால் தள்ளப்பட்டுவரும் இளைஞனைக் கவனித்து வரும் ஒருவன், ஒருநாள் அந்த இளைஞனுடன் இரவு வேளையில் பேசிக்கொண்டிருக்கையில், தன்னிடமிருக்கும் கத்தியை உருவி, அதனைப் பிரித்து எதனையாவது வெட்டிப்பார்க்குமாறு கூறுகிறான், அந்த இளைஞன். இயக்கமில்லாமல், பிரச்சனைகள் இல்லாமல் சாதுவாய்க்க கிடக்கும் இந்த இளைஞனுக்குக் கத்தி எதற்கு? திறமைசாலிகளும் பலசாலிகளுமாய் தன் குடும்பத்திலிருப்போர் பலவீனர்களைக் கவனித்துக்கொள்வதாய் இருக்கின்ற அவனது குடும்பம், அவனது கால்களை மைய அச்சாக வைத்து இயங்குவதாய்த் தோன்றுகிறது. இதில் அவனது பங்கு என்னவாய் இருக்க முடியும்? நான் ஒன்றுமற்றதற்காக – rien- அது உருவாக்கும் வெற்றிடத்திற்காக என் நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய வேலையும் அந்த – rien- அதாவது வெற்றிடத்தை ஏற்படுத்துவது தான்.

வெற்றிடத்தை ஏற்படுத்துபவனின் மனம் எத்தகையக் கொந்தளிப்பைக் கொண்டிருக்கும்? அவன் அடிமனதில் எத்தகைய விரக்தி படிந்திருக்கும்? அது வெளிப்படுத்தும் சீற்றம் எப்படி இருக்கும்? இதை உணர்த்தவருவதுதான் `வேட்டைக்கத்தி`. அதுவும் அந்த இளைஞனின் கனவாகச் சொல்லப்படுகிறது. நினைவுகள் உள்ள மனப்பரப்பில் ஒரு கத்தி குத்திக்கிடக்கிறது. வலி இல்லை. இன்னொருவரது மனதில் அது இருப்பதைப் போல அவனால் அதைக் கவனிக்கமுடிகிறது. அதை எடுத்துவிடத்தான் முடியாதிருக்கிறது. ‘’….. அதோடு எல்லாமே மறையத் தொடங்குகிறது. நானுங்கூட வெளிறி மங்கத் தொடங்குகிறேன். ஆனால், கத்தி மட்டும் இருக்கிறது. ….. முடியும் வரையில் கூட. கடற்கரையில் கிடக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ஏதோ ஒரு பிராணியின் எலும்பைப் போல. இப்படியானதுதான் என் கனவு.”

கத்தி என்பது வேட்டையாட, வெட்டி வீழ்த்த, இக்கத்தியோ புதைந்திருக்கிறது. அதுதான் சிக்கல்.

இதேபோன்று இன்னொரு மர்மத்தைப் பேசுகிறது, `இருபதாவது பிறந்த நாளில் அவள்` கதை. தனது உணவகத்துப் பணிப்பெண்ணின் இருபதாவது பிறந்த தினத்தில், ``ஓர் ஆசையைக் கூறினால் நிறைவேற்றி வைக்கப்படும். ஒரு நிபந்தனை. ஏன் அப்படிக் கேட்டுக்கொண்டோம் என்று வருந்தக் கூடாது.” என்று கூறுகிறார், அதன் உரிமையாளர்.
அவள் வெளிப்படுத்திய ஆசை என்ன, அது நிறைவேறிற்றா, அல்லது அதன் பொருட்டு அவள் வருந்த நேரிட்டதா? என்பதெல்லாம் இக்கதையில் வெளிப்படையாக விவரிக்கப்படவில்லை. கதை பூடகமாகவே நகர்கிறது.

இந்த ஆசையும் வேண்டுதலும் நிஜமா, கற்பனையா என்றும் தெளிவின்றிச் சொல்லப்படுகிறது. ஆனாலும் எதுவோ சொல்லப்பட்டிருக்கிறது என்னும் மயக்கத்தையும் கதை தருகின்றது. இதுதான் முரகாமியின் பலம், வளம். கற்பனையும் எடுத்துரைப்பும் சிறகசைத்துச் செல்ல இன்னும் பல வானங்கள் காத்திருக்கின்றன.

வியட்நாம் யுத்தம்; அடுத்து உலக வர்த்தக மையக் கோபுரங்கள் தகர்ப்பு என்ற சூழல்களில் அமெரிக்கப் போர்வீரர்கள் அயலகங்களில் இருக்கையில், தங்களுக்குப் பதிலாக இருவரை பதிவு அலுவலகத்தில் நிறுத்தி தங்கள் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள ஒரு அனுமதி கிடைக்கிறது.

இதில் பதிலிகளாகச் செயல்படும் ஒரு ஆணும் பெண்ணும், தங்களது மனக்கிடக்கைகளை உரிய நேரத்தில் வெளிப்படுத்தாத காரணத்தால், பொருத்தமற்ற உறவுகளில் ஈடுபட நேர்ந்து, கடைசியில் சரிப்படுத்திக்கொள்வதை எடுத்துரைக்கிறது, `பதிலித்திருமணம்` என்னும் மெய்லி மெலாயின் சிறுகதை. `சம அளவில் அன்பாயிருக்க முடியாதெனில், அதிக அன்பு காட்டுகிற ஒருவர் நானாகவே இருக்கட்டும்` என்னும் கவிஞர் ஆடனின் வரிகள் இக்கதையின் நாயகனின் நிலைக்குப் பொருந்திப் போகின்றது. ஆணும் பெண்ணும் சேர்ந்து தம்பதியராகிட, அது சரிக்குச் சமமாக இருக்க வேண்டுமென்பதில்லை` எனச் சிக்கலை அவிழ்த்துவிடுகிறார், இச்சிறுகதை ஆசிரியை.

`வணக்கம் நிலவே, போய்வருகிறேன்` என்னும் மோனிகா ஹ்யூக்ஸின் அறிவியல் கற்பனை சார்ந்த சிறுகதை. நிலவில் தங்கிவிடும் நபர்களுக்கு பூமிக்குத் திரும்பும்போது பூமி எவ்வளவு வியப்பூட்டுவதாய் வித்தியாசமானதாய்க் காட்சிதரும் என்று சொல்கிறது. அறிவியல் புனைவுக்கு ஏற்ப அதில் இடம்பெறும் புதுப்புது சொல்லாட்சிகளுக்குத் துல்லியமானதும் செறிவானதுமான மொழியாக்கத்தை ஆறுமுகம் தந்துவிடுகிறார்.

மொழியாக்கம் என்பது புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவது. பண்பாடுகளைப் பரிச்சயப்படுத்துவது. வேறுபாடுகளில் வளமுண்டு என்று வற்புறுத்துவது. இந்த அம்சங்களைக் கவனத்தில் கொண்டு இயங்கும் ஆறுமுகம் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். மெய்லிமெலாய் மற்றும் மோனிகா ஹ்யூக்ஸ் என்னும் எழுத்தாளர்களை முதலாவதாக அறிமுகப்படுத்தியுள்ளமைக்காகவும் முரகாமியின் செறிவான இரு கதைகளைத் தந்துள்ளமைக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

அடவி, அக்டோபர் 2014 இதழில் வெளியாகியுள்ளது.              

No comments:

Post a Comment