Monday, 31 December 2018

செஃப் வீடு - ஆங்கிலம்: ரேமண்ட் கார்வர்

செஃப் வீடு / CHEF’S HOUSE / ஆங்கிலம் : ரேமண்ட் கார்வர் ( Raymond Carver )  / தமிழில் / ச.ஆறுமுகம்.


ரேமண்ட் கார்வர்
அந்தக் கோடையில் வெஸ், யுரேகாவுக்கு வடக்கில் முழுமையாக அறைகலங்களுள்ள ஒரு வீட்டை குடிநோயிலிருந்தும் முழுமையாக மீட்கப்பட்டிருந்த செஃப் என்பவரிடமிருந்து வாடகைக்கு எடுத்தான். பின்னர் அவன், என்னிடம் அவனோடு வாழுமாறும் அவனை விட்டுப் பிரிவதை மறந்துவிடுமாறும் கேட்டுத் தொலைபேசியில் பேசினான். அவன் பாரவண்டியிலிருப்பதாகச் சொன்னான். அந்தப் பார வண்டியைப்பற்றி எனக்குத் தெரியும். முடியாதென நான் சொல்லும் பதிலை அவன் ஏற்கமாட்டான். அவன் மீண்டும் என்னிடம் தொலைபேசியில், எட்னா, முன்பக்கச் சாளரம் வழியாக நீ கடலைப் பார்க்கமுடியுமென்றான். காற்றில் உப்பின் வாடையை நீ உணரலாம். அவன் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் வார்த்தைகளைக் குழறிப் பேசவில்லை. அதைப்பற்றி யோசித்துப் பார்ப்பதாக நான் கூறினேன். நானும் யோசித்துப் பார்த்தேன். ஒரு வாரம் கழித்து அவன் மீண்டும் என்னைத் தொலைபேசியில் அழைத்து எப்போது வருகிறாயெனக் கேட்டான். அப்போதும் யோசித்துக்கொண்டிருப்பதாகக் கூறினேன். நாம் மீண்டும் தொடங்கலாமென்றான், அவன். நான் அங்கே வரவேண்டுமென்றால், நீ எனக்காகச் சிலவற்றைச் செய்யவேண்டுமென்றேன் நான். என்னவென்று சொல்லென்றான், அவன். நானறிந்த வெஸ்ஸாக முயற்சிப்பதோடு, அப்படியே இருக்கவும் வேண்டுமென்றேன் நான். பழைய வெஸ், நான் திருமணம் செய்த வெஸ். அவன் அழத் தொடங்கினான்; அதை நான் அவனது நல்ல மனதின் அடையாளமாகக் கண்டேன். அதனால், சரி,சரி. நான் வருகிறேன் எனச் சொல்லிவிட்டேன்.
வெஸ் அவனுடைய பெண்தோழியை விட்டு விலகினானோ, அல்லது, அவள் இவனை விட்டு விலகினாளோ, எனக்குத் தெரியாது. அதைப்பற்றி எனக்குக் கவலையுமில்லை. வெஸ்ஸோடு செல்வதற்கு நான் தயாராகும்போது, எனது ஆண்தோழனுக்கு விடைகொடுக்கவேண்டும். என் தோழன் சொன்னான், நீ தவறு செய்கிறாய். எனக்கு இப்படிச் செய்யாதேயென்றான். நம் கதை என்னாவது? என்றான், அவன். வெஸ்ஸின் நன்மைக்காக, நான் இதைச்செய்தாக வேண்டியிருக்கிறதென்றேன். அவன் குடியிலிருந்தும் விடுபட முயற்சிக்கிறான். அது எப்படியானதென்று நீ நினைத்துப்பார், என்றேன். எனக்கு ஞாபகமிருக்கிறது என்று சொன்ன என் ஆண்தோழன், ஆனாலும் நீ போவதை நான் விரும்பவில்லையென்றான். நான் கோடைக்குப் போகத்தான் போகிறேனென்றேன், நான். கொஞ்சம், பார்ப்பேன். சரியில்லையென்றால் திரும்பவும் வந்துவிடுவேன் என்றேன். என் கதை என்ன? நான் என்னாவது? திரும்பி வராதேயென்றான், அவன்.
நாங்கள் காபி, சோடா, குளிர்பானங்கள் மற்றுமுள்ள எல்லா வகையான பழச்சாறுகளையும் அந்தக் கோடையில் அருந்தினோம். அந்தக் கோடை முழுவதற்கும் நாங்கள் குடிப்பதற்கிருந்ததெல்லாம் அவைதாம். அந்தக் கோடை முடியவே கூடாதென்ற ஆவல் உள்ளூறுவதை நான் உணர்ந்தேன். எனக்கு நன்றாகத் தெரிந்தது, ஆனாலும் செஃபின் வீட்டில் வெஸ்ஸுடன் ஒரு மாதம் கழிந்ததும், என்னுடைய திருமண மோதிரத்தை எடுத்து நான் மீண்டும் அணிந்துகொண்டேன். இரண்டு வருடங்களாக, அந்த மோதிரத்தை நான் அணிந்திருக்கவில்லை. குடி போதையிலிருந்த வெஸ் அவனுடைய மோதிரத்தைக் கழற்றி பீச் தோட்டத்தில் எறிந்த இரவிலிருந்து நான் அணியவேயில்லை.
வெஸ்ஸிடம் கொஞ்சம் பணமிருந்தது. அதனால் நான் வேலைக்குப் போகவேண்டியிருக்கவில்லை. செஃப் அநேகமாக எங்களுக்கு அந்த வீட்டை வாடகையென எதுவுமேயில்லாமல் தான் கொடுத்திருந்தார். எங்களுக்கெனத் தொலைபேசி எதுவும் இல்லை. சமையல் எரிவாயு, வெளிச்சத்திற்கான விளக்குகள் மற்றும் சேஃப்வே அங்காடியில் நாங்கள் வாங்கிய பொருட்களுக்கும் பணம் கொடுத்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகலில் தெளிப்பான் ஒன்று வாங்கச் சென்ற வெஸ் எனக்கான சிலவற்றோடு திரும்பிவந்தான். டெய்ஸி மலர்களாலான அழகிய ஒரு பூங்கொத்தும் வைக்கோல் தொப்பி ஒன்றும் கொண்டுவந்தான்.
செவ்வாய் மாலைகளில் நாங்கள் ஏதாவது ஒரு திரைக்காட்சிக்குப் போவோம். மற்ற இரவுகளில், `குடிக்காதே` கூட்டமென வெஸ் சொல்கிற கூட்டங்களுக்குப் போவான். வீட்டு வாசலுக்கே காரில் வந்து அழைத்துச் செல்கிற செஃப் கூட்டம் முடிந்ததும் மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுவிடுவார். சில நாட்களில் நானும் வெஸ்ஸும் பக்கத்திலிருந்த நல்ல தண்ணீர்க் குளம் ஒன்றில் ட்ரவுட் மீன் பிடிக்கச் செல்வோம். சில குஞ்சுகளைப் பிடிப்பதிலேயே நாள் முழுவதும் கரையிலேயே கழிந்துவிடும். அவை நன்றாக இருக்குமென்பேன் நான். அன்றைய இரவுக்கு அவற்றைப் பொரித்துவிடுவேன். சிலவேளைகளில் என் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டு தூண்டிற்கோலுக்குப் பக்கத்திலேயே விரிப்பினை விரித்துப் படுத்துத் தூங்கிவிடுவேன். கடைசியாக என்ன பார்த்தோமென்று நினைத்துப்பார்த்தால், என் தலைக்கு மேலே மத்தியப் பள்ளத்தாக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்த மேகங்கள் தாம் நினைவுக்கு வரும். இரவில், வெஸ், என்னைக் கைகளில் அள்ளிக்கொண்டு, நான் இப்போதும் அவனுக்கே அவனுக்கான, அவனுடைய பெண்ணாகவே இருக்கிறேனா எனக் கேட்பான்.
எங்கள் குழந்தைகள் எங்களோடு ஒட்டாமல், தள்ளியே இருந்தனர். செரைல், ஓரேகானிலுள்ள ஒரு பண்ணையில் சிலரோடு வசித்தாள். அவள் ஒரு ஆட்டு மந்தையை மேய்த்ததோடு பாலும் விற்றாள்: தேன்கூடுகள் பராமரித்து, ஜாடி, ஜாடியாகத் தேன் சேர்த்தாள். அவளுக்கேயான வாழ்க்கையினை அவள் வாழ்ந்துகொண்டாள்; நான் அவள் மீது குறை ஏதும் சொல்லவில்லை. நானும் அவளது அப்பாவும், அவளை எந்த விஷயத்துக்குள்ளும் கொண்டுவராமலேயே இருந்தது போலவே நாங்கள் என்னென்ன செய்தோமென்பது பற்றி, இப்படி அல்லது அப்படியென்று எந்த ஒரு வழியிலும் அவள் கவலைப்படவேயில்லை.
பாபி, வாஷிங்டனில் கால்நடைத் தீவனச் சேகரிப்பு வேலையிலிருந்தான். தீவனச் சேகரிப்புப் பருவம் முடிந்த பின்னர், ஆப்பிள் தோட்டங்களில் வேலைசெய்யத் திட்டமிட்டிருந்தான். அவனுக்கென்று ஒருத்தி இருக்கிறாள்; அவளுக்காகப் பணமும் சேமிக்கிறான். நான் அவர்களுக்கு எழுதும் கடிதங்களில் `எப்போதும் அன்பு` என ஒப்பமிடுவேன்.
ஒரு பிற்பகலில், வீட்டின் முன்பாக செஃப் காரில் வந்து நின்றபோது, வெஸ் முற்றத்தில் களைகளைப் பிடுங்கிக்கொண்டிருந்தான். நான் கழுவு தொட்டியில் வேலையாக இருந்தேன். அவருடைய கார், கிளைச்சாலை, அதற்கும் பின்னாலிருந்த இருவழிச்சாலை, மணல்மேடுகள் மற்றும் பெருங்கடல் எல்லாமே நானிருந்த இடத்திலிருந்த இடத்திலிருந்தே பார்க்க முடிந்தது. கடலுக்கு மேலாக மேகங்கள் தெரிந்தன. அவரது காரிலிருந்தும் இறங்கிய செஃப் அவரது காற்சட்டையை மேலிழுத்துக்கொண்டார். ஏதோ ஒன்று நடக்கப் போவதாக எனக்குத் தோன்றியது
வெஸ், அவன் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, எழுந்து நின்றான். அவன் கைகளுக்கு உறைகளும் தலைக்கு ஒரு கான்வாஸ் துணித் தொப்பியும் அணிந்திருந்தான். அவன் தொப்பியைக் கழற்றிவிட்டு, முகத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டான். செஃப், வெஸ்ஸின் அருகில் சென்று, அவன் தோள்மீது கைகளைப் போட்டார். வெஸ் கையுறை ஒன்றை உருவி இழுத்துக் கழற்றினான். நான் வாசலுக்குச் சென்றேன்.
அவர் வருத்தத்தைக் கடவுள் தான் அறிவாரென்றும் அந்த மாதக் கடைசியில் எங்களை வீட்டைவிட்டுச் செல்லுமாறு கேட்கவேண்டியதாயிருக்கிறதென்றும் செஃப் வெஸ்ஸிடம் சொன்னதை நான் கேட்டேன். வெஸ் இன்னொரு கையுறையையும் உருவினான். அது ஏன் செஃப்?
குடிக்கிற காலத்திலிருந்தே, வெஸ் எப்போதும் குண்டு லிண்டா எனச் சொல்கிற அவருடைய மகள், வசிப்பதற்கு ஒரு இடம் வேண்டுமென்றும், அது இதுதானென்றும் செஃப் சொன்னார். லிண்டாவின் கணவன் அவருடைய மீன்பிடிப்படகை எடுத்துக்கொண்டு சில வாரங்கள் முன்னதாகச் சென்றதாகவும் அதன்பிறகு அவனைப்பற்றி எதுவும் தெரியவில்லையென்றும் செஃப், வெஸ்ஸிடம் கூறினார்.
அவள் என்னுடைய சொந்த ரத்தம், என்றார் செஃப். அவள் கணவனை இழந்துவிட்டாள். அவளுடைய குழந்தையின் தந்தையை அவள் இழந்திருக்கிறாள். என்னால் உதவமுடியும். அவளுக்கு உதவும் நிலையில் நானிருக்கிறேனென்பதே மகிழ்ச்சிதான், என்றார், செஃப். எனக்கு மிகவும் வருத்தந்தான் வெஸ், ஆனாலும் நீ வேறு வீடு பார்த்துத்தானாக வேண்டும். பின்னர், செஃப் மீண்டும் வெஸ்ஸைத் தழுவி அணைத்து, அவருடைய காற்சட்டையை மீண்டும் மேலிழுத்துக்கொண்டு, அவருடைய பெரிய காரில் ஏறி, அதை ஓட்டிச்சென்றார்.
வெஸ் வீட்டுக்குள் வந்தான். தொப்பியையும் கையுறைகளையும் தரைவிரிப்பின் மீது எறிந்துவிட்டு, பெரிய நாற்காலியில் உட்கார்ந்தான். அது செஃபின் நாற்காலி, சட்டென்று எனக்கு உறைத்தது. தரைவிரிப்பும் கூடத்தான். வெஸ் முகம் வெளிறித் தோன்றினான். இரண்டு தம்ளர்களில் காபி ஊற்றி, ஒன்றை அவனிடம் கொடுத்தேன்.
எல்லாம் சரியாகப் போகும், கவலைப்படாதே வெஸ் என்றேன். செஃப்பின் சாய்மெத்தையில் என் காபியுடன் அமர்ந்தேன், நான்.
இங்கே நமக்குப் பதிலாக குண்டு லிண்டா வசிக்கப் போகிறாள், என்றான், வெஸ். அவன் தம்ளரைக் கையில் தான் பிடித்திருந்தான். ஆனாலும் அதிலிருந்து ஒரு மடக்கு கூடக் குடித்திருக்கவில்லை.
வெஸ், இடிந்துவிடாதே, என்றேன், நான்.
அவளுடைய ஆள் கெட்சிகானில் வந்து சேர்வான், பாரேன் என்றான், வெஸ். குண்டு லிண்டாவின் கணவன் அவர்களை மிக எளிதாக, வெளியே இழுத்து எறிந்துவிட்டான். ஆனால், அதற்காக அவனைக் குற்றம் சொல்ல யாரால் முடியும்? என்றான், வெஸ். இதைப்பார்க்கும்போது, அவனேகூடத்தான், இந்த குண்டு லிண்டா கூடவும் அவள் குழந்தை கூடவும் மீதி நாளைக் கழிப்பதைவிடக் கப்பலோடு போயிருப்பானென்றான், வெஸ். பிறகு, வெஸ் அவனுடைய தம்ளரைக் கையுறைகளின் பக்கத்தில் வைத்தான். இந்த நிமிஷம் வரைக்கும் இது ஒரு மகிழ்ச்சியான வீடாகத்தானிருந்திருக்கிறது, என்றான்.
நாம் வேறொரு வீடு வாங்குவோம் என்றேன், நான்.
இது மாதிரி முடியவே முடியாது, என்றான் வெஸ். எப்படியானாலும் இதுமாதிரி வராது. இது நமக்கு ஒரு நல்ல வீடாக இருந்திருக்கிறது. இந்த வீட்டுக்கென்றே நல்ல நினைவுகள் இருக்கின்றன. இனி, குண்டு லிண்டாவும் அவள் குழந்தையும் இங்கிருக்கப் போகிறார்கள், என்றான், வெஸ். அவன் தம்ளரை எடுத்துக் காபியை உறிஞ்சிச் சுவைத்தான்.
இது செஃப் வீடு, என்றேன், நான். அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்துதானாக வேண்டும்.
அது எனக்குத் தெரியும், ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. என்றான், வெஸ்.
வெஸ்ஸுக்கு அவரைப்பற்றி இப்படி ஒரு பார்வை. அது எனக்குத் தெரியும். அவன் உதடுகளை நாக்கால் தடவிக்கொண்டேயிருந்தான். காற்சட்டைக்குள்ளாக மேற்சட்டையைத் திணித்துக்கொண்டேயிருந்தான். நாற்காலியிலிருந்தும் எழுந்த அவன் சாளரத்தின் பக்கம் போனான். கடலையும் அதன் மேலாகக் கூடிக்கொண்டிருந்த மேகங்களையும் பார்த்தவாறே நின்றான். எதையோ நினைத்துச் சிந்திப்பது போல நாடியை விரல்களால் தட்டிக்கொண்டான். ஆமாம், அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான்.
இலேசா எடுத்துக்க, வெஸ் என்றேன், நான்.
இலேசா எடுத்துக்கொள்ளவேண்டுமென்கிறாள், அவள் என்றான் வெஸ். அவன் அப்படியே நின்றுகொண்டிருந்தான்.
ஆனால், அடுத்த ஒரு கணத்திலேயே திரும்பி வந்து சாய்மெத்தையில் என் பக்கத்தில் உட்கார்ந்தான். ஒரு காலை எடுத்து மற்றொன்றின் மீது குறுக்காகப் போட்டுக்கொண்டு, அவனுடைய மேற்சட்டையின் பொத்தான்களைத் திருகத் தொடங்கினான். நான் அவன் கைகளைப் பற்றினேன். பேசத் தொடங்கினேன். அந்தக் கோடை காலத்தைப்பற்றிப் பேசினேன்.
ஆனால், அது என்னவோ முன்காலத்தில் நடந்தது போலப்பேசி, நானாகவே மாட்டிக்கொண்டேன். பல ஆண்டுகள் ஆகியிருக்கலாம். எப்படியாக இருந்தாலும், அது முடிந்துபோன ஒன்றுதான். பின்னர் நான் குழந்தைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினேன். அதை இன்னொருமுறை செய்ய வேண்டுமென்றும் இந்தமுறை சரியாகச் செய்துவிட ஆசைப்படுவதாகவும் வெஸ் சொன்னான்.
அவர்கள் உன்மீது அன்பாயிருக்கிறார்கள், என்றேன் நான்.
இல்லை, அவர்கள் அப்படியில்லை, என்றான், அவன்.
ஏதோ ஒரு நாள் அவர்கள் புரிந்துகொள்வார்கள், என்றேன், நான்.
இருக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் அது ஒரு விஷயமாகவே இருக்காது.
உனக்குத் தெரியாது, என்கிறேன், நான். .
எனக்கும் சில விஷயங்கள் தெரியும், என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான். எனக்குத் தெரியும், நீ இங்கே வந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நான் அதை மறக்கவே மாட்டேன். நீதான் அதைச் செய்தாய், என்றான் வெஸ்.
எனக்கும் மகிழ்ச்சிதான், என்றேன், நான். இந்த வீட்டை நீதான் கண்டிபிடித்தாய், அது எனக்கு மகிழ்ச்சிதானென்றேன், நான்.
வெஸ் பெருமூச்செறிந்தான். பின், சிரித்தான். நாங்கள் இருவரும் சிரித்தோம். `அந்த செஃப்` என உச்சரித்த வெஸ் தலையை உலுக்கிக்கொண்டான். அந்தப் பொட்ட நாய்க்குப் பிறந்தவன், எரிபந்தை நம்மீது வீசிவிட்டுப் போய்விட்டான். நீ நம் திருமண மோதிரத்தை அணிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இம்முறை நாமிருவரும் சேர்ந்தேயிருந்ததில் எனக்கு மகிழ்ச்சி., என்றான், வெஸ்.
அப்புறம், நானும் ஏதோ சொன்னேன். சரி, இப்படி வைத்துக்கொள், சும்மாதான் வைத்துக்கொள்ளேன், எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இதுதான் முதன் முதலாக என்று வைத்துக்கொள். சும்மாதான் அப்படி வைத்துக்கொள்ளேன். நான் சொல்வது, காயப்படுத்துவதற்கல்ல, மோசமான ஒன்று நடக்கவேயில்லையென்று சொல். நான் சொல்வது உனக்குப் புரிகிறதில்லையா? பின் என்ன? என்றேன், நான்.
வெஸ் கண்கொட்டாமல் என்னையே பார்த்தான். அப்படியாக இருந்தால், நாம் வேறு யாரோவாக இருக்கவேண்டும். நாமாக இல்லாத வேறு யாரோவாக. என்னிடம் அது போல நினைக்கின்ற எண்ணம் எதுவும் மீந்திருக்கவில்லை. நாம் யாராக இருக்கிறோமோ அப்படித்தான் பிறந்திருக்கிறோம். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?
நல்ல விஷயத்தை நானும் தூக்கி எறிந்துவிடவில்லை; அறுநூறு மைல்களுக்கு அப்பாலிருந்து நீ இப்படிப் பேசுவதைக் கேட்பதற்காகவா வந்தேனென்றேன், நான்.
நான் வருந்துகிறேன், வருத்தம் தெரிவிக்கிறேன் ஆனால் நானாக இல்லாத ஒருவர் போல என்னால் பேசமுடியாதென்று சொன்னான், அவன்.
நான் வேறு யாரோ அல்ல. நான் வேறு யாரோவாக இருந்திருந்தால், நான் நிச்சயமாக இங்கே இருந்துகொண்டிருக்க மாட்டேன். நான் வேறு யாரோவாக இருந்திருந்தால் நான் நானாக இருக்கமாட்டேன்.
ஆனால், நான் நானாகவே இருக்கிறேன், உனக்குத் தெரியவில்லையா?
வெஸ், அதெல்லாம் சரி, என்றேன், நான். அவனுடைய கைகளைப் பிடித்து என் கன்னங்களுக்குக் கொண்டுவருகிறேன். பின்னர், எனக்குத் தெரியாதா, அவனுடைய பத்தொன்பதாவது வயதில் அவன் எப்படி இருந்தான், டிராக்டரில் அமர்ந்து, நெற்றி மீது கைவைத்து வெஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய அப்பாவை நோக்கி, வயலின் குறுக்காக அவன் ஓடும்போது எப்படித் தோன்றினான், என்று நான் நினைத்துப்பார்த்தேன். நாங்கள் அப்போதுதான் கலிபோர்னியாவிலிருந்து காரில் வந்திருந்தோம். செரிலோடும் பாபியோடும் காரைவிட்டு வெளியே வந்த நான், அங்கே பார் தாத்தா என்றேன். அவர்களெல்லாம் அப்போது குழந்தைகள்.
வெஸ் என்னருகிலேயே உட்கார்ந்து, அடுத்து என்னவென்று கண்டுபிடிக்க முயற்சிப்பதுபோல நாடியைத் தட்டிக்கொண்டிருந்தான். வெஸ்ஸின் அப்பாவும் போய்ச்சேர்ந்தார், எங்கள் குழந்தைகளும் வளர்ந்தார்கள். நான் வெஸ்ஸைப் பார்த்தேன். பின் செஃப்பின் வசிப்பறையைச் சுற்றிலுமாக இருந்த அவரது பொருட்களைப் பார்த்துவிட்டு, நாம் இப்போதே சில காரியங்களைச் செய்தாக வேண்டும், அதுவும் விரைவாகச் செய்யவேண்டுமென நான் நினைத்தேன்.
ம்ஹான், என்றேன், நான். வெஸ், இங்கே பார் என்றேன்.
என்ன வேண்டும் உனக்கு? என்றான் அவன். ஆனால், அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அவனும் மனத்தைத் தேற்றிக்கொண்டதாகவே தோன்றினான். ஆனால், மனத்தைத் தேற்றிய பின்பு அவன் எந்த அவசரமும் கொள்ளவில்லை. சாய்மெத்தை மீது நன்கு சாய்ந்துகொண்ட அவன், கைகளை மடியில் வைத்துக்கொண்டு, கண்களை மூடினான். அவன் எதுவும் பேசவில்லை.
அவன் பெயரை எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன், நான். உச்சரிக்க எளிதான ஒரு பெயர், அதுவுமில்லாமல், நான் வெகு நீண்ட காலமாகவே உச்சரித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர். பின்னர் இன்னுமொரு முறை அதைச் சொல்லிக்கொண்டேன். இந்தமுறை நான் அதை உரக்கச் சொன்னேன். வெஸ் என்றேன், நான்.
கண்களைத் திறந்தான், அவன். ஆனால், என்னைப் பார்க்கவில்லை. அவன் அங்கேயே, அப்படியே அமர்ந்து சாளரத்தை நோக்கினான். குண்டு லிண்டா, என்றான், அவன். ஆனால், எனக்குத் தெரியும், அது அவளையல்ல, அவள் எதுவுமேயில்லை. அது ஒரு பெயர், அவ்வளவுதான். வெஸ் எழுந்து சாளரத் திரைகளைக் கீழிழுக்கவும் கடல் அப்படியே மறைந்துபோயிற்று. இரவு உணவு சமைப்பதற்காக, நான் உள்ளே சென்றேன். ஐஸ்பெட்டியில் இன்னும் கொஞ்சம் மீன்கள் இருந்தன. அதிகமாக இல்லைதான். இன்றிரவுக்கு அதைச் சுத்தம் செய்துவிடுவோமென நான் நினைத்தேன். அதுவே தான் முடிவாக இருக்க முடியும்.
மலைகள் 2018, மே, 02 இதழில் வெளியானது.

Monday, 24 December 2018

சங்க இலக்கியத் துளிகள் - 21

சங்க இலக்கியத் துளிகள் - 21
முல்லையே, நீயும் சிரித்தனையோ?
`முல்லையும் பூத்தியோ` என்ற புகழ்பெற்ற தொடர் பலருக்கும் நினைவிலிருக்கலாம்.
ஒல்லையூர் கிழான் மகன் சாத்தன் இறந்தபோது குடவாயிற் கீரத்தனார், அங்கே பூத்திருந்த முல்லையைக் கண்டு, `நல்வாழ்வு வாழ்ந்த வல்வேற் சாத்தனோ மாண்டுவிட்டான்; இப்போது இளையோர் உன்னைச் சூடார்; வளையோரும் கொய்யார்; பாணன் சூடான்; பாடினியும் அணியாள்; நீ ஏன் பூத்திருக்கிறாய்? அதுவும் அவன் நாட்டிலேயே பூத்திருக்கிறாயே!” எனக் கேட்பதாகப் புறநானூற்றுப் பாடல் 242 அமைந்துள்ளது.
“இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கி,
பாணன் சூடான்; பாடினி அணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?
--- குடவாயிற்கீரத்தனார், புறம். 242.
முல்லையும் பூத்தியோ என்ற தொடரில், பகைவர்தாம் மகிழ்வர்; நீயுமா மகிழ்கிறாய்` என்ற வினா தொக்கிநிற்பதாகவும் கொள்ளமுடிகிறது.
சாத்தன் மாய்ந்த இத்துன்பப் பொழுதிற்போய்ப் பூத்திருக்கிறாயே, உன்னை யார் அணியப்போகிறார்கள்? என முல்லையைப் பார்த்துப் பரிதாபம் கொள்வதான நோக்கும் உள்ளது.
சாத்தனை இழந்தும் கொடியேனாக வாழுகின்ற நானன்றி, நீயும் கொடியையாய்ப் பூக்கின்றனையோவெனவும் அமையும்;
ஆக, முல்லையும் பூத்தியோ என்ற தொடரிலுள்ள உம்மை எச்சவும்மையாக அத்தனை பொருள் சுட்டி நிற்பதைக் காண்கிறோம்.
கையறுநிலைத் துறையிலமைந்த இப்பாடல் மிகச்சிறந்ததொன்றெனக் கருதப்படுகிறது.
பொருள் தேடிச் சென்ற குறுந்தொகைத் தலைவன் வினை முற்றி மீளுகின்ற பொழுதில் முல்லைக்கு உரைப்பானாக அமைந்த பாடலொன்றில்
“முல்லையே, நீ வாழி! முல்லையே, மேகம் கொடையாகத் தந்த நீரினை உடைய அகன்ற முல்லை நிலத்தில் வினை முற்றி மீளும் பலரும் ஊர்திரும்பும் ஒளிமங்கிய மாலைக்காலத்தில் நீ, உனது சிறுசிறு வெள்ளிய அரும்புகளால் முறுவல் கொண்டனை; எள்ளி நகைப்பது போல முறுவல் காட்டுகிறாயே, இது உனக்குத் தகுமா? அதுவும் காதலியரைப் பிரிந்து தனித்திருப்போரிடம் இப்படி நடப்பதோ?” எனக் கேட்பானாக அமைந்துள்ளது.
பாடல் ;
கார் புறந்தந்த நீருடை வியனுலகம்
பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை! வாழியோ, முல்லை! – நீ நின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை!
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று – இது தமியோர் மாட்டே?
---- கருவூர்ப் பவுத்திரன், குறுந். 162.
மழையால் மட்டுமே நீர் பெறுகின்ற விரிந்த முல்லை நிலம். முல்லை நிலத்தில் மாலை மயங்கும் நேரத்தில் வினை முடித்த ஆயர்களும் மற்றோரும் ஊருக்குத் திரும்புதல் இயற்கை. அந்த மாலைப் பொழுதில் முல்லை மலர்தல் இயற்கை நிகழ்வே.
மனைவியை நெடுநாள் பிரிந்து தன் வினை முடித்து வீடு திரும்பும் தலைவன் முல்லையின் சிறுசிறு வெண்மொட்டுகளைக் கண்டு, முல்லை சிரிப்பதாக நினைக்கிறான். முல்லை மலரைப் பெண்டிர் சூடுவர். மேலும் அது கற்போடு இணைத்துப் பார்க்கப்படுவது;
எனவேதான் முல்லையைப் பெண்ணாக உருவகித்து, முல்லையே நீ வாழி என வாழ்த்துகிறான். மீண்டும் ‘முல்லையே’ என விளித்து, நீ சிரிக்கிறாயே, அதுவும் நகுவது போல் சிரிக்கிறாயே, காதலியரைப் பிரிந்து தனிமையில் வாடுவோரைக் கண்டு அப்படி நகுவது தகுமோ’ எனக் கேட்கிறான். நீயோ பெண்களுக்கு நெருக்கமானவள்; அப்படியிருக்க இப்படி நகுவது அறமோ? எனக் கேட்பதாகவும் பொருள்படும்.
இப்பாடலில் முதல் பொருளாக முல்லை நிலமும், மாலைப்பொழுதும் கருப்பொருளாக முல்லை மலரும் உரிப்பொருளாக முல்லைத் திணையும் வினைமுற்றி மீளும் தலைவன் கூற்று என்னும் துறையில் முல்லைக்கு உரைப்பானாகவும் அனைத்துமே முல்லையாக அமைந்து சிறக்கிறது.

Friday, 7 December 2018

துவர்ப்புச்சுவை மிக்க வாழைப்பூ

துவர்ப்புச் சுவை மிக்க வாழைப்பூ

துவர்ப்புச் சுவை மிக்க வாழைப்பூ
இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பு எனப்படும் ஆறு சுவைகளும் முறையே தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர் மற்றும் இரத்தம் ஆகிய ஆறு தாதுக்களுக்கும் நன்மை விளைவிப்பதாக ஆயுர்வேதம், சித்தம் போன்ற இந்திய மருத்துவ முறைகள் நம்புகின்றன.
துவர்ப்புச் சுவை இரத்தத்தைப் பெருகச்செய்வதுடன், சர்க்கரை நோயின் தீவிரத்தைத் தணிக்கும் மருத்துவ குணமுள்ளது. வயிற்றுப்போக்கினைக் கட்டுப்படுத்துவது மற்றும் பித்தத்தை சமனப்படுத்தும் தன்மையும் கொண்டது.
நாம் உணவாகப் பயன்படுத்தும் காய்கறிவகைகளில் துவர்ப்புச் சுவை மிக்கது வாழைப்பூ, வாழைக்காய். வாழைத்தண்டு. இது தவிர மாதுளை, அத்திக்காய், களாக்காய், ஆவாரம்பூ, ரோஜாப்பூ, மாவடு, போன்றவற்றிலும் துவர்ப்புச்சுவை இருந்தாலும் இவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை; அவை எல்லாக்காலத்திலும் கிடைப்பதுமில்லை.
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் மணப்பொருட்களில் ஒன்றான மஞ்சள் துவர்ப்புச் சுவையுடையது.
வாழைக்காயில் கார்போ ஹைட்ரேட் என்னும் மாவுப்பொருள் அதிகமிருப்பதால் இனிப்பு நோயர்கள் தவிர்க்கவேண்டிய காயாகிவிடுகிறது. எனவே துவர்ப்புச் சுவைக்கு நாம் அதிகமும் வாழைப்பூவைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.
வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, தாமிரச் சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.
வாழைப்பூவிற்கு காயங்களை விரைவாக ஆற்றக்கூடிய தன்மை உள்ளது. அதனால், அமிலத்தன்மையால் ஏற்படும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும்.
வாழைப்பூவில் HDL கொழுப்புச்சத்து இருப்பதால், அது ரத்தக் குழாய்களில் LDL கொழுப்பினால் வரக்கூடிய இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. மூளை மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதில் வாழைப் பூவானது பெரும் பங்கு வகிக்கிறது.
வாழைப்பூவில் மிக அதிகளவில் நார்ச்சத்து உள்ளது. கர்ப்பப்பை நலன் காக்கவும் வாழைப்பூ மிகவும் நல்லது.
அத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வாழைப்பூ சமைத்து உண்பதற்கும் சுவையாக உள்ளது.
பாசிப்பருப்பு, துவரம் பருப்பு அல்லது கடலைப்பருப்புடன் இணைசேரும்போது அதிகச் சுவையைத் தருகிறது.
வாழைப்பூ துவரன், வாழைப்பூ பொரியல், வாழைப்பூ கூட்டு, வாழைப்பூ மசியல் வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ குழம்பு, வாழைப்பூ பக்கோடா, வாழைப்பூ ஊறுகாய் எனப் பல விதங்களில் தயாரித்து உண்ணப்படுகிறது.
வாழைப்பூவின் உட் குருத்தினை பனங்குருத்து, தென்னங்குருத்து போலப் பச்சையாகவே கூடச் சாப்பிடலாம். வாழைப்பூவைச் சாப்பிடுவதால் எந்தப் பக்கவிளைவும் ஏற்படுவதில்லை.
அனைத்துக்கும் மேலாக நாம் வசிக்கும் பகுதியிலேயே, நமது மண்ணிலேயே விளையும் தாவரப்பொருள் என்பதுடன் மிகவும் மலிவாக பூ ஒன்றுக்கு ஐந்து அல்லது ஆறு ரூபாய் விலையிலேயே கிடைக்கிறது.
இதுவே காலி ஃபிளவர் எனில் இருபது முப்பது வரையிலும், பர்க்கோலி எனில் ஐம்பது முதல் அறுபது ரூபாய் விலை ஆகிறது.
வாழையில் பல வகைகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வாழைப் பூக்களில் சமையலுக்கு மிக உகந்தது மொந்தன், பேயன் மற்றும் பாளையங்கோட்டான் எனப்படும் மஞ்சள் வாழை ஆகியனதாம். ரஸ்தாளி, கற்பூரம் போன்றவை பரவாயில்லை. வேலூர் பகுதியின் சிறப்பான பச்சைவாழை ( குள்ளம்)யின் பூவைச் சமையல் செய்தால் கசக்கும்.
வாழைப் பூவைச் சுத்தம் செய்வதும் பொடிப்பொடியாக அரிவதும் சள்ளை பிடித்த வேலைதான்.
வாழைப்பூவின் மேல் தோலான சிவப்புநிறத் தோலினை நாம் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இலங்கையில் வாழைப்பூவை அப்படியே மேல் தோலுடன் குறுக வெட்டிக் குழம்பு செய்வார்களெனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எந்த அளவுக்கு உண்மையெனத் தெரியவில்லை.
மேல் தோலை அகற்றும் போதே வாழைப்பூவில் வெளிப்படும் பால், நம் கைகளில் ஏற்படுத்தும் கறை எளிதில் அகலுவதில்லை. அதனால் சிலர் கைகளில் எண்ணெய் தொட்டுக்கொள்வதுண்டு.
சீப்பு சீப்பாக இருக்கும் பூக்களின் உள்ளே இருக்கிற கள்ளன் ( Odd Person - இதர பகுதிகளைப் போல மென்மையாக இல்லாமல் தலையில் ஒரு கொண்டையும் கொண்டு அந்நியத் தன்மையுடன் வலுவாகவும் இருப்பதால் கள்ளன்) என்கிற நரம்புப் பகுதியினையும் ஈராங்கம் என்கிற வெண்ணிறமும் தடிமனுமாக நெகிழித்தன்மை கொண்டதாக இருக்கிற புல்லியையும் அப்பறப்படுத்த வேண்டும். இவற்றைச் சேர்த்துச் சமைத்தால் சுவை குறைவதுடன் செரிமானமாகாமல் வயிற்றுவலியும் ஏற்படலாமென்பதால் அவற்றை அப்புறப்படுத்துகிறோம்.
தனித்தனியாகப் பிரித்த பூக்களைப் பொடிப்பொடியாக அரியும்போதும் பூவின் பால் விரல்களில் பிசுபிசுப்பையும் கறையினையும் ஏற்படுத்தும். அதனால் பருத்தித் துணி அல்லது பழைய செய்தித் தாள் காகிதம் கொண்டு இடைக்கிடையே விரல்களைச் சுத்தப்படுத்திக்கொள்வதன் மூலம் அதிகக் கறையைத் தவிர்க்கலாம்.
சமையலுக்கு அரியும் பூக்களை அரிசி களைந்த நீர், மோர் அல்லது நீத்தண்ணியில் போட்டு வைத்தால் கறுக்காமல் வெள்ளை நிறத்திலேயே இருக்கும்.
இப்படி அரிந்த வாழைப்பூவினை அவித்து இறுகப் பிழிந்து தேங்காய்த் துருவல், இரண்டு மிளகாய்வற்றல், சீரகம், மஞ்சள், உப்பு சேர்த்தரைத்த கலவையை விரவி, தேங்காயெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கிளறினால் வாழைப்பூ துவரன்.
மற்ற காய் வகைகளைப் போல் பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு அவித்துக் கலந்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்யலாம்.
ஆமவடை அல்லது, பருப்பு வடை மாவோடு அரிந்த வாழைப்பூவைக் கலந்து எண்ணெயில் பொரித்தால் வாழைப்பூ வடையாகிவிடுகிறது.
அரிந்த வாழைப்பூவை அடை மாவோடு கலந்து சுட்டால் வாழைப்பூ அடை.
துவரம் பருப்பை அவித்து அதனோடு வேகவைத்த வாழைப்பூவைச் சேர்த்து சிறிது புளிக்கரைசலும் சேர்த்துக் கடைந்து தாளித்தால் வாழைப்பூ மசியல்.
அரை முறி தேங்காய்த்துருவல், நான்கு மிளகாய் வற்றல், ஒரு கரண்டி உளுத்தம்பருப்பு, இரண்டு இணுக்கு கறிவேப்பிலை, ஐந்து சின்ன வெங்காயம், மூன்று பல் பூண்டு, அரைக்கரண்டி சீரகம், ஒரு கரண்டி மல்லி, அரைக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் இரண்டு துளித் தேங்காயெண்ணெயில் சிவக்க வறுத்து ஆறவைத்து அரைத்த மசாலாவுடன் சிறிது புளிக் கரைசல் சேர்த்து அடுப்பில் ஏற்றிக் கொதி வரும்போது அவித்துப் பிழிந்து வைத்திருக்கும் வாழைப்பூவைச் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கும் போது ஒரு கரண்டி தேங்காயெண்ணெய் ஊற்றிவிட்டால் வாழைப்பூ தீயல்
வாழைப்பூவில் செய்யும் தொடுகறி வகைகள் அனைத்திலும் வாழைப்பூ உசிலி தான் எங்கள் வீட்டில் ஐந்து வயதுப் பேத்தி முதல் அறுபது வயது பாட்டி வரையிலும் எல்லோருக்கும் பிடித்தமானது.
புளிக்கறி, தீயல், சாம்பார், காரக்குழம்பு, வெந்தயக்குழம்பு, புளித்தண்ணி, கிள்ளிப்போட்ட சாம்பார், கீரைக்கடைசல் என எல்லாவகையான குழம்புகளோடும் இந்த உசிலி பொருத்தமாக இணை சேரும். புளிசேரி என்னும் மோர்க்குழம்புக்கும் மிகப் பொருத்தமே. எதுவுமே இல்லாமல் தனியாக ஒரு கிண்ணத்தில் அள்ளி வைத்துக்கொண்டு, கரண்டியால் அள்ளியள்ளித் தின்னலாம். திகட்டுவதில்லை; சுவை குறைவதில்லை.
உசிலி செய்வதற்கு ஒரு வாழைப்பூவுக்கு மூன்று கைப்பிடி அளவு அல்லது 100கிராம் கடலைப்பருப்பு, மூன்று மிளகாய் வற்றல், கட்டிப்பெருங்காயம் (LG) அரை செ.மீ அளவிலான கனசதுரத் துண்டு ஒன்று, அரைத் தேக்கரண்டி உப்பு இரண்டு கரண்டி நல்லெண்ணெய் தேவை.
மோரில் அரிந்து போட்ட வாழைப்பூவை நன்கு பிழிந்தெடுத்து வாணலியில் நல்ல தண்ணீர் ஊற்றித் துளி உப்பிட்டு வேக வைக்கவும்.
அரை செ.மீ. கட்டிப் பெருங்காயத் துண்டினை நல்லெண்ணெயில் பொரித்து நன்கு நுணுக்கி வைக்கவும்.
ஒரு மணி நேரம் ஊறவைத்த கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், சிறிது உப்பு, நுணுக்கிய பெருங்காயத் தூள் ஆகியவற்றை மிக்சியிலிட்டு இரண்டு சுற்றுச் சுற்றி கொகொரவென அரைத்தெடுத்த மாவினை இட்லித்தட்டிலோ, தனியாக மூடியிட்ட டப்பாவுக்குள் அடைத்து குக்கரிலோ ( ஆவியில் வேகவேண்டும், அவ்வளவுதான்.) வேகவைத்து எடுத்து ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
வேகவைத்த வாழைப்பூ ஆறியதும் இறுத்துப் பிழிந்துவிடலாம்.
வாணலியில் சிறிது நல்லெண்ணைய் ஊற்றி, (கடுகு தேவையில்லை), உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வாழைப்பூவைப் போட்டு அதனோடு உதிர்த்து வைத்திருக்கும் பருப்பு அரைவையைக் கலந்து கிளறி யெடுத்துவிட்டால் சுவையான வாழைப்பூ உசிலி தயார்.
சிலர் கடலைப்பருப்பும் துவரம்பருப்புமாகக் கலந்து சேர்ப்பதுண்டு.
கடையில் கிடைக்கும் பெருங்காயத்தூள் சேர்ப்பதைவிட கட்டிப் பெருங்காயத்தை நல்லெண்ணெயில் பொரித்து நுணுக்கிச் சேர்ப்பதே நல்ல மணத்தையும் சுவையையும் தருகிறது.
பருப்பு மாவினை நீராவியில் வேகவைக்கச் சோம்பல்பட்டு, அப்படியே தாளிதத்திலிட்டுக் கிளறிப் பின்னர் வாழைப்பூவைச் சேர்த்து உடனடி உசிலியாக இறக்குவதுமுண்டு. ஆனால் நீராவியில் வேகவைத்தால் மட்டுமே பருப்பு மாவு நன்கு வேகுவதுடன் மென்மைத்தன்மை கிடைக்கிறது. அந்த மென்மை பூவின் மென்மையோடு ஒத்திசைகிறது.
நீராவியில் வேகவைக்காமல் தாளித எண்ணெயிலிட்டு, அது வாணலியில் பிடிக்க, அதைப்போட்டுப் பரண்டு, பரண்டெனப் பரண்டுவதைவிட நீராவியில் வெந்த பருப்பு மாவினை உதிர்த்துச் சேர்ப்பதே சுவை.
வேலை கொஞ்சம் அதிகமெனினும் சுவை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு வாழைப் பூவினை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்வதே உத்தமம்.

Thursday, 6 December 2018

வள்ளிமலைக் குன்றும் சமணர் குடைவரைக்குகையும்.

வள்ளிமலைக் குன்றும் சமணர் குடைவரைக் குகையும்

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில், வேலூரிலிருந்து 25 கிமீ தூரத்தில் வள்ளிமலைக்குன்று அமைந்துள்ளது.
வடக்கு தெற்காக அமைந்திருக்கும் இக்குன்றின் அடிவாரத்தில் ஒரு முருகன் கோவிலும் குன்றின் உச்சியில் ஒரு முருகன் கோவிலும் அமைந்துள்ளன.
மலை மேலுள்ள கோவில் மலைக்கோவில் என அழைக்கப்படுகிறது. இது தவிர அடிவாரக் கோவிலின் பின்புறம் அழகான ஒரு தெப்பக்குளம் அமைந்துள்ளது. இத் தெப்பக்குளம் சரவணப்பொய்கை என்ற பெயரில் அழைக்கப்படுவதுடன் மிகவும் அழகான முறையில் பராமரிக்கப்படுகிறது.
தெப்பக்குளக் கரையிலும் ஒரு கோவில் உள்ளது. இக்கோவில் அருகிலிருந்து மலைக்கோவிலுக்குச் செல்லும் படிகள் தொடங்குகின்றன. மொத்தம் 444 படிகள் உள்ளன.
மலைக்கோவிலுக்கும் அடிவாரக்கோவிலுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சமணர் குகைக் கோவிலும் உள்ளது. இதைக் குடைவித்த அரசன் கி.பி. 816 – 845 இல் ஆட்சி புரிந்த கங்க வம்சத்து ராஜமல்லன் எனத் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கல்வெட்டுப் பலகை தெரிவிக்கிறது.
தற்போது கார்காலமென்பதால் குன்று முழுவதும் பசுமை மிகுந்த வனப்பும் மஞ்சள் வண்ணப் பூக்களின் அழகும் மிகுந்து அற்புதக் காட்சிகளாக மின்னுகின்றன.
பன்னீர் மரங்களிலும் பூங்கொத்துகள் அடர்ந்து அவற்றின் கீழும் உதிர்ந்த வெள்ளை மலர்களாகக் கண்கொள்ளாக் காட்சி காணக் கிடைக்கிறது.
மலை மீதுள்ள அத்தனை சுனைகளும் நிரம்பி, தாமரை, ஆம்பல், அல்லி எனப் படர்ந்து அழகுத் தோற்றம் கொண்டுள்ளன.
இக்கோவில், வள்ளிமலையைச் சுற்றிலுமுள்ள கிராம மக்களின் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த செல்வாக்கினைச் செலுத்துகிறது. குழந்தை இல்லாதவர்கள் இக்கோவிலில் பிராத்தனை செய்தால் குழந்தை பிறக்குமென கிராம மக்கள் நம்புகின்றனர்.
திருமணங்கள், காது குத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் இத்திருத்தலத்தில் நிகழ்த்துதல் நல்லதென்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
எத்தனை மனத் துன்பங்கள் இருப்பினும் இக்கோவிலுக்கு வந்தால் அமைதி கிடைப்பதாகவும் நம்பிக்கைகள் நிலவுவதால் அடிவாரத்து கோவில் சன்னதியில் பல்வேறு சமூகத்தினரும் தங்கிடவும் விழாக்கள் நடத்திடவும் வசதியாக மண்டபங்கள் அமைத்துள்ளனர். மாசி மகம் தொடர்ந்த பதினொரு நாட்கள் பிரமோற்சவமும் தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு சமூகத்தினர் செலவில் வாகனம் எடுப்பித்துச் சிறப்புச் செய்கின்றனர்.
செங்குந்த முதலியார்கள் மயில் வாகனம், நாவிதர்கள் பெருச்சாளி வாகனம், விண்ணம்பள்ளி சைவ வேளாளர் தங்கமயில் வாகனம், மேல்பாடி சைவ வேளாளரின் நாக வாகனம், சீர் கருணீகர் அன்ன வாகனம், அகமுடைய முதலியார்கள் சிம்ம வாகனம், வன்னியர் யானை வாகனம் என சுற்றுப்பட்டு கிராமங்களின் அனைத்து சமூகத்தினருக்கும் இந்த விழா முக்கியத்துவமுடையதாகிறது.
பொதுவாக எல்லா ஊர்களிலும் தேரோட்ட நாளில் காலையில் சன்னதியிலிருந்து புறப்படும் தேர், கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள் சுற்றி வந்து மாலைக்குள் நிலைக்கு வந்துவிடும்.
ஆனால் வள்ளிமலைத்தேர் மாலையில் புறப்பட்டு துண்டுக்கரை மூலைக்குச் சென்றதும் நின்றுவிடும். மறுநாள் இரவு சோமநாதபுரம் எல்லையில் நிற்கும். மூன்றாம் நாள் இரவு பெருமாள் குப்பம் எல்லையில் நிற்கும். நான்காம் நாள் தான் நிலைக்கு வரும். நிலைக்கு வந்ததும் வள்ளி திருமண நிகழ்ச்சி தொடங்கும்.
இப்பகுதியிலுள்ள இருளர் மக்கள், தம் இனத்தில் தான் வள்ளி வளர்ந்ததாக நம்புகின்றனர். அதனால் வள்ளி திருமணத்திற்குப் பெண் வீட்டுச் சீதனமாக தேன், தினைமாவு, வளையல், சேலை துணிமணிகளைப் பெண்கள் தாம்பாளங்களில் ஏந்தி வர. கூடவே அவ்வினத்து ஆண்கள், உடல் முழுதும் வேப்பந்தழையால் மூடி, உடுக்கை அடித்து ஆட்டமும் பாட்டமுமாய் ஊர்வலமாக மணமண்டபத்துக்கு வந்துசேர்ந்தபின் திருமணம் தொடங்குகிறது.
திருமணம் முடிந்ததும் மொய் எழுதுபவர்கள் மொய் எழுதலாமென அறிவித்ததும் பணமும், துணியும், நகையும் பாத்திரமுமாக மக்கள் மொய் எழுதிக் காணிக்கை செலுத்துகின்றனர்.
வள்ளிமலையைச் சுற்றி அமைந்துள்ள கிராமப்பகுதி மக்கள், அவர்களது வாழ்க்கையின் சிக்கலான நேரங்களில் சிக்கலைத் தீக்குமாறு வள்ளிமலையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகின்றனர். ஆபத்துகளிலிருந்து தப்பிக்கும்போதும் வள்ளிமலை முருகன் அருளாலேயே தப்பித்ததாக நினைத்துக் காணிக்கை செலுத்துகின்றனர்.
விவசாயிகள் தேர்த் திருவிழாவின் போது அவர்கள் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் அவர்களது மாடுகளையும் குளிப்பாட்டி, மங்கல அணிகள் அணிவித்து அவற்றையும் அழைத்துக்கொண்டுதான் வள்ளிமலையைச் சுற்றிவருகின்றனர்.
தேர்த்திருவிழா நாட்களில் வள்ளிமலையைச்சுற்றி ஏழெட்டு இடங்களில் கூத்தும் நடத்துகின்றனர்.
ஆடிக் கிருத்திகையின் போது நான்கு நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கிறது.
வள்ளிமலையை, அப்பகுதி மக்களின் வாழ்க்கையிலிருந்தும் தனியாகப் பிரித்துவிடமுடியாது. அப்படியேதான் கவிப்பித்தனின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான `நீவாநதி` நாவல் வள்ளி மலையை முன்னிறுத்துகிறது.
ஆர்வமுள்ளவர்கள் கவிப்பித்தனின் நாவலை வாசிப்பதோடு வள்ளிமலைக்கு வந்து அதன் கார்கால அழகினைக் கண்குளிரக் கண்டு மகிழலாம். .
வேலூரிலிருந்து காட்பாடி, சேர்க்காடு வழியாக 25 கி.மீ தூரத்தில் வள்ளிமலை அமைந்துள்ளது. வேலூரிலிருந்து 13 கி.மீ தூரத்திலுள்ள திருவலம் சென்று அங்கிருந்து பொன்னை செல்லும் சாலை மேல்பாடி மற்றும் வள்ளிமலை அடிவாரம் வழியாகச் செல்கிறது. திருவலம் – வள்ளிமலையின் தூரம் 16.கி.மீ.
இக்குன்றும் கோவிலும் சமணர் குகையும் தொல்பொருள் பாதுகாப்புத்துறையின் பராமரிப்பிலுள்ளது.

Thursday, 29 November 2018

மழைச் சொற்கள்

மழைச் சொற்கள்  .
.
இடி, மின்னல், காற்று எதுவுமில்லை. மழையான மழையுமில்லை. விட்டு விட்டுத் தூறலும் சிறு மழையுமாகத் தொடர்ந்த ஒரு மழைநாளில், மழைச் சொற்களைத் தேடியபோது கிடைத்தவற்றைத் தொகுத்திருக்கிறேன். நாஞ்சில், நெல்லை மற்றும் கரிசல் பகுதியின் பேச்சு வழக்குச் சொற்களே அதிகம் நினைவில் கிடைக்கின்றன. பல சொற்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்புள்ளது. நண்பர்கள் சுட்டிக்காட்டி பொருளுடன் பகிர்ந்துகொண்டால் இப்பட்டியலுடன் இணைத்துக்கொள்ள இயலும்.
மழைச் சொற்கள்
1. அடைமழை
2. அந்திமழை
3. அமிலமழை ( அமிலவாயுக்கள் அதிக அளவில் கரைவதால் ஏற்படுவது)
4. அமுதமழை
5. அவமழை - (சூடாமணி நிகண்டு - நாட்டிற்கு ஏற்படும் ஏழு குற்றங்களுள் ஒன்று.)
6. அழிமழை
7. அழுவினி மழை (சிணுசிணுவென அழுவது போல் பெய்யும் மழை)
8. ஆலங்கட்டிமழை
9. ஆலி
10. ஆழிமழை – கடலில் பெய்யும் மழை
11. ஆனிஆடிச்சாரல்
12. இடிமழை
13. இயற்கை மழை
14. இரவுமழை – இரவு மழை பயிருக்கு நல்லதல்லவெனச் சிலர் கூறுவதுண்டு.
15. இன்மழை
16. உயிர்மழை
17. உழவுமழை ( பொடிப்பருவம், மானாவாரியில் உழவுக்கான மழை)
18. ஊத்துமழை ( ஊற்றுகளில் நீர் ஊறுமளவுக்குப் பெய்கிற மழை)
19. ஊசித்தூற்றல்
20. ஊசிமழை
21. ஊழிமழை
22. எறசல்
23. எறிதூறல்
24. கடுமழை
25. கல்மழை (ஆலங்கட்டி மழை)
26. கனமழை
27. காலமழை
28. கார்
29. கார்காலமழை
30. கார்மழை
31. காற்றுமழை
32. குளிர்மழை
33. கூதல்மழை ( ஆடு மாடுகளும் குன்றிப்போகுமளவுக்குக் குளிர் ஏற்படுத்துகிற மழை)
34. கெடுமழை
35. கொட்டுமழை
36. கொடுமழை
37. கோடைமழை
38. சார மழை ( ஊதல் காற்றோடு நுண்தூறல்)
39. சாரல்
40. சுழிமழை (பரவலாகப் பெய்யாமல், அங்கங்கே பெய்யும் மழை)
41. செயற்கைமழை
42. சோனை (விடாமழை)
43. தலைப்பெயல் – முதல் மழை, ஐங். 80-3.
44. துணைமழை (முதல் மழையைத் தொடர்ந்த சிறுமழை)
45. துவலை – மழைத்தூறல், ஐங். 141 – 2.
46. துளி
47. தூவல் – மழை, ஐங். 206 – 3.
48. தூவானம் (சிதறுமழை)
49. தூறல்
50. நச்சுமழை (நச்சுநச்செனப் பெய்யும் மழை)
51. பட்டத்து மழை ( அந்தந்த விவசாயப் பருவத்துக்குத் தக்கவாறு பெய்யும் மழை) சித்திரைப் பட்டத்து மழை, ஆடிப்பட்டம்)
52. பரவல் (பரவலான மழை)
53. பருவமழை
54. பருவட்டு மழை (ஒவ்வொரு துளியும் பெரிது பெரிதாக, ஆனால் மேலெழுந்த வாரியாகவே பெய்யும் மழை. சடசடவெனப் பெய்யும், ஆனால் மண் நனைவதற்குள் நின்றுவிடும்.)
55. பனிமழை
56. புயல் – மழை, ஐங். 25 – 1.
57. புயல்மழை
58. பூந்தூறல்
59. பூமழை
60. பெய்
61. பெய்தும் பெய்யாத மழை ( உழவுக்கோ, விதைப்புக்கோ போதுமான அளவுக்குப் பெய்யாத மழை
62. பெயல் – மழை, ஐங். 469 – 4.
63. பெருமழை
64. பேய்மழை
65. பொசும்பல்
66. பொடித்தூறல்
67. மழை
68. மாமழை
69. மார்கழிமழை - மார்கழி மாதத்து மழை, மார்கழியில் பயிர் நெற்பயிர் கதிர்கொண்டு தைமாதம் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் நெற்பயிருக்கு உகந்ததல்ல.
70. மாரி
71. முதல்மழை
72. முதற்பெயல்
73. மும்மாரி
74. மேகமழை
75. மேல்மழை (மேற்கொண்டு பெய்யவிருக்கும் மழை - முதல் மழைக்கு உழுதுவிட்டு விதைப்புக்கு மேல்மழையை எதிர்பார்த்தல்.)
76. வடமதி மழை ( நாஞ்சில் நாட்டின் வடபகுதியில் மட்டும் பெய்கிற மழை)
77. வதி மழை (மண், சேறாகும் அளவு பெய்கிற மழை)
78. வம்பமாரி – காலம்தவறிப் பெய்யும் மழை, குறு.66 – 5.
79. வான்
80. வான்மழை
81. விடாமழை
82. விதைப்பு மழை ( பொடிப்பருவம் மற்றும் மானாவாரி விதைப்புக்கான மழை)
83. வெக்கை மழை ( வெக்கையைக் கிளப்பும் மழை)
84. வெள்ள மழை ( வெள்ளம் ஓடப் பெய்த மழை)
85. வெள்ளை மழை ( பயனின்றிப்போன மழை – கரிசல் வட்டாரம்)
86. வேண்டாத மழை ( அறுவடைக்காலத்தில் பெய்து அறுவடையைக் கெடுக்கும் மழை)
87. ரவைத்தூறல்
பின்னிணைப்பு
1. கிழக்கத்திய மழை
2. மேற்கத்திய மழை
3. தெற்கத்திய மழை
4.வடக்கத்திய மழை
5. காரிருள் மழை
6. மிகுமழை
7.குறைமழை.

Monday, 12 November 2018

காட்டுயானைகளுடன் பழந்தமிழர் வாழ்க்கை

காட்டு யானைகளுடன் பழந்தமிழர் வாழ்க்கை.
யானைபற்றிய குறிப்புகளை, அவற்றின் பழக்க வழக்கங்கள், உறுப்பு நலன்களென சங்கக் கவிதைகள் பலவற்றிலும் காணுகிறோம். போர் யானைகளைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
காட்டு யானைகள் மத்தியில் பழந்தமிழரின் வாழ்க்கை எப்படியிருந்ததென்றும் யானைகளுக்கும் அன்றைய மனிதர்களுக்குமான உறவினைப் புரிந்துகொள்ளவும் ஏதுவான தரவுகளைத் தேடித் தொகுத்ததில் பழந்தமிழர் குடியிருப்புகள் யானைகளின் வாழிடத்திலேயே அமைந்திருந்ததும் காட்டுயானைகளைத் தந்தத்திற்காக வேட்டையாடிய குறிப்புக்கள் உள்ளனவென்ற போதிலும் இணக்கமான உறவு நிலவியதற்கான பதிவுகள் உள்ளமையும் தெரிய வருகின்றன.
ஊர் மன்றத்தில் விளவுக்கனிமரம் ஒன்று நிற்கிறது. அதன் பழம் ஒன்று அருகிலிருக்கும் வீட்டு முற்றத்தில் விழுகிறது. அங்கிருக்கும் எயிற்றியின் மகனும் காட்டின் பெரிய பெண்யானையின் சிறு கன்றும் அதனை ஓடிவந்து எடுக்கின்றனர். (புறம் 181) அப்படியெனில் அந்த யானைக்கன்று ஊர்நடுவே எவ்வித அச்சமும் இன்றித் திரிகிறது. மக்களும் நடமாட விட்டுள்ளனர். பெண்யானையும் தன் கன்றுக்கு எவ்வித அபாயத்தையும் முன்னுணராமல் கன்றினைக் குடியிருப்புக்குள் நடமாடுவதை அனுமதித்துள்ளது என்பதை நம்மால் உணரமுடிகிறது. எனவே யானையும் மனிதனும் மோதல் எதுவுமில்லாமல் வாழ்ந்திருக்கிறார்களென்பதற்கு இத்தரவு சான்றாக அமைகிறது.
நற்றிணைத் தலைவன் ஒருவன் பொருள் தேடிச் செல்ல நினைக்கிறான். இதனை உணர்ந்த தோழி, முன்னர் களவுக்காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத் தலைவனுக்கு நினைவுபடுத்துகிறாள். காட்டுவழியில் தலைவியை அழைத்து வந்த தலைவன், தலைவியின் வழிநடை வருத்தம் தணிப்பதற்காகப் பெரிய அடிமரத்தையுடைய ஒரு ஓமை மரத்தின் புள்ளிகள் நிறைந்த நிழலில் தலைவியோடு தங்குகிறான். அந்த நேரத்தில் அங்கு வருகிற மிகப்பெரிய தந்தங்களையுடைய ஒற்றை யானை, அவர்களுக்கு எவ்விதத் துன்பத்தையும் இழைக்காமல், அதன் இயல்பானபோக்கில் சென்று குழையை ஒடித்து உண்ணுகையில், திடீரென ஏதோ நினைத்துக்கொண்டதுபோல் அதன் புள்ளிகள் நிறைந்த பெரிய துதிக்கையைச் சுருட்டி உயர்த்திப் பிளிற, பெண்யானை அந்தக் காடு முழுதும் எதிரொலிக்குமாறு புலம்பிப் பிளிறியதை நினைவுகொள்வீராக எனக் கூறுகிறாள். (நற். 318) இந்தத் தரவில் தனியாகத் திரிகின்ற மிகப்பெரிய கொம்பன் யானை அதன் வழியில் மனிதர்களைக் கண்ணுற்றபோதும் எவ்விதத் துன்பமும் இழைக்காது அதன் போக்கிலேயே சென்று வழக்கமான இடத்தில் குழையைப் பறித்து உண்கிறது. யானையும் மனிதர்களும் எவ்வித மோதலுமின்றி வாழ்ந்திருக்கிறார்களென்பதற்கு இப்பதிவே சான்றாக விளங்குகிறது.
வேட்டுவச் சிற்றூர் ஒன்றில் அதனை அடுத்த கிணற்றிலிருந்து ஆநிரைகளுக்காக எடுத்து வைத்திருக்கும் தெளிந்த நீர்ப்பத்தர் இருக்கிறது. அதனை மூடியிருக்கும் விற்பொறியை முறித்துத் திறக்கின்ற களிறு, கன்றுக்கும் பிடிக்கும் நீரூட்டிப் பின் செல்கிறது. நற். 92.
அம்குடிச் சீறூர் ஒன்றிலும் கோவலர் ஆநிரைக்காக தரிசுநிலத்தில் கற்களை உடைத்து நல்ல ஊற்றுக் கண்ணுடைய கூவல் (கிணறு) தோண்டுகின்றனர். கன்றுடன் கூடிய பிடியையும் அழைத்துக்கொண்டு களிறு ஒன்று அக்கிணற்றுக்கு நீரருந்த வருகிறது. (அகம் 321)
மற்றொரு தரவில் இரண்டு யானைகள் குளவித் தண்கயம் கலங்குமாறு ஒன்றையொன்று தீண்டி விளையாடி, சோலை வாழையை வேண்டுமென்ற அளவுக்குத் தின்று, பின் அதை வெறுத்து, அருகிலுள்ள வேரல்வேலிச் சிறுகுடி அலறும்படியாகச் செங்காற் பலவின் இனிய பழங்களைப் பறித்துத் தின்கின்றன. (நற்.232) இத்தரவிலிருந்து வேரல் வேலிச் சிறுகுடியின் அருகிலேயே யானைகள் கயத்தில் விளையாடி, சோலைவாழையைத் தின்றுவிட்டு பலாத் தோட்டத்துக்குள் நுழைந்து பலாப்பழங்களைப் பறித்துத் தின்கின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
குறுந்தொகைத் தலைவன் ஒருவன் இரவில் வந்து தலைவியின் வீட்டுக் கதவைத் திறக்க யானை முயல்வது போல் முயன்றதாகவும் அதனைக் கேட்டுத் தலைவி எழ முயற்சிக்கும் போதெல்லாம் தாய், தன் மகள் யானையின் முயறல் ஒலி கேட்டு அஞ்சுவதாக நினைத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டதால் தலைவனைச் சந்திக்க, இரவுக்குறிக்குச் செல்ல இயலாமலாயிற்றென குறுந்தொகைப் பாடல் 244 குறிப்பிடுகிறது. இத்தரவு மூலம் காட்டு யானைகள் இரவில் குடியிருப்புக்குள் வந்து வீடுகளைத் திறக்க முயல்வதென்பது இயல்பான ஒரு நிகழ்வு என்றும் அதைக் கண்டு பெண்களுங்கூட அஞ்சுவதில்லையென்பதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
முழந்தாள் நீண்ட, பெரிய பெண்யானையின் சிறிய தலையை உடைய கன்று, கள் நிறைந்த பாக்கத்துக் குறச் சிறுவர்களோடு மீண்டும் மீண்டுமாக வந்துச் சுழல ஓடி விளையாடியதாகவும் அப்படி விளையாடிய கன்றே வளர்ந்து பெரிய யானையாகி, அவர்களின் தினைப்புனத்தை மேய்வதாகவும் குறிப்பு உள்ளது. குறு. 294.
வெண்ணெல் தின்ற யானை சந்தனக்காடு நிறைந்த மலைப்பக்கத்தில் தங்குவதையும் ( நற். 7) பச்சிலை மரத்தை இழுத்துத் தள்ளிச் சேற்றில் ஆடி ஆசினிப்பலாவை ஒடித்த யானையையும் (நற். 51) காண்கிறோம்.
களிறு, பாந்தட் பெரும்பாம்பின் வாய்ப்பட்டதென பிடி கதறுவதையும் ( நற்.14), ஆண்யானையைப் புலி கொன்றதென இயக்கமற்றுத் தன் கன்றினை அணைத்தவாறு நிற்கும் பிடியின் சோகத்தையும் (நற். 47) கவிஞர்கள் பதிவு செய்துள்ளதைக் கண்ணுறுகையில் காட்டு யானைகளின் வாழ்க்கையை பழந்தமிழர்கள் அருகிருந்து கண்டுணர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
மற்றொரு பாடலில் முல்லை ஆயர்கள் அவர்களது மந்தையைக் காட்டினுள் மேய்த்து மாலை வீட்டுக்கு வந்தபோதுதான் மந்தையோடு யானைக் கன்று ஒன்றும் வந்துவிட்டதைத் தெரிந்து, அதனை மந்தையிலேயே பாதுகாத்து மறுநாள் கொண்டுபோய் அதன் தாய் யானையோடு சேர்த்துவிடுகின்றனர்.
நீர்வேட்கை மிகுந்த பெண்யானை மலைப்பக்கம் செல்கிறது. அவ்வாறு செல்ல இயலாத யானைக்கன்று ஆன்கன்றுகளோடு சேரிப்பெண்கள் துணுக்குறும்படியாக ஊருக்குள் வருகிறது. நற். 171.
யானை தாக்கவந்தாலும் சூல்மகள் கூட அஞ்சமாட்டாளென்றும் ஒரு பதிவு உள்ளது. பெரும் பாணாற்றுப்படை 135 - 137.
புலி, களிற்றொடு பொரும்போதுகூடக் குறக் குறு மாக்கள் அஞ்சாமல் துறுகல் மீது ஏறி நின்று பறை முழக்குவர். நற். 104 - 1 - 6.
களிறு ஒன்று பெரிய புலி ஒன்றினை அதன் குகைக்கே சென்று கொம்புகளால் குத்திக் கொல்கிறது, அதனால் செம்மறுப்பட்ட கொம்புகளைச் சாரலிலுள்ள அருவியில் கழுவிய பின்னும் அங்கேயே நிற்கிறது. அதனால் இரவில் தலைவியைச் சந்திக்க வரவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறான். நற்.151 - 2 - 5. அந்தப் பகுதியில் நிற்கும் யானையைப் பார்த்த தோழி, அந்த வழியில் தலைவனை இரவில் வராதே எனக் கூறுவதிலிருந்து, பகல் எனில் யானையைக் கண்டு ஒதுங்கிக் கொள்ள இயலும், இரவெனில் யானை கண்ணுக்குத் தென்படுவது அரிது, மேலும் அந்த யானை புலியோடு போரிட்ட ஆவேசம் தீராமலுள்ளது. எனவே அந்த யானையை வழியில் எதிர்கொள்வது அபாயகரமானது என்பது பெறப்படுகிறது. எனவே பழங்காலத் தமிழர் யானைகளின் போக்கு அறிந்து செல்லும் திறத்துடனிருந்தனர் என்பதை உணரலாம்.
மொத்தத்தில் எல்லாவற்றையும் ஆய்ந்து நோக்கும்போது, இக்காலத்தில் நாம், பசுக்கள் எருதுகள், கோயில் மாடுகள் போன்றவற்றோடு சேர்ந்து வாழ்வது போலவே அவர்களும் காட்டு யானைகளோடு சேர்ந்து வாழ்ந்திருக்கவேண்டுமென்பதும் பாய்ந்தோடி வரும் காளையைக் கண்டதும் நாம் சிறிது ஒதுங்கிக்கொள்வதுபோல் யானைகள் எதிர்ப்படும்போது சிறிது ஒதுங்கி வழிவிட்டுப் பின் தொடர்ந்து அவர்கள் வழியில் சென்றிருக்க வேண்டுமென்பதையும் அவதானிக்க முடிகிறது.
இக்காலத்தில் தாம் யானைகளின் வழித்தடத்தை நாம் ஆக்கிரமிக்க, அவை நம் நகருக்குள் புக, நமக்கும் அவற்றுக்குமான மோதல் போக்கு தொடர்கிறது.
தரவுகள்
வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை,
தண்ணறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தினவாடு பெருங்காட்டே. நற். 7 நல்வெள்ளியார்
இனம்சால் வயக்களிறு பாந்தட்பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல்
நெடுவரை விடரகத்து இயம்பும். நற். 14. மாமூலனார்.
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்
பயநிரைக்கு எடுத்த மணிநீர்ப்பத்தர்,
புன்தலை மடப்பிடி, கன்றொடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும் கொல்களிறு. நற். 92.
பாடியவர் பெயர் தெரியவில்லை.
படுமணி இனநிரை உணீய கோவலர்
விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல்
கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும்
புன்தலை மன்றத்து அம்குடிச் சீறூர். அகம். 321. கயமனார்.
பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்
பைதலம் குழவி தழீஇ, ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும். நற். 47 நல்வெள்ளியார்.
பெருந்தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ்சேறு ஆடிய நுதல, கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்தது – நற். 51. பேராலவாயர்
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முனைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
செங்காற் பலவின் தீம்பழம் மிசையும் நற். 232 முதுவெங் கண்ணனார்.
நினைத்தலும் நினைதிரோ – ஐய! அன்று நாம்
பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனமாக
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக்கொண்ட ஓங்குமருப்பு யானை
பொறிபடு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ், விடரகம் சிலம்ப,
புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே?
– பாலை பாடிய பெருங்கோ. நற்.318
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உரவுக்களிறு போல் வந்து இரவுக்கதவு முயறல்
கேளேம் அல்லேம்! கேட்டனெம் – பெரும!
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட்டாங்கு, யாம்
உயங்குதொறும் முயங்கும் அறனில் யாயே!
குறு. 244. கண்ணனார்
முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறிஇறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,
முன்நாள் இனியது ஆகி, பின்நாள்
அவர் தினைப்புனம் மேய்ந்தாங்கு,
பகை ஆகின்று, அவர் நகைவிளையாட்டே.
குறு. 394 குறிஇறையார்.
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
நிலம் செல, செல்லாக் கயந்தலைக் குழவி
நேரிஅம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும். நற். 171 - 1 -5
--- பாடியவர் பெயர் தெரியவில்லை
யானை தாக்கினும் அரவு மேற்செலினும்,
நீல்நிற விசும்பின் வல்ஏறு சிலைப்பினும்,
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை. பெரும்பாண். 135 - 137. கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
பூம்பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றை
தேம்கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும். நற்.104 - 1-6
பேரி சாத்தனார்.
கொல்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச் செம்மறுக் கொண்ட வெண்கோடு யானை
கல்மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்கதில்ல
--- நற்.151 - 2 - 5. இளநாகனார்.

Wednesday, 7 November 2018

கொட்டானும் தையல் இலையும். (அபுனைவு)

கொட்டானும் தையல் இலையும் (அபுனைவு)

கொட்டானும் தையல் இலையும்
வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருக்கும் எனது மகள் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஜப்பானிலுள்ள மியசாகி பல்கலைக்கழகத்தில் பத்து நாட்கள் தங்கி பயிற்சி முடித்துத் திரும்பினார்.
இந்தப் பயிற்சி “ Japanese Support System to inspire and encourage young women in medical sciences, for better health and Quality Of Life in India” என்ற பெயருடன் ஜப்பானியப் பல்கலைக்கழகத்தால் நிதி வழங்கி நடத்தப்படுகிறது.
இது எப்படி இருக்கிறது பாருங்கள்! நமது நல்வாழ்வு, உடல் நலம், வாழ்க்கைத் தரம் உயர்த்துவது குறித்த ஆராய்ச்சியில் நம் நாட்டுப் பெண்கள் ஈடுபடுவதற்கு வேற்று நாட்டுப் பல்கலைக்கழகம் முனைந்து பயிற்சியளிக்கிறது.
பயிற்சியின் போது பயிற்சியாளர்கள் ஜப்பானியப் பண்பாடு குறித்துத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படவேண்டுமென்பதும் இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
பயிற்சியின் இடைவேளை நேரங்களில் நொறுக்குத் தீனி (snacks)யினை மூங்கில் கிண்ணங்களில் வழங்கியுள்ளனர். இயற்கைப் பொருளான மூங்கிலை உணவுக்கலமாகப் பயன்படுத்தும் முறை பயிற்சியாளர்களைக் கவர்ந்துள்ளது. அவர்கள் அதைப் போன்ற கிண்ணம் ஒன்றினை தங்கள் தாயகத்திற்கு எடுத்துச் செல்லவிரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மறுநாளே அப்படியான மூங்கில் கிண்ணம் ஒன்றினை ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றனர்.
ஜப்பானிய ஷிண்டோ வழிபாட்டு முறைக் கோவில், பண்பாட்டு நடனம், தேநீர் விருந்து, சேக் மது அனைத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். நேரம் தவறாமை மற்றும் பணியில் கவனம் போன்ற ஜப்பானியப் பணிப்பண்பாடு குறித்தும் விளக்கியுள்ளனர்.
நான் ஏற்கெனவே ஜப்பானிய தேவதைக்கதைகள் மொழிபெயர்ப்புக்காக இணையத்தில் தேடித் தெரிந்துகொண்ட ஜப்பானியப் பண்பாட்டுத் தகவல்களும் என் மகள் நேரில் சென்று தெரிந்து வந்திருக்கும் பண்பாட்டுச் செய்திகளும் ஒன்றாகவே இருந்தன. அது ஒரு மகிழ்ச்சி.
பயிற்சி முடிந்து திரும்பிய மகள் இந்த மூங்கில் கிண்ணத்தைப் பெருமிதத்தோடு என்னிடம் காட்டியபோது, மக்கா, நாம் இதை கொட்டான் என அழைப்போம். இதைக் கொண்டுதான் மாடுகளுக்கு மருந்து புகட்டுவோம். நாஞ்சில் நாட்டு விவசாயிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் மாட்டுக்கு மருந்து புகட்ட பருத்த மூங்கிலில் செய்த முழ நீள கொட்டானும் கன்றுக்குட்டிக்காக, கால் படி (அரை லிட்டர்) பிடிக்குமாறு சிறிய மூங்கிலில் செய்த சிறிய கொட்டானும் இருக்குமென்றும் சிறுவயதில் கன்றுக்குட்டிகளுக்கு நானே கொட்டானில் கஞ்சித்தண்ணீர் புகட்டியிருக்கிறேனென்றும் தெரிவிக்க, பேச்சு அப்படியே நமது பழைய பண்பாட்டுத் தகவல்களுக்கு மாறியது.
சங்க காலத்தில் முல்லைநில ஆயர்கள், மந்தையை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும்போது, மதிய உணவுக்காக இன்புளிச் சோறு செய்து மூங்கில் குழாயில் அடைத்து மாட்டின் கழுத்தில் கட்டி எடுத்துச் சென்றதற்கும், அந்த புளிச் சோற்றினைப் பசியோடிருக்கும் வழிப்போக்கர்களைக் கண்டால் அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கும் பாடல் பதிவுகள் உள்ளன.
மூங்கில் குழாய்களில் தேன் பத்திரப்படுத்தியிருக்கின்றனர். மதுவினையும் மூங்கில் குழாய்களில் எடுத்துச் சென்றதாகப் பதிவுகள் உள்ளன.
இறைச்சி மற்றும் உணவுப் பொருள்களையும் கடகம் அல்லது வட்டிகளில் எடுத்துச் சென்றதாக மலைபடுகடாம் பதிவுசெய்துள்ளது.
உணவு உண்பதற்கும் தேக்கிலை, வாழை இலை, தாமரை இலை, ஆம்பல் இலை பயன்படுத்திய பதிவுகள் உள்ளன.
பிற்காலத்திலும் தேக்கிலை, தாமரை இலை, வாழை இலை, கூவை இலை பயன்பாட்டிலிருந்தது.
ஆல், அத்தி, அரசு, மற்றும் மந்தாரை இலைகளை ஈர்க்கோல் முனைகளைக் கொண்டு தைத்து அந்த இலைகளைப் பயன்படுத்தினர். அது தையல் இலை எனப்பட்டது.
பனை ஓலையைப் பட்டையாகப்பிடித்து உணவுக்கலமாகப் பயன்படுத்தினர். கமுகம் பாளையும் உணவுத் தாலமாகப் பயன்பட்டது.
தேக்கிலையில் உணவு அருந்தும்போது, இயற்கையாகவே உள்ள தேக்கு மணம், உணவின் சுவையை அதிகப்படுத்தும். தேக்கிலையில் மடித்துக் கொணரும் காரச்சேவு, பக்கோடா போன்ற பண்டங்கள், இலையில் குத்திக் கிழிப்பதால் ஏற்படும் சுவை குறித்து சிறுவயதில் எவ்வளவு பேசி மகிழ்ந்திருப்போம்!
அது போலவே தாமரை இலையில் சூடான இட்லி, ஆப்பம் போன்றவை சாப்பிடும்போது, அவற்றுக்கொரு தனிச் சுவை கிடைப்பதாக உணர்ந்திருக்கிறோம்.
பனை ஓலைப் பட்டையில் மாலைப் பதநீர், நுங்கோடு அருந்தியிருக்கிறோம். ஊன்பொதிப் பசுங்குடையாகப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். சோறு உண்பதைப் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.
கி. ராவின் கோபல்லபுரத்து மக்களில் துணைப்பாத்திரமான ஒரு பனையேறும் தொழிலாளி அக்கிராமத்தில் தனியாக வசிப்பார். அவர் இரவுச் சாப்பாட்டுக்கு மீன் குழம்பும் சோறும் சமைப்பார். சமைத்து முடித்த பின் ஒரு பச்சைப் பனை ஓலைப் பட்டையைக் குடுவையாக்கி அதில் சோற்றைக் கொதிக்கக் கொதிக்கக் கொட்டி, மீன் குழம்பு முழுவதையும் அதிலேயே ஊற்றி, பட்டையின் இரு முனைகளிலும் கசிவு ஏற்படாதபடி கட்டி வீட்டுத் தரையில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு உருட்டுவாராம். அப்படியே போய் ஊருணியில் குளித்துவிட்டு வந்து சாப்பிடத் தொடங்குவாராம். இது அவரது மாற்றமேயில்லாத தினசரி நடவடிக்கையாம். பனை ஓலையின் பச்சைப் பசும் மணம் சூடான சோறு மற்றும் மீன் குழம்பில் கலந்து தனிச்சுவை ஏற்படும் போலிருக்கிறது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த போது வாசித்ததிலிருந்து அந்த நினைவு என்னைவிட்டு அகலவேயில்லை.
இயற்கையோடு இயற்கையாக நாமும் வாழ்ந்திருந்தோம்தான். ஆனால் இப்போது அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு உலோகத்தாலான சமையற் கலங்கள் மற்றும் உண்ணும் தாலங்களைப் பயன்படுத்துகிறோம்.
அதைவிட மோசம்! அவற்றைக் கழுவுவதற்கு தேங்காய்ச் சவுரி, புளிக் கோது, சாம்பல் எனப் பயன்படுத்திய நாம் இப்போது என்னென்னவோ வேதியியல் பொருட்களைப் பயன்படுத்திக் கைகளைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது பாத்திரம் கழுவும் பெண்கள் அநேகம் பேருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளங்கைகள் முழுவதும் வெடிப்பும் சொரசொரப்புமாகியிருக்கிறது. ஆனாலும் தேங்காய்ச்சவுரியையோ புளிக் கோரினையோ பயன்படுத்தத் தயாரில்லை. .
ஏதோ ஒன்று, உரையாடலென்று தொடங்கினால் நடப்பு வாழ்க்கை முறையில் தான் வந்து முடிகிறது. அதையும் முகநூலில் பகிர்ந்து கொள்வதென்பது கிராமத்துப் புளிய மரத்தடி அல்லது கோயில் முகப்பு, படிப்புரை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதைப் போல ஒரு அத்யந்த மகிழுணர்வு.