Saturday, 5 November 2016

நினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் - 2

நினைவைவிட்டு நீங்காத கதைமாந்தர் – 2

நகரத்தின் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அது ருஷ்யாவின் மிக முக்கியமான துறைமுக நகரம். உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கடலோடிகள் நடமாடும் நகரம். 1800களின் பிற்பகுதியில், 1900களின் தொடக்கத்தில் அங்கே காம்ப்ரினூஸ் என்ற பெயரில் ஒரு பீர் அருந்தகம். அப்படி ஒரு அருந்தகம் இருப்பது வெளியிலிருந்து அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கடற்கரை செல்லும் ஒரு சந்தில் தரைத்தளத்துக்கும் கீழ் அமைந்திருக்கிறது. கடலோடிகள் மற்றும் நகரவாசிகள் எல்லோருக்குமே மிகவும் பிடித்தமான அந்த பீர் அருந்தகம், பீர் அரசன் (Gambrinus, the King of Beer) அதாவது பீர் வடிப்பவர்களின் புரவலன் என ஐரோப்பிய நாடுகளில் கருதப்பட்ட காம்ப்ரினூஸ் பெயரைக் கொண்டாடும் விதமாக அவன் பெயர் சூட்டப்பட்டிருந்தது. பீர்க்குவளையோடு அவனது ஓவியமொன்றும் அருந்தக வாயிலில் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கூடவே வேறு பல ஓவியங்களும் இருந்தன. இருநூறு பேருக்குக் குறையாமல் அமர்ந்து பீர் அருந்த வசதியான அங்கே சில நேரங்களில் கூட்டம் அதிகமாகி பீர்க்குவளைகளைத் தலைக்கு மேலாக மட்டுமே கைமாற்றக்கூடிய நிலைகூட ஏற்படுமாம்.
அந்த அருந்தகத்தில் எல்லோர் கவனத்தையும் கவர்ந்து, அனைவரின் அன்பினையும் கொள்ளை கொண்டவன் சாஷ்கா என்ற வயலின் கலைஞன். பிறப்பில் யூதனான அவன் ஒரு அநாதை. 40, 45 வயதிருக்கக் கூடிய அவன் தினமும் மாலை 6.00 மணி அளவில் அருந்தகத்துக்கு வந்து அவனது முதல் குவளை பீரை அருந்திவிட்டானென்றால், பிறகு அருந்தகத்திற்குள் நுழைகிற வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் வணக்கம் செலுத்தி, அவர்கள் கேட்கும் பாடல்களை வயலினில் இசைத்து, இசைத்து, வாடிக்கையாளர்களின் அன்பளிப்பு பீர்க்குவளைகள் அனைத்தையும் அருந்தி முடித்து வீடு செல்லும்போது அதிகாலை 1.00 மணி ஆகிவிடும். அவனது வயலின்  யூதர்களின் துயரத்துடன் அழும்போது, அது உலகத்தைப் போல அவ்வளவு பழமையான துயரமாக இருக்குமாம். அவன் அணி வகுப்புப் பாடல்களை இசைக்கும்போது மொத்த அருந்தகமும் எழுந்துநின்று போருக்குப் புறப்படத் தயாராகுமாம். அது போல அவனது ஆப்பிரிக்க நீக்ரோ பாடல்களுக்கு அருந்தகம் முழுவதும் எழுந்து நடனமாடுமாம். பிரித்தானிய, பாரசீகக் கடலோடிகள், மீனவர்கள், ருஷ்ய நாடோடிகள், விவசாயிகளுக்கு அந்த நகர பிஷப், ஆணையாளர் போன்றோர்களின் பெயர்கள் தெரியுமோ தெரியாதோ சாஷ்காவைத் தெரியுமாம். அவன் யூதன் என்ற போதிலும் அனைவரும் அவனை நேசித்தார்கள். வாடிக்கையாளர்கள் அளிக்கும் அன்பளிப்புகளை அவர்களே மீண்டும் வந்து கடனாகப் பெற்றுச் செல்வார்கள். அவன் அக்கடன்களைத் திருப்பிக்கேட்பதும் இல்லை.
எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தபோது ஜப்பானுடன் போர் தொடங்கியிருக்கிறது. நகர அதிகாரி அவனையும் போர்ப்படையில் சேர்த்து உத்திரவிடுகிறார். படைக்குச் சேர்க்காமல் விலக்களிக்கவேண்டிய அளவுக்கு வயதானவன் என்ற போதிலும் யூதன் என்ற காரணத்திற்காகவே அதிகார வர்க்கத்தின் ஆணவத்தால் போர்முனைக்கு அனுப்பப்படுகிறான். ஜப்பானிய போர்க்கைதியாகி நாகசாகிக்கு அனுப்பப்படுகிறான். ஆண்டுகள் இரண்டு கடந்துவிட்டன. ஒரு கட்டத்தில் காம்ப்ரினூஸ் அவனை மறந்துகூட விட்டிருந்தது.
போர் முடிந்து திரும்பி ஒரு குறிப்பிட்ட நாளில் அவன் மீண்டு வந்து, வயலின் இசைக்க, காம்ப்ரினூஸ் மீண்டும் களைகட்டுகிறது. இரண்டு ஆண்டுகள் கடக்கும் நிலையில் யூதர்களுக்கு எதிரான கலகம் ஒன்று தூண்டிவிடப்படுகிறது. அதில் சாஷ்கா காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறான். மீண்டும் பழைய நிலைபோல காம்ப்ரினூஸ் அவனை மறக்கும் நேரத்தில் ஒரு மாலையில் அருந்தக வாயிலில் தாடியும் மீசையுமாக சாஷ்கா அருவருப்பாகத் தோன்றுகிறான். அவனது இடது முழங்கை திருகி உடலோடு சேர்த்து அழுந்தியிருக்க விரல்களோ அவனது மோவாயைத் தொட்டு விரைத்து நின்றன.
வாடிக்கையாளன் ஒருவன் எல்லோருக்கும் பிரபலமான பாட்டு ஒன்றை இசைக்குமாறு கேட்கிறான். பியானோக்கலைஞன்  பியானோவை மீட்டியபடி சாஷ்காவைத் திரும்பிப் பார்க்கிறான். சாஷ்கா வலது கையால் சட்டைப்பைக்குள்ளிருந்து மவுத் ஆர்கன் ஒன்றை எடுத்து வாசிக்கிறான். பீர் வாசனை, வாடிக்கையாளர்களின் பேச்சொலி, மூச்சு முட்டும் புகை மூட்டத்தையும் மீறி அவனது இசையில் அந்த அருந்தகம் உருகிக் கரைகிறது.
”ஒரு மனிதனை வேண்டுமானால் உங்களால் முடமாக்க முடியலாம். ஆனால் கலையால் அவன் அதை வெற்றிகொள்வான் என்பது போன்ற வாசகத்துடன் கதை முடியும்.   
வாழ்க்கை நம்மை எப்படி வேண்டுமானாலும் துவைத்தெடுக்கட்டும்; ஆனாலும் மீண்டெழுவோமென்ற துணிச்சல் தேவைப்படும்போது நான் அலெக்சாந்தர் குப்ரினின் சாஷ்காவைத்தான் துணைக்கழைத்துக்கொள்கிறேன்.

அலெக்சாந்தர் குப்ரினின் செம்மணி வளையல் : குறுநாவலும் சிறுகதைகளும் என்ற ராதுகா பதிப்பக நூலில் `காம்ப்ரினூஸ்` சிறுகதையின் முக்கிய கதை மாந்தன் சாஷ்கா.

அலெக்சாந்தர் குப்ரின்


காம்ப்ரினூஸ் - பீர் அரசன் சிலை
 

No comments:

Post a Comment