Tuesday, 2 January 2018

எளிதாக ஒரு புளிக்கறி - அபுனைவு - 2

எளிதாக ஒரு புளிக்கறி
அம்மா இறந்து (20.12.94) இருபத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அவளது வாசம் கணமேனும் நெஞ்சை விட்டகலுவதில்லை. அம்மா கைப் புளிக்கறிக்குத் தனிமணம்.
இந்தப் புளிக்கறி நாஞ்சில் நாட்டுப் பேச்சு வழக்கில் புளிக்கேரி, புளிக்காரி என உருமாறும். ’வெறுங்குழம்பு` என்றும் சொல்வதுண்டு என இணையப்புள்ளிகள் சிலர் பதிவுசெய்திருக்கின்றனர்.. நெல்லைச் சீமையில் வெள்ளைக்கறி என்றும் வெள்ளைக் குழம்பு என்றும் அறியப்படுகிறது. நாஞ்சில் நாடு அளவுக்கு நெல்லையில் இக்குழம்பு பிரபலம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்குப் பயன்பாட்டிலுள்ளது. இராமநாதபுரம், மதுரை, செட்டிநாடு, நடுநாடு, கொங்குநாடு, தொண்டைநாடு மற்றும் உணவு மண்டலங்களில் இதன் சிறப்பு பற்றி அதிகமாக அறியப்படவில்லையென்றே அறிக்கைப் பதிவுகள் கூறுகின்றன.
மற்ற குழம்பு வகைகளைப் போலில்லாமல் எல்லாக் காய்களுக்கும் பொருந்திப் போவதும் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்ற காயின் தனிச்சுவை, மணத்தினை மகிமைப்படுத்துவதுந்தான் புளிக்கறியின் தனிச்சிறப்பு. காய்களை ருசித்து அதிகமாகச் சாப்பிடுவதற்கு இந்தக் குழம்பில் சேர்த்துச் சமைப்பதுதான் ஆகச் சிறந்த வழி என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. சாம்பாராவது பரவாயில்லை, புளிக்குழம்பு, வத்தக்குழம்பு, காரக்குழம்பு, மோர்க்குழம்பு, குருமாக்குழம்பு போன்றவற்றிலுள்ள காய்கள் சுவையாகவேயிருந்தாலுங்கூட குறைவாகவே உண்ண முடியும். ஆனால், புளிக்கறிக் காய்களை ஒரு வெட்டு வெட்டலாம், திகட்டுவதில்லை. அடுத்து, நாஞ்சில் நாட்டு கட்டிச் சம்பா சிவப்பு, வாசறுமுண்டான் வெள்ளை, செந்தி, அறுபதாங் குறுவை, பனங்குறுவை, டொப்பி, பிற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளான ஐ.ஆர் 8, 20, நெல்லையின் ஆனைக்கொம்பன், சிறுமணி, முகவையின் மிளகி, இறங்கான், ஆற்காட்டுக் கிச்சிலி, பொன்னி, சீரகச்சம்பா, நியாயவிலைக்கடை ரப்பர் என மொக்கையோ, சன்னமோ, சிவப்போ வெள்ளையோ, பழுப்போ, புழுங்கலாக இருந்தால் அதற்கும் இந்தப் புளிக்கறி ஒத்துப் போகும். பச்சரிசி, பொங்கல் சாதத்துக்குச் சரிப்படுவதில்லை. பழைய சாதத்துக்கோ மிகவும் பொருத்தம். அதிலும் மிளகாய்ப்பச்சடியும் கூடவேயிருந்தால், ஊன்துவை அடிசில் கூட அதன் பக்கத்தில் வரமுடியாது. புளிக்கறியின் செய்முறையோ மிகமிக எளிது. புளிக்கறியைப்பற்றிப் பேசுவதென்றால் பேசிக்கொண்டேயிருக்கலாம். சரியான ஆள் மட்டும் கிடைத்து விட்டால், நமக்குள் உறைந்துகிடக்கிற எந்தச்சுவையாக இருந்தாலும் அதைப் பேசிக்களிப்பது தனி சுகமே.
புளிக்கறிக்கு ஏதாவது ஒரு ஒற்றைக்காய் சேர்ப்பதுதான் உத்தமம். முருங்கைக்காய், கீரைத் தண்டோடு மாங்காய் கூட்டு சேரும் தான்; இப்போதைக்கு ஒற்றைக்காய்ப் புளிக்கறியை மட்டும் பேசுவோம். மொந்தன் வாழைக்காய், கத்திரி, வழுதுணை, வெண்டை, சீனியவரை, கோழியவரை, பாடவரை, சதுர அவரை, வெள்ளைப் பூசணி அல்லது கல்யாணப் பூசணி என்றும் அழைக்கப்படுகிற தடியங்காய் ( நாஞ்சில் நாட்டு இளவன் காய்), மஞ்சள் பூசணி, புடலங்காய், வெள்ளரிக்காய் (வேலூர் கீரைக்காய்) சுரைக்காய், தக்காளிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முஷ்டைக்கீரை, தண்டங்கீரை, கீரைத் தண்டு, வாழைத் தண்டு, மாங்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, காய்ச்சிக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சக்கை என்ற பலாக்காய், பிடிகிழங்கு என எந்தக் காய் கிடைக்கிறதோ அதை புளிக்கறிக்குப் பயன்படுத்தலாம். பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்துள்ள காரட், பீன்ஸ், முள்ளங்கி, நூல்கோல், சௌசௌ, டர்னிப், ப்ரக்கோலி போன்றவற்றையுங்கூட சேர்த்துக்கொள்ளலாம்.
பொதுவாகக் காய்களை ஒன்று அல்லது ஒன்றரை செ.மீ கனசதுரங்களாக வெட்டிக்கொள்வது பொருத்தம். முருங்கைக்காய், கீரைத்தண்டு போன்றவற்றை இரண்டு அல்லது மூன்று செ.மீ நீளத்துக்கு வெட்டிக்கொள்ளலாம். தண்டங்கீரையை வேர்ப்பகுதியை மட்டும் கழித்துவிட்டு தண்டோடோ அல்லது தனியாகக் கீரை மட்டுமோ அரிந்து கொள்ளலாம். முருங்கைக் கீரையை முடிந்தமட்டில் காம்புகள் இல்லாமல் தனித்தனியாக உருவிக்கொள்ளவேண்டும். வாழைத் தண்டெனில் வட்டு வட்டாகச் சீவி நாரெடுத்துப் போடலாம். வட்டுகள் பெரிதாக இருந்தால் அரைவட்டுகளாக ஒடித்துப் போடலாம். சீனியவரைக் காயெனில் முழுதாகப் போட்டு வேகவைத்துப் பின்னர் காம்புகளைக் கிள்ளி, இருபக்க நாரும் உரித்துப் போடவேண்டும். கைவசமுள்ள காயை முதலில் கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சமாக இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து வேகப் போட்டுவிடலாம். கொஞ்சமாக மஞ்சள்பொடி கூடச் சேர்த்துக்கொள்ளலாம். கிழங்கு வகையெனில் கொஞ்சம் புளி சேர்த்து அதன் அரிப்புத்தன்மையைப் போக்கிவிடலாம். வெண்டை(நாடன் வெண்டை காணாமற்போனது மிகப்பெரிய இழப்பு), பீர்க்கு, பூக்கோசு, முள்ளங்கி, நூல்கோல், ப்ரக்கோலி போன்றவையெனில் முதலில் எண்ணெயில் அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கிய பின்பு தண்ணீர் ஊற்றி வேகவைப்பதே நல்லது. அரைமுறி தேங்காய் (அதாவது முழுத்தேங்காயில் பாதியிலும் பாதி) (தேங்காய், தேங்காயெண்ணெய் சேர்க்கக்கூடாதென்ற துரோகக்குறிப்புகளை, அவியல் மற்றும் புளிக்கறிக்கு மட்டும் விதிவிலக்காகக்கொண்டு, ஒதுக்கித் தள்ளுங்கள், கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.) நான்கு மிளகாய் வற்றல், அரை தேக்கரண்டி, சீரகம், கால் தேக்கரண்டி வெந்தயம் மட்டும் அரைத்துக்கொள்ளலாம். கொட்டைப் பாக்கு அளவுக்கு புளி ஊறப் போடவேண்டும். புளி பழசாகிக் கறுத்ததாக இல்லாமல் வெள்ளைப் புளியாக இருந்தாலே, புளிக்கறியின் நிறமும் சுவையும் விரும்பத்தக்கதாக அமையும். அரைவையோடு தேவையான அளவு தண்ணீர், உப்பு, புளிக்கரைசலும் சேர்த்துக் கரைத்து (குழம்புக்குக் கரச்சு ஊத்தியாச்சா) இரண்டு சொட்டு எடுத்துச் சுவை பார்த்து, மீண்டும் மீண்டுமாகப் பார்த்து, தேங்காய், சீரகம், மஞ்சள் மணம் கெடாமல் நமக்குத் தேவையான சுவையளவுக்கு புளி கரைத்து, கரைத்துச் சேர்க்கலாம். புளி அதிகமானால் சேர்மானத்தின் ருசி குறைந்துவிடும். காய்களிலும் சிறிது புளிப்புச் சுவை உண்டென்பதால் புளி சேர்ப்பதில் கவனம் தேவை. இந்தக் குழம்புக் கரைசலை வேகவைத்த காயோடு சேர்த்து மீண்டும் கொதிக்கவைக்கவேண்டும். காய்கள் ஏற்கெனவே வெந்திருப்பதால் ஒரு கொதி வந்ததுமே (இதற்கு அம்மாவின் மொழியில் மகிழ்ந்து வருதல், மகுந்து வருதல் எனப்பெயர்) தீயைக்குறைத்து இரண்டு நிமிடத்தில் இறக்கி விடவேண்டும். அதிகம் கொதித்தால் கடுத்துவிடுமென அம்மா சொல்வார்கள். மூன்று அல்லது நான்கு உள்ளியைப் பொடியாக அரிந்துகொள்ளவும். வாணலியில் ஒன்று அல்லது இரண்டு கரண்டி தேங்காயெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை இருந்தால் அதுவும் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை கிடைப்பதெல்லாம் அந்தக் காலத்தில் கொஞ்சம் அரிதுதான். அதனோடு அரிந்து வைத்த உள்ளியையும் பொன்னிறத்தில் வறுத்து குழம்பில் போட்டால் புளிக்கறி தயாராகிவிட்டது. தாளிப்பில் கறிவேப்பிலை சேர்க்கிறோமோ இல்லையோ, வெந்தயம் கண்டிப்பாக வேண்டும். அதன் கருகிய மணமும் மென்கசப்பும் குழம்புக்கு அவசியம் தேவை. அதற்காக அதிகம் போட்டுவிட்டால், வாயில் வைக்கமுடியாமலாகிவிடும்.
சக்கைப் புளிக்கறிக்கு சக்கையின் மேல்பகுதி முட்தோலும் கொட்டையை ஒரு உறைபோலச் சுற்றியிருக்கும் வெண்மஞ்சள் தோலையும் தவிர மீதிப்பகுதி மடல், பூஞ்சி என்ற வைக்கோல், சுளை, விதை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் போடலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சுவை உண்டு. சக்கைப் புளிக்கறிக்கு தொடுகறி எதுவும் தேவையில்லை. வெறும் குழம்புச் சோறும் அதிலுள்ள கசணமும் தான். கசணம் என்றால் குழம்பில் ஊறிக்கிடக்கும் காய்களுக்கான பொதுப்பெயர். அது இடுகுறிப்பெயராகத்தான் இருக்கும். காரணப் பெயராகக்கூட இருக்கலாம். தெளிவாகத் தெரியவில்லை. அதுபற்றி ஆரய்ச்சி முடிவுகள் எதுவும் இதுகாறும் வரப்பெறவில்லை.
மஞ்சள் பூசணி, தடியங்காய், வெள்ளரிப்பழம் மூன்றையும் சேர்த்துப் புளிக்கறி செய்யலாமென ரிஷிகேஷ் நிறுவனத்தின் தலைமைச் சமையலறிஞர் ஒருவர் வாரமலர் தொடர் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அப்புளிக்கறிக்கு வெந்தயம் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்தரைக்க வேண்டும். . அவ்வளவுதான்.
காய் எதுவுமேயில்லாமல் புளிக்கறி செய்யலாந்தான். ஆனால், இரண்டு மூன்று சின்ன உள்ளியாவது உரித்துப் போடாமல் மொட்டைக்குழம்பாக சமைப்பது வன்முறையென்றே தோன்றுகிறது. மொட்டக்கறி வைப்பது பாவமென்பாள் என் அம்மா.
புளிக்கறிக்கு தேங்காயோடு சேர்த்தரைக்கும் வெஞ்சனமாக சீரகமும், வெந்தயமும் தான். வேறெதுவும் இல்லை. இவ்வளவு குறைவான வெஞ்சனம் சேர்க்கும் குழம்புவகையாக வேறு எதுவும் இல்லையென்றுதான் நினைக்கிறேன். பிற்காலத்தில் தேங்காயைக் கொஞ்சம் குறைக்கும் முயற்சியில் சிறிதளவு விதைக் கொத்தமல்லி மற்றும் இரண்டு மூன்று உள்ளி சேர்த்தரைக்கலாமென, மகளிர் மாநாட்டில் முடிவெடுத்தார்கள். கூடவே, இஞ்சி, மிளகு, ஒரு தக்காளி சேர்த்துவிட்டால் அதற்குப் பெயர் காரக்குழம்பாகிவிடும்.
பொதுவாகவே புளிக்கறிக்கு, துவட்டல், துவரன், உப்பேரி, பொரியல், அவியல், பச்சடி, கிச்சடி, கூட்டுக்கறி, இஞ்சிக்கறி, கடலைக்கறி, பால்கறி, மசால்கறி என எல்லாத் தொடுகறியும் பொருத்தம்தான் என்றாலும் அவையெல்லாம் அதிகபட்சம்தான். ஒரே ஒரு வற்றல், அதுதான் காய்ந்த மிளகாயும் உப்புமாகச் சேர்த்தரைத்த வெறும் காணத்துவையல் (கொள்ளு) அல்லது, பயத்தம்பருப்புத் துவையல் அல்லது பொரிகடலைத்துவையலே போதுமானதென்பதுதான் பெரும்பான்மைக் கருத்தாக இருக்குமென்பது எனது தீர்க்கமான முடிவு. அரைக்கீரை அல்லது தண்டங்கீரையை சிறிது உப்பு மட்டும் போட்டு வேகவைத்து, கொஞ்சம் காயம் அல்லது இரண்டேயிரண்டு பல் பூண்டு மட்டும் போட்டுக் கடையும் கீரைக் கடைசலும் மிகப் பொருத்தமே. இந்தக் கீரைக்கடைசலோடு ஒரு துளி நெய் ஊற்றி சாதம் பிசைந்து குழந்தைக்கு ஊட்டினால் விரும்பிச் சாப்பிடும். அதில் ஒரு உருண்டையை நம் புளிக்கறியில் அல்லது வத்தக்குழம்பில் முக்கி உள்ளே தள்ளினால், அதுதான் தேவாமிர்தம்.
உண்மையில் புளிக்கறி நாஞ்சில் நாட்டு ஏழைவீட்டு எளிய கறிதான். ஆனாலும் அதன் சுவை பெரிது.
சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் புத்தகப்பையை வீட்டில் எறிந்துவிட்டு எல்லோரும் திருவாச மூட்டில் (நூலகம் முன்புள்ள மைதானம்) கூடி, என்ன விளையாட்டு, அல்லது எங்கு போகலாமென முடிவெடுப்போம். அந்தக் கூடுகைக்கு எப்போதுமே கடைசியில் வந்து சேரும் திரவியத்திடம் கேட்டால் அவன் சொல்வான். ”ஏய், பசிக்கிற மாதிரியிருந்து. அடுப்பாங்கரையில் என்னன்னு பார்த்தேன். தடியங்காப் புளிக்காரி இருந்து, தட்டத்துல சோத்தப் போட்டு, புளிக்காரிய ஊத்தி, ஒரு வெட்டுவெட்டிற்று வாரேன்” என்று நெஞ்சு நிமிர்த்திப் பேசுவான். ஒவ்வொரு நாளைக்கும் இப்படித்தான் ஏதாவதொரு கதை இருக்கும். அது கனாக்காலந்தான். வகைவகையாக சூப்புகள், சீன, இத்தாலிய கிரேவி வகைகள், பீஸ்சா, பர்கர், ஹாங்காங் காளான் கிடைக்கும் இந்தக்காலத்தில், அமாவாசைக்கும் பிற சமயச்சடங்குகளுக்கும் மூடைமூடையாக உடைத்தெறியப்படும் திருஷ்டிப் பூசணிக்காய் கொண்டு சமைக்கப்படும் தடியங்காய்ப் புளிக்கறி பற்றி முகநூலில் கதைப்பது கிருத்துருவமென்றுகூடச் சொல்லலாம்.
முற்காலம் ஒரு பொற்காலமென இதுமாதிரி பழங்கதை பேசுவதை nostalgia (ஏக்கம், இழப்புத்துயரம்) என்கிறார்கள். படைப்பாளர்கள் இதையெல்லாம் விட்டு வெளியே வரவேண்டுமென்கிறார்கள், பின்நவீனத்துவவாதிகள். Nostalgia பழங்கதை பேசி, எழுதிப் பொழுதைப் போக்காதே, திசைதிருப்பாதே, என்று கொடிபிடிக்கிறார்கள், புரட்சியாளர்கள். அதுவும் உண்மைதான். நாம் அதைப்பற்றியும் சிந்திக்கலாம்தான். என்ன சொல்கிறீர்கள்?
ச.ஆறுமுகம். 

https://www.facebook.com/photo.php?fbid=1570398966382636&set=pcb.1570403373048862&type=3&theater 

முகநூல் பதிவு  டிசம்பர் 27, 2017.   விருப்பம் - 165, பகிர்வு 40, பின்னூட்டம் 56.

2 comments:

  1. /அமாவாசைக்கும் பிற சமயச்சடங்குகளுக்கும் மூடைமூடையாக உடைத்தெறியப்படும் திருஷ்டிப் பூசணிக்காய் கொண்டு சமைக்கப்படும் தடியங்காய்ப் புளிக்கறி பற்றி முகநூலில் கதைப்பது கிருத்துருவமென்றுகூடச் சொல்லலாம்/
    சிறப்பான உணவுப்பதிவு. புளிக்கறிக்கு ஐரோப்பிய காய்கள் தோதுப்படுமா... உங்கள் அனுபவம் எப்படி

    ReplyDelete
  2. அருமை ஐயா ... என் போன்ற பேச்சிலர்களாக இருக்கும்
    அன்பரகள் படிக்கும் சமயம் நாவில் எச்சில் அவிலாஞ்சியில் பெய்யும் மழைபோல் ஊற்றெடுக்கிறது ...

    ReplyDelete