Tuesday, 2 January 2018

சங்க இலக்கியத் துளிகள் -9



 சங்க இலக்கியத் துளிகள் - 9
எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ் சினை
வீ இனிது கமழும் துறைவனை 
நீ இனிது முயங்குமதி, காதலோயே.
-அம்மூவனார், 148, ஐங்குறுநூறு, நெய்தல் – ஞாழற்பத்து
உரை : காதல் மிக்க தோழியே! மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரத்தின் ஓங்கி உயர்ந்த கிளையின் விரிந்த மலர்கள் இனிதே மணம் பரப்புகிற கடல் துறையினைக் கொண்ட தலைவனை இனி நீ நின் விருப்பப்படியே இனிது தழுவி இன்புறுவாயாக.
கூற்றும் விளக்கமும் - களவில் கலந்து, அலர் பரவிப் பல்வேறு இடையூறுகளை அனுபவித்து, இனி என்னாகுமோவெனப் பயந்திருந்த காலத்தில் இரு தரப்புப் பெற்றோர் சம்மதிக்க, மணச் சடங்கு முடிந்து, மணநாளின் இரவில் மணமக்கள் இருவரையும் தனித்திருக்கச் செய்கையில் தோழி, தலைவிக்குக் கூறுவதான கூற்று.
உரைவிளக்கம் : `ஊரறியச் சான்றோர் முன்னிலையில் தலைவனோடு மணமுடித்து ஒன்றுபட்டமையின் முன் களவுக்காலத்தில் நெஞ்சத்தை அலைத்த அச்சத்தின் சுவடு ஏதுமின்றி நின் கணவனைத் தழுவி இன்புறுவாயாக` என்று தோழி வாழ்த்தினாள் என்க. நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சியாதலின் ஐயத்திற்கும் அச்சத்திற்கும் சிறிதும் இடமில்லையாதலை அறிக.
களவுக்காலத்துப் புணர்ச்சியிலும் காதல் உண்டெனினும் அதில் அச்சமும் உண்டென்பதால் அக்காதலாற் பெறும் இன்பம் முழுமையன்றாதலின், இப்போது அச்சமற்ற முழுமையான இன்பத்தைப் பெறுவாயாக என்னும் பொருளில் `இனிது முயங்குதி` என்றாள்.
எளிய கவிதை; `இனிது முயங்குதி` என்ற இரண்டே சொற்களில் எத்துணைக் கனத்தை ஏற்றி, பெரும் மனப்பாரம் இறங்கிய கதையை, உளவியல் நிலைகளைச் சொல்லிச் சென்ற எம் முன்னோரின் தனித்திறம் இன்றும் பெருமைக்குரியதுதான்.

No comments:

Post a Comment