Saturday, 13 January 2018

மருத மரம் மீது கொண்ட நேசம் - அபுனைவு - 3

மருத மரம் மீது கொண்ட நேசம்

மினுமினுப்புடன் கூடியவொரு வெண் சாம்பல் நிறம்: குறுகிய வளைவுடனான நீள்சதுரப் பசுமை இலைகள், கண்கவரும் கருஞ்சிவப்புத் தளிர்கள்; அடிப்பாகத்தில் திமிசுக் கட்டையின் எஃகுச் சட்டம் போல, திடமாகப் படர்ந்து ஓங்கி வளர்ந்து முதிர்ந்தாலும், இளமைத் தோற்றத்துடன் நிமிர்ந்து நிற்கும் மருத மரங்களைப் பார்த்ததுமே மகிழ்ச்சி ஊற்றெடுத்து, வாழ்வின் மேல் தீரவே தீராத ஒரு பற்றுணர்ச்சி மேலிடுகிறது. மரங்கள் எல்லாமே அழகுதான். சமமான தகுதி கொண்டோரிலும் முதல் நபர் (First among the equals) என்றொரு கருத்து பொது நிர்வாக நடைமுறையிலுள்ளதைப் போல, மரங்களில் மருதமரம் எனக்கு முதன்மையானதாகத் தெரிகிறது. சங்ககால நக்கீரரால் திருமருது என அடைமொழியிட்டுச் சிறப்பிக்கப்பட்ட இம்மரத்தின் பட்டை, இலை பூ, காய் எல்லாமே மருத்துவ குணமுடையவை. வேம்பின் நிழல் போலவே மருதின் நிழலும் மகிழுணர்வைத் தருவது.
விக்கிரமசிங்கபுரம் – பாபநாசம் சாலையில் சந்தன மாரியம்மன் கோவில் நிறுத்தம் அடுத்த வாய்க்கால் பாலம் தாண்டியதுமே மருத மரங்களின் ஆட்சி தொடங்கிவிடும். அங்கிருந்து பாபநாசம் கோவில் வரையிலான இரண்டு கி.மீ தூரத்துக்கு இருமருங்கிலும் மருதமரங்கள் தாம். வெயில் நுழைய முடியாது. சோம்பேறி மடம் என்று நாங்கள் பெயர் வைத்த சாமியார் மடம் அருகில் மருதநிழலில் ஒரு சுமைதாங்கி இருக்கும். அதன் பக்கத்தில் எங்கள் தாத்தாவுக்கு ஒரு நெல் வயல் இருந்தது. அறுவடை மற்றும் விவசாய காலங்களில் மதினி, தம்பியுடன் தாத்தாவுக்கு உணவு கொண்டு செல்வதும், அவர் சாப்பிட்டுவிட்டு, போணிச்சட்டியைத் திருப்பித் தரும் வரை சுமைதாங்கியில் ஏறியும் குதித்தும் விளையாடி மருத மர நிழலை அனுபவித்த காலங்கள் என்றும் பசுமையானவை.
வீட்டிலிருந்து பாபநாசம் ஆற்றுக்குத் தினமும் நடந்தேதான் மருத மரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே குளிக்கச் சென்று திரும்புவது வழக்கம். மருத மரங்களில் கிளிகள் கூட்டம் கூட்டமாக வாழும். அவை எழுந்து படபடவெனப் பறந்து மீண்டும் அமரும் ஒலியும், அவை பேசிக்கொள்ளும் மொழியும் அற்புதமானவை. அடிப்பாகத்தில் திண்டு திண்டாக நீண்டிருக்கும் முண்டு முடிச்சுகளின் மீது கூட ஆடுகள் வாக்காக ஏறி நின்று தளிர்களை மேயும். அப்போதிருந்தே மருத மரங்களைக் கண்டதும் மகிழ்ச்சிகொள்வதென்பது பழக்கமாகிப் போனது.
பேருந்துப் பயணங்களின் போது மருத மரங்களைக் கண்டதுமே ஒரு புத்துணர்வு கொள்வதுண்டு. கல்லிடைக் குறிச்சி பாலத்திலிருந்து அம்பாசமுத்திரம் கனடியன் கால்வாய்த் திருப்பம் வரையிலான சாலையின் இருமருங்கும் பெரும்பெரும் வெள்ளித்தூண்கள் நட்டு பச்சை விதானமைத்தது போன்ற தோற்றம். சாலையின் வலது புறம் விரிந்து கிடக்கும் நெல்வயல்களின் நடுவில் பெரிய கோவில் என்றழைக்கப்படும் காசி விசுவநாதர் கோவிலும் தாமிரப்பரணிப் படுகையும் கண்கொள்ளாக் காட்சி. பேருந்து அச்சாலைக்குள் நுழைந்ததுமே நாமும் அகன்றுவிரிந்து காற்றோடு காற்றாய்க் கலந்து பிரபஞ்சமெங்கும் பரவிநிற்பது போல ஒரு மகிழுணர்வில் மனம் மிதக்கத்தொடங்கிவிடும்.
அம்பாசமுத்திரம், மேலப்பாளையம் கீழரதவீதியில் சித்தியின் வீடு. 70 – 72 ல் அங்குதான் வாசம். வீட்டிலிருந்து மிகக்குறைந்த நடைதூரத்திலேயே ரயில்வே பாலம்; உயர்ந்த மேடான கரைகளின் நடுவே, அகன்று விரிந்து, பாறைகளை மூழ்கடித்தும் தாவியும் சுழித்தும் ஓடும் தாமிரபரணியின் இடது கரையில் வானத்து மேகங்களைத் தடுத்தே தீர்வேனெனச் சவால் விட்டு ஓங்கி நிற்கும் மருத மரங்கள்; மரங்களில் தாவும் குரங்குக் கூட்டம். ஆற்றின் இடது கரையில் ஆள் அரவமில்லாத ஒரு சிறிய பிள்ளையார் கோவில். கோவிலைச் சுற்றியிருக்கும் புல்வெளியில் பெரிய பெரிய கீரிப்பிள்ளைகள். தண்ணென்ற காற்று; அமைதி; மனதுக்குள் பேரமைதியைத் தந்தன மருத மரங்கள்; இப்படித்தான் இளமைக் காலம் அங்கே இயற்கையோடு இயற்கையாக, மருதமரங்களோடு கழிந்தது.
பயணங்களின் போதெல்லாம் மருத மரங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. வேலூர் விழுப்புரம் சாலையில் ஆரணி அருகில் ஒரு மருதமரம் கண்ணில் படும். அதைவிட்டால் திருநெல்வேலி நகருக்குள் தான். கீரிப்பாறை செல்லும் வழியில் நாவல் காடு அருகில் மருத மரமொன்று என்னிடம் நலம் விசாரிக்கும்.
நம் முன்னோர்கள் நட்டு வளர்த்தார்கள்; இப்போது மருத மரம் நட்டு வளர்க்க யாருக்கும் ஆர்வமில்லை. நதியே பாழ்பட்டு அலங்கோலமாகக் காட்சியளிக்கும் போது மருதமரங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு எங்கே இடமிருக்கிறது?
Image may contain: tree, plant, sky, outdoor and nature
Image may contain: plant, nature and outdoor
Image may contain: plant, tree, outdoor and nature
Image may contain: tree, plant, sky, outdoor and nature





மு

No comments:

Post a Comment