கத்தரிக்காயும் நானும்
நான் பிறந்து வளர்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் குண்டு, நீளம், கருநீலம், ஊதா என விதவிதமான கத்தரிக்காய்கள் உண்டு. பொங்கல் பருவத்தில் குமரன்புதூர் பக்கமிருந்து வரும் பிசானக் கத்திரிக்காய்கள் அரைக்கிலோ அளவு கூட எடையுள்ளவை; வழுதுணங்காய்களும் (வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் - எனப் புதுமைப் பித்தன் குறிப்பிடுவது தொடர்பான பதிவினைத் தனியாக வைத்துக்கொள்ளலாம்.) வகைவகையாய்க் கிடைக்கும். புளிக்கறி, தீயில், சாம்பார் எனக்குழம்புவகைகளோடும், பொரியல், கூட்டு, பச்சடி, அவியல் என அனுதினமும் எப்படியோ கத்தரிக்காயோடு பலத்த ஒரு உறவு ஏற்பட்டுவிட்டது.
தெற்குப்பள்ளத்தெரு முகாம்பரியம்மன் கோயிலுக்குள் இறைவைக் கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சும் இரண்டு மூன்று கத்திரிப் பாத்திகள் இருந்தன. பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் பங்குனி சித்திரை விடுமுறையில் நண்பர்களோடு சேர்ந்து, பின்பக்கச் சுவர் ஏறிக்குதித்துப் போய்ப் பறித்து வந்த திருட்டுக் கத்திரிக்காய்களை காக்கைப் பிள்ளையார் கோயில் மடப்பள்ளிக்குள், சுள்ளிகளைப் போட்டுக் கொளுத்தி, சுட்டுப் பிசைந்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த இரண்டு மூன்று மிளகாய் வற்றல்களைப் பச்சையாக க் கிள்ளிப் போட்டு, பச்சைப் புளி கரைத்து ஊற்றி உப்பிட்டு, அதற்கு கத்தரிக்காய்க் கோசு எனப்பெயரிட்டு, நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட அனுபவம் மறக்கக்கூடியதா என்ன?
எனது அம்மா பிறந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம். அங்கே தாத்தா, பாட்டி, மாமா, சித்தி, அத்தை, பெரியப்பா, தாய்மாமா, மாமன் மகன் அத்தான், மைத்துனன், மாமன் மகள்கள் மதினி, கொழுந்தி, சித்தப்பா பெரியப்பா மகன் மகள்கள் எனப் பலப்பல உறவுகளாக பாளையங்கோட்டை, நந்தன் தட்டை, அம்பாசமுத்திரம், ஆழ்வார் குறிச்சி, கஸ்தூரிரங்கபுரம் கிராமங்களில் குடும்ப வேர்கள் இருந்தன.
1960 முதல் 72 வரையில் இரண்டு மாதத்துக்கொரு முறையாவது நெல்லை மாவட்டம் சென்று வருவதும் கோடைவிடுமுறையை தாமிரபரணிக்கரையில் கழிப்பதுமே வழக்கமாக இருந்தது. அங்கே தான் சித்தியின் கைவண்ணத்தில் வெள்ளைக் கத்தரிக்காயின் ருசி என்னோடு ஒட்டிக்கொண்டது. அந்த வெள்ளைக்கத்தரி, திசையன் விளை ஒட்டியுள்ள பகுதிகளில் இப்போதும் சாகுபடியாவதும் குரும்பூர் வெள்ளைக்கத்தரி புகழ் வாய்ந்ததென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். முட்டை வடிவத்தில் குண்டாக இருக்கும் அது கத்தரிகளில் தனிச் சிறப்புடையதென்பது எனது உறுதியான எண்ணம்.
1960 முதல் 72 வரையில் இரண்டு மாதத்துக்கொரு முறையாவது நெல்லை மாவட்டம் சென்று வருவதும் கோடைவிடுமுறையை தாமிரபரணிக்கரையில் கழிப்பதுமே வழக்கமாக இருந்தது. அங்கே தான் சித்தியின் கைவண்ணத்தில் வெள்ளைக் கத்தரிக்காயின் ருசி என்னோடு ஒட்டிக்கொண்டது. அந்த வெள்ளைக்கத்தரி, திசையன் விளை ஒட்டியுள்ள பகுதிகளில் இப்போதும் சாகுபடியாவதும் குரும்பூர் வெள்ளைக்கத்தரி புகழ் வாய்ந்ததென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். முட்டை வடிவத்தில் குண்டாக இருக்கும் அது கத்தரிகளில் தனிச் சிறப்புடையதென்பது எனது உறுதியான எண்ணம்.
திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது ஆழ்வார்குறிச்சிக்காரர்கள் கைபாகத்தில் இட்லிக்கு கத்திரிக்காய்க் கிச்சடி என்று நெட்டூர் கத்திரிக்காய் கொண்டு சாம்பாருமில்லாத சட்னியுமில்லாத தொடுவகை ஒன்று செய்வார்கள் பாருங்கள், அந்தக் கைப் பக்குவத்தில் 4 இட்லிக்கு ஒரு வாளி கிச்சடி கூட ஊற்றிச் சாப்பிடலாம். அதற்கு நான் அடிமை என்று கூடக் குறிப்பிட்டுவிடலாம்.
72க்குப் பின்னர் வேலைவாய்ப்பில் காரியாபட்டி, கம்பம், மதுரை என அலைந்து ஒருவழியாக 1980 ல் வேலூர் வந்து வேலூர் மாவட்டத்தின் நிரந்தரக்குடியாகிவிட்டேன். 72க்குப் பின் இன்று வரையிலான கால கட்டத்தில் வெள்ளைக் கத்திரி என் வாழ்க்கையில் காணாமல் போய்விட்டது. பதிலாக வேலூரின் பிரியாணிக்கான தொடுகறி, பொங்கலுக்கான கொத்சு மற்றும் எண்ணெய்க் கத்திரிக்காய்க்குப் புகழ் பெற்ற இலவம்பாடி முள் கத்திரிக்காய், பிசிபேளாபாத், வங்கிபாத்துக்குப் பெயர்போன காஞ்சிபுரம் குண்டுப் பச்சை, பெங்களூர் நீளப்பச்சை, பாளையம் நாட்டுக் கத்தரி எனப்பலப்பல வகைகள் என் உறவிலிருந்தாலும் அந்த வெள்ளைக் கத்தரிக்காய் காணாமற்போனது பற்றி இன்று விசனம் ஏற்படவே, இன்று அதன் ருசியில் இணையம் முழுக்கச் சுற்றி வந்ததில் கிடைத்த தகவல்கள் ஆர்வமூட்டுபவையாக இருந்தன.
இலங்கையில் மட்டுவில் கிராமத்தில் முட்டுக்கத்திரி என அழைக்கப்படும் இந்த வெள்ளைக்கத்திரிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். அங்கே பன்றித்தலைச்சியம்மன் கோவில் திருவிழாவின் போது சிவப்புப் பச்சரிசிப் பொங்கலுக்கு இந்தக் கத்திரிக்காயும் பச்சைமிளகாய் சேர்த்துச் செய்யும் தொடுகறி மிகவும் விசேஷம் என்கிறார்கள்.
உக்ரைன், ரஷ்யாவிலும் வெள்ளைக் கத்திரிகள் விளைகின்றன.
நாட்டில் பிரச்னைகளா இல்லை; இந்தக் கத்திரிக்காய்க்காக இந்தப் பிரயத்தனம் தேவையா என்றொரு கேள்வி எழுகிறதுதான். இருந்தாலும் பிரச்னையற்றதாக சுவையானதாக உள்ளதல்லவா?
டிசம்பர் 16, 2017 இல் முகநூலில் பதிவிடப்பட்டது. 122 விருப்பம், பின்னூட்டம் 28 , பகிர்வு 21.
என் ஊர் தூத்துக்குடி. எங்கள் வீட்டில் குறைந்தது வாரம் 2 அல்லது 3 நாட்கள் கத்திரிக்காய் கிச்சடிதான். அனைவரும் விரும்பி உண்போம். ஒரு பெரிய பாத்திரம் நிறைய வேண்டும். எங்கள் பூர்வீக ஊரான ஓட்டபிடாரத்தில் இந்த வெள்ளை கத்திரிக்காய் பயிரிடுவார்கள். ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்த குடும்ப நண்பருக்கு கத்திரிக்காய் கிச்சடி பரிமாரினோம். அவர் இதை எப்படியய்யா சாப்பிடுகிறீர்கள் என்று சொல்லிவிட்டார் . எங்களுக்கு சங்கடமாகி விட்டது. பின் எப்போது பார்த்தாலும் அதைச் சொல்லி கிண்டலடிப்பார். சமீபத்தில் எங்கள் குடும்ப கல்யானத்தில் கிச்சடியை பரிமாறும்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளையோர்கள் எல்லோரும் அதை கண்ட உடணே வேண்டாம் என்று பதறினார்கள். இது வரை கிச்சடியை சாப்பிட்டதே இல்லை என்றனர் எவ்வளவு கட்டாயபடுத்தியும் ஒரு துளி கூட வாங்கவில்லை. எங்களைப் போல இன்னோரு கிச்சடி விரும்பி இருப்பதை தெரிந்துகொண்டதில் சந்தோஷம்
ReplyDeleteகேரளாவில் நீள பச்சை வகையை வழுதுனங்காய் என்றும் குண்டு ஊதா வகையை கத்திரிக்காய் என்றும் அழைக்கிறார்கள்
ReplyDelete