இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள், ஆப்பிரிக்க அதிபர் அவர்களே! Happy Birthday Africa President by
NoViolet Bulawayo
ஆங்கிலம் : நோவயலெட்
புலவாயோ (ஜிம்பாப்வே)
தமிழில் ச.ஆறுமுகம்.
ஜிம்பாப்வேயில் பிறந்து வளர்ந்த புலவாயோ அமெரிக்காவின் கார்நெல்
பல்கலைக்கழகத்தில் நுண்கலைகள் பிரிவில் ஆக்கபூர்வப் படைப்பியலில் 2010 இல் முதுகலைப்
பட்டம் (Master of Fine Arts in Creative Writing) பெற்றவர். இவரது Hitting
Budapest சிறுகதை ஆப்பிரிக்க ஆங்கிலத்தில் சிறந்த சிறுகதைகளுக்கான கெய்ன் விருதினை
வென்றது. அதன் தொடர்ச்சியாக 2013 இல் அவர் வெளியிட்ட We Need New Names நாவல் மான்
புக்கர் விருதுக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றது. தற்போது ஸ்டான்போர்டு பல்கலைக்
கழகத்தில் பணிபுரிகிறார்.
இவரது முதல் கதை Hitting Budapest தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அதே கதைமாந்தர்களே இடம்பெறும் Happy Birthday Africa President சிறுகதை தற்போது தமிழில்
தரப்படுகிறது.
அதிபர் எல்லோருக்கும் மேலாகக் கைமுஷ்டியை உயர்த்தி நிற்பதைக் காண
நாங்கள் 10 ஆம் எண்ணுக்குச் சென்றோம். கடந்த ஞாயிறன்று விபத்தில் தீப்பிடித்த
மின்நிலையத்தைச் சுற்றியுள்ள பெரிய சுவரில், நீலநிற ஜியோஜா தேவாலயத்தின் உயரமான
வாயிற்கதவுகளில், நாங்கள் பம்பரம் விளையாடும் இடத்திலுள்ள பெரிய தூணில் , கிளிஃப்போர்டு
முடிவெட்டும் கூடத்தில், வயதான பெண்கள் எல்லா வகையான பொருட்களையும் விற்கும்
ஒட்டுக் கடைகளின் சுற்றுச்சுவரில், நகரத்துக்குச் செல்லும் பயண உந்துகளுக்காகக்
காத்திருக்கும் நிழற்கூடத்தின் உட்புறமும் வெளிப்புறமும், முக்கியச் சாலையோர
மரங்களில் – என எல்லா இடங்களிலும் சுவரொட்டிகள் தெரிந்தன. நாங்கள் மின்நிலையச்
சுவர் அருகில் நெருக்கமாக நின்று தலைகளைத் திருப்பித் திருப்பி எல்லா
சுவரொட்டிகளையும், அவையனைத்தும் ஒன்றாகவே இருந்தாலும், ஒவ்வொன்றாக, ஒன்றுவிடாமல்
பார்த்தோம்.
கடவுளறிவார் சொல்கிறான், அவரைக்கொண்டு போய் அவ்வளவு உயரத்தில் வைத்தது
யார்? எதற்காக அங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள்?
அதெல்லாம் சரிதான், அது யாரோட முகம்னு சொல்,
பார்ப்போம், உங்க அப்பாவுடையதா? என்கிறான், வேசிமகன். அவன், அதிபரை உற்றுப்
பார்ப்பதற்காக, கடவுளறிவாரை வழியிலிருந்தும் நெட்டித் தள்ளுகிறான். அது அதிகாலை
தானென்றாலும், நாங்கள் என்னமோ கடன்காரர்கள் போல வெயில் எங்கள் தலைக்கு மேல்
வந்துநின்று வறுத்தெடுக்கிறது. தூரத்தில் வானொலிகள் காலைச் செய்திகளைக் கரகரத்த
குரலில் உரத்துச் சொன்னாலும் அந்தச் சத்தம்
நிற்பதற்கு நெடுநேரம் ஆகவில்லை. முன்பென்றால் மக்கள் மின்வெட்டு பற்றிப்
பைத்தியக்காரர்கள் போல் பல குரல்களில் பேசுவதைக் கேட்பீர்கள், ஆனால் இனிமேல்
அதற்கு இடமேயில்லை.
முக்கியச் சாலையில், கார்கள் குடித்திருப்பதைப் போல, குழிப்பள்ளங்களில்
தட்டுத் தடுமாறிச் செல்கின்றன. அவை எங்களை நெருங்கும்போது அவற்றின்
சாளரங்களிலிருந்து தலைகள் முளைத்து எங்களைப் பார்க்கின்றன. நாங்கள்
சுவரொட்டிகளிலிருந்தும் திரும்பி நின்று வெய்யிலை எங்கள் முகத்தில் தாங்கிக்
கண்களை விரித்து, இடுப்பில் கைகளை வைத்து, வீராதி வீரர்களாக, அந்தச் சுவரொட்டிகளை
நாங்களே தயாரித்து ஒட்டியது போலப் பார்க்கிறோம். அவ்வப்போது சிலர் ஓவெனக் கத்துகிறார்கள்,
விசிலடிக்கிறார்கள், சிலர் எங்களை அங்கீகரிப்பதாகக் கை முஷ்டிகளை உயர்த்திக்
காட்டுகிறார்கள்; நாங்களும் பதிலுக்கு கை முஷ்டிகளை உயர்த்திக்காட்டுகிறோம். இந்த
இடத்தில் அதிபரின் கீழ் இப்படி நிற்பது எங்களுக்கு ஏதோ புதுமையாகவும் எங்கள்
வயிற்றுப் பள்ளங்களுக்குள் ஏதோ நிறைவது போலவுமிருக்கிறது.
அந்த நம்பருக்கெல்லாம் அங்கே அவசியமேயில்லை, அது மொத்தத்தில்
எல்லாவற்றையும் கெடுக்கத்தான் செய்கிறது என்கிறான் ஸ்போ, சுவரொட்டிகளைப்
பார்த்துத் தலையாட்டி, உதடுகளைப் பிதுக்கிக்கொண்டே.
அது தொண்ணூறு, உனக்குத் தெரியவில்லையா? என்கிறான் கடவுளறிவார்.
அது நமக்குத் தெரியத்தான் செய்கிறது, எந்த ஒரு அடிமுட்டாளும்கூட
அதைச் சொல்வானென்கிறேன், நான்.
சரி, அது ஒரு நம்பர், அவ்வளவுதான். அது எதற்கு அங்கே தேவையில்லாமல்,
அதுமாதிரியே, அதற்கும் கொஞ்சம் மேலே பார், அந்த மஞ்சள் படம் 25 தானே, அதுக்கு
மட்டும் ஏதோ அர்த்தமிருக்குமென்று யாராவது சொல்வார்களாயென்ன? என்கிறான்,
கடவுளறிவார்.
ஒருவேளை அது, அவருக்குப் பிடித்த
நம்பராயிருக்கலாம், எனக்குப் பன்னிரண்டு போல –
நீங்கள் எல்லோருமே மரமண்டைகள், முதலில் பேச்சை நிறுத்துங்கள்
என்கிறாள், சிப்போ. நானும் சிரித்து, கைகளால் கண்களுக்குத் தடுப்பு ஏற்படுத்தி,
சேசுவே என்ன வெயில் என்கிறேன்.
அது அவருடைய வயது. நாளை அவருக்குப் பிறந்த நாளென்று உனக்குத்
தெரியாதா? பீல்ட்ஸ் ஸ்டேடியத்தில் ஒரு பெரிய விருந்து இருக்குன்னு உனக்குத் தெரியாதா?
அதுக்காகத்தான் இந்தச் சுவரொட்டிகளையெல்லாம் ஒட்டியிருக்காங்க என்கிறான் ஸ்டினா.
அவன் சுவர் மேல் வசதியாகச் சாய்ந்துகொண்டு, அந்த வெயிலிலும் குளிர்வது போல
உள்ளங்கைகளைத் தேய்த்துக்கொள்கிறான். நாங்கள் எங்கள் வாழ்க்கையில் இதுவரையில்
அதிபரைப் பார்த்ததேயில்லாத மாதிரி, அவரை இப்போது புதிதாகப் பார்க்கிறோம்.
ஸ்டினாவுக்கு எல்லாமே தெரியும், ஆனா, இந்த ஒரு
விஷயத்தில மட்டும் அவன் என்ன பேசுகிறானென்பது அவனுக்குத் தெரியவில்லையென்றுதான்
நான் நினைக்கிறேன். நான் சொல்றது, எங்க கூலுத்தாத்தா இதுபோலப் பெரிய மனுசத்
தோரணையெல்லாமில்லை; அவர் இன்னும் தொண்ணூறுக்குப் பக்கத்தில் கூட வரவில்லை. அவர்
ஒரு வயதான மனிதர் போலத் தோன்றுகிறார் – உடம்பு முழுக்கக் கோடு கோடாகச்
சுருக்கங்கள், வளைந்த முதுகு, வெள்ளை முடி. அவரது இடதுகால் மூட்டில் ஏதோ வலி,
அம்மாவும் வேல, வேலன்னு வேலைசெய்யத் தான் செய்கிறாள். ஆனா தாத்தாவோட கால்ல செய்ய
வேண்டிய ஆபரேசனுக்கு ஆஸ்பத்திரில கேக்குற பணத்தக் கொடுக்க முடியல. அதுவும் கூடச்
சேர்ந்து கூலுத்தாத்தா ரொம்பவே கிழடாகத் தெரிகிறார். அதுவுமில்லாமல் அவர் எல்லா
இடத்திலுமே தூங்கிவழிவதோடு, விஷயங்களை மறந்துவிட்டு, அர்த்தமற்ற பேச்சாகவே
பேசுகிறார்; இன்றைக்குக் காலையில் பாருங்களேன், வீட்டில் பால் இல்லாததால்
கடுங்காப்பி கொண்டுபோய்க் கொடுத்தேன்; அவர் என்னை உண்மையாகவே கடுங்கோபத்தில்
முறைத்து, இப்படிப் பிச்சைக்காரன் போலச் சாப்பிடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது,
இதற்காகவா போராடி அவ்வளவு செல்வத்தையும் பெற்றோமென்கிறார். நான் சிரிப்பை
அடக்குவதற்காக, அடுத்த வீட்டு வாசலில் நான்க்கோ துணிகளுக்கு இஸ்திரி போடுவதைப்
பார்க்கவே, தாத்தா சுத்த பைத்தியமென நான் நினைத்ததை அவர் கவனிக்கவில்லை.
அதிபர் எவ்வளவு அழகு, அவர் எனக்குத் தாத்தாவாக இருந்திருக்கக்கூடாதா?
அவர் முகத்தில் பெரிய மடிப்புகளே இல்லை. அவரது கறுப்பு மேனி புத்தம் புதிதாக நல்ல
வழவழப்பாக இருக்கிறது. மனிதத் தோல் மட்டும் விலைக்குக் கிடைப்பதாக இருந்தால்
அவருடைய மேனியின் தோல் தான் உலகத்திலேயே யாராலும் வாங்க முடியாத அளவுக்கு விலை
கூடியதாக இருக்கும். அழகாக வெட்டப்பட்டுள்ள அவருடைய தலைமுடியைத் தான் பாருங்களேன்,
மெல்லிய ஒரு சிறு நரை; அதன் பக்கத்திலேயே
முன்புறமாக, அவரது மூக்கிலிருந்து மேலுதட்டுக்கு இறங்கும் சிறுபட்டைக் கோடு போலவே உண்மையாகப்
பளபளக்கும் கறுப்பு முடி. அப்புறம், இருக்கவே இருக்கிறது, பரிசுத்தப் பளபளப்புடன்
கண்ணாடி, அவரது முகத்துக்கு, அது அப்படி ஒரு பொருத்தம். ஸ்டினா என்ன
வேண்டுமானாலும் சொல்லட்டும், எனக்குக் கவலையில்லை, தொண்ணூறு வயதில் இப்படித்
தெரிகிற ஒரு தாத்தாவை நான் பார்த்ததேயில்லை.
ஏய், இங்கப் போலீஸ் இருக்காங்க என்று ரோட்டினைச் சுட்டிக்காட்டிய
ஸ்போ நேற்று நடந்ததுக்குப் பிறகு, இனிமேல் திரும்பி வரமாட்டாங்கனு நினைச்சேன்
என்கிறான்.
அவங்க ஏன் வரமாட்டாங்க? இந்த ரோட்லதான் திருடங்களை எல்லாம் பெத்துப்
போட்டிருக்காங்கனு சொல்ற முட்டாள்கள் இங்க தான இருக்கிறாங்க, அதைச் சொல்றன்
என்கிறான் வேசிமகன். அவன் குரலில் அவ்வளவு வெறுப்பு, ஏதோ விஷத்தை
மென்றுவிட்டதுபோல் வார்த்தைகளைத் துப்பினான், அவன்.
சாலை இறக்கத்தில் மிக அருகிலேயே, நகருக்குச் செல்லும் `கோம்பி`
வேன்களுக்காக பயணிகள் காத்திருக்கும் சாலையோர நிழற்கூடத்தில் போக்குவரத்துக்
காவலர்கள் ஒன்றாகச் சேர்ந்து நிற்கின்றனர். அவர்கள் அந்தக் கிறுக்குத்தனமான
சுண்ணாம்பு நிறக் கைத்தொங்கல்களை அணிவதோடு, ஏதோ கதை எழுத எப்போதுமே
தயாராயிருப்பதுபோல பலகை, நோட்டுப் புத்தகம்,
பேனாக்களைச் சுமந்து திரிகின்றனர். அங்கே ஐந்து பேர் நிற்கின்றனர் – இருவர்
பெண்கள், சாம்பல் நிறச்சட்டைக்கும் இரண்டு கால்பக்கமும் இந்தச் சரக்குப் பைகள்
வைத்த கப்பற்படை காற்சட்டைக்கும் பொருத்தமாகத் தொப்பி அணிபவர்கள். ஆண்கள் உலர்ந்த
இரத்த நிறத்தில் அரணக்காலணிகளும் சாம்பல்நிற மேற்சட்டையும், சாலைக்
குழிப்பள்ளங்களுக்கிணையான காக்கி நிறத்தில் காற்சட்டையும் அணிகின்றனர். நகரத்திலிருந்து
மூன்று கார்களும், நகரத்தை நோக்கி இரண்டு கார்களும் வரவே அவர்கள் தனித்தனியாகப்
பிரிந்து செல்வதை நாங்கள் கவனிக்கிறோம்.
குட்டையான பெண் காவலர் ஏற்கெனவே மாநகரப் பேரவைச் சீருடையிலிருந்தவர்களை
ஏற்றிவந்த லாரி ஒன்றை நிறுத்தக் கையாட்டிக் கொண்டிருந்தார்.
நகுலுலேக்கோ அண்ணன், சாலை மேட்டின் மேலாக வருவதை நாங்கள்
பார்க்கிறோம். அவன் கழற்றவே கழற்றாத மலிவான மஞ்சள் நிற சைனாச் சட்டையைக்கொண்டும்
அவனுடைய நடை மற்றும் அவன் முழங்கையில் எப்போதுமே தொங்கும் பாட்டரி ரேடியோலிருந்தும்,
அவன்தான் என்பது எங்களுக்குத் தெரியும். பல நாட்களாகவே வேலைசெய்யாத போக்குவரத்து
விளக்குக் கம்பத்தைக் கடக்கும் அவன், எங்கள் பக்கமாக வந்து, டவுன்ஸென்ட் சீருடைச் சிறுமிகள் அருகில்
நிற்பதைப் பார்க்கிறோம். அவன் அவர்களிடம் உடலால் பேசத் தொடங்குகிறான். சிறுமிகள்
அவர்களின் புத்தகப் பைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, வெறுமனே அவனைக்
கவனிக்கின்றனர். அங்கு நின்ற, வளர்ந்த ஒரு சிறுமியை நோக்கி நகூஸ்து அண்ணன் கையை நீட்டியபோது, அவன் ஒரு
நாற்றம்பிடித்தவன் போல, அவள் ஒரு அடி பின்வாங்கினாள். அவன் அடுத்த சிறுமியை
நோக்கிக் கையை நீட்டியபோது, அவளும் முதல் சிறுமி போலவே செய்ய, அது அப்படியே தொடர,
நாங்கள் சிரிக்கத் தொடங்கினோம்; ஆனால், அவன் கண்ணில்படாத மாதிரி; அவன் கண்ணில்
பட்டால் அவன் எங்களை என்ன செய்வானென்று எங்களுக்குத் தெரியும்.
கடைசியாக அவன், அந்தப் பெண்பிள்ளைகளிடம் கெட்டவார்த்தை சொல்வதாக
வெறுங்கைகளை வீசிக் காட்டியதோடு, திரும்பி எங்களைப் பார்க்க, அந்தச் சாலை,
குழிப்பள்ளங்கள், விளிம்பில் பெயர்ந்த கப்பித்தார் எல்லாமே அவன் ஒருவனுக்கே
சொந்தம் போல ஒரு நடையில் வருவதைப் பார்க்கிறோம். கூப்பிடு தொலைவுக்கு வந்ததும்
இப்போது அவன் கூறுவதைக் கவனிக்காத அந்தப் பெண்பிள்ளைகள் பக்கமாகத் திரும்பி நின்று
கத்துகிறான், என்னமோ உங்க சாமானெல்லாம் வைரத்தில செஞ்சமாதிரி, உங்கள ஸ்கூலுக்கு
யார் கூட்டிப்போவான்னு பாக்கலாம், மரமண்டைகளா!
நகூஸ்து அண்ணன் அதிபரைப் பார்த்ததும், அவனுடைய ரேடியோவை வேசிமகன்
கைகளில் திணித்துவிட்டு, சுவரை நோக்கி நடக்கிறான். `என் தந்தையே` என அவன் முணுமுணுப்பது
எங்கள் காதுகளில் விழுகிறது. பின்னர், அவன் மிகுந்த மரியாதையுடன் தலை தாழ்த்தி ,
வணங்கிநிற்கிறான்.
அவன் பிரார்த்தனை செய்கிறானா? நாமும் எல்லோருமாகத் தலையைத்
தாழ்த்தவேண்டுமா? என்கிறான், ஸ்போ.
அவன் அதிபரைச் சொல்கிறான், என்கிறான், ஸ்டினா.
என்ன, நகூஸ்து அண்ணனின் உண்மையான அப்பா, அதிபரா? எனக் கடவுளறிவார்
கேட்க இல்லையென ஸ்டினா தலையசைக்கிறான். நான் ஒரே இடத்திலேயே நின்றாலும் காலை
மாற்றிக்கொண்டேயிருக்கவேண்டியிருக்கிறது, பூமி அவ்வளவு சூடாக இருக்கிறது. அது
தீயாகச் சுடுகிறது.
இவர் மனிதர், என நகூஸ்து, ஆட்காட்டி விரலை வளைத்து சுவரொட்டியில்
தட்டித் தலையாட்டிக்கொண்டே சொல்கிறான். இவர், இந்த மனிதர் காலங் காலத்துக்கும்
வாழ்க, மேன்மைதங்கிய அவர், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஆப்பிரிக்க அதிபர்
அவர்களே, என்று சொல்கிறான். இப்போது அவன் கைமுஷ்டி, அதிபரின் கைமுஷ்டிக்கு இணையாக
உயர்ந்து நிற்கிறது.
அவன் அதன்பிறகு எங்களிடம் பேசவில்லை, அந்த வழியில் செல்கின்ற
கார்களிடம், கார்களில் செல்வோரிடம், கார்களை வீட்டில் விட்டுவிட்டு வந்தவர்களிடம்,
கார்களை நிறுத்துகின்ற காவலர்களிடம், அந்தக் கார்களை ஓட்டிவந்த ஓட்டுநர்களிடம் அவர்கள்
வாங்கி, பைகளுக்குள் திணிக்கும் பணத்திடம், அவனைப் புறந்தள்ளிய அந்த டவுன்ஸென்ட்
சிறுமிகளிடம், அந்தச் சிறுமிகளுக்காக நிற்கும் கார்களிடம், டவுன்ஸென்ட் சிறுமிகள்
அவர்களின் பள்ளியில் பார்க்கப்போகிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், அந்தச்
சிறுமிகள் மற்றும் ஒவ்வொருவரையும் அவரவர் போய்ச் சேரவேண்டிய இடத்திற்குக்
கொண்டுசேர்க்கும் அந்தச் சாலையிடம், அந்தச் சாலையின் குழிப்பள்ளங்களிடம், அந்தச்
சாலையை அமைத்த மனிதர்களிடம், மரங்களிடம், பழுப்புநிறப் புல் மற்றும் எங்களைச்
சுற்றிச் சிதறிக்கிடந்த குப்பைகளிடம், எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டிருந்த
வெயிலிடம் அவன் பேசுகிறான்.
இந்த மனிதர், உங்களுக்கு, நமக்கு, இந்த நாட்டுக்கு என்ன
செய்திருக்கிறாரென்று உங்களுக்கு ஏதாவது கொஞ்சமாவது சிந்தனை இருக்கிறதா? என
நகூஸ்து அண்ணன், அதிபரைச் சுட்டிக்காட்டிக் கேட்கிறான். நான் அவனுடைய வெளிறிப்போய்த்
தொளதொளத்த ஜீன்ஸையும் அக்குளில் கறுப்புக் கறைகளுடன் நூல்நூலாகத் தெரியும் சட்டையையும், தூசிபடிந்து
அழுக்கான, மலிவான ஜிங்-ஜாங் ரப்பர் செருப்புகளையும் பார்ப்பதுடன், அவனுடைய
திடமாகப் பெருமிதமும் உறுதியும் தெறிக்கும் குரலோடு இது எப்படி ஒத்துப் போகுமென்று
நினைத்துப்பார்த்து நிச்சயமாக ஒத்துப் போகவில்லையென நினைக்கிறேன். நீங்கள் கண்களை
மூடிக்கொண்டால், அதிபரைப் போலவே, அழகான நீலநிறக் கால்சராயும் வெள்ளை நிற
முழுக்கைச் சட்டையும் புள்ளிகள் கொண்ட கழுத்துப்பட்டைத் தொங்கலும் மார்புப் பையில்
பூக்களுமான ஆடையணிந்த ஒருவரிடமிருந்து அந்தக் குரல் வருவதாக
நினைத்துக்கொள்வீர்கள்.
அவரும் நமது பாவங்களுக்காக மரித்தாரா, சேசுவைப் போல? என்கிறான்,
கடவுளறிவார். ஸ்டினாவும் வேசிமகனும் ஹை-ஃபைவ் எனச் சொல்லி ஒருவர் கையை மற்றவர்
தட்டிச் சிரிக்கின்றனர். நகூஸ்து அண்ணன் கடவுளறிவாரை உண்மையிலேயே மூர்க்கமாகப்
பின்னர், ஸ்டினாவையும் வேசிமகனையும் பார்க்கிறான்.
இது சிரிக்கிற விஷயமில்லை, பசங்களா, நீங்கள் கொஞ்சம் வளர்ந்தால்
உங்களுக்குத் தெரியும். இந்த இடத்தை, இந்த இடத்தின் சுற்றுப்புற அமைப்பினை, இந்த நாட்டைப்
பாருங்களேன்? இங்குள்ள எல்லாமே நம்முடையது என்கிறான், நகூஸ்து அண்ணன். இப்போது
நாங்கள் நகூஸ்து அண்ணனின் பேச்சுக்குக் காதுகொடுக்கவில்லை; மெயின் ரோட்டில்
இறங்கிவரும் அழகிய புதுமையான காரினைப் பார்க்கிறோம். அது மேலே சிவப்பாகவும்
அடிப்பாகம் கறுப்பாகவும், எங்கெங்கும் மடிப்புகள் மற்றும் நிமிர்வுகளுமாகத் தெரிகிறது.
அது காரைவிடவும் மேலான ஒன்றாகத் தெரிகிறது; இது இந்தப் பாழாய்ப்போன குண்டுகுழி ரோட்டில்
என்ன செய்யுமென நான் நினைத்து, நினைத்து வியக்கிறேன். அது காவலர்கள் பக்கத்தில்
வரும்போது, அவர்கள் கைகளைக் கட்டிக்கொண்டு அது கடந்து செல்வதைக் கவனிக்கின்றனர்.
நகூஸ்து அண்ணன் விசிலடித்து, தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கிறார்.
இப்ப, பார்த்தீங்களா, பசங்களா? அது இங்கிருப்பதிலேயே விலை உயர்ந்த
கார்; இந்த நாட்டிலேயே இதுபோல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அதுவும் இங்கே
இருக்கிறது. நம்ம ரோட்டில் ஓடுகிறது!
அந்தக் காரே அவனுடையது போல, நகூஸ்து அண்ணன், பெருமிதம் காட்ட, அவனது முகம்
ஒளிர்கிறது.
மிகவும் விலை உயர்ந்த இதை எப்படி இந்த ஆள் வாங்கியிருப்பார்?
என்கிறான், கடவுளறிவார்.
அது எப்படின்னா, அவன் ஒரு திருடன், என்கிறான் ஸ்டினா; அப்படியே,
அங்கே கிடந்த செங்கல் ஒன்றை, அது ஏதோ நெகிழிப்பொருள் போலக் கடுமையாக எட்டி
உதைக்கிறான். அவன் கொஞ்சங்கூட வலியைக் காட்டவில்லை. நகூஸ்து அண்ணனின்
முகத்திலிருந்த ஒளி மறைகிறது. அவனது அம்மாவை ஸ்டினா அவமானப்படுத்திவிட்டது போல
அவன் மூர்க்கம் கொள்வது நன்றாகவே தெரிகிறது.
டேய், டேய், பையா, அளந்து பேசுடா. அது திருவாளர்.
எம்மோட கார். அவர் திருடனெல்லாம் இல்லை. இப்படித்தான் நிறையப் பேரு எதுவுமே
தெரியாமப் பேசி, மாட்டிக்கிறாங்க என்கிறான், நகூஸ்து அண்ணன். அவன் குரலில் தெரிகிற
எரிச்சலை உடனேயே சொல்லிவிடலாம். ஸ்டினா தோள்களைக் குலுக்கி, வெயிலை வெறிக்கிறான்.
திருவாளர் எம். என்கிறது யார்? என்கிறான், ஸ்போ.
சுரங்க அமைச்சர்டா, நண்பா. இந்த வங்கி, அந்த வணிக அலுவலகம்,
நிறுவனங்கள் எல்லாம் அவருக்குச் சொந்தம்டா. அவங்க எல்லாருமே, ஒன்னு விடாம
எல்லாருமே திருடனுங்கதாண்டா அவங்க எவ்வளவு சம்பளம் எடுத்துக்கிடறாங்கனு தெரியுமா?
நீ கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டாய்? என்கிற ஸ்டினாவின் முகம் அருவருப்பைக் காட்டுகிறது.
அப்போதுதான் சற்றுமுன் நாங்கள் பார்த்த அந்த வித்தியாசமான கார் அவனுடையது போலவும்
அவன் திருட்டுக் கொடுத்ததுபோல், அவன் குரல் உடைகிறது. வேசிமகன் தலையை
உலுப்பிக்கொண்டு அதிபரை நோக்கி நடக்கிறான்.
யோவ், மனுஷா. நானும் வளர்ந்து அரசாங்கத்துலதான் உண்மையிலேயே
சேரப்போறேன்யா, கக்கூசு, என்கிறான், வேசிமகன்.
டேய் பையா, உனக்கு என்னதான்டா பிரச்னை? எதுக்காக இவ்வளவு அவமரியாதை
பண்ற? இப்போது நகூஸ்து அண்ணனின் குரல் இறுகுகிறது. ஸ்போவும் நானும் ஒருவரை ஒருவர்
பார்க்கிறோம்.
யோவ், நிதானமாக் கண்ணத் தொறந்து பாரு, கக்கூஸ், கக்கூசாப் பேசறது
நிறுத்து, என்கிறான், ஸ்டினா. அவனது குரலில் தெரிந்த உயிர்ப்பும் ஒருவகைக்
கோபமும், எனக்குக் கைதட்டவேண்டும் போலிருந்தாலும் நகூஸ்து அண்ணனின் முகம் போகிற
போக்கைப் பார்த்து அப்படிச் செய்யக்கூடாதென முடிவு செய்கிறேன். எல்லோரும் ஸ்டினாவை
மதிப்போடு பார்க்கிறோம்; அவன் இப்படித் திடமாகச் சத்தமாகப் பேசி, அதுவும் முழுதாக
வளர்ந்த ஒரு ஆணிடம் பேசியதை நாங்கள் கேட்டதேயில்லை.
நகூஸ்து அண்ணன், நான் சொல்றது, உன்னையே பார்த்துக்கோன்னுதான். ஒரு
நாடான நாடுன்னா, நீ ஒரு வேலையில இருக்கணும், குடும்பத்தைக் கவனிச்சுப் பார்க்கிற
அளவுக்கு வருமானமுள்ள ஒரு மரியாதையான வேலை இருக்கணும். எலக்ட்ரிசிட்டி கிடைக்கிற
ஓரளவுக்காவது வசதியான வீட்ல இருக்கணும், குறைந்தது உனக்குக் கக்கூசுக்கு வந்தா
போறதுக்கு ப்ளஷ் அவுட் உள்ள ஒரு கக்கூசு இருக்கணும், -
ஸ்டினா அதைச் சொல்லிமுடிக்கும் முன்பாகவே, நகூஸ்து அண்ணன் அவனது
இரண்டு காலையும் தட்டிக் கீழே தள்ளி, ஓங்கி ஓங்கிக் குத்த, அவன் தரையில் நகூஸ்து
அண்ணனுக்கடியில் தத்தளிக்கிறான். நாங்கள் எல்லோரும் ஸ்டினாவை விட்டுவிடுமாறு
நகூஸ்து அண்ணனிடம் கெஞ்சிக் கத்துகிறோம். வேசிமகன் அவனைப் பிடித்து முடியுமட்டும்
இழுக்கிறான். ஆனால், அவனோ ஓங்கி ஓங்கிக் குத்திக்கொண்டேயிருக்கிறான். அவனை
இழுக்கவே முடியவில்லை. ஸ்டினா கத்திக்கத்தித் திட்டுகிறான்; அவன் திட்டத் திட்ட,
நகூஸ்து அண்ணனுக்குப் பைத்தியம் ஏற, ஏற அடி பலமாக விழுந்துகொண்டேயிருக்கிறது. நான்
பின்னால் திரும்பி அதிபரைப் பார்க்கிறேன், ரோட்டில் காவலர்கள் பணம் வசூலிப்பதிலேயே
குறியாக இருக்கிறார்கள். எங்கள் அருகில்
வரும்போது கார்கள் வேகம் குறைத்து ஒலிக்கின்றன; ஆனாலும் நிற்காமல் போய்க்கொண்டேயிருக்கின்றன.
பெருக்குமாறுக் கட்டு ஒன்றைச் சுமந்துகொண்டு எங்கிருந்தோ ஒரு வயதான பாட்டி
வருகிறாள். அவள் ஒரு பெருக்குமாறால் நகூஸ்து அண்ணனை, மொத்து மொத்தென்று வெளுக்கத்
தொடங்கி, அவன் ஸ்டினாவை விட்டு விலகி, திட்டிக்கொண்டும் கைமுஷ்டியைக் கொண்டும்
போய்த் தொலையும் வரை அடிக்கிறாள். அவன் அவனுடைய செத்துப்போன ரேடியோவை மறந்துவிட்டுப்
போவதை யாருமே அவனுக்கு நினைவுபடுத்தவேயில்லை.
அந்த வயதான பாட்டி சென்ற பின், ஸ்டினா தூசி, மண்ணையெல்லாம் தட்டிச்
சுத்தப்படுத்திக்கொண்ட பிறகு, அவன் உடம்பில் சிறு இரத்தத்துளிகள் தெரிந்த
இடங்களிலெல்லாம் மண்ணைத் தெளித்து அப்பி மூடி, எங்களுக்குத் தெரிந்த எல்லா
வசவுகளாலும் நகூஸ்து அண்ணனை பதிலுக்குப் பதிலாகத் திட்டிய பிறகு, அதிபரின் கீழ்
சுவரில் வரிசையாகச் சாய்ந்து உட்கார்ந்து மெயின் ரோட்டை, சும்மா, வேடிக்கை பார்க்கத்
தொடங்குகிறோம். வெயில்தான் எங்களை இப்படிச் சோர்ந்து போகச்செய்திருக்கிறது. யாரோ
ஒருவருடைய வயிறு இரைந்து கூப்பிடவும், நாங்கள் சிரிக்கிறோம்.
ஸ்டினா, அவன் தொடைகளின் மீது கைமுட்டுகளை ஊன்றி, உள்ளங்கைகளால்
முகத்தை மூடி அமர்ந்திருக்கிறான். அப்படியென்றால் அவன் சிந்திக்கிறானென்று
அர்த்தம். நாங்கள் கவனித்துக்கொண்டும் காத்துக்கொண்டும் அமர்ந்திருக்கிறோம்.
அடுத்து என்ன செய்வதென ஸ்டினா முடிவுசெய்வதுதான் நல்லதாயிருக்குமென நாங்கள்
காத்திருக்கிறோம். கடைசியில், வெயிலில் நாங்கள் மக்காச்சோளப் பொரியைப் போல
வெடித்துச் சிதறப்போகிறோமென நான் நினைக்கையில், ஸ்டினா எழுந்து சுவரைப் பார்த்து
நிற்கிறான். பின்பு ஒரு வார்த்தை கூடப் பேசாமல், கையை உயர்த்தி அதிபரைப்
பிடித்துக் கிழிக்கத் தொடங்குகிறான். ஆனால், சுவரொட்டி நல்ல இரும்புத் தகரத்தாலடித்து
ஒட்டியிருப்பதுபோலக் கிழிய மறுக்கிறது. ஸ்டினா பற்றிப் பற்றி இழுக்கிறான். நாங்கள்
எல்லோருமாக எழுகிறோம்.