Friday, 27 July 2018

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த மண்பாண்டங்கள் (அபுனைவு 29)

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகின்ற மண்பாண்டங்கள்.
அடுப்பு முதற்கொண்டு இட்லி குட்டுவம், தோசைக்கல், சமையல் கருவிகள், பாத்திரங்கள் அனைத்துமே மண்பாண்டங்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஒன்றிரண்டாக ஈயம் பூசிய பித்தளை, செம்புப் பாத்திரங்கள், இருப்புச் சட்டி எனத் தொடங்கி, ஈயம், அலுமினியம், எவர்சில்வர், இந்தாலியம், பீங்கான் எனப் பயணித்து மீண்டும் மட்பாண்டங்கள் நோக்கித் திரும்பும் காலமும் வந்திருக்கிறது.
70, 80 களிலேயே தமிழ்நாட்டு மத்தியதர வர்க்கச் சமையலறைகளிலிருந்து மட்பாண்டங்கள் வெளியேற்றப்பட்டுவிட்டன.
இப்போது காலை நடையின்போது புறநகர்ப்பகுதியின் நடைமேடையில் மட்பாண்டங்களைக் கடைவிரித்திருந்ததைப் பார்த்ததும் எங்கள் ஊரின் மண்பாண்டப் பெருமித நினைவுகள் துளிர்த்தன.
தாழக்குடியில் 50க்கும் மேற்பட்ட வேளார் குடும்பங்கள் மட்பாண்டத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். எங்கள் கிராமத்தின் புலியூர்க்குறிச்சி குளத்தின் மண் மட்பாண்டம் செய்வதற்கேற்ற உயர் தரத்திலிருந்தது. மட்பாண்டம் செய்பவர் குடும்பங்கள் அனைத்தும் புத்தனாற்றங்கரையை ஒட்டி ஊரின் கிழக்குப்பகுதியில் மேடான இடத்திலிருந்தது. குடியிருப்பின் பக்கத்திலேயே சூளை அமைத்திருப்பார்கள். எப்போதும் குறைந்தது மூன்று சூளைகளாவது புகைந்து கொண்டிருக்கும். சூளை மேட்டை சுள்ளைமேடு எனச் சொல்வது பேச்சுவழக்கு. சுள்ளை மேட்டில் ஒரு சுடலைமாடன் கோவிலும் உண்டு.
அந்தத்தெருவுக்குள் சென்றால் ஆண்கள் சக்கரத்தில் பானைகள் செய்வதும் பெண்கள் ஈரப்பானைகளைத் தட்டிக் காயவைப்பதுமாயிருப்பார்கள் பானைகளைத் தட்டி வனையும் ஒலி டப் டப் எனக் கேட்டுக்கொண்டேயிருக்கும். வீடுகளின் முன்புறம் காவிக்கட்டி கரைத்து வைத்திருக்கும் பானையும், குழைப்பதற்கு வேண்டிய மண்ணுமாக இருக்கும். எந்த வீட்டுக்குச் சென்று பார்த்தாலும் வீடுகள், அறைகள், வெளிகள் அனைத்தும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
என்னுடன் படித்த ஐயப்ப வேளாரின் வீட்டுக்கும் பிற்காலத்தில் நண்பனும் தோழனுமான வன்னியப் பெருமாளின் வீட்டுக்கும் செல்வதுண்டு.
வன்னியப் பெருமாள் பி.எஸ்சி. முடித்துவிட்டு பகல் முழுதும் மண்பாண்டம் செய்யும் வேலையிலிருப்பான். இரவானதும் எங்களோடு அரசியல், நாட்டு நடப்பு விவாதிப்பதற்காக வந்துவிடுவான். பிற்காலத்தில் இரயில்வேயில் உதவி நிலைய அதிகாரியாகப் பொறுப்பேற்று கரீம் நகர் சென்றார். இப்போது ஓய்வுபெற்றிருப்பார்.
மட்பாண்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கமும் இருந்தது. எங்கள் ஊரில் தயாரான மட்பாண்டங்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி திருவனந்தபுரம் கொண்டுபோய் விற்று வந்தனர். அவ்வளவுக்கு கடுமையாகவும் ஓய்வின்றி உழைத்தும் அந்தத் தொழில் செய்து செல்வநிலையில் யாரும் உயர்ந்ததாகத் தெரியவில்லை.
நடை முடிந்து திரும்பிவரும்போது மட்பாண்டம் விற்பவரிடம் பேச்சுக்கொடுத்தேன். அருகிலேயே வேலூர் - சென்னை நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ள பூட்டுத் தாக்கு கிராமமென்றும். அதற்கு எதிர்த்தாற் போலவே அன்னை மீரா கல்லூரி பின்புறமுள்ள குட்டையிலிருந்து மண் எடுத்து பாண்டங்கள் செய்வதாகவும் தெரிவித்தார்.
இப்போது வியாபாரம் கொஞ்சம் பரவாயில்லை என்கிறார். வாணலி மாதிரியான சீஞ்சட்டி ஒன்றை எடுத்துத் தட்டிப் பார்த்தேன். ணங், ணங் என்று நல்ல சத்தம். மிகச் சரியான வேக்காடு. விலை கேட்டேன். 70 ரூ என்றார். குறையாதா என்றதும் 60 கொடுங்களென்றார். கொடுத்து வாங்கிக்கொண்டேன்.
அந்தச் சட்டியில் இன்று தீயல் செய்து பார்க்கப் போகிறேன். இன்னொரு நாள் அவியல் செய்து பார்க்கவேண்டும்.
மண்சட்டியைப் பார்த்ததும் என் மனைவி, இது எதுக்கு வாங்கிவந்தீர்கள் என வினவியதற்கு, அவியல், தீயல் செய்து பார்ப்போம். சரிப்படவில்லையெனில் மாடியில் பறவைகளுக்குத் தண்ணீர் ஊற்றிவைப்பதற்குப் பயன்படுமென்றுதான் வாங்கி வந்ததாகச் சொல்லிச் சமாளித்தேன்.
முகநூல் பதிவு 20.07.2018 விருப்பம் 178, பகிர்வு 59

Sunday, 22 July 2018

துண்டிக்கப்பட்ட தலையின் கதை என்றொரு சிறுகதை

துண்டிக்கப்பட்ட தலையின் கதை என்றொரு சிறுகதை
மலைகள் 150 வது இதழில் துண்டிக்கப்பட்ட தலையின் கதை என்ற பெயரில் கார்த்திகைப் பாண்டியனின் தமிழாக்கச் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது.
இக்கதை மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முகம்மத் பர்ராடா Mohammed Berrada அவர்களால் அரபு மொழியில் படைக்கப்பட்டு, ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு, இப்போது தமிழுக்கு வந்திருக்கிறது.
தமிழில் நல்ல சிறுகதைகள் வந்துகொண்டு தானிருக்கின்றன. ஆர்வமுள்ள பலர் உலக இலக்கியத்திலிருந்தும் பல சிறுகதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். கண்ணில்படுகிற கதைகளைப் படிக்கிறோம். தேடிப்படிக்கிறவர்களும் பலர் இருக்கின்றனர். எல்லாக் கதைகளும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துவிடுவதில்லை. ஆனால் `துண்டிக்கப்பட்ட தலையின் கதை` வாசகனைச் சட்டென உள்ளிழுத்துக்கொள்கிறது.
இச்சிறுகதையின் சொல்முறை புதிது; அது வெளிப்படுத்தும் செய்தியும் சமூக அக்கறை மிக்கது.
மொராக்கோவின் ரபாத் நகரத்தில் ஒருவன் தலைவேறு உடல் வேறாகத் துண்டிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்கிறான். நகரம் எந்தப் பதற்றமும் இல்லாமல் தன் போக்கில் இயங்குகிறது.
அவனது துண்டிக்கப்பட்ட தலை அப்போதும் சாகாமல் உயிரோடிருக்கிறது. அத்தலையினால் சிந்திக்க முடிகிறது. அத்தலை அதன் உணர்வினைக் கொண்டு பறக்க முடிந்தால் பரவாயில்லையே என நினைத்துக் கடவுளை வேண்டுகிறது. அது நினைப்பது போலவே பறக்கத்தொடங்குகிறது.
வானத்திலிருந்து பார்க்கும்போது ரபாத் நகரம் அருவருப்பும் பயங்கரமும் நிறைந்து தோன்றுகிறது.
தலை தெற்கு நோக்கிப் பறந்து, கடலைத் தாண்டி மொரோக்கோவின் மிகமிகப் பழங்காலத்திலிருந்தே கதையாடல், பாடல் மற்றும் இஸ்லாமியத் துறவிகளால் விவாதங்கள் நடைபெற்று வந்து, தற்போது மசூதிச்சதுக்கம் மற்றும் வணிகத்தலமாக, சுற்றுலாத்தலமாக எப்போதும் மனிதர்கள் நிறைந்ததாக விளங்குகின்ற ஜமா-அல் ஃபினா வுக்கு மேலாகப் பறந்து `இழிந்த மனிதர்களே` என விளித்து உண்மைகளை மறந்து மூடநம்பிக்கைகளில் வாழ்வதைச் சுட்டிக்காட்டி, வீரசாகசம், மாயமந்திரங்களை நம்பி, காமத்தின் இன்பக்கனவினை எதிர்பார்த்து, நிதர்சன வாழ்க்கையில் பசி, வறுமை, அடக்குமுறை எல்லாவற்றையும் கண்டுகொள்ளாமலிருப்பதைக் கைவிட்டு விழிப்புணர்வுகொண்டு எதிர்த்துப் போராடுமாறு வலியுறுத்துகிறது.
உடனடியாகத் தீயணைப்பு வீரர்கள் மாபெரும் வலை ஒன்றை வீசித் தலையைப் பிடித்துவிடுகிறார்கள். தலையை நீதிமன்றத்தின் முன் நிறுத்தியபோது, அதன் நாக்கை அறுத்துவிடுமாறு ஆணையிடுகிறார், நீதிபதி. இதுவே கதை.
பறந்துகொண்டிருக்கும்போது தலையின் நினைவோட்டத்தில், நம் அறிவைக் கவர்கிற அழகிய ஒரு கருத்து தோன்றுகிறது. “வழமையான சங்கதிகளின் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பு உயர வேண்டுமெனில் பூமியை நாம் பிரிந்திருக்க வேண்டும். நமக்கிருக்கும் சக்திகளின் மீது பரிபூரண நம்பிக்கையோடு நாம் வாழும் சமயங்களிலெல்லாம் தினசரி வாழ்க்கை தனது கவிதைகளை மீட்டெடுக்கிறது.”  அதாவது விஷயங்களைச் சற்று உயரத்தில் நின்று பார்த்துச் சிந்தித்தால் தீர்வு கிடைத்துவிடும்.
அடக்குமுறைக்கெதிராகக் கருத்து வெளியிட்டமைக்காகவே அந்த அறிவுஜீவி கொலைசெய்யப்பட்டிருப்பதோடு அதன் பின்பும் அந்தக் கருத்து வெளிப்படும் சூழ்நிலை ஏற்பட்டதும் அது வெளிப்படாதவாறு நாவை அறுத்துவிடுகின்றனர்.
இதுவே, அதிகாரம் எப்போது ஒரு நிறுவனமாக, அமைப்பாகச் செயல்படத் தொடங்கியதோ அன்று முதல் இன்று வரை காலங்காலமாக, அது, கடைப்பிடித்து வருகின்ற, உலகம் முழுவதிலுமான நடைமுறையாக இருந்து வருகிறது.
மிகமிகப் பழமையான இச்செய்தியினை புதிய வடிவத்தில் தந்திருப்பதுதான் இக்கதையின் நவீனத்துவம்.
தற்போதைய நிகழ்வுகளான தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்பு வழக்குகள் புனையப்படுதல், எட்டு வழிச்சாலை பற்றிக் கருத்து தெரிவிக்கவும் சுதந்திரம் மறுக்கப்படுதல், எட்டுவழிச் சாலைக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது, பாதிக்கப்படும் மக்களைச் சந்திக்கச் செல்லும் சமூக ஆர்வலர்களைக் கைதுசெய்வது என அதிகாரங்கள் தம் கருத்துக்கு மறு கருத்தினைப் பேசுவதை, விவாதிப்பதைக் கூடப் பொறுத்துக்கொள்ள இயலாத எதேச்சாதிகாரப்போக்குக்கு மாறியுள்ள அபாயத்தைக் காண்கிறோம்.
நீதிமன்றங்களிலுங்கூட இப்போக்கு காணப்படுகிறது.
இச்சூழலில் துண்டிக்கப்பட்ட தலையின் கதை தமிழுக்கு மிக மிகத் தேவைப்படுகிற ஒரு அவசரமான நேரத்தில் வந்து சேர்ந்துள்ளது.
மொழிபெயர்ப்பு என்ற போதிலும் வாசிக்கும்போது எவ்வித நெருடலோ, இடறலோ இல்லாமலிருப்பதால் புரிதலுக்கு எவ்விதச் சிக்கலுமில்லாமலிருக்கிறது.
அரபுப் பண்பாட்டினை தமிழின் மொழிமரபுக்குள் இடர்பாடு ஏதுமின்றி வெளிப்படுத்தியிருப்பது ஒன்றே மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு என்பதற்கான சான்றாக உள்ளது.
இக்கதையினைத் தேடியெடுத்துச் சிறப்பாகத் தமிழாக்கியுள்ளமைக்காக கார்த்திகைப்பாண்டியனுக்கும். இக்கதையினை வெளியிட்டமைக்காக `மலைகள்` இதழுக்கும் வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.
மலைகள் வாசகர்கள் இக்கதையினைச் சிறப்பாகவே வரவேற்றிருக்கிறார்கள்.
கதையினைப் படிக்க :http://malaigal.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E…/

Wednesday, 18 July 2018

அமெரிக்கச் சிறுகதை - இனிமை SWEETNES ஆங்கிலம் டோனி மார்ரிசான், தமிழில் ச.ஆறுமுகம்

இனிமை Sweetness அமெரிக்க ஆங்கிலம் : டோனி மார்ரிசான் Toni Morrison – தமிழில் – ச.ஆறுமுகம்.

( அமெரிக்க நாவலாசிரியரான டோனி மார்ரிசான் இலக்கியத்திற்கான அனைத்து அமெரிக்க உயர்விருதுகளையும் 1993ல் இலக்கியத்திற்கான நோபெல் பரிசினையும் பெற்றவர். இதுவரை பன்னிரண்டு நாவல்கள் படைத்துள்ளார். தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள Sweetness சிறுகதை விரிவாக்கப்பட்டு God help the child என்ற பெயரில் நாவலாக வெளிவந்துள்ளது.)
அது என் தப்பல்ல. அதனால் நீங்கள் என்னைக் குற்றம் சொல்லமுடியாது. நான் அதைச் செய்யவில்லை; அது எப்படி நிகழ்ந்ததென்றும் எனக்குத் தெரியாது. என் கால்களின் இடையிலிருந்து அவளை, அவர்கள் இழுத்துப் போட்டு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகியிருக்காதபோதே, ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறதென்று எனக்குத் தெரிந்துவிட்டது. உண்மையிலேயே தவறுதான். நான் பயந்தே போனேன்; அவள் அவ்வளவு கறுப்பாக இருந்தாள். நள்ளிரவு மையிருள் கறுப்பு. சூடானியக் கறுப்பு. நான் மென்னிற மேனியும் நல்ல கூந்தலுமாக, உயர் மஞ்சளென்று சொல்வோமே அப்படி இருக்கிறேன். லூலா ஆனின் அப்பாவும் அப்படியேதான் இருக்கிறார்.
என் குடும்பத்தில் யாரும் மிகச் சிறிதளவிலுங்கூட அந்த நிறத்திற்கு அருகில் கூட இல்லை. நிலக்கரித்தார் தான் அவளுக்கு மிகமிக அருகிலிருக்குமென்று நினைக்கிறேன், ஆனாலும் அவளது தலைமுடி அந்த நிறத்துக்கு ஒத்துப்போவதாக இல்லை. அது வித்தியாசமாக – நீளமாக ஆனால் சுருள்சுருளாக, ஆஸ்திரேலியாவின் நிர்வாணப் பழங்குடிகளின் தலைமுடி போல இருந்தது. அவளொரு ஆதிகாலத் தோற்றத்தின் மீள்பிறப்பு என நீங்கள் நினைக்கலாம், ஆனால், எதன் மீள்பிறப்பு? நீங்கள் என் பாட்டியைப் பார்த்திருக்கவேண்டும்; அவள் வெள்ளை நிறத்தவளாகவே ஒப்புக்கொள்ளப்பட்டாள்; ஒரு வெள்ளை மனிதரையே திருமணம் செய்தாள்; அவளுடைய எந்தவொரு குழந்தையிடமும் பேசவேயில்லை. எனது அம்மா சித்தி மற்றும் பெரியம்மாக்கள், அவளுக்கு எந்தக் கடிதம் அனுப்பினாலும் அதை, உறை பிரிக்காமல், அப்படியே திருப்பியனுப்பினாள்.
அவளிடமிருந்து எந்தச் செய்தியுமில்லையென்ற செய்தியைக் கடைசிகடைசியாக அவர்கள் தெரிந்துகொண்டதோடு அவள் அப்படியே இருக்கட்டுமென்று விட்டுவிட்டார்கள். அநேகமாக எல்லா முலாட்டோ வகையினர் மற்றும் குவாட்ரூன்களும் – அதையேதான் இன்றளவும் திருப்பிச் செய்கின்றனர் – அவர்களுக்குச் சரியான வகையில் தலைமுடி இருந்துவிட்டால் நடப்பு அப்படியேதான். எத்தனை வெள்ளை மனிதர்கள், அவர்களின் நரம்புகளுக்குள் நீக்ரோ இரத்தத்தைக் கொண்டிருக்கிறார்களென உங்களால் கற்பனைசெய்யமுடிகிறதா? யூகித்துப் பாருங்கள்! இருபது விழுக்காடென்பது நான் கேள்விப்பட்டது. என்னுடைய சொந்த அம்மா, லூலா மாயி கூட மிக எளிதில் வெள்ளை இனமென ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பாள்; ஆனால் அவள் அந்தப் பாதையினைத் தேர்வுசெய்யவில்லை.
அவளின் அந்த முடிவுக்காக, அவள் செலுத்திய விலையை என்னிடம் பின்னாளில் அவள் சொன்னாள். அவளும் எனது தந்தையும் திருமணம் செய்துகொள்வதற்காக நீதிமன்றம் சென்றபோது அங்கே இரண்டு பைபிள்கள் இருக்க, நீக்ரோக்களுக்கான பைபிளில்தான் அவர்கள் கைவைக்கவேண்டியிருந்ததாம். மற்றொரு பைபிள் வெள்ளை இனத்தவருக்கானதாம். மகா பைபிள்! அதை உங்களால் வெற்றிகொள்ள முடியுமா? என் அம்மா, ஒரு பணக்கார வெள்ளையின இணையரிடம் வீட்டுவேலை செய்பவளாக இருந்தாள். அவள் சமைத்த உணவினையே ஒவ்வொரு பொழுதுக்கும் அவர்கள் தின்றனர். குளியல் தொட்டிக்குள் அமர்ந்துகொண்டு அவளை முதுகு தேய்த்துவிடச் சொல்வார்களாம்; வெளியில் சொல்லமுடியாத வேறு என்னென்ன அந்தரங்க வேலைகள் செய்யச்சொன்னார்களோ, அது, அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்! ஆனால் அவர்கள் தொட்ட அதே பைபிளை நாங்கள் தொடக்கூடாது.
சமூகக் கூடுகை மன்றங்கள், உள்ளூர் சமுதாய வளாகங்கள், தேவாலயங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் நிறவாரிப் பள்ளிகளிலுங்கூட, தோல் நிறத்தைக்கொண்டு – மென்னிறம் அதிகமாக, அதிகமாக நல்லதென – நாங்கள் குழு பிரிப்பது ஒரு மோசமான விஷயமென உங்களில் சிலர் நினைக்கலாம், அப்புறம் எப்படித்தான் நாங்கள் சிறிய அளவிலான ஒரு ஒற்றைப் பெருமையையாவது தக்கவைத்துக்கொள்வதாம்? மருந்துக்கடையில் காறித் துப்புவதை, பேருந்து நிறுத்தத்தில் முழங்கை மூட்டினால் இடிக்கப்படுவதை, வெள்ளை இனத்தவர் முழு நடைமேடையையும் பயன்படுத்துமாறு விட்டுக்கொடுத்துவிட்டு, சாக்கடையில் இறங்கி நடப்பதை, மளிகைக் கடைகளில் வெள்ளை வாடிக்கையாளர்களுக்கு விலையின்றி இலவசமாக வழங்கப்படும் காகிதப் பைகளுக்கு ஒரு நிக்கல் விலைகொடுப்பதிலிருந்தும் தவிர்க்கப்பட நாங்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? பெயர் சொல்லித் திட்டுவது ஒருபக்கமிருக்கட்டும். அதைப்பற்றியெல்லாம், நான் போதும் போதுமென்கிற அளவுக்கு கேள்விப்பட்டுவிட்டேன்.
என் அம்மாவின் தோல் நிறத்தினால் மட்டுமே, பல்பொருள் அங்காடிகளில் தொப்பிகளை அணிந்து பார்க்கவும், பெண்கள் அறையினைப் பயன்படுத்தவும் அவளை அனுமதித்தனர். அதுபோல எனது அப்பாவும் காலணிக்கடைகளின் பின்புற அறையில் அல்லாமல் முன்புறத்திலேயே, காலணிகளை அணிந்து பார்க்க முடிந்தது. அவர்களில் யாரொருவரும் கூட, தாகத்தால் இறந்துகொண்டிருக்கும் வேளையென்றாலும் `கறுப்பு நிறத்தவருக்கு மட்டும்` என அடையாளமிட்ட குடிநீர்க்குழாய்களிலிருந்து தண்ணீர் குடிக்கமாட்டார்கள்.
அப்படிச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லைதானென்றாலும், மகப்பேற்றுக் கூடத்தில் தொடக்கத்திலிருந்தே, குழந்தை லூலா ஆன் என்னைப் பெரும் சங்கடத்துக்காளாக்கிவிட்டாள். அவளுடைய பிறந்த மேனி, எல்லா குழந்தைகளையும் போலவே ஏன், ஆப்பிரிக்கக் குழந்தைகளையும் சேர்த்துத்தான், வெளிறிய நிறத்திலிருந்தது; ஆனால், வேகவேகமாக மாறிவிட்டது. என் கண்ணெதிரிலேயே அவள் நீலக் கறுப்புக்கு மாறியபோது எனக்குப் பைத்தியம் பிடிப்பதாகவே நினைத்தேன்.
ஒரு கணம் பைத்தியமே பிடித்துவிட்டதை உணர்ந்தேன்; என்னவென்றால் – ஒருசில கண்ணிமை நொடிகள்தாம் – அவளுடைய முகத்திற்கு மேலாக ஒரு போர்வையைக் கொண்டுபோய் அழுத்துவதற்குப் போய்விட்டேன். ஆனால், அவள் அந்த பயங்கரமான நிறத்தில் பிறக்காமலிருந்திருக்கக்கூடாதாவென நான் எந்த அளவுக்கு நொந்துகொண்டேனென்ற போதிலும் என்னால் அதைச் செய்யமுடியவில்லை. அவளை ஒரு அனாதை இல்லம் மாதிரியான ஏதாவது ஒன்றுக்குக் கொடுத்துவிடலாமாவென்றும் யோசித்தேன். ஆனால் தேவாலய வாயிற்படிகளில் குழந்தைகளை விட்டுச்செல்லும் அந்த அம்மாக்களில் ஒருத்தியாவதற்கு நான் மிகவும் கலவரப்பட்டுப் போனேன்.
கொஞ்சநாட்களுக்கு முன்புதான், அடர் கருப்புத் தோலுடன் குழந்தை பிறந்ததெப்படியென யாரும் விளக்கம் சொல்லமுடியாத பனி போன்ற வெள்ளைநிற ஜெர்மானிய இணையர் பற்றிக் கேள்விப்பட்டேன். இரட்டைக்குழந்தைகள் – ஒன்று வெள்ளை, மற்றொன்று கருப்பு என்று நினைக்கிறேன். அது உண்மையா என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை அவளைப் பராமரிப்பதென்பது ஒரு நீக்ரோ பிக்கானின்னி என் முலைக்காம்பில் பால் உறிஞ்சுவது போலத்தான். வீட்டுக்குச் சென்றதுமே அவளுக்குப் புட்டிப்பால் தொடங்கிவிட்டேன்.
என் கணவன், லூயிஸ், ஒரு சுமைதூக்குபவன்.
அவன் ரயில்வே தடுப்புக்கம்பிகளிலிருந்து மீண்டு இங்கு வரும்போதெல்லாம், எனக்குப் பைத்தியம்பிடித்திருப்பது போலவும் குழந்தை ஜூபிடர் கிரகத்திலிருந்து வந்துள்ளது போலும் பார்த்தான். அவனொன்றும் தன்மூப்புப்பிடித்த ஒரு மனிதனல்லவென்றாலும், அவன், “அட, பாழாய்ப்போன கடவுளே, இது என்ன எழவு?“ எனச் சொல்கின்ற போதெல்லாம், நாங்கள் பிரச்னைக்குள்ளாகியிருக்கிறோமென்பதை, நான் புரிந்துகொண்டேன். அதுவேதான் – அவனுக்கும் எனக்கும் இடையில் சண்டைகளுக்குக் காரணமாயிருந்தது. அது எங்கள் திருமணத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டது. நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு நன்றாகவே சேர்ந்திருந்தோம்; அவள் பிறந்தாளோ இல்லையோ, அவன் என்னைக் குற்றம் சொல்லியதோடு, லூலா ஆனை அந்நியளாகவே கருதியது மட்டுமல்ல – எதிரியாகவே பாவித்தான். அவன் அவளைத் தொட்டதேயில்லை.
நான் வேறெந்த ஆணோடும் முட்டாள்தனமாகச் சுற்றித்திரியவில்லை என அவனை நான் சமாதானப்படுத்த முயலவில்லை. நான் பொய் பேசுவதாக அவன் அவ்வளவு நிச்சயமாகக் கருதினான். நாங்கள் வாதத்துக்கு மேல் வாதம் புரிந்து கடைசியில் அவளுடைய கறுப்பு நிறம் அவனுக்கே அவனுக்கான குடும்பத்திலிருந்து வந்ததுதான் – என்னுடையது அல்லவென்று நான் சொல்லும்போதுதான் அது தீயாகி, அவன் சட்டென்று எழுந்ததோடு அப்படியே கிளம்பிப் போக, நான் குடியிருப்பதற்காக வேறொரு மலிவான இடம் தேடவேண்டியதாயிற்று.
என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நான் செய்தேன். வீட்டு உரிமையாளர்களிடம் வாடகைக்கு அறை கேட்டுப் போகும்போது அவளையும் தூக்கிப்போகக்கூடாதென்பதைப் புரிந்துகொள்கிற அளவுக்கு நான் விவரம் தெரிந்திருந்தேன். அதனால் அவளை என்னுடைய பதின் வயது மைத்துனியிடம் கொடுத்துப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றேன். என்னவானாலும் நான், அவளை அதிகமும் வெளியே எடுத்துச் செல்வதில்லை; ஏனென்றால், நான் அவளைக் குழந்தை வண்டிக்குள் வைத்துத் தள்ளும்போது, ஏதாவது நல்லதாக ஒன்றிரண்டு வார்த்தை சொல்லலாமென, அவளைக் குனிந்து பார்ப்பவர்கள் முகஞ்சுளிப்பதற்குமுன் கத்தவோ அல்லது பின்பக்கமாகத் தள்ளாடவோ செய்துவிடுகிறார்கள். அது நோகடிக்கிறது. எங்கள் நிறம் மட்டும் வேறாக இருந்தால் நான் குழந்தை பார்த்துக்கொள்ளும் செவிலியாகியிருப்பேன்.
கறுப்பு நிறமாக இருப்பதாலேயே – நல்ல மஞ்சள் நிறமென்றாலுங்கூட – நகரத்தின் கண்ணியமான ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு பெறமுயற்சிப்பதென்பது மிகமிகக் கடினமானதுதான். முன்னர்த் தொண்ணூறுகளில், லூலா ஆன் பிறந்தகாலத்தில், வீடு வாடகைக்குக் கொடுக்க, அப்படியெல்லாம் வேறுபாடுகாட்டுவதற்கு எதிராகவே சட்டம் இருந்ததென்றாலும், பெரும்பாலான உரிமையாளர்களும் அதைக் கருத்தில்கொள்ளவேயில்லை. உங்களை வட்டத்திற்குள் நுழையவிடாமல் வெளியிலேயே நிறுத்துவதற்கு அவர்கள் ஆயிரம் காரணங்களை உருவாக்கினர்.
திரு.லே விளம்பரப்படுத்தியிருந்ததைக் காட்டிலும் வாடகையில் ஏழு டாலர்களைக் கூட்டிவிட்டாரென்பது எனக்குத் தெரியுமென்பதோடு வாடகை கொடுப்பதற்கு ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டாலும் வலிப்பு வந்த மாதிரி கத்தத் தொடங்கிவிடுவாரென்ற போதிலும் நான் கொடுத்துவைத்தவள்தான்.
என்னை அம்மா என்றோ, மா என்றோ அழைக்காமல் `இனிமை` என்று அழைக்குமாறு அவளுக்கு நான் கூறினேன். அது அதிக பாதுகாப்பானது. அவள் கறுப்பாயிருப்பதும் நான் நினைப்பதுபோல் அவளது உதடுகள் பருமனாக இருப்பதும், அவள் என்னை அம்மா என அழைப்பது மற்றவர்களைக் குழப்பத்திலாழ்த்திவிடும். அதுமட்டுமில்லாமல், நீலச்சாயலில் காக்கைக் கறுப்பு நிறமாக, மாறுபாடாகத் தெரிந்த அவளது கண்களில் சூனியம் மாதிரியான ஏதோ ஒன்றிருப்பதாக வேறு தோன்றியது.
அதனால், நாங்கள் இருவர் மட்டுமேயென நீண்டகாலமிருந்தோம்; கைவிடப்பட்ட மனைவியாகக் காலம்கழிப்பது எத்துணை கடினமானதென்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. எங்களை அப்படிக்கப்படியே விட்டுவிட்டு விலகிச்சென்றபின்னர், லூயிஸ் சிறிது உறுத்தலாக உணர்ந்திருக்கவேண்டும்; ஏனெனில் ஒருசில மாதங்கள் கழிந்ததும், நான் பணம் அனுப்புமாறு கேட்கவோ அல்லது நீதிமன்றத்தை அணுகவோயில்லாதபோதும் நான் எங்கே தங்கியிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, மாதத்திற்கொருமுறை பணம் அனுப்பத் தொடங்கினான்.
அவனுடைய ஐம்பது டாலர் பணவிடைகளும் மருத்துவமனையில் நான் செய்த இரவுப்பணியுமாக எனக்கும் லூலா ஆனுக்கும் நல்வாழ்வுப்பணத்தைத் தந்தன. அது ஒரு நன்மையான விஷயம். அதை நல்வாழ்வுப்பணமெனக் கூறுவதை நிறுத்திவிட்டு என் அம்மா, குழந்தையாக இருந்தபோது அதனை எப்படி அழைத்தார்களோ அந்தச் சொல்லைப் பயன்படுத்தவேண்டுமென நான் நினைத்தேன். அப்போது, அது `நிவாரணம்` என வழங்கப்பட்டது. அந்தப்பெயரே, இருவரும் ஒன்றிணைவதற்கிருக்கும் காலகட்டத்தில் உயிர் மூச்சுக்காகக் குறுகிய காலத்துக்கான ஒன்றாக, நன்றாக இருப்பது போலிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த நலத்துறை எழுத்தர்கள் எச்சிலுக்கும் கீழானவர்களாக இருக்கின்றனர். கடைசியில் எனக்கு வேலை கிடைத்து அந்தப்பணம் எனக்குத் தேவையில்லாமற் போகுமளவுக்கு, அவர்கள் ஒருபோதும் பெற்றேயிருக்காததற்கும் அதிகமாக நான் சம்பாதித்தேன்.
அவர்களுடைய கஞ்சத்தனமான ஊதியக் காசோலையில்தான் அவர்களுடைய இழிநிலை நிரம்பிவழிகிறது. அதனால் தான் அவர்கள் எங்களைப் பிச்சையெடுப்பவர்களிலும் கேவலமாக நடத்தினரென நான் நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக அவர்கள் லூலா ஆனைப் பார்த்துவிட்டு, என்னை ஒரு பார்வை பார்ப்பார்கள், பாருங்கள் – நான் என்னவோ ஏமாற்ற அல்லது அதுமாதிரியான ஏதோ ஒன்றினைச் செய்ய முயற்சிப்பது போல. அப்போது கொஞ்சத்துக்குக் கொஞ்சம் பரவாயில்லாமலாகியிருந்தாலும் நான் மிகவும் கவனமாகவே இருக்கவேண்டியிருந்தது. மிகமிகக் கவனமாக இருந்து அவளை வளர்த்தெடுத்தேன். நான் கண்டிப்புடன், மிகவும் கண்டிப்புடன் இருக்கவேண்டியிருந்தது. பொதுவில், லூலா ஆன் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்றும் தலையை எப்படித் தொங்கப்போட்டுக் கொள்வதென்றும் தொந்தரவு ஏற்படுத்தாமலிருப்பது எப்படியென்றும் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.
அவள் தனது பெயரை எத்தனை முறை மாற்றிக்கொண்டாளென்பது எனக்கு ஒரு விஷயமேயில்லை. அவளது நிறமென்பது அவள் எப்போதும் சுமந்தேயாகவேண்டிய சிலுவை. ஆனால், அது என் தவறு அல்ல. என் தவறு இல்லவேயில்லை
ஓ! ஹ்ஹோ, லூலா சின்னவளாக இருக்கும்போது நான் அவளை எப்படி நடத்தினேன் என்பது குறித்து சிலநேரங்களில் எனக்குப் பெருத்த வலி ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்; நான் அவளைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. அவளுக்கு உலகம் தெரிந்திருக்கவில்லை.
அப்படியான தோல் இருக்கும்போது உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலுங்கூட நீங்கள் அதில் திடமாக இருந்துவிடவோ அல்லது அதனை வெளிக்காட்டிவிடவோ முடியாது. அதுவும் பதிலுக்குப் பதில் பேசியதற்காக, அல்லது பள்ளியில் சண்டையிட்டதற்காக சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிடக்கூடிய சூழ்நிலை நிலவுகிற ஒரு உலகத்தில், கடைசி நபராக பணிக்குச் சேர்க்கப்பட்டு, முதல்நபராக வெளித்தள்ளப்படவிருக்கும் உலகத்தில் முடியவே முடியாது.
அதுபற்றியெல்லாமோ அல்லது அவளது கறுப்புத் தோல் வெள்ளை மனிதர்களை எப்படிப் பீதிகொள்ளச்செய்யுமென்றோ அல்லது நகைக்கச் செய்யுமென்றோ அல்லது விளையாட்டுக்காட்டி ஏமாற்ற முயற்சிக்கவைக்குமென்றோ அவளுக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை, லூலா ஆனைப்போலவே இருட்டு நிறத்துக்குக் கொஞ்சம் கூடக் குறையாத, பத்து வயதுக்கு மேற்பட்டிருக்காத ஒரு சிறுமி, கூட்டமாக நின்ற வெள்ளைச்சிறுவர்களில் ஒருவனால் தட்டிவிடப்பட்டதையும் அவள் தடுமாறி எழுந்து நிலைநிற்க முயற்சிக்கும்போது இன்னொருவன் அவளின் பின்பக்கத்திலேயே காலால் உதைத்து மீண்டும் அப்படியே குப்புறத் தள்ளியதையும் பார்த்தேன்.
அந்தப் பயல்கள் குனிந்து, வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கமுடியாமல் சிரித்தனர். அந்தக் கறுப்புச்சிறுமி அங்கிருந்து அகன்றபிறகும், அந்தப் பையன்கள் பெருமிதத்தோடு புளகாங்கிதம் காட்டிக்கொண்டிருந்தனர். நான் பேருந்திலிருந்து சாளரம் வழியாக அதைப்பார்த்தேன்; அப்படியில்லாமல் நான் அந்த இடத்திலேயே இருந்திருந்தால், அந்த வெள்ளைக்கும்பலிடமிருந்து அவளை இழுத்துக் காப்பாற்றியிருப்பேன். தெரிந்துகொள்ளுங்கள், நான் மட்டும் லூலா ஆனுக்குச் சரியாகப் பயிற்சியளிக்காமலிருந்தால், தெருவின் குறுக்காக எப்படிக் கடந்து செல்லவேண்டுமென்பதையும் வெள்ளைப் பையன்களை எப்படித் தவிர்ப்பதென்பதையும் அவள் தெரிந்திருக்கமாட்டாள். ஆனால் அவளுக்கு நான் கற்றுக்கொடுத்த பாடங்கள் பலன் அளித்து, இப்போது நான் ஒரு மயிலைப்போலத் தலைநிமிர்ந்து நடக்குமாறு என்னைப் பெருமைப்படச் செய்திருக்கிறாள்.
நான் ஒரு மோசமான அம்மா இல்லையென்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்; என் குழந்தை நோகும்படியான சில விஷயங்களைச் செய்திருக்கலாம் தான்; அது ஏனென்றால், நான் அவளைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டியிருந்தது. ஆம் அப்படித்தான். எல்லாமே இந்த நிறப் பிரிவினை, உயர் உரிமையினால்தான். முதலில் அந்தக் கறுப்பு முழுவதையும் கடந்துவிட்டு அவள் யாரென்பதைப் பற்றிக் கருதிப்பார்க்கவோ, வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவளை வெறுமனே நேசிக்கவோ என்னால் முடியவில்லைதான்; ஆனாலும் அவளை நான் நேசித்தேன். எந்தவிதப் பிடிப்புமற்ற வெறும் அன்பு. உண்மையிலேயே நான் அப்படி அன்புகொண்டேன். அதை அவள் இப்போது புரிந்துகொள்வாளென நினைக்கிறேன். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.
இப்போது, கடைசியாக அவளைப் பார்த்த இரண்டு முறையும் நல்ல தெளிவாக இருந்தாள்; துணிச்சலும் தன்னம்பிக்கையும் மிக்கவளாக. அவள் என்னைப் பார்க்க வருகிற ஒவ்வொருமுறையும் எப்படியொரு கறுப்பாக அவள் இருந்தாளென்பதை நான் மறந்துபோகிறேன். ஏனென்றால், அவள் அழகழகான வெள்ளைநிற ஆடைகளை அணிந்து அந்தக் கறுப்பினையே ஒரு அனுகூலமாக மாற்றிக்கொண்டுவிட்டாள்.
வாழ்க்கை முழுவதற்குமாக நான் தெரிந்துகொள்ளவேண்டிய பாடத்தை அவள் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாள். குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்க்கிறீர்களென்பது தான் பேசுகிறது. அவர்கள் ஒருபோதும் மறந்துவிடமாட்டார்கள். பிரிந்துசெல்கிற நேரம் வந்ததுமே அவள், அந்த மோசமான அடுக்ககத்தில் என்னைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். என்னைவிட்டு அவளால் எவ்வளவு தூரம் தள்ளிப்போகமுடியுமோ, அப்படியான ஒரு தூரத்துக்குத் தன்னை முழுவதுமாகத் திரட்டி எழுந்துகொண்டு, கலிபோர்னியாவில் ஒரு பெரிய வேலை கிடைத்துச் சென்றிருக்கிறாள். இனிமேல் என்னைப் பார்க்க அடிக்கடி வரமாட்டாள்; தொலைபேசுவதும்கூட இல்லைதான். ஆனால், அவ்வப்போது என்றில்லை, அடிக்கடி, பணமும் தேவையான பொருட்களையும் அனுப்பிக்கொண்டிருக்கிறாள். அவளைப் பார்க்காமல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி இருக்கப்போகிறேனென்றுதான் எனக்குத் தெரியவில்லை.
நகரத்திற்கு வெளியே இருக்கின்ற அதிகம் செலவுபிடிக்கின்ற மருத்துவ மனைகளைவிட, இந்த இடம் – வின்ஸ்டன் ஹோம் – எனக்குப் பிடித்திருக்கிறது. இது சிறியது; வீடு மாதிரியானது; செலவும் குறைவு.
இருபத்து நான்கு மணி நேரச் செவிலியர்கள் மற்றும் வாரத்துக்கு இருமுறை வந்து கவனிக்கும் ஒரு மருத்துவர். எனக்கு இப்போது அறுபத்து மூன்று தான் – காடு போய்ச்சேர மிகக் குறைந்த வயது – ஆனால் பற்றிப்பிடித்துக்கொண்ட ஏதோ ஒரு எலும்பு நோயினால் படுத்துவிட்டேன். அதனால் தொடர்ந்து நல்ல சிகிச்சையும் கண்காணிப்பும் அவசியமாகிவிட்டது.
வலி, வேதனை, பலவீனம் எல்லாவற்றையும் விட சலிப்பு தான் மிகக் கொடியதென்றாலும், செவிலிகள் அன்பாயிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி, நான் பாட்டியாகப் போவதைச் சொன்னதும் என் கன்னத்திலேயே முத்தமிட்டுவிட்டாள். அவளுடைய முக மலர்ச்சியும் அவளது வாழ்த்து மொழிகளும் முடிசூடிக்கொள்ளப் போகும் ஒரு நபருக்குப் பொருத்தமானது. லூலா ஆனிடமிருந்து நீலநிறத் தாள் ஒன்றில் எனக்கு வந்திருந்த செய்தியினை அவளிடம் காட்டினேன் – நல்லது, லூலா அதில் மணப்பெண் என்ற பொருளில் `பிரைட்` எனக் கையொப்பமிட்டிருந்தாள். ஆனால், எனக்கு அதிலொன்றும் கவனம் இல்லை. அவளுடைய சொற்கள் கிறங்கவைப்பதாக இருந்தன. “என்னவென்று யூகித்துக்கொள்ளுங்களேன், எஸ் (இனிமை). இந்தச் செய்தியை உங்களுக்குச் சொல்வதில் நான் மிகமிக, மிகமிக மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. நான் மிகவும், மிகவும் என்றால் இன்னும் மிகவுமான ஒரு பரவசத்திலிருக்கிறேன்; நீங்களும் அப்படியே பரவசமாவீர்களென நம்புகிறேன்.” அவள் குழந்தையை நினைத்துத்தான் பரவசம் கொள்கிறாள், அதன் அப்பாவை நினைத்து அல்லவென்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
அது எப்படி என்றால், அவனைப்பற்றி அவள் எதுவுமே குறிப்பிடவில்லையே! அவளைப் போலவே அவனும் கறுப்பாயிருப்பானோ! அப்படியிருந்தாலும் அவள் என்னளவுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை. என் சிறுவயதுக்காலத்தைவிட இப்போது எவ்வளவோ மாறியிருக்கிறது. கறுப்பு, நீலக்கறுப்பு எல்லோருமே தொலைக்காட்சி, பண்பாட்டு ஊடகங்கள், கவர்ச்சி இதழ்கள், வணிக விளம்பரங்கள், ஏன், திரைப்பட நடிகர்களில் கூட எல்லாவிடத்திலும் இருக்கிறார்கள்.
உறையில் திருப்புமுகவரி எழுதியிருக்கவில்லை. நல்ல ஒரு நோக்கத்திற்காக, உண்மையில் சொல்லப்போனால் நான் அவளை வளர்த்த அந்த அவசியமான முறைமைக்காக இப்போதும் கெட்ட தாயாகவே, செத்துத்தொலைகிறவரை இப்படியே தான் இருந்தாக வேண்டுமோ! எனக்குத் தெரியும், அவள் என்னை வெறுக்கிறாள். எங்களுக்கிடையிலான உறவென்பது வெறுமே பணம் அனுப்புவதென்பதாகக் கீழிறங்கிப்போனது. அவள் அனுப்புகிற பணத்துக்காக நான் நன்றியோடிருப்பதாகச் சொல்லித்தானாகவேண்டும். ஏனெனில் வேறு சில நோயாளிகளைப் போல, நான் என்னுடைய கூடுதல் தேவைகளுக்காகப் பிச்சையெடுக்கத் தேவையில்லையல்லவா! சாலிட்டேர் தனி விளையாட்டுக்குப் புதிய சீட்டுக்கட்டு வாங்க விரும்பினால் வாங்கிக்கொள்ள முடியும்; லவுஞ்ச் ஓய்வறையில் அழுக்காகிக் கிழிந்துபோன சீட்டுகளைவைத்து விளையாடத் தேவையில்லை. அதோடு, எனது முகத்துக்கான சிறப்பு க்ரீம் வாங்கிக்கொள்ளமுடியும். ஆனாலும் என்னை முட்டாளாக்கிவிட முடியாது. அவள் எனக்குப் பணம் அனுப்புவதென்பது ஒரு வகையில் என்னைவிட்டு விலகியிருப்பதற்கும், அவளிடம் மீதமிருக்கும் சிறிதளவு மனச்சாட்சியின் உறுத்தலைச் சாந்தப்படுத்திக்கொள்வதற்கும் தான் என்பது எனக்குத் தெரியும்.
நான் எரிச்சலில் நன்றியில்லாமல், புலம்புகிறேனென்றால், அதில் பாதிக்கும் மேலான காரணம் அதன் கீழிருக்கும் கழிவிரக்கந்தான். அவையெல்லாம் நான் செய்யாத, அல்லது தவறாகச் செய்த சிறு விஷயங்கள்தாம். அவளது முதல் மாதவிடாயின்போது நான் எப்படி நடந்துகொண்டேனென்பது என் நினைவுக்கு வருகிறது. அவள் தடுமாறியபோது அல்லது ஏதோ ஒன்றைத் தவறவிட்டபோது நான் கத்திக்கூச்சலிட்ட நினைவுகள். உண்மை. நான் மிகவும் குழம்பிப் போயிருந்தேன், அவள் பிறந்தபோது அவளது கறுப்புத்தோல் என்னைக் கவிழ்த்துவிட்டிருந்ததோடு எனக்குத் தோன்றிய முதல் எண்ணம் ……. வேண்டாம். அந்த நினைவுகளையெல்லாம் முழுவதுமாக, நான் துடைத்தெறியவேண்டும். அவற்றை நினைத்துப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. அன்றைய சூழ்நிலையில் அவளுக்கு நல்லனவற்றில் சிறந்தவற்றைச் செய்திருக்கிறேன். என் கணவன் எங்களைவிட்டு ஓடிப்போனபோது, லூலா ஆன் எனக்கு ஒரு பாரமாகவே இருந்தாள். அது கழுத்தை முறிக்கிற ஒரு பெரும்பாரம். ஆனால், நான் அதை நன்றாகவே தாங்கிக்கொண்டேன்.
ஆமாம். நான் அவளிடம் கடுமையாகத்தான் நடந்துகொண்டேன். நான் அப்படித்தான் இருந்தேனென்று நீங்கள் பந்தயம் கூடக் கட்டுவீர்கள். அவள் பன்னிரண்டிலிருந்து பதின்மூன்றாகின்ற போது நான் இன்னுங்கூடக் கடுமையாகத்தானிருந்தேன். அவள் பதிலுக்குப் பதில் பேசினாள்,. நான் சமைத்ததைச் சாப்பிட மறுத்தாள்; தன் தலையைக் குலைத்துக்கொண்டாள். அதை நான் வாரிப் பின்னல் போட்டபோதும், பள்ளிக்குச் சென்றதும் அதைக் கலைத்துக்கொண்டாள். அவள் எப்படியோ போகட்டுமென்று நான் விட்டுவிடமுடியாது. நான் மூடியை இடைவெளியில்லாமல் நன்கு இறுக்கிப் பூட்டியதோடு அவள் எப்படியெல்லாம் பெயர் சூட்டித் திட்டப்படுவாளென்றும் அவளை எச்சரித்தேன். என்னுடைய கற்பித்தல் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கும். பாருங்கள், இப்போது அவள் எப்படி மாறியிருக்கிறாள்? நல்ல வேலையிலிருக்கிற ஒரு பணக்காரப் பெண். நீங்கள் அதை மறுத்துவிட முடியுமா?
இப்போது அவள் கருவுற்றிருக்கிறாள்.
நல்ல நடவடிக்கை, லூலா ஆன். பிள்ளை வளர்ப்பதென்பது வெறுமே கொஞ்சுவதும் காலணி மற்றும் இடைத்துணி மாற்றுவதென நீ நினைப்பாயானால் ஒரு பெரிய அதிர்ச்சி உனக்குக் காத்திருக்கிறது. பெரியதாகவே. நீயும் பெயரில்லாத உன்னுடைய ஆண் தோழன், கணவன், ஆள் – யாராக இருந்தாலும் – கற்பனைசெய்கிறீர்கள், ஓஒஒஹ்! ஒரு குழந்தை! கிச்சிக் கிச்சிக்கூ!
நான் சொல்வதைக் கேளுங்கள். உலகம் எப்படி இருக்கிறது, அது எப்படி இயங்குகிறது என்பதோடு நீங்கள் பெற்றோராகும்போது அது எப்படி மாறுகிறது என்பதையும் நீங்கள் கண்கூடாகக் காணப்போகிறீர்கள்.
நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கட்டும், கடவுள் குழந்தைக்கு உதவட்டும்
மலைகள் 149 நாள் 03.07.2018 இல் வெளியானது. 

Sunday, 15 July 2018

சர்க்கரை நோயிலிருந்து காக்கும் நாவல்பழம் (அபுனைவு 28)

சர்க்கரை நோயிலிருந்து காக்கும் நாவல் பழம்
1995 மே மாத இறுதியில் கோவா சுற்றுலா சென்றபோது லதாமங்கேஷ்கர் பிறந்த ஊரிலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்றோம். கோவில் நடை திறப்பதற்காகக் காத்திருந்தபோது தான் அப்பகுதியில் நின்றிருந்த பிரமாண்டமான நாவல் மரங்களைப் பார்த்தோம். மந்தாரை இலை போன்ற ஒரு இலையில் பத்துப் பதினைந்து பழங்களைப் பொதியாகக் கட்டிச் சிறுவர்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அப்பழங்கள் நம் ஊர்ப் பழங்களைவிடப் பெரிதாகவும் சுவைமிகுந்தும் இருப்பதைத் தெரிந்துகொண்டோம். அப்பழங்களை `ராம் நாவல்` என அழைத்தனர்.
கோவாவில் முந்திரிப்பழத்திலிருந்து பென்னி மது தயாரிப்பது போல நாவல் பழத்திலிருந்தும் ஒரு வகை மது தயாரிக்கின்றனர்.
இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நாவல் பழம் சந்தைக்கு வரத் தொடங்கி, இப்போதும் கிடைக்கிறது. வடநாட்டு ராம் நாவல் வகையும் கிடைக்கிறது. கிலோ ரூ.150 முதல் 180/- வரை விற்கின்றனர்.
இனிப்பு நோயர்களுக்கு மா, வாழை, பலா மூன்றுமே உண்ணலாகாப் பழங்கள். ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, பப்பாளி, கொய்யா போன்றவை உண்ணத்தகுந்தவை; அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாமென்பதில்லை. ஓரளவே உட்கொள்ளலாம்.
நாம் உட்கொள்கிற பழங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தருகின்றனவே தவிர நோய் தீர்ப்பதில்லை. ஆனால், நாவல் பழத்தின் தோலிலுள்ள ஆந்தோசயனின், மற்றும் கொட்டையின் மேல்தோலிலுள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதுடன் சர்க்கரையின் பிற பிற்கால நோய்கள் வராது காக்கும் தன்மையும் கொண்டவையென சித்த மருத்துவர் கு.சிவராமன் (இந்து தமிழ். 06.07.2018 இனிப்பு தேசம் தொடர் .13) குறிப்பிடுகிறார்.
நாவல் பழக் கொட்டையை உலர்த்திப் பொடி செய்து தினமும் சிறிதளவு பொடியை கொதிக்கும் வெந்நீரிலிட்டு அருந்தி வந்ததன் மூலம் எனது உறவினர் ஒருவர் சர்க்கரை நோயினைப் பல ஆண்டுகளாகக் கட்டுக்குள் வைத்திருந்தார்.
இனிப்பு நோயர்கள் நாவல் பழப் பருவகாலத்தில் பழங்களைப் பயன்படுத்துவதுடன் அதன் கொட்டைகளைச் சேகரித்துவைத்திருந்து பயன்படுத்துவது சர்க்கரை நோயின் கடுமையிலிருந்து விடுபடுவதற்கான நல்வழியாகிறது.
முகநூல் 13.07.2018 விருப்பம் 126  பகிர்வு 46.

Saturday, 14 July 2018

கருணை என்றொரு கிழங்கு (அபுனைவு 27)

கருணை என்றொரு கிழங்கு
(கரணை, கரணையாக இருப்பதால் கரணைக் கிழங்கு எனத்தான் அழைக்கப்பட வேண்டுமென்றும் கருணை என அழைப்பது சரியல்லவென்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேதக் குறிப்புகளில் கருணை, காட்டுக்கருணை, காறாக் கருணை, காருங் கருணை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. )
என்னுடைய அப்பாவைப் பெற்ற பாட்டி 19.09.1958 இல் எனக்கு எட்டு வயதாக இருக்கும்போது ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் சில நாள் படுக்கையிலிருந்து மறைந்தார்.
அவர் சாவுப் படுக்கையிலிருக்கும்போது அல்வா, அதிரசம், பன்னீர் திராட்சை என என்னவெல்லாமோ வாங்கிவந்து கொடுத்தபோதும், அவர் விரும்பிக் கேட்ட உணவு, புடலங்காய் கூட்டு விரவிய ஒரு உருண்டைச் சோறு தான். அதனை எனது அம்மா செய்து கொடுக்கச் சாப்பிட்டுவிட்டுத் தான் உயிரை விட்டார்.
எனது தாயார் 20.12.1994 இல் புதன் கிழமை இரவு 7.00 மணிக்கு இரண்டாம் முறை மாரடைப்பால் மறைந்தார்.
அவர்கள் இருவரும் பார்த்துப் பார்த்து ஊட்டிய காய்கறி வகைகளால்தான் ஒரு காய்கறிப் பிரியனாக 68 வயது முடிந்து 69 இல் கால்வைக்கிறேன்.
அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு என்றால் அது குருணைச் சோறும் கருணைக்கிழங்கு புளிக்குழம்பும் தான்.
கருணைக் கிழங்கு எனக் கேரளம் மற்றும் நாஞ்சில் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குறிப்பிடப்படும் கிழங்கு பிடிகருணை, கார் கருணை என மற்ற மாவட்டங்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கிழங்கில் செய்த மசியல் மற்றும் புளிக்குழம்பினை இருவரும் விரும்பிச் சாப்பிட்டனர். அவர்களின் வழியாக அந்த இரு உணவுவகைகளும் எனக்கும் பிடித்தமாகிவிட்டன.
வட மாவட்டங்களில் கருணை எனக்குறிப்பிடும் கிழங்கினைத் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளத்தில் சேனை (Elephant Foot Yam) என அழைக்கின்றனர்.
சேனைக் கிழங்கு மிகவும் பரவலாகத் தீயல் உள்ளிட்ட பலவகைக் குழம்புக் காய்களாகவும் எரிசேரி, உப்பிலேடு, பொரியல், கூட்டு, துவரன், அவியல், வறுவல், தொகையல், மசால் கறி எனவும் தற்காலத்தில் பக்கோடாவுக்குங்கூடப் பயன்படுத்தப்படுகிறது.
இப்பதிவில் குறிப்பிடப்படுகிற கருணைக்கிழங்கு ஆங்கிலத்தில் Yam என்றே அழைக்கப்படுகிறது. இக்கிழங்கு சேனைக்கிழங்கைக் காட்டிலும் அதிக மருத்துவ குணம் நிறைந்ததெனினும் உணவில் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. இக்கிழங்கு சாதாரணக் கடைகளில் கிடைப்பதுங்கூட அரிதாகவே உள்ளது. தற்போது More, Reliance, Nilgiris, Pazhamudhirsoai போன்ற குளிர்வசதியுள்ள பேரங்காடிக் கடைகளில் மட்டுமே கிடைக்கிறது.
மண்ணுக்குள் விளைவனவற்றில் காரட், முள்ளங்கி வெங்காயம் தவிர்த்த) அனைத்துக் கிழங்கு வகைகளுமே சர்க்கரை, இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் அதிக எடை போன்ற நோயர்களுக்கு உண்ணலாகா உணவுப்பொருட்களாக வகைப்படுத்தியுள்ளனர். எனவே உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சீனிக்கிழங்கு என எல்லாக்கிழங்கும் போலக் கருணையும் தவிர்க்கப்படவேண்டிய பட்டியலில் இருந்தாலும் கருணைக்கிழங்கில் உருளைக்கிழங்கினைவிடவும் குளுகோஸ் 50 % குறைவாகவே உள்ளதென மருத்துவ இயல் குறிப்பிடுகிறது.
இவ்வகைக் கருணைக்கிழங்கில் பொட்டாசியம், மங்கனீஸ், தியாமின் மற்றும் வைட்டமின் சி மற்றும் பி6 உள்ளது. எனவே கருணைக்கிழங்கு குருதியில் சேருகின்ற கெட்ட கொழுப்பினைக் குறைக்கவும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும் உதவுகிறதென்றும் சர்க்கரை நோயாளிகளும் இக்கிழங்கினை உணவில் ஓரளவாகப் பயன்படுத்தி மருத்துவப்பயன் பெறலாமென்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
கருணைக்கிழங்கு உடல் சூட்டினைக் குறைத்துப் பசியின்மையைக் குணப்படுத்தும், அது மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது.மூல நோய் தொடர்பான பிரச்சினை, இரத்தப்போக்கு போன்றவற்றையும் குறைக்க இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.இதை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுதல் மிகவும் நன்று. மூல நோய்க்கு கருணைக்கிழங்கு லேகியம் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
எளிதான மசியல் :
கருணைக்கிழங்கு கால் கிலோ
சின்ன வெங்காயம் 15 - 20 (இல்லையெனில் பெரிய வெங்காயம் – 2)
காய்ந்த மிளகாய் வற்றல் 5,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு.
தேவையான அளவு உப்பு
நல்லெண்ணெய் மூன்று மேசைக்கரண்டி. ( வேறு எண்ணெய் சுவையைக் குறைக்கும்.)
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி.
கறிவேப்பிலை ஒரு கொத்து.
பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை
செய்முறை :
கருணைக் கிழங்கினை ஒன்றுக்கு மூன்று முறை நன்கு தேய்த்து மண் போக அலசிக் கழுவித் தேவையெனில் இரண்டிரண்டாக வெட்டிக்கொள்ளலாம், கிழங்கு நன்கு வேக வேண்டும்; ஆனால் குழைந்துவிடக்கூடாது. கிழங்குத் துண்டுகளைக் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து நான்கு விசில்கள் வந்த பின் இறக்கி வைக்கவும். ஆறிய பின் கிழங்குகளை எடுத்துத் தோல் உரித்து, உதிரியாக மசித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்த பின் உளுத்தம்பருப்பினைப் போட்டுச் சிவந்த பின் கறிவேப்பிலை உருவிப்போட்டுப் பின், காய்ந்த மிளகாய்களைக் கிள்ளிப் போட்டு, அவை கருகத் தொடங்கும் போது அரிந்து வைத்துள்ள உள்ளி ( வெங்காயம்) போட்டு வதக்க வேண்டும். வெங்காயத் துண்டுகள் கண்ணாடி போல் பளபளக்கும்போதே தேவையான உப்பும் பெருங்காயத் தூளும் போட்டு ஒரு கிளறுக் கிளறிய பின் புளியைக் கட்டியாகக் கரைத்துக் கைப்புளியாகச் சேர்த்துக் கொதித்துப் பச்சை வாடை அகன்றதும் உதிர்த்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கினைக் கொட்டிக் கிளறி ஒரு ஐந்து நிமிடத்துக்கு மிகவும் மசிந்துவிடாமல் பக்குவமாகக் கிளறி இறக்கிவைக்கவேண்டியது தான்.
நல்லெண்ணெய், பெருங்காயம் கண்ணாடி வெங்காயம், மிளகாயின் கருகிய காரம் அனைத்தும் சேர்ந்து கருணைக் கிழங்குக்கு ஒரு அருமையான சுவையைச் சேர்க்கும். வெறுமனே அப்படிக்கப்படியே அள்ளி உண்ணலாம். எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம், திகட்டாது. எல்லாவகையான குழம்பு, ரசம், மோர் அனைத்துச் சோற்றுக்கும் பொருத்தமாகவே இருக்கும்.
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்
கருணைக்கிழங்கு – கால்கிலோ
மிளகாய்ப்பொடி – இரண்டு தேக்கரண்டி
தனியாத் தூள் (மல்லிப்பொடி) – நான்கு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை.
புளி – பெரிய எலுமிச்சம்பழம் அளவுக்கு
தேவையான அளவுக்கு உப்பு
தாளிக்க நல்லெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் 2.
கருணைக்கிழங்குகளை முன்பு குறிப்பட்டது போல் கழுவிக் குக்கரில் இட்டு மூன்று அல்லது நான்கு விசில்களுக்கு வேக வைத்து இறக்கித் தோலுரித்து பருமனான வட்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை அப்படியே போட்டுக் கருகத் தொடங்கும் போது அரிந்து வைத்திருக்கும் கருணைக் கிழங்கு வட்டுகளைப் போட்டு இரண்டு கிளறு கிளறிய பின்னர், உப்பு, மஞ்சள் தூ,ள், பெருங்காயம், மிளகாய்த் தூள், மல்லித் தூள் போட்டுக் கிளறக் கிளற அனைத்துத் தூள்களும் எண்ணெயில் நிறம் மாறி, மணம்பெறும் போது புளியைக் கரைத்து ஊற்றிக் கூடவே இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதித்து, நன்கு வற்றும் வரை மெல்லிய தீயில் விட்டு வைத்து இறக்கும்போது சிறிது நல்லெண்ணெயைப் பரவலாகத் தெளித்து ஒரு கிளறு கிளறி இறக்கிக் கொள்ளலாம்.
இக்குழம்பு அரைப்படிக்கும் அதிகமாகவே சோற்றைக் கொண்டா, கொண்டா எனக்கேட்கும். அதிலுள்ள கருணைக் கிழங்கு வட்டினை வாய்க்குள் போட்டு மென்றால் அப்படியே கரைந்து, புளிப்பும் காரமுமாக, அப்பப்பா அது ஒரு தனிச்சுவை.
குருணைச் சோறு : அரிசி குருணையினை ( குறுநொய்) நீத்தண்ணி (நீராகாரம்) ஊற்றி, இரண்டு கறிவேப்பிலை உருவிப்போட்டுக் கொதிக்கவைத்து, வடிக்காமல் பொங்கி இறக்கும் சோறு. நீத்தண்ணியின் புளிப்பும் மணமும் சோற்றுக்குத் தனியான வேறொரு சுவையைக் கொடுக்கும். அகப்பையில் தோண்டும் போது சோறு சீப்பு, சீப்பாக அதாவது பாளம் பாளமாக வரும். இச்சோற்றுக்கு வெறும் நாரத்தங்காய் ஊறுகாய் மட்டுமே கூடப் போதுமானது. கருணைக்கிழங்கு புளிக்குழம்பு கிடைத்தால் தேவாமிர்தம்.
மருத்துவ குணமுள்ள கருணைக் கிழங்கினை வாரம் ஒருமுறையேனும் உணவில் சேர்த்துக்கொள்வதன் வாயிலாக உடல் உஷ்ணத்தைக் குறைத்து, மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்களிலிருந்தும் காத்துக்கொள்ள வழிவகை உள்ளதென்பதைத் தெரிவிப்பதே இப்பதிவின் நோக்கம்.
முகநூல்  ஜூலை, 13. விருப்பம் 152    பகிர்வு 87.

Sunday, 8 July 2018

முகநூலில் பதிவிட்ட கவிதை

பசுமை எங்கு நோக்கினும் பசுமை

ஞாயிற்றுப் பொழுது விடிகிறது.
காலை நடைக்குக் கிளம்புகிறேன்.
கவிதை ஒன்று என்னையும் அழைத்துப்போயேனெனக் கெஞ்சுகிறது.
சேட்டை பண்ணாமல் வருவதென்றால் வாவென்ற நிபந்தனையோடு அதன் கையைப் பிடித்து நடந்தேன்.
வைரமுனீஸ்வரரைக் கண்டதும் கவிதை சிறிது நடுங்குவதாகத் தெரிய, பயப்படாதேயெனச் சொல்லி, ஆதரவாக அணைத்துச் சென்றேன்.
நடைமேடையில் ஏற்றி நிறுத்திய மூன்று சக்கர மிதிவண்டியில் தூங்கும் சுமையாளரின் மீசை அழகாயிருப்பதாகச் சொல்கிற கவிதை அவரது தூக்கம் கலைக்கக்கூடாதென்றே கண்விழித்த கதிருங்கூடக் கனல் வீசாமல் சாந்தமாய் நோக்குகிறதென்றது. சரிதானென்றொரு மவுனப் புன்னகை உதிர்த்து நடையைத் தொடர்ந்தேன்.
பாட்டி வீட்டுக் கூரை மீது படர்ந்திருக்கும் வெள்ளைப் பூசணியில் பச்சையாய் அளவைச் செம்பு போல் ஒற்றைப் பிஞ்சு தொங்குகிறது.
நடைமேடை ஓரநெருஞ்சில் மஞ்சள் கடுக்கன்களைக் காட்டிச் சிரிக்கிறது.
காவல் வெளியில் பரந்து கிடந்த உயிரற்ற வாகனக் கூடுகளைக் கண்டதும் தேசியப் பெருநஷ்டம் என முணுமுணுத்த கவிதைக்கு நான் மவுனத்தையே பதிலாக்கினேன்.
சிறிது தூரத்திலேயே காற்றின் அசைவிலாடிய ஊமத்தையின் வெண் பூக்களைக் கண்டதும் ஆஹா என நின்ற கவிதை, பளபளக்கும் ரத்தினக்கற்களாகப் பூத்திருந்த உண்ணிச்செடியினுள் வழவழக் கறுப்பெனக் குந்தியிருந்த அந்தச் சிறுபறவையை வாஞ்சையோடு நோக்கியது.
அதுவோ இதுவென்ன வம்பென, விலகி அருகிருந்த ஒளிபுகாக் கம்பி வடம் மீதேறி மேலும் கீழுமாக வாலாட்டிக் காட்டியது.
அதையதை அதனதன் போக்கில் விட்டுவிடவேண்டுமெனச் சொல்லிக் கவிதையை இழுத்துக்கொண்டு நகர்ந்த போது நடைபாதைச் சிறு பூக்களைப் பார்த்ததும் தயங்கி நின்றது.
மீண்டுமாக வற்புறுத்தி இழுத்துச் சென்றால் ரேடியோப் பூக்களைக் கண்டதும், ஐயோ உனக்கென்ன, அழகுணர்ச்சியே கிடையாதா, கொஞ்சம் நின்றுதான் பாரேன் என்று வம்புக்கும் இழுத்து நின்றது.
நான் கதிரைப் பார்த்தேன். வானத்தைப் பார்த்தேன். சுற்றி நின்று குன்றுகளை நோக்கினேன். எங்கெங்கும் அழகு. கவிதையின் கவனத்தைத் திருப்பி அத்தனையையும் காட்டியபோது கைதட்டி மகிழ்ந்தது.
போதும், நாளைக்கு மீதம் வைப்போமென மீள அழைத்துக்கொண்டு அதே பாதையில் திரும்பியபோது, கால்வாய் ஓரமாகக் கரிசலாங்கண்ணி வீசியெறிந்திருந்த பொற்காசுகளைப் பறித்தெடுத்தால்தானாயிற்றென அது அடம் பிடித்தபோது, பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாதென அறம் போதிக்கத் தொடங்கினேன்.
மீளவும் நடந்து திரும்பி வரும்போதும் மிதிவண்டிக்காரர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்.
அவரது மீசையை நோக்கிய கவிதையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தபோது பி.எப். அலுவலக வளாகத்துப் பொன்னரளியின் மஞ்சள் கூடாரத்துக்குள் நுழைந்துகொண்டது.
வலியப் பிடித்திழுத்து வீடு வந்து சேர்ந்த போதும் கதிரவன் சாந்தமாகவே துணைக்கு வந்திருந்தான்.
கணினியில் உட்காரும் முன் பசுமைவழிச் சாலை பற்றி என்னதான் நினைக்கிறாயெனக் கவிதையிடம் கேட்டபோது, வாயை மூடு, காவல்நிலையம், கைது, சிறையென அவஸ்தைப்படப் போகிறாயா? என்கிறது.
அரசு, காவல் துறை, நீதிமன்றம் எல்லோரும் சொல்கிறார்களே! கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் சேரும் உரிமை, சுரண்டாப்படாமல் காத்துக்கொள்ளும் உரிமை, வாழ்வுரிமை எல்லா உரிமையும் உனக்கு இருக்கிறது. சொன்னால் புரிந்துகொள்.
பசுமைவழிச் சாலை பற்றி மட்டும் பேசாதே. கைதுசெய்யப்படுவாய்.
முகநூல் பதிவு 8.07.2018 விருப்பம் 80

Thursday, 5 July 2018

நாடோடி வணிகர்கள் மற்றும் உமணர் வாழ்க்கை.

நாடோடி வணிகர்கள் மற்றும் உமணர் வாழ்க்கை.
நாடோடி வணிகர் வாழ்க்கை
(23.06.2018) காலை நடையின்போது வேலூர் – சென்னை நெடுஞ்சாலையின் இடது புறமாக சத்துவாச்சாரி காவல்நிலையத்திலிருந்தும் ஒரு நூறு மீட்டர் தாண்டி, வீட்டுமனைகளாக, காலியாகக் கிடக்கும் திறந்தவெளியில் மூன்று டாடா சுமோக்கள், ஒரு டெம்போ டிராவலர் மற்றும் ஒரு ஸ்டான்டர்டு வேன் ஆக ஐந்து ஊர்திகளுடன் வடநாட்டுக்குடும்பத்தினர் தங்கியிருந்ததைப் பார்த்தேன்.
வெட்டவெளியில் பாய்விரித்தும் சிலர் கட்டில் போட்டு அதில் கொசுவலை கட்டியும் உறங்கிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் விழித்துவிட்டிருந்தனர். அக்குழுவின் தலைவரென நான் கருதிக்கொண்ட ஒருவரும் அவரது மனைவியும் ஒரு கட்டிலில் அமர்ந்திருந்தனர்.
எனக்குச் சிறுவயதிலிருந்தே ஊருக்கு வரும் நாடோடிகளான மிராட்டியர், வாழ்க்கை குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. தை மாதம் பூதப்பாண்டித் தேரோட்டம், எங்கள் ஊர் திருக்கலியாண நேரங்களில் எங்கள் ஊர்ப்பக்கம் வந்து குளத்தங்கரை மைதானத்தில் கூடாரம் அடித்து ஓரிரு நாட்கள் தங்கிச் செல்வர் அதுபோன்ற நாட்களில் அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிப்பதும், அவர்கள் வேட்டையாடி வைத்திருக்கும் பறவைகள், விலங்குகள் குறித்து அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளவும் முயற்சித்ததுண்டு.
ராகுல் சாங்கிருத்தியானின் `ஊர்சுற்றிப் புராணம்` படித்துவிட்டு அதுபோன்றதொரு வாழ்க்கைக்கு ஏங்கியதுமுண்டு. இப்போதும் நான் பார்த்த குழுவினர் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் மேலிட, அவர்களை அணுகிக் கேட்டேன்.
நீங்களெல்லாம் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? சென்னை; அது சரி. உங்கள் சொந்த ஊர்? மகாராஷ்டிரா, ஓ, என்ன வியாபாரம்? ஆயுர்வேதம், இங்கேயே கடை போடப்போகிறோம். கடை போட்டதும் வந்து பாருங்க.
நானும் தலையசைத்துக் கொண்டு அவர்களின் ஊர்திகள் பக்கமாக நகர்ந்தேன். ஒவ்வொரு ஊர்தியிலும் ஒரு நாய் கட்டப்பட்டிருந்தது. எரிவாயு உருளை ஒன்று இருந்தது. கட்டில்கள், விரித்துப் படுத்த பாய்கள், மெத்தைகள் சுருட்டப்படாமலேயே கிடந்தன.
எல்லாவற்றையும் புகைப்படமெடுத்துக் கொண்டு திரும்பும்போது, அந்தப் பெரியவர், நாங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட்டு கோயமுத்தூருக்கு இங்கிருந்து எவ்வளவு தூரமெனக்கேட்டார்.
இங்கிருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு போய்க் கோயமுத்தூர் போக பத்து மணி நேரம் பிடிக்கும், எப்படியும் 600 கி.மீ இருக்கலாமென்றேன். இங்கே கடை போடவில்லை; கோயமுத்தூருக்குத்தான் போகப்போகிறோமென்றார்.
அவரது மனைவி, என்னை, நீங்கள் யார்? பத்திரக்காரா? மொபைல்ல படம் புடிக்கிறீங்களே, இது சரியில்லை, என்று அதிருப்தியை வெளிக்காட்டியதோடு பத்திரிக்கையிலெல்லாம் எழுதாதீர்கள் என்றார்.
இல்லை, இல்லை, உங்களுக்கு எந்த பாதகமும் வராதென்றேன். ஆனாலும் அவர் சமாதானமடைந்ததாகத் தெரியவில்லை.
அதற்கு மேல் நானும் சரியெனத் தலையசைத்துவிட்டு நடையைத் தொடர்ந்து வழக்கமான தூரம் சென்று மீண்டும் அதே பாதையில் திரும்பிவரும்போது அக்குழுவிலிருந்து ஒரு பெண் காலி கேன் ஒன்றை எடுத்துக்கொண்டு என் முன்னே சென்றுகொண்டிருந்தார். குடிதண்ணீர் தேடிச் செல்கிறாரென்று புரிந்து கொண்டேன். எங்கு சென்றாலும் தண்ணீர் கொண்டு வருவதென்பது பெண்கள் தலையில்தான் விடிகிறது.
காவல் நிலையம் அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைக் கண்டதும் அதில் நீர் பிடிக்க வசதியிருக்குமா என அந்தப் பெண் தயங்கி நின்று கொண்டிருந்தபோது, காவல் நிலையம் முன்பாகவே சின்டெக்ஸ் தொட்டி ஒன்றில் குடிநீர் இருப்பதைக் காட்டினேன். அவர் தண்ணீர் பிடிக்கத் தொடங்கியதும் என் நடையினைத் தொடர்ந்து வீடுவந்து சேர்ந்துவிட்டேன்.
வீணாக அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து விட்டோம் போலிருக்கிறதேயெனச் சிறிது நொந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து சங்க கால உப்பு வணிகர்களான உமணர்கள், கழுதைச் சாத்து என எண்ணங்கள் ஏற்பட்டு, அப்பதிவுகளோடு இவர்களது வாழ்க்கையை ஒப்பிட்டுச் சிந்தனைகள் ஓடத் தொடங்கின.
சங்க இலக்கியத்தில் அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு நூல்களில் உப்பு வணிகர்களின் மாட்டு வண்டிகள் செல்லும் ஒலியும் உமணர்கள் மாடுகளை அதட்டும் ஒலியும், ஏற்றம் அல்லது நொடிகளில் மாடுகளைத் தட்டிக்கொடுத்து ஆதரவாக உரத்து ஒலிக்கும் பகடு தெழி தெள்விளி (மாடுகளை ஊக்கப்படுத்துகின்ற தெளிவுமிக்க விளிப்பு மொழிகள் - அகம்.17) கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. அந்த ஆரவார ஒலியில் மான் கூட்டம் அஞ்சி ஓடுகிறது.
வண்டி இழுக்கும் மாடுகளுக்கு மாற்று மாடுகளும் கூடவே இட்டுச் சென்றிருக்கின்றனர். வழியில் மாடு ஒன்று முடமாகிவிட்டால் அதனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். அவை அங்கேயே கிடந்து உண்ண உணவுமின்றிக் குடிக்கத் தண்ணீருமின்றி இறந்திருக்கின்றன.
பாலை நிலங்களிலும் காட்டு வழிகளிலும் அவர்களின் வண்டிகள் ஒன்றையொன்று நெருங்கித் தொடர்ந்தாற் போலவே செல்கின்றன.
வழியில் பூக்கள் சார்த்தி, குருதிப் பலிகொடுத்து வணங்கப்பட்ட பெயரும் பீடும் பொறித்த நடுகற்களைக் காணுகின்றனர். யானை ஒன்று நடுகல்லினை ஆளென்று நினைத்து உதைத்து முன் கால் நகம் உடைந்து இரத்தம் சிந்த நிற்கிறது.
கிணறுகளில் தண்ணீர் இறைத்து அடுப்பு கூட்டிச் சமைத்து உண்டு மீண்டும் பயணம் தொடருகின்றனர். அவர்களின் குழந்தைகளும் கூடவே வருகின்றனர்.
உமணர் வளர்க்கும் மந்தி ஒன்று குழந்தைகளோடு சேர்ந்து கிலுகிலுப்பை ஆட்டி மகிழ்கிறது.
ஊருக்குள் பொது இடங்களில் உமணர் குடும்பங்கள் சில நாள் தங்கிப் பின்னர் செல்லும்போது ஊர்மக்கள் கொள்ளும் பிரிவுத் துயர் பற்றி ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
உப்புக்குப் பதிலாகப் பெற்ற நெல் மூட்டைகளை ஏற்றிவந்த உமணர் தோணிகள் உப்பங்கழிகளில் கட்டிவைக்கப்பட்டு, அசைந்தாடிக்கொண்டிருந்ததாக பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
உமணர் வண்டி பற்றிய வருணனை :
கொழுவிய வட்டையிலே செருகப்பட்டுத் திருந்திய நிலையினை உடைய ஆரம்;
மத்தளம் போன்று முழு மரத்திலே கடைந்தெடுக்கப்பட்ட உருளி;
கணைய மரங்கள் இணைத்தாற் போன்ற வலிய பார்;
மழைமுகிலினைச் சுமந்து செல்வது போல் தோற்றமளிக்கின்ற கரிய தாளிப்பனையின் பாயால் வேயப்பட்ட கூரை; அதன் மேல் தினைப்புனக் காவல் பரண் போல ஒரு கோழிக்கூடு; கூட்டினுள் வளர்ப்புக் கோழிகள்; அந்தக் கூட்டோடு அதன் வாயிலில் கட்டப்பட்டிருக்கும் ஒரு உரல்;
வண்டியின் பாரில் கூத்தாடுவோரின் மத்தளம் போல் கயிறு கொண்டு இறுக்கிக் கட்டப்பட்டுத் தொங்கும் மிடா என்னும் காடிச் சாடி. (ஊறுகாய்ப்பானை)
அந்தப் பாரின் மீது குழந்தையோடு அமர்ந்திருக்கும் உமணப் பெண் வண்டியிழுக்கும் எருதின் முதுகிலேயே அடித்து அதனை ஓட்டுகிறாள்.
பூங்கொத்துகளோடிருக்கும் வேப்பிலைத் தழை மாலைகளை அணிந்த உமணர்கள் வண்டியின் பக்கமாகவே பாதுகாப்பாக நடந்து வருகின்றனர். (பெரும்பாண். (46 – 65)
அகில், பொன், மணி, மிளகு போன்ற மலைபடு பொருட்களையும் முத்து, சங்கு போன்ற கடல் படு பொருட்களையும் கழுதைகளின் மேல் இருபக்கமும் சம எடையுடன் தொங்கும் பொதிகளாக `புணர்ப் பொறை`களாக ஏற்றி அதனோடு செல்லும் வணிகர் கூட்டம் கழுதைச் சாத்து எனப்பட்டது.
இந்த வணிகர் காலுக்கு அடிபுதை அரணம் (SHOE) உடம்பில் மேற்சட்டை (மெய்ப்பை) அணிந்து, மார்பின் குறுக்காகப் பாம்பு போல் தோற்றமளிக்கும் கச்சு பூண்டு அதில் ஒள்ளிய வாளினைத் தொங்கவிட்டு, ஆறலைக்கள்வரையும் எதிர்த்துப் போரிடும் வல்லவர்களாக, வாட்ட சாட்டமாக இருந்ததாகக் குறிப்புள்ளது. (பெரும்பாண். 66 – 82)
 முகநூல் பதிவு 23.06.18. விருப்பம் 101 பகிர் 17.